எம் ஜி ஆர் ஒரு ஜீவ நதி - 16

 

முனைவர் செ.இராஜேஸ்வரி

 

நிஜத்திலும் படத்திலும் சிறுமிகளுக்கு ஆதரவளித்த எம் ஜி ஆர்

ரிக்க்ஷாக்காரன் படத்தில் முதல் பாடலாக எம்ஜிஆர் ஒரு அனாதைக் குழந்தையைப் பார்த்து அதன் சிரிப்பை ரசித்து அதன் வாழ்க்கையில் அதற்கு ஏற்பட்டிருக்கும் துன்பத்தை நினைத்து கொதித்துப்போய் அதற்கு காரணமானவர்களை நீதிக்கு முன் நிறுத்த வேண்டும் என்ற கருத்தில் பாடும் பாடல் குழந்தையின் அழகுச் சிரிப்பையும் அக்கிரமக் காரர்களின் ஆணவச் சிரிப்பையும் ஒப்பிட்டு எழுதப்பட்திருக்கும்.

அனாதைக் குழந்தையிடம் ‘’நீ இன்று உன் தாயை இழந்து அனாதையாக இருக்கின்றாய், அதற்குக் காரணமானவர்கள் நீதியின் கண்களை மூடி விட்டதாக நினைத்து சிரித்து கொண்டாட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்தக் கயவர்களின் ஆர்ப்பாட்டம் விரைவில் ஒரு முடிவுக்கு வந்து விடும். அவர்களை நீதிதேவன் முன் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுப்பேன், என பாதிக்கப்பட்ட குழந்தைக்கு அல்லது பாதிக்கப்பட்ட எவருக்கும் சட்டத்தின் மீது நம்பிக்கை வையுங்கள். நீதியின் கரங்கள் உங்களை காப்பாற்றும் என்று ஆறுதல் அளிப்பதாக பாடப்பட்ட பாடல் ஆகும்.

ரிக்க்ஷாக்காரன் படத்தில் வரும் இப்பாட்டு பெரியவர்கள் மத்தியில் படாமல் ஏன் ஒரு சிறு குழந்தையை வைத்துக் கொண்டு பாட வேண்டும் என்று கேட்டால் இப் படத்தில் பெரியவர்களுக்காக ஒரு கருத்துப் பாடல் பிற்பகுதியில் எம் ஜி ஆர் மாறுவேடம் போட்டு உடுக்கை, பம்பை போன்ற நாட்டுப்புற இசைக் கருவிகளுடன் ஆடுகின்ற ஒரு குழுப் பாடலாக இடம்பெறுகிறது. எனவே இந்தப் பாட்டு சிறுவர்களுக்கு ஒரு ஆபத்து வரும்போது அவர்கள் சோர்ந்து போய் விடக்கூடாது என்ற கருத்தில் தாய் தந்தையை இழந்த சிறுவர்கள் தம்மை அனாதை என்று நினைக்கக் கூடாது. அவர்களுக்கும் ஆதரவளிக்க அன்பு நிறைந்த மக்கள் இருக்கின்றனர் என்ற நம்பிக்கையை ஊட்டுவதற்காக ஒரு அனாதை சிறுமியிடம் பாடுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு இங்கே நீ சிரிக்கும் புன் சிரிப்போ ஆனந்தச் சிரிப்பு நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும்போது அன்று சிரிப்பவர் யார் அழுபவர் யார் தெரியும் அப்போது

வயிறு வலிக்கச் சிரிப்பவர்கள் மனித ஜாதி பிறர் வயிறெரிய சிரிப்பவர்கள் மிருக ஜாதி
மனிதன் என்ற போர்வையில் மிருகம் வாழும் நாட்டிலே நீதி என்றும் நேர்மை என்றும் எழுதி வைப்பார் ஏட்டிலே


கெட்டவர்களிடம் நீதியும் நேர்மையும் எழுத்தளவில் ஏட்டளவில் இருக்கின்றது; நடைமுறை வாழ்க்கையில் இல்லை. ஆனால் அதற்காக அவர்களுடைய வாழ்க்கை அப்படியே இருந்து விடாது. அவர்களுக்கு நாம் அஞ்சிக் கொண்டிருக்கத் தேவையில்லை. நேரம் வரும் நீதி வெல்லும் என்ற நம்பிக்கை ஊட்டும் வகையில் அடுத்த சரணமாக

நேரம் வரும் கேட்கிறேன்
பூனை அல்ல புலி தான் என்று
போகப் போகக் காட்டுகிறேன்
போகப் போகக் காட்டுகிறேன்


என்று பாடல் நிறைவடையும் . அப்போது எம் ஜி ஆரின் முகத்தில் சிவப்பு ஒளி பாய்ச்சப்பட்டு அவரது அறச்சீற்றம் தெரியும்படி காட்சி அமைந்திருக்கும். அவர் முகத்தில் சிவப்பு ஒளியை காண்பித்து அவர் கோபமாக அநீதியைக் கண்டு பொங்குவாய் எனக் காட்டப்படும் அதேவேளையில் அந்தப் பாடல் வரிகள் படம் பார்க்கும் ரசிகர்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் உங்களுக்கு ஒரு துன்பம் ஏற்பட்டால் அங்கு வந்து நான் உங்களின் துன்பங்களைப் போக்குவேன் என்று கண்ண பரமாத்மா கலியுகத்தில் நான் அவதரிப்பேன் என்று கூறியதைப் போல உணர்த்தப்படும். ரசிகர்கள் அவ்வாறு உணர்ந்து நிம்மதி அடைவார்கள் .

‘’எங்கே அநியாயம் நடந்தாலும் அங்கே ஆபத்பாந்தவனாக நான் வந்து உங்களுக்கு ஆறுதலும் தேறுதலும் அளிப்பேன். உங்களுக்கு தீமை செய்தவர்களை கட்டோடு ஒழிப்பேன்,’’ என்ற கருத்தை சிறு குழந்தை முதல் பெரியவர் வரை மனதில் ஆழப் பதிய வைக்கும் முயற்சியே இந்த பாடலாகும். அந்தப் பாடலின் கருத்து அந்த சிறுமிக்கு அல்லது அந்த வயதில் உள்ள சிறுவர்களுக்கு தெளிவாக புரியாவிட்டாலும் அதன் மையக் கருத்து ஆழமாக அவர்கள் மனதில் பதியும்.

எம்ஜிஆர் ஒரு இரட்சகர்; மீட்பர்; ஏழைகளுக்கு ஒரு துன்பம் வந்தால் அதை துடைக்கும் முதல் கரம் எம்ஜிஆரின் திருக்கரமே என்ற எண்ணத்தை நம்பிக்கையை இந்த பாடல் குழந்தை முதல் பெரியவர் வரை ஊட்டுவதில் ஐயமில்லை

தொட்டிலில் அனாதையாக ஒரு குழந்தை

1972இல் கருணாநிதி சாராயக்கடையை திறந்த பிறகு குடிப்பழக்கத்தை அறவே வெறுக்கும் எம்ஜிஆரை மதுவிலக்குப் பிரச்சாரக் குழுவின் தலைவராக நியமித்து அவரை மாநிலமெங்கும் போய் பிரச்சாரம் செய்யுமாறு வேண்டிக் கொண்டார்.

எம் ஜி ஆர் மது பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தஞ்சாவூருக்கு தன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த ஒரு குடிசையில் ஒரு பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டது. சுற்றிலும் வேறு வீடுகள் இல்லை அது ஒரு தனி குடிசை. அந்தக் குடிசைக்குள் உள்ளேயோ வெளியேயோ ஆட்கள் நடமாட்டம் இல்லை. எம் ஜி ஆர் சட்டென்று காரை நிறுத்தச் சொல்லி காரைவிட்டு இறங்கி மடமடவென்று வீட்டுக்குள் சென்று தொட்டிலில் அழுது கொண்டிருந்த ஒரு சிசுவை தன் கைகளால் பூப்போல அள்ளி எடுத்தார். பிறந்து இருபது நாட்களான பச்சிளம் குழந்தை. மற்றவர்களும் இறங்கி மடமடவென்று அவர் அருகில் வந்து நின்றனர். இவர் குழந்தையை கையில் எடுக்கவும் குழந்தையின் அழுகுரல் நின்றுவிட்டது. சுற்றிலும் ஒருவரையும் காணவில்லை.

பத்து நமிடம் கழித்து ஒரு இளம்பெண் மெலிந்த தேகத்துடன் நடக்க தெம்பில்லாமல் வேகமாக வந்தார். குடிசையின் வாசலில் ஆட்கள் நிற்பதைப் பார்த்து மிரண்டு போனார். தன குழந்தை எம் ஜி ஆரின் கைகளில் அமைதியாக இருப்பதைப் பார்த்து அவருக்கு ஒரே மிரட்சியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. எம் ஜி ஆர் அந்த தாயின் கரங்களில் குழந்தையைக் கொடுத்தார்.

எம்.ஜி.ஆர் அந்த பெண்ணை பார்த்து ‘’இது உன்னுடைய குழந்தையாம்மா’’ என்று கேட்டார். அவள் தலையசைத்ததும் ‘’இப்படி பிள்ளையை தனியே விட்டு விட்டு எங்கே போனாய். உன் கணவர் எங்கே. துணைக்கு யாரும் இல்லையா’’ என்றார். குழந்தையைத் தன் கைகளில் வாங்கிக் கொண்ட தாய் அங்கிருந்த ஒரு கல்லை காட்டி ‘’இதில் உட்காருங்கள் ஐயா’’ என்று வேண்டினாள். அந்தக் குடிசையின் வாசலில் கிடந்த ஒரு கல்லில் எம்ஜிஆர் அமர்ந்தார்.

சாலையில் கார்கள் கார் நிற்பதையும் வெள்ளை வேட்டி ஆட்கள் ஒரு குடிசையின் வாசலில் நிற்பதையும் பார்த்த ஊர்க்காரர்கள் எப்படியோ எம்ஜிஆர் வந்திருப்பதைத் தெரிந்துகொண்டு அங்கு ஓடி வந்துவிட்டனர். அவ்வாறு வந்தவர்களில் அந்த குழந்தையின் தந்தையும் ஒருவர். அவர் மெல்ல எம்ஜிஆரின் அருகில் வந்து குனிந்து கை கட்டி நின்றார். ‘’நீ தான் பிள்ளைக்கு அப்பாவா?’’ என்று கேட்டவர் ‘’என்ன வேலை பார்க்கிறாய்’’ எனக்கேட்டார். ஒன்றும் பதில் சொல்லாமல் தன மனைவியின் கைகளில் இருந்து குழந்தையை அவர் வாங்கிக் கொண்டார்.. அவர் குடித்திருக்கிறார் என்பது எம் ஜி ஆருக்கு புரிந்துவிட்டது அதனால் அவர் வாய் திறந்து பேச வில்லை என்பதும் தெரிந்துவிட்டது. உடனே எம்ஜிஆர் அவருக்கு அறிவுரை கூறி அவருடைய மனைவியின் உடல்நிலையையும் குழந்தையின் பரிதாப நிலையையும் சுட்டிக்காட்டி இனி குடிக்கக் கூடாது என்று சத்தியம் வாங்கினர். அவர்கள் குடும்பத்திற்கு உதவும் வகையில் அவர்களிடம் ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்துவிட்டு உருப்படியாக ஏதாவது ஒரு தொழில் செய்து குடும்பத்தைக் காப்பாற்று என்று சொல்லிவிட்டு கிளம்பினார். தேடி போய் உதவி செய்வது எம் ஜி ஆரின் தனிப் பண்பு. யாரும் உதவி என்று கேட்காமலேயே அவராகப் போய் உதவிக்கரம் நீட்டுவார்.

சுற்றி நின்ற மக்களிடம் வணக்கம் சொல்லி கை அசைத்து விடை பெற்றுக்கொண்டு காரில் ஏறியதும் ‘மதுவிலக்குப் பிரச்சாரம் செய்ய வந்த எனக்கு வழியிலேயே ஒரு குடிகாரரை திருத்தியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்

நடிகர்களின் குழந்தைகளுக்கு இலவசக் கல்வியும் உணவுவும்

குழந்தைகள் கெட்டுப்போகாமல் நல்ல முறையில் வளர வேண்டும்; அவர்களை விதை நெல்லை போல பாதுகாக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர் கருதினார். தனது படத்திலும் நிஜ வாழ்க்கையிலும் சிறுவர் சிறுமியரை கண் போல பாதுகாத்தார். சிறு வயதில் தனக்கு கிடைக்காத கல்வி செல்வத்தை தன்னை போன்ற நடிக நடிகையரின் பிள்ளைகளுக்கு வழங்க வேண்டும் என்று முடிவு செய்தார். அவ்வப்போது படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் அவர்களுக்கு தங்கள் பிள்ளைகளை கட்டணம் செலுத்தி படிக்க வைக்கும் வசதி இல்லை. பள்ளிகூடத்தில் இந்தப் பிள்ளைகளை யாரும் சேர்க்க மாட்டார்கள் சேர்த்தாலும் மதிக்க மாட்டார்கள். எனவே எம் ஜி ஆர் இந்த துணை நடிகர் நடிகையரின் பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் என்ற அக்கறை காரணமாக அவரே ஒரு பள்ளிக்கூடம் கட்டினார். சினிமாக்காரர்களை தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்காததால் பிள்ளைகளும் அவர்களை போலவே எக்ஸ்ட்ரா நடிக நடிகைகளாக வளர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எம் ஜி ஆர் தான் முதன் முதலாக எக்ஸ்ட்ரா என்ற பெயரை மாற்றி இவர்களை துணை நடிகர் நடிகையர் என அழைக்கும்படி செய்தார்.

1956இல் அவர் திரையுலகில் ஓரளவு கால் ஊன்றிவிட்ட காலத்தில் முதலில் அவர் செய்த மிகப் பெரிய பொது நலத்தொண்டு அவர் வட பழனியில் ஒரு கூரை பள்ளிக்கூடம் திறந்தது தான். இன்று அது ஜே ஆர் கெ பள்ளியாக வளர்ந்துவிட்டது. அன்று அந்தப் பள்ளிக் கூடத்தில் கோடம்பாக்கத்தில் வாழ்ந்துவந்த நடிக நடிகையரின் பிள்ளைகள் அதிக எண்ணிக்கையில் படித்தனர். அவர்களுக்கு மதிய உணவும் அளித்து வந்தார்.

ஒரு நாள் எம் ஜி ஆர் ஆனந்த ஜோதி படத்தின் படப்பிடிப்பில் இருந்த போது புயல் அடித்ததால் பெருமழை பெய்தது. அவருக்கு பள்ளிக்கூடம் என்ன ஆயிற்றோ என்ற கவலை வரவும் அவரே ஒரு குடையை எடுத்துக்கொண்டு தன பள்ளியை பார்க்க வந்தார். கூரைகள் ஒழுகிக்கொண்டிருந்தன. பல இடங்களில் தென்னங்கீற்றுகள் புயல் காற்றில் பறந்துவிட்டன. உடனே அவற்றிற்கு ஓடுகள் வேய்ந்து சுவர்களை திடப்படுத்தினார். தொடக்கப்பள்ளி பின்பு உயர் நிலைப் பள்ளியாகி மேனிலைப் பள்ளியாகவும் உயர்ந்தது. எம் ஜி ஆர் இருந்த வரை ஒரு ருபாய் கூட கட்டணம் வாங்கக் கூடாது என்று விதி செய்தார்.

எம் ஜி ஆர் ஆட்சிக்கு வந்த பின்பு தான் சத்துணவு திட்டம் கொண்டுவந்தார் என்பது கிடையாது. அவர் நடிக்க தொடங்கியதுமே தன வருமானத்தில் தன மக்களுக்காக பள்ளிக் கூடம் கட்டி அங்கு மதிய உணவு அளித்து வந்தார். அதுவும் சோறு, சாம்பார், ரசம், மோர் என முழுமையான சத்துணவு உணவளித்தார். ஒரு நாள் இவர் மதியம் தனது பள்ளிக்கு வருகிறார். அன்று பிள்ளைகளுக்கு மோர் பரிமாறப்படவில்லை. ஏன் என்று கேட்டால் ‘பால்காரர் வரவில்லை அதனால் மோர் உறை ஊற்றவில்லை’ என்கிறார் தலைமை ஆசிரியர். உடனே எம் ஜி ஆர் தனது நண்பரும் பிரபல நடிகருமான கேசவன் என்பவரை பள்ளிக்கு அருகில வீடு பார்த்து வைத்து அவரை தினமும் பள்ளியில் முறையாக சாப்பாடு குழந்தைகளுக்கு பறிமாறப்படுகிறதா என்று கண்காணிக்கும்படி செய்தார்.

சத்துணவு அளிக்க வேண்டும் என்ற எண்ணமும் செயலும் அவருக்கு சம்பாதிக்க தொடங்கிய உடனேயே வந்துவிட்டது. அந்த எண்ணத்தையும் செயலையும் தான் அவர் முதல்வரான பின்பு தனது ஆட்சியின் கீழ் இருந்த அனைத்துப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தினார்.

பாடகியான சிறுமி


எம் ஜி ஆர் தனது காரில் வந்து கொண்டிருந்த போது ஒரு சிறுவன் தன் சகோதரியை சைக்கிள் பின்சீட்டில் வைத்துக்கொண்டு சைக்கிள் ஓட்டி வந்தான். திடீரென்று அவன் வண்டியை நிறுத்தி இறங்கி விட்டு தன் சகோதரியை வண்டியை தள்ளிக் கொண்டு வரும்படி செய்து அவன் வண்டியை உருட்டிக் கொண்டே சென்றான். இதை பார்த்த எம்ஜிஆர் அவனை நிறுத்தி ‘எங்கு போகிறாய் இந்தப் பெண் யார்’ என்று கேட்டார் அப்போது அவன் இது மேட்டுப் பகுதியாக இருப்பதால் என்னால் ஓட்ட முடியவில்லை . அவள் என் தங்கை. அவளை வைத்து சைக்கிள் மிதிக்க முடியவில்லை. இந்த மேட்டுப்பகுதி தாண்டும் வரை அவள் சைக்கிளை பின்னிருந்து தள்ளுவாள். என்றான்

எம்ஜிஆர் அந்த சிறுமியைத் திரும்பிப் பார்த்தார். அந்தச் சிறுமி அவருடைய ஒரு படத்தில் பின்னணி பாட்டுக்கு கோரஸ் பாடியது நினைவுக்கு வந்தது. அந்த சிறுமியை ஏற்கனவே ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் பார்த்தது நினைவுக்கு வந்ததும் .அவளிடம் ‘’நீ நல்ல பாட்டு வாத்தியார் பார்த்து பாட்டு படி உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. நீ அன்றைக்கு சிறப்பாகப் பாடினாய். உன்னுடைய பாட்டு வகுப்புக்கு நான் கட்டணம் செலுத்துகின்றேன். நீ எவ்வளவு வேண்டுமானாலும் படி’’ என்று அந்தச் சிறுமியை ஊக்கப்படுத்தி அவள் பெற்றோரை வரவழைத்து அவள் கர்நாடக இசையில் நல்ல தேர்ச்சி பெறும் வரை அவளுடைய பாட்டு வாத்தியார்க்குரிய கட்டணத்தை தான் செலுத்துவதாக கூறினார். கர்நாடக சங்கீதத்தில் நல்ல தேர்ச்சி பெற்ற அச்சிறுமி பிற்காலத்தில் மேடைக் கச்சேரிகள் செய்ய ஆரம்பித்தார்.

எம்ஜிஆருக்கு அழிவே இல்லை அவர் ஒரு phantom


எம் ஜி ஆர் சாதாரண மனிதர் அல்ல அவர் விந்தையான்வார் அவருக்கு அழிவே இல்லை அவர் இறந்துவிட்டதாகவே நான் கருதவில்லை என்கிறார் பத்மினி என்ற ஓவியர். பத்மினி சிறு வயதில் எம் ஜி ஆரை நேரில் பார்த்தவர் அவரது வீட்டிலும் படப்பிடிப்பு நிலையத்திலும் பப்பியாக வளைய வந்திருக்கிறார்.
பத்மினியின் தந்தை பட்டாளத்தை விட்டு வந்து எம் ஜி ஆரிடம் வேலைக்கு சேர்ந்தார். எம் ஜி ஆரின் தீவிர அபிமானி . ஜெனோவா படத்தில் அலுவலக உதவியாளராக வேலை பார்க்கத் தொடங்கியவர் நாடோடி மன்னன் படத்தில் தயைப்பு நிர்வாகிக்கு உதவியாளராகி விட்டார். அப்போது பத்மினி எம் ஜி ஆரை பல் முறை பார்த்தும் பேசியும் இருக்கிறார். அவரது கொடை பண்பு பெருந்தன்மையான குணம், ஹிரோ இமேஜ் ஆகியவற்றை நேரில் பார்த்து வியந்து போயிருக்கிறார். தெய்வத்தாய் படத்தில் பணியாற்றும் போது பத்மினியின் தந்தை நோய்வாய்ப்பட்டு இறந்துவிடுகிறார்.

அடிமை பெண் படப்பிடிப்பின் போது பத்மினியை பார்த்த எம் ஜி ஆர் உன் அப்பா நன்றாக படம் வரைவார் நியும் வரைவாயா என்று கேட்க அவளும் அழகாக வரைந்து தருகிறாள் அப்போது எம் ஜி ஆர் ஒருவர் படத்தை நேர்முகமாக வரையாமல் கொஞ்சம் பக்கவாட்டில் வரைந்தால் நன்றாக இருக்கும் என்று எம் ஜி ஆர் அவளுக்கு வரைந்து காட்டுகிறார். இன்று பெரிய ஓவியராக மலேசியாவில் வாழ்ந்து வரும் பத்மினி எம் ஜி ஆர் ஒரு பேண்டம்; அவருக்கு அழிவே கிடையாது; அவர் இறந்துவிட்டதாகவே நான் கருதவில்லை. என்கிறார்.

சிறு வயது முதல் எம் ஜி ஆரை பார்த்து ரசித்த அந்தச் சிறுமிக்கு அவர் இன்னும் வாழ்ந்துகொண்டிருப்ப்தாகவே தோன்றுகிறது. பத்மினி போன்ற பலர் இன்னும் அவருக்கு அழிவே கிடையாது என்று நம்புவதால் அவரது பெயரும் புகழும் நின்று நிலவுகிறது.
 

 


முனைவர் செ.இராஜேஸ்வரி

 

 

 

 



 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்