கவிக்கோ அப்துல் ரகுமான் பரம்பரையின் தலைமகன்: கவிமாமணி பேராசிரியர் தி.மு.அப்துல் காதர்

பேராசிரியர் இரா.மோகன்


“இனிய கவிதைக்கு மட்டுமே என்று / இறைவன் ஒரு கிரகம் செய்து
கதிரவனை வைத்து அதற்கெனக் / கடிகாரம் செய்தால்
சின்ன முள்ளாகக் / கவிக்கோவின் / மரபுக் கவிதைப் பேனா
பெரிய முள்ளாக அவர் / புதுக்கவிதைப் பேனா
அமையும் என்பதில் / ஆச்சர்யம் இல்லை”


                                           (‘கல்கோட் காதை’, எதிர்காற்று, பக்.3-4)

என்பது பேராசிரியர் தி.மு.அப்துல் காதர், கவிக்கோ அப்துல் ரகுமானுக்குச் சூட்டியுள்ள புகழாரம். இருபதாம் நூற்றாண்டுக் கவிதை உலகில் பாவேந்தர் பாரதிதாசன் பரம்பரையைத் தொடர்ந்து இலக்கிய ஆர்வலர்களாலும் ஆற்றல்சால் ஆய்வறிஞர்களாலும் அடையாளம் காணப்பெற்றது கவிக்கோ அப்துல் ரகுமான் பரம்பரை. இப் பரம்பரையின் தலைமகனாகக் குறிப்பிட்டுச் சொல்லத் தக்கவர் கவிமாமணி பேராசிரியர் தி.மு.அப்துல் காதர். அறிவூட்டி அவரை ஆளாக்கியது மதுரை மண்; அவரது ஆளுமைப் பண்பை வளர்த்தது வாணியம்பாடி கல்லூரியின் தமிழ்த்துறை; உலகத் தமிழர்களுக்குச் சொல்லின் செல்வராக அவரை அடையாளம் காட்டியது இராஜ் தொலைக்காட்சியின் ‘அகட விகடம்’ நிகழ்ச்சி; ‘மீராவின் கனவுகள்’, ‘தமிழும் கம்பனும்’, ‘அயல் மகரந்தச் சேர்க்கை’, ‘கிரண வாசல்’, ‘மின்னல் திரிகள்’, ‘பேனா மினார்’ ஆகியன பேராசிரியரின் கைவண்ணத்தைப் பறைசாற்றும் நூல்களுள் சிலவாகும். ஏப்ரல், 2015-இல் வெளிவந்த ‘எதிர்காற்று’ என்னும் தொகுப்பின் வாயிலாக அவரது கவிதைகளின் நோக்கும் போக்கும் குறித்து இக் கட்டுரையில் சுருங்கக் காண்போம்.

உறுத்திய நிகழ்வுகளும் உலுக்கிய நெகிழ்வுகளும்

“தர்மா மீட்டருக்கே / காய்ச்சல் ஏற்படுத்தும் –
உறுத்திய நிகழ்வுகள் / உலுக்கிய நெகிழ்வுகள்
ஆயிரமாயிரம்!

அவற்றுக்கு என் / அனிச்சையான எதிர்வினைகள்
எதிர்காற்றாகி / இருக்கிறது!”
(எதிர்காற்று, ப.14)

என ‘நன்றி நாற்றங்கால்’ என்னும் தலைப்பில் இத் தொகுப்பிற்கு எழுதிய முன்னுரையில் கவிமாமணி தி.மு.அப்துல் காதர் தந்திருக்கும் ஒப்புதல் வாக்கு மூலம் ஈண்டு மனங்கொளத் தக்கதாகும். அவரது படைப்புள்ளத்தை உறுத்திய நிகழ்வுகளும் உலுக்கிய நெகிழ்வுகளும் இத் தொகுப்பில் ஆற்றல்சால் கவிதைகளாக வெளிப்பட்டுள்ளன.

இன்று சமூகத்தில் நடைபெற்று வரும் வன்கொடுமை நிகழ்வுகளை அறிய நேர்ந்தால் நம் நெஞ்சம் பதறும்; ‘நெஞ்சு பொறுக்குதிலையே – இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால்’ எனப் பாரதியாரைப் போலவே சொல்லத் தோன்றும். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல, ஊடகங்கள் இந் நிகழ்வுகளை ஊதி ஊதிப் பெரிதுபடுத்துவதைக் காணும் போது நெஞ்சம் இன்னும் பல மடங்கு நெக்குருகும். கவிமாமணி இத்தகைய சமூக அவலங்களுக்கும் நாட்டு நடப்புகளுக்குமான தமது எதிர்வினைகளை இத் தொகுப்பில் ஆங்காங்கே பதிவு செய்துள்ளார். இவ் வகையில் குறிப்பிடத்தக்க சில சான்றுகளை ஈண்டுக் காணலாம்.

திருச்சியில் வல்லுறவுக்கு ஆட்பட்டுக் கொல்லப்பட்ட பள்ளி மாணவி நிர்பயாவைப் பற்றிய கவிமாமணியின் ஓர் உயிர்ப்பான சொற்சித்திரம் ‘கிருமி தீண்டிய சிறுமி’ என்னும் கவிதை. ‘திருச்சியில் / கறையான் அரித்த / வேதமான அப் பள்ளி மாணவி’ நிர்பயா, ஒரு மனித மிருகத்தால் சீரழிக்கப்பட்ட வன்கொடுமையைக் கல்லும் கரையும் வண்ணம் உருக்கமாகச் சொல்லி வரும் அக் கவிதை இப்படி முடிவடைகின்றது:

“தடுக்கி விழும் இடங்களில் எல்லாம் / டாஸ்மாக்
பிறகெப்படிப் பண்பாட்டிற்குக் கிடைக்கும் / பாஸ்மார்க்?
குடிகாரன் கை / மில்லி கொடுத்து விடல்
குரங்கின் கை / கொள்ளி கொடுத்து விடல்”
(ப.113)

கவிமாமணியின் ‘விழுது சாய்த்த ஆலமரம்’ என்னும் கவிதை, கற்பித்த ஆசிரியத் தாயின் மீது ஆயுதப் பிரயோகம் செய்த ஒரு மாணவனின் அடாத செயலைப் பாடுபொருளாகக் கொண்டது.

“ஆசிரியையே மாணவன் / ஆத்திரத்தில் குத்தினானாம்
விழுதே ஆலமரத்தைக் / கத்தியால் / வீழத்தி விட்டது!”


எனத் தொடங்கும் அக் கவிதை,

“செத்துப் போன / ஒருவரைப் புதைக்க
ஒரு சவப்பெட்டி போதும்!
ஒரு குடும்பத்தையே புதைக்க
ஒரு தொலைக்காட்சிப் பெட்டி போதும்!”
(பக்.84; 86)

என இன்று சமூகத்தில் நிகழ்ந்து வரும் அவலங்களுக்கு எல்லாம் ‘நோய் நாடி, நோய் முதல் நாடி’ என்ற படி, தொ(ல்)லைக்காட்சிப் பெட்டி காரணமாக விளங்குவதை எடுத்துக்காட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது. அது ‘(நோய்) தீரும் வாய் நாடி’ என்பதற்கு இணங்க, ‘சமூகமே! உண்மை கொண்டு / உன்னைக் கழுவு /அதுவே / சலவைக்கான / சன்மார்க்க நிலவு!... அகத்திற்குள் / நன்மை வெளிச்சம் பாய்ச்சு / தீமையிருள் போயே போச்சு!’ (ப.86) எனக் கொடுமையை ஒழிப்பதற்கான தீர்வையும் கவிமாமணி கவிதையின் முடிவில் குறிப்பிட்டிருப்பது சிறப்பு.

தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள் மூவரால் கொலையுண்ட பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் சுரேஷ் நினைவாகக் கவிமாமணி அப்துல் காதர் படைத்துள்ள கவிதை ‘அரிவாள் அறுவடை’. ‘பால் திரிந்தால் / மீண்டும் / பாலாதல் முடியாது: / பாலுணர்வு திரிந்தால் / மறுபடியும் / தூய்மை படியாது’ (ப.133) என்பதே இக் கவிதையின் வாயிலாகக் கவிமாமணி பேராசிரியர் அப்துல் காதர் இளைய தலைமுறையினருக்கு விடுக்கும் செய்தி ஆகும்.

‘ஜனநாயகம்’ என்ற தலைப்பில் கவிமாமணி அப்துல் காதர் படைத்துள்ள கவிதை, இன்றைய சமுதாயம் யாரைத் தலைவன் என்று யாரைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றது என்ற உண்மையைச் சிதறுதேங்காயைப் போல போட்டு உடைக்கின்றது:

1. குடிக்கிறவனைச் சமுதாயம் ‘குடிகாரன்’ என்கிறது.
2. திருடுபவனைச் சமுதாயம் ‘திருடன்’ என்கிறது.
3. சாராயம் காய்ச்சுபவனைச் சமுதாயம் ‘சாராய வியாபாரி’ என்கிறது.
4. விபச்சாரம் செய்பவனைச் சமுதாயம் ‘விபச்சாரகன்’ என்கிறது.
5. கற்பழிப்பவனைச் சமுதாயம் ‘காமாந்தகாரன்’ என்கிறது.
6. ஆக்கிரமிப்பாளனைச் சமுதாயம் ‘ஆக்கிரமிப்பாளன்’ என்கிறது.
7. அநியாயம் செய்பவனைச் சமுதாயம் ‘அநியாயக்காரன்’ என்கிறது.

இப்படியே வரிசையாக நீட்டி முழக்கிக் கொண்டே போனால் என்னாவது? பிறகு யார் தான் தலைவன், யாரைத் தான் சமுதாயம் தலைவன் என்கிறது எனக் கேட்கிறீர்களா? இதோ, கவிமாமணியின் தெறிப்பான விடை:

“இவை / அனைத்தையும் செய்பவனைச் சமுதாயம்
‘தலைவா’ என்கிறது”
(ப.50)

உண்மையில் ‘நெத்தியடி’ என்பது கவிதையின் இந்த முடிப்புத் தான்!

‘அகிம்சை அடிகள்’


உலக வரலாற்றில் தடம் பதித்த ஆளுமையாளர்களுள் கவிமாமணி பேராசிரியர் தி.மு.அப்துல் காதரின் உள்ளத்தில் குடியிருந்து கோலோச்சுபவர் காந்தியடிகள் ஆவார். ‘அகிம்சை அடிகள்’ என்னும் பொருள் பொதிந்த சிறப்புப் பெயரால் அடிகளைப் போற்றும் கவிமாமணி,

“முடியிழந்த / மோகன்தாஸ்தான் தாயகத்திற்கு
முடி சூட்டினார்!
இந்தப் பொக்கைவாய்க் கிழவனால்தான்
பாரத விடுதலைக்கு / பல் முளைத்தது!
அகிம்சை அண்ணலின் / ஈரங்கிக்கு முன்தான்
பிரிட்டிஷ் ஏகாதிபத்திய / பீரங்கி தோற்றது!
இந்த / அரை நிர்வாணப் பக்கிரியின்
இராட்டைச் சக்கரம்தான் / பாரதப் பாஞ்சாலியின்
பவித்திரம் காத்தது!”
(ப.33)

‘முடியிழந்த மோகன்தாஸ் x முடிசூட்டினார்’, ‘பொக்கைவாய்க் கிழவனால்’ x ‘பல் முளைத்தது’, ‘ஈரங்கி’ x ‘பீரங்கி’, ‘அரை நிர்வாணப் பக்கிரி’ x ‘பாஞ்சாலியின் பவித்திரம் காத்தது’ என அழகிய முரண்சுவை வாய்ந்த தொடர்களைக் கையாண்டு அடிகளுக்குப் புகழாரம் சூட்டுவது நோக்கத்தக்கது.

கவிமாமணியின் நோக்கில், ‘போர்பந்தம் வேண்டாம் என, போர்பந்தரில் பிறந்தவர்’ காந்தியடிகள்; ‘காந்தி தேசம்’ இன்று பல நிலைகளில் ‘சேதப்பட்டு’க் கிடப்பதற்குக் காரணம் இது தான்:

“அண்ணலே! / உம் கண்ணாடியைக் / காப்பாற்றிய தேசம்
காந்தீயப் பார்வையைத் / தொலைத்து விட்டது!”
(ப.34)

காந்தியடிகளின் காலணியை, அவரது கைத்தடியை, அவர் பயன்படுத்திய கடிகாரத்தைக் அருங்காட்சியகத்தில் வைத்துக் காப்பாற்றி வந்தால் மட்டும் போதாது; வாழ்விலும் வாக்கிலும் காந்தீயப் பார்வையை – வாய்மை, இன்னா செய்யாமை என்னும் நெறிமுறைகளை – நாளும் பின்பற்றி வர வேண்டும்; பதவி வெறிக்கு முற்றுப்புள்ளி வைத்து, கள்ளுண்ணாமையைக் கடைப்பிடித்து வர வேண்டும். அப்போது தான் காந்தியடிகள் கனவு கண்ட ‘இராம ராஜ்யம்’ உருவாகும்.

உயிர்ப்புள்ள மரண வாக்குமூலம்


மருது சகோதரர்கள், பகத்சிங், மருத நாயகம் கான்சாகிப், மௌலாரை முகமது அலி ஆகிய விடுதலைக்காகப் பாடுபட்ட, உயிர் விட்ட – தூக்குக் கயிற்றினை முத்தமிட்ட – போராளிகளின் மரண வாக்குமூலங்களைக் கவிமாமணி அப்துல் காதர் உயிர்ப்புள்ள கவிதைகளாக வடித்துத் தந்துள்ளார். பதச் சோறாக, வட்ட மேசை மாநாட்டுக்குச் சென்ற போது மௌலானா முகமது அலி கூறியதனைக் கவிமாமணியின் சொற்களில் இங்கே காணலாம்:

“என்னுயிர் போவதானால் / இங்கிலாந்தில், இலண்டனில் போகட்டும்!
என் உடலை / இங்கேயே புதைத்துவிடுங்கள்!
ஆறாயிரம் மைல்களுக்கு / அப்பால் இருந்து வந்த
ஆங்கில கன்னியர்கள் நீங்கள் / காஷ்மீரம் முதல் கன்னியாகுமரி வரை
எங்கள் தாய்நாட்டு மண்ணைப் / பல்லாயிரம் சதுர மைல்
பரப்பளவு நிலத்தை / ஆக்கிரமித்தீர்கள்!
என்னுடலை இலண்டனில் / புதைத்தால்
ஓர் இந்தியன் / ஆங்கிலேயனுக்குச் சொந்தமான
ஆறடி மண்ணைத் / தன் / மரணத்தால் இந்தியன் கைப்பற்றினான் என்று
வருங்கால வரலாறு பதிவு செய்யட்டும்!”
(பக்.27-28)

கவிமாமணியின் முத்திரைக் கவிதை

‘கொத்தடிமை’ என்னும் தலைப்பில் கவிமாமணி அப்துல் காதர் படைத்துள்ள கவிதை அவரது முத்திரைத் கவிதையாக மதிக்கத் தக்கது. உருவம், உள்ளடக்கம், உத்தி, மொழி என்னும் நான்கு கூறுகளாலும் சிறந்து விளங்கும் அக் கவிதை வருமாறு:

“சீட்டை / எவனுக்கோ / எடுத்துக் கொடுத்துவிட்டுச்
சில்லறையை / எவனுக்கோ சேர்த்து விட்டுச்
சின்னச் சின்ன இலவசங்களாம் / நெல்மணியை வாங்கிக் கொண்டு
மீண்டும் கூண்டுக்குள் அடியெடுத்து வைக்கும் / சோதிடக் கிளி
சிறகும் வானமும் / கூரிய / அலகும் மறந்த
கொத்தடிமைக் கிளி!”
(ப.52)

கவிமாமணியின் மொழியில் கூறுவது என்றால் சோதிடக் கிளியின் வாழ்வே ஒரு ‘முரண் அவலம்’ தான்! அது சீட்டை எவனுக்கோ எடுத்துக் கொடுக்கிறது; சில்லறையை எவனுக்கோ சேர்க்கின்றது; தனது வேலைக்காகச் சின்னச் சின்ன இலவசங்களான நெல் மணிகளை வாங்கிக் கொண்டு மீண்டும் கூண்டுக்-குள்ளேயே அடியெடுத்து வைக்கின்றது. மீண்டும் மீண்டும் அதே சுழற்சியில் கழிகின்றது அதன் வாழ்க்கை. பறப்பதற்குச் சிறகும் பரந்த வானமும் துணைபுரிவதற்கும் வினை ஆற்றுவதற்கும் கூரிய அலகும் இருப்பதை மறந்ததால் தான் இவ்வளவு அவலமும்; தன்னிடம் இருப்பதை உணர்ந்து, எழுந்து, விழிப்புணர்வு பெற்று, இமைப்பொழுதும் சோராது செயலாற்றத் தொடங்கினால் போதும், பரந்து விரிந்த வானத்தில் கிளி சுதந்திரமாகப் பறந்து திரியும் உரிமை வாழ்வினைப் பெற்று விடும்! ஆழ்ந்து பயின்றால், கவிமாமணி இக் கவிதையைக் கிளிகளுக்காக மட்டும் பாடவில்லை, பாமரராய், விலங்குகளாய் இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு வாழ்ந்து வரும் வேடிக்கை மனிதர்களுக்காகவும் பாடியுள்ளார் என்பது விளங்கும்.

அங்கதச் சுவையும் நகைச்சுவை உணர்வும் கைகுலுக்கி நிற்கும் கவிதை


நாம் இராமர்களோ இல்லையோ, அங்ஙனம் மனத்தளவில் நம்மை விரித்துக் கொண்டு, இன்று திருமண வீடுகளில் நம் பாதுகைகளை – காலணிகளை – நம்மிடம் சொல்லிக் கொள்ளாமலே எடுத்துச் செல்லும் நவீன ‘பரதாழ்வார்க’ளுக்குப் பஞ்சம் இல்லை; உடல் நலம் குன்றியதால் அதனைத் தேற்றிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் மருத்துவ மனைக்குச் சென்றாலோ, அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு நம் உறுப்புக்கள் நம் உடம்பிலேயே இருக்கும் என்பதற்கு எந்த விதமான உத்தரவாதமும் இன்று இல்லை; பெண்கள் மன அமைதியைத் தேடி குடும்ப நன்மைக்காகச் சாமியாரின் மடத்திற்குப் போனாலோ, அவர்களது கற்புக்குத் தக்க காவல் எதுவும் இல்லை. ‘பத்திரம்’ என்ற கவிதையில் நெஞ்சை உறுத்தும் இம் மூன்று நிகழ்வுகளையும் அங்கதச் சுவையும் நகைச்சுவை உணர்வும் ததும்பி நிற்கும் வகையில் சாடியுள்ளார் கவிமாமணி:

“மண்டபத்திற்குப் போனால் / செருப்பு பத்திரம்!
மருத்துவ மனைக்குப் போனால் / உறுப்பு பத்திரம்!
மடத்துக்குப் போனால் / கற்பு பத்திரம்!”
(ப.19)

கவிமாமணி இக் கவிதையில் எடுத்துரைக்கும் மூன்றும் நிதர்சனமான, நடப்பியல் உண்மைகளே என்பதை யாவரும் ஒப்புக்கொள்வர்.

கவிமாமணியின் தனிப்பாணி


கற்பனையாகத் தாமே ஒரு கேள்வியைக் கேட்டுக் கொண்டு, அதற்கான பதிலைச் சிந்தனைக்கு விருந்தாகும் வண்ணம் சுவைபட மொழிவது கவிமாமணி அப்துல் காதருக்கே கைவந்த ஒரு தனிப்பாணி. ‘தையல்’ என்ற அவரது கவிதை இதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டு. ‘எப்போதும் பெண்கள் / தைக்கிறார்கள்’ எனத் தொடங்குகிறது கவிதை. பெண்கள் தைப்பது ‘ஒரு முள் தைப்பதைப் போல அல்லவாம், ஒரு ஊசி தைப்பதைப் போலவாம்!’ ஆனால், ஆணாதிக்கம் தான் அரிவையரைக் ‘கிழிகிழி’ எனக் கிழித்துப் போடுகிறதாம். சரி, பெண்களுக்குத் ‘தையல்’ என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? கவிஞரின் சுவையான விடை இதோ:

“தன் குழந்தை / நிர்வாணமாக
இருக்கக் கூடாதென்று / அது பிறப்பதற்கு முன்பே
கருப்பை / என்னும் ஆடையைத்
தைத்தே வைத்திருப்பதால் / ‘தையல்’ என்றார்களோ?”
(ப.62)

பெண்களைத் ‘தையல்’ என்பதற்கான கவிமாமணியின் விளக்கம் ஏற்றுக் கொள்ளத்தக்க ஒன்றே ஆகும்.

‘விலக்கப்பட்ட கனி’யான கல்வி!


ஒரு காலத்தில் கல்வி அரசாங்கத்திடம் இருந்தது! சாராயக் கடைகள் தனியாரிடம் இருந்தன! இன்று இது தலைகீழ் ஆகிவிட்டது: சாராயம், சர்க்கார் கைகளில்; கல்விக் கூடங்களோ தனியார் வசம்! விளைவு? அதனாலேயே ஆபத்துக்கள் உருவாயின என்கிறார் கவிமாமணி. “கல்வி நிலையங்கள் இன்று கல்லாதவர்களால் நிரம்புவதால், அப்பெட்டிக்குக் ‘கல்லாப் பெட்டி’ என்ற பெயரோ?” என்ற வினாவில் கவிமாமணியின் கூர்மையான விமர்சனம் தொக்கி நிற்கின்றது. இன்னும் ஒரு படி மேலாக,

“பாரதிதாசன் பாடலைத்தான் / பாடுகிறார்கள் இவர்கள்
‘விலைபோட்டு வாங்கவா முடியும் / கல்வி?’ என்றதை
‘விலைபோட்டு வாங்க, வா! / முடியும் கல்வி!’ / என்கிறார்கள்”
(ப.91)

என்பதன் வாயிலாக ‘இதயக் கனி’யாக இருக்க வேண்டிய கல்வி, இன்று ஏழை எளியவர்களுக்கு எளிதில் ‘எட்டாக் கனி’யாக – ‘விலக்கப்பட்ட கனி’யாக மாறிவிட்ட அவலத்தை அங்கதக் குறிப்போடு சாடியுள்ளார் கவிமாமணி அப்துல் காதர்.
பிறிதொரு கவிதையில் நோபெல் பரிசு பெற்ற பாகிஸ்தானியக் குட்டி நட்சத்திரம் மலாலா தன் மணிவாய் திறந்து,

“மறுமையிலும் கூட / எனக்குச்
சொர்க்கக் கனி தேவையில்லை / கல்விக் கனியே போதும்!”
(ப.109)

எனக் கூறியதை எடுத்துக்காட்டி, இன்றைய இளைய தலைமுறையினருக்குக் கல்விச் செல்வத்தின் மேன்மையை உணர்த்தியுள்ளார் கவிமாமணி அப்துல் காதர்.

‘தகுதியானதைக் கற்றல் காளையர்க்குக் கடனே!’


இன்றைய இளைய தலைமுறையினர் ‘இளைத்த தலைமுறையினராக’, கையடக்கக் கணிப்பொறியிலும் இணைய தளங்களிலும் தங்களின் பெரும்பாலான பொன்னான பொழுதுகளை எல்லாம் பாலுணர்வு தொடர்பான நிகழ்வுகளைப் பார்ப்பதிலேயே வீணாகப் போக்கிக் கொண்டிருப்பதில் கவிமாமணி அப்துல் காதருக்குச் சற்றும் உடன்பாடு இல்லை, ‘தலைப்புச் செய்திகளாகப் / பெருஞ்செய்திகளை உருவாக்க வேண்டியவர்கள் / குறுஞ்-செய்திகளில் முடங்கிப் போகிறார்களே’ என்ற ஆழ்ந்த கவலை அவருக்கு உள்ளது. எனவே,

“உன் தலை / குனிந்து பார்க்கட்டும்
புத்தகத் / தாளை
தலை நிமிர்ந்து பார்க்கும் உன்னை / நாளை”


எனக் காளையர்க்கு அறிவுறுத்தும் கவிமாமணி,

“கற்க / கசடறக் கற்க
கற்பவை கற்க / கற்றபின் கற்க
கடைப்பிடிக்கக் கற்க / தகுதியானதைக் கற்க”
(பக்.99-100)

என வள்ளுவர் வாக்கினை நினைவூட்டி வழிகாட்டவும் தவறவில்லை. புத்தக வாசிப்பு என்பது முதலில் ஒரு பழக்கமாகி, பிறகு வழக்கமும் ஆகி, தொடர்ந்து வாடிக்கையாகி, முத்தாய்ப்பாக, அதுவே வாழ்க்கையாகவும் ஆக வேண்டும் என்றால், “வீடுகளில் / ஆசைக்கொரு அறை / பூசைக்கொரு அறை – இட்டிலி / தோசைக்கொரு அறை’ இருப்பதைப் போல, ‘நூலக மேசைக்கொரு அறையும் இருந்தால் போதும்!’ என அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார் கவிமாமணி.

சொக்க வைக்கும் சொல் விளையாட்டுத் திறம்


கம்ப ராமாயணத்தின் பால காண்டத்தில் ‘நகரப் படல’த்தில் இடம் பெறும் முதல் பாடலில், ‘செவ்விய, மதுரம் சேர்ந்த, நற்பொருளின் சீரிய, கூரிய, தீஞ்சொல் வவ்விய கவிஞர்’ எனக் கவிஞரின் சொல்லாற்றலுக்குக் கட்டியம் கூறுவார் கம்பர். அவரது வாக்கிற்கு இணங்க, செம்மையான, இனிமை பொருந்திய, கூறுகின்ற நற்பொருளால் சிறந்த, நுட்பமான, கனிந்த சொற்களைக் காலம் அறிந்து, இடம் அறிந்து, வலி அறிந்து கையாளுவதில் கை தேர்ந்தவராகக் கவிமாமணி அப்துல் காதல் விளங்குகின்றார். இத் திறம் பல்லாண்டுக் காலம் ஒரு கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியதாலும், பொது மேடைகளிலும் ஊடகங்களிலும் ஆயிரக்-கணக்கான நிகழ்வுகளைத் திறம்பட நடத்திய நீண்ட அனுபவத்தாலும் அவருக்கு வசப்பட்டது எனலாம். இவ் வகையில் கவிமாமணியின் படைப்புலகில் சொல் விளையாட்டு அழகுற அமைந்த சில இடங்களை இங்கே சுட்டிக்காட்டலாம்.

பெண்மையின் ஆளுமைத் திறத்தில் மென்மையும் உண்டு; மேன்மையும் உண்டு; திண்மையும் உண்டு; நுண்மையும் உண்டு; கூர்மையும் உண்டு; சீர்மையும் உண்டு. இதனைக் கவிமாமணி தம் கவிதை ஒன்றில் புலப்படுத்தி இருக்கும் பாங்கு வருமாறு:

“ஆணே! / பெண்
உன் கண்களுக்கு ஊட்டியாய் இருப்பாள்
அன்பு காட்டுவதில் போட்டியாய் இருப்பாள்
உன் இடுப்புக்கு வேட்டியாய் இருப்பாள்
உன் பிள்ளைக்குத் தோட்டியாய் இருப்பாள்
இட ஒதுக்கீட்டைத் தடுத்தால் ஈட்டியாய் இருப்பாள்
கபர்தார்! கபர்தார்!”
(ப.32)

ஊட்டியாய் – போட்டியாய் – வேட்டியாய் – தோட்டியாய் – ஈட்டியாய் (இருப்பாள் பெண்) சீரிய, கூரிய சொற்களின் அணிவகுப்பு!

’65 திரும்புமா?’; கவிமாமணியின் ஆழ்ந்த தமிழ் உணர்வைப் பறைசாற்றும் கவிதை. அதன் துடிப்பு மிக்க முடிப்பு வரிகள் இதோ:

“நாட்டின் பெயரோ / இந்தியா!
அந்தப் பெயரும் / இந்தியை எதிர்க்கிறதே!
இந்தியா? / ‘இந்தி’யா?”
(ப.98)

‘இந்தியா’ என்ற நாட்டின் பெயரை உச்சரித்துப் பார்த்தால் தெரியுமாம், அந்தப் பெயரும் ‘இந்தி’யா? என எதிர்த்துக் கேட்பது! கவிமாமணியின் திறமான சொல் விளையாட்டுக்கான பதச் சோறு இது!

பிறிதொரு கவிதையில்,

“ஆனைத் துதிக்கையினால் / பதவி பெறுவது / அக் காலம்
ஆளைத் துதிக்கையினால் / பதவி பெறுவது / இக் காலம்”
(ப.128)

எனத் தேர்ந்த சொல் விளையாட்டின் வாயிலாகக் கால மாற்றத்தைச் சுட்டிக் காட்டுகிறார் கவிமாமணி.

“‘பிறர் தமர்’ என்று எண்ணும் / பிரதமர் வேண்டும்
எம் மதமும் ‘எம் மதமே’ என்னும் / இந்தியர் வேண்டும்”
(ப.125)

என்னும் கவிமாமணியின் வாக்கிலும் கூரிய சொல் விளையாட்டு களிநடம் புரிந்து நிற்றல் கண்கூடு.

‘சிகரெட்டின் சாம்பல் உணர்த்தும் சங்கதி’

ஒரு முறை ‘புகை பிடிப்பது சரியா? விடுவது சரியா?’ என்ற வாசகர் ஒருவரின் கேள்விக்குப் புகழ் பெற்ற பத்திரிகையின் ஆசிரியர் சொல்லி இருந்த நறுக்கான பதில் இது:

“விடுவது தான் சரி!”

‘எப்படிப் பார்த்தாலும் புகைப் பழக்கத்திற்கு முழுக்குப் போடுவதே உத்தமம்’ என்பதை உணர்த்தும் வகையிலேயே இங்ஙனம் பதில் கூறி இருந்தார் பத்திரிகை ஆசிரியர். புகைப் பழக்கத்தால் விளையும் கேட்டினைச் ‘சாம்பல் சங்கதி’ என்னும் அழகிய தலைப்பில் எழுதிய கவிதையில் தெளிவுற உணர்த்தியுள்ளார் கவிமாமணி.

“சிகரெட் பிடிப்பவர்கள்
வளையம் வளையமாகப் புகை விடுகிறார்கள்.”


இது நமக்கு எதை நினைவுபடுத்துகிறது தெரியுமா?

“நாளை மலர் வளையம் வைக்க வேண்டி வரும்
என நமக்கு நினைவு படுத்துகிறார்கள்”


என்கிறார் கவிமாமணி.

“சிகரெட் புகை பாம்பு, பாம்பாக / நெளிந்து வெளியேறுவதில் இருந்து
என்ன தெரிகிறது?”


என்ற வினாவுக்குக் கவிஞர் தரும் விடை இது:

“உள்ளே புற்று வளர்ந்து வருகிறது / என்பது தானே?”

தொடர்ச்சியாக, “சிகரெட் வெள்ளைக் காகிதம், உடுத்தியிருப்பது ஏன்?” என்ற கேள்விக்கான பதிலையும் கவிதையின் முடிவில் தெளிவுற மொழிந்துள்ளார் கவிமாமணி:

“அதனால் பல பேர் / விதவைகள் ஆகியுள்ளார்கள் என
விளம்புவதற்காகவே!”
(ப.68)

ப(h)ட்டுக்கோட்டையார்க்குத் தாயத்தும் முற்போக்கான சங்கதியைச் சொன்னது; கவிமாமணிக்குச் சிகரெட்டின் சாம்பலும் நல்லதொரு சங்கதியை உணர்த்து-கின்றது.

கவிமாமணி போற்றும் தமிழ் மொழியின் தனித்தன்மை


“செந்தமிழே சுயமாகச் / சிந்திக்கத் தூண்டும் மொழி” (ப.121) என்றும், “சேறு என்று எழுதிச் சோற்றில் / கால் போடு / சோறு ஆகும் / சுந்தரத் தமிழில்!” (ப.92) என்றும், “எழுத்தில் கூட ஆயுதத்தை / இறுதியில்தான் / இலக்கணம் வைத்தது… முத்தமிழ்” (ப.133) என்றும் ஒல்லும் வகையில் எல்லாம் தம் கவிதைகளில் தமிழ் மொழியின் உயர்வையும் தனித்தன்மையையும் மேன்மை-யையும் எடுத்துரைத்துள்ளார் கவிமாமணி.

முத்தாய்ப்பாக, பெரும்புலவர் வே.பதுமனார் மொழிவது போல, “இந்த ‘எதிர்காற்றை’ வழங்கிய கவிதைத் தமிழ்த் துருத்தி கவிமாமணி அப்துல் காதரை, அறிவின் தூதரென, அருளின் நாதரென, தமிழின் வேதரென – காலம் களிப்போடு போற்றி மகிழும்” (‘தமிழின் வேதர் – அப்துல் காதல்’, எதிர்காற்று, ப.12) என்பது முற்றிலும் உண்மை; வெறும் புகழ்ச்சி இல்லை.
 




'தமிழாகரர்' முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.

 

 

 

 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்