எம் ஜி ஆர் ஒரு ஜீவ நதி - 17

 

முனைவர் செ.இராஜேஸ்வரி

 

பொன்னின் நிறம் பிள்ளை மனம் வள்ளல் குணம்

எம் ஜி ஆர் ஒரு ஜீவ நதி தொடரின் நிறைவு கட்டுரை;- ’ஜீவ நதியாய் வருவாள் என் தாகம் தீர்த்து மகிழ்வாள்’’ என்று எம் ஜி ஆர் அடிமைப்பெண் படத்தில் வரும் தாயில்லாமல் நானில்லை எனத் தொடங்கும் பாடலில் பாடுவதாக ஒரு காட்சி உண்டு. ஜீவ நதி என்று தாயாரை குறிப்பிட்ட்தற்கு காரணம் தாயின் மந்தில் ஈரம் சுரந்துகொண்டே இருக்கும் தாயுள்ளம் என்பது வற்றாத ஜீவ நதி. அதை போலவே எம் ஜி ஆரின் உள்ளமும் குழந்தைகள்பால் வற்றாத அனுடன் ஈகை இரக்கம் போன்ற பண்புகளுடன் இருந்து வந்த்தை இந்த தொடர் இதுகாறும் விளக்கியது. அவர் தாயாயக் இருந்து குழந்தைகளிடன் அன்பு செலுத்தினார் அதே வேளையில் ஒரு குழந்தையை போல தாயன்புக்காக ஏங்கினார். அதனால் தான் பாடலாசிரியர்கள் அவருக்கு பாடல் எழுதியபோது பிள்ளை மனம் வள்ளல் குணம் என்று பாராட்டினர். தாய்மையும் சேய்மையும் ஒரு சேரப் பெற்ற இயல்புள்ளவராக எம் ஜி ஆர் விளங்கினார்.

குழந்தைகளின் உள்ளம் கவர்ந்தவர்

1961இல் எம்ஜிஆருக்கு மக்கள் திலகம் என்ற பட்டத்தை அளித்தவர் எழுத்தாளர் ,பதிப்பாளர் மற்றும் பத்திரிகையாளரான தமிழ்வாணன் அவர்கள். இவர் எம்ஜிஆரின் சிறப்பை எடுத்துரைக்கும் போது ‘’ஒரு குழந்தையிடம் 10 தலைவர்கள் படத்தை காட்டி இவற்றில் உனக்கு பிடித்த படத்தை எடுத்து என்னிடம் கொடு என்று கூறினால் பத்துக்கு எட்டு குழந்தைகள் எம்ஜிஆர் படத்தை தான் தெரிவு செய்து கொடுப்பார்கள்’’ என்றார். ஏனெனில் எம்ஜிஆரின் முகம் குழந்தைகளை மிகவும் கவர்ந்த முகமாகும் என்று குறிப்பிட்டிருந்தார். இன்றுவரை எம்ஜிஆருக்கு தொடர்ந்து கொண்டிருக்கும் சிறுவயது ரசிகர்களை பார்க்கும் பொழுது தமிழ்வாணனின் கருத்து உண்மையாக என்பதை உணர முடிகிறது.

எங்கள் குடும்பத்தில் ஏழு வயது ரசிகன்

என் தங்கை மகன் சத்யரூபன் ஹரியானா மானிலத்தில் பஞ்சுகுலா என்ற பகுதியில் இருந்தபோது அவனுக்கு தமிழ் மறந்துவிடக்கூடாது என்பதற்காக எம்ஜிஆர் படங்களை வீட்டில் போட்டு காண்பிப்பது வழக்கம். ஒருமுறை அவன் தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் பெரிய வீட்டுப் பெண் படத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு அந்த படத்தில் வரும் சிலம்பு சண்டை மிகவும் பிடிக்கும் ஏனெனில் ஒரு கான்வென்ட் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தான். அங்கு ராணுவ வீரர்களுக்கு கராத்தே கற்பிக்கும் ஒருவர் இவனுக்கும் இவனோடு படிக்கும் மாணவர்களுக்கும் கராத்தே குங்பூ போன்ற சண்டைப் பயிற்சிகளை கற்றுக் கொடுத்தார். இதன்விளைவாக அவனுக்கு எம்ஜிஆரின் சண்டை காட்சிகளைப் பார்ப்பதில் மிகவும் நாட்டம் உண்டு. தற்காப்புப் பயிற்சி வகுப்பிலும் இவன் சில சிலம்ப முறைகளை கலந்து ஸ்டைலாக செய்வதாக அவன் ஆசிரியரிடம் பெயர் பெற்றிருந்தான்.. சிலம்பு சண்டையில் ஆர்வம் அதிகரித்து அவன் பெரிய இட்த்து பெண் படத்தில் வரும் சிலம்பு சண்டையை திரும்பத்திரும்ப ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

சிலம்பில் அவனுக்கிருந்த ஆர்வம் புரியாத அவனது தந்தை தினமும் என்ன படம் பார்த்துக் கொண்டே இருக்கிறாய் என்று அவனை திட்டி ஒரு நாள் ந்த பி சி டி டிவிடி பிலேயரை கோபத்தில் போட்டு உடைத்து விட்டார். அப்போது அவனுக்கு 12 வயது அவனுககு ஏழு வயது. இப்போது 12 வயது. இன்றும் அவன் வாரம் ஒருமுறையாவது ஏதேனும் ஒரு எம்ஜிஆர் படத்தை தனியாக உட்கார்ந்து ரசித்துப் பார்ப்பான் பின்பு அந்தப் படத்தைப் பற்றி ஏதேனும் ஓர் இரண்டு கருத்துக்களை அவன் அம்மாவிடம் சொல்லி விட்டு போய்விடுவான்.

ஒரு முறை அவன் அடிமைப்பெண் படம் பார்த்துவிட்டு வந்து அவன் அம்மாவிடம் ‘’அப்பா எம்ஜிஆர் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்து இருக்கலாம்’’ என்றான். ஏனென்றால் அப்பா எம்ஜிஆர் சண்டையில் கொல்லப்பட்டதால் தான் பெண்கள் அடிமைப் பெண்ணாக காலில் விலங்கு பூட்டி வாழவேண்டிய ஒரு நிலைமை ஏற்பட்ட்து. இவ்வாறு அவனுடைய அவதானிப்பு சற்று வித்தியாசமாக இருக்கும். இவன் ஒரு ஐந்து ஆறு வயதில் இருந்தே எம்ஜிஆர் படங்களையும் பாட்டுகளையும் ரசித்துக் கொண்டு வருகிறான். இவன் இனி தன் மகன் பேரன் காலம் வரை எம் ஜி ஆர் படங்களைப் பற்றி உயர்வாக பேசுவான் . அவர்களும் ஆர்வம் அதிகமாகி எம் ஜி ஆர் படங்களைப் பார்த்து விமர்சிப்பது நடக்கும். ஆக இன்னும் ஒரு ஐம்பது ஆண்டுகளுக்கு எம் ஜி ஆர் படங்களை ரசிக்க ஆட்கள் வருவது உறுதி.

எம் ஜி ஆர் ஒரு தீர்க்கதரிசி

ஒருமுறை எம் ஜி ஆரிடம் உங்களை எவ்வளவு காலம் இந்த மக்கள் நினைவில் வைத்திருப்பர். என்று கேட்ட போது அவர் என் பட்த்தின் நெகட்டிவ்கள் இருக்கும் வரை என்றார். அவர் ஒரு தீர்க்க தரிசி . அவரது படங்கள் உலகப் பொதுவான காலத்தால் அழியாத கருத்துக்களைக் கொண்டனவாக இருப்பதால் அந்தப் படங்கள் பார்க்க கிடைக்கும்வரை மக்கள் ரசிக்கலாம். இப்போது படங்களை மினம் [டிஜிட்டல்] முறையில் பாதுகாக்க வழி இருப்பதால் படங்கள் இன்னும் ஒரு நூற்றாண்டு வரை இருப்பது உறுதி.

படங்களில் சிறுவர்களுக்கு என்ன தேவை?

எம்ஜிஆர் படங்களுக்கு புதிது புதிதாக ரசிகர்கள் உருவாவதற்கான காரணம் அவருடைய படங்களில் இருக்கும் தெளிவும் இனிமையும் அவை தரும் மகிழ்ச்சியும் ஆகும். குழந்தைகளுக்கு, ஒரு படத்தின் வசனமும் காட்சியும் தெளிவாக புரிய வேண்டும். அவன் மனதுக்கு இனிமை அளிப்பதாக இருக்க வேண்டும் படம். பார்த்த பிறகு மகிழ்ச்சி உண்டாக வேண்டும். அதில் வரும் பாட்டுகளையும் சண்டைகளையும் சிரிப்பு காட்சிகளையும் மீண்டும் நினைத்தும் சொல்லியும் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளவும் ஏற்றவையாக இருக்க வேண்டும். இவை அனைத்தும் எம் ஜி ஆர் படங்களில் இருப்பதால் இப்படங்கள் புதிய ரசிகர்களை குறிப்பாக குழந்தை ரசிகர்களைப் பெற்று தருகின்றன.

எம்ஜிஆர் நடித்த காலத்தில் பிறக்காதவர்களும் எம்ஜிஆர் ஆட்சி செய்த காலத்தில் கூடப் பிறக்காதவர்களும் எம்ஜிஆர் இறந்த பிறகு அதாவது 1987க்கு பிறகு பிறந்தவர்களும் கூட எம்ஜிஆருக்கு ரசிகர்களாக இருக்கின்றன. இன்று பலர் யூட்யூபில் எம்ஜிஆரை பற்றிய பேட்டிகளை, ரி மிக்ஸ் பாடல்களை நல்ல பல காட்சிகளைப் பார்க்கும் வாய்ப்பு இருக்கிறது. அவற்றை இளைஞ்ர்கள் பார்த்து ரசிக்கின்றனர். அவரைப் பற்றி நிறைய விஷயங்களைப் பார்த்தும் கேட்டும் தெரிந்து கொள்கின்றனர். ஒரு காலத்தில் எம்ஜிஆர் ஒரு புதிர் என்று நினைப்பது உண்டு ஆனால் இன்று அவரைப் பற்றிய ஏராளமான விஷயங்களை அறிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது
.
எம் ஜி ஆர் படத்தில் நடிப்பதென்றால் குழந்தை நடிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அவர்களுக்கு நல்ல சாப்பாடு தின்பண்டங்கள் கிடைக்கும். சந்திரோதயம் படத்தில்,
 
புத்தன் இயேசு காந்தி பிறந்தது
பூமியில் எதற்காக தோழா
ஏழை நமக்காக

என்ற பாடலில் தன்னோடு மழையில் நடந்து வரும் குழந்தைகளை நன்கு திருப்தியாக சாப்பிட வைத்து பின்பு நடிக்க வைத்திருப்பார். சட்டை போடாத அந்த ஏழைக் குழந்தைகளின் வயிறு அந்த காட்சியில் திம்மென்று இருப்பது அவர்கள் வயிறு நிறைய சாப்பிட்டு இருப்பதை நமக்குத் தெளிவாக்கும்.

உலகம் சுற்றும் வாலிபன் படத்தில்,

சிரித்து வாழ வேண்டும் பிறர்
சிரிக்க வாழ்ந்திடாதே
உழைத்து வாழ வேண்டும் பிறர்
உழைப்பில் வாழ்ந்திடாதே

என்று குழந்தைகளோடு அவர் பாடி ஆடும் காட்சி எடுக்கப்பட்டது. அந்த காட்சி எடுக்கப்பட்டதும் அவரோடு அந்த காட்சியில் நடித்த குழந்தைகள் அனைவருக்கும் அங்கேயே நல்ல பொம்மைகள் வாங்கி அவர்களின் வீட்டுக்கு தனித்தனியே அனுப்பி பரிசளித்தார்.

தாயன்பு

நம் நாடு பட்த்தில் குட்டி பத்மினி நடித்துக்கொண்டிருந்த போது ஒரு சமயம் அவர் தன் அம்மாவிடம் கோபமாக கத்தி பேசியதைப் பார்த்த எம் ஜி ஆர் பத்மினியை அழைத்து ‘’இப்படி மரியாதை இல்லாமல் அம்மாவிடம் கத்தக் கூடாது’’ என்று அறிவுரை கூறி ‘’என் அம்மா இப்போது இல்லையே என்ரறு ஏங்கி அழுகிறேன். உனக்கு அம்மா இருக்கிறார்கள். நீ அவர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்து கொள்; அவர்களீடம் அன்பாக பழகு’’ என்றார். தாயின் ஏக்கம் அவர் மனதில் என்றும் இருந்ததால் அவரால் எந்த தாயும் அவமானப்படுவதை பார்க்க இயலவில்லை. இந்த நிகழ்ச்சியை குட்டி பத்மினி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

குழந்தை வளர்ப்பு

எம்ஜிஆர் வீட்டில் அவருடைய அண்ணன் குழந்தைகள் ஒன்பது பேர் இருந்தனர் எப்போதும் அந்த வீட்டில் குழந்தை சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும் எப்போதும் எம்ஜிஆரை சுற்றி நிறைய குழந்தைகள் இருந்துவந்தனர். எனவே குழந்தைகளின் உளவியல் அவருக்கு நன்கு புரிந்திருந்தது. அவர்களை அவர் மிகவும் அன்போடும் கண்டிப்போடும் வளர்த்து வந்தார் தன்னுடைய குழந்தைப் பருவத்து காலத்தையும் இந்தப் பிள்ளைகளின் குழந்தைப்பருவ காலத்தையும் அவர் ஒப்பிட்டுப் பார்த்து அவர்களுக்கு நல்லனவற்றை எல்லாம் செய்தார்.

பரங்கிமலையில் டிசம்பர் மாதம் மலைத்திருவிழா நடக்கும். அதற்கு தன் வீட்டு பிள்ளைகளை எம் ஜி ஆர் டியுஷன் டீச்சரோடு அனுப்பி வைப்பார். அவர்கள் மேலே போகும் போது நடந்து மலையேறி போவார்கள். அங்கிருந்து திரும்பி வரும் போது காரில் வருவதுண்டு.. சாதி மதம் பார்க்காமல் அன்பு என்ற ஒற்றை தகவுடன் அவர் பிள்ளைகளை வளர்த்தார்.

தன்னை போல் பிறரை நேசி என்ற ஆன்றோர் வாக்கின்படி அவர் தமிழகத்தின் குழந்தைகளுக்கும் பள்ளிகளில் உணவு, பாடநூல், சீருடை செருப்பு [ஜானகி அம்மா ஆட்சியில்] என அவர்களுக்கு தேவைப்பட்ட அனைத்துப் பொருள்களையும் இலவசமாக அளித்தார். இன்று அரசு பள்ளிக்கூடங்களில் 18 பொருட்கள் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன.

குழந்தை வளர்ப்பில் எம்ஜிஆர் வலியுறுத்திய விஷயங்களாக நாம் சிலவற்றை படத்திலும் நிஜத்திலும் ஒருங்கே காண்கிறோம். ஒரு குழந்தை தன் தாய் தந்தையை மதிக்க வேண்டும்; பெரியவர்களுக்கு கீழ்ப்படிய வேண்டும்; தாய்நாட்டின் மீது பற்றுக் கொண்டிருக்க வேண்டும்; தாய்மொழியான தமிழை மதிக்க வேண்டும்; அதனை வளர்க்கப் பாடுபட வேண்டும்; குழந்தைகள் தன்னுடைய சுய மரியாதையை இழக்கக்கூடாது; தன்னம்பிக்கை உடையவர்களாக வளர வேண்டும்; பகுத்தறிவு கொண்டவர்களாக இருக்க வேண்டுமே தவிர பத்தாம்பசலிகள் ஆக இருக்கக் கூடாது; அறிவே செல்வம் என்று அவர்கள் கருத வேண்டும்; தங்களுக்குள் ஜாதி மத பேதம் பார்க்க கூடாது.

பெற்றொர் என்ன செய்ய வேண்டும்?

அடுத்து அவர் தன் சொந்த வாழ்க்கை மற்றும் படங்கள் மூலமாக பெற்றோர்களுக்கு எடுத்துக்காட்டியவை: பெற்றோர்கள் பிள்ளைகள் தங்களைப் பார்த்து வளர்வதற்கேற்ற முன்மாதிரிகளாக திகழ வேண்டும்;; பிள்ளைகளுக்கு ஆரோக்கியமான உணவு நல்ல உடற்பயிற்சி மகிழ்ச்சியாக வளரத் தக்க சூழ்நிலை ஆகியவற்றை ஏற்படுத்தி தர வேண்டும்; ஏழையாக இருந்தாலும் கோழையாக இருக்கக் கூடாது; மனதும் உடலும் ஒரு குழந்தைக்கு மிகவும் முக்கியம்; மதம் மொழி சாதி ஆகிய பேதங்கள் குழந்தைகள் மனதில் வளர்க்கக்கூடாது.

சிறுவர்கள் கூடி வாழவும் தொடர்ந்து முன்னேறவும் எம் ஜி ஆர் எடுத்துக்காட்டிய நல்ல பண்புகள் அவர்களுக்கு உறுதுணையாக இருந்தன. சிறுவர்கள் எம்ஜிஆர் படங்களை தங்கள் வாழ்க்கையில் பாடமாக்க் கொண்டன. அவர் வாழ்க்கையை நல்ல முறையில் வாழக் கற்றுக்கொடுத்த வாத்தியாராக இருந்தார். இன்றைக்கும் எம்ஜிஆரின் ரசிகர்கள் பலர் எம்ஜிஆரை தமது வாழ்க்கையின் வழிகாட்டியாக கொண்டுள்ளதாக பெருமையுடன் தெரிவிக்கின்றனர். ‘’நான் புகைப்பிடிக்க மாட்டேன்; மது அருந்த மாட்டேன்; என்னை பெற்ற தாயை தெய்வமாக மதிக்கிறேன்; எம்ஜிஆர் படங்களை பார்த்து நான் இவற்றை பின்பற்றுகிறேன்’’ என்று சொல்கின்றனர்.

நிறைவாக ஒரு நிகழ்ச்சி


எம்ஜிஆர் ஷூட்டிங்குக்கு போகும் போதும் திரும்பும் பொதும் வழியில் ஒரு ஒரு பள்ளிக்கூடம் உண்டு. மதிய வேளையில் எம்ஜிஆர் காரை பார்த்தவுடன் இந்த மாணவர்கள் ஓடி வந்து நடைபாதையில் நின்று கொள்வர் எம்ஜிஆரும் அவர்களைப் பார்த்து கையசைத்து இப்படி சிரித்துக்கொண்டே சென்றுவிடுவார். ஒருநாள் இருவர் காரை மறித்து நின்று விட்டனர் உடனே எம்ஜிஆர் காரை நிறுத்தி என்னவென்று கேட்டால் சும்மா உங்களை பக்கத்தில் பார்க்க வேண்டும் என்பதற்காக காரை நிறுத்தினோம் என்று கூறினார்கள் சரி என்று அவர்களிடம் பேசி விட்டுச் சென்றவர் பேசும்போது என்ன படிக்கிறாய் எப்படி படிக்கிறாய் என்று அந்த சிறுவர்களிடம் கேட்டு விட்டு இனி இப்படி காரை மறுக்கக்கூடாது கார் வேகமாக வந்து இருந்தால் நீங்கள் அடிபட்டு இருப்பீர்கள் அல்லவா என்று அறிவுரை சொல்லி விட்டு போய்விட்டார் தினமும் இதுபோல மாணவர்கள் நடைபாதையில் நின்று கையசைப்பது உண்டு.

அவர்கள் அங்கிருந்த குழாயில் அங்கிருந்த குழாயில் தான் சாப்பிட்ட தட்டைக் கழுவி விட்டு தட்டில் தண்ணீர் மொண்டு குடிப்பதை எம்ஜிஆர் கவனித்தார். அவர்கள் அங்கு வந்து தட்டைக் கழுவுவதும் தண்ணீரைக் குடிப்பதுமாக நின்றுகொண்டிருந்தனர்.

ஒரு நாள் அந்தப் பகுதியின் கவுன்சிலர் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியரைப் பார்த்து உங்கள் பிள்ளைகளை ரோட்டோரமாக வந்து நிற்கக் கூடாது என்று சொல்லுங்கள். எம்ஜிஆர் போகும் போது இது பெரிய தொந்தரவாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு போனார். மறுநாளிலிருந்து பிள்ளைகளை தலைமை ஆசிரியர் வெளியே விடவில்லை. சில நாட்கள் இதை கவனித்த எம் ஜி ஆர் எங்கே மாணவர்களை காணோமே என்று விசாரித்தார். அப்போதுதான் தெரிந்தது அவருடைய கார் ஓட்டுனர் நான் கவுன்சிலரிடம் சொல்லி தலைமை ஆசிரியரிடம் கண்டிக்க சொல்லியிருக்கிறார். இப்போது மாணவர்களை வெளியே விடுவதில்லை. ஓட்டுனர் எம் ஜி ஆரிடம் ‘’அவர்கள் குறுக்கே ஓடி வருவதால் காரில் அடிபட்டு விடுவார்களோ என்று எனக்கு அச்சமாக இருக்கிறது’’ என்றார் எம்ஜிஆர் ஓட்டுநரை பார்த்து ‘’ஏன் இப்படி செய்கிறாய் அவர்கள் சந்தோசமாக சில நிமிடங்கள் என்னை பார்த்து செல்வது உனக்கு பிடிக்கவில்லையா. [அவர்களை என்னிடம் வரவிடுங்கள் என்று இயேசு நாதர் சொல்லியது நினைவுக்கு வருகிறதல்லவா] என்று அவரை கண்டித்து விட்டு அந்த கவுன்சிலரை அழைத்து அவர்களுக்கு பள்ளிக்கூடத்துக்கு உள்ளேயே பெரிய ட்ரம் வைத்து அதில் தண்ணீர் நிரப்பி அந்த டிரம்மில் நான்கு பக்கமும் 4 குழாய்கள் வைத்து அதில் தண்ணீர் பிடித்து குடிக்க னாங்கு குவளைகளையும் கொடுக்கும்படி செய்தார். அதன் பிறகு குழந்தைகளை வெளியே விடுங்கள். அவர்களை உள்ளே பூட்டி வைக்க வேண்டாம். மதிய வேளையில் அவர்கள் வெளியே வரட்டும் கவனமாக இருக்கட்டும் என்று வேண்டிக்கொண்டார்.

எம் ஜி ஆர் கார் ஓட்டுநரிடம் ‘நீ இனி இந்த பகுதியில் போகும்போது மெதுவாக போ. குழந்தைகள் பார்க்கட்டும். அதனால் அவர்களுக்கு கிடைக்கும் சந்தோஷத்தை நாம் கெடுக்க கூடாது’’ என்று கண்டித்து சொல்லிவிட்டார். இவ்வாறு குழந்தைகளின் சந்தோஷத்துக்கு தன்னால் எந்த இடையூறும் ஏற்படக் கூடாது என்பதிலும் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு அந்தக் குழாயின் தொட்டி தண்ணீர் உதவாது என்பதிலும் எம்ஜிஆர் அக்கறை கொண்டு ஆவன் செய்தார். இது சின்ன விஷயமாகத் தோன்றினாலும் அவர் கண்ணில் படும் சின்னஞ்சிறிய குறைகளையும் நிவர்த்தி செய்வதில் அவர் கண்ணும் கருத்துமாக இருந்தார் அவருடைய கண்ணில் பட்ட குழந்தைகளை விசாரித்து அவர்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுப்பதிலும் அவர் மிகுந்த கருத்தோடு செயல்பட்டார் என்பதை இன்னிகழ்ச்சி தெள்லத் தெளிவாக காட்டுகிறது.

ரசிகர்களால் வளர்க்கப்பட்ட குழந்தைகள்


சினிமாவில் அவர் எம்ஜிஆரின் நடிப்புக்கு நடிப்பை ரசித்துப் பார்த்த ஆண்களும் பெண்களும் பெரியவர்களும் தங்கள் வீட்டுப் பிள்ளைகளை எம்ஜிஆர் ரசிகர்களாகவே வளர்த்தனர். இது ஒரு முக்கியமான கருத்தாகும் பிள்ளைகள் எம்ஜிஆரை போல எம்ஜிஆரை முன்மாதிரியாகக் கொண்டு வளர வேண்டும் என்று எம் ஜி ஆரின் ரசிகையராக இருந்த தாய்மார்கள் விரும்பினர்; பிள்ளைகளின் தகப்பன்மாரும் ஆசைப்பட்டனர்; எம் ஜி ஆர் ரசிகராக இருந்த தாத்தா பாட்டிகளும் தங்கள் வீட்டுக் குழந்தைகள் எம்ஜிஆரை போல பெரியவர்கள் மீது மரியாதை கொண்டவர்களாகவும் நல்லதைச் செய்து வாழ்பவர்களாகவும் எல்லோருடைய அன்பையும் பெற்ற உத்தமர்களாக வர வேண்டும் என்று விரும்பினர் அவர்கள் தாம் படங்களுக்கு போகும்போது தன் சிறுவர்களையும் அழைத்து சென்றனர்.

அபிமன்யுவை போல தமிழகத்தில் பல கோடி குழந்தைகள் தங்கள் தாயின் கருவில் இருக்கும்போதே எம்ஜிஆர் படத்தின் பாட்டையும் வசனத்தையும் கேட்டே வளர்ந்து காரணத்தால் அவை பிறந்து வளர்ந்த பிறகும் எம்ஜிஆர் ரசிகர்களாகவே உருவாகினர். இது மற்ற நடிகர்களின் ரசிகர்கள் இல்லாத ஒரு வித்தியாசமான நிலை ஆகும். எம்ஜிஆர் ரசிகர் பரம்பரையாக பரம்பரை பரம்பரையாக வந்து கொண்டிருக்கின்றனர். மற்ற நடிகர்களுக்கு இது போன்ற அமைப்பு இல்லை என்று உறுதியாகச் சொல்லலாம்.

எம் ஜி ஆர் ரசிகர் வீடுகளில் அவர்களின் வீட்டுக் குழந்தைகள் எம் ஜி ஆரை தாத்தா என்று அழைப்பதை காணமுடிகிறது. தாத்தா என்பது எம் ஜி ஆருடைய இமேஜுக்கு புறம்பானது என்றாலும் இது தான் கள யதார்த்தம் என்பதை மறுக்க இயலாது. திரையுலக அனுபவத்தில் தமிழக வரலாற்றில் மிகவும் வியப்பாகவும் புதுமையாகவும் இருக்கிறது.

விரிப்பின் பெருகும் தொகுப்பின் எஞ்சும் எனக் கருதி எம்ஜிஆரும் குழந்தைகளும் பற்றிய விஷயங்கள் தகவல்கள் சம்பவங்கள் இன்னும் பல இருப்பினும் இதுவரை கூறியவற்றின் சாராம்சமாக சிலவற்றை மட்டும் இந்த நிறைவு கட்டுரையில் எடுத்துக் கூறி இந்த தொடரை நிறைவு செய்கிறேன். நன்றி வணக்கம்.

 

 


முனைவர் செ.இராஜேஸ்வரி

 

 

 

 

 

 

எம்.ஜி.ஆர் புகைப்படத்தொகுப்பு:

 

 


 

 


 



 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்