அந்நியர்களும் அறிந்திரா வானவூர்திகளும் (ALIENS & UFO)

கனி விமலநாதன்


அறிவியற் தொடர் - 19

நான் முன்னரே குறிப்பிட்டிருந்தபடி, சுமேரியர்கள் உண்மையிலே தமிழர்களாக இருந்திருப்பின் சுமேரியக் களிமண் தகடுகள், அதையொட்டி வந்த பாபிலோனியர்கள், மேவியர்கள், அசீரியர்கள் போன்றவர்களின் களிமண் தகட்டுப் பதிவுகளில் உள்ளவை எல்லாம் குமரிக்கண்டத்தவரின் சொத்துக்களாக இருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. இன்னமும் கூறுவதென்றால் எபிரேயர்களாகிய யூதர்களின் கதைகள் கூடத் தமிழர்களின் கதைகளின், வரலாறுகளின் திரிவுகள்தான் என்று கூடக் கருதலாம். காட்டாக ஆதன், ஆதமு, ஆதாம் என்ற பெயர் வடிவங்களைப் பாருங்கள். ஈவ் என்கிற ஏவாள் என்பது கூட, தமிழ்ப் பெயரின் திரிபெனக் கூறுபவர்களும் உண்டு.

தாய்வழிச் சமுதாபயம் என்ற கூற்றின் வழியிலேயும் இன்னொரு கோணத்திற் குமரிக்கண்டத்தை நாம் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. பொதுவாகவே நாங்கள் எங்களைத் தாய்வழிச் சமுதாயம் என்றே கூறுகின்றோம். ஆனால் ஆரியர்கள், யுதர்கள் போன்றவர்களின் கதைகளின்படி, அவர்கள் தந்தையருக்கே பெரும்பாலும் முதலிடம் கொடுக்கிறார்கள். அதன் ஒரு வெளிப்பாடாகத்தான் முதல் மனிதன் ஆதாமில் இருந்துதான் முதற் பெண்ணான ஏவாள் படைக்கப்பட்டாள் என்ற யூதருடைய விவிலியம் கூறுகின்றது.

கூர்ப்பின் வழியினிலும் தாய்வழிச் சமுதாயம் என்பதனைப் பார்த்தால், சற்றுப் பிசிறுகின்றது. எப்படியெனில் கூர்ப்பின் முதல் காரணியே சூழல் மாற்றத்தினால் ஏற்படுகிற விகாரங்கள். மனிதக் கூர்ப்பின் பாதையைக் கவனித்தால், ஆரம்பத்தில் சின்னச் சின்ன குழுக்களாக இருந்த, குரங்குகள் வழிவந்த உயிரினங்களுக்கு ஒரு ஆணின் தலைமை இருந்திருக்கின்றது. அத்தலைமையின் அடக்குமுறையால், அத்தலைமை வாழும் வசதி வாழ்க்கையினால், அக்குழுவில் இருந்து சிறிய குழுவொன்று இன்னொரு ஆணின் தலைமையில் பிரிந்து வேறிடத்திற்குப் இடம்பெயர்ந்து செல்கின்றது. இப்படியாகப் இடம்பெயர்ந்தவைக்கு தமது புதிய சூழலுக்கு ஒத்ததாக வாழவேண்டிய நிலைக்கு வந்து விடுகின்றன. காலம் செல்லச் செல்ல நாளடைவில், அச்சூழல் கொடுத்த மாற்றத்தினால் இன்னொரு புதுஇனமாக மாறுகின்றது. இப்படியாகப் பிரிந்து சென்றவை எல்லாமுமே புது இனங்களாக மாறுவதில்லை. அச்சூழல் ஒத்துவராது அழிந்து போனவையும் உண்டு.

இனிச் சூழல் மாற்றத்தினால் ஓரளவுக்குத் தப்பிப் பிழைத்தவை பற்றிப் பார்ப்போம். பழயவை முன்பு போலவே குரங்குகளாக இருக்கின்றன. ஆனால் புதிதாக முளைத்த இனத்திற்கும் பழைய கதைதான். அங்கும் ஆண்தான் தலைமை, ஆண்வழிச் சமுதாயம்தான். எனவே அங்கிருந்தும் ஒரு சிறுகுழுவின் தப்பியோடல் நடைபெற, அதிலிருற்து கூர்ப்பினால் வேறொரு புதிய இனம் தோன்றுகிறது. இப்படியான மாற்றங்கள் குரங்குகளில் இருந்து கோமோ இரெக்ஸ்சுகள் வரையிற் தொடர்கின்றன. சூழலுடனான வாழ்க்கைப் போட்டியில் அவர்களின் மூளை வலுவும் கூடுகின்றது. கூட்டாக வாழும் இயல்பும், தேவையும் அதிகரிக்க, சிறுசிறு குழுக்கள் என்பன கணிசமான அளவுக்குப் பெருங்குழுக்களாகவும் வந்து விடுகின்றன. அதனால், ஆரம்பத்தில் அவர்களது இனம் கொண்டிருந்த இயல்புகள், நடத்தைகள் என்பற்றில் இருந்தும் பெருமளவு வேறுபாட்டுடன் அவ்வினம் புவியில் வாழத் தொடங்குகின்றது. ஆனால் ஆரம்பத்தில் இருந்த குரங்குகள் தங்களின் சூழலை மாற்றிக் கொள்ளாததால் அவற்றில் கூர்ப்பு நடைபெறவில்லை. இன்றும் குரங்குகளாகவே இருக்கின்றன.

கூர்ப்பின் இத்தெளிவானது பலருக்குத் தெரியாது. இதனைத் தெரிந்தவர்களும் விளங்கிக் கொண்டவர்களும் மற்றவர்களும் இதனைப் பகிர்ந்து கொள்வதில்லை, இதனையிட்டுப் பெரிதாக அலட்டிக் கொள்வதுமில்லை. அதனால்தான் இன்றும் 'குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன்' என்றால் எப்படி இன்னமும் குரங்குகள் குரங்குகளாகவே இருக்கின்றன என்று கேட்கிறார்கள். கூர்ப்புத் தத்துவத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களும், இறைவனின் நேரடிப் படைப்புத்தான் மனிதர்கள் எனக் கூறும் மதவாதிகளும் 'இது எப்படி' எனக் கேட்கும் இந்தக் கேள்வியினைத்தான் கேட்கிறார்கள்.

இனி, இப்படியாகக் கூர்ப்பு வழியிற் தோன்றிய தோன்றிய கோமோ இரெக்ஸ்சுகளின் பின்னர் வந்த கோமோ சேப்பியன்கள் ஆகிய மனிதரில் தாய்வழிச் சிந்தனை, அதுவும் தமிழர்களிடம் வலிமையாக ஏற்படுகின்றது. ஆனால், கோமோ இரெக்ஸ்சுகள் வரையில் கூர்ப்பின் வழியினைப் பார்த்தால் தந்தை வழித் தலைமைதான் தெரிகிறது. ஆப்படியிருக்க எப்படி இந்தத் தாய்வழிச் சிந்தனை வருகிறது? ஆரியத்தினால் கூட இந்தத் தந்தைவழிச் சிந்தனையை முற்றாக மாற்ற முடியவில்லை. தந்தையிற்காகத் தாயின் களுத்தினைக் கொய்த தனயனின் கதை கூட அவர்களிடம் இருப்பதை நாமறிவோம்.

ஆனால் தமிழர்களிடம் பதிந்துள்ள மனிதர்களின் தாய்வழிச் சமுதாயத்திற்கான விளக்கத்தைச் சுமேரியர்களின் களிமண்தகடுகள் தருகின்றன. எப்படியெனில், நிபுறுவினர் தங்களின் மரபனுப் பொறிமுறை முறையில் முதன்முதலில் தோற்றுவித்தது, ஏவாளைத்தான். ஆதாமையல்ல. ஏவாளின் பின்னரே ஆதாமை நிபுருவினர் மண்ணிற் தோற்றுவிக்கின்றார்கள். ஆக, மனிதவினம் ஏவாளில் இருந்தே எழுகிறது. ஆதாமில் இருந்தல்ல. அத்துடன் ஏவாளின் முதற்பிள்ளை 'காயின்' என்கியிற்குப் பிறந்தவன் என்றும் சுமேரியர்களின் களிமண் தகடுகள் குறிப்பிடுகின்றன எனக் 'காடி' தன் புத்தகத்திற் குறிப்பிடுகிறார். அந்தக் காயினின் வழித் தோன்றல்கள்தான் இன்று புவியில் பல்கிப் பெருகியிருக்கும் கோமோ சேப்பியன்களாகிய மனிதர்கள்.

நிபுறுவினரின் மாபணுப் பொறிமுறை மாற்றங்கள் எல்லாம் குமரிக்கண்டத்தில் நடந்திருந்ததால்தான் குமரியின் எச்சங்களான தமிழர்கள் தங்களைத் தாய்வழிச் சமுதாயம் என்கிறார்களோ தெரியவில்லை. எனவேதான் சுமேரியர்கள் குமரிக் கண்டத்தில் இருந்துதான் போனவர்கள், சுமேரியர்களின் கதைகள் எல்லாம் உண்மையிலேயே குமரிக்கண்டத்தில்தான் நடந்தவை என்றும் எண்ணத் தோன்றுகிறது. ஆனால் குமரிக்கண்டம் கடலில் அமிழ்ந்து விட்டதினால் அவற்றினை உறுதிப்படுத்துவதற்கான சான்றுகளைப் பெற முடியவில்லை.

ஹோமரின் அட்லாண்ரா என்ற கண்டத்தை மேலை நாட்டவர்கள் தேடித் திரிவதைப் பற்றிக் குறிப்பிட்டேன். அங்கு வாழ்ந்தவர்களை அட்லாண்டியர் என்றும் கூறுகின்றனர். நாங்கள் குமரிக்கண்டமும் தமிழரும் ஏலியன்களுடன் தொடர்புடையவர்கள் எனக் கூறுவது போல அட்லாண்டியர்களும் வேற்றுக்கிரவாசிகளுடன் தொடர்பு கொள்ளக் கூடிய அளவிலான அறிவியல் வளர்ச்சி கொண்டிருந்தார்கள் என்றும் கூறுகின்றார்கள். அத்திலாந்திக் மாகடலில் உள்ள தீவுகளின் கரைகளில் அட்லாண்டாவைத் தேடும் பணிகள், சில அரச உதவிகளுடனும் தனியார்களின் ஆர்வத்துடனும் நடந்து கொண்டே இருக்கின்றன.

இதேபோல பசுபிக் கடலில் இன்னோர் கண்டம் அமிழ்ந்துள்ளதென்றும், அதன் பெயர் லெமூரியா என்றும் அங்கு 'மோ'க்கள் என அழைக்கப்படும் லெமூரியர்கள் என்ற இனத்தவர்கள் வாழ்ந்தார்கள் என்ற கதையும் உண்டு. (இங்கு ஒரு சிக்கல் உண்டு. எங்கள் குமரிக்கண்டம் என்பதையும் லெமூரியா என்று கூறுபவர்கள் உண்டு. இதுதான் மேலை நாட்டவர்களில் அனேகரைக் குமரிக்கண்டம் என்பதை ஏற்றுக் கொள்ள விடுவதில்லை.) இந்த லெமூரியர்களும் அத்திலாந்தியர்கள் போன்றே அறிவியல் வளர்ச்சியும் வேற்றுக்கிரகவாசிகளின் தொடர்பும் உடையவர்கள் எனக் கூறிக் கொள்கிறார்கள். இந்த லெமூரியர்களுக்கும் அட்லாண்டியர்களுக்கும் தீராத பகையிருந்ததென்றும் அவர்களிடம் கதைகள் உள்ளன. பசுபிக் கடலில் இருக்கும் தீவுகளின் ஓரங்களில் அந்த லெமூரியாவைத் தேடும் முயற்சிகளும்; நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

இவ்விரு கண்டங்களும் கடைசிப் பனிக்கால முடிவின் போது, 13,000 ஆண்டு முன்னராக தென்துருவத்தின் பனிக்கட்டிகள் உருகிப் பெரும் நீர்ப்படையை அங்கிருந்து வடக்காகத் தள்ளிய வேளையில் கடலில் அமிழ்ந்து விட்டன என்கிறார்கள், மேலை நாட்டவர்கள். அறிவியலின் உச்சத்தில் இருந்த அக்கண்டங்களைத்தான் தேடுகின்றோம் எனப் பெரும் பணச்செலவுடன், அதிநவீன தொழல்நுட்பங்களுடன் தேடுகின்றார்கள்.

தமிழர்களின் தொன்மை, குமரிக்கண்டம் பற்றிய ஆய்வுகளுக்கு எங்களிடம் வசதியும் இல்லை, அவற்றைப் பற்றிச் சிந்திப்பதற்கும் எங்களுக்க நேரமுமில்லை. இந்தியத் தென்கோடியில் தமிழரின் தொன்மைக்கான சான்றுகள் சில ஆங்காங்கே தென்படுகின்ற போதிலெல்லாம் அவை முளையிலேயே கிள்ளி விடப்படும் விடயங்கள்; கூட எங்களுக்குத் தெரிவதில்லை. அண்மையில் கீழடி ஆய்வுகள் முளையிலேயே கிள்ளிவிடப்படக் கூடிய நிலையொன்று இருந்தது. ஏதோ ஒருவழியில் அது தப்பித்தது போல இருந்தாலும், தமிழ்நாட்டில் 1956ம் ஆண்டுக்குப் பின்னர், இதுபோன்ற 110 ஆய்விடங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டதும், அவற்றின் அறிக்கைகள் இல்லாமலே அவ்வாய்வுகள் முடக்கப்பட்டதும், மறைக்கப்பட்டதும் பலருக்குத் (கிட்டத்தட்ட ஒருவருக்குமே) தெரியாது. இன்னொரு விபரத்தையும் பகிர்ந்து கொள்கிறேன்.

மத்திய அமெரிக்காவில் மாயன்கள் என்றொரு இனம் இருந்தது பற்றி அறிந்திருப்பீர்கள். இவர்கள் முற்றுமுழுதாகவே வேற்றுக்கிரக வாசிகள் என்ற கதையுண்டு. தங்களது காலம் முடிய அவர்கள் வானத்திலே தங்களின் கிரகத்திற்கு விண்கலங்களில் சென்றார்கள் என்ற கதைதான் இறுதியாக உள்ளது. இன்று மாயன்களின் கதை பொய்யல்ல, உண்மைதான் என்பதற்கு அவர்கள் விட்டுச் சென்ற தடங்கள் பல தென்னமரிக்காவிற் பலவுண்டு. ஏலியன்கள் என்கிற அந்நியர்கள் புவியிற்கு வந்தார்கள், புவியினரின் அறிவியல் நிலையினை உயர்த்த முற்பட்டார்கள் என்பதற்குக் காட்டக் கூடிய சான்றாக உள்ளவை, இந்த மாயன் எச்சங்களே. அட்லாண்ரா, லெமூரியா, குமரிக்கண்டம் என்பன கிட்டத்ட்டச் சுவடுகள் இல்லாமலே அழிந்து விட்டன.

படம் மாயன்களின் பிரமிட் ஒன்றினைக் காட்டுகிறது.

இந்த மாயன்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிற் பெரும் தொடர்புகள் இருந்தற்கான குறிப்புகள் உண்டு. இராவணனின் விமானம் கூட, இந்த மாயன்களின் கைவண்ணம்தான் என்பார்கள் உண்டு. இனி, இராமாயணத்தில் அனுமனால் எரியுண்ட இலங்காபுரியை 24 மணித்தியாலத்திற் கட்டியெழுப்பியது ;மாயன்;' என்ற தேவதச்சன் என்கிறார்கள். இதை மிகைப்படுத்திய கூற்றாகக் கருதத் தேவையில்லை. இந்த மாயன் என்ற தேவதச்சன் தென்னமரிக்க மாயன் இனத்தவனாக இருக்கலாம். அந்த மாயன் இனத்தவர்கள் வானில் இருந்து வந்த வேற்றுக்கிரகத்தவர் என்பதால்தான் அவனைத் தேவதச்சன் எனக் கூறினார்கள் எனக் கொள்ளவும் இடமுண்டு.

இன்று இத்துடன் முடித்துக் கொள்வோம். மறுமுறை இன்னொரு சுவாரசியமான விடயத்துடன் வருகிறேன்.
அன்புடன்,
கனி.




 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்