பெண் இனம் போற்றும் பெருந்தலைவர் எம்.ஜி.ஆர் (தொடர் - 1)

முனைவர் செ.இராஜேஸ்வரி

1. எம் ஜி ஆர் பெண்களைக் கொண்டு செய்த அரசியல் புரட்சி

எம்.ஜி.ஆர் பொதுக் கூட்டங்களில் பேசும்போது என்ன வாழ வைத்த தெய்வனகளாகிய தாய்மார்களே என்று பெண்களை அழைப்பார். அவர் கூட்டத்துக்கு நிறைய பெண்கள் வந்ததற்கு முக்கிய காரணம் அவர் பெண்களை தாயாக மதித்து போற்றினார். அவர்களின் சுக துக்கங்களில் நேரடியாகப் பங்கு கொண்டார். ஆண்களை சார்ந்து வாழ்ந்து அவர்கள் சொல்வதை கேட்டு அதன் வழி நடந்து வந்தவர்களை எம் ஜி ஆர் சுயமாக முடிவெடுக்க கூடிய மிகப் பெரிய அரசியல் சக்தியாக மாற்றிக் காட்டினார். தன் படத்தை பார்க்க வரும் தாய்க்கு மகனாகவும் தங்கைக்கு அண்ணனாகவும் ஆதரவற்ற ஏழை பெண் ஒருத்திக்கு வாழ்வில் நம்பிக்கை ஊட்டும் இளைஞனாகவும் ஆடம்பரக்காரியின் ஆணவத்தை ஒடுக்கும் வல்லவனாகவும் நடித்து அவர்களின் மனங்கவர்ந்த நாயகனாக விளங்கி அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டினார். இந்த நம்பிக்கையை அடித்தளமாக கொண்டு அவர் அண்ணா திமுக கட்சி தொடங்கியதும் பெண்களை மிகப் பெரிய அரசியல் சக்தியாக அவர் மாற்றிக் காட்டினார். இது எம் ஜி ஆர் திரையிலும் அரசியலிலும் செய்த மாபெரும் புரட்சி ஆகும்.

மாபெரும் அரசியல் சக்தியாக உருவெடுத்த ரசிகைகள்

சங்க கால நூலான குறுந்தொகையில் வரும் ஒரு பாடல்,

வினையே ஆடவர்க்கு உயிரே மனையுறை
மகளிர்க்கு ஆடவர் உயிரே

என்கிறது. இவ்வாறு சங்க காலம் தொட்டு தன் குடும்பக் கடமைகளை மட்டும் நிறைவேற்றி வந்த பெண்களை அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கு வரவழைத்தவர் எம்ஜிஆர். கம்யுனிஸ்ட் கூட்டங்களுக்கு பெண்கள் வருகையும் அவர்களின் பங்கேற்பும் கேரளா போன்ற மாநிலங்களில் ஓரளவு இருந்த போதும் அது தமிழகத்தில் அண்ணா திமுக கட்சிக்கு இருப்பது போல வலிமையாக இல்லை. மேலும் அண்ணா திமுக தொடங்கப்பட்ட்ட் பிறகு தமிழகத்திலும் கம்யுனிஸ்ட் ஆதரவாளர்கள் பலர் அண்ணா திமுக ஆதரவாளர்கள் ஆகிவிட்டனர். எம் ஜி ஆர் புது கட்சி தொடங்கியதும் அண்ணா திமுக கட்சி பொதுக் கூட்டங்களில் பெண்கள் திரளாக பங்கு பெறுவதை மற்ற கட்சியினர் வியப்போடு நோக்கினர். அரசியல் என்பது ஆண்களுக்கு உரியது என்ற நிலையை மாற்றியவர் எம் ஜி ஆர். அரசியலில் அடித்தள மக்களின் ஈடுபாடு குறிப்பாக பெண்களின் ஈடுபாடு மிகவும் முக்கியம் என்ற நிலை எம்ஜிஆரால் உருவானது என்று உறுதியாகச் சொல்ல முடியும். அண்ணா திமுக கூட்டங்களுக்கு வந்த பெண்கள் எம் ஜி ஆரை ஒரு சினிமா நடிகராக மட்டும் பார்த்து நேரில் பார்த்து ரசிக்க வரவில்லை. அவருடைய பேச்சைக் கேட்கவும் ஆவலாகக் கூடினர். கூட்டம் நடக்கும் இடத்தில் மேடைக்கு முன்பு பெண்களுக்கென இடம் ஒதுக்கப்படுவது மரபாயிற்று.

எம் ஜி ஆரின் வார்த்தைகளில் நம்பிக்கை வைத்து அரசியல் கொள்கைகளில் பற்றுக் கொண்டு அவருடைய சொற்களில் உண்மை இருப்பதாகக் கருதி அவருடைய சின்னத்தில் தன் முத்திரையை பதிப்பதில் பெண்கள் உறுதியாக இருந்தனர். இதனால் 1977இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. மக்களின் ஏகோபித்த ஆதரவால் அவரும் தன் ஆயுள் காலம் முழுக்க பத்தாண்டு காலம் தொடர்ந்து [1977 – 1987] தோல்வியே காணாத முதலமைச்சராக இருந்து வரலாற்றுச் சாதனை படைத்தார்.

சினிமா கவர்ச்சியா?


மக்களிடம் குறிப்பாக பெண்களிடம் எம்ஜிஆருக்கு கிடைத்த வரவேற்பை ஆரம்பகாலத்தில் சினிமா கவர்ச்சி என்று தவறாக புரிந்து கொண்ட அரசியல்வாதிகளும் பத்திரிகை நிருபர்களும் காலப்போக்கில் தன் கருத்தை மாற்றிக் கொண்டனர். கருணாநிதி எம் ஜி ஆரை கட்சியை விட்டு வெளியேற்றியதும் கண்ணதாசனிடம் தொலைபேசியில் சொல்கிறார். அதற்கு கண்ணதாசன் ‘’பிரச்னை வருமே’’ என்றதும் கருணாநிதி ‘’என்ன ஒரு பத்து பேர் கத்துவானுங்க’’ என்றார். அவர் தவறாக கணித்துவிட்டார். எம் ஜி ஆர் இப்பூவுலகை விட்டு மறையும் வரை கருணாநிதியை தலையெடுக்க விடவில்லை. தொடர்ந்து மூன்று முறை திமுகவை தோற்கடித்தார். ஆனால் எம் ஜி ஆர் எப்போதும் மக்களைப் பற்றி சரியாகவே கணித்து வைத்திருந்தார். மலைக்கள்ளன் படம் முதல் எம் ஜி ஆருக்கு பெண்களின் ஆதரவு குழந்தைகளின் ஆதரவு இளைஞர்களின் ஆதரவு பெருகத் தொடங்கியது. தனக்கு மக்கள் ஆதரவு முழுமையாக இருப்பதையும் தன்னை எந்த நிலையிலும் இளைஞர், தாய்மார், குழந்தைகள் என்ற மூன்று பிரிவினரும் கைவிட மாட்டார்கள் என்பதையும் எம்ஜிஆர் ஆழமாக நம்பினார்.

வாழவைத்த தெய்வங்களாகிய தாய்மார்களே


பெண்கள் மீது எம்ஜிஆருக்கு இருந்த நம்பிக்கையே அவர் பொதுக் கூட்டங்களில் பேசும்போது ‘’என்னை வாழ வைத்த தெய்வங்களாகிய தாய்மார்களே’’ என்று அவர்களை அழைக்க காரணமாக இருந்தது. பெண்கள் தன் வாக்கை நம்புகின்றனர். தனக்கு வாக்களிக்க முன் வருகின்றனர். அவ்வாறு வாக்களிக்க முன் வரும் போது தங்கள் வீட்டாரின் எதிர்ப்புகளையும் துணிச்சலோடு சமாளிக்கின்றனர் என்பனவற்றை எம்ஜிஆர் தெளிவாக உணர்ந்திருந்ததால் ஒரு பொதுக்கூட்டத்தில் அவர் பேசும்போது ‘’பெண்கள் தங்கள் வீட்டில் கணவன்மார் சொல்வதைக் கூட கேட்க மாட்டார்கள்; ஆனால் நான் சொல்வதைக் கேட்பார்கள்’’ என்று ஆணித்தரமாகவும் பகிரங்கமாகவும் தெரிவித்தார். இந்த கருத்து அரசியல் சம்பந்தப்பட்டது மட்டுமே தவிர தனிநபர் வாழ்க்கை சம்பந்தப்பட்டது அல்ல. எந்த அரசியல் கட்சிக்கு வாக்களிப்பது என்ற கேள்வி எழும்போது பெண்கள் தங்கள் கணவன்மார் காங்கிரஸ் அல்லது அதிமுக கட்சிகளுக்கு வாக்களிக்கும்படி வற்புறுத்திக் கூறினால் அவர்களின் பேச்சைக் கேட்க மாட்டார்கள்; அதற்கு ஒப்புக் கொள்ள மாட்டார்கள்; என்பது எம் ஜி ஆரின் உறுதியான கருத்தும் நம்பிக்கையும் ஆகும் அந்த நம்பிக்கை பலித்த்து. எம் ஜி ஆருடைய வேண்டுகோளை ஏற்று அவருடையான கட்சியான அண்ணா திமுக கட்சிக்கு அதற்குரிய இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்கவே பெண்கள் ஒப்புக்கொள்வர் என்ற எம் ஜி ஆரின் நம்பிக்கை வீண் போகவில்லை. எம் ஜி ஆரும் பெண்களும் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த பரஸ்பர நம்பிக்கை தமிழகத்தில் 1977இல் மிகப்பெரிய ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்தது. எம் ஜி ஆரை அரசியலில் வாழவைத்தவர்கள் தாய்மார்கள் தான் என்பதால் அவர் அவர்களை வாழவைத்த தெய்வங்கள் என அழைத்ததும் பொருத்தமாயிற்று

பத்திரிகைகள் ஏமாற்றம்

ஒருமுறை தினமணியின் மூத்த நிருபர் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழக தொடர்பியல் துறை கருத்தரங்கு ஒன்றில் பேசும்போது 1977இல் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பை நிகழ்த்துவதற்காக ஒரு நிருபர் குழு தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் பட்டி தொட்டிகளுக்கும் சென்று ஆய்வு நடத்திய நிகழ்வு பற்றிக் குறிப்பிட்டார். அந்த ஆய்வில் திமுக கட்சிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக அவர்கள் அறிந்து வந்து தலைமை அலுவலகத்திற்கு தெரிவித்து கருத்துக்கணிப்பு கட்டுரையும் வெளியாகிவிட்டது. தேர்தல் முடிவுகள் வெளிவந்ததும் இந்தக் கருத்துக் கணிப்பு பொய்யாகிவிட்டது. எங்கே தவறு நடந்தது? என்று ஆராயும் போது கருத்துக் கணிப்பு நடத்தியவர்கள் எவரும் ‘’பெண்களிடம் போய் நீங்கள் எந்த கட்சிக்கு வாக்களிப்பீர்கள் என்று கேட்கவில்லை. அவர்களுக்கென்று என்ன தனி அபிப்பிராயம் இருக்கப்போகிறது. அவர்களின் தந்தை அல்லது கணவன் சொல்லும் கட்சிக்கு தானே வாக்களிப்பார்கள்’’ என்று இவர்களாகவே முடிவு செய்து அவர்களை கருத்துக் கணிப்பில் சேர்க்காமல் விலக்கி வைத்துவிட்டனர். இந்த உண்மை தெரிய வந்த போது பெண்கள் அந்த தேர்தலில் ஆட்சி மாற்றத்தை உருவாக்கும் மாபெரும் சக்தியாக உருவெடுத்திருப்பதை கண்டறிந்தனர்.

எம்ஜிஆர் தொடங்கிய அண்ணா திமுக கட்சிக்கு வாக்களிக்க பெண்கள் பெருவாரியாக முடிவு செய்திருந்தனர்.. கருத்து கணிப்பு நட்த்தியோர் அவர்களிடம் கேட்டிருந்தால் அவர்கள் பதில் சொல்லியிருக்கக்கூடும். பத்திரிகையாளர்கள் எம் ஜி ஆரை பற்றியும் சரியாகக் கணிக்கவில்லை, அவருக்கிருந்த பெண்கள் ஆதரவு குறித்தும் சரியாக அறிந்துகொள்ளவில்லை. ஆனால் பெண்கள் தங்கள் மனசாட்சிப்படி இரட்டை இலைக்கு வாக்கு அளித்து எம்ஜிஆரை முதலமைச்சராகப் பதவியில் அமர்த்தி விட்டனர். அதன் பிறகு பத்திரிகைகள் பெண்களின் வாக்குரிமைக்கு முக்கியத்துவமும் உண்டு என்று உணர்ந்து கொண்டனர். மற்ற அரசியல் கட்சிகளும் பெண்களின் ஆதரவைப் பெற நாம் தனியாக முயல வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர்.

அரசியல் விழிப்புணர்ச்சி


அண்ணா திமுகவின் தோற்றத்திற்கு பிறகு பெண்களிடம் மிகப்பெரிய ஆள்வில் அரசியல் விழிப்புணர்ச்சி ஏற்பட்டது. பெண்களுக்கென்று தனி கருத்து உண்டு; அவர்களுக்கும் அரசியலில் பங்கு ;உண்டு; ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருவதில் அவர்களும் முயற்சி மேற்கொள்வர்; அவர்களை இரண்டாம்தரக் குடிமக்களாக விலக்கி விட இயலாது; பெண்கள் நினைத்தால் அதை நடத்திக் காட்ட முடியும் என்ற கருத்துக்களை எல்லாம் எம்ஜிஆர் உணர்ந்து இருந்ததைப் போல மற்ற கட்சிகளும் பத்திரிகைகளும் 1977இல் நடந்த தேர்தலுக்குப் பிறகு அறிந்து கொண்டன..

திரைப் பிம்பத்தின் மாயத் தோற்றம் அல்ல

திரைப்படங்களில் தாய் சொல்லைத் தட்டாத தாயை காத்த தனயனாக; தாய்க்கு தலைமகனாக, தாயில்லாமல் நானில்லை என்று உணர்ந்த எளியவனாக பெண்களை ஆபத்திலிருந்து காக்கும் ஆபத்பாந்தவனாக ஏழைகளை இரட்சிக்கும் அனாதை ரட்சகனாக ஒரு பிம்பத்தை உருவாக்கி நடித்து வந்த எம்ஜிஆர் அந்த பிம்பத்தின் மாயத் தோற்றத்தால் மட்டுமே பெண்களின் உள்ளங்களை கவரவில்லை. சினிமா கவர்ச்சியை மட்டும் கொண்டு எம்ஜிஆர் மகளிரின் வாக்குகளை அள்ளவில்லை. சினிமா கவர்ச்சி என்பது அவருக்கு ஒரு அறிமுகமாக அமைந்தது; ஆனால் அவர் செய்த பல மனிதநேய செயற்பாடுகளும் ஆபத்துக்காலத்தில் உடனுக்குடன் வந்து செய்த உதவிகளும் ஏழை எளிய மக்களின் மனதில் ஆழமாக அவருக்கு ஓர் இடத்தை உருவாக்கி தந்தது.

எம் ஜி ஆர் நிஜ வாழ்க்கையில் ஏழைகளுக்கு உதவுகிறார் என்ற உண்மை சினிமா கவர்ச்சியையும் மீறி அவர் அன்புள்ளம் கொண்டவர், கருணை நிரம்பியவர் என்ற எண்ணங்களை பெண்கள் மனதில் விதைத்தன. பொதுமக்களிடம் அன்பு கருணை இரக்கம் வள்ளல் தன்மை போன்ற பண்புகள் எம்ஜிஆருக்கு இருப்பதை உறுதியாக நம்பிய காரணத்தினால் பெண்களின் ஆதரவு அவருக்கு இறுதிவரை இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இரவு காட்சிக்குப் பிறகும் பாதுகாப்பு’

திரைப்படங்களில் பெண்களுக்கு ஆதரவாக இருந்த எம்ஜிஆர் நிஜ வாழ்விலும் பெண்களுக்கு ஒரு துயரம் என்றால் அவர்களுக்கு உதவி செய்வதில் முதல் ஆளாக நின்றார். இரவு காட்சிகளுக்கு பெண்கள் வருவதுண்டு. உழைக்கும் மகளிர் பகலெல்லாம் வேலை செய்துவிட்டு மாலை வேளையில் வீட்டிற்கு வந்து உணவு சமைத்து வீட்டினருக்கு பரிமாறி விட்டு அதன் பிறகு இரண்டாம் காட்சிக்கு அதாவது இரவுக்காட்சிக்கு திரைப்படம் பார்க்க வருவர். ஒரு தெருவில் வாழும் நான்கைந்து பெண்கள் சேர்ந்து வீட்டிற்கு அருகிலுள்ள திரையரங்குக்கு இரவு 10 மணிக்கு படம் பார்க்க வருவார்கள். இரண்டு இரண்டரை மணிக்கு படம் முடிந்து அவர்கள் நடந்து போகும்போது சில இளைஞர்கள் அவர்களிடம் முறைதவறி பேசவும் நடக்கவும் முயலலாம் அல்லது கருதலாம். இவ்வாறு அவர்களுக்கு இடையூறு ஏற்பட்டால் அவர்கள் படம் பார்க்க வருவது நின்றுவிடும். வீட்டில் இருப்பவர்களும் பெரியவர்களும் இந்த பெண்களை திரைப்படங்களுக்கு போக விடமாட்டார்கள். பெண்களுக்கு இருக்கும் ஒரே பொழுது போக்கான திரைப்படத்திற்கு தடை வந்துவிடும். எம்ஜிஆர் இதற்கு ஒரு தீர்வு கண்டுபிடித்தார் ஓமப்பொடி பிரசாத் சிங், என். எஸ். ராமதாஸ், முசிறிப்புத்தன் போன்றோரைக் கொண்டு ஒரு மகளிர் காவல் படை அமைத்தார் இரவு காட்சிகளுக்கு வந்து வீட்டுக்கு திரும்பும் பெண்களுக்கு இந்த மகளிர் காவல் படையைச் சேர்ந்த எம்ஜிஆர் ரசிகர்கள் காவலாக இருந்து பணியாற்ற வேண்டும். இந்தப் பெண்கள் முன்னே நடந்து செல்லும் போது அவர்களுக்கு சில அடி தூரத்தில் இந்த காவல் படை வீரர்களும் நடந்து சென்று அவர்கள் வீடு சென்று முடியும்வரை பாதுகாப்பாக தொடர்ந்து செல்ல வேன்டும். எவராலும் அவர்களுக்கு தொந்தரவு ஏற்படாமல் அப்பெண்களைப் பாதுகாக்க வேண்டும்.
எம் ஜி ஆர் தான் நடிக்கின்ற காலத்திலேயே பெண்களின் பாதுகாப்பு குறித்து அதிகமும் கவலைப்பட்டார் அக்கறை காட்டினார். பெண்கள் நல்ல முறையில் வாழ வேண்டும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் பண்போடு நடந்து கொள்ள வேண்டும் என்பதில் அவர் மிகுந்த அக்கறை காட்டி வந்தார்.

ஆண்களுக்கு மட்டும் ஒரு ரகசியம்

ஒருமுறை அவருடைய பொதுக்கூட்டத்திற்கு பெண்கள் கூட்டமும் ஆண்கள் கூட்டத்திற்கு சரி நிகராக அதிக அளவில் சேர்ந்திருந்தது. மேடைக்கு முன்னால் பெண்களும் அதற்குப் பின்னால் ஆண்களையும் உட்கார வைப்பது மரபு. கண்ணுக்கெட்டிய வரை பெண்கள் கூட்டம் நிறைந்திருந்ததைப் பார்த்த எம்ஜிஆர் தான் பேசி முடித்ததும் ஆண்களைப் பார்த்து ‘’பெண்கள் போகட்டும்; ஆண்கள் மட்டும் கொஞ்சம் இருங்கள்; உங்களிடம் நான் ஒரு விஷயம் தனியாக பேசவேண்டும்’’ என்றார். ஆண்கள் கூட்டம் அப்படியே அமர்ந்து விட்டது. நம்மிடம் தனியாக என்ன பேசப்போகிறார். அந்த விஷயம் என்னவாக இருக்கும், என்று அவர்கள் தங்களுக்குள் பேசி கொண்டு இருந்த இடத்தை விட்டு அசையாமல் இருந்தனர் பெண்கள் கூட்டம் மெல்ல மெல்ல கலைந்து விட்டது.

பெண்கள் கூட்டம் அந்த இடத்தை விட்டு சற்று தூரம் போகும் வரை அமைதியாக மேடையில் அமர்ந்திருந்த எம்ஜிஆர் அதன்பிறகு மைக் முன்னே வந்து நின்றார். பெண்கள் செல்வதற்கு வசதியாக வழி கிடைக்க வேண்டும் என்பதற்காக தான் உங்களை சற்று நேரம் இருக்க சொன்னேன். அவர்கள் சென்று விட்டார்கள். இனி நீங்கள் அமைதியாக செல்லலாம் என்றனர். கூட்டத்தினர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். அவருடைய சாதுர்யத்தை ஆண்கள் வெகுவாக ரசித்தனர்.
பெண்களிடம் எம்ஜிஆர் கொண்டிருந்த அக்கறை குறித்து அவர்களின் பாதுகாப்புக்காக அவர் மேற்கொண்ட உத்தி குறித்து அவர்கள் தங்களுக்குள் பேசி சிரித்து மகிழ்ந்தனர். எம்ஜிஆரின் சாதுரியம் அவர்களுக்கு வியப்பை அளித்தது. ஆண்களுக்கு அவர்மீது மிகுந்த மரியாதையை ஏற்படுத்தியது

திரையரங்கில் பெண்களுக்கு பாதுகாப்பு


எம்ஜிஆர் சினிமாவில் நடிக்கும்போது அவருடைய படங்களுக்கு பெண்கள் அதிக அளவில் வருவது கண்டு அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது அந்த திரையரங்குகளின் முக்கியக் கடமை என்று திரையரங்க உரிமையாளர்களிடம் அவர் சொல்லியிருந்தார். பெண்களுக்கும் தன்னுடைய ரசிகர்களுக்கும் திரைப்படம் பார்க்க வரும்போது எந்த தொந்தரவும் இருக்கக்கூடாது; அதற்கு ஏற்றாற் போல அவர்களை வரிசையாக நிற்க வைத்து முறையாக டிக்கெட் கொடுத்து அவர்களை படம் பார்க்க வைத்து பத்திரமாக அனுப்பி வைக்க வேண்டும் என்று அவர் கட்டளை இட்டிருந்தார். இவ்வாறு பாதுகாப்பாகச் செயல்படும் திரையரங்குகளுக்கு மட்டுமே தன்னுடைய படம் கொடுக்கப்படும் என்று அவர் திரையரங்க உரிமையாளர்களிடம் தெரிவித்திருந்தார். எனவே லாபம் கருதி படத்தை எடுக்கும் உரிமையாளர்கள் அதற்குரிய பொறுப்பையும் உணர்ந்து படம் பாக்க வருகின்றவர்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று செயல்பட்டனர் .

காவல்காரன் எம் ஜி ஆர்

எம்ஜிஆர் குண்டடிபட்டு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி குரல் பயிற்சி எடுத்துக்கொண்டு பிறகு காவல்காரன் படத்தில் தொடர்ந்து நடித்தார். ஏற்கனவே பாதிப் படம் முடிந்த நிலையில் அவர் குண்டடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்த பிறகு வந்து மீதி படத்தை முடித்துக் கொடுத்தார். இதற்கிடையே தமிழகத்தில் வாழ்ந்த தாய்மார்களும் இளம் பெண்களும் எம்ஜிஆருக்கு என்ன ஆயிற்றோ? எம்ஜிஆர் பிழைத்து வருவாரோ என்று கவலைப்பட்டனர். ஏனென்றால் எம்ஜிஆரின் எதிரணியினர் இனி அவரால் நடிக்க முடியாது; அவரால் பேச முடியாது; என்று பொய்ப் பிரச்சாரம் செய்து வந்தனர். இவர்களின் பேச்சை கேட்ட ரசிகைகள் மிகவும் கவலைப்பட்டனர். இச்சூழ்நிலையில் காவல்காரன் படம் திரைக்கு வந்தது. திரை அரங்கில் பெண்கள் கூட்டம் அலைமோதியது.

காவல்காரன் படத்தில் எம் ஜி ஆருக்கு ர ட ல போன்ற ஒலிகளை உச்சரிக்க சிரமப்படுவது தெரிந்தது. இருந்தாலும் அவரது ரசிகர்கள் அதை ஒரு குறையாகக் கருதவில்லை. குழந்தையின் மழலை போல ரசித்தனர். பெற்ற தாய் தன் குழந்தையின் குறையை பெரிதாகக் கருதுவாரா. அது போல அவரது உச்சரிப்பு குறைபாடு ஒரு குறையாகவே தோன்றவில்லை. பயில்வான் போல இருந்த எம் ஜி ஆர் காவல்காரன் படத்தில் உடல் மெலிந்து இருபத்தைந்து வாலிபன் போல காட்சியளித்தார். ஜெயல்லிதா அவருக்கு பொருத்தமான ஜோடியாக தோன்றினார். எம்ஜிஆர் நன்றாக பேசுகிறார் பாடுகிறார் ஜெயலலிதாவை திருமணம் செய்து குழந்தை பெறுகிற காட்சிகள் எல்லாம் வருகின்றன என்பது தெரிந்ததும் பெண்கள் ஆரவாரமாக இந்த படத்திற்கு வரத்தொடங்கினர்

அடங்கொப்புரான சத்தியமா
நான் காவல்காரன்
நீ ஒப்புக்கொள்ள மறுத்தாலும்
நான் காவல்காரன்

என்ற பல்லவியுடன் தொடங்கும் பாடலில் எம் ஜி ஆர்

என் இல்லம் புகுந்தாலும்
உள்ளம் கவர்ந்தாலும்
நான்தான் காவலடி

என்று ஜெயலலிதாவை பார்த்து பாடும் வரிகள் பெண்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றன. பெண்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போவதைக் கண்ட திரையரங்க உரிமையாளர்கள் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க சிரமப்பட்டனர். என்ன செய்வது என்று கவலைப்பட்டனர். இதை கேள்விப்பட்ட எம்ஜிஆர் பெண்களுக்காக தனி காட்சி நடத்தலாம் என்று ஆலோசனை தெரிவித்தார்.

காவல்காரன் படத்திற்கு பெண்களுக்காக தனி காட்சிகள் நடைபெற்றன. தன் பிள்ளை குண்டைபட்டு உயிரோடு திரும்பி பழையபடி தன் தொழிலை நடிப்பை தொடங்கிவிட்டான் என்பதை காணவும் கேட்கவும் தாய்மார் கூட்டம் திரண்டது. இளம் ரசிகைகள் எம் ஜி ஆரின் கட்டுடலையும் ஜெயலலிதாவுடன் பாடும் ஜோடிப் பாட்டுக்களையும் இருவரும் சேர்ந்து குடும்பம் நட்த்தும் அழகையும் ‘’காது கொடுத்து கேட்டேன் ஆஹா குவா குவா சத்தம்’’ பாட்டையும் கண்டு ரசிக்க்க் கூடினர். இந்தப் பாட்டில் கருவுற்ற பெண்னின் கால மாற்றங்களும் உடல் வேதனைகளும் அழகாக எடுத்துசொல்லப்பட்டு அவற்றை எம் ஜி ஆர் ஒரு பெண்ணாக தன்னை பாவித்து நடித்துக் காட்டியதை பெண்கள் வெகுவாக ரசித்தனர். பெண்ணுக்கு பெண்ணாகவும் ஆணுக்கு ஆணாகவும் அந்த படத்தில் நடித்த எம் ஜி ஆர் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார். ஆணுக்கு ஆண் ஆசைப்படும் பேரழகன் எம் ஜி ஆர் என்று இன்றைக்கும் கூட்டங்களில் பேசப்படும் அளவுக்கு எம் ஜி ஆர் ஆண்களையும் கவர்ந்திருந்தார். இதனால் ஆங்கல் கூட்டமும் அலை மோதியது. ஆண்கள் உணர்ச்சி பிழம்பாக இருந்தனர். எம் ஜி ஆர் பிழைத்து வந்தது கண்டு மகிழ்ச்சி பெருக்கில் உணர்ச்சி வசப்பட்டு கோஷங்களை விண்ணதிர முழங்கினர். எம் ஜி ஆர் படம் பார்க்க பவரும் ரசிகர்கள் இன்றும் பத்து பதினைந்து நிமிடங்களாவது வாழ்த்து கோஷமிடுவது மரபு. ரசிகர்களின் ஆர்ப்பாட்டம் அதிகமானதால் பெண்களுக்கு பிரத்யேகக் காட்சிகள் நடந்தன. அப்போது ஆண்களுக்கு அனுமதி இல்லை.

பெண்களும் திரும்பத்திரும்ப வந்து காவல்காரன் படத்தை நிம்மதியாக கண்டு ரசித்தனர்.

அனாதரட்சகனாக எம் ஜி ஆர்


பெண்கள் தன் மீது கொண்டிருந்த அன்பையும் தன் கட்சிக்கு அளித்து வந்த ஆதரவையும் அறிந்து கொண்ட எம்ஜிஆர் தான் முதலமைச்சரானதும் அவர்களுக்கு ஒரு தலைவராக ஒரு ரட்சகராக உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் குழந்தைகளுக்கு சத்துணவு திட்டம் தொடங்கப்பட்ட போது பெண்களை மட்டும் அத்திட்ட்ட்தில் பணீக்கு அமர்த்தினார். கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு, விதவைகளுக்கு முதிர்கன்னிகளுக்கு என ஆதரவற்ற பெண்களுக்கு சத்துணவு டீச்சர் மற்றும் ஆயா வேலைகளில் முன்னுரிமை அளித்தார். இந்த பணிகள் வழங்கப்பட்டபோது தாய் உள்ளம் கொண்டவர்களாக இருப்பவர்களால் மட்டுமே நல்ல உணவு பொருட்களை வாங்கி நல்ல முறையில் சமைத்து அவற்றை அன்போடு பரிமாற முடியும் என்று நம்பிய எம்ஜிஆர் பெண்களுக்கு மட்டும் இந்த வாய்ப்பை அளித்தார். இத்திட்டத்தால் ஒரே நாளில் சுமார் பத்தாயிரம் பெண்கள் அரசு பணியாளர்கள் ஆயினர். அன்றைய காலகட்டத்தில் இவர்களுக்கு அரசு சலுகைகள் எதுவும் கிடைக்காவிட்டாலும் பின்னர் மெல்ல மெல்ல இவர்கள் அரசு பணியாளர்களுக்குரிய சலுகைகளை, நன்மைகளைப் பெற்றனர்

ஆதரவற்ற பெண்களுக்கு வேலை அளித்ததேன்??

சத்துணவு திட்டம் அரசு பள்ளிகளில் மட்டுமல்லாமல் அரசு உதவி பெறும் அனைத்து பள்ளிகளிலும் கிறிஸ்தவர்கள் போன்ற சிறுபான்மையர் நடத்தி வந்த பள்ளிகளிலும் தொடங்கப்பட்டது. இதனால் அதிகளவில் மாணவர்கள் பயன்பெற்றனர். தாய்மார் நிம்மதி அடைந்தனர். வேலையில்லாத இளைஞர்களுக்கு இந்த வேலைகளை கொடுக்காமல் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்கள், விதவைகள் என வாழ்க்கையில் நிராதரவாக இருக்கும் பெண்களுக்கு எம் ஜி ஆர் இந்த சத்துணவு தொடர்பான வேலைகளை ஏன் வழங்கினார்? இப்பணி அவர்களுக்கு ஒரு பாதுகாப்பை அளிக்கும்; அப்பெண்களின் பொருளாதாரத்தை உயர்த்தும்; அவர்களுக்கு வாழ்வில் நம்பிக்கை அளிக்கும். அவர்களின் பிள்ளைகளை ஓரளவுக்கு நல்ல முறையில் வளர்க்க அவர்களுக்கு ஊக்கமாக அமையும். ஆக ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல இந்த சத்துணவுத் திட்டத்தின் மூலம் ஆதரவற்ற பெண்களையும் பள்ளிக்கூடத்தில் படிக்கும் குழந்தைகளையும் ஒரு சேர உணவளித்து எம் ஜி ஆர் அவர்களுக்கு வாழ்வில் ஆக்கமும் ஊக்கமும் அளித்தார்.

அரசியல் புரட்சியாக மாறிய கடமை உணர்ச்சி


சத்துணவு திட்டத்தில் மதிய உணவு சாப்பிட்ட பிள்ளைகள் பலர் இன்றும் நன்றியுணர்வுடன் எம் ஜி ஆருக்கு ஆதரவாக இருக்கின்றனர். எம் ஜி ஆரின் ரசிகைகள் பலர் அடித்தள மக்கள் பிரிவினர் என்பதால் இவர்களுக்கு தன்னாலான உதவிகளைச் செய்வதை எம் ஜி ஆர் தன் கடமையாக்க் கருதினார். பெண்களும் எம் ஜி ஆருக்கு ஆதரவாக இருப்பதை அவர் கட்சிக்கு வாக்களிப்பதை தன் கடமையாகக் கருதினர். எம் ஜி ஆரும் அவரது ரசிகைகளாக இருந்த தாய்மாரும் அல்லது பெண்களும் பரஸ்பரம் கடமை உணர்ச்சியுடன் செயல்பட்டனர். இந்த கடமை உணர்ச்சி தமிழகத்தில் அரசியலில் மாபெரும் புரட்சியாக மாறியது. நடிகன் நாடாள முயடியுமா என்று கேட்ட அரசியல் தலைவர்களுக்கு பதிலடி கொடுத்தது. அரசியலில் உலக சாதனை படைத்த மாபெரும் மனிதராக தலைவராக மனித நேயராக எம் ஜி ஆரை உயர்த்தியது.

எம்.ஜி.ஆர் புகைப்படத்தொகுப்பு:







 



முனைவர் செ.இராஜேஸ்வரி

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்