சங்க இலக்கியங்களில் கருத்தொருமித்த காதல்!

திருமதி செல்லையா யோகரத்தினம் M.A

ங்க இலக்கியம் செந்தமிழின் செவ்வியல் இலக்கியம். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஓராயிரம் பண்பாட்டுக் களஞ்சியங்களைத் தன்னகத்தே கொண்ட தன்னிகரற்ற இலக்கியம் சங்க இலக்கியம். அழகு நற்றிணையும், நல்ல குறுந்தொகையும், ஐவகை நிலங்காட்டிடும் ஐங்குநுறூறும், பண்பாடு காட்டிடும் பதிற்றுப்பத்தும், ஓங்கு பரிபாடலும், கற்றறிந்தோர் போற்றும் கலித்தொகையும் உறவுகளின் உன்னதத்தை உலகுக்குக் உணர்த்திய உணர்வாள இலக்கியங்கள். சங்க இலக்கியங்களில் கருத்தொருமித்த காதலைக் காட்டும் காவியங்கள், தேன் சொட்டும் காதல்க் காட்சிகள், போர், வீரம், ஆட்சி அமைப்பு, வணிகம், போன்ற நாட்டு நடப்புக்களையும் இங்கே காணமுடிகிறது. சங்க இலக்கியத்தில் காதல் வாழ்க்கை மிகச் சிறப்பாக இருந்தது. சங்க இலக்கியம் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் எனப் பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. சங்க இலக்கியத்தில் அக்காலத் தமிழர்களின் வாழ்க்கை முறைகள் வெகு சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. தமிழ் இலக்கிய வரலாற்றில் தனிச் சிறப்புடன் திகழ்வது சங்க இலக்கியமே.. இதுவே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழர்களின் அரிய பண்புகளையும் வரலாற்றையும், சமூகக் கட்டுக் கோப்பையும் ஓரிடத்திலே சேமித்துக் வைத்திருக்கும் காலப் பெட்டகமாகும்.

சங்க இலக்கியங்கியங்கள் அகம் புறம் என்று இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. காதலைப்பற்றிய பாடல்கள் அகம் என்றும், காதல் தவிர ஏனைய செய்திகளைப் பற்றிய பாடல்களைப் புறம் என்றும் கூறுவர். இதற்கான இலக்கணத்தைத் தொல்காப்பியம் கூறுகிறது. அகப் பாடல்கள் கற்பனையான தலைவன் தலைவியின் காதலை விளக்கியுரைக்கின்றன. புறப்பாடல்கள் நாட்டை ஆளும் அரசனின் வீரம், கொடை, சமூகத்திற்கு அரசன் ஆற்ற வேண்டிய கடமைகள், கல்வியின் சிறப்புப் போன்றவற்றைக் கூறுவன. பெரும்பாலான புறப்பாடல்கள் அரசனின் புகழைப் பாடுவனவாகவே உள்ளன. மக்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்த சீரிய வாழ்க்கையைக் கூறுவனவாக உள்ளன. புறப்பாடல்கள் பெரும்பாலும் கற்பனையாகப் பாடப்பட்டவையல்ல. இரு அரசர்களுக்கிடையில் போர் ஏற்படும்போது புலவர்கள் தலையிட்டுப் போரைத் தடுத்துள்ளனர். அரசன் மக்களிடம் அளவுக்கு அதிகமாக வரி வாங்கும் போது புலவர்கள் தலையிட்டு அரசனுக்கு அறிவுரை கூறியுள்ளனர். இந்நிகழ்வுகள் புறப்பாடல்களில் இடம்பெற்றுள்ளன. இங்கே இயற்கைக்கு மீறிய செய்திகள் கூறப்படவில்லை. சங்க கால வரலாற்றைத் தொகுப்பதற்கு சங்கப் புறப்பாடல்கள் வரலாற்றுப் பெட்டகமாகத் துணைநிற்கின்றன. அரசர்கள் தம்முள் போரிட்டுக் கொண்டனர். ஆனால் புலவர்களைப் பெரிதும் மதித்துள்ளனர். யாருமே பக்கத்தில் போக அஞ்சும் முரசு கட்டிலில் படுத்துறங்கிய மோசிகீரனார் என்னும் புலவரைத் தண்டிக்காது அவர் தூங்கி எழுகின்றவரை கவரி கொண்டு விசிறினான் சேர மன்னன் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை என்ற செய்தியைப் புறநானூறு கூறுகிறது.

அகப்பாடல்களில், ஒருவனும் ஒருத்தியும் தமக்குள்ளே கண்டு காதலிப்பதும், காதலைத் தோழி மூலம் செவிலித்தாய். நற்றாய் ஆகியோருக்கு மெல்லத் தெரியப்படுத்துவதும் அக்காலத்தில் வழக்கில் இருந்தமை சொல்லப்படுகிறது. இவ்வாறு காதலைத் தெரியப்படுத்துவதை அறத்தொடு நிற்றல் என்பர். பெற்றோர் திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளாத சூழலில் காதலனும் காதலியும் தோழியின் துணையுடன் ஊரை விட்டு வெளியூர் சென்றுவிடுதல் நிகழும். இதனை உடன் போக்கு என்பர். அகப்பாடல்கள் அனைத்தும் கற்பனைப் பாடல்களே. யார் பெயரும் குறிப்பிடப் படாதவை. ஆனால் அக்கால மக்களின் வாழ்க்கையை முழுமையாகவே வெளிப்படுத்துவனவாகவே உள்ளன. உறவுகள் உன்னதமானவை. அன்பைப் போற்றுபவை. மனதை மாற்றுபவை. வரைவுகடாவுதல் என்பது மணமுடித்தல். அதனால் ஏற்படும் கணவன் மனைவி உறவு இயற்கைப் புணர்ச்சியால் ஏற்படும் தலைவன் தலைவி காதல் உறவு, நட்புக் கொள்வதால் ஏற்படும் தலைவி தோழி, தலைவன் பாங்கன் உறவு யாவுமே இனிமையானவை. தலைவன் தலைவி மீது வைக்கக் கூடிய காதல் உறவைச் சங்க இலக்கியம் முழுக்கக் காணமுடிகிறது குறிப்பாக நல்ல குறுந்தொகை என்று சிறப்பித்துக் கூறப்படும் குறுந்தொகையில் அனைத்துப் பாடல்களுமே தலைவன் தலைவி ஒருவர் மீது ஒருவர் வைக்கக் கூடிய காதல் உறவைச் சித்தரிக்கிறது. இதனாலேதான் குறுந்தொகை நறுந்தொகைப் பொக்கிசமாகியது.

பண்டைத் தமிழர்களின் அக வாழ்க்கை களவு வாழ்க்கை கற்பு வாழ்க்கை என இருவகைப்படும். களவு வாழ்க்கை என்பது திருமணத்திற்கு முன்னர் அமையும் வாழ்க்கை. கற்பு வாழ்க்கை என்பது திருமணத்திற்குப் பின்னர் அமையும் வாழ்க்கை. கற்பு வாழ்க்கையில் தலைவி சமையல் செய்யும்பொழுதும், பூத்தொடுக்கும் போதும் தலைவன் பாராட்டுவது உண்டு. '...நீ கை தொட்டது.... தொல்... பொருள்....கற்பு...) இதனைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. இதனையே குறுந்தொகை 'வேம்பின் பைங்காயென்.....' (196) என்னும் பாடலில் குறிக்கிறது.

தலைவன் திருமணம் புரியாது களவு வாழ்க்கையில் காலம் கடத்துகிறான். தோழிக்குச் சினம் வருகிறது. தலைவன் செவியில் படுமாறு அவனது நட்பைப் பழித்துரைக்கிறாள். தலைவியால் அதனை ஏற்க முடியவில்லை. தலைவன் நட்பு உலகிலுள்ள அனைத்தையும் விடச் சிறந்தது என்கிறாள். 'நிலத்தினும் பெரிதே.... (குறுந்.... 03) கடலைக்காட்டிலும் ஆழமுடைது என்கிறாள் தலைவி;.

காதலாகிக் கசிந்து அன்பால் கருத்தொருமித்த தலைவன் தன்னைப் பிரிந்துவிடுவானோ என்று தலைவி வருந்தும்போது தலைவன் தம் உறவு நிலைகளைச் சொல்லி அவளை ஆற்றுப்படுத்துகிறான். என்ன அருமை! 'யாயும் ஞாயும்.......' (குறுந் 40) என்னுடைய தாயும் நின்னுடைய தாயும் உறவினரா? என் தந்தையும் நின் தந்தையும் உறவினரா? இப்போது யானும் நீயும் ஒருவரை ஒருவர் எவ்வாறு அறிந்தோம்? என்று உறவுகளை அடுக்கி வினவிய தலைவன் செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் மண்ணின் நிறத்தை ஏற்று ஒன்றியபின் அம்மண் தண்ணீரின் தனமையை ஏற்று ஒன்றியபின் யாரால் பிரிக்க முடியும்? என்கிறான் தலைவன்.

காலத்தை வீணாக்குகிறான் தலைவன். தலைவி மனம் வருந்துகிறாள்.

'எதுவும் பயன்படாமல்போய் விடக்கூடாது' என்ற கருத்தில் தலைவனோடு கொண்ட உறவு நிலையை அருமையான உவமைகளைச் சொல்லி வலியுறுத்துகிறாள். 'கன்றும் உண்ணாது.......' (குறுந்......28) என்று கன்றும் உண்ணாமல் கலத்தையும் நிறைக்காமல் வீணேதரையில் வழியும் பாலைப்போல எனக்கும் உதவாமல் என் தலைவனுக்கும் உதவாமல் இளமை வீணாகிறதே என்று தலைவி வருந்துவதைக் காணமுடிகிறது.

பதின்ம பருவத்தைக் கடந்து கொண்டிருக்கும் ஓர் இளைஞனுக்கு உளவியல் நோக்கில் பாங்கனால் சரியான வழிகாட்டலைத் தர முடியும். 'நட்பு என்பது நடிப்பல்ல, நாடித்துடிப்பு.' என்று சொல்லலாம். தன்னை இடித்துக் கூறக் கூடிய பாங்கனின் அன்பு தலைவனை நெகிழ வைக்கிறது. 'இடிக்கும் கேளிர் நும் குறை....' (குறுந்.... 58) 'நான் தவறு செய்வதாக இடித்துரைக்கும் நண்பனே! நமது அருஞ்செயலாக எனது காம நோயை தடுத்து நிறுத்தலைச் செய்வாயானால் மிக்க நன்று.' என்கிறான். 'ஆம் சூரியன் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது, வெம்மையான பாறையில் வைக்கப்பட்டிருக்கும் வெண்ணை உருகி ஓடுகிறது. பாதுகாப்பிற்கு நிற்கின்ற அவனுக்கோ கையில்லை, வாயோ பேசமுடியாது, என்ன செய்ய முடியும்? அந்நிலையில் நான் இப்போது உள்ளேன். என்னால் என்ன செய்திட முடியும்?' என்று பாங்கனுக்குப் பதில் கூறுகிறான் தலைவன், நண்பனிடம் கொண்ட பாசம் வெளிக்காட்டப்படுகிறது.

'கான மஞ்ஞை யறையீன் முட்டை....'.(குறுந்.....38) தலைவிகூற்றுப் பாடல். வரைந்து கொள்ளற்கு வேண்டிய பொருளீட்டப் பிரிந்து சென்ற தலைவன் நீண்ட நாள் மீண்டு வராமையால் தலைமகள் தனது ஆற்றாமை தோன்றத் தோழிக்குக் கூறியது. பிரிவை ஆற்றியிருக்கும் தன்மை இன்மை வெளிப்படுகிறது.

சங்க இலக்கியத்தில் தோழியின் பாத்திரம் இன்றியமையாத இடத்தைப் பிடிக்கிறது. தiலிவியின் உளவியலை நன்கு அறிந்த உளவியல் அறிஞராக, உள நோய் நீக்கும் மருத்துவராக, காதல் வயப்பட்ட நிலையை. அதை அறத்தொடு நின்று, உரிய முறையில் உரியவர்களுக்குத் தெரிவித்து, ஊரார் அலர் தூற்றும் போது அதனைத் தலைவனுக்கு உணர்த்தி திருமணத்திற்கு வழிப்படுத்தி ஆவன செய்யும் பல் வேறு பரிமாணங்களில் தோழியின் ஆற்றலைப் பார்க்க முடிகிறது. ஆனால் பாங்கனுக்கு அத்தனை முக்கியத்துவமும் சிறப்பும் இல்லை.

'பூ இடைப்படினும்........' (குறுந்.....57) எனும் சிறைக்குடி ஆந்தையாரின் பாடல் தலைவி தோழி நெருக்கமான நட்பை வெளிக்காட்டுகிறது. நீரிலே சோடியாக மகன்றில் பறவை பயணிக்கிறது. இடையில் சிறு பூ இடைப்படுகிறது. அந்த ஒரு வினாடிப் பிரிவு தாங்க முடியாமல் உடன் உயிர் போய்விட்டது என்று அஃறிணைப் பொருட்களை உதாரணம் கூறி தோழியிடம் தலைவி ஆறுதல் அடைகிறாள்.

கடந்தோட் கர வீரனின் குநற்தொகைப் பாடலில், இரவிலே தலைவியைச் சந்திக்க வந்த தலைவனிடம் துணிச்சலாகத் தோழி மறுத்துப் பேசுகிறாள். சாமி விடைகொடுத்தாலும் பூசாரி விடைகொடுக்காத நிலை! கரிய கண்ணையும் தாவுதலையும் உடைய ஆண் குரங்கு இறந்து போக அதன் பிரிவால் ஏற்பட்ட கைமைத் துன்பத்தை ஆற்றாத பெண் குரங்கு தன் குட்டியைத் தன் சுற்றத்தாரிடம் விட்டுவிட்டு ஓங்கிய மலை உச்சி மீதேறி விழுந்து தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் என்று கூறுகிறது. அத்தகைய சாரலையுடைய தலைவனே! நீ தலைவியைச் சந்திக்க நள்ளிரவில் வராதே! அப்படி வந்தால் 'உனக்கு என்ன நடக்குமோ' என்று எங்கள் நெஞ்சம் பதைபதைக்கும் என்று தோழி குறிப்பால் உரைக்கிறாள். 'கருங்கண் தாக்கலைப் பெரும் பிறிது........(குறுந்....69). தோழி தலைவியோடு மட்டும் அன்பு பாராட்டுவது மட்டுமல்லாமல் தலைவன் தவறு செய்யும்போது நயமாக இடித்துரைத்து அன்பு பாராட்டித் திகழ்ந்தாள்.

காதல் வாழ்வில் மட்டுமல்லாமல் விருந்தினரைப் பேணுவதிலும் தம்பதியர் சிறந்து விளங்கினர். நள்ளிரவில் விருந்தினர் வந்தாலும் உபசரிப்பர். விருந்தினர் உண்டு எஞ்சிய உணவை இல்லறத்தார் உண்பதே சிறப்பாகும் என்று குறுந்தொகை விளக்குகிறது. அன்பு, அறிவு, ஆற்றல், திரு, உரு முதலிய பண்புகளில் ஒன்றிய தலைவனும் தலைவியும் இணைந்து வாழும் இல்லறத்தின் மாட்சியைக் குறுந்தொகை போற்றிப் புகழ்கிறது. தலைவனோடு தலைவியும், தலைவியோடு தோழியும் மட்டும் உறவு கொள்ளாமல் சமுதாயத்தோடு உறவு கொண்டதையும் விருந்தினரைப் பேணுவதையும் காணமுடிகிறது.

ஒன்றாகக் கூடி இன்புற்று வாழ்வதே வாழ்க்கை நியதியாகும். இளமை, நாள் கழியும்தோறும் கழிந்து கொண்டே போவது. போன இளமையை மீட்டுத்தரும் சக்தியோ எதற்கும் கிடையாது. ஆகவே இளமையின் இன்பத்தினை ஒன்றியிருந்து அநுபவித்து மகிழ்தல் வேண்டும். பிரிந்து சென்று. இளமையும் இன்பமும் கெடச் செய்வது தவறு. தலைவனுக்கு இவ்வாறு வாழ்க்கைத் தத்துவத்தை எடுத்துக் கூறுகின்றாள் தோழி. (கலி 17, ஒன்றினார் வாழ்க்கை) (.....ஒன்றன் கூறாடை உடுப்பவரே ஆயினும் ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை: அரிதரோ, சென்ற இளமை தரற்கு!) அருமையான பொருள்களின் மேல் எழுந்த ஆசையால் உள்ளம் தலைவியின் மேலுள்ள பிணைப்பிலிருந்தது நீங்க, அவளைப் பிரிந்து சென்று. வேற்று நாடு போயிருப்பது பற்றியே நினையாதிருப்பாயாக. பெண்மை எப்பொருளினும் இன்பத்தினும் தன் காதலனுடன் கூடிப்பெறும் காதலின்பம் ஒன்றையே சிறப்பாகக் கருதும் இயல்புடையது. அதற்கு வேறு எதன் மேலும் அத்துணைப் பாசம் உண்டாவதில்லை. இதனைக் கற்றறிந்தோர் ஏற்றும் கலி கூறுகிறது.

எட்டுத்தொகை நூல்களில் முதலிடம் பெற்றுத் திகழ்வது நற்றிணையாகும். சங்க இலக்கியம் இன்பத்தின் இருப்பிடமாகத் திகழ்வதற்குக் காரணம் ஐந்துவகை நிலப்பாகுபாடு எனலாம். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற நிலப்பாகுபாடும் அவற்றை அடிப்படையாகக் கொண்டு அமைந்த மக்கள் பிரிவுகளும், திணை, துறை காட்டும் பழக்க வழக்கங்களும் இலக்கியத்தின் இன்பச்சுவையினை மிகுதிப் படுத்துகின்றன. நற்றிணை ஐந்து வகைத் திணைகளையும் சிறப்புற விளக்கும் செய்யுட்களால் அமைந்து ;நல்' என்னும் அடைமொழியும், அகப்பொருள் பற்றி அமைந்த 'திணை' என்னும் பெயரும் சேர்ந்து 'நற்றிணை' என்று அழைக்கப்படுகிறது. நற்றிணைப் பாடல்கள் காதலைப் பற்றிப்பாடும் அகப்பாடல்களாக இருந்தாலும், காமச்சுவை சேர்க்கும் குறிப்புகள் அதிகமில்லை. மாறாக நல்ல காதலை, காதலர்களின் உள்ளத்து உணர்வுகளை நயம்படச் சொல்லும் பக்குவமான பாடல்களே மிகுதியாக உள்ளன.

காதலனை நெடுங்காலம் பிரிந்திருக்கிறாள் ஒரு தலைவி. அவன் திரும்பி வரும் நாளை எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏங்கி மெலிந்து போகிறாள். ஒரு கட்டத்தில் தன் வாழ்வு பற்றிய நம்பிக்கையையும் இழந்து விடுகிறாள். காதலனைக் காணாமலே தன் இன்னுயிர் பிரிந்து விடுமோ என்று அஞ்சுகிறாள். இந்த நிலையில் தலைவனைப் பிரிந்த தலைவி தன் ஆற்றாமையைத் தோழியிடம் நெஞ்சம் நெகிழ எடுத்துரைக்கிறாள். 'தோழி! நான் சாவதற்கு அஞ்சவில்லை ஆனால் வேறு ஒன்றிற்காக அஞ்சுகிறேன். நான் இறந்துவிட்டால் பிறகு வேறு ஒரு பிறப்பும் பிறந்துவிட்டால் அந்த மறு பிறப்பில் என் காதலனை மறந்து விடுவேனோ என்றுதான் அஞ்சுகிறேன் என்கிறாள். இந்த இதயம் கனிந்த இன்பச் சுவைப்பாடல் ('தோளும் அழியும் நாளும் ........நற்...397) 'சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவேன்' என்கிறாள் தலைவி. தமிழர்களின் வளமார்ந்த அன்பு நிறைந்த காதல் வாழ்க்கையினை நற்றிணையின் நல்ல பாடல்கள் நயம்படக் கூறுகின்றன. பிறரின் துன்பத்தைத் துடைப்பதில்த் தானே அன்பு என்னும் நற்பண்பு அடங்கியிருக்கிறது. அன்பு என்பதும் ஒரு வகையில் பிறருக்குக் கொடுக்கும் செல்வம்தான் என்பதை நற்றிணைப் பாடல் கூறுகின்றது. 'விரைப்பரி வருந்திய வீங்கு.....'நற்....21)

'மரம் எனக்குத் தங்கை' எங்காவது மரம் தங்கையாக முடியுமா! இது என்ன விசித்திரம்! விழிகள் வியப்பால் விரிகின்றன்! மரம் தங்கையாக முடியும். உள்ளத்தில் அன்பிருந்தால் அகிலத்தில் எல்லாமே சாத்தியம்தான். தலைவன் தன் காதலியைப் பகற் பொழுதில் ஒரு புன்னைமரத்தின் நிழலில் சந்திக்கிறான். இது நாங்கள் சிறுகுழந்தையாக விளையாடிய போது போட்டுவிட்ட விதையிலிருந்து முளைத்து வந்த மரம். இதற்கு நாங்கள் பாலும் நீரும் ஊற்றி வளர்த்தோம். அப்போது எங்கள் தாய் ' உங்களை விட உங்கள் தங்கையான புன்னை மிக நல்லவள். அவள் எதற்கும் அடம் பிடிக்க மாட்டாள்.' எனப் பாராட்டுவாள். 'எனவே என் உடன் பிறப்பான இப்புன்னை நிழலில் உங்களுடன் பேச எனக்கு வெட்கமாக உள்ளது. இங்கு வேறு இடங்களும் உள்ளன. நாம் அங்கே போய்ப் பேசுவோம்.' என்கிறாள் தலைவி. மனித நேயமிக்க அன்புக் காதலை ' விளையாடு ஆயமொடு......(குறுந் 172) என்பது பாடல். இப்படி இயற்கையையும் உயிருள்ளதாகக் கருதி நாணும் நுட்hமான மன உணர்வுகளை சங்க இலக்கியப் பாடல்கள் காட்டி நிற்கின்றன. நற்றிணைப் பாடல்கள் காதலைப் பாடும் அகப் பாடல்களாக இருந்தாலும் காமச்சுவை சேர்க்கும் குறிப்புக்கள் அதிகமில்லை, மாறாக நல்லகாதலை காதலர்களின் உள்ளத்து உணர்வுகளை நயம்படச் சொல்லும் பாடல்களாகவே பெரிதும் உள்ளன.

தலைவியின் பேச்சு அன்புமயமானது! தலைவி அன்பும் இரக்கமும் கொண்டவள். எனவே அவள் வெளிப்படுத்தும் சொற்கள் இனிமையும் கனிவும் கொண்டிருக்கும். (அருள் முந்துறுத்த... தொல். பொருள். கற்பு. 163) அருளை முதன்மையாகக் கொண்ட அன்பினை உட்கொண்டிருக்கும் இனிய சொற்களால் தான் கருதும் பொருளை எடுத்துரைப்பது தலைவிக்கு உரியதாகும். இது தொல்காப்பியம் கூறுவது.

'வெந்நீராயினும் செந்தீயை அணைக்கும் தப்பம் உடையது' என்கிறார் கபிலர். அன்பு, அறிவு, ஆற்றல், திரு, உரு முதலிய பண்புகளில் ஒன்றிய தலைவனும் தலைவியும் இணைந்து வாழும் இல்லறத்தின் மாட்சியை குறுந்தொகை போற்றிப் புகழ்கிறது.

'முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்....' (குறுந்...167) எனும் கூடலூர்கிழார் பாடலில் வீட்டிலே விளையாட்டுப் பிள்ளையாகச் சுற்றித் திரிந்த தலைவியின் பொறுப்புணர்ச்சியைச் செவிலி கூற்றாகக் கூறுகிறார். கட்டித்தயிரைப் பிசைந்த காந்தள் மலரைப் போன்ற மெல்லிய விரலை ஆடையில்த் துடைத்துக் கொண்டு, குவளை மலரைப் போன்ற மையுண்ட கண்களில் தாளிப்பின் புகை மணக்கத் தானே சமைத்த இனிய புளிக்குழம்பைத் தன் தலைவன் இனிதென்று உண்பதை இரசித்து முகம் சிறிதே மலர்ந்தது என்கிறார் புலவர். தலைவன் தலைவி கருத்தொருமித்த காதல் வெளிக்காட்டப்படுகிறது. செவிலித்தாய் நற்றாய் பிள்ளை உறவு அன்பு மேலிடும் தன்மை புலப்படுகிறது. குடும்ப ஒற்றுமை புலப்படுகிறது. புகழப்படுகிறது. தலைவி தன் தலைவனுக்கு வேண்டியவற்றை அவன் மகிழும்படி செய்துவருகிறாள்.

துரித உணவு வகைகளைப் பெற்று காலத்தைப் போக்கும் தற்காலத்தில் குறுந்தொகை எங்கே தெரியப் போகிறது! புளிக்குழம்பு எங்கே? நல்ல காரியங்களுக்கு வகை வகையாக எந்த எந்த உணவகங்களில் பெற்றுக் கொள்ளலாம் என்பது தண்ணி பட்ட பாடம். குழந்தைகளுக்கே உணவு அம்மா தயார் செய்து கொடுப்பதில்லை. எல்லாமே தயார் செய்யப்பட்டதாக உள்ளன. இந்த நிலையில் கட்டிய புருசனுக்கு எங்கே முளி தயிரும் புளிக்குழம்பும் கிடைக்கப் போகிறது? மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்! பெண்ணியம் பேசுவோர் ஒரு பக்கம், சோம்பேறித்தனம் மறுபக்கம், அதோடு அவசர உலகம் சாதகமாக அமைகிறது. வகை வகையான உணவு விருப்பத்திற்கேற்பச் சுடச் சுடக் கைக்கு எட்டிய தூரத்தில் பெற முடிகிறது. பரோட்டா, பிட்சா, கொத்து றொட்டி, கோக் என்பன முதலிடத்தைப் பிடிக்கிறது. வேறென்ன வேண்டும்! எது என்னவாக இருந்தாலும் இளம் இரத்தத்துடிப்பு உள்ளவரை தான். கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பது போல நாகரிக வாழ்க்கை இழுத்துச் செல்கிறது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது வெறும் பேச்சுக்கு மட்டும் தான். நாப்பது மட்டும்தான் நோயற்ற வாழ்வு. அதற்கு மேலே குறைவற்ற செல்வம் நோய்கள் மட்டும் தான். டயபட்டீஸ், இரத்த அழுத்தம், கொலஸ்ரோல், கால் கை விறைப்பு என்று சின்ன சின்னதாக ஏதோ ஒருவிதத்தில் மருத்துவரை அடிக்கடி பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது. இந்த நிலையிலும் உணவு முறையிலோ வாழ்க்கை முறையிலோ மாற்றம் இல்லை. வெள்ளைச் சோறு, வெள்ளை மாப்புட்டு, வெள்ளைச் சீனி, நொறுக்குத்தீனி இவற்றில் மாற்றமில்லை. இதுவே நாகரிகமாகி விட்டது. இதற்கு மாறாக பழைய முறைகளைச் செய்பவர்கள் நாகரிகம் தெரியாதவர்கள், பத்தாம் பசலிகள். பண பலம் இல்லாதவர்கள் என்று வேறு ஏதேதோ விமரிசனம். நான் இப்ப பத்தியமாக நடந்து கொள்வது என்பார்கள். பத்தியமாவது கேக் இரண்டு துண்டுக்குப் பதில் ஒரு துண்டு. சொக்லேற் சாப்பிடுவதேயில்லை அப்படி எதாவது சொல்வது. ஆனால் சுகர் கொன்றோலுக்கே வருவதில்லை. கொலஸ்றோலிலும் மாற்றமில்லை. உடல்நிலையில் தேற்றமுமில்லை. இதுதான் பிரச்சனையே என்பார்கள். இதற்கு எங்கே போய் முட்டுவது? யாரை நோவது? சிறு தானியமா? அது என்ன? காய்கறியா? அவற்றை யார் சாப்பிடுவார்? எப்படிச் சமைப்பது? பச்சையாகவா? சலாட் என்றால் கொங்சம் கொஞ்சம் சாப்பிடலாம். இந்த மாதிரிக் கதைகள் ஏராளம்! உணவைப் பக்குவப்படுத்தி எப்படி பரிமாறுவது என்பதெல்லாம் கேள்விக்குறிதான்! காந்தள் மெல்விரலுமில்லை. கத்தரிக்காயுமில்லை! புளிக்குழம்புமில்லைப் புளியங்காயுமில்லை. நாளுக்கு நாள் குழிசைகளில் மாற்றம் எண்ணிக்கையில் கூட்டம் அவ்வளவுதான். டாக்டர்களெல்லாம் அத்தனை வருடம் படித்துவிட்டு எதற்காக இருக்கிறார்கள்? சிறிதாவது உணவு முறையை மாற்றினால் நாளுக்குநாள் மாற்றம் தெரியும். சுய கௌரவம் விட்டால்த்தானே! என்ன பாடல் படிப்புப் படித்திருக்க வேண்டும் அல்லது படித்தவர்கள் சொல் பேச்சையாவது கேட்க வேண்டும், அதெப்படி முடியும்:? அந்தப் பக்குவம் இருந்தால் இந்த நிலை வந்திருக்காதே! எப்படியோ வெளிநாட்டு நாகரிகம் பழக்கமாகி வழக்கமாகி விட்டபின் எதிர்கட்சியா? ஆளும்கட்சியா என்றாகிவிட்டபிறகு என்ன பண்ணலாம்? விட்டுத் தள்ளுங்கள். திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியவே முடியாது.

நல்லறத்தைத் தேடுவோம். வாழ்க இல்லறம் நல்லறமாக! வாழ்க கருத்தொருமித்த காதல் வாழ்க்கை! பழமையைத் தேடுவோம்! பழமையைப் போற்றுவோம்! பாட்டி சொல் கேட்போம்! சிறப்பொடு வாழ்வோம்! வாழ்க சங்கத்தமிழ்! வெல்க காதல் வாழ்க்கை!.
 


 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்