பெருமிதம் மிகுந்த பெருஞ்சித்திரனார்

முனைவர் இர.பிரபாகரன்


ட்டுத்தொகை நூல்களில் ஒன்றான புறநானூறு சங்க காலத் தமிழர்களின் வாழ்க்கை முறை, பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றைத் தெரிந்து கொள்வதற்கு மிகவும் பயனுள்ள நூல். வரலாற்று ஆசிரியர்கள், புறநானூற்றில் குறிப்படப்பட்டிருக்கும் பல செய்திகளை வரலாற்றுச் சான்றுகளாகக் காட்டுகின்றனர். புறநானூற்றில் நமக்குக் கிடைத்துள்ள 398 பாடல்களை இயற்றிவர்கள் 157 புலவர்கள். அப்பாடல்கள் அரசர், வணிகர், மருத்துவர், மகளிர், மறவர், குறவர், வேளாளர், வேடர், அந்தணர், ஆசிரியர், பொற்கொல்லர், புலவர் என்று அன்றைய சமுதாயத்தில் பல நிலையிலும் பல துறையிலும் இருந்தவர்களால் இயற்றப்பட்டவை.

பாடல்களை இயற்றியவர்கள் அறிவிற் சிறந்தவர்களாகவும், புலமை மிக்கவர்களாகவும் இருந்தனர் என்பதற்கு அவர்களின் பாடல்களே சிறந்த சான்றுகளாக உள்ளன. பாடல்களை இயற்றிய புலவர்களில் சிலர், மன்னர்கள் தவறு செய்தால் தட்டிக் கேட்பவர்களாகவும், மன்னர்களுக்கு அறிவுரை கூறுபவர்களாகவும், தூதுவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். உதாரணமாக, கோவூர் கிழார் என்னும் புலவர், சோழன் நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் இடையே நடக்கவிருந்த போரைத் தடுத்து நிறுத்த முயன்றார் (புறம் - 44,45). அவ்வையார், அதியமான் நெடுமான் அஞ்சியின் சார்பாகத் தொண்டைமான் என்னும் மன்னனிடத்துத் தூது சென்றதாகப் புறநானூற்றுப் பாடல் 95 -இல் காண்கிறோம். பாரியை எதிர்த்துப் போரிட வந்த மூவேந்தர்களிடம், போரால் பாரியை வெல்ல முடியாது என்று எடுத்துக் கூறிப் போரைத் தடுத்து நிறுத்த கபிலர் முயற்சி செய்தார் (புறம் – 109). வையாவிக் கோப்பெரும் பேகன் தன் மனைவியைப் பிரிந்து வாழ்ந்த போது அரிசில் கிழார் (புறம் – 146), கபிலர் (புறம் – 143), பரணர் (புறம் – 144,145), பெருங்குன்றூர் கிழார் (புறம் – 147) ஆகிய புலவர்கள் அவனை அவன் மனைவியோடு சேர்ந்து வாழுமாறு கூறியது மட்டுமல்லாமல், அவன் தன் மனைவியோடு சேர்ந்து வாழ்வதே அவர்கள் விரும்பும் பரிசு என்றும் கூறினர். ஆயினும், சில பாடல்கள், மன்னர்களின் நாட்டையும், அவர்களின் வெற்றிகளையும், புகழையும் பாராட்டிப் பரிசு பெறுவதற்காகப் புலவர்களால் இயற்றப்பட்டவையாகும்.

புறநானூற்றுப் பாடல்களை இயற்றிய பெரும் புலவர்களில் பெருஞ்சித்திரனார் என்பவர் ஒருவர். அவர் புறநானூற்றில் பத்து பாடல்களை இயற்றியவர் (புறம் 158 – 163, 207, 208, 237, 238). அப்பாடல்கள் அவருடைய ஆழ்ந்த அறிவையும், தெளிந்த சிந்தனையயும், அஞ்சா நெஞ்சத்தையும், பரந்த மனப்பான்மையையும் எவ்வாறு வெளிப்படுத்துகிறது என்பதை ஆய்வு செய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

பெருஞ்சித்திரனாரோடு அவர் மனைவியும், குழந்தைகளும், வயது முதிர்ந்த தாயும் வாழ்ந்து வந்தனர். அவர் குடும்பத்தாரும் சுற்றத்தாரும் மிகவும் வறுமையில் வாடியவர் என்பது அவருடைய பாடல்களிலிருந்து தெரிய வருகிறது. அவர் வறுமையின் கொடிய பிடியில் சிக்கித் தவித்து அளவற்ற துன்பத்திற்கு உள்ளாகி வருந்தியதை ஒட்டியே, “சித்திரவதை” என்ற சொல் உருவாகியதாகப் புலவர் இரா. இளங்குமரனார் தம் நூலில் குறிப்பிடுகிறார்.

சங்க காலத்தில், அதியமான், பாரி, காரி, ஓரி, ஆய் அண்டிரன், பேகன், நள்ளி என்று ஏழு வள்லல்கள் இருந்ததாகப் புறநானூற்றிலும் சிறுபாணாற்றுப்படையிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த ஏழு வள்ளல்களின் காலத்திற்குப் பிறகு வாழ்ந்த வள்ளல்களில் வெளிமான், குமணன் என்ற இரு குறுநில மன்னர்களும் கொடையில் மிகவும் சிறந்தவர்கள். பெருஞ்சித்திரனார் தன் வறுமையை எடுத்துரைத்துப் பரிசு பெறலாம் என்ற நோக்கத்தோடு வெளிமான் என்பவனைக் காணச் சென்றார். அவர் சென்ற நேரத்தில், வெளிமான் இறக்கும் தருவாயில் இருந்தான். அவன் கொடையிற் சிறந்தவனாகையால், அந்நிலையிலும், அவன் தன் தம்பி இளவெளிமான் என்பவனை அழைத்து, பெருஞ்சித்திரனாருக்குப் பரிசு அளிக்குமாறு கூறி உயிர் துறந்தான். வெளிமானின் கொடைத் தன்மையை நம்பி, ஆர்வத்தோடு அவனிடம் பரிசு பெற வந்த பெருஞ்சித்திரனாருக்கு வெளிமானின் மரணம் பெரும் அதிர்ச்சியாகவும் ஏமாற்றமாகவும் இருந்தது. அச்சமயத்தில் தன் நிலைமையை புறநானூற்றுப் பாடல் 238 -இல் பெருஞ்சித்திரனார் மிகத் தெளிவாகவும் கவிதை நயத்தோடும் கூறுகிறார். ”என் தந்தை போன்ற வெளிமான் இறந்து விட்டானே! இனி நான் என் செய்வேன்? என் சுற்றத்தார் நிலை என்ன ஆகுமோ? மழை பெய்யும் இரவு நேரத்தில் படகு கவிழ்ந்து, அதிலிருந்து கடலில் வீழ்ந்த கண்ணில்லாத ஊமை ஒருவன் துயரப்படுவது போல் ஆனேனே! எல்லை இல்லாத பெரிய அலைகளுடையதுமான அக்கடலில் சுழல்வதைவிட இறப்பதே நன்று. எனக்குத் தகுந்ததும் அதுதான்.” என்று தன்னுடைய மிகப் பெரிய வருத்தத்தையும் எமாற்றத்தையும் அழகான உவமையோடு சித்திரிக்கிறார்.

வெளிமான் கூறியவாறு, இளவெளிமான் பெருஞ்சித்திரனாருக்குப் பரிசளித்தான். ஆனால், இளவெளிமான் புலவர்களின் தகுதி அறிந்து பரிசு கொடுக்கும் ஆற்றல் இல்லாதவன். அவன், பெருஞ்சித்திரனாருக்கு மிகவும் குறைந்த அளவே பரிசில் கொடுத்தான். அதைக் கண்டு ஆத்திரமடைந்த பெருஞ்சித்திரனார் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. “இரைக்காகப் புலியால் தாக்கப்பட்ட யானை தப்பிவிட்டால், புலி எலிமேல் பாயாது. மிகுந்த அலைகள் உள்ள கடலில் சேரும் ஆற்று நீர்போல் விரைந்து போய் மிகுந்த பரிசில் பெறுவோம்; நெஞ்சமே, சோர்ந்து விடாதே! துணிவோடு எழு!” என்று தனக்குத் தானே ஆறுதல் கூறி (புறம் - 238) இளவெளிமானின் அரண்மனையைவிட்டுப் பெருஞ்சித்திரனார் கோபத்தோடு வெளியேறினார்.

இளவெளிமானின் அரண்மனையிலிருந்து புறப்பட்ட பெருஞ்சித்திரனார், குமணன் என்ற வள்ளலைக் காணச் சென்றார். ”கடையேழு வள்ளல்கள் எழுவரும் மறைந்த பின்னர், இரக்கம் வரும் வகையில், பாடிவரும் பாணரும் மற்றவரும் படும் துன்பத்தை தீர்ப்பவன் நீ என்பதால் உன்னை நினைத்து நான் இங்கே விரைந்து வந்தேன்.” என்று குமணனிடம் கூறி அவனுடைய முதிர மலை நாட்டையும் அவன் வண்மையையும் பெருஞ்சித்திரனார் புகழ்ந்து பாடியதைப் புறநானூற்று பாடல் 158 - இல் காணலாம். குமணனையும் அவன் நாட்டையும் புகழ்ந்து பாடிய பிறகு, தன் வறுமையை அவனிடத்தில் பெருஞ்சித்திரனார் கூறுவதாகப் பாடல் 159 அமைந்துள்ளது. அப்பாடலில், “என் தாய், தான் பல ஆண்டுகள் வாழ்ந்தும் இன்னும் தன் உயிர் போகவில்லையே என்று தன் வாழ்நாட்களைப் பலவாறாக வெறுத்து, கோலைக் காலாகக் கொண்டு அடிமேல் அடிவைத்து நடப்பவளாய், வெள்ளை நூல் விரித்தது போன்ற முடியுடையவளாய், கண் பார்வை பழுதடைந்ததால் முற்றத்திற்குப் போக முடியாதவளாய் இருக்கிறாள்.” என்று தாயின் முதுமையையும் தளர்ந்த உடல் நிலையயும் முதலில் குறிப்பிடுகிறார். அதைத் தொடர்ந்து, “ஓளியிழந்த மேனியுடன் வறுமைத் துயரம் வருத்துவதால் வருந்தி, இடுப்பில் பல சிறு குழந்தைகளுடன், குழந்தைகள் பிசைந்து பால் குடித்ததால் வாடிய மார்பகங்களுடன் பெருந்துயர் அடைந்து, குப்பையில் முளைத்த கீரைச் செடியில், முன்பு பறித்த இடத்திலேயே மீண்டும் முளைத்த, முற்றாத இளந்தளிரைக் கொய்து, உப்பில்லாத நீரில் வேகவைத்து மோரும் சோறும் இல்லாமல் வெறும் இலையை மட்டுமே உண்டு, அழுக்குப் படிந்த கிழிந்த ஆடையை உடுத்தி என் மனைவி வாழ்கிறாள். அந்த நிலையிலும், என்னை விரும்பும் என் மனைவி, இல்லற வாழ்வைப் பழிக்காமல், இருப்பதை உண்பவள்.” என்று தன் மனைவியும் குழந்தைகளும் வறுமையில் வாடுவதைக் கூறுகிறார் (புறம் – 159). முடிவாக, “என் தாயும் என் மனைவியும் என் சுற்றத்தாரும் மனம் மகிழுமாறு நீ எனக்குப் பரிசளிக்க வேண்டும். ஆனால், உயர்ந்த, பெருமைக்குரிய தந்தங்களையும், கொல்லும் வலிமையும் உடைய யானைகளைப் பெறுவதாக இருந்தாலும் நீ அன்பில்லாமல் அளிக்கும் பரிசிலை நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன். நீ மகிழ்ச்சியோடு கொடுத்தால் சிறிய குன்றிமணி அளவே உள்ள பொருளாயினும் அதை நான் ஏற்றுக் கொள்வேன். கூரிய வேலையுடைய குமணனே, அவ்வாறு நீ மகிழ்ச்சியோடு அளிப்பதை வேண்டுகிறேன்.” என்று கூறுகிறார். வறுமையில் இருந்த பொழுதும், அன்போடு அளிக்கப்படும் பரிசிலையே விரும்புவதாகக் கூறித் தன்னுடைய தன்மான உணர்வையும், பெருமிதமுடைய மனப்பான்மையையும் அப்பாடல் மூலம் பெருஞ்சித்திரனார் நன்கு வெளிப்படுத்துகிறார்.

அடுத்த பாடலில் (புறம் - 160), பெருஞ்சித்திரனார், குமணனது வண்மையையும் தனது சூழ்நிலையையும் இன்னும் விளக்கமாகக் கூறுகிறார். ”அச்சம் பொருந்திய ஞாயிற்றின் ஒளிக் கதிர்களால் (தின்னப்பட்ட ) சுட்டெரிக்கப்பட்ட காய்ந்த புல்லையுடைய காடுகள் தளிர்ப்ப, ’கல்’ என்னும் ஒலியுடன் நடுக்கதைத் தரும் ஒசையையுடைய இடியுடன் மழை பொழிந்தது போல், பசியால் தின்னப்பட்ட தளர்ந்த வியர்வையுடைய உடல், சோறு உட்செல்லுவதை அறியாததால் வாடி, உள்ளடங்கிய வரிகளுடைய குடல் நிரம்புமாறு குளிர்ந்ததும் தாளிப்பு உடையதுமான, வளமை மிகுந்த தசையும் நெய்யும் உடைய உணவைத் திங்களைச் சூழ்ந்த விண்மீன்கள் போன்ற பொன்னால் செய்யப்பட்ட சிறிய பாத்திரங்களைச் சூழ வைத்து, குமணன் பாணர்களை உண்ணச் செய்பவன். அவன் பாணர்களின் சுற்றம் கேடின்றி வாழ்க என்று வாழ்த்திப் பெறுதற்கரிய அணிகலன்களை எளிதில் அளித்து, நண்பர்களைவிட அதிகமாக அவர்களிடம் நட்பு கொள்பவன். அவன் மது நிறைந்த தெருக்களுடைய முதிரமலைக்குத் தலைவன். அங்கே சென்றால். பெருமளவில் பரிசுகள் அளிப்பான் என்று கூறுபவர் கூற, என் உள்ளம் என்னைத் துரத்த, நான் மிகவும் விரைந்து வந்தேன்.” என்று குமணன் அன்போடு இரவலர்களை வரவேற்று உணவளித்துப் பரிசில் வழங்குவதைப் பாராட்டுகிறார். அடுத்து, “எனது இல்லத்தில் உணவு இல்லாததால், என் இல்லத்தை வெறுத்து, இல்லத்தை மறந்து திரிந்து கொண்டிருக்கும், குறைந்த அளவே முடியுள்ள என் புதல்வன், பல முறையும் பால் இல்லாத என் மனைவியின் வற்றிய முலையைச் சுவைத்துப் பால் பெறாததால், கூழும் சோறும் இல்லாத பாத்திரங்களை ஒன்றன் பின் ஒன்றாகத் திறந்து பார்த்து அழுகிறான். அதைக் கண்ட என் மனைவி, ’புலி வருகிறது’ என்று அவனை அச்சுறுத்துகிறாள்; அவன் அழுகையை நிறுத்தவில்லை; திங்களைக் காட்டி சமாதானப் படுத்த முயல்கிறாள்; ஆனால், அவன் அழுகை ஓயாததால், வருந்தி, ’உன் தந்தையை நினைத்து, அவரை வெறுத்து அழகு காட்டு’ என்று பலமுறை கூறுகிறாள். அவள் நாளெல்லாம் வருந்துகிறாள். வளமை மிகுந்த, குறையாத செல்வத்தை அதிக அளவில் எனக்கு விரைவில் கொடுத்து என்னை அனுப்புமாறு வேண்டுகிறேன்.” என்று தன் மனைவியும் புதல்வனும் உண்ண உணவின்றி பசியின் கொடுமையில் வாடுவதைப் படம் பிடித்துக் காட்டுவது போல் எடுத்துரைத்து குமணனிடம் பரிசில் வேண்டுகிறார்.

குமணன் பரிசு கொடுக்கப் போகிறான் என்பதைப் புலவர் பெருஞ்சித்திரனார் உணர்ந்தார். தான் பெறவிருக்கும் பரிசுகளைக் கண்டு அனைவரும் வியக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். பெருஞ்சித்திரனார் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேச அறியாதவராதலால், ஒளிவு மறைவு இல்லாமல், தயங்காமால் குமணனிடம் தன் வேண்டுகோளை விடுக்கிறார். “அரசே, நான் மலை போன்ற யானையின் மீது ஏறி என் ஊருக்குச் செல்ல விரும்புகிறேன். நான் யானை மீது வருவதைக் கண்டு என் மனைவி வியப்படைய வேண்டும். என் தகுதியை ஆராயாமல், உன் தகுதியை ஆராய்ந்து எனக்குப் பரிசு வழங்குக. எனக்குப் பரிசு கொடுக்காத மன்னர்கள் நான் உன்னிடம் பெறும் பரிசுகளைக் கண்டு நாணுமாறு எனக்குப் பரிசளிக்க வேண்டுகிறேன்.” என்று அவர் கூறுவதைப் புறநானூற்றுப் பாடல் 161-இல் காணலாம்.

பெருஞ்சித்திரனார் விரும்பியது போல், குமணன் அவருக்குப் பெருமளவில் பரிசுகளை வழங்கினான். பரிசுகளைப் பெற்ற புலவர் பெருஞ்சித்திரனார் தன் மனைவியைப் பார்க்கப் போகாமல் இளவெளிமானின் ஊருக்குச் சென்றார். அவருக்கு இளவெளிமான் மீது இருந்த கோபம் இன்னும் தணியவில்லை. ஆகவே, குமணன் தனக்கு அளித்த யானைகளில் ஒன்றை இளவெளிமானின் காவல் மரத்தில் கட்டி, அது அவனுக்குத் தான் அளித்த பரிசு என்று கூறிச் சென்றார். அக்காலத்து மன்னர்கள் காவல் மரத்தைப் பெரிதும் மதிப்பது மரபு. அம்மரத்தில் யானையைக் கட்டியது இளவெளிமானைப் பெருஞ்சித்திரனார் மிகவும் இழிவு படுத்தியதற்கு ஒப்பாகும். மற்றும், “இரவலர் புரவலர் நீயும் அல்லை; புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர்; இரவலர் உண்மையும் காண்இனி; இரவலர்க்கு ஈவோர் உண்மையும் காண்இனி” என்று பாடல் 162-இல் பெருஞ்சித்திரனார் இளவெளிமானுக்கு தன் உள்ளத்தில் இருந்த சினத்தை மறைக்காமல் அறிவுரை கூறுகிறார்.

பின்னர், தன் தாய், மனைவி மற்றும் சுற்றத்தார் உள்ள தன் ஊருக்கு, அவர் விரும்பியபடி, குமணன் கொடுத்த செல்வத்தைக் கொண்டு செல்கிறார். எண்ணிப் பார்த்தாலே வேதனை அளிக்கும் அளவிற்கு வறுமையில் வாடியவர், குமணன் கொடுத்த பொருளைப் பாதுகாத்து நீண்ட நாட்கள் வளமுடன் வாழ வேண்டும் என்று எண்ணவில்லை. குமணன் கொடுத்த செல்வத்தை எல்லோருடனும் தாராளாமாகப் பகிர்ந்து கொள்ளுமாறு தன் மனைவியிடம் அவர் கூறுவதாக உள்ள பாடல் (புறம் - 162) அவரது பரந்த மனப்பான்மையயும், பொருள் மீது பற்றற்ற மனப்பாங்கையும் வெள்ளிடை மலைபோல் காட்டுகிறது. அப்பாடலில், “குமணன் கொடுத்த செல்வத்தை, நீ விரும்புவர்களுக்கும் உன்னை விரும்புபவர்களுக்கும் கொடு; உன் சுற்றத்தினருள் மூத்தோர்க்குக் கொடு; உனக்குக் கடன் கொடுத்தவர்களுக்குக் கொடு; இன்னன்னவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று எண்ணாமல் என்னையும் கலந்து ஆலோசிக்காமல் அனைவருக்கும் கொடு; இதை வைத்து நாம் சிறப்பாக வாழலாம் என்று எண்ணாமல் எல்லோர்க்கும் கொடு.” என்று பெருஞ்சித்திரனார் கூறுவது அவர் வறுமைக் காலத்தில் எவ்வாறு மன உறுதியோடும் பெருமிதத்தோடும் இருந்தாரோ அதே போல் பெரும் செல்வம் கிடைத்த பொழுதும் இருந்தார் என்பதைக் காட்டுகிறது.

பெருஞ்சித்திரனாரின் பாடல்கள் அவருடைய தெளிந்த சிந்தனையையும், ஒளிவு மறைவற்ற பேச்சையும், பெருமிதத்தையும், கவிதை இயற்றும் ஆற்றலையும், ஆழ்ந்த அறிவையும் நம் கண் முன்னே நிறுத்தி நம் மனத்தில் என்றும் நீங்காத ஒரு குறும்படத்தைத் மிக ஆழமாகப் பதிவு செய்கின்றன என்றால் அது மிகையாகாது.

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்