அவ்வையாரும் அதியமானும்

முனைவர் இர.பிரபாகரன்


வ்வையார் என்ற பெயரைக் கேட்டவுடன் நம்மில் பலருக்கும், நெற்றியில் திருநீறு அணிந்து, வெள்ளைப் புடைவையை உடுத்தி, கையில் தடியோடு, நடந்து வரும் வயதான, பாட்டி போன்ற, ஒருபெண்மணியின் உருவம்தான் நினைவிற்கு வரும். அடுத்து, அவர் எழுதிய ஆத்தி சூடி என்ற நூலிலிருந்து, நாம் பள்ளியில் படித்த, “ அறம் செய விரும்பு”, ”ஆறுவது சினம்” போன்ற சில வரிகள் நினைவிற்கு வரும். ஆனால், அவ்வையார் என்ற பெயரில் பல பெண்பாற் புலவர்கள் பல காலகட்டங்களில் தமிழ் நாட்டில் வாழ்ந்ததாக அறிஞர்கள் கருதுகின்றனர். கடந்த 2300 ஆண்டுகளில் அவ்வையார் என்ற பெயரில் நான்கு அல்லது ஐந்து பெண்பாற் புலவர்கள் இருந்திருக்கிறார்கள் என்று பேராசிரியர் மு. வரதராசனார் “தமிழ் இலக்கிய வரலாறு” என்னும் நூலில் கூறுகிறார்.

சங்க காலத்தில் (கி.மு.300 - கி.பி.300) வாழ்ந்த அவ்வையார் புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை என்னும் எட்டுத்தொகை நூல்களில் 59 பாடல்களை இயற்றியவர். அடுத்து, கி. பி. எட்டாம் நூற்றண்டில் நாயன்மார்கள் காலத்தில் சிவபக்தியோடு ஒரு அவ்வையார் வாழ்ந்ததாகக் கருதப்படுகிறது. பின்னர், பன்னிரண்டாம் நூற்றாண்டில் கம்பர், ஒட்டக் கூத்தர் போன்ற புலவர்கள் வாழ்ந்த காலத்தில் அவ்வையார் என்ற ஒருவர் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி போன்ற நீதி நூல்களை இயற்றியுள்ளார். அடுத்து, ஞானக்குறள் என்ற ஒரு நூல் அவ்வையார் என்ற ஒருவரால் இயற்றப்பட்டதாகத் தெரிகிறது. இந்நூலில், உயிரின் தன்மையையும் யோகநெறியையும் பற்றிய ஆழ்ந்த கருத்துகள் காணப்படுகின்றன. விநாயகர் அகவல் என்ற பக்திச் சுவை மிகுந்த நூல் அவ்வையார் என்ற ஒருவரால் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது. இவர் ஞானக்குறள் எழுதிய அவ்வையார் அல்லாமல் வேறொருவராக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

சங்க காலத்தில் வாழ்ந்த அவ்வையார் அதியமான் நெடுமான் அஞ்சி என்னும் குறுநில மன்னனுடன் நெருங்கிய தொடர்பும் நட்பும் உடையவராக இருந்தார். அதியமான் நெடுமான் அஞ்சி சேர நாட்டில் ஒரு பகுதியை ஆண்ட குறுநில மன்னன். இவன் அதியர் குலத்தைச் சார்ந்தவன் என்றும் மழவர் என்ற ஒரு கூட்டத்திற்குத் தலைவன் என்றும் கருதப்படுகிறான். அதியமான், சங்க காலத்தில் வாழ்ந்த கடையெழு வள்ளல்களில் ஒருவன். இவன் தகடூர் என்னும் ஊரைத் தன் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தான். தற்காலத்தில் தர்மபுரி என்று அழைக்கப்படும் ஊர் சங்க காலத்தில் தகடூர் என்று அழைக்கப்பட்டது. அதியமான் கொடையிலும், வீரத்திலும், போர் செய்யும் ஆற்றலிலும் சிறந்தவன். அதியமானின் காலம் கி. பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி என்று வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.

சங்க காலத்தில், இசையோடு பாடும் ஆண்கள் பாணர் என்றும், இசையோடு பாடும் பெண்கள் பாடினிகள் என்றும், பாட்டிற்கேற்ப நாட்டியம் ஆடும் பெண்கள் விறலியர் என்றும் அழைக்கப்பட்டனர். பாணர்கள், பாடினிகள், விறலியர், மற்றும் புலவர்கள் ஆகியோர் மூவேந்தர்களையும், குறுநிலமன்னர்களையும், வள்ளல்களையும் புகழ்ந்து பாடியும், ஆடியும், பாடல்கள் இயற்றியும் பரிசு பெற்றுத் தம் வாழ்க்கையை நடத்தி வந்தனர். அவ்வையார், இசை, நாட்டியம் போன்ற கலைகளில் சிறந்து விளங்கியது மட்டுமல்லாமல் சிறப்பாகச் செய்யுள் இயற்றும் ஆற்றல் மிக்க புலவராகவும் விளங்கினார் என்பது புறநானூற்றில் அவர் இயற்றிய பாடல்களிலிருந்து தெரிய வருகிறது. அவ்வையார் புறநானூற்றில் பாடிய பாடல்களிலிருந்து அவரைப் பற்றியும், அதியமானைப் பற்றியும் பல அரிய செய்திகளையும் தெரிந்துகொள்ள முடிகிறது.

அதியமானின் கொடைப் புகழை நன்கு அறிந்த அவ்வையார், ஒரு சமயம், அதியமானிடம் பரிசு பெறுவதற்காகப் பல பாணர்களோடும் விறலியர்களோடும் சேர்ந்து அதியமானைக் காணச் சென்றார். அவ்வையாரோடு சென்ற அனைவரும் அதியமானிடம் பரிசு பெற்றபின் விடைபெற்றுச் சென்றனர். அவ்வையாரின் புலமையையும் திறமையையும் கேள்விப்பட்ட அதியமான், அவரைத் தன்னுடன் சிலகாலம் தங்க வைக்க வேண்டும் என்று விரும்பினான். அவருக்குப் பரிசு அளித்தால் அவர் தன் அரண்மனையைவிட்டுச் சென்றுவிடுவார் என்று எண்ணி அவ்வையாருக்குப் பரிசளிக்காமலும் தன்னை காண்பதற்கு அவருக்கு வாய்ப்பு அளிக்காமலும் அதியமான் காலம் கடத்தினான். அதியமான் பரிசளிக்காமல் இருப்பது, தன்னைக் காணாது இருப்பது போன்ற செயல்களின் உள்நோக்கம் அவ்வையாருக்குப் புரியவில்லை. ஆகவே, அவர் தன்னை அதியமான் அவமதிப்பதாக எண்ணி, அதியமானின் அரண்மனையிலிருந்து கோபித்துக்கொண்டு வெளியேறினார். அதை அறிந்த அதியமான், அவ்வையாருக்கு மிகுந்த அளவில் பரிசளித்துத் தன் அரசவைப் புலவராக நீண்டகாலம் தன்னுடனேயே இருக்கச்செய்தான் (புறநானூறு - 206).

அவ்வையார் அதியமானோடு தங்கியிருந்தபொழுது, ஒருநாள் அதியமான் வேட்டையாடச் சென்றான். சென்றவிடத்தில், ஒருமலை உச்சியில் நெல்லிமரம் ஒன்று இருந்ததது. அந்த நெல்லிமரத்தின் கனியை உண்பவர்கள் நீண்ட காலம் வாழ்வார்கள் என்ற நம்பிக்கை நிலவி இருந்தது. ஆனால், அந்த மரத்தில் ஒரே ஒருநெல்லிக்கனிதான் இருந்தது. அதியமான் அந்த அரிய நெல்லிக்கனியைப் பறித்து, அதைத் தான் உண்ணாமல் அவ்வையார்க்கு அளித்து அவரை உண்ணவைத்தான். அந்நெல்லிக்கனியின் அருமை தெரிந்திருந்தும், அதைப் பற்றித் தன்னிடம் எதுவும் கூறாமல், அக்கனியைத் தான் உண்ணாமல் தனக்கு அதியமான் அளித்ததைப் பாராட்டி, அவ்வையார் ”பால் போன்ற பிறைநிலவு அழகு செய்யும் தலையையும், நீலமணி போன்ற கறையுள்ள கழுத்தையும் உடைய சிவன் போல் நீ நிலைபெற்று வாழ்க!” என்று அதியமானை வாழ்த்தினார். (புறநானூறு - 91)

அவ்வையார், அதியமானின் வலிமை, போர் செய்யும் ஆற்றல், படைவலிமை, கொடைப் புகழ், ஆகியவற்றை மிகவும் புகழ்ந்து பாடியுள்ளார்.

  • ஒரு நாளில் எட்டுத் தேர்கள் செய்யும் தச்சன் ஒருவன் ஒரு மாதம் காலம் முயன்று வன்மையாகச் செய்த தேர்க்காலை ஒத்த வலிமையுடையவன் என்று அவன் வலிமையைப் புகழ்கிறார். (புறநானூறு - 87)
     

  • ஊர்ப் பொதுவிடத்தில் தொங்கும் பறையில் காற்று மோதுவதால் உண்டாகும் ஒலியைக் கேட்டு அது போர்ப்பறை என்று துள்ளி எழுபவன் அதியமான் என்று அவன் எப்பொழுதும் போருக்குத் தயாராக இருப்பவன் என்று கூறுகிறார். (புறநானூறு - 89)
     

  • ஒரு சமயம், பகைவர்கள் தன்னோடு போர் புரியக் கருதுகின்றனர் என்று அதியமானுக்குத் தெரிய வந்தது. போரின் விளைவுகளை அவன் சிந்தித்துக் கொண்டிருக்கும் பொழுது, அவ்வையார், “புலி சினந்தால் மான்கள் உயிர் தப்ப முடியுமா? ஞாயிறு சினந்தால் இருளும் உண்டோ? மிகுந்த பாரத்தைப் பெருமிதத்தோடு இழுத்துச் செல்லும் காளை போக முடியாத வழியும் உண்டோ? அது போல், நீ களம் புகுந்தால் உன்னை எதிர்த்துப் போரிடக் கூடிய பகைவரும் உளரோ?” என்று அவனைப் புகழ்கிறார். (புறநானூறு - 90)
     

  • ”அதியமானிடம் பரிசு பெற விரும்புபவர்கள் ஒரு நாள் அல்ல, இருநாட்கள் அல்ல, பல நாட்கள் தொடர்ந்து பலரோடு அவனிடம் சென்றாலும் அவன் அவர்களை முதல் நாள் போலவே மன மகிழ்ச்சியோடும் முக மலர்ச்சியோடும் வரவேற்றுப் பரிசளிப்பான்” என்று அதியமானின் வரையாது கொடுக்கும் வள்ளல் தன்மையை அவ்வையார் பாராட்டுகிறார். (புறநானூறு - 101)

அவ்வையார் அதியமானின் அரசவையில் புலவராக இருந்தது மட்டுமல்லாமல் அவனுக்குத் தூதுவராகவும் இருந்தார். பல சமயங்களில், பகைமன்னர்களிடம் சென்று அதியமானின் வலிமையையும், அவனது படைத் திறத்தையும் ஏடுத்துக் கூறி போரைத் தடுக்க முயற்சி செய்தார். ஒருமுறை, அதியமான் அஞ்சியோடு போரிடுவதற்கு அவனுடைய பகைவர்கள் முயற்சி செய்வதாக அவ்வையார் கேள்விப்பட்டார். அதைக் கேட்ட அவ்வையார், ”அதியமான் ஓங்கிய வலிமையும் ஒளிவிட்டு விளங்கும் நீண்ட வேலையுமுடைய வீரர்களுக்குத் தலைவன். சுடர்விடும் அணிகலன்களை அணிந்த அழகிய அகன்ற மார்பும் போர்க்கள வெற்றி விழாக்களில் மேம்பட்ட நல்ல போர்முரசு போன்ற தோளையுமுடைய என் அரசனாகிய அவனைக் காண்பதற்கு முன்னே நீங்கள் எவராய் இருப்பினும் உங்கள் படைகளைக்கொண்டு அவனை எதிர்த்துப் போரிடலாம் என்று எண்ணுவதைத் தவிருங்கள்” என்று கூறிப் போரைத் தடுத்து நிறுத்த முயற்சி செய்தார் (புறநானூறு - 88).

தொண்டை நாட்டை ஆண்ட தொண்டைமான் அதியமான் மீது பகை கொண்டான். தன்னிடத்துப் படைவலிமை அதிகமாக இருப்பதாக எண்ணி மிகவும் ஆணவத்தோடு இருந்தான். தொண்டைமானின் செருக்கை அறிந்த அதியமான், தன் படை வலிமையையும் தொண்டைமான் தோல்வி அடையப்போவது உறுதி என்பதையும் அவனுக்கு அறிவுறுத்துமாறு அவ்வையாரைத் தன் தூதுவராகத் தொண்டைமானிடம் அனுப்பினான். அவ்வையார் தொண்டைமானைக் காணச் சென்றார். தன் படைவலிமையை எண்ணி மிகுந்த பெருமையோடிருந்த தொண்டைமான், அவ்வையாரைத் தன் படைக்கலக் கொட்டிலுக்கு அழைத்துச் சென்றான். தன் படைக்கருவிகளைப் பெருமையோடு அவருக்குக் காண்பித்தான். அவன் கருத்தை அறிந்த அவ்வையார், தொண்டைமானின் படைக்கலங்களைப் புகழ்வது போல் இகழ்ந்தும், அதியமானின் படைக்கலங்களை இகழ்வது போல் புகழ்ந்தும் ஒரு பாடல் மூலமாக அவனை மறைமுகமாக எச்சரிக்கிறார்.

இவ்வே, பீலி அணிந்து மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்தி, நெய்அணிந்து
கடியுடை வியன்நக ரவ்வே; அவ்வே
பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து
5 கொல்துறைக் குற்றில மாதோ; என்றும்
உண்டாயின் பதம்கொடுத்து
இல்லாயின் உடன்உண்ணும்
இல்லோர் ஒக்கல் தலைவன்
அண்ணல்எம் கோமான் வைந்நுதி வேலே.
(புறநானூறு - 95)

பொருள்: உணவுப் பொருட்கள் மிகுதியாக இருந்தால் மற்றவர்களுக்கு உணவளித்துப் பிறகு தான் உண்ணும் பண்பும், குறைவாக இருந்தால் தன் உணவைப் பிறரோடு பகிர்ந்து உண்ணும் பண்புமுடைய, வறிய சுற்றத்தார்களின் தலைவனாகிய பெருமைக்குரிய என் வேந்தன் அதியமானின் கூர்மையான வேல்கள், பகைவரைக் குத்தியதால் பக்கமும் நுனியும் முறிந்து கொல்லர்களின் சிறிய உலைக்களத்தில் எந்நாளும் கிடக்கின்றன. ஆனால், உன் படைக்கருவிகளான இவை, மயில் தோகை அணிவிக்கப்பட்டு, மாலை சூட்டப்பட்டு, வலிய திரண்ட பிடிகளை உடையதாய், நெய் பூசப்பட்டு, அழகு செய்யபட்டு காவல் மிக்க பெரிய இடத்தில் உள்ளன.

தொண்டைமானின் படைக்கருவிகள் போர்க்களத்தில் பயன்படுத்தப்படாதவை போலிருக்கின்றன; ஆகவே, அவனுக்குப் போரில் அதிகப் பயிற்சியும் தேர்ச்சியும் இல்லை. ஆனால், அதியமானின் படைக்கருவிகள் அடிக்கடிப் போரில் பயன்படுத்தப்படுகின்றன; ஆகவே, அதியமான் பல போர்களில் வெற்றி பெற்றவன் என்ற பொருள் பொதிந்ததாக இப்பாடல் அமைந்துள்ளது. இப்பாடல் வஞ்சப் புகழ்ச்சி அணிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு; மற்றும், அவ்வையார் ஒரு திறமையான அரசதூதுவர் (இராஜ தந்திரி) என்பதற்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

இவ்வாறு, அவ்வையாரும் அதியமானும் நெருங்கிய நண்பர்களாகப் பலகாலம் ஒருவரோடு ஒருவர் நெருங்கிப் பழகியதாகத் தெரிகிறது. அதியமானுக்கு ஆண்மகன் பிறந்தபொழுது அவ்வையார் அவனுடன் இருந்தார் (புறநானூறு - 100). அந்த ஆண்மகன், பெண்களைக் கவரும் இளைஞனாக வளர்ந்த பிறகும் அவ்வையார் அதியமானுடன் இருந்தார் (புறநானூறு - 96). அதியமானுக்குத் துணையாக அதியமானின் மகன் ஆட்சி செய்தபொழுதும் அவர் அதியமானுடன் இருந்தார் (புறநானூறு - 102). இறுதியாக, சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை என்ற சேர மன்னனுடன் நடந்த போரில் அதியமான் தோல்வியுற்று இறந்தபொழுதும் அவ்வையார் அங்கே இருந்தார். அவன் இறந்ததைக் கண்ட அவ்வையார், மனம் கலங்கிச் செயலற்று, தாங்க முடியாத துயரத்தோடு ஒரு பாடல் இயற்றினார். “அதியமானின் மார்பைத் துளைத்த வேல் பாணர் கூட்டத்தாரது அகன்ற பாத்திரங்களைத் துளைத்து, இரப்பவர் கைகளையும் துளைத்து, புலவர்களின் நாவில் சென்று வீழ்ந்தது. அவர்களுக்கு ஆதரவாக இருந்தவன் இப்பொழுது இல்லையே! இனிப் பாடுவரும் இல்லை; பாடுவார்க்குப் பரிசளிப்பவர்களும் இல்லை.” என்று கண்களில் நீர்மல்கும் இரங்கற்பாடலால்(புறநானூறு - 235) அதியமானுக்கு இறுதி அஞ்சலி செய்தார்.

புலமையால் புகழ்பெற்ற அவ்வையாரும் வரையாது கொடுக்கும் வள்ளல் தன்மையால் புகழ்பெற்ற அதியமானும் தமிழ் இலக்கியத்தில் சிறப்பான இடத்தைப் பெற்றிருப்பது மட்டுமல்லாமல் தமிழர்களின் நெஞ்சத்திலும் என்றென்றும் நிலைத்து வாழ்வார்கள் என்பதில் ஐயமில்லை.


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்