உயிர் நட்புக்கு இலக்கணம் வகுக்கும், இலக்கியமாக விளங்கும் புறநானூற்றுப் பாடல்கள்

பேராசிரியர் இரா.மோகன்


றையூரைத் தலைநகராகக் கொண்டு சோழ நாட்டைச் செவ்வனே ஆட்சி புரிந்து வந்தவன் கோப்பெருஞ்சோழன். அவன் பாண்டிய நாட்டைச் சார்ந்த புலவர் பிசிராந்தையார் மீது காணாமலே உணர்ச்சி ஒத்த நட்புக் கொண்டவன்; பொத்தியார், கண்ணகனார், புல்லாற்றூர் எயிற்றியனார் ஆகிய சான்றோர்-களுக்கும் உயிர்த் தோழனாக விளங்கியவன்; தனது மக்களே மாறுபட்டு நின்ற போது, சான்றோர் புல்லாற்றூர் எயிற்றியனாரின் அறிவுரையினை ஏற்று, மக்கள் மீது போர் தொடுக்க இருந்த முயற்சியைக் கைவிட்டு, வடக்கிருந்து உயிர் துறப்பது என்ற முடிவெடுத்தவன்; தன் உயிர் நண்பர்கள் உடனிருக்க இடம் தந்தவன். புறநானூற்றில் கோப்பெருஞ்சோழன் பாடியனவாக மூன்று பாடல்களும் (214-216), அவனைப் பற்றி பிசிராந்தையார் (67, 191, 212), பொத்தியார் (217, 220, 221, 222. 223), புல்லாற்றூர் எயிற்றியனார் (213), கருவூர்ப் பெருஞ்சதுக்கப் பூதநாதனார் (219), கண்ணகனார் (218) ஆகிய சான்றோர்கள் பாடியனவாக பதினொரு பாடல்களும் இடம்பெற்றுள்ளன. இப் பாடல்கள் ‘நட்பு’ என்னும் விழுமியத்தின் மதிப்பினை, மாண்பினை, மேன்மையை உலகிற்குப் பறைசாற்றுவனவாக – உயர்த்திப் பிடிப்பனவாக – விளங்குகின்றன.
கோப்பெருஞ்சோழன் வடக்கிருக்கச் சென்ற போது பிசிராந்தையாரைப் போன்று அவனது பிறிதொரு உயிர்த் தோழரான பொத்தியாரும் வடக்கிருப்பது என முடிவெடுத்தார். அப்போது அவரது துணைவியார் கருவுற்றிருந்ததை அறிந்த கோப்பெருஞ்சோழன், ‘நினக்குப் புகழ்சால் புதல்வன் பிறந்த பின் வருக’ என்று பணித்தான். பொத்தியாரும் சோழனின் சொற்களுக்குக் கட்டுப்பட்டு, இல்லற வாழ்வில் இருந்து வந்தார். ஆயினும், கோப்பெருஞ்சோழன் இறந்த போதும் அவனுக்குச் சான்றோர் நடுகல் நிறுவிச் சிறப்புச் செய்த போதும் உடனிருந்து எல்லாப் பணிகளையும் மேற்கொள்ளவும் பொத்தியார் தவறவில்லை. சில நாட்களுக்குப் பின் பொத்தியாருக்கு மகன் ஒருவன் பிறந்தான். ‘எப்பொழுது தன் மனைவி கருவுயிர்ப்பது? எப்பொழுது நாம் கோப்பெருஞ்சோழனுடன் வடக்கிருப்பது?’ என்ற ஒரே எண்ணத்திலேயே அல்லும் பகலும் இருந்து கொண்டிருந்த பொத்தியாரின் மனக்கவலை நீங்கியது. வடக்கிருக்க முற்படுவோர் செய்யும் முன்னேற்பாடுகளைச் செய்துவிட்டு ஒரு நாள் பொத்தியார், கோப்பெருஞ்சோழன் நடுகல்லாய் இருக்கும் இடத்திற்குச் சென்றார். நடுகல்லில் சோழனது பெயரும் பீடும் எழுதப் பெற்று, மயிற்பீலி சூட்டப்பட்டிருப்பதைக் கண்டு வணங்கினார். அவர் நெஞ்சில் சோழனது பெரும்புகழ், பேரன்பு, செங்கோன்மை, பேரறிவு முதலான அரும்பெரும் பண்புகள் பலவும் நினைவுக்கு வந்தன. அவருக்கு ஆற்றாமை மீதூரக் கண்களில் கண்ணீர் பெருகிற்று. அவனது உயிரைக் கவர்ந்து சென்ற கொடிய கூற்றுவனை நினைந்தார். நெஞ்சில் சினமும் பிறந்தது. தம்மைச் சூழ நின்று கொண்டிருந்த சான்றோரை நோக்கினார். ‘கோப்பெருஞ்சோழன் தமிழ் கூறும் நல்லுலகம் பெருந்துயர் கொள்ளுமாறு மண்ணுலக வாழ்வினை நீத்து, புகழ் மாலையினைச் சூடி இப்போது நடுகல்லாய் விளங்குகின்றான். அவனை இவ்வுலகினின்றும் கவர்ந்து சென்ற கொடிய கூற்றுவனை நாம் ஒன்று கூடி வையலாம், வாருங்கள்!’ என்று அறைகூவி அழைத்தார். அந்த அழைப்பு அவரது நாவினின்றும் ஓர் உருக்கமான கையறுநிலைப் பாடலாய் வெளிவந்தது. அப்பாடல் வருமாறு:

“பாடுநர்க்கு ஈத்த பல்புக ழன்னே;
ஆடுநர்க்கு ஈத்த பேரன் பினனே;
அறவோர் புகழ்ந்த ஆய்கோ லன்னே;
திறவோர் புகழ்ந்த திண்ணன் பினனே;
மகளிர் சாயல்; மைந்தாக்கு மைந்து;
துகளறு கேள்வி உயர்ந்தோர் புக்கில்;
அனையன் என்னாது அத்தக் கோனை
நினையாக் கூற்றம் இன்னுயிர் உய்த்தன்று;
பைதல் ஒக்கல் தழீஇ அதனை
வைகம் வம்மோ; வாய்மொழிப் புலவீர்!
நனந்தலை உலகம் அரந்தை தூங்கத்
கெடுவில் நல்லிசை சூடி
நடுகல் ஆயினன் புரவலன் எனவே”
(221)

“பாடி வரும் இரவலர்களுக்கு வரையாது வழங்கிப் புகழ் பல கொண்டவன்; ஆடி வரும் கூத்தர்க்கும் விறவிலர்க்கும் பொருள் பல நல்கும் மிகுந்த அன்பினை உடையவன்; அறவோரால் புகழப்பட்ட அற நூல்களுக்கு ஏற்ப ஆராய்ந்து நடத்தும் செங்கோலினைக் கொண்டவன்; சான்றோர் போற்றிப் புகழ்ந்த திண்ணிய நட்பினை உடையவன்; மகளிரிடத்து மென்மையானவன்; வலியோரிடத்து மிக்க வலிமையை உடையவன்; குற்றமற்ற, கேள்வி அறிவு படைத்த சான்றோர்களுக்குப் புகலிடம் ஆனவன்; அத்தகைய உயரிய பண்புகள் எல்லாம் உடையவன் எனக் கருதாமல், சிந்திக்கும் திறனற்ற கூற்றுவன், சோழனின் உயிரைக் கவர்ந்து கொண்டு சென்றான்; ‘அகன்ற இடத்தை உடைய இந்த உலகம் துன்பம் அடையுமாறு, கேடில்லாத நல்ல புகழ் மாலையைச் சூடி, எம்மைப் பாதுகாத்துவந்தவன் நடுகல் ஆகிவிட்டான்’ என்று வருந்தும் நம் சுற்றத்தாரோடு சேர்த்து, அக் கூற்றுவனை வைவோம், எப்போதும் வாய்மையையே பேசும் புலவர்களே வாருங்கள்!” என்பது இப்பாடலின் தெளிவுரை.

கோப்பெருஞ்சோழனைப் பற்றிய சாகா வரம் பெற்ற இப் புறநானூற்றுப் பாடல்களை அலசி ஆராயும் போது புலனாகும் சில உண்மைகள் வருமாறு:

1. தன் ஆட்சியில் இல்லாத வேற்று நாட்டில் வாழும் ஒரு சான்றோரின் (பாண்டிய நாட்டைச் சர்ந்த பிசிராந்தையாரின்) நெஞ்சில் உறையப் பெற்ற, மேம்பட்ட புகழுக்குச் சொந்தக்காரனாக விளங்கியவன் கோப்பெருஞ்சோழன்:

‘ … தன்கோல் இயங்காத் தேயத்து உறையும்
சான்றோன் நெஞ்சுறப் பெற்ற தொன்றுஇசை
அன்னோன்’
(217)

2. உறையூரில் குறையற்ற நட்பினை உடைய பொத்தி என்னும் புலவரொடு கூடி, நாள்தோறும் உண்மையான பெருமகிழ்வினைக் கொண்டு வாழ்வாங்கு வாழ்ந்து வந்தவன் கோப்பெருஞ்சோழன்.

‘ கோழி யோனே; கோப்பெருஞ் சோழன்,
பொத்தில் நண்பின் பொத்தியொடு கெழீஇ,
வாயார் பெருநகை வைகலும் நக்கே.’
(212)

3. ‘பிசிரோன் என்ப என் உயிர் ஓம்புநனே’ (உயிரின் பாதுகாவலன்: புறநானூறு, 215) என்னும் கோப்பெருஞ்சோழனின் கூற்று உயிர் நட்பு என்பதன் அரிய விளக்கமாக அமைந்தது ஆகும்.

4. பொத்தியாரின் மனைவி நிழலைக் காட்டிலும் நீங்காமல் அவருடன் உறையும் உயர்பண்பு கொண்டவள் (‘நிழலினும் போகாநின் வெய்யோள்’: புறநானூறு, 222); அவர் பெற்றெடுத்ததோ ‘புகழ்சால் புதல்வனை’ (புறநானூறு, 222). புத்தர் பெருமானைப் போல் இருவரையும் துறந்து சென்று, கோப்பெருஞ்சோழனின் நடுகல்லினைக் கண்டு, ‘யான் அமரும் இடம் எது? சொல்வாயாக!’ என்று கேட்கிறார் பொத்தியார்; கல்லாகியும் இடம் கொடுத்த கோப்பெருஞ்சோழனை வடக்கிருந்த பொத்தியார், ‘நிலைபெறு நடுகல் ஆகியக் கண்ணும், இடம் கொடுத்து அளிப்ப மன்ற உடம்பொடு, இன்னுயிர் விரும்பும் கிழமைத், தொன்னட்பு உடையார் தம்முழைச் செயினே’ (‘நிலைபெறும் நடுகல் ஆகிய போதும் உடலும் உயிரும் ஒத்த இனிய பழைய நட்பினர் தம்மைச் சேர்ந்தவர்களுக்குத் தக்க இடம் கொடுத்து உதவுவர் உறுதியாக என்பதை நிலைநாட்டிவிட்டாய்!’: புறநானூறு, 223) எனப் புகழாரம் சூட்டுகின்றார். “தொன்னட்பு – பழமை; திருக்குறள் பழமைக்குச் சீரிய சான்று இது. ‘உடம்பொடு இன்னுயிர்’ என்னும் உவமை அருமை வாய்ந்தது” (புறநானூறு: மக்கள் பதிப்பு, ப.362) என்பது இப் புறநானூற்றுப் பாடலுக்கு எழுதிய உரை விளக்கத்தில் மூதறிஞர் இரா.இளங்குமரனார் வரைந்துள்ள சிறப்புக் குறிப்பு ஆகும்.

5. ஓர் ஒப்புநோக்கு: கவியரசர் கண்ணதாசனைக் குறித்து எழுதிய தமது உருக்கமான கையறுநிலைப் பாடலினைக் காவியக் கவிஞர் வாலி இப்படி முடித்திருப்பார்:

“என்ன சொல்லி என்ன?
எழுதப் படிக்கத் தெரியாத
எத்தனையோ பேர்களில் –
எமனும் ஒருவன்.

ஒரு கவிதைப் புத்தகத்தைக்
கிழித்துப் போட்டு விட்டான்!”
(பொய்க்கால் குதிரைகள், ப.152).

6. ‘காலனைப் பழித்தல்’ என்பது கையறுநிலைப் பாடல்களில் வழி-வழியாக இடம்பெற்று வரும் ஓர் இன்றியமையாத கருத்தலகு (Thematic Unit) என்பதை இதனால் உணர முடிகின்றது. உலக இலக்கியங்களின் பக்கங்களை எத்தனை முறை புரட்டிப் பார்த்தாலும், உயிர் நட்புக்கு இலக்கணமாகவும் இலக்கியமாகவும் ஒருங்கே விளங்கும் இப் புறநானூற்றுப் பாடல்களுக்கு இணையான பதிவுகளைக் காண்பது அரிதினும் அரிதே எனலாம்.
 


'தமிழாகரர்' முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.

 

 

 

 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்