மு.வ. மந்திரம்

பேராசிரியர் இரா.மோகன்


பேராசிரியர் மு.வரதராசனாரின் நினைவு நாள்: 10.10.2018

ருபதாம் நூற்றாண்டு கண்ட தமிழ்ச் சான்றோர் வரிசையில் மு.வரதரசானார் (1912-1974) தனிச்சிறப்புக்கு உரியவர் ஆவார். பேராசிரியர் மு.வ.வின் வாழ்க்கை பல வகையான – படிப்படியான – பரிணாமங்களும் பரிமாணங்களும் உடையது. தாசில்தார் அலுவலக எழுத்தராகத் தொடங்கிய அவரது வாழ்க்கை, பள்ளி ஆசிரியர், கல்லூரிப் பேராசிரியர், பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர், துணைவேந்தர் எனப் படிப்படியே உயர்ந்தது. மு.வ.வின் ஆளுமையில் தமிழ்ப் பேராசிரியர், குழந்தை எழுத்தாளர், சிறுகதை ஆசிரியர், புதின ஆசிரியர், நாடக ஆசிரியர், மொழியியல் அறிஞர், கட்டுரை ஆசிரியர், கடித இலக்கியப் படைப்பாளி, வாழ்க்கை வரலாற்று ஆசிரியர், பயண இலக்கியப் படைப்பாளி என்றாற் போல் பல்வேறு பரிமாணங்கள் படைத்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, மு.வ. தமிழக மக்களின் குறிப்பாக, இளைய தலைமுறையினரின் உள்ளங்களில் கொலு வீற்றிருப்பது சான்றாண்மை மிக்க ஓர் ஆளுமையாளராகவே எனலாம்.

மு.வ. மந்திரம்

இன்றைய இன்றைய தலைமுறை இளைத்த தலைமுறையாக இல்லாமல், கவியரசர் பாரதியார் கனவு கண்ட ஒளி படைத்த இளைய பாரதமாக உலா வருவதற்குப் பேராசிரியர் மு.வ. பரிந்துரைக்கும் மந்திர மொழி இது:
“ஒரு நெறியையோ, ஒரு நூலையோ, சான்றோர் ஒருவரையோ பற்றிக் கொண்டு வாழ்கின்றவர்களே மனம் தடுமாறாமல் விளங்குகிறார்கள்; மற்றவர்களின் மனம் அத்தகைய பற்றுக்கோடு இல்லாமையால் தடுமாறுகிறது”.

மு.வ. போற்றும் சான்றோர்கள்

சான்றோர்களின் வாழ்க்கை வரலாறுகளில் மு.வ.வுக்கு ஆழ்ந்த நம்பிக்கையும் மிகுந்த ஈடுபாடும் உண்டு. அவர் காந்தி அண்ணலின் வாழ்வுக்கு ‘விழுமிய வாழ்வு’ எனப் புகழாரம் சூட்டுவார்; அறிஞர் பெர்னார்ட் ஷாவின் வாழ்வை ‘வியத்தகு வாழ்வு’ எனப் போற்றுவார்; கவிஞர் தாகூரின் வாழ்வைப் ‘பெருவாழ்வு’ எனச் சுட்டுவார். அவர் எழுதிய வாழ்க்கை வரலாற்று நூல்கள் நான்கு. அவையாவன:

1. காந்தி அண்ணல்
2. கவிஞர் தாகூர்
3. அறிஞர் பெர்னார்ட் ஷா
4. திரு.வி.க.

“உலக வாழ்க்கையில் உண்மையையும் அன்பையும் போற்றி வாழ்ந்த பெரியோர்களின் வரலாறுகளைக் கற்பதால் பெரும்பயன் உண்டு. கற்பவரின் வாழ்வைத் தூய்மைப்படுத்தவல்ல ஆற்றல் அவற்றிற்கு உண்டு. அத்தகைய வாழ்க்கை வரலாறுகளில் மோகனதாஸ் கரம் சந்த் காந்தியின் வரலாறு மிகச் சிறந்தது. அவர் நம் காலத்தில் வாழ்ந்தவர், நம் நாட்டில் வாழ்ந்தவர், நமக்காக வாழ்ந்தவர் என்பதே காரணம் ஆகும்” எனக் ‘காந்தி அண்ணல்’ நூலுக்கு எழுதிய முன்னுரையில் சான்றோர்களின் வரலாறுகளைக் கற்பதால் விளையும் பெரும்பயனைக் குறித்துள்ளார் மு.வ. பேராசிரியர் மு.வ.வின் பார்வையில், தம் வாழ்வைத் தூய்மைப்படுத்திக் கொள்ள விழைவோர் முதலில் கற்க வேண்டுவது காந்தி அடிகள் போன்ற சான்றோர்களின் வாழ்க்கை வரலாறுகளையே ஆகும்.

குழந்தை நெஞ்சம்


“இந்தியா உலகப் புகழ் பெறுவதற்குக் காரணம் தாஜ்மஹால் போன்ற சிறந்த கட்டடங்கள் மட்டும் அல்ல; இமயமலையும் கங்கையாறும் சென்னைக் கடற்கரையும் போன்ற இயற்கைப் பெருமைகள் மட்டும் அல்ல; பல நூற்றாண்டுகளாக இந்த மண்ணில் பிறந்த வளர்ந்து புகழொளி பரப்பி வரும் பெருமக்களே பெரிய காரணம் ஆவார்கள். உண்மையை ஆராய்ந்தால், இயற்கைப் பெருமைகளும் செயற்கைச் சிறப்புகளுமான மலை, கட்டடம் முதலியவற்றை விட, அழியாப் புகழைத் தேடித் தருகின்றவர்கள் இப் பெரு-மக்களே ஆவார்கள்” எனக் ‘கவிஞர் தாகூர்’ என்னும் வாழ்க்கை வரலாற்று நூலின் தொடக்கத்தில் பேராசிரியர் மு.வ. குறித்திருக்கும் கருத்து இங்கே நினைவு கூரத்தக்கதாகும். “உயர்ந்த சான்றோர்க்குத் தம்மைப் பற்றிய உயர்வான எண்ணம் தோன்றுவதில்லை; தாமும் மற்ற மக்களைப் போன்றவர்களே என்பது அவர்களின் உள்ளம் உணரும் உண்மை. அதனால்தான் அவர்கள் பிறரிடம் எளியவராகப் பழகும் குழந்தை நெஞ்சம் பெறுகின்றார்கள்” எனச் சான்றோர்களின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய அனுபவப் பாடத்தினை உணர்த்தியுள்ளார் மு.வ. எந்நிலையிலும் குழந்தை நெஞ்சத்துடன் வாழ்ந்து வந்தால் நம்மை எந்தத் தொல்லையம் அணுகாது; துன்பமும் தாக்காது. என்றென்றும் – எப்போதும் – கவலையே இல்லாமல் மகிழ்ச்சியுடனும் மன நிறைவுடனும் வாழலாம்.

ஷாவிடம் காணப்பெற்ற அஞ்சாமை


“அறிஞர் பெர்னார்ட் ஷாவை நான் மதிப்பதற்குக் காரணம், வாழ்க்கைச் சிக்கல் எதுவாயினும் அதை மேற்போக்காகக் கண்டு மருந்திட்டுச் செல்லாமல், அதன் அடிப்படைக் காரணம் கண்டு திருத்தும் ஆற்றல் அவருடைய எழுத்துக்களில் இருத்தலே ஆகும்” என ‘அறிஞர் பெர்னார்ட் ஷா’ என்னும் வாழ்க்கை வரலாற்று நூலுக்கு எழுதிய முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார் மு.வ. ‘நோய் நாடி, நோய் முதல் நாடி, அதுதீரும் வாய் நாடி, வாய்ப்பச் செயல்’ என்னும் திருக்குறள் இங்கே ஒப்புநோக்கத்தக்கது. “நல்ல உடல், சிறந்த அறிவு, தெளிந்த நம்பிக்கை இம்மூன்றும் ஷாவின் முதுமையில் கண்டு வியக்கத்-தக்கவைகளாக இருந்தன. இவற்றோடு மற்றொரு சிறந்த பண்பும் அவரிடம் இருந்தது. வாழ்வைக் குறித்து ஒரு சிறிதும் கவலைப்படாமலும் அஞ்சாமலும் அவர் வாழ்ந்து வந்தார்” என ஷாவின் ஆளுமையில் காணப்பெற்ற நான்கு வியத்தகு பண்புகளை மு.வ. அந் நூலில் பட்டியல் இட்டுள்ளார். இவை ‘வேடிக்கை வாழ்’வாக இல்லாமல், ‘விழுமிய வாழ்வு’ வாழ விரும்புவோர் யாவரும் வளர்த்துக் கொள்ள வேண்டிய அடிப்படையான ஆளுமைப் பண்புகள் ஆகும். எது பற்றியும் கவலை கொள்ளாமல், எது வந்தாலும் வரட்டும் என வருவதை எதிர்கொண்டு அஞ்சாமல் வாழ்வதே மு.வ.வின் பார்வையில் விழுமிய வாழ்வு ஆகும்.

திரு.வி.க.வின் வாழ்க்கை உணர்த்தும் செய்தி


“திரு.வி.க. என்றால் எவரும் மறக்க முடியாத மூன்று தனிப் பண்புகள் உண்டு. அவை: தூய்மை, எளிமை, பொதுமை” என்பது மு.வ.வின் நோக்கில் ‘தமிழ்த் தென்றல்’ திரு.வி.க.வின் வாழ்க்கை உணர்த்தும் செய்தி ஆகும். “அவர்தம் தனிவாழ்க்கை திருக்குறளின் அறத்துப் பாலுக்கு ஒரு விளக்கம் எனலாம்” என்பது திரு.வி.க.வின் வாழ்க்கை பற்றிய பேராசிரியர் மு.வ.வின் மதிப்பீடு ஆகும்.

எளிமை ஓர் அறம்


பேராசிரியர் மு.வ.வின் அகராதியில் எளிமை என்பது ஓர் அறம்; உயரிய விழுமியம். எளிய வாழ்க்கை நடத்துவோர் தூய துறவிகளுக்கு நிகரானவர்கள். காந்தியடிகள், விவேகாநந்தர், டால்ஸ்டாய் முதலான பெருமக்கள் வாழ்ந்து காட்டிய விழுமிய வழி அது. “எவ்வளவு உயரப் பறந்தாலும் வானம் எட்டாததாய் நிற்பது போல், ஆடம்பரங்களில் இன்பமும் எட்டாததாய் நிற்கிறது. ‘ஆசைக்கு ஓர் அளவில்லை’ என்கிறார் தாயுமானவர். ஆனால் எளிமையோ அமைதியான புல்தரை போன்றது. அது எப்போதும் நம் எல்லைக்குள் தான் பெறமுடியும். ‘போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து’ என்ற பழமொழி எவ்வளவு பெரிய உண்மையை விளக்குகிறது!” எனக் குறிப்பிடுவார் மு.வ. ‘செல்வம் என்பது சிந்தையின் நிறைவே’ என்னும் குமரகுருபரரின் வாக்கை இவ்வகையில் நினைவுகூர்ந்து நெஞ்சாரப் போற்றுகின்றார் அவர்.

‘தேவைகளைக் குறைத்துக் கொண்டு எளிய வாழ்வு வாழ்வது என்றைக்கும் நல்லது. அதுவே முதன்மையான தவம். கவலை இல்லாமல் வாழ்வதற்கு அது ஒரு வழி. தேவையே இல்லாமல் ஒரு மனிதன் வாழ முடியாது. தேவைகளைக் குறைத்து வாழலாம்’ என நடைமுறைக்கு உகந்த முறையில் வாழ்வியல் பாடத்தை வலியுறுத்துவது மு.வ.வின் தனித்தன்மை ஆகும்.

சான்றோர் மு.வ. காட்டிய வழியில் தேவைகளைக் குறைத்துக் கொண்டு எளிய வாழ்வு வாழ்வோம்; மண்ணிலேயே விண்ணைக் காண்போம்.


பேராசிரியர் இரா.மோகன்
‘அறிவகம்’
78/1 ஆழ்வார் நகர்
நாகமலை, மதுரை – 625 019
 

 

 

 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்