பெண் இனம் போற்றும் பெருந்தலைவர் எம்.ஜி.ஆர் (தொடர் - 4)

முனைவர் செ.இராஜேஸ்வரி


எம் ஜி ஆர் நடிகைகளைத் தெரிவு செய்வதில் பின்பற்றிய கலைநுட்பமும் வாழ்வியல் அறமும்

கலையும் பண்பாடும்

எம்ஜிஆர் தன் படங்களை வெறும் நடிப்புக்காக தொழிலாக வருமானத்துக்கான வழியாக மட்டும் நினைக்கவில்லை. அவர் அறவழியில் பொருள் ஈட்ட வேண்டும் அதை மக்களுக்கு வழங்கி இன்புற வேண்டும் என்ற நோக்கம் உடையவர். அவரது வாழ்வில் அறம் பொருள் இன்பம் என்ற மூன்றும் சம விகிதத்தில் இடம்பெற்றன. ஈத்துவக்கும் இன்பம் என வள்ளுவ போற்றிய இன்பத்தை திகட்ட திகட்ட நுகர்ந்தவர் எம் ஜி ஆர். அவர் சினிமா என்பதை மக்களுக்கான கலையாக கருதினார். மக்களுக்கான சேவையாகக் கொண்டார். கலை நுட்பத்தோடும் வாழ்வியல் அறத்தையும் போற்றினார். கலையையும் பண்பாட்டையும் எம் ஜி ஆர் தன் இரு கண்களாக்க் கருதினார். எனவே தான்

நாம பாடுற பாட்டும் ஆடுற ஆட்டமும்
படிப்பினை தந்தாகணும் நாட்டுக்கு
படிப்பினை தந்தாகணும் என்றார்.

தன் படத்தில் காண்பிக்கப்படும் ஒவ்வொரு காட்சியும் பேசப்படும் ஒவ்வொரு வார்த்தையும் மக்களை அறத்தின் வழியே வழிநடத்துகின்ற வழிகாட்டிகளாக இருக்க வேண்டும் என்பது அவருடைய ஆழமான நம்பிக்கை. கலைப்படைப்பில் அறம் பேணிய உயர் கொள்கை எம் ஜி ஆரிடம் இருந்தது.

கலைக்கும் அறத்துக்கும் அடிப்படை காரண கர்த்தா பெண்களே என்பதால் இவர் படத்தில் பெண்கள் ரசிக்கக் கூடிய வகையில் மட்டுமே காட்சிகள் அமைக்கப்படும் . வசனங்கள் பேசப்படும். நடனங்கள் உருவாக்கப்படும். ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் மட்டுமே படத்தின் திரைக்கதை அமைப்பு இருக்கும். பெண்கள் கூட்டத்தை வைத்தே அவர் படத்தின் வெற்றியை கணிப்பார். பெண்கள் வந்து படத்தை பார்க்க எவ்வித இடையூறும் இருக்க கூடாது என்பதில் கவனமாக இருப்பார்.

ஆதி சமூகத்தில் பெண்கள்

தமிழ் சமூகமே மனித இனத்தின் ஆதி சமூகம் ஆகும் அதுவே இவ்வுலகில் முதலில் தோன்றிய பண்பட்ட சமூகம் ஆகும் உலகத்துக்கே பண்பாட்டை கற்றுக்கொடுத்த தமிழ்ச் சமூகம், தமிழ்ப் பண்பாடு, தமிழர் அறம் ஆகியவற்றின் மீது எம் ஜி ஆர் அளவற்ற மதிப்பு கொண்டிருந்தார். ஆதியில் தாய் வழிச் சமூகமாக இருந்து காலப்போக்கில் ஆண் முதன்மைச் சமூகமாக வளர்ந்து பரிணமித்த இச்சமூகத்தின் மூத்த உயர் குடிமக்கள் பெண்களே என்பதை ஆழமாக நம்பினார். பெண்களை மதிக்காத எந்த ஒரு சமூகமும் முன்னேற முடியாது என்பதில் ஆழமான நம்பிக்கை கொண்டிருந்த எம்ஜிஆர் தன்னுடைய பேட்டிகளிலும் படங்களிலும் நிஜவாழ்விலும் பெண்களுக்கு அதிக மரியாதை கொடுத்து வந்தார். பெண்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே தனக்கு சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் இருக்கும் என்பதை நன்கு உணர்ந்த எம்ஜிஆர் பெண்கள் ரசிக்கும் வகையில் மட்டுமே ஒவ்வொரு காட்சியையும் அமைத்தார். அவருட நடிக்கும் தாய் தங்கை ஜோடி வில்லி என ஒவ்வொருவரையும் பார்த்து பார்த்து தெரிவு செய்தார்.

எம் ஜி ஆர் படங்களில் கதாநாயகிகள்

எம் ஜி ஆர் படங்களில் காதல் காட்சிகள் ஸ்வீட்டாக இருக்கும் என்று ஸ்ரீதேவி ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார் ஆபாசம் இல்லாமல் ரசிக்கக் கூடிய வகையில் மிக அழகாக காதல் காட்சிகளை அமைப்பதில் எம்ஜிஆர் திறமையானவராக இருந்ததால் பெண்கள் அவருடைய படங்களில் காதல் காட்சிகளை ரசித்து பார்த்தனர். காதல் காட்சிகளில் நடிப்பதற்கு உரிய கதாநாயகிகளை தேர்ந்தெடுப்பதில் எம்ஜிஆர் தீவிர கவனம் செலுத்தினார். அந்தக் கதாநாயகி தன்னுடைய தோற்றத்துக்கும் நடன அசைவுகளுக்கும் ஈடு கொடுக்கக் கூடியவராக பொருத்தமானவராக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி கதாநாயகிகளை தெரிவு செய்தார்.

காதலுக்கு ஒரு முன்னுதாரணம்

எம் ஜி ஆருடன் காதல் காட்சிகளில் நடித்த ஜெயலலிதா மற்றும் சரோஜாதேவியை பார்த்தவர்கள் நம்முடைய காதலியும் மனைவியும் போல இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டனர். ஜெயலலிதாவும் சரோஜா தேவியும் எம்ஜிஆரிடம் அன்பு செலுத்துவதை போல நம் வாழ்வின் இணையர் நம்மை நேசிக்க வேண்டும் என்று விரும்பி அந்த ஜோடியை தங்களது முன்மாதிரியாக ஏற்றுக் கொண்டனர் எம்ஜிஆர் தன் ஜோடியிடம் காட்டிய அன்பும் காதலும் நேசமும் கட்டுப்பாடும் தன்னடக்கமும் மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருந்தது. அவருடைய காதல் காட்சிகளில் நடிக்க கதாநாயகிகள் தயங்கியதே இல்லை. அவர் எவ்வித வன்முறையும் ஆபாசமும் அசிங்கமும் இல்லாமல் காட்சிகளை நாசுக்காகவும் நயமாகவும் ரசிக்கத்தக்க வகையிலும் பெண்கள் கண் திறந்து பார்த்து வாய் மலர்ந்து சிரித்துப் பேசி மனம் குளிர தக்கவகையில் தன்னுடைய காதல் காட்சிகளை அமைத்து இருந்தார்.

ஆணுக்கு ஆண் ஆசைப்படும் அழகும் காதலும்


ஆணுக்கு ஆண் ஆசைப்படும் பேரழகு படைத்தவராக கருதப்பட்ட எம்ஜிஆர் காதல் காட்சிகளில் நடிக்கும்போது அவரது ரசிகர்களும் எம்ஜிஆர் தம்மையே காதலிப்பதை போல காதல்வயப்பட்டு தன்னை மறந்தனர். எடுத்துக் காட்டாக ஒரு புராண சம்பவத்தை இங்கு குறிப்பிடலாம் கண்ணனின் அழகைக் கண்டு மயங்கிய நாரதர் தானும் ஒரு பெண்ணாக மாறி கண்ணனுடன் கூடி அறுபது குழந்தைகளை பெற்றார். அந்த அறுபது குழந்தைகளின் பெயர்களே பிரபவ முதல் தொடங்கும் அறுபது வருடங்களின் பெயர்கள் ஆகும். இது புராணம் சொல்லும் கருத்தாகும். இதை போல ஒரு வேடிக்கை எம் ஜி ஆர் வாழ்க்கையில் நடந்தது. ஒருமுறை டான்ஸ் மாஸ்டர் சலீம் எம்ஜிஆருக்கு நடனம் கற்றுக் கொடுத்த போது ‘நீ நன்றாக பெண் பிள்ளை போல ஆடுகிறாய்’ என்று சலீமை எம்ஜிஆர் பாராட்டினார் அப்போது சலீம் ‘நான் மட்டும் பெண்பிள்ளையாக பிறந்திருந்தால் உங்களைத்தான் காதலித்து திருமணம் செய்து இருப்பேன். எனக்கு உங்கள் மீது அளவுகடந்த காதல் உண்டு’ என்று எம்ஜிஆரிடம் கூறினார். உடனே எம் ஜி ஆர் சிரித்தபடி அவரை அடிக்க போனாராம். இது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போன்ற ஒரு சம்பவம். நிறைய ரசிகர்கள் எம்ஜிஆரின் படத்தில் வரும் காதல் காட்சிகளை கண்டு ரசிக்கும் போது தான் ஒரு பெண்ணாக இருக்கக் கூடாதா என்று நினைத்ததாக பேட்டிகளிலும் கூட்டங்களிலும் சொல்வதைக் கேட்கலாம். இது ஒரு ரகசியமல்ல அனைவருக்கும் தெரிந்த ஒரு பொதுவான கருத்து; பொதுவான ஆசை.

கதாநாயகிகளை தெரிவு செய்வதில் வாழ்வியல் அறம்


1960களில் இந்தித் திரையுலகிலும் தமிழ் திரையுலகிலும் பெரும்பாலும் நிஜவாழ்வில் ஜோடிகளாக சேர்ந்தவர்களே திரைப்படங்களிலும் ஜோடிகளாக இணைந்து நடித்தனர். தமிழில் ஜெமினி சாவித்திரி; ஏவிஎம் ராஜன் புஷ்பலதா; எஸ் எஸ் ஆர் விஜயகுமாரி; என் எஸ் கே மதுரம்; காளி என் ரத்தினம் சி டி ராஜகாந்தம்; தங்கவேலு சரோஜா போன்றோர் நடிக்க வரும்போது தனித்தனியாக வந்தாலும் வந்த பிறகு ஜோடிகளாக வாழ்வில் இணைந்து படங்களிலும் இணைந்து நடித்து வந்தனர். இந்த ஜோடிகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. நிஜ வாழ்வில் பகிரங்கமாக இணையாத ஜோடிகளைப் பற்றி ரசிகர்களிடையே அவர்கள் ரகசியமாக ஜோடிகளாகவே வாழ்கிறார்கள் என்று வதந்திகளும் இருந்து வந்தன. இந்த வதந்திகள் அவர்களின் நடிப்பு இயற்கையானது என்று கருதுவதற்கு இடம் அளித்தது.

தமிழக ரசிகர்கள் நடிப்புக்காகக் கூட யாரோ முன்பின் தெரியாத ஒரு ஆணும் பெண்ணும் காதலிப்பதை ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே அவர்கள் சினிமாவில் வரும் ஜோடிகள் நிஜவாழ்விலும் அவர்கள் இணைந்து வாழ்வதாகவே கற்பனை செய்து கொண்டனர். நம்பினர்; பத்திரிகைகளிலும் செய்திகள் வெளிவந்தன; சில நடிகர்கள் இச்செய்திகளை அவர்களே உருவாக்கி பத்திரிகைகளுக்கு அளித்தனர்.

நடிகர்களிடம் இயற்கையான உணர்ச்சிகளை தமிழ் ரசிகர்கள் விரும்பினர். தொடர்பு இல்லாதவரோடு போலியாக நடிப்பதை அவர்கள் ஆதரிக்கவில்லை. சிவாஜி ஜெமினி படங்களில் ஜோடிகள் மாறி சகோதரர்களாக நடித்த படங்களை ரசிகர்கள் புறக்கணித்த்தால் அவை தோல்வியை தழுவின. ஜோடி சேர்தல் என்பது பண்பாடு சார்ந்த விஷ்யம் என்பதை நன்குணர்ந்த எம் ஜி ஆர் ஜோடி நடிகையை தெரிவு செய்வதில் மிகவும் கவனமாக இருந்தார். அதனால் அவரது படங்கள் வெற்றிசித்திரங்களாய் வசூலைஅள்ளீ குவித்ததுடன் மக்கள் மத்தியில் அவரது செல்வாக்கை அதிகரித்த்து. .

எம் ஜி ஆர் பின்பற்றிய தமிழ்ப் பண்பாடு

எம் ஜி ஆர் தன் படங்களில் பெண் நடிகைகளை தாயாகவும் சகோதரியாகவும் ஜோடியாகவும் ஒப்பந்தம் செய்வதில் தமிழ் பண்பாட்டை பின்பற்றினார். ரசிகர்களின் முழு ஆதரவை பெறுவதற்கு எம்ஜிஆர் வாழ்வியல் அறத்தை மதித்தார். பல படங்களில் பிரபல ஜோடியாக நடித்து விட்டு பின்பு அதே நடிகையோடு அண்ணனாக நடிப்பதில்லை. இந்த அறப்பண்பு அவருக்கு பெண் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுத்தந்தது.

படத்தில் நடிக்க தொடங்கிய காலத்தில் ஓரிரு படங்களில் ஜோடியாக நடித்து இன்னாருக்கு இன்னார் எனப் பிரபலமாகாத நடிகையை பிற்காலத்தில் சகோதரியாகவும் தாயாகவும் நடிக்க வைத்தார். ரசிகர்களின் அமோக ஆதரவு பெற்ற பிரபல ஜோடியான ஜெயலலிதா, சரோஜாதேவி, லதா போன்றோருடன் அவர் அப்பா எம்ஜிஆராக வரும்போது கூட ஜோடியாக நடித்தது கிடையாது.

சிவாஜி கணேசன் காத்தவராயன் அமரதீபம் போன்ர படங்களில் ஜோடியாக சாவித்திரியுடன் நடித்தார். பின்பு பாசமலர் படத்தில் சாவித்திரியுடன் அண்ணனாக நடித்த பின்பு அவர் சாவித்திரியை கதாநாயகியாகப் போட்டு நடித்த படங்கள் வெற்றி பெறவில்லை. இதற்கு விதிவிலக்கு திருவிளையாடல் திருவிளையாடலில் அவர்களின் தோற்றம் முற்றிலுமாக சிவன் பார்வதி போல இருந்ததனால் மக்கள் அதனை ஏற்றுக் கொண்டனர். ஆனால் சாவித்திரியை சிவாஜி கணேசனின் தங்கையாகவே ஏற்றுக்கொண்ட தமிழக ரசிகர்கள் அவரை ஜோடியாக ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை. இதுபோல பிரச்சினைகள் தனக்கு வரக்கூடாது என்பதனால் எம்ஜிஆர் முன்கூட்டியே ஒரே நடிகையை தங்கை மகள் அம்மா சகோதரி ஜோடி என பல கதாபாத்திரங்களிலும் தன்னுடன் நடிக்க வைப்பதை அவர் முற்றிலுமாகத் தவிர்த்து விட்டார்.

யாருக்கு யார் ஜோடி?


ராஜா தேசிங்கு படத்தை தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் எடுக்க முடிவாயிற்று. தமிழில் எம் ஜி ஆர் தேசிங்காகவும் தெலுங்கில் என் டி ஆர் தேசிங்காகவும் நடிப்பதென முடிவு செய்யப்பட்டது. தமிழில் எம்ஜிஆர் தேசிங்கு ராஜா என் டி ஆர் மகமத் கானாகவும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர் இவர்களுக்கு ஜோடியாக எம்ஜிஆருக்கு பத்மினியும் என்டிஆருக்கு பானுமதியும் ஒப்பந்தம் ஆயினர். அப்போது மதுரை வீரன் படத்தில் எம் ஜி ஆர் பத்மினி ஜோடி பிரபலமாயிருந்தது. இப்படத்துக்கு வசனம் எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.

ஒருநாள் என் டிஆர் பேசவேண்டிய வசனங்களை படித்துப் பார்த்த கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் ‘இந்த வசனங்களை பேச தமிழ் திரையுலகில் ஒருவர் தான் இருக்கிறார். அவர்தான் இலட்சிய நடிகர் எஸ்எஸ் இராஜேந்திரன். இந்த வசனங்களை அவருக்குக் கொடுங்கள்’ என்று கருத்து தெரிவித்தார். இந்தப் படம் மேகலா பிக்சர்ஸ் சார்பில் கருணாநிதி எம்ஜிஆர் எம் ஜி சக்கரபாணி ஆகியோரின் கூட்டு படைப்பாக உருவானது. எனவே என் எஸ் கேயின் கருத்துக்கு மதிப்பளித்து என் டிஆரை சமாதானப்படுத்தி ‘’நீங்கள் தெலுங்கு உலகில் ஜொலிக்கலாம்; என்னைப்போல முதன்மையான நடிகராக உருவாகலாம்; உங்களுக்கு நல்ல காலம் அங்கு இருக்கின்றது; என்று அவரை நம்பிக்கையூட்டி அனுப்பி வைத்த பிறகு அந்த மகமத்கான் கதாபாத்திரத்திற்கு எஸ்எஸ்ஆரை ஒப்பந்தம் செய்தனர்.

மகமத் கானுக்கு ஜோடி பானுமதி; ஆனால் அதற்கு முன்பு வெளியான ரங்கோன் ராதா படத்தில் சிவாஜிக்கு பானுமதி ஜோடியாகவும் பின்பு சிவாஜிக்கு வயதான பிறகு அவரது மகன் எஸ் எஸ் ஆருக்கு அம்மாவாகவும் நடித்திருந்தார். இதனால் இப் படத்தில் எஸ் எஸ் ஆருக்கு ஜோடியாக நடிக்க மறுத்துவிட்டார் ‘அம்மாவாக நடித்த நான் எஸ் எஸ் அவருக்கு ஜோடியாக நடிப்பதா? அது கூடாது. ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்’ என்று அவர் கூறியதால் இப்போது ஜோடி மாற்றப்பட்டது. எம்ஜிஆருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமான பத்மினியை எஸ் எஸ் ஆருக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்தனர். பானுமதியை எம்ஜிஆருக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்தனர். அந்தக் காலத்தில் ஜோடியாக நடிப்பவர் அக்காவாக தங்கையாக அம்மாவாக மகளாக நடிப்பதை மக்கள் ஏற்றுக் கொள்வது இல்லை என்பதால் நடிகர்களும் முன்வருவதில்லை. இதற்கு விதிவிலக்கு சிவாஜி கணேசன். அவர் தன் மகளாக நடித்த ஸ்ரீதேவியுடன் பின்னர் ஜோடியாகவும் நடித்து இருந்தார்

நீண்ட நாள் கழித்து வந்த அக்கா அம்மா

ரிக்க்ஷாக்காரன் படத்தில் சகுந்தலா எம்ஜிஆருக்கு அக்கா வேடத்தில் கௌரவ தோற்றத்தில் வந்திருந்தாலும் அவருக்கும் எம் ஜி ஆருக்குமான காட்சிகள் எதுவும் கிடையாது. அக்காவாக வரும் சகுந்தலா தன் தோழி பத்மினியுடன் பேசும் காட்சி மட்டுமே உண்டு. இதனால் சகுந்தலாவும் எம்ஜிஆரும் அக்கா தம்பி என்று அழைத்துப் பேசும் பாசமான காட்சிகள் எடுக்கப்படாததால் சகுந்தலாவுக்கு அக்காவாக நடிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

எம்ஜிஆர் நடித்த மருதநாட்டு இளவரசி படத்தில் அவருடன் நாடகங்களில் நடித்து வந்த ஜீ சகுந்தலா ஜோடியாக நடித்திருந்தார் ஜி சகுந்தலாவுக்கு அந்தப் படத்தில் சிறப்பான காதல் காட்சிகளோ எம் ஜி ஆரோடு நெருக்கமாக நடிக்கும் பாடல்களோ கிடையாது. ஏனென்றால் அந்தப் படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்தவர் மாதுரி தேவி. எனவே பின்னர் இதயவீணை படத்தில் அம்மாவாக நடிக்க ஜி சகுந்தலாவை ஒப்பந்தம் செய்யலாம் என மணியன் கேட்ட போது சம்மதித்தார். எம்ஜி ஆரும் ஜி சகுந்தலாவும் நடித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இந்தப் படத்திலும் அவர் சிறுவயதிலேயே அம்மா அப்பாவை விட்டு காஷ்மீருக்கு ஓடி போய் விடுவார். இருபத்தைந்து வருடங்கள் கழித்து அவர் மீண்டும் சென்னைக்கு வரும்போது இவர்களுடன் சேர்ந்து நடிக்கும் காட்சிகள் அதிகமாக இல்லை. எனவே சரஸ்வதி, பண்டரிபாய்,எம் வி ராஜம்மா போன்ற நடிகைகளுடன் நடிக்கும் போது இருந்த தாய் மகன் உறவு காட்சிகள் இந்தப் படத்தில் இல்லாததால் சகுந்தலா எம்ஜிஆருக்கு அம்மா வேடத்தில் நடித்தார் .
 



முனைவர் செ.இராஜேஸ்வரி

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்