பெண் இனம் போற்றும் பெருந்தலைவர் எம்.ஜி.ஆர் (தொடர் - 5)

முனைவர் செ.இராஜேஸ்வரி


பெண்களின் காதலுக்கும் பாசத்துக்கும் வழி காட்டிய எம் ஜி ஆர்

எம்.ஜி.ஆர் படங்களில் தனக்கான ஜோடியைத் தெரிவு செய்வது போலவே தனக்கு தங்கையாக மற்றும் அக்காவாக நடிக்கும் நடிகைகளையும் இரண்டாவது கதாநாயகியாக வந்து தன்னை ஒருதலையாகக் காதலிக்கும் நடிகையரையும் எம் ஜி ஆர் வெகு கவனமாகத் தெரிவு செய்தார். தனக்கு ஜோடியாக நடித்து பிரபலமான சரோஜாதேவி மற்றும் ஜெயலலிதா போன்ரவர்களை சகோதரியாக ஒப்பந்தம் செய்வதில்லை என்பதை ஒரு குறிக்கோளாகக் கொண்டிருந்தார்.

படங்களில் எம் ஜி ஆரின் தங்கைமார்

என் தங்கை காஞ்சித்தலைவன் படத்தில் விஜயகுமாரி, அரசிளங்குமரி படத்தில் பத்மினி ,என்கடமை படத்தில் எல் விஜயலட்சுமி, தனிப்பிறவி படத்தில் ரேவதி, எங்கள் தங்கத்தில் புஷ்பலதா இதய வீணையில் லக்ஷ்மி, நினைத்ததை முடிப்பவனில் சாரதா ஆகியோர் தங்கை வேடத்தில் நடித்திருந்தனர்.

கதாநாயகி அல்லாத நடிகைகள்

எல் விஜயலட்சுமி ஒரு பாட்டுக்கும் சில காட்சிகளுக்கு மட்டும் ஜோடியாக கொடுத்துவைத்தவள் படத்தில் நடித்திருப்பார். பாலாற்றில் தேனோடுது, இடையில் நூலாடுது, மனது போராடுது என்ற பாட்டுக்கு எம்ஜிஆருடன் நடனமாடி இருப்பார். குடியிருந்த கோயில் படத்தில் ஆடலுடன் பாடலை கேட்டு என்ற பங்கரா நடனக் காட்சியில் ஆடியிருப்பார். மற்றபடி பல ஜெய்ஷங்கர் படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்து இளைஞர்களால் இவர் ஜேம்ஸ்பாண்ட் கதாநாயகியாக அடையாளம் காணப்பட்டார். லட்சுமி குமரி கோட்டத்தில் எம்ஜிஆருக்கு ஆதரவளிக்கும் தங்கை போன்ற கதாபாத்திரத்தில் ஆனால் ஜெயலலிதாவுக்கு பொறாமை ஊட்டுவதற்காக எம்ஜிஆரின் காதலியை போல நடித்திருப்பார் இவர் அதற்கு முன்னர் வந்த குடியிருந்த கோயில் மற்றும் சங்கே முழங்கு படங்களில் எம்ஜிஆருக்கு ஜோடியாக நடித்திருப்பார். அங்கொன்றும் இங்கொன்றுமாக இவர் நடித்ததாலும் மேலும் முத்துராமன் சிவகுமார் சிவாகஜி எனப் பல நடிகர்களோடு ஒரே சமயத்தில் நடித்து வந்ததாலும் இவர் எம் ஜி ஆர் ஜோடி என அங்கீகாரம் பெறவில்லை.

ஜோடியாக மட்டுமே நடித்த நடிகைகள்


ஜெயலலிதாவோ சரோஜாதேவியும் லதாவோ எம்ஜிஆருக்கு சகோதரியாகவோ தாயாகவோ நடிக்கவில்லை. இவர்கள் மூவரும் தான் எம்ஜிஆருடன் அதிக படங்களில் தொடர்ந்து ஜோடியாக நடித்தவர்கள். ஜெயலலிதா 28 படங்களிலும் சரோஜாதேவி 26 படங்களிலும் இவற்றுக்கு அடுத்தபடியாக லதா 12 படங்களிலும் ஜோடியாக நடித்திருந்தனர். 1977இல் சரோஜாதேவி இஞ்சினியர் ஹர்ஷாவைத் திருமணம் செய்த பிறகு அவரோடு எம் ஜி ஆர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. அரச கட்டளை படத்தில் அவரை தியாகி ஆக்கி ஜெயலலிதாவை ஜோடி ஆக்கினர். எம் ஜி ஆர் மீது கொண்டிருந்த மரியாதை காரணமாக சரோஜாதேவி தன் மகனுக்கு கௌதம் ராமச்சந்திரன் என்று எம் ஜி ஆர் பெயரைச் சூட்டினார்.

தங்கையாக மாறிய காதலிகள்

எம் ஜி ஆர் படங்களில் ஒருதலையாக காதலிக்கும் பெண்களை அவர் தனக்கு வேறு காதலி இருப்பதால் அவளுக்கு தன்னால் துரோகம் செய்ய இயலாது என்பதை வலியுறுத்தி இந்தப் பெண்ணைத் தன் தங்கையாக ஏற்றுக் கொள்வதாக கூறுவார். இந்த காட்சியை கண்டு சிலர் நகைப்பதுண்டு. ஆனால் மிகத் தெளிவாக படத்தில் எந்த இடத்திலும் அந்த பெண்ணை தான் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் அவர் சொல்லி இருக்கவே மாட்டார். கதாபாத்திர வடிவமைப்பில் எம்ஜிஆர் காட்டும் அக்கறையும் கவனமும் அவர் நாடோடி மன்னன் படத்தின் கதாபாத்திர உருவாக்கம் பற்றி எழுதியிருக்கும் கட்டுரையில் விரிவாக படித்து உணரலாம். ஒரு பெண் தானாக தன் மனதிற்குள் வளர்த்துக் கொண்ட கற்பனைக்கு அவர் எந்த விதத்திலும் பொறுப்பாளி இல்லை என்றாலும் தன் மேல் கொண்டிருந்த அன்பை வெறுக்காமல் அவளை தன்னுடைய சகோதரியாக ஏற்றுக் கொள்ளும் பெருந்தன்மை எம்ஜிஆர் இருந்ததை இத்தகைய காட்சிகள் புலப்படுத்துகின்றன .

காதலித்து வாடும் இரண்டாம் கதாநாயகிகள்


கதாநாயகி எம்ஜிஆர் படங்களில் எம்ஜிஆரை ஒருதலையாக காதலிக்கும் இரண்டாம் கதாநாயகிகள் உண்டு இவர்கள் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். ஆனால் எம்ஜிஆர் காதலிக்கும் பெண் ஏழையாக இரக்க குணம் உள்ளவராக இருப்பார். சில படங்களில் அவர் முதலில் ஒரு பெண்ணை காதலித்து அவளை திருமணம் செய்து கொள்ள முடியாத சூழ்நிலையில் அல்லது அவள் இறந்துவிடும் கட்டத்தில் அவளைப் பிரிந்து விடும் சூழ்நிலையில் பின்பு வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்வதாக கதைகள் இருப்பதுண்டு. இது போன்ற படங்களில் இரண்டு கதாநாயகிகளுக்கும் இடம் உண்டு. நாடோடி படத்தில் பாரதி முதல் கதாநாயகியாக முதல் காதலியாக வந்து இறந்து விடுவாள் அன்னமிட்டகை படத்தில் அவரை ஒருதலையாகக் காதலித்தார். இது போல பறக்கும் பாவை படத்தின் படத்திலும் நான் ஏன் பிறந்தேன் படத்திலும் காஞ்சனா எம்ஜிஆர் ஒருதலையாக காதலித்தார். புதிய பூமியில் ஷீலா, பணம் படைத்தவனில் சௌகார் ஜானகி, உழைக்கும் கரங்கள் படத்தில் பவானி; உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் தாய்லாந்து நடிகை மேத்தா ஆகியோர் எம்ஜிஆரை ஒருதலையாக காதலிக்கும் காட்சிகள் இருப்பதால் அவர்களோடு பாடல் காட்சிகளும் உண்டு.

காதலில் தோல்விக்கு கலைஞனாக எம் ஜி ஆர் காட்டும் தீர்வு


எம் ஜி ஆர் படங்களில் ஒருதலைக் காதலுக்கு நல்ல புத்திமதி சொல்லி இருப்பார். காதல் நிறைவேறாத போது தற்கொலை செய்வதோ காதலித்தவரின் குடியை கெடுக்க முனைவதோ கூடாது. அவ்வாறு செய்தால் அந்தப் பெண் வில்லியாகி அவள் வாழ்க்கையை தானே அழித்து கொள்வாள். எனவே அவள் அந்த ஆணை தன் சகோதரனைப் போலக் கருதி அவனது வாழ்க்கையில் அன்பும் அக்கறையும் கொண்டவளாக மனமாற்றம் பெற வேண்டும். இவ்வாறு மனித நேயம் போற்றி ஒருவர் வாழ்வில் ஒருவர் ஏதேனும் ஒரு ஆரோக்கியமான உறவு நிலையில் தம்மை இணைத்துக்கொள்ள வேண்டும். கலைகள் மூலமாக தமிழ்ப் பண்பாடும் சமூக வாழ்க்கையும் காக்கப்பட வேண்டும் அதுவே கலைஞனாக வாழும் ஒரு தனி மனிதனின் வாழ்வியல் கடமை ஆகும்.

மறு உறவு பாராட்டுதல்


ஒவ்வொரு பெண்ணும் தான் விரும்பிய ஆணையே அடைய வேண்டும் என்று நினைத்தால் அது நடக்காது. அப்போது அந்த தோல்வி மனப்பான்மையை வெற்றி கொள்வது எவ்வாறு? ஒரு உறவு இல்லையென்றால் மறு உறவு பாராட்டி பண்பாடு கெடாமல் வாழ்க்கைப் பயணத்தை தொடர வேண்டும் என்று எம் ஜி ஆர் தன் படங்களில் பெண்ணுக்கு அறிவுரை வழங்கி கொண்டு செல்வார். உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் மேத்தாவுக்கு அவர் வழங்கும் அறிவுரை காதலில் தோற்ற அனைத்து பெண்களுக்கும் ஒரு அண்ணன் சொல்லும் அறிவுரை ஆகும். எந்த பிரச்னைக்கும் சாவு ஒரு தீர்வாகாது. வாழ்வதற்கான வழிகளை ஆராய வேண்டுமே தவிர சாவதோ கொலை செய்வதோ ஒரு ஆரோக்கியமான தீர்வு அல்ல. தற்காலப் படங்களில் பெண்கள் கொலை செய்வது அதிகரித்து வருகிறது. நடைமுறை வாழ்க்கையிலும் பெண்கள் கொலை செய்வது அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரனம் எம் ஜி ஆரை போல அறிவுரை சொல்லும் ஆட்கள் இன்று பொது வாழ்வில் கலை உலகில் இல்லை.

கலைஞனின் மற்றும் கலைப்படைப்பின் சமூகக் கடமை


காதல் தோல்வியில் பாதிக்கப்பட்டோர் தன் வீட்டார் சொல்லும் அறிவுரைகளை கேட்கமாட்டார்கள். அதே சமயம் பொது வாழ்வில் இருப்போர் கலைப் படைப்புகளை அளிப்போர் திரைப்படங்கள் நாடகங்கள் மூலமாகச் சொல்லும் அறிவுரைகளும் காட்டும் தீர்வுகளும் தனி மனித வாழ்வில் பெரும் மாற்றத்தை விளைவிக்கும். எனவே பெண்களை வாழவைக்க ஒரு தீர்வை காட்டினார். காதல் தோல்வி அடைந்த பெண்கள் கண்ணீரோடு தனிமையில் காலத்தை கடத்துவதை எம் ஜி ஆர் விரும்பவில்லை. அனைத்து அறங்களும் கூட்டு வாழ்க்கை மற்றும் குடும்பவாழ்க்கைக்கு உரியவை; வழ்வியல் அறம் எதுவும் மரணத்துக்கு வழி காட்டக் கூடாது, என்பது எம் ஜி ஆரின் கொள்கை.

இலட்சியத்துக்கும் யதார்த்தத்துக்கும் ஓர் உன்னத எடுத்துக்காட்டு

எம் ஜி ஆர் ஒரு யதார்த்தவாதி. இலட்சியங்கள் வாழ்க்கைக்கு தேவை என்றாலும் அவை வாழ்வதற்கு ஊக்குவிக்கவேண்டுமே தவிர சாவுக்கு அல்ல என்பதை உணர்ந்தவர். வாழத்தான் வழிகளை தேட வேன்டும் என்பதை அவர் தன் அனுபவத்தில் கற்றுக்கொண்டார். அதை தன் வாழ்வில் பின்பற்றினார். அவர் தன் வாழ்வில் கஷ்ட்பப்ட்ட எத்தனையோ பெண்களை சந்தித்திருக்கிறார். அவர்களுக்கு பிரச்சனை வந்த போது அறிவுரை கூறி காப்பாற்றி இருக்கிறார். இரண்டு முறை திருமண வாழ்வில் தோல்வி அடைந்த ஒரு பிரபல நடிகை அவரை சந்தித்து தான் படும் அவதியை கூறிய போது எம் ஜி ஆர் அந்த பெண்ணிடம் ‘’உனக்கு விருப்பம் இருந்தால் அரசியலுக்கு வா; கட்சி உன்னை பாதுகாக்கும் அல்லது இன்னொரு திருமணம் செய்துகொள்; பாதுகாப்பாக வாழ்வதே சரி தனியாக இருக்காதே’’ என்றார். அந்த பெண் எம் ஜி ஆர் சொன்னபடி மீண்டும் ஒரு முறை திருமணம் செய்துகொண்டு சிறப்பாக வாழ்ந்து வருகிறார். எம் ஜி ஆர் அந்த பெண்ணிடம் ‘’உன் தலை எழுத்து; தலைவிதி; உனக்கு இரண்டு திருமண வாழ்க்கையும் சரியாக அமையவில்லை’’ என்று எதிர்மறையாகப் பேசாமல். ‘’மீண்டும் முயன்று பார். இந்த உலகில் நாம் வாழப் பிறந்திருக்கிறோம்; நம்மால் முடியும்’’ என்று ஊக்கப்படுத்தி ஒரு மூத்த சகோதரனை போல தெம்பூட்டினார். அந்தப் பெண்ணுக்கு துன்பம் கொடுத்தவரை அழைத்து ‘கண்டித்து’ புத்திமதி சொல்லி அனுப்பினார். இது அவர் வேலையில்லை என்றாலும் சினிமாவை போலவே அவர் தன் நிஜ வாழ்விலும் ஒரு மூத்த அண்ணனை போலவே நடந்துகொண்டார். அதன் பிறகு அந்த நடிகைக்கு அரசியல்வாதிகளாலும் பத்திரிகையாளர்களாலும் எந்த துன்புறுத்தலுமில்லை. எம் ஜி ஆருக்கு விஷயம் தெரிந்துவிடது என்ரவுடன் அதுவரை துன்பம் கொடுத்த அனைவரும் வாலை சுருட்டிக்கொன்டு அமைதியாக இருந்தார்கள். எம் ஜி ஆர் பெண்களுக்கு பாதுகாப்பு தருவதில் எப்போதும் தயங்கியதே இல்லை. என்று அந்தப் பெண் தனது பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

ஒரு தலைக் காதலாக இருந்தாலும் இருவரும் மனம் ஒப்பி காதலித்து பிரிய நேர்ந்தாலும் பெண்கள் இந்த உலகில் பாதுகாப்பாக வாழ வழி வகுக்கும் எண்ணத்தில் ‘’வாழ்க்கை வாழ்வதற்கே; வாழு, வாழ விடு’ என்ற கருத்தாக்கங்களின் படி அவர்கள் வாழ எம் ஜி ஆர் நேரிலும் திரையிலும் வழி காட்டுகிறர்.

பிரச்சனையை தீர்க்க ஒரு முற்போக்கு சிந்தனை


எம் ஜி ஆரின் எதிர் அணியை சேர்ந்தவர்கள் எம் ஜி ஆர் படங்களில் ஒருதலைப்பட்சமாக காதலித்த பெண்கள் அடுத்த காட்சியில் அண்ணா என்று அழைக்கும் போது கேலியும் கிண்டலும் செய்ததுண்டு. ஆனால் ஒரு ஆணின் வாழ்வில் அன்றைய காலத்தில் ஒரு பெண் மனைவியாக அல்லது சகோதரியாக மட்டுமே இடம்பெற சமூகம் அனுமதித்தது. இரண்டில் ஒன்றை மட்டுமே ஒருத்தி தேர்ந்தெடுக்க வேண்டும் இன்று நண்பராக தொடர முடியும் அன்று அந்நிலை இல்லை. எனவே காலத்துக்கு ஏற்ற தீர்வை எம் ஜி ஆர் தன் படங்களில் வழங்கினார். எம் ஜி ஆர் அறிவுறுத்திய இந்த உறவு முறை மாற்றத்தை முற்போக்கு சிந்தனையாக கொள்ள வேண்டும்

விஜயகுமாரிக்கு தங்கை வேடம் மட்டுமே கொடுத்ததேன்?


எம் ஜி ஆர், எஸ் எஸ் ஆர், நடிப்பிசைப் புலவர் கே ஆர் ராமசாமி போன்றோர் திமுகவில் இருந்து கொண்டே திரைப்படங்களிலும் நடித்து வந்தனர். எஸ் எஸ் ஆர் உடன் இணைந்த விஜயகுமாரி கண்னகியாக பூம்புகார் படத்தில் சிறப்பாக நடித்திருந்தார் அவருடைய நடிப்பு பல படங்களில் சிறப்பாக பேசப்பட்டது. அப்போது படத் தயாரிப்பாளர்கள் எம்ஜிஆரின் ஜோடியாக சேர்த்து ஒரு படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று முயன்றனர். அதற்கு எம்ஜிஆர் அவர்களிடம் விஜயகுமாரியை ஜோடியாக போட்டு நடிக்க இயலாது என்று பதிலளித்து விட்டார். ‘’விஜயகுமாரியை என் தம்பி எஸ்எஸ்ஆர் ஆசையாக திருமணம் செய்திருக்கிறார், அவர்கள் இருவரும் கணவன் மனைவியாக வாழ்கிறார்கள் தம்பி மனைவியுடன் எப்படி நான் ஜோடியாக நடிப்பது?’ என்று ஒரு கேள்வியை கேட்டார் இது ஒரு வாழ்வியல் அறம் சார்ந்த கேள்வி நடிப்புக்காக இன்னொருவரின் மனைவியை தொட்டு நடிக்கக் கூடாது தன் காதலியாக பாவிக்கக் கூடாது என்ற அறத்தை பின்பற்றியவர் என்கிறார்.
 
 



முனைவர் செ.இராஜேஸ்வரி

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்