கவிஞர் சுடரின் கைவண்ணம் காட்டும் ஹைகூ கவிதைகள்

பேராசிரியர் இரா.மோகன்

மிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் முன்னைத் தலைவர் நாவரசர், முனைவர் கா.காளிமுத்துவின் நயமிகு சொற்களில் குறிப்பிடுவது என்றால், “கசங்கிப் போகிற காக்கிச் சட்டைக்குள்ளும் கசங்கிப் போகாத இதயம் ஒன்று கவிதைச் சிறகு விரிக்கிறது. அதுதான் ‘காக்கிப் பறவை’ கவிஞர் சுடர்” (அணிந்துரை, காக்கிப் பறவை, p.iii). ‘காக்கிப் பறவை’ (2003), ‘வருடும் முள்’ (2006), ‘ஒற்றை நட்சத்திரம்’ (2009), ‘அக்கினி அம்புகள்’ (2014), ‘கந்தகக் கண்கள்’ (2015) ஆகியன சுடர் முருகையாவின் படைப்புத் திறத்தினைப் பறைசாற்றும் கவிதைத் தொகுதிகள் ஆகும். ‘உன்னில் தான் எல்லாம்’ (2016) என்பது சுடர் முருகையாவின் 52 தகைசால் தன்முன்னேற்றக் கட்டுரைகளின் தொகுப்பு. ‘தமிழ் இலக்கியத்தில் மருத்துவம்’ (2013) என்னும் தலைப்பிலும் அவரது கட்டுரைத் தொகுப்பு ஒன்று வெளிவந்துள்ளது. சுடர் முருகையா தம் நூல்கள் அனைத்தையும் ‘அன்னைக்கும் மண்ணுக்கும் மொழிக்கும்’ காணிக்கையாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. “கண்ணில் படுகின்ற காட்சிகள், நெஞ்சைக் கருக்கிய நிகழ்வுகள் எழுத வைத்தன… பேச வைத்தன… வெடிக்க வைத்தன” என ஒப்புதல் வாக்குமூலம் வழங்கும் கவிஞர் சுடர், “இந்நூல் (‘வருடும் முள்’) வருடவும் செய்யும், சில சமயம் குத்தவும் செய்யும்” என மொழிவது நோக்கத்தக்கது. எனினும், முரண் சுவை மிளிரத் தம் தொகுப்பிற்கு ‘வருடும் முள்’ எனப் பெயர் சூட்டி இருப்பது, கவிஞரின் உடன்பாட்டுச் சிந்தனையைப் புலப்படுத்துவதாகும். இனி, ஹைகூ கவிதைகள் வழிநின்று சுடர் முருகையாவின் படைப்புத் திறத்தினைச் சுருங்கக் காணலாம்.

மனித மனம் ஒரு குரங்கு என்பதற்குக் கவிஞர் சுடர் காட்டும் காரணம் புதுவது; இதுவரை யாரும் சொல்லாதது.

“மாற்றான் மனைவியிடம் நாட்டம்
மனைவி மேல் சந்தேகம்
மனம் ஒரு குரங்கு…”
(ப.92)

உடன்பிறந்தவளாக நினைக்க வேண்டிய மாற்றான் மனைவியிடம் நாட்டமும், கட்டிய மனைவி மீது சந்தேகமும் கொள்ளும் மனிதனின் மனம் ஓர் இடத்தில் நிலைத்து நில்லாமல் மரத்தின் கிளைக்குக் கிளை தாவும் குரங்கு என்பது பொருத்தம் தானே?

‘பணத்தைக் கொண்டு நாயை விலைக்கு வாங்கி விடலாம்; ஆனால் அன்பு இருந்தால் தான் அதன் வாலை ஆட்டச் செய்ய முடியும்’ என்பது பொருள் பொதிந்த ஒரு பழமொழி. அது போல், பணத்தால் ஒருவன் விலை உயர்ந்த படுக்கையை – மெத்தையை – வாங்கி விடலாம்; ஆனால், கோடி கோடியாகக் கொட்டிக் கொடுத்தாலும் அவனால் நிம்மதியை, தூக்கத்தை வாங்க முடியாது.

“பணத்தால் சுகமான
படுக்கை வாங்கினான்
இல்லை உறக்கம்…”
(ப.81)

என்னும் கவிஞர் சுடரின் ஹைகூ இவ்வகையில் கருதத்தக்கது. ‘மெத்தை வாங்கினேன், தூக்கத்த வாங்கல’ (ஆயிரம் பாடல்கள்,ப.202) என்னும் கவிப்பேரரசு வைரமுத்துவின் திரை இசைப் பாடல் இங்கே நினைவுகூரத் தக்கது.

வறுமையில் வாடினாலும் செம்மையாக வாழ்வதே உண்மைக் கவிஞனின் தனிக்குணம். காலமெல்லாம் வறுமை படை கொண்டு வந்து தாக்கிய போதும், ‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய் – எங்கள், இறைவா, இறைவா, இறைவா!’ என்று நம்பிக்கையோடு முழங்கியவர் கவியரசர் பாரதியார்.

“இருப்பான் இருளில்
பகலைப் பாடுவான்
கவிஞன்…”
(ப.68)

என்னும் சுடரின் ஹைகூ, ஓர் உண்மைக் கவிஞனின் உள்ளத்தை – உணர்வை – உள்ளது உள்ளபடி காட்டுவது. இங்கே இருளும் பகலும் முறையே துன்பத்தையும் நம்பிக்கை ஒளியையும் சுட்டும் வகையில் குறிப்பாகக் கையாளப் பெற்றிருப்பது நோக்கத்-தக்கது.

ஒருவன் நாட்டில் எந்த வேலையில் சேர வேண்டும் என்றாலும், அதற்கென்று சில அடிப்படையான தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும் என்பது நியதி. ஆனால் எந்தத் தகுதியும் இல்லாமல் சேரக் கூடிய ஒரு துறை உண்டு என்றால், அது அரசியல் தான்! ‘நம் நாட்டில் அரசியலில் மட்டும் தான் அரசியல் இல்லை’ என்று வேடிக்கையாகக் கூறுவர் அறிஞர்.

“அரசியலுக்கு
நடிப்பு ஒன்றே போதும்
படிப்பு தேவை இல்லை…”
(ப.18)

என்னும் கவிஞர் சுடரின் ஹைகூ, இன்றைய அரசியல் நிலவரத்தை – அரசியல்வாதிகளின் இயல்பை – தோலுரித்துக் காட்டுகின்றது.

“தமிழினைப் போல் இனிமைமொழி சாற்றுதற்கு இல்லை, இந்நாள்
தமிழரைப் போல் மொழிக் கொலையில் தலைசிறந்தோர் எவருளரே?”


என நிலை கெட்ட தமிழனை நினைத்து நெஞ்சு பொறுக்காமல் பாடுவார் ‘தமிழ்த் தென்றல்’ திரு.வி.கலியாணசுந்தரனார். உலக அரங்கில் பிற மொழிகள் எல்லாம் துறைதொறும் துறைதொறும் துடித்தெழுந்து வளர்ந்து கொண்டிருக்கின்றன; தமிழனோ கும்பகருணனைப் போல் நெடுந்துயிலில் மூழ்கிக் கிடக்கின்றான்; அவனது புறக்கணிப்பால், போக்கால் தமிழ் மொழி துக்கத்தில் வீழ்ந்து கிடக்கின்றது. இந்த அவல நிலையை,

“துள்ளும் பிற மொழிகள்
தூக்கத்தில் தமிழன்…
துக்கத்தில் தமிழ்”
(ப.57)

என்னும் ஹைகூ கவிதையில் உணர்ச்சி பொங்கப் பதிவு செய்துள்ளார் கவிஞர் சுடர்.

சங்கச் சன்றோர் தொடங்கி சம காலக் கவிஞர் வரை சூரியனையும் சந்திரனையும் தத்தம் நோக்கிற்கும் போக்கிற்கும் ஏற்பப் பாடாதோர் இல்லை. ஹைகூ கவிஞர்களும் இதற்கு விதிவிலக்கானவர் அல்லர். படிம அழகும் முருகியல் உணர்வும் மிளிரக் கவிஞர் சுடர் சூரியனையும் பிறை நிலவையும் குறித்துப் படைத்துள்ள இரு அழகிய ஹைகூ கவிதைகள் வருமாறு:

“வானத்து நெற்றியில்
விடியல் இட்ட பொட்டு
சூரியன்”
(ப.51)

“படகோட்டி இன்றி
நகரும் அதிசயம்
பிறை நிலவு…?”
(ப.19)

“ஹைகூவைச் சுவைப்பது என்பதே தனிக்கலை. ஹைகூ உணர்த்தும் பொருளைக் கண்முன் நிறுத்திக் கொண்டு படிக்க வேண்டும்” (தி.லீலாவதி, இதுதான் ஹைகூ. பக்.54-55) என்பர் அறிஞர்.

மனிதன் தனியாக இருக்கும் போது எப்போதும் அமைதியாகவே இருப்பான்; ஒழுங்காகவே நடந்து கொள்வான். கூட்டமாகச் சேரும் போது தான், மனிதர்களுக்கு இடையே அடிதடியும் ஆர்ப்பாட்டமும், கூச்சலும் குழப்பமும், சண்டையும் சச்சரவும், நெரிசலும் விரிசலும் ஏற்பட்டு அமைதிக்கும் மகிழ்ச்சிக்கும் கேடு விளையும். இவ் வகையில் இயற்கையிடம் இருந்து – குறிப்பாக, பறவைகள் மற்றும் விலங்குகளின் வாழ்வில் இருந்து – மனித குலம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் எவ்வளவோ உண்டு. இவ் வகையில் கருத்தில் கொள்ளத்தக்க கவிஞர் சுடரின் ஹைகூ:

“அவைகளுக்குள் சண்டை
எப்போதும் இல்லை
எறும்புக் கூட்டம்…”
(ப.28)

கூட்டமாகச் சென்றாலும் எறும்புகள் எப்போதும் வரிசையாகவே, ஒழுங்காகவே, அமைதியாகவே செல்லும். அவைகளுக்குள் சண்டை ஒரு போதும் ஏற்படாது.

“ஹைக்கூக்களின் உயிர்நிலை முரண்கள் தாம்” (தி.லீலாவதி, இதுதான் ஹைகூ, ப.54) என்பர் அறிஞர். இக் கருத்துக்கு நல்லதோர் இலக்கியமாக விளங்குகின்றது கவிஞர் சுடரின் பின்வரும் ஹைகூ:

“ஓயாத வீட்டு வேலை
உயர்ந்த பட்டம்
இல்லத்தரசி…”
(ப.22)

நிறைவாக, “கவிஞர் சுடர் அவர்களின் கைவண்ணம் – தமிழின் மெய் வண்ணம்! அவருடைய கவிதைகள் பல்வேறுபட்ட உணர்வுகளின் படையெடுப்புகள்!” (முன்னுரை, காக்கிப் பறவை, p.v) என்னும் கவிவேந்தர் மு.மேத்தாவின் மதிப்பீடு உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை.


‘தமிழாகரர்’ முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.

 

 

 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்