திரையில் ஒளிரும் இலக்கியம் (தொடர் - 3)

கவிஞர் மா.உலகநாதன், திருநீலக்குடி


மொழி உணர்வு:

விஞர்களுக்கு தான் பிறந்த நாட்டின் மீதும் தாய்மொழியின் மீதும் தீவிரப் பற்று இருப்பது இயற்கையே. கண்ணதாசன் அவர்களின் பாடல்கள், கவிதைகள், உரைவீச்சு, அனைத்திலுமே தமிழ்ப்பற்று தழைத்திருக்கும் என்பதை நாமறிவோம். அவரது கவிதையொன்றில்,

“ஆயர்கைப் புல்லாங்குழலில் அமைந்தெழுந்து
தாயர்கை வளையலிலும் சலங்கையிலும் குடிபுகுந்து
கோயில்மணி ஓசையிலே கொஞ்சித் தவழ்ந்து வந்து
சேயின் மணிவாய்ச் சிறகை விரித்தெழுந்து
பூஞ்சிட்டுப் போல்வான் புறத்தே எழுந்து வந்து
அப்பனுக்குக் கணக்காகி ஆச்சிக்குப் பாட்டாகி
ஒப்பரிய தாயர்க்கு ஒப்பாரிக் கலையாகித்
தப்பிப் பிறந்து வந்து தங்கமெனத் தாய் உரைத்த
இப் பாவிக் கவிமகனை ஈன்றெடுத்த செந்தமிழே!”


பாடல் எப்படியெல்லாம் வடிவம் கொண்டு எங்கெங்கெல்லாம் சென்று சேர்க்கிறது என்பதை இலக்கியக் கண்ணோட்டத்தில் கவிதையாக வடித்திருக்கிறார்..”நீயில்லையேல் நானில்லை; நிலமில்லையேல் பயிரில்லை; தாய் உனக்கோர் வாழ்த்துத் தருகிறேன், நீ வாழ்க!” என்று மேலும் வழுத்துகிறார். இதை ஒப்புமைப்படுத்தி

“சங்கம் வளர்த்த தமிழ்,
         தாய்ப் புலவர் காத்த தமிழ்,
கங்கை கொண்ட எங்கள் தமிழ்
         வெல்லும் வெல்லும்
ஒரு காலம் வரும் நல்ல-பதில்
          சொல்லும் சொல்லும்.


தொடர்ந்து, சந்தம் சிந்தும் வரிகள்;

செவ்வரி யோடிய கண்களிரண்டில்
சேலோடு வேலாட
இரு கொவ்வை இதழ்களும்
கொத்து மலர்களும் கொஞ்சி மகிழ்ந்தாட

என கேட்டார்ப் பிணிக்கும் செந்தமிழ் வரிகளைக் கோத்திருப்பார். வரிகளில் இழையோடும்,விரசத்தை இலைமறை காயாகப் பாடலில் பங்கிட்டிருப்பதை இலக்கியச் சுவைஞர்கள் நிச்சயம் கண்டிருப்பார்கள்.

சந்தம் அவளைச் சொந்தம் கொண்டாடும் இப்பாடல், துலாபாரம் திரைப்படத்தில் இடம் பெற்றது.

இறையுணர்வு:


ஈரமுள்ள நிலத்தில் விதை முளைக்கும்; இரக்கமுள்ள நெஞ்சில் கவிதை பிறக்கும் என்பார் கவிஞர். கவிஞரின் உள்ளம் குழந்தை உள்ளம்; அதில் எள்ளளவும் கள்ளமில்லை. அவர் ஆதியிலே ஆத்திகர்; மீதிநாள் நாத்திகர். அரசியலிலும் அப்படியே!

கர்த்தரைப் பற்றி “இயேசு காவியம்” எழுதுவார். அர்த்தமுள்ள இந்து மதம் படைப்பார்; மதுவைப் புகழ்வார், மங்கயைரைத் துதிப்பார்; வானவில்லில் கூட ஏழு நிறங்கள் தான். இந்தக் கவிதைப் பிதாமகன்,கடவுளுக்கே ஆயிரமாயிரம் வண்ணங்களை உருவாக்கிக் காட்டிய மேதை. பகுத்தறிவு ஒழுங்காக வேலை செய்யுமானால் அது கடைசியாக இறைவனைக் கண்டு பிடிக்குமே தவிர, ஒரு போதும் சூனியத்தைச் சரணடையாது என்கிறார் கவியரசர்.கடவுளையும் புராணங்களையும் கேலி செய்வதற்காகவே படிக்கத் தொடங்கிய கவிஞர்,அவற்றிலுள்ள தத்துவங்களுக்கு அடிமையானார்.

நெருப்பினில் சூடு வைத்தான்
நீரினில் குளிர்ச்சி வைத்தான்
கறுப்பிலும் வெண்மை வைத்தான் ஒருவன்-உள்ளம்
கனிந்து கண்டால் அவன்தான் இறைவன்.


பாரதியைப் போல் கவிஞரும் கண்ணனைத் தனக்குத் தெய்வமாக மட்டுமின்றி,தந்தையாகவும்,தாயாகவும்,உறவினர்க்ளகவும் உற்ற நண்பனாகவும் சேவகனாகவும் பல உறவு நிலைகளில் காண்கிறார்.மேலும்,கண்ணன் எல்லோருக்கும் உறவினராக இருந்து உதவி செய்பவன் கண்ணன் என்பதை,

“கண்ணா என்றழைப்பார் முன்காவலன் போல் வருகின்றான்;
காதலனாய் எந்தக் கன்னியர்கள் நினைத்தாலும்
ஆதரவாய் வந்து அவர் மடியில் சாய்கின்றான் “


என்கிறான்..

தனக்கும் கண்ணனுக்கும் உள்ள நெருக்கத்தை,நெகிழ்ச்சியை

“நள்ளிராப் போழ்தினில், நானும் கண்ணனும் உள்ளுறும் பொருள்களை உரைப்பதுண்டு காண்:பிள்ளை போல் வாழும் நீ பிதற்றலும் கவிதையே!
என்றுநெக்குருகிப் பாடுகிறார். அவரது நண்பனைத் தன் திரைப்பாடலில் எங்கிருந்தோ வந்தான்...இடைச் சாதி நான் என்றான் பாடல் வழி நமக்கு நிதர்சனமாகக் காட்டுகிறார்.
                                                                                                                                  தொடரும்............
 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்