வையகம் எல்லாம் எமது

கவிஞர் மா.உலகநாதன், திருநீலக்குடி


ரு சமயம் பாண்டிய மன்னர்களுக்கும் பகையரசர்களுக்குமிடையே பெரும் போர் மூண்டது. நால்வகைச் சேனைகளும் சிறந்து பொருதின. வீரர்கள் காட்டிய தீரத்தை விட யானைகளின் வீரச் செயல்கள் தான் பெரு வியப்பைத் தரக்கூடியதாக இருந்தன.. யானைகளுக்குத் தான் எத்தனை அறிவு?. போர்க்களத்தில் நிகழும் செயல்களைப் பார்த்தால் கதி கலங்குகிறது. இது யானையா? அல்லஇஅல்ல!. மலையும், கடலும், மேகமும், சண்டமாருதமும் சேர்ந்து ஓருருவம் எடுத்து வருவது போல அல்லவா இருக்கிறது? அப்பப்பா! யானையின் செயல்களோ பார்க்கப் பார்க்க பிரமிப்பூட்டுவதாக இருக்கிறது.

வீரக் களிறு:


பகைவர்களைக் குத்திச் சாய்க்கிறது. தன் கொம்பினால்இ இன்னொரு களிற்றைக் கொல்வது பெரிய வீரம். இந்த யானையின் உண்மைப் பலம் தெரியாமல் பகைப்படையில் உள்ள வீரர்கள் எதிர்க்கிறார்கள். பாவம்! அவர்களுக்கு இதன் பெருமை தெரியாது போலும். எதிரிப்படையில் ஒரு மன்னர் அல்ல; ஒருவருக்கொருவர் துணையாக பல மன்னர்கள் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் சாடிக் கலக்குகிறது யானை.

புலவரின் புகழுரை:

இந்தக் காட்சிகளையெல்லாம் நம் புலவர் பார்க்கிறார். பாண்டியனது வீரத்தைப் பாடும் நாம் இந்த யானையின் வீரத்தையும் பாட வேண்டாமா? புலவர்கள் ஒருவருக்கொருவர் முந்துகிறார்கள். ஏன்? யானை ஏதும் பரிசில் கொடுக்கப்போகிறதோ? இல்லைஇல்லை!. வியப்புணர்ச்சி அவர்களைப் பாடும்படி உந்துகிறது.

யானை செய்த செயல்களை மனக்கண்ணிலே ஆற அமர நினைத்துப் பார்க்கிறார் ஒரு புலவர். பாண்டியனைப் பகைத்த மன்னர்கள் யாவரும் போர்க்களத்தில் வீழ்கிறார்கள். யானைஇ தன் கொம்பினால் அவர்கள் மார்பைக் குறிவைத்துக் குத்துகிறது. அதற்குக் கூட தலையாய வீரம் இருக்கிறது. பகைவர்களின் முதுகில் குத்துவது வீரத்திற்கு இழுக்கு என்று அதற்குப் பழக்கத்தால் தெரிந்திருக்கிறது. அதன் கூர்மையான கொம்பு பகையரசர் மார்பில் அளைகிறது. புலவருக்கு இப்போது ஏடும் எழுத்தாணியுமே நினைவுக்கு வருகின்றன.

நாம் கவி எழுதுவது போல இந்த யானையும் எழுதுகிறது என்று எண்ணுகிறார். அவர் எழுதும் கவி, பாண்டியனுடைய புகழைச் சொல்லும். யானையும் கூட அதையே எழுதுகிறதாம். எப்படி எழுதுகிறதாம்? பகை மன்னர்களுடைய நாடுகளையெல்லாம் பாண்டிய மன்னன் கைக்கொண்டான் என்று எழுதுவதாகக் கற்பனை செய்கிறார் புலவர். யானை தன் கொம்பையே எழுத்தாணியாகக் கொண்டு, பகையரசருடைய அகன்ற மார்பை ஓலையாக வைத்த, 'இந்த உலகம் முழுவதும் எங்கள் பாண்டியனுக்கு உரியது' என்று எழுதுகிறதாம். பாண்டியனோடு ஒட்டி உறவாடும் உணர்ச்சியினால், வையகம் எல்லாம் எமது என்று எழுதுகிறது.

புலவரின் பாடல் இதோ:

மருப்புஊசியாக மறங்கனல்வேல் மன்னர்
திருத்தகு மார்போலை யாகத் - திருத்தக்க
வையகம் எல்லாம் எமதென்றேழுதுமே,
மொய்இலைவேல் மாறன் களிறு.
 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்