திரையில் ஒளிரும் இலக்கியம் (தொடர் - 6)

கவிஞர் மா.உலகநாதன், திருநீலக்குடி

காதல் அவத்தை:

மிழர்தம் பண்பாட்டைப் பறைசாற்றும் சங்க இலக்கியங்களில் கற்பும் களவும்,உடன்போக்கும் இடம் பெற்றிருக்கின்றன. களவொழுக்கம் என்பது “நேர்ந்தவழிக் கூடி தீர்ந்த வழி மறக்கும் “ கந்தர்வ வழக்கம் எனவும், கற்பொழுக்கம் என்பது “பிரியாது உடன் வாழ்தல், இன்றேல் தறியாது உயிர் நீத்தல்” எனவும் தொல்காப்பியம் வகைப்படுத்துகிறது.

வேட்கை ஒருதலை உள்ளுதல் மெலிதல்
ஆக்கம் செப்பல் நாணுவரை இறத்தல்
நோக்குவ எல்லாம் அவையே போறல்
மறுத்தல் மயக்கம் சாக்காடு என்று அச்
சிறப்புடை மரபின் அவை களவென மொழிப!


குறையாத விருப்பு , இடைவிடா நினைப்பு, உடல் மெலிதல், ஆவது அறிந்து கூறல், வெட்கத்தின் எல்லையைக் கடந்து நிற்றல், காணும் பொருளெல்லாம் தன் விருப்பப் பொருளாய்த் தோன்றுதல், தமது செயல்களை மறத்தல், மயக்க நிலையில் நிற்றல், நினைவு நிறைவேறா நிலையில் இறந்து போகலாம் என்ற எண்ணம் இவையெல்லாம் களவுக்காலத்தில் நடைபெறும் உடலியல் உளவியல் மாற்றங்களாக தொல்காப்பியம் கூறுகிறது.

“நாட்டம் இரண்டும் அறிவு உடம்படுத்தற்கு கூட்டி உரைக்கும் குறிப்புரை ஆகும்.”
அதாவது விருப்பத்தை வெளிக்காட்டி,இருவரும் நன்கு ஆராய்ந்து அறிவால் ஒன்று சேர்வதற்கு துணையாகத் திகழும் குறிப்புரையே கண்களின் பார்வையாகும். அதுதானே,மயக்கத்தைத் தந்து முயக்கத்தை நாடச் சொன்னது?

தொல்காப்பியம், இலக்கியம் கற்றோர்க்கு வேண்டுமானால் எளிமையாகத் தோன்றும். ஆனால், பாமரனுக்கு இச் செய்தி பரவவேண்டுமென்ற அக்கறையோடு கவிஞர் ஒரு பாடல் தருகிறார். இதயக்கமலம் கிற படத்துல,
“என்னதான் ரகசியமோ இதயத்துல “ன்னு

ஆரம்பிச்சி, தன் காதல் தாபத்தை தீபமேற்றுவதுபோல் ஒரு பெண் சொல்வதாக கவியரசர் எழுதியிருக்கிறார்.

“விழி பார்க்கச் சொன்னாலும்
மனம் பேசச் சொல்லாது;
மனம் பேசச் சொன்னாலும்
வாய் வார்த்தை வராது,
அச்சம் பாதி ஆசை பாதி
பெண் படும் பாடு.
ஒரு நேரம் கூட ஆசை நெஞ்சம்
அமைதி கொள்ளாது.


இன்று தொல்காப்பியர் இருந்திருந்தால் என் பாட்டுக்கு ஏற்ற இசைப்பாட்டுப் பாடியிருக்கிறாயே என்று கவியரசரை மெச்சி, உச்சி முகர்ந்திருப்பார்.

மண் மணக்குது:


அவர் பாடல்கள் சித்திரிக்கும் பாவையரின் காதல், பல இடங்களில் மோகமாகத் தென்பட்டாலும், அதன் அடிநாதமாக தாய்மையில் தோயும் தூய அன்பு, மென்மையான காதல் உணர்வு, மண்ணின் மணம் பேசும் பண்பாட்டுச் சிறப்பு இவற்றை அவர் மறந்ததில்லை.

பாகப்பிரிவினை படத்துல தாழையாம் பூ முடிச்சி ன்னு ஒரு பாட்டு.அதுல நாயகன் இப்படிக் கேட்பான்.

தாயாரின் சீதனமும் தம்பிமார் பெரும்பொருளும்
மாமியார் வீடு வந்தால் போதுமா? அது
மானாபிமானங்களைக் காக்குமா?----ன்னு!


அதுக்கு நாயகி சொல்ற பதில்தான் மண் மணம் பேசும் வரிகள் என்பதை உணர்ந்து ரசிக்க முடிகிறது.

மானமே ஆடைகளாம்,மரியாதை பொன் நகையாம்,
நாணமே துணையிருந்தால் போதுமே-எங்கள்
நாட்டுமக்கள் குலப்பெருமை தோணுமே!

எப்படி?

ஸ்ரீதரின் நெஞ்சில் ஓர் ஆலயம் – படத்துல,

சொன்னது நீ தானா? சொல்..சொல் என்னுயிரே ன்னு ஒரு பாடல். அதுல வரும் ஒரு வரியிலேயே கற்பு நெறி, காதல் ஒழுக்கம் ஆகிவற்றைப் பாடமாக்கியிருப்பார்.

தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமா?
தெருவினிலே விழுந்தாலும் வேறோர் கை தொடலாமா?
ன்னு

எழுதியிருப்பார். விளக்கம் வேறு வேண்டுவதில்லை அல்லவா?

கம்ப இராமாயணம்:


கம்ப இராமாயணத்தில் நிலவளம் குறித்து கம்பர் ஒரு பாடலைக் கொடுத்திருப்பார்;

ஆலைவாய்க் கரும்பின் தேனும்
அரிதலைப் பாளைத் தேனும்
சோலைவீழ்க் கனியின் தேனும்
மாலைவாய் உகுத்த தேனும்
வரம்பிகழ்ந்து ஓடி வாங்க
வேலை வாய் மடுப்ப உண்டு
மீனெல்லாம் களிக்குமாதோ?


காய், பால், ஊர், ஓம் என்ற வரிசையில் தேன் இல்லாமலா? பார்த்தார் கவிஞர்.”வீர அபிமன்யூ”ங்கிற படத்துல,

பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன் -அன்று
உனைத்தேன் என் நான் நினைத்தேன்-அந்த
மலைத் தேன் இதுவென மலைத்தேன்.
கொடித் தேன் இனி எங்கள் குடித் தேன் என ஒரு படித் தேன்
பார்வையில் குடித்தேன் ; ஒரு துளி தேன் சிந்தாமல் களித்தேன்.


என்று பாடல் முழுவதும் தேன் சொட்டவைத்தார்.என்னமோ போங்க! அவர் அனுபவித்து ரசித்தது போல எத்தனை பேருக்கு இம்மாதிரி எழுதவும் ருசிக்கவும் கிடைக்கும்னு தோணல!!


                                                                                                                                                தொடரும்............

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்