திரையில் ஒளிரும் இலக்கியம் (தொடர் - 7)

கவிஞர் மா.உலகநாதன், திருநீலக்குடி
 

இயற்கைக் கவி:

கவியரசரின் கவிதைகளில், திரைப் பாடல்களில் காணப்படும் சொல்லழகு , நடை இனிமை, கருத்துச் செறிவு, எண்ண ஓட்டம் ஆகிய அனைத்தும் அவர் ஓர் இயற்கைக் கவி என்பதை இலகுவாக வெளிப்படுத்துன்றன. ஆகையால் தான் கற்றோரும் மற்றோரும் ஒருங்கே விரும்புகின்ற பாடல்களாக அவை அமைந்தன.

கதிரவன் உதயத்தை கவிதையில் வடிக்கிறார்.

கிழக்கு வெளுப்ப விடிமீன் ஒளிப்ப-
புள்ளினங்கோடி மெல்ல யாழ் இசைப்ப
மண்ணிடைக் கருமை அன்ன மென் நடையில் மறைய மறைய
பின்வரும் வெண்மை சுண்ணம் பூசிய சுவரெனத் தோன்ற ,
உழத்தி எழுந்து உழவனை அசைத்துக் கயிற்றுக் கட்டிலின்
காலெழு ஒலியில்,
துயிலுறுந் தன்னான் சுடக்கொடித்து எழவும்
“ஏழையின் மகுடம் ஒரு முழத் துண்டு
இதுவெனத் தூக்கி சென்னியிற் சுற்றிச் சிரிக்கவும்,
அந்தப் புலர்ந்து புலராப் பொழுதும் சிரித்தது.
பூமி சிரித்தது.
இரவு மங்கையின் பிரசவப் பொழுதாம்
காலை மலர்ந்தது கதிரொளி ஜனனம்.


கிழக்கு வெளுத்தடி:


இந்தக் கவிதை இலக்கியத்திற்கு ஏற்ற ஒரு திரையிசைப் பாடல் வேண்டுமே? எழுதினார். பருதியின் பொற்கிரணங்களைப் போல் புதுமைக் கருத்துக்களோடு ஒரு பாடலைப் படைத்தார். அதுதான், அவன் பித்தனா? படத்தில் இடம் பெற்றது.

கிழக்கு வெளுத்தடி கீழ்வானம் சிவந்ததடி,
கதிரவன் வரவுகண்டு கமலமுகம் மலர்ந்ததடி!
எங்கள் குடும்பம் இன்று ஏரெடுத்து நடந்ததடி,
இன்றுவந்த தென்றலுக்கு இதயமெல்லாம் திறந்ததடி!


இலக்கியத்துக்கு ஓர் இலக்கணமாக, தலைவியும் தலைவனும் கதிரவன் உதயத்தை வாழ்த்தி வரவேற்கிறார்கள்.

தைப்பாவை:


கண்ணதாசன் இசைத்தமிழின் எழிலை நாடுபவர்; நாடகத் தமிழின் நயத்தை நவின்றவர்; இயற்றமிழின் இன்பத்தை நுகர்ந்தவர்; அரசியல் தமிழின் ஆணி அன்னவர்; தத்துவத் தமிழின் தன்மைக்குள் முங்கி முத்தெடுத்தவர்; ஆத்திகத்தின் ஆழம் கண்டவர்; இலந்தைப் பழம் முதல் இந்து சமயம் வரை இறங்கிப் பார்த்தவர்; சித்தர் பாடல்களில் நித்தம் பழகியவர்; முத்தமிழின் வித்தகம் விளம்பும் அவரது கவிதை ஒன்று, தமிழர்தம் பெருமையை இப்படிச் சொல்கிறது.

எந்தமிழர் கோட்டத்திருப்பார் உயிர் வளர
எந்தமிழர் உள்ளத்திருப்பார் பொருள் வளர
எந்தமிழர் கைவேல் இருவெங் களஞ்சிவக்க
எந்தமிழர் நாவாழ் இளமைத் தமிழ் செழிக்க
எந்தமிழர் இல்லத்திலங்கும் ஒளி விளங்க
முத்துதமிழ்ப் பாவாய் முன்னேற்றந் தான் தருவாய்!
தந்தருள்வாய் பாவாய் தைவடிவத் திருப்பாவாய்!
வந்தருள்வாய் கண்ணால் வாழ்த்துரைப்பாய் தைப்பாவாய்!!

கண்ணதாசனின் தைப்பாவை ஒரு தமிழ்ப்பாவை.

கட்டான மேனியோடும் களம்போந் துயர்ந்த நிலம்
பட்டாளத் தஞ்சையிலும் பாடாயோ தைப்பாவாய்!

என்று பாடிய அந்தத் தமிழ்மகன்,”தருமத்தில் வந்ததால் தாயாரின் ஆசையால் தமிழில் நான் வாழுகின்றேன்” என்று தன் வாழ்க்கை தமிழ் சார்ந்தது என்பதைப் பெருமிதத்தோடு சொல்லியிருக்கிறார்.

ஆண்டாளும் அவரும்:

அவரது தைப்பாவை கவிதை இலக்கியத்தில், ஆண்டாள் பெருமாட்டி உருவகப்படுத்தியது போலவே இவரும்,இந்த உலகத்தையே ஆயர்பாடியாகவும் இங்குள்ள ஆன்மாக்கள் அனைத்துமே ஆயர்களாகவும் ஆய்ச்சியர்களாகவும் கற்பனை செய்கிறார்.

ஆயன் கிளியானான் ஆய்ச்சி கனியானாள்
மாயத்து இரவினிக்கும் மல்லிகைக்கும் தென்றலுக்கும்
வாயில் திறந்தார் காண்”


என்று புனைந்துரைக்கிறார்.

மைக்கினிய கண்ணால்
மயக்கவரும் ஆயமகள்
கைக் கலசம் தாங்கிக்
கறந்தபால் கறந்தபடித்
தைப்பொங்கல் பொங்க
தந்துதவச் செல்கின்றாள்;
கைக்கலசம் கண்டான்
கனிக்கலசம் காண்கின்றான்!

ஆயர்குலப் பெண்ணொருத்தி கறந்த பாலைக் கையிலேந்தி மைக்கினிய கண்ணால் மயக்க ஒரு பாடல் தருகிறார்.

மாட்டுக்கார வேலன்
படத்துல,

ஒருபக்கம் பாக்குறா ஒரு கண்ணே சாய்க்குறா அவ
உதட்டைக் கடிச்சிகிட்டு மெதுவா சிரிக்கிறா.
கறந்த பாலை நான் கொடுத்தா
கையைத் தொட்டு வாங்குறா என்கையைத் தொட்டு வாங்குறா !
கைவிரல் பட்டதுல பால் செம்பு குலுங்குது
கைய இழுத்துக் கிட்டு பாலோடு ஒதுங்குது.

சந்தனச் சிலை:


கண்ணதாசனின் மற்றுமொரு கவிதைத் தொகுப்பிலே,

சந்தனச் சிலையொன்று அருகிருக்க,
தாமரைக் கொடிபோல் இடையிருக்க,
பந்தாடும் விழி பார்த்திருக்க,
பால்போல் நிலவும் துணையிருக்க,
முல்லை மல்லிகைப் பூவிருக்க,
முத்து முத்தாக நகையிருக்கத்
தன்னை மறந்ததும் சரிதானோ?
தனிமை கொண்டதும் முறைதானோ?
பூமியின் வயிற்றில் பொன்னிருக்கும்,
பூவையின் முகத்தில் கண்ணிருக்கும்,
பொன்னுக்குக் கண்ணே பொருந்தாதோ?
பொருந்தாதென்றால் வருந்தாதோ?

பெண்ணுக்கும் கண்ணுக்கும் பொருத்தம் காட்டும் கவியரசரின் புலமை நயம் போற்றுதற்குரியது. பொன் பூமிக்குள்ளே இருப்பது; கண் இமைக் கதவுக்குள்ளே இருப்பது; இரண்டுமே மணநேரத்தில் பூட்டப்பெறுவது, காட்டப்பெறுவது; பொன் சுடச் சுட ஒளிரும்; பொன் புற அளவுகோல்,கண் அக அளவுகோல்.கண் பார்வைக்குரியது; பொன் தீர்வைக்குரியது.இரண்டிலும் கள்ளப்பார்வை உண்டு!

இந்தப் பொன்னையும் கண்ணையும் வைத்தே ஒரு பாடலை “போலீஸ்காரன் மகள்” என்ற படத்துக்காக படைத்தார். அது இப்படி வந்தது.

ஆண்:

பொன்னென்பேன்- சிறு பூவென்பேன்-காணும்
கண் என்பேன் –வேறு என்னென்பேன்.

பெண்:

என்னென்பேன் –கலை ஏடென்பேன் –கண்கள்
நானென்றால் –பார்வை நீயென்பேன் !

பொன்னையும் கண்ணையும் பெண்ணையும் ஒரே பாடலில் கொண்டுவந்து தரும் சாதுரியம் கவியரசருக்கு மட்டுமே சாத்தியம் என்பது என் துணிபு!

நாலுபேர்:


நினைத்ததை அப்படியே சொல்கின்ற மனம் கவி மனம்.அக் கவி மனத்திலிருந்து ஊற்றெடுக்கின்ற ஒவ்வொரு சொல்லும் திரைப்பாடல் வடிவம் பெற்று விடுகின்றது. காலம் நிர்ணயிக்க முடியாததைக் கவிஞன் நிர்மாணிக்கிறான்.

நாலு பேர் என்ன சொல்வார்களோ? நாலு பேருக்குப் பயந்து நடக்க வேண்டாமா? நாலு பேர் நாலுவிதமாகப் பேசுவார்களே? அந்த வழக்குச் சொல்லுக்கிரிய நாலு பேர் யார்,யார் என்று இப் பாடலில் அடையாளம் காட்டுகிறார். அவரின் பாடல் வரிகளில் நகைச்சுவை நயமும், அதில் இழையோடும் ஆழமான அவலச்சுவையும் ஒருங்கே பயின்று வருவதைக் காண முடிகிறது.

உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு-இங்கே

கொண்டுவந்து போட்டவர்கள் நாலு பேரு!

கொடாடும்போது ஒரு நூறு பேரு-உயிர்
கூடுவிட்டுப் போன பின்னே கூட யாரு?

முகராசி படத்தில் இடம் பெற்றது இப் பாடல்.

பிறக்குபோது அழுதுகொண்டே பிறக்கிறோம்,இறக்கும்போது பிறரை அழவைத்து இறக்கிறோம்.இறந்த நம்மை இடுகாடு வரை கொண்டுவந்து இறுதிச் சடங்கு செய்யும் அந்த நாலுபேரை நன்றியோடு கவியரசர் குறிப்பிடுகின்றார்.
 


                                                                                                                                                தொடரும்............

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்