திரையில் ஒளிரும் இலக்கியம் (தொடர் - 8)

கவிஞர் மா.உலகநாதன், திருநீலக்குடி

வியரசருக்கு தனிமனித,சமூக,பொருளாதாரக் கருத்துக்கள் பாடுபொருள் ஆயின. நாட்டுப் பற்று,பக்தி, வீரம், காதல், தாய்மை, தத்துவம்,குடும்பம் என்று பல பொருண்மைகளில் அவரது பாடல்கள் மிளிர்ந்துள்ளன. மனித வாழ்விலும் உலகத்து நடப்பிலும் எந்த நிகழ்ச்சிகள் நிகழ்ந்தாலும், அங்கே என் பாடலொன்று எதிரொலிக்கும் என்று கவிஞரே குறிப்பிட்டுள்ளார். கல்விச் சுகத்தையும் பாடி, கலவிச் சுகத்தையும் பாடுபவரல்லவா அவர்?

நம்பிக்கை தந்த நல்லாற்றலினால் தனது 14-ஆவது வயதிலேயே அவர் எழுதினார் இந்த முதல் கவிதை.

வீணா கானம் விடியுமுன் கேட்டது
கானா மிர்தம் காதுக்கி னிமை!
தூக்கம் கலைந்தது துள்ளி எழுந்தேன்
படுக்கையிலிருந்தே பருகினேன் அமுதம்!


ஆரம்பத்தில் அவர் எழுதிய பாடல்களில் காணப்படும் சொற்களில் அதிக இலக்கிய அழுத்தம் இல்லையெனினும், பின்னாட்களில் அவரது திரைப்பாடல்களில் கண்ட இலக்கிய சொல்லாட்சிகளை கற்றுத் துறை போகியவர்கள் கூட கண்டுணர முடியாமல் திணறினார்கள்.

பாட்டும் பரதமும் கிற படத்துல ஒரு பாடல்:

மாந்தோரண வீதியில் மேளங்கள் ராகம்
மாப்பிள்ளை பெண்ணுக்கு ஏனிந்த மோகம் .


இந்தப் பாடலில் அவர் மறைபொருளாக காதல் சுகத்தையும் கலவிச் சுகத்தையும் வருணித்திருப்பார். பாருங்களேன்!அவ்வளவு இலகுவாக இதன் பொருளைப் புரிந்து கொள்ள முடிகிறதா என்று?

அவள் பாடினாள்;

ஆதித்தன் மேனியை மேகங்கள் மூட
ஆனந்தப் பூந்தென்றல் மோகனம் பாட
வசந்தத்தின் பாற்குடம் ஊர்வலம் போக
வந்துவிட்டேன் கண்ணா மணமகளாக.


அவன் பாடுவான்:

ஏவிய கணைகள் இருபுறம் தாக்க
ஏலத்துப் பூங்குழல் வானத்தைப் பார்க்க
ஆவியில் ஆவியை ஆண்டவன் சேர்க்க
ஆனந்தம் நான் கொள்ள யாரிடம் கேட்க.


இலக்கியச் சுவை நனிசொட்டச் சொட்ட எத்தனையோ பாடல்களை எழுதியவர். அதற்காக பல்வேறு இலக்கியப் பக்கங்களைப் புரட்டியவர். கம்பனைப் படித்தார்,கம்பனுக்கு அடிமையானார். பரணி படித்தார்.இப்படியொரு பாடல் எழுதினார்.

செயங்கொண்டார் கலிங்கத்துப்பரணியில்,

கலவிக் களியின் மயக்கத்தே
         கலைபோய் அகலக் கலைமதியின்
நிலவைத் துகில்என்று எடுத்துடுப்பீர்,
         நீள் பொற்கபாடம் திறமினோ?

போருக்குச் சென்று வெற்றிவாகை சூடி வரும் கணவன் நள்ளிரவில் தன் வீட்டுக் கதவைத் தட்டி மனையாளை அழைக்கிறான். இதனைக் கடைத் திறப்புப் பாடல் என்பார்கள்.

என்னோடு நீ கலவியில் களித்திருக்கும்போது, உன்னுடைய மேலாடை நழுவ அது எங்கே நழுவியது என்பதைக்கூட அறியாது மயங்கி,வானத்து நிலவை ஆடையாக உடுத்த எண்ணி கையால் துழாவினாயே! நாணம் மறந்த பெண்ணே! கதவைத் திறவாய்! என்று அழைப்பதாகப் பாடலை அமைத்தார்.

இதைப் படித்த கவிஞர்,எங்கள் தங்க ராசா படத்துல இந்தப் பரணி இலக்கியத்துக்கு ஏற்ற வரிகளை எழுதியிருந்தார்.

இரவுக்கும் பகலுக்கும் இனிஎன்ன வேலை,


இதயத்தில் விழுந்தது திருமணமாலை,-ன்னு ஆரம்பிக்கிற பாடல்.இதுல பரணி பாடுவார்.எப்படி?

ஆடை இதுவென நிலவினை எடுக்கும் ஆனந்த மயக்கம்
அம்மா குளிரென ஒன்றினை ஒன்று அணைப்பது வழக்கம்

காலை நேரத்தில் காயங்கள் பார்த்து களிப்பதென்பதுகவிதையின் விளக்கம்.

தரணி பேசும் பரணிப்பாடல் இலக்கியம் இன்பம் தரவில்லையா?

கற்பனையும் உணர்ச்சியுமே இலக்கியத்திற்கு அடிப்படை; உணர்ச்சி வெளிப்பட்டு ஓர்உருவம் பெற்ற பிறகே இலக்கியம் முகிழ்க்கிறது. கவியரசரின் இலக்கிய ஒப்புமைக்கு இன்னுமொரு எடுத்துக்காட்டு:

கண்ணனும் மேல் தீராக்காதல் கொண்ட ஆண்டாள் திருப்பாவையில் பாடிய பாடல் இது.

குத்து விளக்கெரிய கோட்டுக்காற் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்சசயனத்தின் மேலேறி,
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல் ,
வைத்துக்கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்!
மைத்தடங்கண் ணினாய்! நீயுன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ வொட்டாய்காண்!
எத்தனையேலும் பிரிவாற்றா கில்லாயால்,
தத்துவமன்று தகவேலோ ரெம்பாவாய்!
(திருப்பா-2)

ஆண்டாளுடைய விரகத்தைப் பார்த்தோம்.இதற்கு கண்ணதாசன், இதே தொடக்க வரிகளை வைத்து பச்சை விளக்கு படத்தில்,

குத்து விளக்கெரிய கூடமெங்கும் பூமணக்க
மெத்தை விரித்திருக்க மெல்லியலாள் காத்திருக்க
வாராதிருப்பானோ வண்ண மலர்க் கண்ணனவன்
சேராதிருப்பானோ சித்திரப் பூம்பாவை தன்னை .


ஆசை முன் தள்ள அச்சமும் நாணமும் பின்னிழுக்க காதல் வயப்பட்டு கண்ணனோடு இரண்டறக் கலந்துவிட்ட கற்பனா பாவமிது! திருப்பாவை இலக்கியத்துக்கு ஏற்ற இலக்கணம் கொண்ட திரையிசைப் பாடலல்லவா இது?.


                                                                                                                                                தொடரும்............

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்