ஏர்வாடியம்: வாழ்க்கைச் சித்திரம்

பேராசிரியர் இரா.மோகன்
 

சீர்வாடிப் போகாமல் செந்தமிழைக் காத்துவரும்
ஏர்வாடி யார்போல் இனியகுணம் கொண்டவரை
ஊர்கூடித் தேடினும் ஒருவரும் சிக்கமாட்டார்
பேர் கோடி பெற்றுப் பெருமையுடன் இவர் வாழ்க!...
முப்பாலின் வழிநின்று முழுநிலவாய் இவர் வாழ்க!” 
                         

                                                                                      - முத்துலிங்கம்*

தமிழகத்தின் தென்கோடி மாவட்டங்களுள் ஒன்று திருநெல்வேலி. அதில் ‘ஏர்வாடி’ என்ற பெயரில் ஓர் அழகிய சிற்றூர். பெரும்பான்மையான இஸ்லாமியர்களோடு சிறுபான்மையான இந்துக்கள் மன நல்லிணக்கத்துடன் சேர்ந்து மகிழ்வுடன் வாழ்ந்து வரும் சிறப்பினைப் பெற்ற அவ்வூரில் 1947-ஆம் ஆண்டில் மே மாதம் 18-ஆம் நாளில் பிறந்தவர் எஸ்.இராதாகிருஷ்ணன். துறைதோறும் பெருமக்கள் பலர் தாம் பிறந்த ஊரால் பேசப்படுவதைப் போல இலக்கிய உலகில் ‘ஏர்வாடியார்’ என்று அழைக்கப் பெறுபவர் கலைமாமணி ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன் ஆவார். இராதாகிருஷ்ணனின் தந்தையார் திரு.சுப்பையா இரண்டாவது உலகப் போரின் போது ஓர் இராணுவ அதிகாரியாக விளங்கியவர்; ஏறத்தாழ 15 ஆண்டுகள் இரயில்வே காவல் துறையிலும் அதிகாரியாகப் பணியாற்றியவர்; சரியாகவும் நேர்மையாகவும் வாழ்ந்து காட்டி உலகியல் வாழ்வில் தோல்வியை ஏற்றவர். இராதாகிருஷ்ணனின் தாயார் திருமதி தங்கம்மாள்; அவரது குணமும் தங்கம் தான்! உடன்பிறந்தோர் நான்கு தங்கைகள், ஒரு தம்பி என ஐவர். “அப்பா இருக்கும் போதே தலையில் விழுந்த பொறுப்பைத் தாங்கிக் கொண்டு எல்லாருக்கும் தாயுமானேன்; தந்தையும் ஆனேன்” (அரும்பு, ஜுன் 2016, ப.35) என்று நேர்காணல் ஒன்றில் தம் இளமைப் பருவம் குறித்து நெகிழ்வோடு நினைவுகூர்ந்துள்ளார் இராதாகிருஷ்ணன்.

இராதாகிருஷ்ணன் ஏற்றுக்கொண்ட அறிவுரை

“என்னுடைய தந்தையார் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி. அளவே இல்லாமல் அநேக அறிவுரைகளை அன்றாடம் வழங்கிக் கொண்டிருப்பார். எதுவும் எனக்கு நினைவில் நிற்பதில்லை. ஆனால் என்னுடைய அம்மா ஒன்றே ஒன்று கூறுவார். ‘உனக்கு எது நல்லதாகப் படுகிறதோ அதன்படி நடந்து கொள்’ என்பார். அதுதான் நான் ஏற்றுக்கொண்ட அறிவுரை” (எண்ணிய வண்ணமாய்…,ப.32) எனப் பிற்காலத்தில் எழுதிய நூல் ஒன்றில் தமது பெற்றோரைக் குறித்து நினைவு கூர்ந்துள்ளார் எஸ்.இராதாகிருஷ்ணன்.

வாழ்நாளில் பல்வேறு ஊர்களில் மாறி மாறிப் பணியாற்ற வேண்டிய சூழல் அவ்வப்போது எழுந்ததால் திரு.சுப்பையா, தமது மகன் இராதா-கிருஷ்ணின் படிப்பு பாதிக்கப்படக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு தாத்தாவும் ஓவிய ஆசிரியருமான அழகேசன் அவர்களிடம் அவனை ஒப்படைத்தார். பள்ளியில் படிக்கிற காலத்தில் பல்வேறு பேச்சுப் போட்டிகளில் கலந்து கொள்ளத் தாத்தா அழகேசன் எழுதித் தந்த தமிழின் தாக்கமே இன்று எழுத்தும் பேச்சுமாக ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன் என்னும் இலக்கிய ஆளுமையில் ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி உள்ளது எனலாம்.

இளமைப் பருவம்


இராதாகிருஷ்ணனின் இளமைப் பருவம் சொல்லி மகிழவோ, பெருமையுறவோ எதுவும் இல்லாத பருவமாக அமைந்தது. வாழ்ந்து கெட்ட குடும்பம் என்பதால் புத்தகங்கள் வாங்கவோ, பள்ளிக் கட்டணம் கட்டவோ கூட முடியாத வறுமை நிலவியது. தொடக்கப் பள்ளியில் பயின்று இராதாகிருஷ்ணன் எட்டாவது வகுப்பு (ESLC) முடித்த ஆண்டிலேயே ஏர்வாடியில் உயர்நிலைப் பள்ளி வந்தது. இல்லையேல் எட்டாவது வகுப்போடு அவரது மேற்படிப்பு எட்டாது போய் இருக்கும். அரும்பாடுபட்டு எப்படியோ அவரது பெற்றோர் அவரை அறிவியல் பட்டப் படிப்பினைப் (பிஎஸ்.ஸி., தாவரவியல்) படித்து முடிக்க வைத்தனர்.

வங்கிப் பணியில் சேருதல்


1967-ஆம் ஆண்டு கல்லூரிப் படிப்பினை முடித்த நிலையில் இராதா-கிருஷ்ணன் சென்னையில் சொந்தமாகத் தோல் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றினைத் தொடங்கி நடத்தினார்; சிலருக்கு வேலை வாய்ப்புக்-களையும் அளித்து வளரத் தொடங்கினார். அப்போது அவருக்குப் பாரத ஸ்டேட் வங்கியில் எழுத்தராக வேலை கிடைத்தது. ‘வங்கிப் பணியில் சேர்ந்தால் படிப்படியாகப் பதவி உயர்வுகள் பெறலாம். உங்களிடத்தில் இருக்கிற எழுத்தாற்றலையும் வளர்த்துக் கொள்ளலாம். பொருள் தேடுவது மட்டுமே வாழ்க்கை இல்லை; அமைதியான வாழ்வைப் பெறுவதுதான் நல்லது’ என்றெல்லாம் தாம் நிறுவனக் கணக்கினை வைத்திருந்த கிண்டி ஸ்டேட் வங்கியின் முகவர் திரு.கோபாலகிருஷ்ணன் கூறிய அறிவுரை அப்போது சரியாகத் தோன்றவே வங்கிப் பணியில் 13.12.1968-இல் சேர்ந்தார் இராதாகிருஷ்ணன்.

பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் படித்து முடித்து தாவரவியலில் இளம்அறிவியல் பட்டத்துடன் சென்னைக்குப் புறப்பட்ட இராதாகிருஷ்ணனிடம், “சென்னையில் நீ சந்திக்க வேண்டியவர்கள் மூவர். ஒருவர் என்னுடன் பணியாற்றிய கவிஞர் நெல்லை ஆ.கணபதி, இன்னொருவர் உன்னுடைய மாமா கவிஞர் நெல்லை அருள்மணி, மற்றொருவர் வில்லிசை வேந்தர் கவிஞர் சுப்பு ஆறுமுகம்” என்று அறிவுறுத்தி அனுப்பி வைத்தார் தாத்தா அழகேசன். சென்னையில் ஓரளவு தம்மை நிலைப்படுத்திக் கொண்ட பிறகு, மூவரையும் அடிக்கடி சந்திப்பதை வழக்கமாகக் கொண்டார் இராதாகிருஷ்ணன். இந்த சந்திப்புகளுக்கு அப்பால், ஏர்வாடியில் உடன்படித்த நண்பர் ஜமால், பொன்னடியாரை அறிமுகப்படுத்த, மாமா அருள்மணி பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமனிடம் அழைத்துச் செல்ல, வங்கியில் உடன் பணியாற்றிய எழுத்தாளர் ஆர்.எஸ்.மணி, ‘அமுதசுரபி’ ஆசிரியர் விக்கிரமனிடம் அனுப்பி வைக்க, இராதாகிருஷ்ணனின் படைப்புக்கள் ‘முல்லச் சரம்’, ‘தமிழ்ப் பணி’, ‘அமுத சுரபி’ ஆகிய இதழ்களில் அடுத்தடுத்து வெளிவரத் தொடங்கின. அவ்வப்போது ‘கண்ணதாசனின்’ இதழிலும் அவரது கவிதைகள் வெளிவந்தன.

மாணவப் பருவத்தில் இராதாகிருஷ்ணனைப் பெரிதும் பாதித்த சோகம்

தாஷ்கண்ட் ஒப்பந்தம் கையெழுத்தாகிற போது இராதாகிருஷ்ணன் ஒரு கல்லூரி மாணவர். வரலாறு படைத்த அந்த தாஷ்கண்ட் ஒப்பந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அதிர்ச்சியாகச் சில வலிகளை வரலாறு பதிவு செய்து கொள்ள வேண்டிய சோகம் நிகழ்ந்தது. லால் பகதூர் சாஸ்திரி மறைகிறார். அவரது மரணம் மாணவப் பருவத்தில் இருந்த இராதாகிருஷ்ணனைப் பெரிதும் பாதித்தது. அன்றிரவு விடுதி அறையில் தங்கி இருந்த அவருக்குத் தூக்கம் வரவில்லை; ‘நல்ல மனிதர்களைக் காலம் இப்படிக் களவு செய்து கொண்டு விடுகிறதே’ என்று கலங்குகிறார். அந்த அழுத்தமான அவல உணர்வு ஒரு கவிதையாக வெளிப்படுகிறது. அதுதான் அவரது முதல் கவிதை (என்னுரை, பாட்டு வெளியினிலே…, ப.10). ‘என்று இனி காண்போம்?’ என்ற அக் கவிதை கல்லூரி ஆண்டு மலரில் அச்சானது. அடுத்து, ‘நாமகள்’ என்ற சிற்றிதழிலும் இராதாகிருஷ்ணனின் படைப்புக்கள் வெளிவந்தன.

எழுத்தாளராக, கவிஞராக, பத்திரிகையாளராக, பேச்சாளராக வர வேண்டும் என்று ஏர்வாடியார் கருதியதும் இல்லை; கனவு கண்டதும் இல்லை. என்றாலும், கல்லூரி நாள்களில் இருந்தே அவர் எழுதுவார். அவரது கவிதைகள் பல சிற்றிதழ்களில் வெளிவந்துள்ளன. கல்லூரி மலரில் வெளிவந்த லால் பாகதூர் சாஸ்திரியின் மறைவு பற்றிய இரங்கற் பாவே அவரது முதல் கவிதை. ‘மாலை முரசு’ இதழில் கவிதைகளும் சிறுகதைகளும் வெளிவந்தன. ஏர்வாடியார் எழுதிய முதல் சிறுகதையே ‘அமுத சுரபி’ இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றது. ‘திருமணம் வெறும் நிகழ்ச்சிகள் அல்ல’ என்ற அச் சிறுகதையோடு பலவேறு இதழ்களில் வெளியான சிறுகதைகளும் சேர்ந்து வெளியான சிறுகதைத் தொகுப்பு தமிழ் வளர்ச்சித் துறையின் முதற் பரிசினைப் பெற்றது. இதழ்களும், வானொலியும், தொலைக்காட்சியும் தந்த வாய்ப்புகளும் கூடுதலாகக் கொஞ்சம் வருவாயையும் ஈடுபாட்டையும் பயிற்சியையும் தந்தன எனலாம். எவரிடத்தும் இதமாகவும் இனிமையாகவும் பழகும் ஏர்வாடியாரின் பண்பு நலன் அவரது நட்பு வட்டத்தைப் பரந்து விரியச் செய்தது.

எழுத்தாளர் ஆதல்

வங்கிப் பணியில் சேருவதற்கு முன்பே இராதாகிருஷ்ணனை எழுத்துத் துறை ஆட்கொண்டது; என்றாலும், எழுத்துப் பணியில் அவரால் முனைப்புடன் ஈடுபட இயலவில்லை. வங்கிப் பணியில் நுழைவதற்கு முன்னும் வங்கிப் பணியில் சேர்ந்த பிறகும் இராதாகிருஷ்ணனுக்குச் சிற்றிதழ்களே ஆதரவுக் கரம் நீட்டின; வானொலியும் பெரிய ஆதரவினை அளித்தது. ‘ஏர்வாடி’ என்ற ஊரின் பெயரும் அவரது இயற்பெயரோடு இணைந்து ‘ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன்’ என எழுத்துலகில் அறியப் பெற்றார். எழுத்துத் துறையைப் பொறுத்தவரையில், ‘அமுதசுரபி’ இதழின் ஆசிரியர் விக்கிரமன், இராதாகிருஷ்ணனுக்கு ஞானத் தந்தை போன்றவர்; “தனிப்பட்ட முறையில் கலைமாமணி விக்கிரமன் அவர்களுக்குத் தான் பெரிதும் கடமைப்-பட்டிருக்கிறேன். என்னை ஒரு நல்ல எழுத்தாளனாக உருவாக்கியதும் தமிழ் கூறும் நல்லுலகத்திற்குக் காட்டியதும் அவர்தான். கலைமாமணி விக்கிரமன் அவர்கள் என மூத்த சகோதரர் போன்றவர். என்னுடைய ஒவ்வொரு நூல் வெளியீட்டு விழாக்களிலும் கலந்து கொண்டுள்ளார்” (அரும்பு, ஜுன் 2016, ப.36) எனக் கலைமாமணி விக்கிரமனுக்குப் புகழாரம் சூட்டியுள்ளார் இராதாகிருஷ்ணன். ‘அமுதசுரபி’ இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற உற்சாகத்தில் ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன் நிறைய எழுதத் தொடங்கினார்.

“வங்கி அதிகாரிகள் சிலர் என்னை உற்சாகம் இழக்கச் செய்தாலும் பணிகளைச் சரியாகத் செய்ததாலும், எல்லாரிடமும் இணக்கமாக இருந்ததாலும் இலக்கியம், வங்கி இவ்விரண்டையும் இரட்டைக் குதிரைச் சவாரியாக அல்லாமல், இரு தண்டவாளப் பயணமாக்கி வெற்றிகரமாக முன்னேறினேன்… 5-ஆவது உலகக் கவிஞர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள வங்கியே என்னை 01.07.1981-இல் அமெரிக்காவுக்கு (சான்பிரான்சிஸ்கோ) அனுப்பியது… வங்கி சிறந்த நூல்களுக்குப் பரிசுகள் அளித்ததில் பெரும்பங்கு பெற்றேன். 15 ஆயிரம் கலைச் சொற்கள் அடங்கிய வங்கிக் கலைச்சொல் அகராதித் தொகுப்பினை மாண்புமிகு முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆர். வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 31.05.2007-இல் வங்கிப் பணியில் இருந்து பதவி ஓய்வு பெற்றேன்” (அரும்பு, ஜுன் 2016, ப.36) என வங்கியில் பணியாற்றிய ஏறத்தாழ 39 ஆண்டுக் காலம் பற்றிய தம் பசுமையான நினைவலைகளைப் பதிவு செய்துள்ளார் ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன்.

‘கவிதை உறவு’ இலக்கிய அமைப்பும் இதழும் தொடங்கல்


“கவிதை தமிழர்களாகிய நமக்குப் பொழுதுபோக்கு அல்ல, வாழ்க்கை! வாழ்க்கைக்கு ஓர் அர்த்தத்தையும் சுவையையும் அளிப்பது கவிதை. கவிதை எழுதுகிற தன்மையும், அதை ரசிக்கிற தன்மையும்தான் மனிதர்களை மனிதர்களாக, அவர்களை மனித நேயம் மிக்கவர்களாக வைத்திருக்க உதவுகிறது. மற்ற கலை, இலக்கிய வடிவங்களைப் போல் அல்லாது கவிதை ஒன்றுதான் உணர்த்துகிறது, உணர்வுகளைக் கிளர்த்துகிறது. ஊனை உருக்குவது கவிதை. கவிதையைத் தொலைத்து விடுகிற ஒரு சமூகத்தில் அமைதியும் தொலைந்து போய்விடும்” (ஆத்திமாலை: நவம்பர் 22-28, 2018, ப.4) என்பது ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணின் அழுத்தமான கருத்து; ஆழ்ந்த நம்பிக்கை. தமிழ் கூறு நல்லுலகில் கவிதை எழுதத் தொடங்குகின்றவர்களுக்கு எல்லாம் ‘கவிதை உறவு’ என்ற ஓர் இலக்கிய அமைப்பினையும், மனித நேய இலக்கியத் திங்கள் இதழையும் 18.05.1972-இல் தொடங்கி, 1986-ஆம் ஆண்டு வரை தனிச்சுற்றேடு ஆகவும், பிறகு 1987-இல் இருந்து நடுவண் அரசு பதிவு இதழாகவும் (RNI) நாற்பத்து ஆறு ஆண்டுகளாகத் தொடர்ந்து நடத்தி,அவர்கள் இயங்குவதற்குக் களமும் தளமும் அமைத்துக் கொடுத்த பெருமைக்கு உரியவர் ஏர்வாடியார்.

“பக்கம் பக்கமாய் வளர்வதல்ல கவிதை – இதயத்தின் பக்கம் வருவதே கவிதை” (கவிதை மின்னல்கள், ப.81) என்பது ஏர்வாடியாரின் கவிதைக் கொள்கை. அவரது நோக்கில், கவிதை எழுதுவது என்பது வேறு; கவிதையாகவே வாழ்வது என்பது வேறு. ஏர்வாடி இராதாகிருஷ்ணன் இயல்பாகவே மனித நேயமும் எல்லோர்க்கும் உதவும் மக்கட் பண்பும் கவிதை உள்ளமும் கொண்டவர். அவரது வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வு அதற்குச் சான்றாகத் திகழ்கின்றது. உள்ளத்தைத் தொடும் அந் நிகழ்வு வருமாறு:

வங்கி வழங்கிய கடன் மூலம் அச்சு இயந்திரம் வாங்கிய மணி என்பவர் கடனாளியாகி, வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்தமுடியாமல் தவிக்கின்றார். அவரது கடனை வசூல் செய்வது தான் வங்கியின் கடமையே தவிர, அவர் ஏன் கடனைச் செலுத்தாமல் தவிக்கின்றார் என்பதை எல்லாம் வங்கி ஆராய்ச்சி செய்யாது. ஆனால், ஏர்வாடியார் கடன் வாங்கியவர் ஏன் கடனைத் திரும்பச் செலுத்த முடியாமல் தவிக்கின்றார் என்பதை விசாரிக்கின்றார். அவர் வங்கி வழங்கிய கடன் தொகை மூலம் ஓர் அச்சு இயந்திரத்தை வாங்கி இருக்கின்றார்; ஆனால், அச்சு எழுத்துக்களை வாங்க வழிவகையின்றி நிற்கின்றார். இதனை அவரிடம் விசாரித்து அறிந்த ஏர்வாடியார், அவருக்கு அச்சு எழுத்துக்களை வாங்கத் தமது நண்பர்களோடு சேர்ந்து நிதி திரட்டிப் பண உதவி செய்கின்றார். அந்த அச்சக உரிமையாளர் கடனில் இருந்து மீண்டு இயந்திரம் வாங்கிய கடனை அடைக்கின்ற அதிசயம் நிகழ்கின்றது அவரது அச்சகத்திலேயே ஏர்வாடியாரும் அவரது நண்பர்களும் சேர்ந்து எழுதிய ‘வண்ணங்கள்’ என்ற கவிதைத் தொகுப்பு நூல் ஒன்று அச்சிடப் பெறுகின்றது புத்தகம் அச்சிட்டதற்கான செலவினை அந்த அச்சக உரிமையாளர் வாங்க மறுக்கின்றார்; ‘நன்றிக் கடனை என்னால் அடைக்க முடியாது சார்’ என்று கண்கள் குளமாகக் கூறி நிற்கின்றார். ஏர்வாடியாரும் மனம் கரைந்து உருகப் பேச வார்த்தைகள் இன்றித் தவிக்கின்றார். இந்த நிதர்சனமும் கரிசனமும் தான் அவரைக் கவிஞராகவும் எழுத்தாளராகவும் நாடக ஆசிரியராகவும் ஆக்கியது எனலாம்.

ஏர்வாடியாருக்கு வானொலி வசப்படல்

இராதாகிருஷ்ணன் வானொலியின் நாடக ஆசிரியராக அறிமுகம் ஆவதற்குக் காரணமாக அமைந்தவர் திரு.டி.வி.ஆர்.சாரி என்ற அதிகாரி ஆவார்; ‘ஏர்வாடி இராதாகிருஷ்ணன்’ என்ற பெயரை இராதாகிருஷ்ணனுக்குச் சூட்டியவரும் அவரே. தொடர்ந்து, வானொலி நாடகக் கலையின் நுணுக்கங்களைக் கற்றுத் தந்து, வாய்ப்புக்கள் நல்கி, இராதாகிருஷ்ணனை ஒரு சிறந்த வானொலி நாடக ஆசிரியராக உருவாக்கியவர் திரு.டி.என்.சுகி சுப்பிரமணியம் ஆவார். வானொலியில் நாடகங்கள் படைத்ததோடு மட்டுமன்றி, மெல்லிசை, உரைச் சித்திரம், நேர்காணல், கவிதை வாசிப்பு, சிறுகதை படித்தல் என்றாற் போல் வானொலியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு, தமது படைப்புத் திறத்தினைப் பட்டை தீட்டிக் கொண்டார் இராதாகிருஷ்ணன். வானொலியால் அவரை வளர்த்த பெருமக்களில் ஹகீம், துறைவன், ஏ.நடராசன் ஆகியோரும் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். ‘வானொலி ஏர்வாடியாருக்கு வசப்பட்டதைப் போல வேறு எவர்க்கும் வசப்பட்டதில்லை’ என்று ஒரு முறை ஞானபாரதி வலம்புரி ஜான், ஏர்வாடியாருக்குச் சூட்டிய புகழாரமும் இங்கே நினைவுகூரத் தக்கதாகும்.

ஏர்வாடியாரின் முதல் வானொலி நாடகம் ‘வாய்மையே வெல்லும்’ என்பது. அதற்கு முன்னால் ‘அழகெல்லாம் முருகனே’ என்ற சிறப்புத் தேன் கிண்ணம் நிகழ்ச்சி. இரண்டிற்குமே ‘ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன்’ என்றே வானொலி நிலையத்தார் அறிமுகம் செய்து வைத்தனர். நாடகமோ, உரைச் சித்திரமோ, சிறுகதை வாசித்தலோ, தொகுப்பு நிகழ்ச்சியோ எதுவானாலும் வானொலியில் அடிக்கடி அறிவிப்புகள் செய்வார்கள். ஏர்வாடியார் பெயரை அடிக்கடி உச்சரித்து உச்சரித்தே சென்னை, திருச்சி வானொலி நிலையங்கள் அவரைப் புகழேணியின் உச்சிக்குக் கொண்டு சென்றன.

சென்னைத் தொலைக்காட்சி தொடங்கிய நாட்களில் மிகச் சிறந்த கலைஞர்களின் பட்டியல் ஒன்றினைச் சென்னை வானொலி தந்தது. அதில் குறிப்பிடப்பட்டிருந்த பத்து நாடக ஆசிரியர்களுள் ஏர்வாடியாரின் பெயரும் ஒன்றாக இடம்பெற்றிருந்தது. அவர்களுள் ஆறு பேருக்கு நாடகப் பட்டறை நடத்தித் தொடர்ந்து வாய்ப்பும் அளித்தது சென்னைத் தொலைக்காட்சி. அங்கே திருமிகு சேனாபதி, கோபாலி, யு.எம்.கண்ணன், முத்துசாமி போன்ற அதிகாரிகள் ஏர்வாடியாரின் நாடகப் புனைதிறனை பயன்படுத்திக் கொண்டதோடு, நன்கு அதனை மெருகூட்டிக் கூர்மைப்படுத்தவும் செய்தனர். தொலைக்காட்சியிலும் நாடகங்கள் படைப்பதோடு நின்று விடாமல், மெல்லிசை, நேர்காணல், சிறுகதை, கவிதை வாசிப்பு முதலான பிற நிகழ்ச்சிகளிலும் தமது தனித்திறன் வெளிப்படும் வகையில் முனைப்புடன் இயங்கி முத்திரை பதித்தார் ஏர்வாடியார்.

முதல் நூல் கற்றுத் தந்த வாழ்க்கைப் பாடம்


ஏர்வாடியாரின் முதல் நூல் ‘உனக்காக ஒரு பாடல்’ என்பது. வானொலியில் அவ்வப்போது ஒலிபரப்பான மெல்லிசைப் பாடல்களின் தொகுப்பு அது. அந் நூலுக்குத் தமிழறிஞர் அ.கி.பரந்தாமனாரிடம் (இருவரும் சென்னை புரசைவாக்கத்தில் ஒரே தெருக்காரர்கள்; பேட்டைவாசிகள்) அணிந்துரை பெற்று வந்து, வாசித்துப் பார்த்த போது அதிர்ந்து உறைந்து போனார் ஏர்வாடியார். காரணம், ‘கவிதைக்கு நல்ல கற்பனை வளமும் கருத்துச் செறிவும் இருந்தால் மட்டும் போதாது. பிழையில்லாத தமிழும் பிறமொழி கலவாத நிலையும் வேண்டும்’ என்றெல்லாம் எழுதியதோடு அல்லாமல், ஒரு தேர்வுத் தாளைத் திருத்துவது போலத் திருத்தியும் தந்துவிட்டார் அ.கி.பரந்தாமனார். ஏர்வாடியாரோ சற்றும் மனம் தளராமல் – உடைந்து போகாமல் – மீண்டும் அவரைச் சந்தித்து, ‘அய்யா, இந்தத் திருத்தங்களோடு புதிதாக ஒன்றை நான் அச்சிட்டுக் கொண்டு வந்தால் அணிந்துரையை மாற்றித் தருவீர்களா?’ என்று தயங்கியவாறே கேட்க, ‘சரி’ என்று அவரும் தலையாட்ட, அப்படியே செய்தார்; அடித்த ஆயிரம் படிகளையும் எடைக்குப் போட்டுவிட்டு பிழையே இல்லாத புது நூலாய், பாராட்டுகள் செறிந்த பாட்டுத் தொகுதியாய் மீண்டும் அந்நூலை வெளிக்கொணர்ந்தார். இந் நிகழ்வு அ.கி.ப., ஏர்வாடியார் என்னும் இவரது ஆளுமைப் பண்புகளையும் ஒருசேரப் புலப்படுத்தி நிற்பது குறிப்பிடத்தக்கது. ‘வாழ்க்கையில் தவறுகள் தவிர்க்க இயலாதவையாக இருக்கலாம்; ஆனால், அவற்றைத் திருத்திக் கொள்ள நாம் தயங்கவே கூடாது’ (என் பக்கம்: ஏழாவது தொகுதி, பக்.100-101) என்னும் வாழ்க்கைப் பாடத்தை ஏர்வாடியாருக்குக் கற்றுத் தந்தது அவரது முதல் நூல்.

ஏர்வாடியாரின் முதல் நூலைக் கவியரசர் கண்ணதாசன் 1976-ஆம் ஆண்டு ஜுன் திங்களில் எளிமையாக நடந்த விழா ஒன்றில் வெளியிட்டுப் பெருமை சேர்த்தார்; ‘எளிமையான, இனிமையான இசைக்கு லாகவமான மொழி’ என்று ஏர்வாடியாரின் மொழி ஆளுமையைப் பாராட்டியதோடு நின்றுவிடாமல், ஏர்வாடியார் திரையுலகிற்கு வர வேண்டும் என்றும், தாமே அதற்கான வாய்ப்பை உருவாக்குவதாகவும் கூறி, இயக்குநர் மோகன்காந்திராமன் தயாரிப்பில் அப்போது உருவாகிக் கொண்டிருந்த ‘ஆனந்த பைரவி’ திரைப்படத்தில் தம்மோடு ஒரு பாடலாசிரியராக ஏர்வாடியாரை அறிமுகமும் செய்து வைத்தார். தொடர்ந்து, இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் உதவியால் மொழிமாற்றம் செய்யப்பட்ட மலையாளப் படங்கள் சிலவற்றிற்குப் பாடல்கள் எழுதும் வாய்ப்புகள் கிடைத்த போதிலும், குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களின் அறிவுறுத்தலினால், ஒரு திரைப்பாடலாசிரியராகத் தொடரும் நிலை ஏர்வாடியாருக்கு வாய்க்காமல் போனது.

ஒருநாளும் தளர்வறியாதது ஏர்வாடியாரின் மனம்


ஏர்வாடியார் எழுதிய ‘திருமணங்கள் வெறும் நிகழ்ச்சிகள் அல்ல’ என்ற சிறுகதையைப் புகழ் பெற்ற இதழ் ஒன்று ‘பிரசுரிக்க இயலவில்லை’ என்ற குறிப்புடன் திருப்பி அனுப்பியது. ஆனால், வேறு ஓர் இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் அக் கதை பரிசு பெற்றது. அது மட்டும் அன்று, மேலும் சில சிறுகதைகளோடு சேர்ந்து அதுவே ஒரு தொகுப்பாக வெளிவந்த போது தமிழ் வளர்ச்சித் துறையின் முதற்பரிசையும் அவருக்குப் பெற்றுத் தந்தது. அதில் ஒரு சிறுகதையை இந்தியத் திரைப்படப் பிரிவு திரைப்படமாகத் தயாரித்து வெளியிட்டது; அந்தக் கதை பத்தாவது வகுப்பு பயிலும் மாணவர்களுக்குப் பாடத் திட்டத்தில் சேர்க்கப் பெற்றது. “பேர் வருமா, புகழ் வருமா, பணம் வருமா என்றெல்லாம் எதிர்பாராமல் எழுதிக் கொண்டிருக்கிறேன். எழுத வருகிறது. நான் தளர்வதில்லை என்பதே என் பலம்” (வாழ்க்கை வாழத்தான்: இரண்டாம் பாகம், ப.31) என்னும் ஏர்வாடியாரின் ஒப்புதல் வாக்குமூலம் இங்கே மனங்கொளத் தக்கது ஆகும்.

வரமாக அமைந்த இல்லற வாழ்க்கை


ஏர்வாடியாரின் திருமண நாளான 10.09.1972-இல் நலங்கு என்கிற சடங்கின் போது நடந்த ஒரு நெகிழ்வான நிகழ்வு வருமாறு: “நீர் நிரம்பிய செம்பில் ஒரு மோதிரத்தைப் போட்டு எடுக்கச் சொல்கிறார்கள். இருவரும் உள்ளே கை நுழைக்கிறோம். மோதிரம் அவள் கையில் கிடைக்கிறது. யாருக்கும் தெரியாமல் அந்தச் செம்புக்குள்ளேயே அந்த மோதிரத்தை எனக்குக் கொடுத்து விடுகிறாள், அப்போது எனக்குத் தெரியவில்லை. தனியே இருக்கும் போது சொல்கிறாள் ‘நீங்க தோற்கக் கூடாது, அதுக்காகத் தான்’ என்று” (எழுத்துச் சிறகுகள், பக்.87-88). ஏர்வாடியார் அமைதியான இல்லற வாழ்க்கையை வரமாகப் பெற்றவர். “உங்கள் வீடு என்ன மதுரையா, சிதம்பரமா?” என்று யாரேனும் கேட்டால், பெருமையாகச் ‘சிதம்பரம் தான்!’ என்று சொல்வார் ஏர்வாடியார். வேறொன்றும் இல்லை, அவருடைய துணைவியார் பெயர் திருமதி சிதம்பரம்மாள் என்பதாகும். அலவலகப் பணி, இலக்கிய ஆக்கம், இதழ்கள் மற்றும் நூல்கள் வெளியீடு, உலக கலா, நிகழ்ச்சிகள் பங்கேற்பு என வெளியிலேயே மிகுதியாக வலம் வந்துகொண்டிருக்கும் அவரது வீட்டுப் பொறுப்புக்களை எல்லாவற்றையும் சிறப்பாக நிறைவேற்றி, அவரது காரியம் யாவினும் கைகொடுத்து வருபவர் திருமதி சிதம்பரம்மாள் தான்!

மென்மையான நகைச்சுவை உணர்வும் கூர்மையான அறிவுத் திறனும் படைத்தவர் சிதம்பரம்மாள் அம்மையார் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு: பெரும்பாலும் ஏர்வாடியாரின் வானொலி, தொலைக்காட்சி நாடகங்களில் ஏதேனும் ஒரு பாத்திரத்திற்கு ‘சங்கர்’ என்ற பெயர் நிச்சயமாக இருக்கும். காரணம் அந்தப் பெயரைக் கேட்கிற போதெல்லாம் ‘தன்னுடைய பெயர் வருகிறதே!’ என்று அவர்களது மூத்த மகன் சங்கர் சந்தோஷப்படுவான் என்பது தான். இதை ஒரு நாள் தம் வீட்டிற்கு வந்திருந்த நண்பர் ஒருவரிடம் ஏர்வாடியார் பெருமையாகச் சொல்லிக் கொண்டிருந்தாராம். அவர் போனதும் ஏர்வாடியாரின் துணைவியார் அவரிடம் இப்படிக் கேட்டாராம்: “சங்கர் சந்தோஷப்படுவது இருக்கட்டும். உங்கள் நாடகங்களில் ‘கோமதி’ என்கிற பாத்திரமும் தவறாமல் வருகிறதே? இது எந்தக் கோமதியை சந்தோஷப்படுத்துவதற்கு? யார் இந்தக் கோமதி?” ‘இதை அவள் விளையாட்டாகக் கேட்டாளோ அல்லது விஷமமாகவோ? இருந்தாலும் அதில் இழையோடிய நகைச்சுவையை நான் இன்னும் ரசிக்கிறேன்!” (என் பக்கம்: முழுமையான தொகுதி I, ப.85) எனத் தம் உணர்வினை நயமாகப் பதிவு செய்துள்ளார் ஏர்வாடியார்.

ஏர்வாடியாருக்குத் தமது தாய்-தந்தையர் மீது போலவே மாமனார்- மாமியார் மீதும் அளப்பரிய மதிப்பும் மரியாதையும் உண்டு. நால்வருமே இப்போது உயிரோடு இல்லை. எனினும் தாய்-தந்தையரான சுப்பையா-தங்கம்மாள் பெயரில் சிறந்த மூன்று வாழ்வியல் நூல்களுக்கும், மாமனார்- மாமியாரான பத்மநாபன்-பார்வதி பெயரில் சிறந்த மூன்று சிறுகதைகளுக்குப் பரிசுத் தொகையும் ஆண்டுதோறும் ‘கவிதை உறவு’ சார்பில் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இராதாகிருஷ்ணன்-சிதம்பரம்மாள் இணையர் இரண்டு ஆண் மக்கள், ஒரு பெண் குழந்தை என மூன்று மக்கட் செல்வங்களைப் பெற்றவர்கள். மூத்த மகன் திரு.ஆர்.கெளரிசங்கர் எம்.சி.ஏ. படித்தவர்; கனடா நாட்டின் குடியுரிமை பெற்றவர்; அங்கே கணினிப் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். அவரது துணைவியார் திருமதி சுமதி கெளரிசங்கர் பி.இ., எம்.எஸ். படித்தவர்; அவரும் கனடாவில் பொறியாளராகப் பணியாற்றுகிறார். இரண்டாவது மகனான டாக்டர் ஆர்.அருண்குமார் எம்.எஸ்ஸி., எம்ஃபில்., பிஎச்.டி., கருத்தரிப்புக்கான சிறப்பு மருத்துவத் துறையில் பணியாற்றி வருகிறார். மேலும் அவர் புகழ் வாய்ந்த ஒரு மருத்துவ நிறுவனத்தின் இயக்குநரும் கூட. தந்தையின் வழியில் கவிதைகள் எழுதி வரும் அவர் நூல்களும் வெளியிட்டுள்ளார். அவரது துணைவியார் திருமதி டாக்டர் குணசுந்தரி எம்.பி.பி.எஸ்., எம்.டி., பயின்றவர்; அரசு மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர்; மருத்துவப் பணியையும் ஆற்றி வருகிறார். மகள் திருமதி சுதா இராமகிருஷ்ணன் பி.இ. படித்தவர்; சொந்தமாக மென்பொருள் நிறுவனம் ஒன்றை நடத்திக் கொண்டு, கல்வி தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அவரது கணவர் திரு.வி.இராமகிருஷ்ணன் பி.இ., எம்.எஸ்., காக்னிஸன்ட் நிறுவனத்தில் மூத்த மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றுகிறார். இரண்டு பேரன்கள் கவின், நிதில். இவர்களில் நிதில் வளர்ந்து வரும் கார்ட்டூன் ஓவியர். பேத்திகள் இருவர். இவர்களில் செல்வி கீர்த்தி நல்ல ஆங்கிலக் கவிஞர். கிருபா வளர்ந்து கொண்டிருக்கிறாள்.

ஏர்வாடிக்குப் பெருமை சேர்த்த இராதாகிருஷ்ணன்

இஸ்லாமியர்களே அதிகமாய் வாழ்கிற இவ்வூரில் சிறுபான்மை-யினராகப் பல்வேறு இனமக்கள் வாழ்ந்தாலும் கூட, பெரும்பான்மை, சிறுபான்மை என்ற பாகுபாடு இன்றி வாழ்கிற பெருமக்களைக் கொண்டு இயங்குகிற ஊர் இது. மூன்றே மூன்று பிராமண குடும்பங்களைக் கொண்ட இவ்வூரின் கிராம முன்சீப் ஓர் ஐயர் என்பதே இவ்வூரின் மத, மனித நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டு. ஆண்டுகள் பலவாக ஆரம்பப் பள்ளிகளில் இந்து-இஸ்லாம் வேறுபாடு இன்றி கலிமா சொல்வது தான் எல்லோருக்குமான காலை வணக்கப் பாடல்.

‘ஏர்வாடி’ என்றதும் பளிச்சென்று நினைவுக்கு வருகிற இடமும் நிகழ்வுகளும் மன நலம் குன்றியோர்க்கான முகாமும், சில ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த தீ விபத்தும் மரணங்களும்தான். ‘ஏர்வாடி’ என்ற பெயர் ஏளனமாகத் திரைப்பட வசனங்களில் கூட சித்திரிக்கப்படுவது உண்டு. இந்த ஏர்வாடி இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கிற பிரபலமான தர்ஹா அமைந்துள்ள ஊர். தமிழ்நாட்டில் ‘ஏர்வாடி’ என்ற பெயரில் 4 கிராமங்கள் உள்ளன. இராமநாதபுரம், நெல்லை மாவட்டங்களைப் போலவே தஞ்சை மாவட்டத்திலும், சேலம் மாவட்டத்திலும் ‘ஏர்வாடி’ என்ற பெயரில் ஊர்கள் உள்ளன.

ஏர்வாடி என்றதும் இன்று எல்லோருக்கும் அது ஒரு ஊர் என்று நினைவுக்கு வருவதற்கு அப்பால், அது இலக்கியத்தில் இடம்பெற்றிருக்கிற ஒரு பெயர் என்பதாகவே பெருமையோடு பதிவு செய்யப்பட்டுவிட்டது. இயக்குநர் விசு அவர்கள் ஒரு முறை ஏர்வாடியாரிடம் “‘ஏர்வாடி’ என ஊர்ப் பெயரை இயற்பெயரோடு சூடிக் கொண்ட உங்கள் துணிவைப் பாராட்ட வேண்டும். கீழ்ப்பாக்கம் குணசீலம் ஏர்வாடி என்பன எல்லாம் மன நோயாளிகள் தொடர்பான ஊர்கள் என்பதாகக் கிண்டலாகப் பேசப்படும்போது துணிச்சலாக அதைப் பெயருக்கு முன்னால் சூடிக் கொண்டிதற்காக உங்களைப் பாராட்ட வேண்டும். ஏர்வாடியை ஓர் இலக்கியப் பெயராக, எழுத்தின் பெருமையாக மாற்றி விட்டீர்கள்!” என்று தம் பாராட்டைத் தெரிவித்தாராம்.

‘ஏர்வாடி’ என்றதும் நினைவுக்கு வருகிற பிறிதொரு சுவையான நிகழ்ச்சி: ஒருமுறை புதுவைத் தொலைக்காட்சி நிலையம் கவிக்கோ அப்துல் ரகுமான் தலைமையில் ஏற்பாடு செய்திருந்த ஒரு கவியரங்கில் ஏர்வாடியார் கலந்து கொண்டார். அந்தத் தருணத்தில் தான் இராமநாதபுரம் ஏர்வாடியில் மன நல மையத்தில் தீ விபத்து ஏற்பட்டு பல மன நோயாளிகள் எரிந்து, இறந்து போயிருக்கின்றனர். பரபரப்பாகச் செய்திகள் பத்திரிகைகளில் பரவிக் கொண்டிருந்த நேரம். கவிக்கோ அவர்கள் ஏர்வாடியாரைக் கவிதை வழங்க மேடைக்கு அழைக்கிறார்.


“அடுத்து கவிஞர் இராதாகிருஷ்ணன்
ஏர்வாடியில் இருந்து வருகிறார்
யாரும் பயப்பட வேண்டாம்.”

இந்த அறிமுகத்திற்குப் பலத்த கரவொலிகள் எழுந்தனவாம். கூடவே கேலியாக ஒரு சிரிப்பொலியும் அரங்கில் பரவியதாம். ஒலி பெருக்கிக்கு முன்னால் ஏர்வாடியார் வந்து நிற்க கரவொலியும் சிரிப்பொலியும் இன்னும் அதிகமாயினவாம். சற்று அமைதி திருப்பியதும் ஏர்வாடியார் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல்,

“ஏர்வாடியில் இருந்து
வருகிறவர்களைப் பார்த்து
பயப்படத் தேவையில்லை;
போகிறவர்களோடு பழகும் போது தான்
கொஞ்சம் பத்திரமாக இருக்க வேண்டும்”

என்றதும் இன்னும் அதிகமான கரவொலியும் வரவேற்பும் அரங்கை அதிரச் செய்தனவாம் (மனத்தில் பதிந்தவர்கள்: 4-ஆவது தொகுதி, பக்.17-18).

நெல்லை ஏர்வாடி எத்தனையோ கலைஞர்களையும் கவிஞர்களையும் தமிழுக்குத் தந்திருக்கிறது கலைஞர் என்.பி.எம்.அப்துல் காதர், கள்ளத்தோணி அப்பாஸ், சமீரா மீரான், அண்ணாவி உதுமான், சாதுல்லா, சலாகுதீன் என்று வரிசைப்படுத்தலாம். ஆனால் ஊரை முதன்மைப்படுத்திக் கொண்டதில் ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணனுக்கு ஒரு சிறப்பிடம் உண்டு.

பெற்ற விருதுகளும் பரிசுகளும்

ஏர்வாடியாரின் வாழ்நாள் பணிகளுக்காக நாற்பதுக்கும் மேற்பட்ட விருதுகளும் சீரிய பட்டங்களும் அவரைத் தேடி வந்து பெருமைப்-படுத்தியுள்ளன. இயல் இசை நாடக மன்றத்தின் ‘கலைமாமணி விருது’, தமிழ்நாடு அரசின் ‘பாவேந்தர் பாரதிதாசன் விருது’, கனடா ‘உதயன்’ இதழ் வழங்கியுள்ள ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு (FETNA) நல்கியுள்ள ‘சாதனையாளர் விருது’, வாஷிங்டன் தமிழ்ச் சங்கத்தின் ‘சாதனையாளர் விருது’, சென்னை கம்பன் கழகத்தின் ‘கா.கு.கோதண்டராமன் விருது’, நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனின் ‘சிறந்த எழுத்தாளர் விருது’, தாய்மண் இலக்கியக் கழகத்தின் ‘ஞாலக் கவிஞர் விருது’, வி.ஜி.பி. நிறுவனங்களின் ‘வி.ஜி.பி. சந்தனம்மாள் அறக்கட்டளை விருது’, தமிழ்நாடு நல்வழி நிலையத்தின் ‘பொதிகைத் தமிழ்ப் பாவலர் விருது’, முத்தமிழ் ஆய்வு மன்றத்தின் ‘நாடகப் பேரொளி விருது’. ஸ்ரீராம் நிறுவனங்களின் ‘பாரதி தமிழ்ப் பணிச் செல்வர் விருது’, குன்றத்தூர் பாரதி தமிழ்ச் சங்கத்தின் ‘கவிதைக் காவலர் விருது’, ஞானபீடம் இலக்கியப் பேரவையின் ‘இலக்கியத் தென்றல் விருது’, சென்டினேரியன் டிரஸ்ட் வழங்கியுள்ள ‘சேவா ரத்னா விருது’, பாரதியார் சங்கத்தின் ‘பாரதிச் செம்மல் விருது’, செங்காடு திருக்கோயிலின் ‘எழுத்துச் செம்மல் விருது’ ஆகியன அவற்றுள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கனவாகும். மேலும், மேனாள் முதல்வர்கள் எம்.ஜி.இராமச்சந்திரன், ஜெ.ஜெயலலிதா இருவரது திருக்கரங்களாலும் முறையே சிறந்த நூல்களுக்கான விருது (1983), கலைமாமணி விருது (11.03.1993) வழங்கிச் சிறப்பிக்கப் பெற்றவர் ஏர்வாடியார் என்பதும், தமிழ்நாடு அரசு வழங்கும் சிறந்த நூலாசிரியருக்கான பரிசுகளை இருமுறை – ‘திருமணங்கள் வெறும் நிகழ்ச்சிகள் அல்ல’ என்னும் சிறுகதைத் தொகுப்புக்கும், ‘இன்னும் ஒரு மீரா’ என்னும் நாடக நூலுக்கும் ஆக – பெற்றவர் ஏர்வாடியார் என்பதும் கூடுதல் சிறப்புகள் ஆகும்.

ஏர்வாடியாரின் படைப்புலகும் ஆளுமையும்

1. மகாகவி பாரதியாரின் பாட்டு வரிகளில்,

“வல்லமை தாராயோ
இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே”

என்ற வரிகள் ஏர்வாடியாருக்கு மிகவும் பிடித்தவை. “‘யாரிடமும் பயன்பெறக் கருதாமல், யாருக்கும் பயனுற வேண்டும் என்கிற விழைவு மிகுந்தவன்’ என்பதால் இவ் வரிகள் எனக்கு மிகவும் பிடித்த வரிகளாய் இருப்பதில் வியப்பில்லை” (நல்லது நடந்தால் நல்லது, ப.219) என்பது தனிப்பட்ட முறையில் அதற்கு அவர் கூறும் காரணம் ஆகும்.

2. ‘கவிதை என் ஆன்மாவிற்கு நான் பரிமாறுகிற உணவு. நாளும் என் கண்களில் வளர்கிற கனவு’ (‘என்னுரை’, வெளிச்சம் வருகிறது…, p.vi) என மொழியும் ஏர்வாடியார், ‘நான் எழுதுகிறவற்றுள் எனக்கு இதம் சேர்ப்பது கவிதைதான்’ (‘இந்த வானில்…’, கவிதை வானில்…, ப.3) என அறுதியிட்டு உரைப்பது கருத்தில் கொள்ளத்தக்கது மரபுக் கவிதை, புதுக்கவிதை, முகநூல் கவிதை என்ற மூவகையான வடிவங்களிலுமாக 19 தொகுதிகளை வெளியிட்டுள்ளார் ஏர்வாடியார்.

3. ‘எனக்கு மிகவும் பிடித்த நாள்களில் ஒன்று என் பிறந்த நாள்’ (என் பக்கம்: ஐந்தாவது தொகுதி, ப.128) எனக் கூறும் ஏர்வாடியார், ஆண்டுதோறும் தம் பிறந்த நாளின் போது நூல் ஒன்று வெளியிடுவதை இன்று வரை வழக்கமாகவும் வாடிக்கையாகவும் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

4. ‘ஆசிரியராக வேண்டும் என்பது தான் என்னுடைய அந்நாளைய கனவு’ எனக் குறிப்பிடும் ஏர்வாடியார், ‘இவன் என் மாணவன் என்று எந்தச் சாதனையாளனையும் சொல்லிப் பெருமையுறலாம்’ (என் பக்கம்: ஐந்தாவது தொகுதி, ப.81) எனக் கூறுவது ஒட்டுமொத்த ஆசிரியர் இனத்திற்கே பெருமிதம் சேர்ப்பதாகும்.

5. “என் எழுத்தில் நான் ரசிக்கிற எழுத்தே ‘என் பக்கம்’ தான். இது நம் பக்கம்’…” (என் பக்கம்: 12-ஆவது தொகுதி, ப.10) என ஒப்புதல் வாக்குமூலம் வழங்கும் ஏர்வாடியார், இதுவரை ‘என் பக்கம்’ வரிசையில் 14 தொகுதிகளை வெளியிட்டிருப்பது போற்றத் தக்கது.

6. “வங்கி ஜீவனமாகவும் கவிதை ஜீவனாகவும் என் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள உதவியவை” (‘மின்னலுக்கு முன்…’, கவிதை மின்னல்கள், ப.3) என்பது ஏர்வாடியாரின் புகழ்பெற்ற கொள்கை முழக்கம்; தாரக மந்திரம்.

7. “ வானம் வசப்படுவது இருக்கட்டும்
வாழ்க்கை முதலில்
வசப்படட்டும்” (வெளிச்ச மலர்கள், ப.23)

என்பது இன்றைய இளைய தலைமுறையினருக்கு ஏர்வாடியார் விடுக்கும் செய்தி. அவரது கருத்தியலில், “தோன்றுவதில் இல்லை – வாழ்க்கை, துலங்குவதில் இருக்கிறது” (எப்போதும், ப.53).

8. ‘மனித நேயம் – மாண்பு மிகு வாழ்க்கை – மண்ணில் எவர்க்கும் அஞ்சாமை’ என்னும் குறிக்கோள் வாசகத்துடன் 1972-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் மனித நேய இலக்கியத் திங்கள் இதழ் ‘கவிதை உறவு’. இதில் ஏழாம் பக்கக் கவிதை, மனதில் பதிந்தவர்கள் தொடர், நூல் மதிப்புரை (3 நூல்களுக்கு), என் பக்கம் (இதழின் கடைசிப் பக்கத்தில்) என்னும் நான்கு கூறுகளையும் ஏர்வாடியாரே தொடர்ந்து எழுதி வருவது ஓர் இமாலயச் சாதனை ஆகும்.

9. ‘எழுத்து எனக்குத் தந்திருக்கிற எண்ணற்ற பெருமைகளில் பலரோடு பழகுகிற பேறுதான் மிகப் பெரிது’ (‘நெஞ்சில் ஒரு நாற்காலி’, மனத்தில் பதிந்தவர்கள்: எட்டாவது தொகுதி, ப.13) என மொழியும் ஏர்வாடியார் இவ்வகையில் தம் ‘மனத்தில் பதிந்த மாண்புறு மனிதர்கள்’ குறித்துக் ‘கவிதை உறவு’ இதழில் இருபது ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து எழுதி வருவதும், அவற்றை ஒன்பது தொகுதிகளாக நூல் வடிவில் வெளியிட்டிருப்பதும் ஏர்வாடியாரின் எழுத்துத் திறத்திற்கான கட்டளைக் கல் ஆகும்.

10. ‘தங்கள் எதிர்காலக் கனவு?’ என்று ஒரு நேர்காணலில் கேட்கப்பட்ட வினாவுக்கு ஏர்வாடியார் சொன்ன நறுக்கான விடை இதுதான்:

“கனவு என்று பெரிதாக எதுவும் இல்லை.
பயனுள்ள மனிதனாக வாழ வேண்டும்.
பண்புள்ளவனாகத் திகழ வேண்டும்.
இன்னும் நிறைய எழுத வேண்டும்.
இயல்பாக நடந்து கொள்ள வேண்டும்.
- இப்படி வாழ்ந்தால் சாதனைகளும் தொடரும்”


                                                    (அரும்பு, ஜுன் 2016, ப.37)

ஏற்வாடியார் பெற்ற சிறப்புகளில் இமயமாய் ஓங்கி உயர்ந்து நிற்பது


“என்னைப் பொறுத்த வரை என் வங்கி வாழ்க்கை இதமானது. எனக்கு ஏற்றதாகவும், ஏற்றமாகவும் அமைந்தது. வங்கியில் வேலைக்குச் சேர்ந்தது முதல் ஓய்வு பெற்று விடை பெறுகிற நாள் வரை எனக்கு அமைந்த உயர் அதிகாரிகள் மிகச் சிறந்தவர்கள். நல்லவர்கள். அப்படி அமைவது அபூர்வமானது. அது ஒரு பேறும் கூட” (சொந்தமாக ஒரு சொர்க்கம், பக்.41-42) எனத் தமது வங்கி வாழ்க்கை குறித்து உளமார்ந்த நெகிழ்வுடன் மொழிகிறார் ஏர்வாடியார்.

வங்கிப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு வேறு சில நிறுவனங்களில் இருந்து அவருக்கு அழைப்புகள் வந்தன. எனினும், அவற்றை ஏற்றுக் கொள்ளாமல், போதும் என்ற மன நிறைவோடும் மகிழ்வோடும் முழுநேர இலக்கியவாதியாக இருப்பதிலும் இயங்குவதிலுமே இன்பமும் இதமும் கண்டு வருகிறார் ஏர்வாடியார். எழுதுவது, பேசுவது, பயணங்கள் மேற்கொள்வது, பயன்படுவது, படைப்பது, படிப்பது என்று நிறைவாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற அவரது அனுபவங்களும் ஆளுமைப் பண்புகளும் ஒரு நல்ல, முழுமையான வாழ்வின் தனித்த அடையாளங்களாகத் துலங்குகின்றன எனலாம். முத்தாய்ப்பாக, ‘உங்களின் இந்த 72 ஆண்டுக் கால வாழ்வில் பெற்ற எத்தனையோ சிறப்புகளில் இமயமாய் ஓங்கி உயர்ந்து நிற்பது எது?’ என்ற வினாவுக்கு ஏர்வாடியார் தரும் ஏற்றமிகு விடை இதுதான்:

“வங்கியில் அலுவலும்
வளமார்ந்த தமிழ்த் திறனும்
எண்ணிலா நண்பர்களும்
இயன்றவரை நூல்பலவும்
எத்தனையோ நாடுகளில்
இறங்கியெழும் அனுபவமும்
விருதுகளும் பரிசுகளும்
வந்தமைந்த பெருமைகளும்
நன்மக்கட் பேறுடனும்
நாடறிந்த பெயரும் சேர்ந்த
எத்தனையோ சிறப்புகளில்
இமயமாய் எதுவென்றால்
நல்லவன் என்பதொன்றே
நான் அறிந்த பெருமையாகும்!”
(ஏர்வாடியார் கவிதைகள், ப.28)

‘சுருங்கச் சொல்லல்’ என்னும் உத்தியின் வழிநின்று, சுண்டக் காய்ச்சிய மொழியில், ஒரு வாய்பாடு வடிவில் ஏர்வாடியாரைக் குறித்து நாம் இப்படிச் சொல்லி நிறைவு செய்யலாம்.

மனித நேயம் + மாண்புமிகு வாழ்க்கை +
மண்ணில் எவர்க்கும் அஞ்சாமை = ஏர்வாடியம்.

 

‘தமிழாகரர்’ முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.

 

 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்