பெண் இனம் போற்றும் பெருந்தலைவர் எம்.ஜி.ஆர் (தொடர் - 15)

முனைவர் செ.இராஜேஸ்வரி

காதல் பாடல்களில் பெண்களைக் கவர்ந்த எம்ஜிஆர்

எம்.ஜி.ஆர் நடித்த படங்களில் வரும் காதல் பாடல்களையும் காட்சிகளையும் நாம் மூன்று வகையாக பிரிக்கலாம். முதலாவது 1951 ஒன்று முதல் 1967 வரையிலான காலகட்டம்; இரண்டாவது 1967 முதல் 1972 வரையிலான காலகட்டம்; மூன்றாவது 1972 முதல் 1977 வரையிலான காலகட்டம். அல்லது காங்கிரஸ் ஆட்சிக்காலம்; திமுக ஆட்சிக் காலம்; அண்ணா திமுக காலம் என்று மூன்றாகப் பிரிக்கலாம்.

காங்கிரஸ் காலத்தில் எம்ஜிஆரின் படப் பாடல்கள் காதலின் மேன்மையை எடுத்துக் கூறுவனவாக இயற்கை வர்ணனைகளை அதிகம் கொண்டவையாக இருந்தன. திமுக ஆட்சிக் காலத்தில் காதல் பாடல்களில் காதலி காதலனிடம் வந்து வலிய கொஞ்சி பேசுவதாக பாடல்கள் அமைந்திருந்தன; திமுக ஆட்சிக் காலத்தில் அரசின் சாதனைகளை நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க என்ற பாடல் விளக்கியது.

படியரிசி கிடைக்கிற காலத்தில நாங்க
படியேறி பிச்சை எடுக்க போறதில்ல;
குடிசை எல்லாம் வீடாகும் நேரத்தில நாங்க
தெருவோரம் குடியேற தேவையில்ல


போன்ற வரிகள் திமுக அரசின் படியரிசி திட்டத்தையும் எடுத்துரைத்தன, இதுவே திமுக ஆட்சிக்கு விளம்பரமாக அமைந்தது.

அண்ணா திமுக 1972இல் தொடங்கிய பிறகு இடையில் 1975இல் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. இதனால் எம் ஜி ஆரின் சண்டை காட்சிகளும் காதல் பாடல்களும் கடுமையான தணிக்கைக்கு உள்ளாயின.

காதல் உணர்ச்சி பரிமாற்றம்

ஷேக்ஸ்பியர் காலத்தில் டிராஜெடி எனப்படும் சோகக் காவியங்களை நாடகமாக்கி கொடுத்தனர். அதை கண்டு பார்வையாளர்கள் கண்ணிற் சிந்தினர். இதை ஆங்கிலத்தில் vicarious suffering என்றனர். அது போல தமிழ்ப் படங்களும் சோக சித்திரங்களாக வந்தன. அவற்றை கண்டு சில பெண்கள் கண்ணீர் விட்டு அழுவதுண்டு. இது சினிமா பார்ப்பதில் ஒரு வகை அனுபவம். மகிழ்ச்சியான பாடல்களை பார்ப்பவர் மனதில் மகிழ்ச்சியான உணர்வு இடம் பெற்றது. அதற்காக அவர்கள் படத்தில் வரும் நடிக நடிகையரை காதலித்தனர் என்று சொல்வது அர்த்தமற்ற கருத்தாகும். காதல் உணர்ச்சியை அறிவியல் பூர்வமாக அறிந்துகொண்டால் இந்த குழப்பங்கள் உண்டாகாது. .

காதல் உணர்வு பற்றிய அறிவியல் விளக்கம்


காதல் உணர்வு என்பது ஒருவர் மீது மற்றொருவருக்கு ஏற்படும் ஈர்ப்பு [attraction] என்கிறது அறிவியல். இதனால் உண்டாகும் மகிழ்ச்சிக்கும் சுகமான உணர்வுக்கும் காரணம் டோபோமின் செரட்டோனின் ஆக்சிடோசின் போன்ற ஹார்மோன்களின் சுரப்பு தான் என்று அறிவியல் கூறுகின்றனது டோபோமின் என்ற சுரப்பி மூளையின் ஹய்போதேலமஸ் பகுதியில் இருந்து சுரக்கிறது, அது அதிகாலை வேளையில் அதிகமாக சுரக்கும் என்பதால் இச்சுரப்பு மனிதனுக்கு உற்சாகத்தை அளிக்கிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படும் ஈர்ப்பின்போது உண்டாகும் போது இந்தச் சுரப்பு தான் சுரக்கிறது. அதனால் தான் அவர்களுக்கு ஒரு வித மயக்கம் தோன்றுகிறது. இந்த சுரப்பு ஆண் பெண் ஈடுபாடு, தவிர விளையாட்டு, இசை அல்லது பாடல் கேட்டல், இசைக்கருவி மீட்டல், நடனமாடுதல் ஆகியவற்றின் போதும் டோபோமின் சுரக்கும். இதனாலும் மனிதர்களுக்கு அதே மகிழ்ச்சி பிறக்கும். இந்த டோபோமின் மனிதனின் மனச்சோர்வை அகற்றி உற்சாகத்தை ஊட்டுவதால் பலரும் காதல் பாடல்களை கேட்க விரும்புகின்றனர். காதல் காட்சிகளை ரசிக்கின்றனர்.

எடுப்பு தொடுப்பு முடிப்பு


எம்ஜிஆர் படத்தின் காதல் பாடல்கள் அழகான ஒழுங்குமுறையுடன் காணப்படும். பல்லவி அனுபல்லவி சரணம் போல எடுப்பு தொடுப்பு முடிப்பு என்ற அமைப்பில் இருக்கும். இருவரிடையிலான ஆவல் எடுப்பு எனப்படும். அந்த ஆவலை நமக்கு புலப்படுத்தும் வகையில் காதல் காட்சியின் ஆரம்பம் அமைந்திருக்கும்.

எடுப்பு – பாடலின் ஆரம்பம்

எம்ஜி ஆர் படம் ஆவலை தெரிவிப்பதாகத் தொடங்கும் அந்த ஆவல் வார்த்தைகளால் வசனமாகவோ அல்லது எதிரெதிர் வரும் ஓட்டமாகவோ அமைந்திருக்கும்.

பாடல் ஆரம்பிக்கும் போது எம்ஜிஆரும் கதாநாயகியும் ஒருவரை ஒருவர் பார்க்க ஆவலோடு ஓடி வருவதாக சில பாடல்கள் உள்ளன. அவ்வாறு ஓடிவரும் இருவரும் அருகே வந்ததும் பாட்டைத் தொடங்குவதில்லை. ஒருவரை ஒருவர் நிதானமாக நின்று பார்த்து ரசித்து பின்பு பாடலைப் பாடத் தொடங்குவர. படகோட்டி படத்தில் வரும் தொட்டால் பூ மலரும் பாட்டு இதயக்கனி இல் வரும் இன்பமே உந்தன் பேர் பெண்மையோ என்ற பாட்டு போன்றவற்றை எடுத்துக்காட்டாக கூறலாம். இவ்வாறு ஓடி வந்து நின்று ஒருவரை ஒருவர் நிதானமாக பார்த்தும் ரசித்ததும் எம்ஜிஆர் தன் கதாநாயகியின் தலையை தடவி முகத்தை பார்த்து புன் சிரிப்பு சிரித்து தோள்களை தடவி தன் ஆவலை அவளை கண்டதனால் ஏற்பட்ட மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார். கூந்தலை நுகர்வார். அப்போது கதாநாயகி வெட்கத்துடன் அவ்விடத்தை விட்டு ஓடுவார். அவரை விரட்டி பிடிக்கும் வகையில் எம்ஜிஆர் பாடல் தொடங்குவார்.

தொடுப்பு –அனுபல்லவி

பார்த்ததும் இருவரும் பாடத் தொடங்குவதில்லை. சில படங்களில் வசனங்கள் வரும் அவை அற்புதமானவை. படகோட்டியில் சரோஜாதேவியை எம் ஜி ஆர் தொட வரும்போது அவர் விலகி விடுவார். அப்போது எம் ஜி ஆர்கேட்கும் தொடக் கூடாதா என்று கேட்பார். பின்பு தொட்டால் பூ மலரும் என பாடுவார். தேர்த்திருவிழாவில் உன் anpu வாழ்க என்று எம் ஜி ஆர் ஜெயலலிதாவை பார்த்து சொல்வார். அதற்கு ஜெயலலிதா உங்கள் ஆசை வாழ்க உங்கள் அழகு வாழ்க என்பார் எம் ஜி ஆர், நான் அவ்வளவு அழகாகவா இருக்கிறேன் என்று ஒரு ஐய வினா எழுப்பியதும் ஜெயலலிதா ‘’

அடிக்கட்டுமா முரசு அடிக்கட்டுமா
அழகன் நீதான் நீதான் நீ தான்
என்று அடிக்கட்டுமா என பாட தொடங்குவார்.
ராணி சம்யுக்தையில்


எம் ஜி ஆரும் பத்மினியும் பேசும் வசனம் வருமாறு:

சம்யுக்தை இனி உலகம் என் கையில்
நானும் கூட
பகைவர்கள் பழித்து பேசுவார்கள்
நண்பர்கள் உயர்த்தி பேசுவார்கள்
காதலன் அணைத்து பேசுவான்


காதலி அழைத்து பேசுவாள் ஆனால் நிலவென்ன பேசும் என்று பாடத் தொடங்குவார்.

தர்மம் தலைகாக்கும் படத்தில் எம் ஜி ஆருக்கு பொன் பேசும் சரோஜாதேவி எம் ஜி ஆர் பேசாமல் அமைதியாக இருப்பதை கண்டு இப்ப பேசப் போறிங்களா இல்லை போனை வச்சுடட்டுமா என்று சொன்னதும் எம் ஜி ஆர்
ஹலோ ஹலோ சுகமா என கேட்டு பாடுவார். உடனே ஆமா நிங்க நலமா என பாட்டிலேயே பதில் தருவார் சரோஜா தேவி. இது போன்ற வசனங்கள் மிகுந்த வரவேற்பை பெற்றன.

காதலியை வருணித்தல்- நலம் பாராட்டுதல்:


தலைவன் தலைவி என்ற பெயரில் காதலன் காதலியின் வருணனை தொல்காப்பியம் தொட்டு இன்று வரை நலம் பாராட்டல் என்று ஒரு துறை வெகு சிறப்பாக கவிஞர்களால் கையாளப்பட்டு ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. இறைவனை வர்ணிக்கும்போது பாதாதி கேச வர்ணனை எனப் பாதம் தொட்டு கேசம் வரை வர்ணித்துக் கொண்டே செல்ல வேண்டும். ஒரு மனிதனை வர்ணிக்கும்போது கேசாதிபாத வருணனை முறையில் தலைமுடியில் இருந்து தொடங்கி பாதம் வரை வர்ணிக்க வேண்டும். இவ்வாறான வர்ணனைகள் எம்ஜிஆர் படங்களில் சிறப்பாக இருக்கும்.

பெண் வர்ணனை பாட்டுக்களில் மிகச் சிறந்ததாக திகழ்வது குற்றால் குறவஞ்சியின் சாயலில் எழுதப்பட்ட உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் வரும் நிலவு ஒரு பெண்ணாகி என்ற பாடலை குறிப்பிடலாம்.

நிலவு ஒரு பெண்ணாகி நீந்துகின்ற எழிலோ


நீரலைகள் இடம் மாறி உலவுகின்ற அழகோ, என்ற பாடலில்

புருவம் ஒரு வில்லாக
பார்வை ஒரு கணையாக
பருவம் ஒரு காலமாக
போர் தொடுக்க பிறந்தவளோ


என்று பாடலாசிரியர் புருவத்தையும் பார்வையையும் கூட வருணித்திருப்பார்..

மடல் வாழை துடை இருக்க
மச்சம் ஒன்று அதில் இருக்க
படைத்தவனின் திறமை எல்லாம்
முழுமை பெற்ற அழகி என்பேன்
என இப்பாடல் நிறைவு பெறும்.


எம் ஜி ஆரை காதலி வருணித்துப் பாடுதல் :


காதல் பாடல்களில் ஒருவரை ஒருவர் வர்ணித்தும் ஆண்மை பெண்மை நலன்களை பண்புகளை புகழ்ந்தும். பாடுவதுண்டு. நிஜத்தில் இருவருக்குள்ளும் நடக்கும் உரையாடலை போலவே இப்பாடல்கள் அமைகின்றன.

எம் ஜி ஆரை காதலிகள் வருணித்து பேசுவதற்கென்று சில கருத்துக்களை கவிஞர்கள் வைத்திருந்தனர். அவரது பொன் நிறம் கோடை குணம் இயலாமை கட்டுடல் ஆகிய கருத்துக்களை திரும்ப திரும்ப காதலியின் வருணனையாக பாடச் செய்தனர்.
கதாநாயகி தனது காதல் தலைவனின் அதாவது எம்ஜிஆரின் குணநலன்களை அவரது உறுதியான உடற்கட்டை ,இளமை துடிப்பை, பொன் வண்ண மேனியை ரசித்து பாடுவதாக பாடல்கள் எழுதப்பட்டன. சான்றாக பின் வரும் வரிகளை குறிப்பிடலாம்.

என்றும் இளமை மாறாமல்

வாழும் சரித்திரமே –நீ
எந்தன் தலைவன் என்றென்னும்
எண்ணம் இனித்திடுமே.

‘மன்னவன் உங்கள் பொன்னுடல்
அன்றோ இந்திரலோகம்
அந்தி மாலையில் அந்த மாறன்
கணையில் ஏனிந்த வேகம்

அழகில் நீ ஒரு புதிய கலை- உன்னை
அணைத்து கண்டேன் இன்ப கனவுகளை

பொன்னின் நிறம் பிள்ளை மனம்
வள்ளல் குணம் யாரோ
மன்னன் என்ற பேரில் வரும்
தேவன் மகன் நீயோ

என்ற வரிகள் எம் ஜி ஆருக்காகவே எழுதப்பட்டன. இவை எம் ஜி ஆருக்கு விளம்பரமாக அமைந்தன.

எம் ஜி ஆருக்கு விளக்கம் அளித்த புலமைப்பித்தன்:


பொதுவாக எம்ஜிஆர் காதல் பாடல்களில் தலையிடுவது இல்லை என்றாலும் கூட மேற்குறிப்பிட்ட பண்புகள் அவரது பாடல்களில் திரும்ப திரும்ப இடம் பெற்றதன் காரணம் இவை ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்டதனால் ஆகும்.

நீ என்னென்ன சொன்னாலும் புதுமை
உன்னை எங்கெங்கு தொட்டாலும் இளமை


என்று மஞ்சுளா எம்ஜிஆரை பார்த்து பாடுவதாக அமைந்த பாடல் வரிகள் புலமைப்பித்தன் இயற்றிவை ஆகும். அவர் எம் ஜி ஆரிடம் இந்தப் பாடல் வரியில் உள்ள நுட்பத்தினை எடுத்துக் கூறியபோது எம்ஜிஆர் கையில் இருந்த துண்டால் அவரை செல்லமாக அடித்து ‘’நீங்கள் உங்கள் வீட்டில் பேசுவதை எல்லாம் இங்கே எனக்கு பாட்டாக எழுதி விட்டீர்களா’’ என்று சிரித்தபடியே கேட்டாராம்.

முடிப்பு

ஓரிரு சரணங்கள் பாடிய பின்பு சில பாடல்களில் கடைசியில் இருவரும் அருகருகே படுத்து உறங்கி விடுவதாகவும் காட்சிகள் அமைவதுண்டு இதைத்தான் எடுப்பு தொடுப்பு முடிப்பு என்கிறோம். வேட்டைக்காரன் படத்தில் இப்படி பாலத்தின் மீது படுத்து இருவரும் தூங்கி விடுவர். நம்பியார் வந்து சாவித்ரியை தூக்கிகொண்டு போய்விடுவார் எம்ஜிஆரின் இளமையை எடுத்துக்காட்டும் காட்சி சண்டைக்காட்சிகளில் எம்ஜிஆர் காஞ்சித்தலைவன் அன்பே வா போன்ற படங்களில் தன்னுடன் மோதும் வில்லனை தூக்கி தோளின் மீது வைத்து சுற்றி கீழே போடும் காட்சிகள் உண்டு. காதல் காட்சிகளில் கதாநாயகியை தூக்கி தன் பலத்தை காட்டுவதாக தன் இளமைத் துடிப்பை நிரூபிப்பதாக எம் ஜி ஆர் படங்களில் காட்சிகள் அமைந்துள்ளன. வில்லனை தூக்குவது போல முதுகு பக்கமாக தோள்பட்டையில் வைத்து தூக்கி கீழே போடாமல் முன்பக்கமாக விதவிதமாக கதாநாயகியை அவர் தூக்கி இறக்குவார். உழைக்கும் கரங்கள் படத்தில் வாரேன் போய் வாரேன் பாட்டின் போது தன் வலது பக்கமாக லதாவை தூக்கி பின்பு இறக்கி விடுவார். ரிக்ஷாக்காரன் படத்தில் மஞ்சுளாவை முன்பக்கமாக சிறு குழந்தையை மேலே தூக்கி போட்டு பிடிப்பது போல முகத்துக்கு நேரே தூக்கிப் பிடித்து இறக்கி விடுவது உண்டு. மீனவ நண்பன் படத்தில் கனவு காட்சியின்போது கதாநாயகியை இரண்டு கைகளாலும் ஏந்தியபடி தூக்கிக் கொண்டுவந்து ஒரு நீண்ட நூல் தொட்டிலில் படுக்க வைத்தார். இந்த காட்சிகள் எல்லாம் எம்ஜிஆரின் இளமையை நிரூபிக்க உதவிய காட்சிகளாகும். அவர் வயதானவர் என்றாலும் இளமையானவர் என்பதை ரசிகர்கள் ஏற்று கொள்வதற்காக புகுத்தப்பட்ட காட்சிகளாகும்.

கனவில் காதல்


எம்ஜிஆர் படங்களில் கனவுக் காட்சிகள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. கனவி எம் ஜி ஆறும் அவரது காதலியும் ஏழையாக இருந்தாலும் ஒரு கற்பனையாக கனவில் தன்னை ஒரு ஏழை ராஜாவாகவும் தன் காதலியை ராணியாகவும் கற்பனை செய்து கனவில் ஆடிப்பாடி மகிழ்வதாக்க காட்சிகள் எடுக்கப்படும். இக்கனவுக்க் காட்சிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. ‘சிறிது நேரம் ராஜா ராணியாகவே வாழ்ந்த ஓர் உணர்ச்சியை இந்தப் பாடல்கள் அவனுக்கு தருகின்றன. எனவே இதுபோன்ற காட்சிகளை வைக்கின்றேன்’ என்று எம்ஜிஆர் ஒரு பேட்டியின் போது குறிப்பிட்டார்’

எம் ஜி ஆரும் ஜெயலலிதாவும் ஜோடியாக நடித்த என் அண்ணன் படத்தில் ஒரு இசை பாடல் நிகழ்ச்சிக்கு வந்த இருவரும் தங்களையே அந்த நடன கலைஞர்களின் உருவில் கனவில் கண்டு தாங்களே அந்த மேடையில் பாடி ஆடுவதாக கனவு காண்பர்.

நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் பெண்ணே உன் கண்ணோ


நீல நிறம் ம் ம் ம் என தொடங்கும் இப்பாடல் காட்சியில் இதில் ஒரு முக்கிய கருத்து உண்டு. மேடை கலைஞர்களின் உடையில்தான் இருவரும் காதலித்து பாடுவார்களே தவிர. அவர்களின் உருவத்தில் அல்ல. அதாவது படம் பார்க்கும் ஒரு பெண் எம் ஜிஆரின் உருவத்தை கனவில் கன்று காதலிக்க மாட்டாள். அவளது காதலனை அல்லது கணவனை எம் ஜி ஆர் கனவு பாட்டில் வரும் ராஜ உடையுடன் கற்பனை செய்து கனவில் காதலித்து ஆடி பாடுவாள். எனவே பெண்கள் எம் ஜி ஆரை காதலிப்பதாகக் கனவு கண்டு மகிழ்கின்றனர் என்ற குற்றச்சாட்டு பொய் ஆகிறது. எம் ஜி ஆர் இந்த பாட்டின் முலமாக எப்படி காதல் கனவு அமைய வேண்டும் என்பதையும் சொல்லி கொடுத்துள்ளார்.

நாடோடி மன்னன் படத்தில் வண்ணத்தில் எம்ஜிஆரும் சரோஜாதேவியும் கனவு காணும் பாடல் அமைந்திருக்கும் இந்தப் பாடலில் கடலின் அடித்தளத்தில் இருவரும் ஆடிப்பாடி மகிழும் காட்சி கனவு காட்சியாக இடம்பெறும்.

கண்ணில் வந்து மின்னல் போல காணுதே இன்பக் காவியக் கலையே ஓவியமே என்ற பாடல் ரசிகர்களின் வரவேற்பு பெற்றதற்கு முக்கிய காரணம் அது முதல் வண்ணக் கனவு பாடலாகும். அதற்கு முன்[பூ புதுமைப்பித்தன் படத்த்தில் உலக உருண்டையை சுற்றி எம்ஜிஆர் பி. எஸ்.சரோஜாவும் நடந்தபடி பாடி மகிழும் காட்சி

உள்ளம் இரண்டும் ஒன்று நம்
உருவம் தானே ரெண்டு
உயிர் ஓவியமே


இனி நீயும் நானும் ஒன்று என்ற பாடல் காட்சி உலக உருண்டையை சுற்றி வருவதாக வானத்தில் அமைக்கப்பட்டிருக்கும்.
மதுரை வீரன் படத்தில் வெள்ளையம்மா மதுரைவீரனுக்கு முதுகில் பச்சை குத்தும் காட்சியின்போது பச்சை குத்தும் வலி தெரியாமல் இருக்க ஒரு பாட்டை பத்மினி பாடுவதாக அமைந்த காட்சி ஒரு கனவு காட்சியாக விரிந்திருக்கும். அப்போது பத்மினியின் கண்கள் க்ளோசப்பில் படபடவென்று அடித்து

நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே ஆடும் விழியிலே கீதம் பாடும் மொழியிலே
தேடிய இன்பம் கண்டேன்
கண்ணா வாழ்விலே கண்ணா வாழ்விலே
உயர் அன்பால் நேரிலே


என்று பத்மினியும் எம்ஜிஆரும் ஒரு சோலையில் பாடுவதாக இந்த கனவு பாட்டு அமைந்திருக்கும்.

எம்ஜிஆர் படங்களின் கனவு பாடல்களில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய இன்னொரு முக்கியமான பாடல் உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் வரும் அவள் ஒரு நவரச நாடகம் என்ற பாட்டாகும். இப்பாட்டில் எம்ஜிஆரும் லதாவும் இடம்பெற்ற காட்சிகள் மிகச்சில. ஆனால் தண்ணீருக்குள் சாகசம் செய்யும் காட்சிகளை ஜப்பானிலிருந்து படம் எடுத்து வந்த எம்ஜிஆர் அவற்றோடு தானும் லதாவும் மீண்டும் நடித்து ஒரு சில காட்சிகளை எடுத்து அவற்றையும் இணைத்து ஒரு முழு நீளப் பாட்டு காட்சி ஆகிவிட்டார். இந்த காட்சிக்காக சத்யா ஸ்டூடியோவில் மிகப்பெரிய தண்ணீர் தொட்டி கட்டப்பட்டு அதில் ஹைட்ரோ போட்டோகிராபி எனப்படும் தண்ணீருக்குள்ளிருந்து படம்பிடிக்கும் முறையில் மிகுந்த முயற்சியில் சில காட்சிகள் எடுக்கப்பட்டன. எம்ஜிஆர் நினைத்தபடி அந்த காட்சிகளை வெளிநாட்டு சாகச காட்சிகளோடு இணைக்க இயலவில்லை. அதனால் எம்ஜிஆர் நிறைய காட்சிகளை நீக்கிவிட்டு ஒரு சில காட்சிகளை மட்டுமே இணைத்தார்.

யாருக்கு கனவு வரும்


எம் ஜி ஆர் படங்களில் எப்போதும் எம் ஜி ஆரை காதலிக்கும் கதாநாயகிதான் கனவு காண்பார். எம்ஜிஆர் ஒரு போதும் பெண்ணை நினைத்து கனவு கண்டதில்லை இது ஒரு சிறந்த ஆண்மை பண்பாக கருதப்பட்டு எம்ஜிஆர் படங்களில் இடம் பெற்றுள்ளது.

வினையே ஆடவருக்கு உயிரே மனையுறை
மகளிர்க்கு ஆடவர் உயிரே


என்று குறுந்தொகை குறிப்பிட்டது போல கடமையே ஆணுக்கு உயிராகக் கருதப்பட்டது. அவன் பெண்ணை நினைத்து கனவு காண்பது அடாது. பெண்களே அவரை நினைத்து அவரோடு ஆடி பாடுவதாக கனவு காண்கின்றனர்.

ராஜா ராணி கனவுக் காட்சி


எம்ஜிஆர் படங்களில் காதல் கனவு காட்சியாக இருப்பவற்றில் பல ராஜா ராணி கனவு காட்சியாக இருக்கும். அன்பே வா, தேடி வந்த மாப்பிள்ளை, மீனவ நண்பன் படங்களில் ராஜா ராணி காதல் கனவு காட்சிகள் மிகவும் சிறப்பிடம் பெற்றன.

காதல் காட்சிகளில் கண்ணியம் .


காதல் காட்சிகளில் நடிகையரிடம் அத்து மீறும் பழக்கம் அன்று நடிகர்களிடம் இருந்து வந்தது, ஆனால் எம் ஜி ஆர் ‘செட்’களில் தீவிர கட்டுப்பாடுகள் இருக்கும் அவர் படங்களில் காதல் காட்சிகளில் பெண்கள் ரசிக்கும் வகையில் தான் காட்சிகள் அமையுமே தவிர அவர்கள் முகம் சுளிக்கும் வகையில் எந்த காட்சியும் வைத்த்திருக்க மாட்டார். காதலியை கூட எம்ஜி ஆர் இருகரங்களையும் ஆசையோடு நீட்டி ஒரு குழந்தையை அழைப்பது போல அழைப்பார். காதலி பாடினாலும் ஆடினாலும் ஒரு கலை மடித்து போட்டு உட்கார்ந்து கை தட்டி ரசிப்பார். இச்செய்கை பெண்களை ஊக்குவிக்கும் ஒரு மதிப்புரை ஆகும். பெண்களை குறைவாக மதிக்கும் வகையில் நடந்துகொள்ள மாட்டார். குறிப்பாக ,எம் ஜி ஆர் பெண்களை பார்த்து கண் அடிக்க மாட்டார்; பெண்களிடம் திருமணம், குழந்தை பிறப்பு போன்றவற்றை கூட சைகையில் காட்ட மாட்டார். காதலியிடமும் மரியாதையாகப் பேசுவார் பழகுவார். போடி வாடி என்று காதலியை மனைவியை அழைக்க மாட்டார். மூன்றாமவர் முன்னிலையில் காதலியிடம் வணக்கம் சொல்லி விடை பெறும் காட்சிகள் கூட உண்டு. பெண்ணை பார்த்து உதட்டை கடிப்பதோ உதட்டை நாக்கால் தடவுவதோ அவரிடம் காண முடியாது. ஆபாசமான சைகைகள் வார்த்தைகள் அசைவுகள் எதுவும் எம்ஜி ஆரிடம் இருக்காது. பெண்களை அணைக்கும் போது மிகச் சரியாக தன உள்ளங்கையை நடிகையரின் வயிற்றில் பதித்திருப்பார். ஒரு விரல் கூட அவர்களின் மேல் பாகத்தில் படாது. தோளின் மீது கை வைத்திருந்தால் விரல்களை மேல் நோக்கி மடித்து வைத்திருப்பார். [எடு. சிரித்து சிரித்து என்ன சிறையில் வைத்தாய் பாட்டு] பெண்களை மிதிக்க மாட்டார், உதைக்க மாட்டார்; சில முன்னணி நடிகர்கள் பாட்டு காட்சியில் பெண்ணை காலால் எத்துவதும் உருட்டுவதும் உண்டு. இது போன்ற அநாகரிகமான செயல்களில் எம் ஜி ஆர் ஈடுபட மாட்டார்.

இந்த நல்ல பழக்கங்கள் பெண்களிடம் அவருக்கு தனி மரியாதையை ஏற்படுத்தி கொடுத்தன, பெண்கள் தங்கள் பிள்ளைகளிடம் எம்ஜி ஆரை போல பெண்களை மதிக்க வேண்டும் என்று சொல்லி வளர்த்தனர் அதனால் தான் இன்று இளைய ரசிகர்கள் ஏராளமானோர் எம் ஜி ஆருக்கு இருக்கின்றனர். தாய்மாரின் வளர்ப்பு பின்னர் அதிமுகவுக்கு வாக்கு வங்கியாகவும் மாறி வெற்றியை அளித்தது..


[காதல் பாட்டுக்களில் பெண்களை கவர்ந்த உரையாடல் நயம் பற்றி அடுத்த கட்டுரையில் காண்போம்]

                                                                                                            

முனைவர் செ.இராஜேஸ்வரி

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்