பெண் இனம் போற்றும் பெருந்தலைவர் எம்.ஜி.ஆர் (தொடர் - 16)

முனைவர் செ.இராஜேஸ்வரி


நடிகைகளின் கண்ணியத்தை காப்பதில் உயர்ந்து நின்ற எம் ஜி ஆர்.


எம்.ஜி.ஆர் தாய்க்குலத்தின் உள்ளத்தில் இடம் பெற காரணமாய் இருந்த பண்புகளில் ஒன்று அவர் தனது படங்களில் நடிக்கும் நடிகைகளிடம் காட்டிய கண்ணியமும் அக்கறையும் ஆகும். நடிகைகளை தனது குடும்பத்தில் ஒருவராகக் கருதினார். படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் அவர்களை ‘சத்தம் போட்டு சிரிக்க கூடாது; சத்தமாக பேசக் கூடாது .பிறரை கவரும் வகையில் நடந்து கொள்ள கூடாது’. என்று கண்டித்து அமைதியாக் இருக்கும்படி அறிவுறுத்தினார். நடிகைகள் மற்றவர்கள் மதிக்கும்படி நடந்து கொள்ள வேண்டும். நாமும் அவர்களின் கண்ணியத்தை காபாற்ற வேண்டும் என்பது அவரது கொள்கை ஆகும் இதற்கு பல உதாரணங்களை எடுத்துகாட்டலாம்.

எம் ஜி ஆர் தன்னுடன் நடிக்கும் நடிகைகள் உடை உடுத்துவதில் அழகும் கவர்ச்சியும் இருக்கலாமே தவிர ஆபாசம் இருக்க கூடாது என்பதில் கவனமாகவும் கண்டிப்பாகவும் இருப்பார். தனது படத்தைத் தாய்மார்களும் பார்ப்பார்கள்; இளம்பெண்களும் பார்ப்பார்கள். இவர்களில் யாரும் முகம் சுளிக்க கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பார். இதயக்கனிப் படத்தை ஒரு தாய் பார்க்கும் போது இனி எம் ஜி ஆர் படம் கூட பார்க்க முடியாது போல என்று சொன்னதாக அறிந்ததும் மீண்டும் அப்படத்தை ‘எடிட்’ செய்து வெளியிட்டார்.

படப்பிடிப்புகளில் நடிகைகளைக் கவனமாகப் பார்த்துக்கொள்வதைத் தனது கடமையாக கொண்டு இருந்தார். ஒரு நாள் சச்சு என்னிடம் பேசிக் கொண்டிருந்த போது, ‘எம் ஜி ஆருடன் இருந்தால் பாதுகாப்பாக உணர்வோம். அவர் எங்களை வெளிப்புற படப்பிடிப்புக்கு அழைத்து கொண்டு போனால் வெளியே தோப்பில் சோலையில் மரத்தடியில் உட்கார விட மாட்டார். அருகில் உள்ள பயணியர் விடுதி அல்லது ஊர்ப் பெரியவர்கள் வீட்டில் பாதுகாப்பாக இருக்க வைத்துவிட்டு ‘ஷாட் ரெடி’யானதும் தான் ‘ஸ்பாட்டு’க்கு அழைப்பார். ரசிகர்களின் அன்புத்தொல்லையில் இருந்து தற்காத்துக் கொள்வது அதே வேளையில் அவர்களின் அன்பை மதித்து கௌரவிப்பது போன்றவற்றை அவருடன் இருந்த நாட்களில் நாங்கள் கற்றுக்கொண்டோம் என்றார். இன்றைக்கும் சச்சு அதிகளவில் படங்களில் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். திரைப்படத் துறை சார்ந்த பல முக்கியப் பொறுப்புகளில் இருக்கிறார்.

திரைப்பட விழாக்களுக்கு நடிகைகளை அழைத்துக் கொண்டு போகும் போது எம் ஜி ஆர் பெண்களை யாரும் இடித்து விடாமல் வேறு வகையில் துன்பம் கொடுக்காமல் இருக்க முனைந்து முயற்சிகள் எடுப்பார். மதுரையில் நாடோடிமன்னன் படத்திற்கு வெற்றி விழா மதுரை முத்து முயற்சியின் பேரில் வெகு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது அப்படத்தில் நடித்த நடிகைகள் பாதுகாப்பாக அந்த கூட்டத்தின் இடையே நடந்து மேடைக்கு செல்ல வேண்டும்.

மதுரை தமுக்கம் மைதானத்தில் வாசலில் இருந்து ரசிகர்கள் கூட்டம், கார் உள்ளே போக முடியவில்லை. எம் ஜி ஆர் தன காரில் இருந்து இறங்கினார். ‘நான் சொல்லும் வரை யாரும் காரில் இருந்து இறங்க வேண்டாம் என்று காருக்குள் இருந்த நடிகைகளிடம் சொல்லிவிட்டார். இறங்கியவரை ரசிகர்கள் மொய்த்துக்கொண்டனர். அவர்களிடம் ‘நடிகைகள் வருகிறார்கள் அவர்கள் மேடைக்குப் போக வழி விடுங்கள்’ என்றார். உடனே ரசிகர்கள் ஒதுங்கி வழிவிட்டனர். பின்பு நடிகைகள் இருந்த காருக்குள் பார்த்து ‘இறங்கி வாருங்கள்’ என்றார். அவர்களை முன்னே நடக்க விட்டு அவர்களின் பின்னால் இவர் பாதுகாப்பாக நடந்து சென்றார். ரசிகர்கள் வழி விட்டு விலகி நின்றனர். எம் ஜி ஆர் நடிகைகளை தனது வீட்டுப் பெண்கள் போல பாதுகாப்பார். நடிகைகளும் பெண்கள் தானே அவர்களையும் கண்ணியத்துடன் நடத்த வேண்டும். என்ற பொறுப்பை அவரே எடுத்து கொண்டார். இந் நற்பண்பினால் அவரை பேராண்மை மிக்கவராக நடிகைகள் இன்றளவும் போற்றுகின்றனர்.

உடை நேர்த்தி


எம் ஜி ஆர் தனது படங்களில் தனது உடைகளை மட்டுமல்லாது உடன் நடிக்கும் நடிகைகளின் உடைகளிலும் கவனம் செலுத்துவார். சர்வாதிகாரி படப்பிடிப்பில் அவரும் அஞ்சலி தேவியும் நடித்த காட்சி ஒன்ரை ரீ டேக் எடுக்கும்படி எம் ஜி ஆர் இயக்குனரிடம் தெரிவித்தார். அப்போது இயக்குனர் ‘எல்லாம் சரியாக் இருக்கிறது; இன்னொரு டேக் தேவையில்லையே’ என்றார். எம் ஜி ஆர் ‘இருக்கட்டும் எடுங்கள்’ என்றார். திரும்ப இருவரும் நடித்தனர். டேக் ஒகே ஆயிற்று. என்ன காரணம் என்று கேட்ட போது ‘முதலில் எடுத்த காட்சியில் அஞ்சலியம்மாவின் பாவாடை முழங்காலுக்கு மேலேறி விட்டது. அவர் அதை கவனிக்கவில்லை. ஆனால் ரசிகர்கள் கவனிப்பார்கள் பெண்கள் கவனிப்பார்கள்’ என்றார். அஞ்சலி மனம் நெகிழ்ந்து போய்விட்டார். அவரே இதைத் தன் பேட்டியின் போது தெரிவித்தார்.

பணம் படைத்தவன் படம் எடுத்த் போது அதில் நாகரிக இளம் மங்கையாக நடித்த சௌகார் ஜானகி ஒரு பாடல் காட்சியில் கால் தெரியும்படி உடை உடுத்தி கொண்டு வந்தார். எம் ஜி ஆர் படப்பிடிப்ப்பு வேண்டாம் என்று சொல்லிவிட்டு போய்விட்டார். பிறகு இயக்குனரை அழைத்து ‘என்ன ஜானகிக்கு இப்படி ஒரு உடை கொடுத்திருக்கிறீர்கள் அவருக்குப் பெண் குழந்தைகள் இருக்கின்றனர். அதனால் உடல் முழுக்க மூடி இருப்பது போல ஒரு நாகரிக உடை தைக்க சொல்லுங்கள்; தைத்து விட்டு என்னிடம் தெரிவியுங்கள். படப்பிடிப்பை வைத்து கொள்ளலாம்’ என்றார். சௌகார் ஜானகியிடம் போய் திரும்ப அளவெடுத்து தையல்காரர் உடை தைத்தார். ஜானகி விஷயம் தெரிந்ததும் கண் கலங்கினார்.

‘இந்த உடை கொஞ்சம் ஆபாசமாக இருக்கிறது எனக்கு மாற்றி தாருங்கள்’ என்று சௌகார் ஜானகி கேட்கவில்லை. ஆனால் எம் ஜி ஆர் அதை உணர்ந்து திருத்தினார். ஒரு மூத்த சகோதரனைப் போல் திரை உலகில் இருந்த பெண்களுக்கு எம் ஜி ஆர் பாதுகாப்பாகவும் பாசத்தோடும் இருந்தார்.

குடும்பப் பெண்கள் யார்?


எம் ஜி ஆர் திரையுலகில் அறிமுகமாகி ஓரளவு பிரபலமாகி இருந்த நாட்களில் அவர் தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் பொறுப்பை ஏற்று அதற்கென தனி லோகோ அமைத்து அனைத்து மொழி நடிகர்களையும் ஒன்றிணைத்து சங்கச் செயற்பாடுகளை கவனித்து கொண்டார். அப்போது நடிகர் நடிகைகளுக்கு சமுதாயத்தில் மதிப்பு மரியாதை இல்லாத நிலைமையே இருந்து வந்தது.

நடிகர் சங்கத்தில் ஒரு நாள் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு தான் மட்டுமல்லாது மற்ற நடிகர் நடிகைகளையும் பதில் சொல்லும்படி ஊக்கப்படுத்தினார். . எம் என் ராஜம் புத்தி சொல்லி கொண்டிருந்த போது ஒரு நிருபர், ‘குடும்பப் பெண்கள் நடிக்க வருவதில்லையே ஏன்? என்றார். உடனே எம் ஜி ஆர் எழுந்து ‘ஏன் ராஜம் குடும்பப்பெண் தானே? அவருக்கும் குடும்பம் உண்டு. அவருடைய தொழில் நடிப்பு’ என்றார். அனைவரும் விக்கித்து போய்விட்டானர். ராஜத்தின் கணவர் பின்னணி பாடகர் எல் ராகவன் அவரது மகள் நளினா ஊட்டி கான்வென்டில் படித்துவிட்டு சென்னையில் மகளிர் கல்லஊரியில் ஆங்கில இலக்கியத்தில் முதுகளைப் பட்டம் பெற்று எம். பி. ஏ படித்து லி மெரிடியன் ஓட்டலில் நிர்வாக பொறுப்பில் இருக்கிறார். அவருக்கும் திருமணமாகி தீபிகா என்றொரு பெண் இருக்கிறார்.

எம் ஜி ஆர் எந்த நிலையிலும் தன திரையுலகினரை விட்டு கொடுக்க மாட்டார். நடிகைகளும் பெண்கள் தானே அவர்களுக்கும் மதிப்பும் மரியாதையும் கொடுக்க வேண்டும் என்பதில் அவர் கவனமாக இருப்பார். கருத்தாக செயல்படுவார். நடிகைகளின் கண்ணியத்தை காப்பாற்றும் காவல்காரன் அவர் என்றால் மிகையில்லை.

புதிய பெயர் சூட்டல்


ஓரிரு காட்சிகளில் வந்து நிற்கும் நடிகர் நடிகைகளை அந்தக் காலத்தில் எக்ஸ்ட்ரா என்று ஏளனமாக பார்த்தனர். அவர்களின் மரியாதையை காப்பற்ற நினைத்த எம் ஜி ஆர் தனது படங்களில் அவர்களின் பெயரை துணை நடிகர் நடிகைகள் என பதிவிடும்படி செய்தார். முக்கிய நடிகை மற்றும் துணை நடிகை என்ற பிரிவில் பெரிய நடிகைகளும் சிறிய நடிகைகளும் சேர்க்கப்பட்டனர். அவர்களின் தொழில் நடிப்பு என்றொரு அங்கீகாரம் கிடைத்தது.

பள்ளிக்கூடம் கட்டினார்


நடிகர் நடிகைகளின் நிலைமை மிகவும் பரிதாபமாக இருந்ததை உணர்ந்த எம் ஜி ஆர் அவர்களின் பிள்ளைகளும் இதே நிலைக்கு ஆளாகிவிட கூடாது என்பதை உணர்ந்து வேறு யாரும் செய்யாத ஒரு தர்ம காரியத்தைச் செய்தார். நடிகை நடிகைகள் அதிகம் வாழும் கோடம்பாக்கத்தில் ஒரு இலவசப் பள்ளிக்கூடம் கட்டினார். அங்கு சினிமா துறையை சேர்த்த பிள்ளைகள் நல்ல முறையில் படிக்க அவர்களுக்கு புத்தகங்கள், மதிய உணவு, சீருடை என அனைத்தும் வழங்கினார்.

திரையுலகின் அடுத்த தலைமுறை தம் வயிற்றுப் பிழைப்புக்காக தவறான தொழிலில் ஈடுபடக் கூடாது. வறுமைப்படக் கூடாது என்ற நோக்கத்தில் தனது சகக் கலைஞர்களின் பிள்ளைகளை தன பிள்ளைகளாகக் கருதி படிக்க வைத்தார். நடிகைகளின் பிள்ளைகளும் வறுமையின் காரணமாக் நடிப்பு தொழில் ஈடுபடக் கூடாது என்று கருதினார். சக நடிகர்கள் எல்லோரிடமும் ‘பிள்ளைகளை படிக்க வையுங்கள் வேறு வேலைகளுக்கு அனுப்புங்கள்’ என்று அறிவுரை கூறினார். தன வீட்டு பிள்ளைகளும் வீட்டில் மற்றும் பள்ளிக்கூடத்தில் சினிமா பாட்டு பாடுவதையோ சினிமா பற்றி பேசுவதையோ அனுமதிக்க மாட்டார். மிகக் கடுமையாக நடந்துகொள்வார். தன்னை போல பிறரையும் நேசித்தவர் எம் ஜி ஆர்

சிலுவை சுமந்த எம் ஜி ஆர்


திரையுலகில் எம் ஜி ஆர் சிலரின் வாழ்க்கையை கெடுத்தார். அவரால் தான் இவர் நடுத்தெருவுக்கு வந்தார் எனக் கட்டுக் கதைகள் உலவியதுண்டு. அதற்கான முழு பொறுப்பாளி அவர் இல்லையென்றாலும் அதை அவர் வெளிப்படுத்தி கொண்டதில்லை. தவறு செய்தவர்களையும் தன் மீது சேற்றை வாரி பூசியவர்களையும் மன்னித்து அவர்களுக்கு தன படங்களில் வாய்ப்பளித்தார். இலட்சத்தில் பணம் கொடுத்தார்.

சாவித்திரி தனது கணவர் ஜெமினி கணேசனின் பேச்சை கேட்காமல் சொந்த படம் திரும்ப திறம்ப எடுத்து கடனாளியாகி போதைக்கு அடிமையாகி சொத்திழந்து அனாதையாக இருந்த போது .அவரிடம் சிலர் தவறான பழக்கம் வைத்திருந்தனர். அப்போது எம் ஜி ஆர் அவர்களை நேரிலும் தொலைபேசியிலும் அழைத்து கண்டித்தார். ‘அது நல்ல பெண் அதன் வாழ்க்கையை கெடுத்து விடாதே’ என்றார். ஒருவர் மட்டும் இவரது அச்சுறுத்தலுக்கு பணியாமல் சாவித்திரியை விட்டு ஒதுங்காமல் சாவித்திரியின் மிச்ச வாழ்க்கையையும் கெடுத்து குட்டிச் சுவராக்கினார்.

ஒரு நாள் சாவித்திரி எம் ஜி ஆரின் அலுவலகத்துக்கு அவரை தேடி வந்தார். ‘அண்ணே நான் ரொம்ப கஷ்டப்படுறேன் நீங்க எனக்கு உதவி செய்யுங்கள்’ என்றார். உடனே எம் ஜி ஆர் ஒரு குட்டி சாக்கில் ஒரு இலட்சம் ருபாய் போட்டு கொடுத்து ‘உடம்பை பத்திரமாக பார்த்து கொள்ளம்மா’ என்று சொல்லி அனுப்பினார் வேறு எதுவும் அவரிடம் கேட்கவில்லை.

சாவித்திரியுடன் மகாதேவி படத்தில் நடித்த போது எம் ஜி ஆர் இயக்குனரிடம் ‘பாட்டு காட்சியில் நெருக்கம் வேண்டாம்; சாவித்திரி ஜெமினியை காதலிக்கிறது. படம் வெளி வரும் பொது குழந்தை உண்டாகியிருக்கலாம். அதனால் நெருக்கமான காட்சிகள் வைக்க வேண்டாம்’ என்றார். அவர் அறிவுரைப்படி ‘சேவை செய்வதே ஆனந்தம்’ பாட்டு காட்சி எடுக்கப்பட்டது. இதை கேட்டு சாவித்திரி ‘’அவரே அப்படி சொல்லிவிட்டாரா அப்படி என்றால் எங்களுக்கு கல்யாணம் நட்ந்து விடும்’ என்று சந்தோஷப்பட்டாராம் .

திருமணமான் நடிகைகள் தொடர்ந்து நடிக்கலாம் ஆனால் மற்ற நடிகர்களுடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்க கூடாது என்று எம் ஜி ஆர் கருதினார். அது அவர்களின் இல்லற வாழ்வை பாதிக்கலாம் என்று கூட அவர் நினைத்தார். அவர்களின் கண்ணியம், கௌரவம் காப்பற்றப்பட வேண்டும் எனபது அவர் கொக்ள்கை.

ஒரு படத்தில் லதா அவர்கள் குடித்து விட்டு முன்னாள் காதலனுடன் பாடுவதாக ஒரு காட்சியில் நடித்த போது எம் ஜி ஆர் ‘என்ன தான் சினிமா என்றாலும் இப்படி நடிக்கலாமா இனி இப்படி நடிக்காதே’ என்று அறிவுரை கூறினார்.

படத் தயாரிப்பாளரின் மனைவி


ஒரு முறை எம் ஜி ஆரிடம் ஒரு படத் தயாரிப்பாளர் வந்து தன் மனைவியுடன் ஒரு நடிகர் தொடர்பு வைத்திருப்பதாகக் கூறி அவரை அழைத்து நீங்கள் கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். எம் ஜி ஆர் அந்த நடிகரை அழைத்து கேட்ட பொது அவர் வெகு அலட்சியமாக பதில் சொல்லிவிட்டு போனார். இவன் சொல்லி திருந்தும் ஆள் இல்லை. பட்டுத் திருந்த வேண்டிய ஆள் என்று மனதில் நினைத்துக் கொண்டு அவரது படத்தை முடித்து கொடுக்க மாட்டேன் என்றார். அப்போதும் அந்த நடிகர் அந்த பெண்ணை சந்திப்பதை விடவில்லை. பிரச்சனை முற்றியது.

எம் ஜி ஆர் பற்றி படு கேவலமாக் அந்த நடிகர் வெளியே பேசி வந்தார். நீ என்ன பேசினாலும் ஏசினாலும் நான் முடித்து கொடுக்க மாட்டேன் என எம் ஜி ஆர் ஒரே முடிவாக இருந்து விட்டார். யாரிடமும் இந்த நடிகரது கேவலமான நடத்தை குறித்து சொல்லவில்லை. சொன்னால் தன் பக்கத்து நியாயம் வெளியே தெரிந்தாலும் அந்த தயாரிப்பாளரின் கௌரவம் அந்த பெண்ணின் மானம் பறி போய் விடுமே என்று அந்த நடிகர் பரப்பிய கெட்ட பேரை தான் சுமந்து கொண்டார். இப்போது இந்த விஷயங்கள் மெல் மெல்ல வேல்வருகின்றன. மேடையில் வெண்ணிற ஆடை நிர்மலா ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் இதைத் தெரிவித்தார். ராஜேஷ் தன பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த நடிகர் சிவாஜியிடம் போய் எம் ஜி ஆரை எதிர்த்து நிற்க முடியவில்லை. அதனால் உங்களிடம் வந்திருக்கிறேன். ரொம்ப கஷ்டப்படுகிறேன்’ என்றார் அதற்கு சிவாஜி அப்படியா ஐயோ பாவம். அண்ணன் நல்லதைத்தானே சொன்னார். நீ என் கேட்கவில்லை? சனியனை விட்டு தொலையேன். போ, போ உள்ளே போய் சாப்பிட்டு விட்டு போ’’ என்றார். அந்த நடிகருக்கு கோபம் வந்துவிட்டது ‘’நான் என்ன பிச்சைக்காரனா’’ என்று கேட்டு விட்டு திரும்பி வந்தார். அவரது நிலைமையை கேள்விப்பட்ட எம் ஜி ஆர் பிறகு தனது அடிமைப் பெண் படத்தில் வாய்ப்பு அளித்தார். அதன் பிறகு மற்ற படங்களில் வாய்ப்பு கிடைத்தது.

கண்ணியத்தின் காவல்காரன்

திரையுலகில் பெண்களைப் பற்றி யார் கேவலமாகப் பேசினாலும் தண்டிப்பார். பெண்களிடம் யார் கேவலமாக நடந்து கொண்டாலும் தண்டிப்பார். எம் ஜி ஆர். சினிமா நடிகைகள் சிலர் அவ்வப்போது எம் ஜி ஆரிடம் வந்து பத்திரிகைகளில் தன்னை பற்றி தவறான செய்தி வெளியிடுகின்றனர் என்று சொல்லி வருத்தப்பட்ட போது எம் ஜி ஆர் அந்த பத்திரிகையாளர்களை அழைத்து கண்டித்து அனுப்பினார். நடிகைகளின் கண்ணியத்தை காப்பதில் எம் ஜி ஆர் அவர்களின் காவலனாக இருந்து வந்தார். அவர் ஒரு god father அவர் ஒரு big brother.

                                                                                                            

முனைவர் செ.இராஜேஸ்வரி

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்