அற்றது நாணம், இற்றது குடுமி!

கவிஞர் மா.உலகநாதன், திருநீலக்குடி

ங்க காலம் முதல் இன்றுவரை அன்னையர்கள், பெண் குழந்தைகளை வளர்ப்பதில் தனிக்கவனம் கொண்டுள்ளனர். உடலால் வன்மையில்லாதவர்கள் என்பதால் மென்மையோடு அவர்களைப் பராமரித்து வருகின்றார்கள். பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்ற ஏழு நிலைகளிலும் பெண்களைக் கண்ணாடிப் பாத்திரத்தைக் கையாளுவது போலத்தான் கையாள வேண்டியிருக்கிறது. காரணம் காலம் காலமாகப் பெண்களைக் கையாண்டவிதம் அப்படி!.

பெண் தான் முதல் வித்து:

ஆதிகாலத்தில் வேட்டைத் தொழிலுக்கும் கூட பெண்களை அழைத்துச் சென்றதுண்டு. ஆணுக்கு நிகராக அவர்களும் வேட்டையாடுவதில் சிறந்து விளங்கினர். ஆயினும், காலப்போக்கில் காட்டு மிருகங்களால் அவர்கள் தாக்குண்டு, கரு கலைந்து போகும் அபாயமும் ஏற்பட்டது. இதனால், தனக்கொரு வாரிசு இல்லாமற் போய்விடுமோ என்ற அச்சத்தில் ஆண்கள் பெண்களை வேட்டைத்தொழிலுக்கு அழைத்துச் செல்ல்வதைத் தவிர்த்தனர், அவர்கள் வீட்டிலேயே விடப்பட்டனர்; இப்படியாகவே அவர்கள் இல்லாள் ஆனார்கள்.

வீட்டில் அவர்கள் சும்மா இருப்பதில்லை விதைகளை,செடிகளை நட்டு பயிர் வளர்த்தார்கள். பொழுது போகியது; செடி கொடிகளைக் காணும்போது மகிழ்ச்சியும், மன அமைதியும் உண்டாவதை உணர்ந்தனர். காய்களும் கனிகளும் கிடைத்தன; அதனை உண்டு பசியாறினர். அதனால் தான், இன்றும் கூட வேளாண் பெருமக்கள் தத்தம் இல்லத்தரசியின் கையினால் முதல் நடவு செய்வதைக் காண முடிகிறது. இதிலிருந்து தான் முதல் என்ற சொல் முதலீட்டுக்குப் பயன்படுத்தப்படுகிறது எனலாம்.

பெணகள் முதல் இரண்டு பருவத்தில் பெற்றோர்களுக்கு அவ்வளவு சிரமம் கொடுப்பதில்லை.ஏனெனில் அது சிறார்ப் பருவம். எண்ண முதிர்ச்சி இருக்காது. ஆனால், மங்கைப்பருவம் வந்துவிட்டாலோ இயற்கையின் தூண்டுதலால், பெண்கள் சுய சிந்தனையின் பாற்பட்டவர்களாக மாறுகிறார்கள். உருவ மாற்றமும் பருவ மாற்றமும் அடைகிறார்கள். இன்னும் பாதுகாப்பாக இருக்கவேண்டுமென்று பெற்றவர்கள் நினைக்கிறார்கள்.அதனால், மகளை நல்ஒழுக்கத்துடன் வளர்த்து சமுதாயத்துக்கு அளிக்க வேண்டுமே என்பதற்காக அவர்களுடைய நடை உடை பாவனை கண்காணிக்கப்படுகிறது.

இது இப்படியிருக்க, முத்தொள்ளாயிரத்தில் ஒரு பருவ மங்கையின் செயலும், நற்றாயின் கவலையும் அக்கறையும் கூறப்பட்டிருக்கிறது.

சேர மன்னனொருவன் நகர்வலம் வருகிறான். அவனோடு பரிவாரங்களும் வந்துகொண்டிருக்கின்றன.முரசு முழங்கி எங்கும் எதிரொலிக்கிறது. இந்த ஒலி கேட்டதும் அந்நகரிலுள்ள மக்கள் கூடி மன்னனை எதிர்கொண்டு அழைக்கிறார்கள். மங்கையர்களும் சேர மன்னனின் அழகைக்காண ஆவலோடு வெளிப்படுகின்றனர்; ஆனால், ஒவ்வொரு வீட்டிலும் தாய்க்கும் மகளுக்கும் போராட்டம் நடக்கிறது. எதற்காக? மகள் சேரனின் அழகைப் பருக எண்ணி கதவைத் திறக்க முயல, தாய் அதைத்தடுக்க, இப்படியே தொடர்ந்து நடக்க, கதவின் மீதிருக்கும் கொண்டி (குடுமி) இற்றுப் போனதாம்.

தாயர் அடைப்ப மகளிர் திறந்திடத்
தேயத் திறந்த குடுமியவே –ஆய்மலர்
வண்டுலாஅங் கண்ணி வயமான்தேர்க் கோதையைக்
கண்டுலாஅம் வீதிக் கதவு.
(முத்தொள்ளா-சேரன்-2)

மலர்களை ஆய்ந்து, வண்டுகள் மொய்க்கும் பூமாலை அணிந்துகொண்டு குதிரை பூட்டிய தேரில் சேரன் உலா வந்தான். அவன் அழகைக் காண விரும்பி மகளிர் கதவைத் திறந்தனர். கண்டால் அவள் மயங்கிவிடுவாள் என்று அவர்களது தாய்மார் கதவை மூடினர். இப்படி ஒருவர் மூட, ஒருவர் திறக்க இருந்ததால் கதவு மாட்டியிருந்த கொண்டி தேய்ந்ததுதான் மிச்சம்.யாருடைய எண்ணமும் நிறைவேறவில்லை.

சங்க இலக்கியத்தில் மட்டுமல்ல.சமய இலக்கியத்திலும் இத்தகைய காட்சியைக் காணலாம்; திருத்தக்க தேவர் பாடிய சிந்தாமணியில் சமண சமயப் பொருள் விளங்க, காவிய நலமும் சிறக்கப் பாடியுள்ளார். எவ்வித வேறுபாடும் காட்டாது பன்னிரு திருமுறைகளை நன்கு பயின்று அவற்றின் கருத்தையும் உள்வாங்கி,,முன்னோர் மொழி பொன்னே போல் போற்றி தம் காவியத்தில் பதிவு செய்திருக்கிறார்.

சிந்தாமணியில், சீவகன் இலக்கணையை மணந்து, இராசாமாபுரத்து வீதியில் உலா வருங்கால் அவனைக்கண்ட மங்கையர் சிலரின் செய்கைகளை தேவர் கூறும்போது,

குறையணி கொண்டவாறே கோதை சால்தொடர ஓடிச்
சிறையழி செம்பொன் உந்தித் தேன்பொழிந் தொழுக ஏந்தி
பறையிசை வண்டுபாடா பாசமும் மனைய நின்றார்
பிறையணி கொண்ட அண்ணல் பெண்என்பால் கொண்டதொத்தார்

ஊரிலுள்ளோர் வாசல் தெளித்து அழகழகான கோலங்களை இட்டு, வாழை கமுகு, மாவிலைத் தோரணங்கள் நாட்டி சீவகனை வரவேற்கக் காத்திருக்கிறார்கள். சிலர் சீவகன் வந்தான் என்று கூறிவிடவே,சிறுமியரும் மங்கையரும் மடந்தையரும் அவசர அவசரமாக தம் தம்மை அணிமணிகளாலும் துணிமணிகளாலும் புனைந்தும் புனையாமலும், அவனைக் காண ஓடோடி வருகிறார்கள். அவசரமாக ஒப்பனை செய்து கொண்டதால் தமது அழகு சற்று குறையுடைதாயிருக்கிறதோ என்ற ஆதங்கம் ஒரு பக்கமும், சீவகனின் அழகுக்கு முன்னால் நாமெல்லாம் எம்மாத்திரம்? என்ற நினைவு எழ, தன்னை மறைத்துக் கொண்டு நின்றார்களாம்.

அவரகளது தோற்றம் எப்படியிருக்கிறதாம்? உமையொருபாகனாக விளங்கும் இறைவன் போல (பிறையணி கொண்ட அண்ணல் பெண்என்பால் கொண்டதொத்தார்)  என்று தேவர் உவமைப்படுத்துகிறார்!

                                                                                                                                                தொடரும்............

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்