பெண் இனம் போற்றும் பெருந்தலைவர் எம்.ஜி.ஆர் (தொடர் - 19)

முனைவர் செ.இராஜேஸ்வரி


'ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நான் ஒரு தொழிலாளி'


என்று தொடங்கும் பாடலில்

இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும்
இலக்கணம் படித்தவன் தொழிலாளி,
 

என்று தொழிலாளியின் வறுமையிலும் செம்மை என்ற ஒழுக்கத்தினையும் கட்டுப்பாட்டினையும் சிறப்பித்துப் பாடும் எம்.ஜி.ஆர்., அந்த படத்தில் பட்டப்படிப்பு படித்துக் கொண்டே கைவண்டி இழுத்து தன் தாயை காப்பாற்றுவார். பின்பு ஒரு பஸ் கம்பெனியில் நடத்துனராக சேர்வார். தன் பெற்ற தாயை கூட ஏற்ற இடம் இல்லாததாள் அவரை அந்த பேருந்தில் ஏற்றாமல் கடமை உணர்வோடு பணியாற்றும் இவருடைய பொறுப்புணர்ச்சியை கண்டு மகிழ்ந்த முதலாளி, அவரை அடுத்து பரிசோதனை அதிகாரியாக (செக்கிங் இன்ஸ்பெக்டர்) பதவி உயர்த்துவார். இதற்கிடையே எம்.ஜி.ஆர். பஸ் கம்பெனி உரிமையாளரின் மகள் இவரை ஒருதலையாக காதலிப்பதால் அவள் தன் தந்தையிடம் 'இவருக்கு மேலாளர் பொறுப்பை வழங்கலாமே' என்று பரிந்துரைப்பார். இவருடைய நேர்மை மற்றும் கடமை உணர்ச்சியில் மகிழ்ந்து போயிருந்த முதலாளி இவரை மேலாளராக நியமித்து விடுவார்.

'தொழிலாளி' படத்தில் ஒரு பஸ் கம்பெனியில் நடத்துனராக சேர்ந்த எம் ஜி ஆரின் சீரிய தலைமையில் அனைவரும் செயல்பட்டு பின்னர் முதலாளியாகி விடுகின்றனர். ஒரு பிரச்சனையில் எம் ஜி ஆரும் அவரது சக பணியாளர்களும் கூண்டோடு வெளியேற்றப்பட்டு வழக்கு நடத்தி வழக்கில் வெற்றி பெற்ற தொழிலாளர்கள் தங்களுக்கு கிடைத்த இழப்பீடு பணத்தை கொண்டு புதிதாக பஸ்கள் வாங்கி அவர்கள் கூட்டுறவு முறையில் ஒரு பஸ் கம்பெனி நடத்துகின்ற அளவுக்கு உயர்ந்து விடுகின்றனர். இது ஒரு திரைப்படக் கதை என்றாலும் கூட இப்படி நடக்க வாய்ப்பில்லை என்று எவராலும் சொல்ல இயலாது. பல பெரிய நிறுவனங்களில் இன்றைக்கு முதலாளியாக இருப்பவர்கள் ஒரு காலத்தில் அங்கு தொழிலாளியாக வேலை பார்த்தவர்கள் தான் ஆக தொழிலாளியாக சேர்ந்து வேலை நுட்பங்களைக் கற்றுக்கொண்டு பின்பு முதலாளியாக பரிணமிப்பது என்பது இயற்கையில் நடக்கக் கூடிய ஒன்று தான். நடக்காத ஒன்றை எம்.ஜி.ஆர். இந்த படத்தில் எடுத்துக் காட்டவில்லை.

தொழிலாளி படத்தில் பெண்களுக்கு உட்கார இடம் கொடுக்க வேண்டும். பேருந்துக்குள் இருக்கும் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆட்களை ஏற்ற வேண்டும்இ பேருந்தை அதற்கு நியமிக்கப்பட்ட வேகத்தில் தான் ஓட்ட வேண்டும். ஓவர் ஸ்பீடு போகக்கூடாது. நிறுத்தத்தில் வண்டியை நிறுத்த வேண்டுமே தவிரஇ அதை கடந்து கொண்டு போய் நிறுத்தம் இல்லாத இடத்தில் நிறுத்தக்கூடாது. ஓட்டுநரும் நடத்துநரும் சீருடையில் தலையில் தொப்பி போட்டு இருக்க வேண்டும். வண்டியில் பணியில் இருக்கும் நேரத்தில் பீடி சிகரெட் பிடிக்கக்கூடாது. நடத்துனர் பயணியர் ஏறிய உடனேயே அவர்களுக்கு பேருந்து சீட்டை வழங்கி விட வேண்டுமே தவிர அவர்களுக்கு காலம் தாழ்த்தி வழங்கக் கூடாது என்று பல சரியான நடைமுறைகள் எடுத்து காட்டப்பட்டிருக்கும். இப்படத்தில் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடிப்பதால் ஒரு நடத்துனருக்கு உரிய அனைத்து பொறுமையும் கடமை உணர்ச்சியும் ஒரு பஸ் கம்பெனி மேலாளருக்கு உரிய கண்டிப்பும் கருணையும் பரிசோதனை அதிகாரியாக வரும்போது உரிய பொறுப்புணர்ச்சியும் காட்டி மிகச் சரியாக ஒரு முன்மாதிரி கதாபாத்திரமாக தன்னை எடுத்துக் காட்டி இருப்பார். தொழிலாளியாக இருப்பவன் தொழிலாளியாகவே வாழ்நாள் முழுவதும் இருந்து இறந்துவிடக்கூடாது. 'வெந்ததைத் தின்று விதி வந்தால் சாகும் வாழ்க்கை' அவனுக்கு அமைந்துவிடக்கூடாது. அவன் படிப்படியாக முன்னேறி வாழ்வின் உச்சக்கட்டங்களை தொட்டுப் பார்க்க வேண்டும் என்று ஒரு முன்னேற்றம் நோக்கியஇ மேம்பாடு சார்ந்த சிந்தனையையும் இப்படம் புலப்படுத்தும்.

ஏழைகளிடமும் பெண்களிடமும் இரக்கம் காட்ட வேண்டும் என்பதை தன் வாழ்நாளில் கொள்கையாகக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர். தான் முதல்வர் ஆன பிறகும் இக்கொள்கையை இம்மியும் மாறாமல் பின்பற்றி வந்தார் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டை முன்வைத்தால் அவர் பெண்களின் பேராதரவை பெற்ற ரகசியம் நமக்கு புலப்படும்.

முதல்வர் எம்.ஜி.ஆர். மாலை 3 மணிக்கு கோட்டையிலிருந்து தன் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது குயின் மேரிஸ் கல்லூரி வாயிலில் சுமார் முன்னூறு நானூறு பெண்கள் ஐந்தாறு பேராக கூட்டம் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். எம்.ஜி.ஆர். ஓட்டுனரிடம் வண்டியை ஓரமாக நிறுத்து என்று சொல்லிவிட்டு நடைபாதையில் நின்று பேசிக்கொண்டிருந்த பெண்களில் ஒருவரை அழைத்த, 'என்ன ஆயிற்று ஏன் இப்படி கூட்டமாக தெருவில் நிற்கிறிர்கள்' என்று கேட்டார். அந்தப் பெண் சார், 'பஸ் இன்னும் வரவில்லைஇ கல்லூரி முடிந்து விட்டது பஸ்சுக்காக காத்து இருக்கிறோம்' என்று சொன்னாள். எப்போது கல்லூரி முடிந்தது? எத்தனை பஸ்கள் தினமும் வருகின்றன? என்ற விவரங்களை எல்லாம் அந்த பெண்ணிடம் கேட்டவர், தன் காரில் இருந்த தன்னுடைய உதவியாளர், காவல்துறை அதிகாரி ஆகியோரிடம் சொல்லி பல்லவன் பேருந்து அதிகாரியிடம் பேசி உடனே பஸ்களை அனுப்பும்படி கூறினார். அவர்கள் பல்லவன் பேருந்து போக்குவரத்து கழக அதிகாரியிடம் தொடர்பு கொண்டு மாணவிகள் தெருவில் நீண்ட நேரம் நின்று, காத்துக் கொண்டிருப்பதை அறிந்த முதலமைச்சர் உடனே அவர்களை அனுப்பி வைக்கும்படி கூறியதாக தெரிவித்தனர்.

பத்து நிமிடத்தில் மூன்று பஸ்கள் அங்கு வந்து விட்டன. அதுவரை எம்.ஜி.ஆர். அங்கிருந்தவர்களிடமூம் தன்னைப் பார்க்க அங்கு கூடியவர்களிடமூம் அந்த பகுதியில் உள்ள பஸ் வசதிகளைப் பற்றி விசாரித்து தெரிந்து கொண்டார். வந்ததும் பெண்கள் அந்த மூன்று பஸ்களிலும் ஏறிச் சென்றுவிட்டனர்.

எம்.ஜி.ஆர். ஆட்சியில் தான் பெண்களுக்கென்று தனிப் பேருந்து, மகளிர் பேருந்து என்ற பெயரில் காலையிலும் மாலையிலும் அவர்கள் பள்ளிக்கூடம் கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு செல்வதற்கு வசதியாக விடப்பட்டது. சில கல்லூரிகளுக்கு, கல்லூரியின் உள்ளேயே சென்று பெண்களை, மாணவிகளை இறக்கிவிடும் வசதியும் செய்து தரப்பட்டது. சிறப்பு பேருந்துகளைக் கல்லூரிகள் குறிப்பிட்ட நேரத்தில் கேட்டுப் பெற்றுக் கொண்டன.

வேலைக்குச் செல்லும் பெண்கள் தன் குடும்ப பொருளாதார தேவைக்காக காலையிலும் மாலையிலும் பேருந்துகளில் செல்ல வேண்டியிருப்பதால் அவர்கள் ஆண்களோடு சேர்ந்து அடிபட்டு நசுங்கி செல்லும் அவல நிலையிலிருந்து மாற்றவும் அவர்கள் கண்ணியமாக கவலையின்றி வேலைக்குச் செல்வதற்காகவும் எம்.ஜி.ஆர். தனி பேருந்துகளை அனுமதித்தார். இது போன்ற நுட்பமான சிறப்பு தேவைகளை உணர்ந்து பெண்களுக்கு அவற்றை நிறைவேற்றுவதில் எம்.ஜி.ஆர். தந்தையாகவும் தமையனாகவும் இருந்தார்.

பொதுவாக ஆண்களுக்கு தன் வீட்டு பெண்கள் மட்டுமே பஸ்ஸில் இடிபடாமல் பாதுகாப்பாக கண்ணியமாக போய் திரும்ப வேண்டும் என்ற அக்கறை அதிகமாக இருக்கும். பஸ்ஸிற்குள் சில விபரீதங்கள் விஷமங்கள் நடக்கும்போது அருகில் இருக்கும் ஆண்கள் பரிதாபப் படுவார்கள், ஓரிருவர் கோபமாக கூட பேசுவார்கள். ஆனால் இவையெல்லாம் தீர்வாகிவிடாது. பெண்களின் சிரமங்களைக் கண்ட எம்.ஜி.ஆர். அப்பெண்களை தன வீட்டு பெண்களாகக் கருதி அவர்களுக்கு நிரந்தரத் தீர்வாக தனிப் பேருந்துகளை அனுமதித்தார். எம் ஜி ஆர் இப்பெண்களை தனது வீட்டுப்பெண்களை போல நேசித்தார். மதித்தார். அதனால் அவர்களின் அன்றாட கவுரவப் பிரச்சனையை நிரந்தரமாக தீர்த்து வைத்தார்.

மகளிர் பேருந்துகளில் பயணம் செய்தவர்களில் நூற்றுக்கு தொண்ணூறு பேர் அதற்கு முன்பாக வேறு கட்சியின் ஆதரவாளர்களாக இருந்தாலும், மகளிர் பேருந்தில் பயணம் செய்யத் தொடங்கிய பின்பு அவர்கள் எம்.ஜி.ஆரின் ஆதரவாளர்களாக மாறிவிட்டனர். ஏனெனில், தினமும் அவர்கள் சந்தித்து வந்தஇ எதிர்கொண்ட அவமரியாதையான அவமானம் நிறைந்த பிரச்சினைகளிலிருந்து அவர்களுக்கு ஒரு விடுதலை கிடைத்தது. பெண்கள் நிம்மதியாக பயணம் செய்வதற்கு எம்.ஜி.ஆர். உதவியதால் அவர்கள் எம்.ஜி.ஆரை மிக உயர்வாக மதித்து அவருக்குத் தேர்தலில் பிரதி உபகாரமாக தங்கள் வாக்குகளை அளித்தனர்.

அன்றைய தினத்தில் தெருவில் பெண்கள் கூட்டமாக பஸ்சுக்கு காத்திருப்பது கூட பொறுக்காத எம்.ஜி.ஆர். உடனே அவர்களுக்கு கல்லூரி முடிந்த பத்து நிமிடத்திலேயே அடுத்தடுத்து பேருந்துகள் வந்து அவர்களைக் கொண்டுபோய் விட்டுவிட வேண்டும் என்று பல்லவன் பேருந்து போக்குவரத்து அதிகாரிக்கு தெரிவிக்கும்படி செய்தார். தன் வீட்டு பிள்ளை தெருவில் நின்று கொண்டு பஸ் வராமல் காத்து இருந்தால் ஒரு தாயின் தந்தையின் மனம் என்ன பாடுபடுமோ அதே வேதனையை எம்.ஜி.ஆரும் உணர்ந்ததால் மட்டுமே இந்த தீர்வு கிடைத்தது. ஆங்கிலத்தில் நஅpயவால என்று ஒரு சொல் உண்டு. ஒருவர் படும் துன்பத்தை ஒருவர் படும் அவமானத்தை அடுத்தவர் தன்னுடைய துன்பமாகஇ தன்னுடைய அவமானமாக உணர வேண்டும். அப்படி உணரும்போது அவர்களுக்குச் செய்யும் உதவி தற்காலிகமானதாக இல்லாமல் நிரந்தரமானதாக இருக்கும். இந்த உணர்வு எம்.ஜி.ஆருக்கு எப்போதும் ஏழைகளிடமும் பெண்களிடமும் இருந்து வந்தது.

எம் ஜி ஆர் ஆட்சியில் பாலர் பள்ளிகளில் பெண்களை ஆசிரியர்களாக நியமிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அத்துடன் பெண்கள் ஆசிரியைகளாக இருக்கும் பள்ளிகளுக்கு அருகிலேயே சில கிலோமீட்டர் தொலைவுக்குள் அவர்களுடைய கணவருக்கும் பணி மாற்றம் செய்து தர வேண்டும் என்ற உத்தரவும் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் பிறப்பிக்கப்பட்டது. இதனால் கணவனும் மனைவியும் அருகருகே இருந்தபடி தங்கள் வேலைகளைச் செய்து சேர்ந்து குடும்பத்தை நடத்தும் வாய்ப்பு பெற்றனர். ஆளுக்கொரு மாவட்டத்தில் அதிக தூரத்தில் இருந்து வேலை செய்தால் அந்த வேலையின் பலன் முழுமையாக கிடைக்காது. தாயும் தந்தையும் பிரிந்திருப்பதால் பிள்ளைகளும் வேதனைப்படுவார்கள் கணவன் மனைவிக்கிடையேயும் வருத்தங்கள் ஏற்படும் என்பதால் ஒரு இலட்சிய குடும்பத்தின் இலக்கணத்தை உணர்ந்த எம்.ஜி.ஆர். அனைவரும் இலட்சிய தம்பதியராக வாழ்வதற்கு தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்தார். உத்தரவையும் பிறப்பித்தார். அவருடைய ஆட்சி ஒரு பொற்கால ஆட்சியாக மக்களால் உணரப்பட்டது. தன் மேல் மிகுந்த அன்பு கொண்ட ஒரு தந்தையும் தனயனும் ஆட்சி செய்வதை போலவே மக்கள் பாதுகாப்பாக உணர்ந்தனர். எம் ஜி ஆர் எது செய்தாலும் அதை சரியென ஏற்றுக்கொண்டனர்.

மத்திய அரசால் 20 அம்ச திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது குடும்பக் கட்டுப்பாட்டுக்கு ஆசிரியர்கள் போய் ஆள் பிடித்துக்கொண்டு வரும் வேலை கொடுக்கப்பட்டது. அவர்கள் தங்கள் பணியை முடித்துக் கொண்ட பிறகு தாங்கள் வேலை பார்க்கும் கிராமங்களில் சென்று பெண்களையோ அல்லது ஆண்களையோ குடும்ப கட்டுப்பாடு செய்வதற்காக மருத்துவமனைக்கு அழைத்து வர வேண்டும். ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஒரு மாதத்திற்கு இத்தனை பேரை அழைத்து வரவேண்டும் என்று எழுதப்படாத விதி ஒன்று ஏற்படுத்தப்பட்டது.

1977இல் எம்.ஜி.ஆர். முதலமைச்சரானதும் ஆசிரியர்களை இதுபோன்ற வேலைகளில் ஈடுபடுத்தக்கூடாது, அவர்கள் ஓர் உன்னதமான பணியைச் செய்ய வந்திருக்கிறார்கள். அவர்கள் நம் பிள்ளைகளின் அறியாமை இருளை அகற்றி அறிவொளி பரப்ப வேண்டுமே அல்லாது ஆள்பிடிக்கும் வேலைக்கு அவர்களை அனுப்பி வைக்கக் கூடாது என்று எம்.ஜி.ஆர். ஒரு உடனடி உத்தரவு பிறப்பித்தார். அதன்பின்பு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் நிம்மதியாக ஆசிரியப் பணியை மட்டும் செய்தனர்.

எம்.ஜி.ஆர். படத்திலும் நிஜத்திலும் பெண்களுக்கு ஆதரவாகவே ஆரம்பம் முதல் இருந்து வந்துள்ளார். அவருடைய ஆட்சிக் காலத்தில் நூலகர்கள் அரசு ஊழியர் ஆக்கப்பட்டனர். அரசு பள்ளிகளின் ஆசிரியை ஆசிரியர்கள் அரசு ஊழியராக தரம் உயர்த்தப்பட்டனர். அதற்கு முன்பு வரை அவர்கள் தாம் வேலை பார்த்த கிராமங்களின் பண்ணையார்இ மணியக்காரர், பெரிய வீட்டுக்காரர் போன்றவர்கள் மூலமாக சம்பளம் பெற்றதால் அவர்களின் தொல்லைகளுக்கும் கட்டுப்பாட்டுக்கும் அதிகாரத்துக்கும் ஆளாகி வந்தனர். இவற்றை அறிந்த எம்.ஜி.ஆர். உடனடியாக ஏழை குழந்தைகளிடம் அறிவொளி பரப்பும் ஆசிரியப் பெருமக்களின் பணியின் மேன்மையை உணர்ந்து அவர்களைப் பெரிய மனுஷ போர்வையில் திரியும் பசுத்தோல் போர்த்திய புலிகளிடம் இருந்து விடுவித்துஇ அரசு ஊழியர் ஆக்கினார். இனி அவர்கள் உள்ளூர் லோக்கல் தாதாக்களுக்கு அஞ்சி நடக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது.

அரசு ஊழியர் என்ற பெருமித உணர்வோடு வந்து பெண்கள் அரசுப்பள்ளிகளில் ஆசிரியை பணி ஆற்றினர். கவுரவமாக வந்து பாடம் நடத்திச் சென்றனர். அரசு பள்ளிகளிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் சத்துணவுத் திட்டம் மூலமாக ஒரே நாளில் 10 ஆயிரம் பெண்களுக்கு குறிப்பாக ஆதரவற்ற பெண்கள், விதவைகள் கணவனால் கைவிடப்பட்டோர் போன்றவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வேலைவாய்ப்பு வழங்கியவர் இந்தியாவிலேயே எம்.ஜி.ஆர். ஒருவர் மட்டுமே. இதனாலும் பெண்களின் ஆதரவு அவருக்கு அன்று முதல் இன்று வரை தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது.

எம் ஜி ஆரால் நன்மை பெற்ற பெண்கள் தங்களுடைய பிள்ளைகளையும் எம்.ஜி.ஆரின் ஆதரவாளராகவே வளர்த்து வந்தனர்.. பிள்ளைகள் பெரியவ்ர்கள் ஆனதும் தங்கள் பிள்ளைகளை அண்ணா திமுக ஆதரவாளர்களாகவே உருவாக்கியதால் எம்.ஜி.ஆரின் . வாக்குவங்கி சிதறாமல் இருப்பதை இன்றும் காண்கிறோம்.

 

                                                                                                          

முனைவர் செ.இராஜேஸ்வரி

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்