கனி விமலநாதனின் 'விந்தைமிகு விண்வெளி விபத்து'

சோக்கல்லோ சண்முகம்
 

ரு சமூக நாவலை வாசித்து முடித்த திருப்தியோடு இந்த விமர்சனத்தை எழுதுகிறேன். என்னுடைய வித்தகத்தன்மையைக் காட்ட நான் இந்த நூல் விமர்சனத்தை எழுதவில்லை. வாசிக்கும் போதே எனது மனதில் பட்டதை சக வாசகர்களுக்கும் சொல்ல வேண்டுமென்று விரும்பினேன். என்னுடைய இந்த எழுத்து நூலாசிரியரை உற்சாகப்படுத்துகின்றதா? அல்லது அதைரியப்படுத்துகின்றதா? என்பதைக் கூட நான் கவனத்தில் எடுக்கவில்லை. என்னுடைய முழு நோக்கமும் சத்தியத்தின் அடிப்படையில் இந்த எழுத்து இருக்க வேண்டுமென்பதே!.

என்னுடைய பாடசாலைக் காலத்திலேயே விஞ்ஞானம், கணிதம், இலக்கணம் எனக்குக் கசந்த பாடங்கள். 'விந்தைமிகு விண்வெளி விபத்து' என்று இந்த விஞ்ஞான நூலுக்குப் பெயரிட்டிருப்பது 'விஞ்ஞானம்' என்று காட்டுவதற்குச் சரியாக இருக்கலாம். ஆனால் வாசகனை வாசிக்கத் தூண்டக் கூடிய தலைப்பாக இல்லை. இது கசப்புத் தடவிய இனிப்புக் குளிசை. 'ஆச்சிவீடு' என்பது இதற்கு ஒரு நல்ல தலைப்பாக அமைந்திருக்கும். கனி விமலநாதனின் இந்த நாவலை 'மணிமேகலைப் பிரசுரம்' அச்சிட்டிருக்கின்றது. இதே ஆசிரியரின் 'வியத்தகு விண்மீன்கள்'இ 'புவியீர்ப்புப் பற்றிய வியப்பான விஷயங்கள்' ஆகிய மற்றும் இரண்டு விஞ்ஞான நூல்களையும் இதே மணிமேகலைப் பிரசுரம்தான் அச்சிட்டிருக்கின்றது. ஆங்காங்கே ஒரு சில அச்சுப் பிழைகளைத் தவிர, நூல்கள் மிக நேர்த்தியாக, தடித்த அட்டைகளுடனும் நல்ல தாளிலும் அருமையான முகப்புப் படங்களுடனும் அச்சிடப்பட்டுள்ளன. மேற்படி இரண்டு நூல்களும் விஞ்ஞானிகள் பற்றிய தகவல்களும் விஞ்ஞானம் பற்றிய செய்திகளும் கொண்டவை. நூலாசிரியர், 'வியத்தகு விண்மீன்கள்' என்ற நூலின் என்னுரை என்ற பகுதியிலே இது என்னுடைய ஐந்தாவது நூல் என்று சொல்லியிருப்பதிலிருந்து வேறும் பல நூல்கள் வந்திருக்கலாம். எனது கைக்குக் கிடைத்தவை மூன்று நூல்களே! இவர் விளம்பரம் பத்திரிகையிலே எழுதுகின்ற 'அந்நியர்களும் அபூர்வ விமானங்களும்' வாசிக்கக் கிடைப்பதாலும், இந்த நூல் விமர்சனத்தைச் சற்றுக் கனதியாகவே எழுதுகின்றேன்.

விஞ்ஞானத்தின்பால் அதிக ஈடுபாடு இல்லாத நான் எப்படி இந்த விஞ்ஞான நூல்கள்பால் ஈடுபாடு காட்டினேன் என்பதை முதலில் உங்களுக்குச் சொல்ல வேண்டும். இந்த நூலாசிரியர் இளமைக் காலத்தில் இருந்தே எனக்கு மிகவும் பழக்கமானவர். எனது கிராமத்தைச் சேர்ந்தவர். அவரின் எழுத்துக்கள் என்று வாசிக்கத் தொடங்கி இன்று விமர்சனம் வரையில் போய் நிற்கின்றது. விஞ்ஞானத்தில் ஈடுபாடு இருந்தாலும் இல்லாவிட்டாலும் சந்திரனின் மனிதன் முதலில் காலடி வைத்ததை எனது வெற்றியாகக் கொண்டவன். 1955களிலேயே நகைச்சுவை நாடகம் மூலம் சந்திரனில் காலடி வைத்தது, எனது மகளுக்கு 'வலன்ரினா' என்ற பெயரை, இரசிய விண்வெளி வீராங்கனை ஞாபகமாகச் சூட்டியது ஆகியவையும் நான் இந்த விமர்சனத்தை எழுதுகிற தகுதியை எனக்குத் தருகின்றன.

நீலகண்ட கணியர் என்ற சாத்திரியாரின் கெடுபிடிகளோடு நாவல் ஆரம்பமாகிறது. கதை சொன்னவிதம், கதையை வாசிக்கத் தூண்டுகிறது. சின்னச் சின்ன வரிகள், புழக்கத்திலிருந்து மெல்ல மெல்ல மறைந்து வருகின்ற தமிழ், தெரிந்த கிராமத்து இடங்கள், பெயர்கள். ஆசிரியர் போலியாக எதையும் சொல்லாது தனக்குத் தெரிந்த மிக எளிமையான நடையில் கதையை நகர்த்தியிருப்பது அவர்மீது ஒரு நம்பிக்கையை வைக்கத் தூண்டியது.

'நீர் ஒரு விபரமும் சொல்ல வேண்டாம், குறிப்பு எழுத வேண்டிய பெயர்களையும் பிறந்த தேதி நேரங்களை மட்டும் தாரும். மிச்சத்தை நானே பார்த்து முழு விபரங்களையும் உமக்குச் சொல்லுகிறேன் என்றார் நீலகண்ட கணியர்' இப்படித் தொடங்கி, மிகச் சுலபமாக கதையை நகர்த்துகிறார். இந்த நாவல் வாசித்து முடிக்கச் சில தினங்கள் எடுக்கலாம் என்று முதலில் நான் நினைத்து Book Mark எடுத்து வைத்துக் கொண்டேன். அதற்குத் தேவையே ஏற்படவில்லை. ஒரே நாளில் சில மணித்தியாலங்களுள் நாவலை வாசித்து முடித்தேன்.

இன்பன், இனியன், இராமலிங்கம், நாயகம், திலகம், சீலுமாமா, மகாதேவன், நீலகண்டன், அகிலாண்டம்மாள், நாகராசுமாமா, வச்சிரவேலு, நல்லைநாதன், வேலுத்தம்பி, டொக்டர் மிச்சல், றொபேட், ரேவதி, இன்பவேல், சின்னவன், பெரியவன், ஆச்சிவீடு, ஆலமரச் சந்தி, புதுக்கிணத்தடி, தேனீர்க்கடை, தகரக் கொட்டில் இவையெல்லாம் சொல்லுகின்ற கதை ஏராளம் ஏராளம். இந்திய நாவல்கள் பல படித்திருக்கின்றேன். பூந்தமல்லிக் கிராமம் என்றவுடன் அது பெயரளவில்தான் எனக்குத் தெரிந்தது. புதுக்கிணத்தடி என்றவுடன் அந்தக் குறிச்சிக்கே மீண்டும் நான் சென்று வந்தேன். பெயர்களிற் கூட, அவர்கள் வாழ்ந்த காலகட்டம், அவர்களின் வயது, பதவி, என்பவையெல்லாம் கருத்திலே கொள்ளப்பட்டிருந்ததை நான் அவதானித்தேன். ஆசிரியர் நாவல் மட்டும் எழுதவில்லை ஒரு வரலாற்றுப் பதிவையே செய்திருக்கின்றார்.

கனி விமலநாதன் நீலகண்ட கணியரின் அம்பாள் ஆலயத்தோடு கூடிய ஓட்டுவீட்டை வர்ணிக்கும் போதும், பனை ஓலையால் வேய்ந்த ஆச்சியின் மண்வீட்டை விபரிக்கும் போதும் அதிகப்படியாகச் சொல்வதாக ஒரு உணர்வு ஏற்பட்டாலும், எதிர்காலச் சந்ததியினர் இந்த வீடுகளின் அமைப்பைப் புரிந்து கொள்ளக் கூடிய முறையில் சொல்லியிருக்கிறார். நீலகண்ட சாத்திரியாரின் வீட்டிற்கு மூன்று படிகள் ஏறிச் செல்ல வேண்டுமென்றால், அது தேவையற்றுப் படிகள் வைக்கப்படவில்லை. வெள்ளம் ஏற்படும் பொழுதும் அந்த வீட்டில் வசிக்க முடியும் என்பதை ஆசிரியர் காட்டியுள்ளார். ஆச்சிவீட்டைக் காட்டி, ஓலை வீடென்று காட்டி, தீப்பிடிக்க வைத்து, இன்பனையும், நாகராசனையும் காணாமற் செய்து, கிணற்றைக் காட்டி, சைக்கிளைக் கூறி, வாகன விபத்தைச் சொல்லி, வீட்டை எரியப் பண்ணி, இன்பனின் எட்டு வயதுத் துயரை நினைவுபடுத்தி, ஒரு கண்ணாமூச்சி விளையாட்டையே காட்டுகிறார் ஆசிரியர்.

ஆசிரியர், நாவலில் எதையும் வலிந்து புகுத்தவில்லை. பிரச்சார நடவடிக்கை எதிலும் ஈடுபடவில்லை. நாவல் என்ற கட்டமைப்புக்குள் நின்றுகொண்டு, தெளிந்த நீரோடை போல் நாவலை நகர்த்தியிருக்கின்றார்.

ஆச்சிவீடு எப்படித் தீப்பிடித்தது என்பதை அறிய வச்சிரவேலும் நல்லைநாதனும் படாதபாடு படுகிறார்கள். இதற்கிடையில் ஆசிரியர் நாகராசன் படிக்கும் காலத்திலேயே சீனியுடன் ஒரு கறுப்புப் பொடியையும், தண்ணீரையும் கலந்து நெருப்பு பற்ற வைத்ததாக ஒரு குண்டைப் போட்டுப் பொலீஸ் மூளையையே குழப்புகின்றார். பின்பு தடயவியல் நிபுணர்களின் அறிக்கையின் ஊடாக அதற்கான தெளிவினை வைக்கிறார். வரிவசூலிப்பவர்கள் வீடுகளைச் சோதனையிடும் போது மாணவர்களின் கணக்குக் கொப்பிகளைக் கூட விடாது தூக்கிப் போவது போல, பொலீசார் நீலகண்ட கணியரின் சாதகக் குறிப்புகளைக் கூட ஆற்றாமையால் எடுத்துச் செல்கிறார்கள். பல துப்புக்களை வெற்றிகரமாகத் துலக்கிய வச்சிரவேலுவையும், நல்லைநாதனையும், வாசகர்களையும் ஆசிரியர் தனது துப்பறியும் மூளை மூலம் கலக்கி அடிக்கிறார். இன்பனும் நாகராசனும் ஆச்சிவீட்டுக்குள் அகப்பட்டு எரிந்து சாம்பரோடு சாம்பராகிவிட்டார்கள் என்று நம்ப வைத்த கனி விமலநாதன் முடிவாகப் 'பொரன்சிக்' ரிப்போட்டைக் காட்டி, மர்மத்தை மேலும்; அதிகப்படுத்துகிறார். இதை ஒரு விஞ்ஞான நாவல் என்று சொல்லுவதை விட, நல்ல துப்பறியும் நாவல் என்று சொல்லலாம்.

'குழைதாப்பு', 'முளாசி எரிஞ்சுது', 'ஓமையா', 'நெருப்பை நூக்க', 'வரேக்கை', 'நிண்டவையே', 'உதிலை', 'கூட்டியாறேன்', 'வளவுக்குள்ளை', 'பக்கத்திலைதான்', 'ஆரேனும் பத்த வைச்சிருப்பினமோ' இப்படி எத்தனையோ கிராமியத் தமிழ் ஆங்காங்கே மணம் வீசுகின்றது. ஒருகாலத்தில் இச்சொற்கள் பாவனையில் இல்லாது போகலாம் அல்லது சிலர் அவற்றிக்கு அடிக்குறிப்புக் கூடக் கேட்கலாம். இவற்றையெல்லாம் கனி இங்கு பதிவு செய்தமைக்காகவும் எமது கிராமங்களின் நடையுடை பாவனை அனைத்தையும் அச்சொட்டாக சொன்னமைக்காகவும் அவருக்கு நன்றி கூறுகின்றேன்.

கனி விமலநாதனின் எழுத்துக்களை நான் வாசித்ததில் இருந்து அவை, இந்த நூலாசிரியருக்கும், பறக்கும் தட்டுகளுக்கும், வேற்றுலக மனிதர்களுக்கும், நிறையத் தொடர்புகள் இருப்பது போல் ஒரு எண்ணத்தை என்னுள் ஏற்படுத்துகின்றன. இந்த நாவலின் திருப்புமுனைக்கு இப்போது வருவோம்.

'நாங்கள் இருவரும் ஆச்சிவீட்டுக்கு வெளியாலை வந்தோம். நாங்கள் வெளியாலை வந்ததும் எங்கள் இருவரையும் ஏதோ இழுப்பது போல இருந்தது. நான் பயமாக இன்பனைப் பிடித்துக் கொண்டு திரும்பிப் பார்த்தேன். எதுவும் தெரியவில்லை. அந்த இழுப்பில் இருந்து இருவராலும் தப்ப முடியவில்லை. நிலத்தில் இருந்தும் எங்களை மேலே அந்த இழுவையானது இழுத்துக் கொள்ள, இழுப்பின் வழியே நாங்கள் அந்தரத்தில் இழுபட்டுக் கொண்டே போக, இருவருமே சில கணங்களுக்குள் எமது பிரபஞ்சத்தை விட்டு இன்னொரு பிரபஞ்சத்துக்குள் போய் விட்டோம்'
ஆசிரியர் இன்னுமொரு இடத்தில் சொல்லுகிறார், 'உறிஞ்சி' மேலே எடுக்கப்பட்டோம்.

'ஆச்சிவீடு' ஏன் எரிந்தது? நாயகம் என்னவானார்? நாகரசா மாமாவுக்கும் இன்பனுக்கும் என்ன நடந்தது? இனியனையும் திலகத்தையும் சந்தித்தார்களா? திலகத்தின் நிலை என்ன? இன்னொரு பிரபஞ்சமா? எப்படி? வேற்றுலக மனிதர்கள் இந்தப் பிரபஞ்சத்துள் வந்தால் என்ன நடக்கும்? மிகவும் சுவாரசியமான நாவல், வெற்றி நடை போடுகிறது.

இந்த நாவலை விலை கொடுத்து வாங்கிப் படியுங்கள். எமது மண்ணின் எழுத்தாளர்களை மீண்டும் மீண்டும் எழுத் தூண்டுங்கள். என் நெஞ்சில் கை வைத்துச் சொல்லுகிறேன், 'நல்ல தமிழ், நல்ல எழுத்துநடை, நல்ல நாவல்'.

 


சோக்கல்லோ சண்முகம்






 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்