கவிக்கோ ஞானச்செல்வன்: ‘பாட்டுத் திறத்தில் புதிய பாரதிதாசன்!’

பேராசிரியர் இரா.மோகன்


“பாட்டுத் திறத்தில் பாரதி தாசன்
தேட்டம் மிக்கநல் திறனு டையோன்”


என உவமைக் கவிஞர் சுரதாவால் தமிழ் கூறும் நல்லுலகிற்கு அடையாளம் காட்டப் பெற்றவர் ஞானச்செல்வன். திருஞானசம்பந்தம் என்னும் இயற்-பெயரினைக் கொண்ட இவரது பிறப்பிடம் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த மதுக்கூர். 28.11.1939-இல் பிறந்த இவர் தமது எண்பது அகவையிலும் இமைப் பொழுதும் சோராது அன்னைத் தமிழுக்குத் தொண்டாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இவர் ஆற்றல்சால் தமிழ் ஆசானாக இருந்து, பலருக்கு அறிவு கொளுத்தியவர்; கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தமிழறிஞர், ஊடகவியலாளர் எனப் பன்முகத் திறன்கள் கொண்டவர்; ‘நல்ல தமிழறிவோம்’, ‘கவிதைப் பூக்காடு’, ‘இன்றும் இனிக்கிறது நேற்று’, ‘சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே’ உள்ளிட்ட நற்றமிழ் நூல்கள் முப்பத்து ஆறு படைத்திருப்பவர்; தம் வாழ்நாள் சாதனைகளுக்காகப் பற்பல பரிசுகளும் விருதுகளும் பட்டங்களும் பெற்றவர்; பிழையறத் தமிழைப் பிறருக்குப் பயிற்றுவிப்பதில் பெரும்புலவர் மா.நன்னனுக்கு நிகரான வல்லமை கைவரப்பெற்றவர்; சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களின் சீர்த்திமிகு திருத்தொண்டர்; ‘நன்முறையில் எழுதுகின்ற எழுதுகோலும், நலமுறவே எழுதுகின்ற எழுத்தும் தெய்வம்’ என்ற கொள்கையினர். தெய்வ பக்தியும் தேச பக்தியும் இவருக்கு இரு கண்கள். பதினாறு வயதில் கவிதைக் கலை இவருக்குப் பழக்கம் ஆயிற்று. 1968-ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்து நடத்திய இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டின் ‘புகாரில் ஒரு நாள்’ கவிதைப் போட்டியில் இரண்டாம் பரிசாக இவர் தமிழக அரசின் தங்கப் பதக்கத்தை வென்றவர். 1968-ஆம் ஆண்டில் ‘பாடி வந்த நிலா’ என்னும் முதல் கவிதைத் தொகுப்பின் வாயிலாகத் தொடங்கிய ஞானச்செல்வனின் எழுத்துப் பயணம் இன்றளவும் பீடு நடை பயின்று வருகின்றது. அவரது அகவை எழுபது நிறைவு நாளில் சென்னை, சாந்தா பதிப்பகம் ‘ஞானச்செல்வன் கவிதைகள்’ (நவம்பர், 2009) என்னும் தலைப்பில் ஓர் ஒட்டுமொத்தத் தொகுப்பினை வெளியிட்டுப் பெருமை தேடிக் கொண்டது. ‘உணர்வுக்கு உரம்’, ‘அறிவுக்கு வளம்’, ‘மகிழ்வுக்கு இதம்’, ‘போற்றல் புலம்’, ‘இரங்கல் களம்’, ‘நெடுநல் இன்பம்’, ‘விடுதல் அறியா விருப்பு’ என்னும் ஏழு பெருந்தலைப்புகளில் அத்தொகுப்பில் கவிதைகள் பகுக்கப் பெற்றிருப்பது சிறப்பு. இனி, அத்தொகுப்பின் வழி நின்று ஒரு பறவைப் பார்வையில் கவிக்கோ ஞானச்செல்வனின் பாட்டுத் திறம் குறித்துச் சுருங்கக் காணலாம்.

யார் கவிஞன்?


கவிக்கோ ஞானச்செல்வனின் கண்ணோட்டத்தில், ‘கவிதை எனும் வானத்தில் ஒளிபரப்பும் கவினார்ந்த நிலவாக’ இருப்பவன் கவிஞன்; ‘புவி போற்றும் புதுநெறிக்கு முரசு கொட்டும் புகழார்ந்த மறவனாக’த் திகழ்பவன் கவிஞன். இன்னும் ஒரு படி மேலாக, ‘யார் கவிஞன்?’ என்னும் வினாவுக்கு ஞானச்செல்வன் தரும் செறிவான விடை இதுதான்:

“தேமதுரத் தமிழோசை உலகம் எல்லாம்
       செழித்திடவே உணர்வூட்டி, அறிவும் ஊட்டி,
ஏமமுற ஆட்சிதனில், ஆவ ணத்தில்,
       இசைத் துறையில். கல்விதனில், நீதி மன்றில்,
காமமுறு வாணிகத்தில், மருத்து வத்தில்,
       கடவுள்வழி பாட்டினிலும் தமிழ் அமர்த்திச்
மேமமுற வேண்டும்எனும் கொள்கைக் காகத்
       தினம்எழுதும் தமிழ்க்கவிஞன் கவிஞன்”


                                          (ஞானச்செல்வன் கவிதைகள், ப.79)

இங்கே பாரதியமும் பாவேந்தமும் சுண்டக் காய்ச்சிய வடிவில் களிநடம் புரிந்து நிற்பது நெற்றித் திலகம்.

‘கவிதை என் காதலி’ என்றும், ‘கைவாள்’ என்றும், ‘காலத்தின் குரல்’ என்றும், ‘உணர்வின் ஊற்று’ என்றும், ‘அழகியலின் வெளிப்பாடு’ என்றும் பலரும் பலவாறு கவிதை குறித்து உரைத்துள்ளனர். “ஆற்றொழுக்கான நடையும், அழகூட்டும் அணிவகைகளும், எடுப்பான எதுகை மோனைகளும் இயைந்து படிப்பவர்க்கு இன்பம் பயப்பதோடு சமுதாயத்திற்கு நற்பயன் விளைவிப்பதே கவிதை. மானுட நேயத்தையும், விழுமிய பண்பாட்டுச் சிறப்பையும், இயற்கையின் எழில் நடத்தையும் சித்திரிப்பதே கவிதை” (நூன்முகம், ஞானச்செல்வன் கவிதைகள், ப.19) எனக் கவிதைக்கு நல்லதொரு வரைவிலக்கணத்தினை வகுத்துத் தந்துள்ளார் ஞானச்செல்வன். இங்ஙனம் இலக்கணம் வகுத்ததோடு நின்றுவிடாமல், இவ்விலக்கணத்திற்கு இலக்கிய-மாகப் பொருந்தி வரும் கவிதைகளையும் அவரே யாத்துத் தந்திருப்பது போற்றத்தக்கதாகும். பதச்சோறு ஒன்று.

“எல்லோரும் கற்றவர்கள் எல்லார்க்கும் நல்வாய்ப்பு
எல்லாரும் இன்புற்றார் என்றிடவே – எல்லார்க்கும்
கோத்த பெருஞ்செல்வம் கொண்டாட்டம் என்றாகப்
பூத்தது புத்தாண்டுப் பூ!”
(ஞானச்செல்வன் கவிதைகள், ப.38)

தமிழ்மொழியே ஊற்றுக் கண்!


“தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்”
(114)

என்பது வள்ளுவர் வாய்மொழி. இதனை அடியொற்றி,

“என்கொண்டு வந்தோம் நாம் செல்லும்போது
        என்கொண்டு போவோம் நாம்? எச்சம் ஒன்றே
தன்பின்னே பெயர் சொல்லும் தகைமை வேண்டும்;
        தணியாத தமிழ்வேட்கை என்றும் வேண்டும்!”


எனத் ‘தணியாத வேட்கை’ என்னும் தலைப்பில் படைத்த கவிதையில் மொழிகின்றார் கவிக்கோ ஞானச்செல்வன். அவரது மொழிக் கொள்கை அழுத்தமானது; திருத்தமானது.

“வேற்றுமொழி பயின்றாலும் தமிழர் பிள்ளை
         வியன்தமிழைக் கட்டாயம் கற்க வேண்டும்!
நாற்றுமொழி தமிழன்றி வேறு நட்டால்
         நல்விளைச்சல் தாராது பதராய்ப் போகும்!”


                                      (ஞானச்செல்வன் கவிதைகள், ப.31)

‘மேற்றிசையோ கீழ்த்திசையோ மேன்மை பெற்றோர் யாவரும் வாழ்வில் மிக உயரத் தமிழ்மொழியே ஊற்றுக் கண்ணாம்!’ எனக் குறிப்பிடும் கவிக்கோ ஞானச்செல்வன், ‘போற்றும் உயர்கல்வி எல்லாம் தமிழின் மூலம் புகட்டும் நாளே புது மலர்ச்சி பூக்கும் நாளாம்!’ எனவும் அறுதியிட்டு உரைக்கின்றார்.

‘நந்தமிழ், வண்டமிழ், செந்தமிழ், பைந்தமிழ், இன்றமிழ், பொன்தமிழ், சொற்றமிழ், நற்றமிழ், அகத்தமிழ், சங்கத் தமிழ், தங்கத் தமிழ், பொங்குதமிழ், தங்குதமிழ், கன்னல் தமிழ், சுட்டித் தமிழ்’ என்றெல்லாம் உயர்தனிச் செம்மொழியாம் தமிழின் மாண்பினைப் பல்லாற்றானும் போற்றிப் பாடும் கவிக்கோ ஞானச்செல்வன், தாய்மொழியின் தனிப்பெருந் தகைமை குறித்து நிரந்தினிது கூறுவது மனங்கொளத் தக்கதாகும். கவிக்கோவின் சீர்மிகு சொற்களிலேயே அதனை ஈண்டுக் காண்பது சிறப்பாக இருக்கும்.

“தாய்மொழி என்பது,
சிந்தனைக்கு ஊற்றுக்கண் / சீர்மைக்கு நாற்றங்கால்!
வந்தனைக்கு ஒரு தெய்வம் / வாழ்க்கைக்கு உயிர்நாடி!
முந்திவரும் நல்லறிவு / மூளுகின்ற மெய்யுணர்வு!
வந்துலவும் பூந்தென்றல் / வழிகாட்டும் ஒளிவிளக்கு!
தாய்மொழி என்பது,
தாய்முலைப் பாலதாம் / ஊட்டமது தருவதாம்!
உரமூட்டும் வரமதாம் / வலிமை சேர்ப்பதாம்!
வல்லமை அளிப்பதாம் / பிணியெல்லாம் அகற்றியே
பேரின்பம் நல்குமாம்!”
(ஞானச்செல்வன் கவிதைகள், ப.62)

எழுதுவோம் புதுக்கணக்கு!


“செய்தக்க அல்ல செயக்கெடும்; செய்தக்க
செய்யாமை யானும் கெடும்”
(466)

என்னும் குறட்பா, யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, தமிழ் இனத்திற்கே நூற்றுக்கு நூறு பொருந்தி வருவதாகும்.

நாம் ‘எல்லாமும் எந்தமிழில் இருக்கின்றது!’ என்னும் ஓர் இறுமாப்பிலேயே இருந்தோம்; சொல்லழகும் பொருளழகும் சுவையழகுமே தினமும் மகிழ்ந்து சோம்பல் மிகக் கொண்டோம்; வல்வழக்கு வம்புகளில் வசம் இழந்து, நலம் இழந்து, வாழும் வகையினை மறந்தோம்; கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்த பழங்கணக்கிலேயே திளைத்திருந்தோம்; ‘செந்தமிழைச் செழுந்தமிழாய் மேம்படுத்தி, தகத்தகாயத் தமிழை தாபிக்கத் திக்கெல்லாம் செல்க!’ எனக் கவியரசரும் புரட்சிக் கவிஞரும் தெளிவித்த மொழியினை மறந்தோம்; சிந்தைக்கும் செயலுக்கும் தினையளவும் ஒவ்வாத செயற்கை வழியினை வகுத்தோம்; ‘உந்துகின்ற உணர்வுக்கும் உயிர்ப்புக்கும் தமிழ்!’ என்று உதட்டளவிலேயே மொழிந்தோம். இங்ஙனம் தமிழினம் செய்யத்தக்க செயல்களைச் செய்யாமல் இருப்பதைச் சுட்டிக் காட்டும் கவிக்கோ,

“உலகெலாம் நந்தமிழர் உயர்வுக்குத் திட்டமிடும்
        உயர்வழியைக் கண்டோமா நாம்?
அலகிலாப் புதுமைகள் அன்றாடம் மலர்ந்திட
        அறிவியல் வளர்த்தோமா நாம்?
விலகிலாத் துன்பமாம் ஈழத்துத் தமிழனின்
         விழிநீரைத் துடைத்தோமா நாம்?”


                            (ஞானச்செல்வன் கவிதைகள், ப.120)

என அடுக்கடுக்கான கேள்விக் கணைகளைத் தொடுப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழினம் செய்யத் தகுந்த செயல் யாது என்பதையும் கவிக்கோ சுட்டிக்காட்டத் தவறவில்லை:

“எத்தனை காலம்நாம் குளிர்காய எண்ணுவோம்
        என்னுயிர் தமிழ் மாந்தரே!
இத்தனை காலமும் இருந்ததை மறந்து நாம்
         எழுதுவோம் புதுக்கணக்கு!”
(ப.121)

‘உலகமெல்லாம் தமிழோசை பரவும் வகை செய்தல் வேண்டும்’ என்னும் உணர்ச்சிமிகு பாரதியின் கனவு நனவாக வேண்டும் என்றால் - நடைமுறைக்கு வரவேண்டும் என்றால் - செய்ய வேண்டிய செயல்கள் யாவை என்பதையும் பிறிதொரு கவிதையில் கவிக்கோ எடுத்துரைத்துள்ளார்.

“துறைதோறும் துறைதோறும் தமிழின் மேன்மை
          துலங்கிடவே முனைப்பான செயல்கள் வேண்டும்!
கறையில்லா முழுமதியாய் ஒளியைச் சிந்தும்
          கவினார்ந்த தமிழாக ஞாலம் எல்லாம்
பறைசாற்றப் பல்கலையும் வளர்க்க வேண்டும்!
          பைந்தமிழே உயிர்மூச்சாய்க் கொள்ள வேண்டும்!
நிறைவேற்றத் தமிழர் எல்லாம் ஒன்றுபட்டு
          நிற்கின்ற நாள் அதுவும் பொன்னாள் ஆகும்!”


                                                           (ஞானச்செல்வன் கவிதைகள், ப.86)

எழில் மிக்க விழுமியங்கள் எங்கே?


இன்று உலகெங்கும் ஒருபுறம் அறிவுலகில் விழுமியங்கள் (Values) பற்றிய விழிப்புணர்வு (Awakening) எழுந்துள்ளது; அதே வேளையில், மறுபுறம், ஊடகங்களின் தாக்கத்தால் விழுமியங்கள் குறித்துச் சற்றும் எண்ணிப் பார்க்காமல் எதிர்மறையான சிந்தனைகளோடு மனித குலம் காட்டு-மிராண்டிகளைப் போலச் செயல்பட்டு வரும் தவறான போக்கும் சமுதாயத்தில் மலிந்து காணப்படுகின்றது. ‘இமயத்தின் உச்சமென்று மெச்சும், எழில்மிக்க விழுமியங்கள் எங்கே?’ என வருந்தும் கவிக்கோ ஞானச்செல்வன்,

“ஒழுக்கத்தை வளர்க்காத கல்வி,
         உண்மையைப் போற்றாத மக்கள்,
இழுக்கத்தின் வழிஈர்க்கும் கணினி,
            எழுத்தெல்லாம் நச்சொழுகும் ‘பேனா’,
முழுமையாய்க் கற்றறியா ஆசான்,
       மூடத்தின் வழிநடத்தும் பூசை,
பழுக்காமல் பழுத்துவிட்ட வெம்பல்
           பாழும் இவை நமக்குஎதற்கு வேண்டும்?”
(கவிதைப் பூக்காடு, ப.9)

என வினவுவது ஆழ்ந்து சிந்திக்கத் தக்கதாகும்.

கால ஓட்டத்தில் உலகில் எவ்வளவோ மாற்றங்கள் நிகழ்ந்தாலும், என்றும் மாறாமல் நிலைபேறு உடையவனாய் மாறாது இருந்து வரும் விழுமியங்களும் உண்டு. இவ் விழுமியங்கள் குறித்து,

“ஞாலம் தோன்றிய நாள் முதலாய்
        நடந்தன நடப்பன மாற்றங்கள்
காலம் ஓடும் வேகத்தில்
        கழிந்தன புகுந்தன எத்தனையோ!...
சாலவும் எல்லாம் மாறிடினும்
        சால்பும் அறமும் மாறாவே!”
(ஞானச்செல்வன் கவிதைகள், ப.29)

எனவும் பிறிதொரு கவிதையில் பதிவு செய்துள்ளார் ஞானச்செல்வன்.

இளைய தலைமுறைக்கான செய்தி


‘ஓ! இளைஞனே இளைஞியே!’ என விளித்து ‘உனக்கு என்ன இலட்சியங்கள்? மனத்தில் எண்ணி உருப்படியாய்ச் சிந்தித்தது உண்டா சொல்வாய்!’ எனக் கேள்விக் கணைகளைத் தொடுக்கும் கவிக்கோ ஞானச்செல்வன், தனக்கென்று திட்டம் ஒன்றினை வரையறுத்துக் கொள்ளுமாறும், முயற்சிப் பயணத்தைத் தொடங்குமாறும், ‘எனக்கு என்ன தரும் இந்த நாடு?’ என்றே எண்ணாமல், செயல் தன்னைப் பற்றிக் கொள்ளுமாறும், தடைகள் பல வரினும் மயங்கிடாமல் நேர்வழியில் செல்லுமாறும், ‘உரித்தான கடமைகளில் தவறேன்’ என்று உறுதி அளிக்குமாறும், உழைப்புத் தேர் ஏறி உச்சத்தைத் தொடுமாறும் இளைய தலைமுறையினருக்கு அறிவுறுத்துகின்றார்; மேலும்,

“வேலையின்மை விரக்திகளைத் தூர ஓட்டு!
        வெறும்படிப்பு மனச்சுமையை இறக்கிப் போட்டு!
காலைவந்த செங்கதிர் போல் ஒளியைக் கூட்டு!
         கனமான செய்திகளில் அறிவைத் தீட்டு!
சாலையோர நடைபாதை வாழ்வில் கூடச்
          சத்தியத்தின் தரிசனத்தைத் தேடிக் காட்டு!
ஆலையமை, சோலையாக்(கு) அனைத்தும் நீசெய்!
           அடடாவோ! வாழ்வெல்லாம் மகிழ்ச்சி தானே!”


                                      (கவிதைப் பூக்காடு, ப.12)

என வாழும் முறைமையையும் அவர்களுக்கு எடுத்துரைக்கின்றார் கவிக்கோ ஞானச்செல்வன்.

பீடுகெழு பெண்மைக்குப் புகழாரம்

இருபதாம் நூற்றாண்டின் விடியலில் ‘புதுநெறி காட்டிய புலவர்’ பாரதியார், ‘பெண்மை வாழ்க!’ என்றும், ‘பெண்மை வெல்க’ என்றும் கூத்தாடினார்; ‘நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞானச் செருக்கும் கொண்ட ‘புதுமைப் பெண்’ணைப் படைத்தார்; ‘எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பு இல்லைகாண்!’ என்று ‘பெண் விடுதலைக் கும்மி’ பாடினார். பாரதி பரம்பரையைச் சார்ந்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ‘பெண்கள் இந்த நாட்டின் கண்கள்’ என்றார்; ‘பெண்களுக்குக் கல்வி வேண்டும், கல்வியைப் பேணுதற்கே!’ எனப் பெண் கல்விக்காக முழக்கம் இட்டார். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, ‘மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டும் அம்மா!’ என பெண்ணின் பெருமையைப் பறைசாற்றினார். இங்ஙனம் வாழையடி வாழை என வரும் கவிஞர் வரிசையில் ஞானச்செல்வனும் சேர்ந்து கொண்டு தம் பங்கிற்குப் பெண் கல்விக்காகவும் பெண் விடுதலைக்காகவும் குரல் கொடுத்துள்ளார்; ஒல்லும் வகையில் எல்லாம் பெண்ணின் பெருமையைப் போற்றிப் பாடியுள்ளார். ‘பீடுகெழு பெண்மை’ என்னும் தலைப்பில் அவர் படைத்துள்ள கவிதையில் இருந்து உயிர்ப்பான சில வரிகள் வருமாறு:

“ஞாலத்தின் முதன்மைஎது என்றால் பெண்மை!
          நலனெழிலும் மானமுடன் வீரம் பெண்மை!
காலத்தின் வியப்புகளுள் அடங்காப் பெண்மை!
          கல்வியுடன் நல்லறிவின் சின்னம் பெண்மை…
சாதிக்கப் பிறந்தவர்கள் பெண்கள் சிகரச்
          சாதனைகள் பல படைத்தார் வையம் காண!”


                                     (ஞானச்செல்வன் கவிதைகள், ப.67)

நாடும் வீடும் பீடும் பெருமையும் பெற வேண்டுமானால் பெண் கல்வி தழைக்க வேண்டும் என்றும் பெண்மையை போற்றப் பெற வேண்டும் என்றும் கருதுகின்றார் ஞானச்செல்வன்:

“பெண்கல்வி தழைப்பதனால் உயரும் நாடு
         பெண்குலத்தின் சால்பதனால் வாழும் வீடு!
பெண்மையதன் மென்மைதனில் பிறங்கும் வீடு
         பெண்மனதின் ஆழத்திற்(கு) இல்லை ஈடு!
பெண்மைதனை போற்றும்உயர் நெறியை தேடு
         பேருலகில் சக்திஎனும் அன்பில் கூடு!
பெண்ணுரிமை வளர்வதனால் இல்லை கேடு
         பேசரிய அவர்புகழைப் பாடும் ஏடு!”


                                                     (ஞானச்செல்வன் கவிதைகள், ப.37)

நாடு-வீடு; பீடு-ஈடு; தேடு-கூடு; கேடு-ஏடு என இயைபு நயம் மிளிரக் கவிக்கோ இக் கவிதையைப் புனைந்திருக்கும் திறம் நனி நன்று.

சாதி ஒழிப்புச் சிந்தனைகள்


“சாதி ஒழித்திடல் ஒன்று - நல்ல
தமிழ் வளர்த்தல் மற்றொன்று
பாதியை நாடு மறந்தால் – மற்றப்
பாதி துவங்குவ தில்லை”
(பாரதிதாசன் கவிதைகள், ப.201)

என்னும் பாவேந்தர் பாரதிதாசனின் வாக்கிற்கு இணங்க, கவிக்கோ ஞானச்செல்வன் தம் கவிதைகளில் சாதி ஒழித்திடல் குறித்தும், தமிழ் வளர்த்தல் பற்றியும் அழுத்தம் திருத்தமான கருத்துக்களை எடுத்துரைத்துள்ளார்.

“சாதியெனும் தொழுநோயை ஒழித்தல் வேண்டும்;
          சமரசமே மக்களிடை நிலவல் வேண்டும்!”


                                             (கவிதைப் பூக்காடு, ப.173)

எனப் ‘பொதுமை வேட்ட’லில் சாதிக் கொடுமையைத் ‘தொழுநோய்’ எனக் கடுமையாகச் சாடும் கவிக்கோ ஞானச்செல்வன்,

“சாதி குலம் கல்வி எனும்
       தற்பெருமை எல்லாம் விடுத்துச்
சாதிக்கப் பிறந்தவர் நாம்
       சந்திப்போம் எக்களத்தும்!”
(ஞானச்செல்வன் கவிதைகள், ப.59)


என ‘ஞால அமைதி’ என்னும் கவிதையில் பறைசாற்றுவது குறிப்பிடத்தக்கது.
‘சாதி இருக்கின்றது என்பானும் இருக்கின்றானே!’ என நெஞ்சு பொறுக்காமல் வேதனையோடு பாடினார் பாவேந்தர் பாரதிதாசன். ஞானச்செல்வனும் ‘நாம் நாமேதாம்!’ என்னும் கவிதையில் சாதி உணர்வைப் பொறுத்த வரையில் உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசித் திரியும் மனிதனின் போக்கினைத் தோலுரித்துக் காட்டுகின்றார்:

“ ‘சாதிகளே இலை’ என்று சாற்றிடுவோம் வாய்கிழிய;
         சங்கங்கள் மாநாடு கூட்டிடுவோம்!
அதியிலே நாம்எல்லாம் ஒன்றுஎன்று முழக்கிடுவோம்;
         அவரவர் சாதிக்கே வாக்களிப்போம்!”

                                              (ஞானச்செல்வன் கவிதைகள், ப.71)

‘சாதிகள் இல்லை, இல்லவே இல்லை’ என வாய்கிழியச் சாற்றிடும் நாம், சாதிச் சங்கங்கள் அமைப்பதிலும், சாதி மாநாடுகள் கூட்டுவதிலும் முனைப்புடன் இருந்திடுவோம்; தேர்தல் என்று வந்துவிட்டாலோ, அவரவர் சாதிக்கே வாக்களிப்போம். கூட்டிக் கழித்துப் பார்த்தால், கவிக்கோ ஞானச்செல்வன் கூறுவது போல், ‘பேசுவது, நடப்பது எல்லாம் நம்மிடத்தே எதிர்மாறாகவே இருக்கும்!’ மொத்தத்தில் நாம் நாமே தான்; நம் தனிக்குணமும் இது தான்!

எண்களின் மீது தனி ஈடுபாடு


கவிக்கோ ஞானச்செல்வனின் படைப்புள்ளத்தில் எண்களுக்கு என்று தனி இடம் ஒன்று உள்ளது. ‘மூன்று’, ‘நான்கு’, ‘ஆயிரம்’, ‘அருள் வேட்டல் ஆறு’ என்னும் தலைப்புகளில் அவர் இயற்றியுள்ள கவிதைகள் இவ் வகையில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. ஏசு பெருமானின் பத்துக் கட்டளைகளை நினைவுபடுத்துவது போல், ‘நன்றாம் பத்து’, ‘வேண்டாப் பத்து’ என்னும் தலைப்புகளில் இரு அழகிய கவிதைகளைப் புனைந்துள்ளார் கவிக்கோ ஞானச்செல்வன். முதற்கண், கவிக்கோவின் சொற்களில் ‘நன்றாம் பத்து’ யாவை எனக் காண்போம்:

“ 1. திருக்குறள், சிலம்பு, தெளிதமிழ்க் கம்பன்,
திருவாசகத் தேன், திளைத்தல் நன்றே!
2. எம்மொழி ஆயினும் பயின்றிடு நன்றே!
3. அம்மொழி அறிஞர் கூற்றவை நன்றே!
4. உலகம் உயர்ந்தவை ஏற்றிடு நன்றே!
5. கலகம் தொலையக் கற்றிடு நன்றே!
6. தாய்மொழி தாய்ப்பால் தகைமை நன்றே!
7. ஆய்மொழி நுட்பம் ஆர்தல் நன்றே!
8. தந்தைதாய்ப் பேணுதல் சாலவும் நன்றே!
9. முந்தையர் சொல்லைப் போற்றுதல் நன்றே!
10. பொன்றாப் புகழுடன், பொலிவுறும் மாண்புடன்
என்றும் இனியராய் வாழ்தல் நன்றே!”

                                               (ஞானச்செல்வன் கவிதைகள், ப.68 )

கவிக்கோவின் நோக்கில் பொன்றாப் புகழுடன், பொலிவுறும் மாண்புடன், என்றும் இனியராய் வாழ விரும்புவோர் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் வருமாறு: 1. திருக்குறள், சிலப்பதிகாரம், கம்ப ராமாயணம், திருவாசகம் ஆகிய உயரிய தமிழ் இலக்கியங்களில் திளைத்தல். 2. உலகம் போற்றும் பன்மொழி இலக்கியங்களைக் கற்று இன்புறல். 3. தாய்மொழியின் தகைமையைப் போற்றல். 4. பெற்றோர் மற்றும் மூத்தோர் சொல்லைப் பேணல்.

நாகரிகம் என்னும் பெயரில் இன்று சமுதாயத்தில் அரங்கேறி வரும் வம்புகளையும் வழக்குகளையும், சிறுமைகளையும் சீரழிவுகளையும், மது, மாது, அரைகுறை ஆடை, டேட்டிங் என்னும் வேண்டாத பழக்க வழக்கங்களையும், வன்முறை, கொலை வெறி, வன்புணர்வு முதலான கொடுமைகளையும், நச்சுக் கருத்துக்களையும் பிற்போக்குச் சிந்தனைகளையும் பரப்பி வரும் திரைப்படக் காட்சிகளையும் தொலைக்காட்சித் தொடர்களையும் ‘வேண்டாப் பத்து’ என்னும் தலைப்பில் எழுதிய கவிதையில் ஞானச்செல்வன் பட்டியல் இட்டுள்ளார்.

“ 1. நாட்டுநற் புகழார் நந்தமிழ் வாழ்வில்
‘டேட்டிங்’ என்னும் சிறுமை வேண்டா!
2. ‘வஸ்தாது’ தாதா வம்புகள் வேண்டா!
3. ‘டிஸ்கொதே’ என்னும் சீரழிவு வேண்டா!
4. மது, மாது, புகை எனும் மயக்கம் வேண்டா!
5. வன்முறை கொலை மாறுகள் வேண்டா!
6. வன்புணர்வு என்னும் அரக்கம் வேண்டா!
7. அரைகுறை ஆடைகள் அணிதல் வேண்டா!
8. கரையிலா வெள்ளமாய்க் கடுகிட வேண்டா!
9. தொடர்கள் என்னும் நாடகம் வேண்டா!
10. திரைப்படம் என்னும் நச்சும் வேண்டா!”

                                                 (ஞானச்செல்வன் கவிதைகள், ப.68)

அழகிய உவமைகளின் அணிவகுப்பு


“ஒரு புலவனுடைய சிறப்பை அறிவதற்கு அவன் கையாளும் உவமை ஒன்றே போதுமானது எனலாம்… தொடர்பற்ற பொருள்களின் இடையே கூடச் சிறந்த கவிஞன் ஒப்புமையைக் காண்கின்றான்; நம்மையும் காணுமாறு செய்கின்றான்… அடிக்கடி காணும் பொருள்களின் தனிச்சிறப்பை விளங்கிக் கொள்ளவும் உவமையைப் புலவன் கையாளுகிறான்” (இன்றும் இனியும், பக்.2-3) என்பர் பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன். இக் கருத்தின் ஒளியில் ஞானச்செல்வன் கையாண்டுள்ள சில உவமைகளின் நயமும் நுட்பமும் குறித்து ஈண்டு அலசிப் பார்க்கலாம்.

கவிக்கோ ஞானச்செல்வனின் உவமைத் திறத்திற்குக் கட்டியம் கூறி நிற்கும் ஓர் அழகிய கவிதை ‘கவின் சிந்தும் காட்சி’.

“உலகளந்த பெருமானின் தோற்றம் போல
        ஓங்கிமிக வளர்ந்ததொரு தென்னந் தோப்பு!”


என்னும் அழகிய உவமையுடன் தொடங்குகின்றது அக் கவிதை. கவிக்கோ பல நாளாய் உலவி வரும் தோப்பு அது. எனவே, பயில்தொறும் புதிதுபுதிதாய் அவரது உள்ளத்தில் எண்ணங்கள் தோன்றுகின்றன; எனவே, நெஞ்சை அள்ளும் உவமைகள் அணிவகுத்து வருகின்றன.

1. தோப்பில் சில மரங்கள், ‘நலமெல்லாம் வாய்ந்த எழில் நங்கையை ஒப்ப, நாணுற்றுத் தலைதாழ்த்தி’ நிற்கின்றனவாம்! 2. சில மரங்கள், ‘குலக்கொடியார் தம் கொழுநன் தோள் சாய்ந்திருத்தல் போன்று, குலை சாயத் தாம் சாய்ந்து’ நிற்கின்றனவாம்!’ 3. சில மரங்கள், ‘எண்ணத்தால் மிக உயர்ந்தே எதற்கும் அஞ்சா, ஏற்றமிகு மறவர் என’ நிமிர்ந்து நிற்கின்றனவாம்! 4. சில மரங்கள், ‘எண்ணத்தால் முடம்பட்டார் வாழ்வே போல, எழில் தோப்பில் முடத்தெங்காய்’ தாழ்ந்து நிற்கின்றனவாம்! 5. ‘மண்ணின்று விண்ணிற்கு ஒரு கணைதொடுக்க, மரம் ஒன்று பானவில்லாய்’ ஒரு பக்கம் நிற்கின்றதாம்! 6. ‘முல்லைபல் வரிசை எனப் பாளைக்கொத்து’ காட்சி அளிக்கின்றதாம்! 7. ‘மொய்த்த குழல் காடு எனவே ஓலைக்கூட்டம்” அங்கே திகழ்கின்றதாம்! 8. ‘வில்லினை ஒத்த நெற்றி என மட்டை’ விளங்குகின்றதாம்! 9. ‘மேலாடை போல் திகழ்வன பன்னாடை ஈட்டமாம்!’ 10. ‘வெல்லும் எழில் பெதும்பை ஒருத்தியின் மார்பகம் போல தென்னை மரத்தின் சிறுகுரும்பை’ விளங்குகின்றதாம்! 11. ‘மங்கை நல்லாளின் கொல்லும் எழில் கொங்கை எனத் தேங்காய் திரண்டு’ உள்ளதாம்!

சிலம்பொலி செல்லப்பனார் குறிப்பிடுவது போல், “பாளைக் கொத்து, முல்லைப் பல் வரிசை; ஓலைக் கூட்டம், கூந்தற்காடு; மட்டை, வில்லொத்த நெற்றி, பன்னாடை, மேலாடை; சிறுகுரும்பை, பெதும்பைப் பெண் மார்பு; திரண்ட தேங்காய், மங்கையின் கொங்கை எனத் தென்னையை மங்கையாய்க் காணும் ஞானச்செல்வனின் கற்பன, கவின் சிந்துகிறது” (அணிந்துரை, ஞானச்செல்வன் கவிதைகள், ப.13).

முன்னோர் மொழி பொருளையும் சொல்லையும் போற்றி ஆளல்


‘முன்னோர் மொழி பொருளே அன்றி அவர் மொழியும் பொன்னே போல் போற்றுவம்’ (பொதுப் பாயிரம், நூற்பா 9) என்னும் நன்னூலாரின் வாக்கிற்கு இணைங்க, கவிக்கோ ஞானச்செல்வன் தம் கவிதைகளில் ஆங்காங்கே முன்னோர் மொழி பொருளையும் சொல்லையும் ஒல்லும் வகையில் எல்லாம் கையாண்டுள்ளார். இவ் வகையில் குறிப்பிடத்தக்க சில உயிர்ப்பான இடங்களை ஈண்டுக் காணலாம்.

‘திருமால் சீர் கேளாத செவி; என்ன செவியே!... பஞ்சவர்க்குத் தூது நடந்தானை ஏத்தாத நா என்ன நாவே! நாராயணா என்ன நா என்ன நாவே!’ என்னும் சிலப்பதிகார ஆய்ச்சியர் குரவை அடிகளின் சாயலிலேயே, ‘திருக்குறளைக் கேளாத செவி என்ன செவியே!... நல்ல குறள் ஏத்தாத நா என்ன நாவே! நறுங்குறளை ஓதாத நா என்ன நாவே!’ (ஞானச்செல்வன் கவிதைகள், ப.145) என்னும் திருக்குறளைப் போற்றும் அற்புதமான வரிகளைப் படைத்துள்ளார் ஞானச்செல்வன்.

‘துங்கக் கரிமுகத்துத் தூமணியே, நீ எனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா’ (நல்வழி: கடவுள் வாழ்த்துப் பாடல்) என விநாயகப் பெருமானிடம் வேண்டிப் பாடினார் ஔவைப் பெருமாட்டியார். ஞானச்செல்வனோ இன்னும் ஒருபடி மேலாக, ‘நந்தல்இலா, துங்கத் திருவடிகள் போற்றி மேன்மேலும், தங்கத் தமிழ் அனைத்தும் தா!’ (கவிதைப் பூக்காடு, ப.105) என்று தம் உளம் புகுந்து, வாரியென நற்றமிழைத் தந்து அருள்பாலித்த தமிழ்த் தாயிடம் வேண்டுகிறார்; பிறிதொரு கவிதையிலும் அவர்,

“தங்கம்நிகர் தமிழ்த்தாயை இனிய சங்கத்
தமிழ் அனைத்தும் தா”
(கவிதைப் பூக்காடு, ப.109)

என்றே வேண்டுகிறார்.

“மாகாளி பராசக்தி உருசிய நாட்டினில்
        கடைக்கண் வைத்தாள் அங்கே
ஆகா என்று எழுந்தது பார் யுகப்புரட்சி”
(பாரதியார் கவிதைகள், ப.222)

என்னும் கவியரசர் பாரதியாரின் வாக்கே ஞானச்செல்வனின் கைவண்ணத்தில் ‘கனவில்லை தமிழ் ஈழம்!’ என்னும் கவிதையில்,

“மாகாளி கடைக்கண்ணும் வைக்க வில்லை
மனிதநேயம் சற்றேனும் காக்கவில்லை!”
(கவிதைப் பூக்காடு, ப.23)

என வேறு வடிவில் வெளிப்பட்டிருக்கக் காண்கிறோம்.

“எனைஈன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்கள்
          இனம்ஈன்ற தமிழ்நாடு தனக்கும் என்னால்
தினையளவு நலமேனும் கிடைக்கும் என்றால்
           செத்தொழியும் நாள் எனக்குத் திருநாள் ஆகும்”


                                                (பாண்டியன் பரிசு, ப.54)

என்னும் பாவேந்தர் பாரதிதாசனின் முத்திரை வரிகளே,

“நத்தம்உயிர் நறுந்தமிழே எதிலும் எங்கும்
         நல்லாட்சி மெய்ம்மையுறச் செலுத்தும் நாளே
செந்தமிழர் திருநாளாம் அதற்காய் வேண்டிச்
          செத்தொழிவது என்றாலும் ‘திருநாள்’ ஆகும்!”


                                                       (கவிதைப் பூக்காடு, ப.25)

என ஞானச்செல்வனின் எழுதுகோலில் புதுக்கோலம் கொண்டுள்ளன.

முத்தாய்ப்பாக மதிப்பிடுவது என்றால், கவிக்கோ ஞானச்செல்வனின் கவிதைகள் ‘பயில்தொறும் பண்புடையாளர் தொடர்பு’ போல நவில்தொறும் பயில்வார் ‘உணர்வுக்கு உரம்’ ஊட்டுகின்றன; ‘அறிவுக்கு வளம்’ சேர்க்கின்றன; ‘மகிழ்வுக்கு இதம்’ தருகின்றன. அவர் படைத்துள்ள ‘போற்றல் புல’மும், ‘இரங்கல் கள’மும்’ ‘நெடுநல் இன்பம்’ நல்குகின்றன. சுருங்கக் கூறின், ‘விடுதல் அறியா விருப்பினை’ நெஞ்சில் தளிர்க்கச் செய்கின்றன எனலாம்.
 

 

‘தமிழாகரர்’ முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.

 

 

 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்