‘சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே!’

பேராசிரியர் இரா.மோகன்


சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே – அதைத்
தொழுது படித்திடடி பாப்பா!”

என அறிவுறுத்துவார் கவியரசர் பாரதியார். ‘மந்திரம் போல் வேண்டுமடா சொல்லின்பம்’ என மொழிந்திடும் கவியரசர், ‘சொல்வது தெளிந்து சொல்’ எனப் ‘புதிய ஆத்திசூடி’ ஒன்றினையும் படைப்பார். ‘சொல்லில் விளங்கும் சுடரே!’ என சக்தியைப் போற்றும் கவியரசர், ‘சொல்லினுக்கு எளிதாகவு(ம்) நின்றிடாள், சொல்லை வேறிடம் செல்ல வழி விடாள்’ என உரைப்பதும் மனங்கொளத் தக்கது ஆகும். ‘சொல்லினைத் தேனில் குழைத்து உரைப்பாள் சிறுவள்ளியைக் கண்டு சொக்கி நிற்கின்றாளாம் வேலவன்!’ இங்ஙனம் உயர்வு, உறுதி, இனிமை, இன்பம், தெளிவு, திட்பம், நுட்பம் முதலான மாண்புகள் யாவும் பொருந்தியனவாகத் தமிழ்ச் சொற்கள் விளங்குகின்றன. இவ்வுண்மையைப் பல்லாற்றானும் நிறுவும் வகையில் கவிக்கோ ஞானச்செல்வன் ‘சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே!’ என்னும் தலைப்பில் ஓர் அரிய நூலை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது (வெளியீடு: வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தி.நகர், சென்னை 600017, விலை ரூ.80). அந் நூலில் இருந்து உள்ளங்கவரும் உதாரணங்கள் சிலவற்றை இங்கே காண்போமா?

1.  காலதர்: இந் நாளில் ‘சன்னல்’ அல்லது ‘சாளரம்’ என்று வழங்கப்படும் சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல் இது. ‘கால்’ எனில் ‘காற்று’. ‘அதர்’ எனில் ‘வழி’, காற்று வரும் வழி தான் கால் அதர் – காலதர் எனப்பட்டது. காலதரைக் ‘காதலர்’ என்று எழுதினால் பொருளே அடியோடு மாறிவிடும்!

2.  அருவி: திருக்குற்றல மலையின் அருவிகளை அறியாதார் யாரேனும் இருப்பர்களா? ‘குற்றால அருவியிலே குளித்தது போல் இருக்குதா? என்ற மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் திரைஇசைப் பாடல் வரி இன்றும் கேட்டால் செவிக்குக் குளிர்ச்சி தருவதாகும். பைகாரா நீர்வீழ்ச்சி, பாபநாசம் நீர்வீழ்ச்சி என்றவாறு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டியதில்லை. ‘வாட்டர்- ஃபால்ஸ்’ என்பதன் சொல்லுக்குச் சொல் தமிழாக்கமே ‘நீர்வீழ்ச்சி’. எண்ணிப்பாருங்கள், அழகுத் தமிழில் ‘அருவி’ என்ற சொல் இருக்க, நீர்வீழ்ச்சி என்று எதற்காகக் கூறவேண்டும்?

3.  வேட்டி: தறியில் நீளமாக நெய்து, வெட்டப்படுவது ‘வெட்டி’. வெட்டியதைத் துண்டு துண்டாகச் செய்தால் அது ‘துண்டு’. இவை காரணப் பெயர்கள். உண்மை இவ்வாறு இருக்க, ‘வேஷ்டி’ எப்படி வந்தது? இது யாரோ வேண்டும் என்றே செய்த இடைச்செருகல்; குறும்பு. ‘ஆட்டுக்குட்டி’யை ‘ஆஷ்டுக்குஷ்டி’ என்றதும் இவ்வாறே.

4.  ‘வக்கத்தவன்’: ‘வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை’ என்று மக்கள் வழக்கில் பேசுவது உண்டு. ‘வக்கு அற்றவன்’ அதாவது ‘வசதி, வாய்ப்பு இல்லாதவன்’ என்று இதற்குப் பொருள் கூறுகின்றனர். இது தவறு. ‘வாக்கு கற்றவன்’ என்பதே நாளடைவில் ‘வக்கற்றவன்’, ‘வக்கத்தவன்’ என்று திரிந்துவிட்டது. ‘வாக்கு (பேசும் திறமை) உடையவன்’ ஆசிரியர் வேலைக்குத் தகுதி படைத்தவன் எனக் கொள்வதே சரியானது ஆகும்.

5.  ‘போக்கிரி’: ‘போடா போக்கிரிப் பயலே!’ என்று இன்று மக்கள் ஏசுவது உண்டு. ஒரு கட்டுப்பாடு இல்லாமல் மனம் போன போக்கில் அலைந்து திரிபவனையே ‘போக்கிரிப் பயல்’ என்பார்கள். நல்ல போக்கு (நடைமுறை) இல்லாதவன் தான் ‘போக்கு + இலி’ = ‘போக்கிலி’. இதுவே நாளடைவில் ‘போக்கிரி’ எனத் திரிந்தது.

6.  வேண்டா: ‘வேண்டும்’ என்று ஒரு சொல் உண்டு. இதற்கு எதிர்ச்சொல் என்ன? ‘வேண்டும்’ என்ற சொல்லுடன் ‘ஆ’ என்னும் எதிர்மறை உருபைச் சேர்த்தால் ‘வேண்டா’ என்று ஆகும். ஆனால், இதுவே வழக்கத்தில் ‘வேண்டாம்’ என்று ஆகிவிட்டது. பிழையற்ற தமிழில் கூறுவது என்றால் ‘வேண்டாம் நமக்கு வேண்டா’. ‘நாளை நீ இங்கு வர வேண்டாம்’ என்பது தவறு; ‘நாளை நீ இங்கு வர வேண்டா’ என்பதே சரி.

7.  ஐயம்: ‘அதில் ஒன்றும் ஐயம் இல்லை!’, ‘ஐயம் இருந்தால் எங்களிடம் கேட்டுத் தெளிவு பெறுக’ என்றெல்லாம் நடைமுறையில் பேசுவதைக் கேட்டிருக்கிறோம். அதே சமயம் ‘சந்தேகம் எதுவானாலும் கேளுங்கள்’, ‘சந்தேகமே வரக் கூடாது’ என்று பேசுவோரும் உள்ளனர். இரண்டில் எது சரி? ‘ஐயம்’ என்பதே தமிழ்ச் சொல். அதையே பயன்படுத்தலாமே?

8.  மறுமொழி: ‘என் கேள்விக்கென்ன பதில்?’ என்று பழைய திரைப் பாடல் ஒன்று தொடங்கும். ‘பதில் சொல்’ என்று மாணவனை ஆசிரியர் அதட்டுகின்றார். இந்தப் ‘பதில்’ என்பதற்கான நல்ல தமிழ்ச் சொல் ‘மறுமொழி’ என்பது. ‘ஏன், பதில் என்று சொன்னால் என்ன?’ என்று நீங்கள் வெண்டும் என்றே கேட்டால் அதற்கெல்லாம் நான் ‘மறுமொழி’ சொல்லிக் கொண்டிருக்க முடியுமா என்ன?

9.  அடுக்ககம்: ‘அகம்’ என்பது வீட்டைக் குறிக்கும். ‘என்ன மாமி… ஆத்துக்குப் போறேளா?’ என்பதற்கு ‘வீட்டுக்குப் போகிறீர்களா?’ என்று பொருள். இன்று அடுக்கு வீடுகள் நிரம்பக் கட்டப்பெற்று வருகின்றன. இதனை ‘அபார்ட்மெண்ட்’ என்றும். ‘ஃபிளாட்’ என்றும் குறிப்பிடுகிறோம். இந்த ஆங்கிலச் சொற்களைக் கைவிட்டு, ‘அடுக்ககம்’ என்ற நல்ல தமிழில் சொல்லி மகிழலாம்.

10. மட்டைப் பந்து ஆட்டம்: இருக்கிற வேலைகளை எல்லாம் தள்ளி வைத்து விட்டு தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னே மணிக்கணக்கில் அமரச் செய்து விடுகிறது ‘கிரிக்கெட்’ ஆட்டம். கூடைப் பந்து, கால் பந்து, கைப்பந்து என்பது போல ‘கிரிக்கெட்’டை ‘மட்டைப் பந்து ஆட்டம்’ என்று தமிழில் சொல்லலாம். இதனை முதலில் கேட்கும் போது ஒரு சிலர் சிரிப்பார்கள். ஆனால், பழகப் பழகப் பைந்தமிழ்ச் சொல் தானாகவே பழக்கத்தில் வந்து விடும். பிறகு அதுவே ‘வழக்கம்’  ஆகிவிடும்!’ ‘வாடிக்கை’யும் ஆகிவிடும்!

‘சித்திரமும் கைப்பழக்கம்; செந்தமிழும் நாப்பழக்கம்’. சரிதானே? எங்கே நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள், என்ன வளம் இல்லை தமிழ்ச் சொல்லில்? ஏன் பயன்படுத்த வேண்டும் அயல்மொழிச் சொல்லை?

 

‘தமிழாகரர்’ முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.

 

 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்