திரையில் ஒளிரும் இலக்கியம் (தொடர் - 15)

கவிஞர் மா.உலகநாதன், திருநீலக்குடி

டலில் இருக்கின்ற மீன்கள் உப்புச் சுவையை அன்றி வேறு ஒன்றையும் அறியாதவை. சுவைகளிற் சிறந்த இனிப்பை அவை எவ்வாறு அனுபவிக்க இயலும்? என்றாலும், கோசல நாட்டில் உள்ள மரங்களும் கரும்புகளும் கடல் மீன்கட்கு இனிப்புச் சுவையை ஊட்டக் கருதி என்ன செய்கின்றன தெரியுமா? கரும்பின் சுவை ஒரு வகை இனிமை; பாளையில் வருகின்ற கள்ளின் சுவை வேறொரு வகை இனிமை; பழரசங்களில் வருகின்ற சுவை மற்றொரு வகை இனிமை, நேரே தேன் கூட்டிலிருந்து கிடைக்கும் தேனின் சுவை இன்னொரு வகை இனிமை, மலர்களி லிருந்து வரும் தேனின் சுவை பிறிதொரு வகை இவை அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து கடலில் சென்று பாய்ந்த உடனே கடல் மீன்கள் தம் வாணாளிலே கிடைக்காத இத்தேனை உண்டு, சற்று வெறிபிடித்து ஆடின. இக் காட்சியையும் கவிஞன் நகுக் காட்டுகிறான்.

கம்பனின் காவிய ரசனையைத் தன் பாடலில் பரவசமாகப் பரிமாறுகிறார். தேனில் ஊறித் தித்திக்கும் பாலாவின் சுவையைப் போல கேட்கும் தொறும் சிந்தையில் இனிக்கும் பாடலிது.”வீர அபிமன்யூ” என்ற படத்தில்,


அவன்: பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்

              உனைத் தேன் என நான் நினைத்தேன் –அந்த

              மலைத் தேன் இதுவென மலைத்தேன்;

அவள்: பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன்

             உனைத் தேன் என நான் நினைத்தேன்

             மலைத் தேன் இவரென மலைத்தேன்;

அவள்: மலர்த் தேன் போல் நானும் மலர்ந்தேன் உனக்கென

            வளர்ந்தேன் பருவத்தில் மணந்தேன்.

            எடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தேன் இனித்

            தேன் இல்லாதபடி முடித்தேன்!

தேன் சொட்டும் பாடலைத் தந்த கவியரசரை எத்தனை பாராட்டினாலும் தகுமல்லவா?


“பிர்லாவைப் போல் சம்பாதித்து ஊதாரியைப் போல் செலவழித்து ,பல நேரங்களில் பிச்சைக்காரனைப் போல் ஏங்கி நிற்கும் வாழ்க்கையே என வாழ்க்கையாயிற்று என்று தன்னைப்பற்றி சுய அலசல் செய்து கொண்டவர் அவர்.”

“எனக்கு ஏற்பட்ட அறிவு கவிபுனையும் ஆற்றல் அனைத்தும் காலமும் சூழலும், கடவுளும் வழங்கிய பரிசு என்பேன்” என்று தன்னடக்கத்துடன் கூறிக் கொண்டவர்.

பட்டினத்தார் முதலியவர்கள் இன்பங்களை அனுபவித்து, பின் துறந்து அவற்றின் நிலையாமையைப் பாடினர். கண்ணதாசனும் இன்பங்களின் நிலையாமையை உணர்ந்தும் அவற்றினின்றும் விடுபட விரும்பவில்லை.தேனில் விழுந்த ஈ யைப் போன்று ஆனார்.வெளியுலகத்தில் தன்னை மறைத்துக்கொள்ளும் போலித்தனம் அவரிடம் இல்லை; ஆயிரக்கணக்கான பெண்களைத் தினமும் காணும் கண்கள்எங்கோ ஓர் அற்புத சக்தியில் லயித்து விடுகின்றன என்பார்.

உண்மை தரிசனம்:

கவிஞரின் மனம் நொடிக்கு நொடி மாறும் இயல்புடையது; ஒரு சமயம் இப்படிப் பேசியவர்,

பெண்களை விட்டென்ன பேரின்பம்,வழிகாட்டும்

கண்களை விட்டென்ன கடவுள் நெறி;ஒன்பது வாய்ப்

புண்களை விட்டென்ன புதுப் பார்வை; அனுபவிக்கும்

எண்களை விட்டென்ன இசைத்தருமம்; போடா ..போ !

அனுபவித்து ஓய்ந்தபின் விரக்தி ஏற்படும் நேரங்களில் இப்படியும் பாடியிருக்கிறார்.

முத்தமென்றும் மோகமென்றும்

சத்தமிட்டு சத்தமிட்டுப்

புத்திகெட்டுப்போனதொரு காலம்-இன்று

ரத்தமற்றுப் போன பின்பு.

பொன்னி நதியளவு போன ரத்தம் போனபின்

கன்னியரை நாட மனம் கூசுதடி!

இதுவும் அவரது கவிதைத் தொகுப்பில் தான் பதிவாகியிருக்கிறது. இந்த விரக்தியில் “தரிசனம்” என்ற படத்தில்,

தாளாத காதலோடு,

பெண்: மாலை நேரத்து மயக்கம்-பூ

மாலை போல் உடல் மணக்கும்

இதழ் மேலே இதழ் மோதும்-அந்த

இன்பம் தேடுது எனக்கும்.



விரக்தியோடு,

ஆண்: கால தேவனின் கலக்கம் –இதைக்

காதல் என்பது பழக்கம்.

ஒரு ஆணும் ஒரு பெண்ணும் –பெறப்

போகும் துன்பத்தின் துவக்கம்!



பெண்: முனிவன் மனமும் மயங்கும் பூமி

மோக வாசல் தானே !-மனம்

மூடி மூடிப் பார்க்கும்போதும்

தேடும் பாதை தானே..!



ஆண்: பாயில் படுத்து நோயில் வீழ்ந்தால்

காதல் கானல் நீரே!-இது

மேடுபள்ளம் தேடும் உள்ளம்

போகும் ஞானத் தேரே!



பெண்: இல்லறம் கேட்டால் துறவறம் பேசும்

இதயமே மாறி விடு!

ஆண்: நான் வாழ்ந்து பார்த்து சாய்ந்த தென்னை

உன்னை நீ மாற்றி விடு!

தரிசனம் கிடைக்காதா என்று காத்துக்கிடந்ததொரு காலம். தரிசனம் நிதர்சனமானபோது காமச் சாகரத்திலிருந்து கடைத்தேறும் வழிகளைக் கச்சிதமாகச் சொல்லிய ஒரு பாடலிது!

இலைமறை காய்மறை:

அவரது சிறப்பியல்புகளில் ஒன்று, விரசத்தையும் ரசமாகச் சொல்வது;

அவள்: வசந்த காலப் பூக்களின் மீது வந்தன அமர்ந்தாயே;

அவன்:அமர்ந்த வண்டு பறந்துவிடாமல் ஆசையில் அணைத்தாயே ! (தனிப்பிறவி)

என்ன பார்வை உந்தன் பார்வை?

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கு அணங்கு
தானைக் கொண்டன்னது உடைத்து.
(குறள்:1௦82)

இக் குறளில், காதலன் பார்த்த பார்வைக்குக் காதலியின் எதிர்பார்வை படையோடு வந்து தாக்குவதைப் போலிருந்தது என்று வருணிக்கும் வள்ளுவர், அவளின் விழிக்கடையை “படை” என்றால் கவிஞர் அவளின் “இடை”யை இப்படிச் சொல்கிறார்.

“குலுங்கும் முந்தானை சிரிக்கும் அத்தானை

விரட்டுவதேனடியோ? உந்தன்

கொடியிடை இன்று படைகொண்டு வந்து

கொல்வதும் ஏனடியோ?” (சுமைதாங்கி)

 

 

                                                                                                                                                தொடரும்............

 



 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்