எம்ஜிஆரின் சமூக சிந்தனைப் பாடல் வகைகள்

முனைவர் செ.இராஜேஸ்வரி
 

எம்.ஜி.ஆர் தனது படங்களில் ஒரு படத்திற்கு குறைந்தபட்சம் ஒரு பாட்டாவது சமூகக் கடமை மற்றும் சமூகப் பொறுப்புணர்ச்சி சமூகச் சிந்தனை சமூகத்தின் அவலநிலை அதனை மாற்றும் வழிகள் போன்றவற்றை உள்ளடக்கமாகக் கொண்டு பாடியிருப்பார். அவருடைய சமூகச் சிந்தனைப் பாடல்களை காட்சி அமைப்பில் ஐந்தாக வகைப்படுத்தலாம். (கருத்து ரீதியாக வேறொரு வகைப்பாடு செய்வோம்)

1. எம் ஜி ஆர் தனியாகப் பாடியவை;
2. ஒரு தோழருடன் பாடியவை;
3. குழுவில் ஒருவராக இருந்து பாடியவை;
4. இணையுடன் சேர்ந்து ஜோடி பாடலாகப் பாடியவை .
5. சிறுவன்/ சிறுமி / சிறுவர்களுடன் இணைந்து அவர்களுக்குப் பாடியவை

1. தனிப் பாடல் வகை

எம்ஜிஆர் மட்டும் தனியாகப் பாடுகின்ற சமூகசிந்தனைப் பாடல்களில் அவர் வாயசைத்து பாடுகின்ற பாடலும் உண்டு. அவர் பாடுவதாக அமையாமல் பின்னணியில் பாட்டு கேட்பதாக அமைந்ததும் உண்டு.

எம் ஜி ஆர் தனியாக வந்து பாடும் பாடல்களில் கதாநாயகன் தோற்றத்தில் வந்து பாடுவதும் உண்டு. சில படங்களில் மாறு வேடத்தில் வந்து வந்து பாடுவதும் உண்டு. சொந்த உருவத்தில் வந்து கதாநாயகன் பாடும் பாடல்களில் அவற்றிற்கான சூழல், பெரும்பாலும் துன்பம, விரக்தி, விழிப்புணர்வூட்டல், ஒரு கூட்டத்தினர் மத்தியில் அறிவார்ந்த கருத்துகளைச் சொல்லுதல், ஏதேனும் தொழில் செய்யும் சூழலில் பாடுதல் என்று பல வகைப்படுகின்றன.

எம் ஜி ஆர் மாறுவேடத்தில் வந்து தனியாக பாட்டுப் பாடும் சூழல்கள் பெரும்பாலும் துப்பறியும் முயற்சியில் உண்மையை கண்டறியும் பணியில் ஈடுபட்டிருக்கும் போது காட்சிப்படுத்தப்பட்டுள்ளன அல்லது போலி குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி மறைந்து வாழும் சூழலில் மாறுவேடத்தில் வந்து குடும்பத்தினரைப் பார்த்துச் செல்லும் காட்சிகளில் பாடல் அமைந்துள்ளது.

பின்னணி குரலில் அமைந்த தனிப் பாடல்

கதாபாத்திரத்தின் குரலில் ஒலிக்காமல் பின்னணி குரலில் பாடல்கள் ஒலிக்கும் போது இரண்டு வகையான தன்மையைக் காண்கின்றோம். ஒன்று, சமூகத்தின் குரல் மற்றொன்று மனதின் குரல்.

எதிர்பாராத செயல்கள் நடந்து ஏமாற்றமும் துக்கமும் பீறிடும் போது சமூகத்தின் குரலாகப் பாட்டு பின்னணியில் ஒலிக்கிறது. அறியாமல் தவறு செய்துவிட்டு அந்த தவறு தன் மனதைக் குத்திக் காட்டும் போது மனதின் குரலாக வேதனைக் குரலாக பின்னணிப் பாடல் ஒலிக்கிறது. இவ்வாறு இரண்டு வகையில் பின்னணி பாடல்கள் ஒலிக்க காண்கின்றோம்.

2. தோழருடன் இணைந்து ஆடிய பாடல்

எம் ஜி ஆர் இன்னொருவருடன் இணைந்து பாடிய பாடல்களில் நண்பர்களாக வருவோருடன் இணைந்து பாடுவார். இந்த நண்பர்கள் பெரும்பாலும் நகைச்சுவை நாயகர்கள் ஆகவே இருப்பதுண்டு. சில பாட்டுக்காட்சிகளில் துணை நடிகர் அல்லது குணச்சித்திர நடிகர்களுடன் இணைந்து ஆக பாடுவதாகப் பாடல்கள் அமைந்துள்ளன.

இருவராகப் பாடும் பாடல்களில் நண்பராக முத்துராமன், விகே ராமசாமி போன்ற குணச்சித்திர நடிகர்கள் இடம்பெறுகின்றனர். சில பாடல்களில் நாகேஷ், கே ஏ தங்கவேலு, சந்திரபாபு போன்ற நகைச்சுவை நடிகர்கள் இடம்பெறுகின்றனர்.

குழுவினருடன் பாடும் பாடல்

எம் ஜி ஆர் குழுவில் ஒருவராக இருந்து தலைமையேற்று எம்ஜிஆர் பாடும் பாடல்களில் சில படங்களில் குழுவினர் பங்கேற்பு ஹம்மிங் அல்லது பல்லவியை திரும்பிப் பாடுவது என்ற அளவில் அமைந்திருக்கும் வேறு சில பாடல்களில் அவர்கள் அமைதியாக பங்கேற்றிருப்பர்.

3. ஜோடியாகப் பாடும் சமூகச் சிந்தனைப் பாடல்


எம்ஜிஆர் தன் ஜோடியுடன் இணைந்து பாடும் சமூக சிந்தனைப் பாடல்களில் இரண்டு வகை உண்டு. தனது கதாபாத்திரப் பெயரில் அதே தோற்றத்தில் வந்து பாடுவது ஒரு வகை; மற்றொன்று தன் உருவத்தை மறைத்து மாற்று உருவத்தில் வந்து பாடுகின்ற பாடல்கள்.

எம் ஜி ஆர் தனது கதாபாத்திர உருவத்தோடு வந்து பாடும் பாடல்களில் பெரும்பாலும் வெற்றி சூழ்நிலை அல்லது வேறு மகிழ்ச்சியான சூழ்நிலைகளில் அமைந்த பாடல்களாக உள்ளன.

மாறுவேடமிட்டு வந்து பாடும் பாடல்கள் மேடை கூத்தாகவோ அல்லது பகைவர் முன்பு அவர்களுக்கு புத்திமதி சொல்வதாகவோ அமைந்திருப்பது வழக்கம்.

4. குழுவினருடன் பாடும் பாடல்


எம்ஜிஆர் ஒரு குழுவின் தலைவராக அடுத்து ஒரு குழுவில் முக்கியமானவராக, ஒரு கூட்டத்தினர் மத்தியில் இவர் மட்டுமே பாடுவோராகக்வும் மற்றவர்கள் பார்வையாளராக என வந்து அந்த ஊர் அநியாயம், அந்த காலகட்டத்தில் நடக்கும் கொடுமை என பொதுவான கருத்துக்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் வகையில் இப்பாட்டு வகைகள் அமைந்துள்ளன.

5 ஜோடியாகப் பாடும் சமுக சிந்தனைப் பாடல்


எம் ஜி ஆர் ஜோடியுடன் பாடும் சமூகச் சிந்தனைப் பாடல்களில் படத்தின் கதாபாத்திரமாகவே இருவரும் ஜோடியாகப் பாடுவதும் உண்டு; அல்லது மாறுவேடமிட்டு பாடுவதும் உண்டு.

6. எம் ஜி ஆர் பாடும் சிறுவர் பாடல்கள்


எம் ஜி ஆர் சிறுவர்களைத் தனது ரசிகர்களாக்குவதில் கண்ணும் கருத்துமாகச் செயல்பட்டார். அவர்கள் தம் பாடல்களைப் பாட வேண்டும் என்ற நோக்கத்துடன் எளிய சொற்களில் எழுதும்படி பாடலாசிரியர்களிடம் கேட்டுக் கொண்டார். அவர்களையும் தம் படத்தில் தன்னுடன் நடிக்கும் சக கலைஞர்களாக்கி அவர்களுடன் இணைந்து பாடல்காட்சிகளில் நடித்தார். எம் ஜி ஆர் பாடிய சிறுவர் பாடல்களை,
 
1.தனது பிள்ளைக்காகப் பாடியவை,
2.அடுத்தவர் பிள்ளைக்காகப் பாடியவை,
3.பொதுவாக சிறுவர்களுக்கு அறிவுரை கூறிப் பாடிய பாடல்கள்.
4 ஊர்ப் பிள்ளைகளுக்கு பாடியவை

என வகைப்படுத்த்தலாம். மேலும் சிறுவர்கள் இவருடன் இணைந்து பாடியவை; இவர் தனியாகப் பாடியவை என்றும் பாகுபடுத்தலாம். .

7. எம்ஜிஆர் படத்தில் அவர் பாடாத தனிப்பாடல்கள்

எம் ஜி ஆர் படங்களில் அவர் பாடாமல் மற்றவர் பாடும் சமூக சிந்தனை சார்ந்த பாடல்களும் இடம் பெற்றுள்ளன. இந்த பாடல்களையும் நாம் இரண்டு வகையாக பிரிக்கலாம். தனிப்பாடல் மற்றும் குழு பாடல். தனிப்பாடலில் கதாநாயகி பாடிய பாடல்களும் அல்லது வேறு நபர் பாடும் பாடல்களும் உண்டு.

குழுப் பாடல் என்ற பிரிவில் எம் ஜி ஆரின் நண்பர்கள் பாடுவது; பொதுமக்கள் பாடுவது; ஊழியர் பாடுவது என மூன்று வகையாகப் பகுத்தறியலாம். மற்றவர் எம் ஜி ஆரைப் பாராட்டி பாடும் பாடல்கள் சிலவும் இந்த பிறர் பாடும் பாடல் வகையில் சேரும்.

பாடல் கருத்தும் தகுதியும்

சமூக கருத்துக்களை எடுத்துக் கூறும் தகுதி எம்ஜிஆருக்கு உண்டு என்று மக்கள் நம்பியதால் அவருடைய தனிப் பாடல்கள் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. எம் ஜி ஆர் படத்தை பார்க்காத எதிரணியினர் கூட பாடல்களை ரசித்துக் கேட்டனர். எம் ஜி ஆர் படத்தில் கதாநாயகனின் நேர்மைஇ உழைப்புஇ அழகுஇ வலிமை ஆகியவற்றை விவரிக்கும் பாடல்கள் ரசிகர்களால் அதிகமாக ரசிக்கப்பட்டன தமிழ் இலக்கியத்தில் பாடாண்திணை பாடல்கள் என்ற வகை அக்காலத்தில் மன்னர்களைப் புகழ்ந்து பாடியதைப் போல எம்ஜிஆர் படங்களிலும் சில பாடல்கள் அவருடைய குணாதிசயங்களை விவரித்து பாடின. அவரைப் பற்றிய புகழ்ச்சி பாடலாகஇ புகழ்ச்சி வரிகளாக அமைந்தன. இவை படம் பார்ப்பவரின் நெஞ்சத்தைத் எம் ஜி ஆரின் பால்ஈர்த்து உணர்வு மயமாக்கி அவர் மீது இருந்த ஈடுபாட்டை இன்னும் அதிகமாக்கி விடுகின்றன.

பாடல்களின் சிறப்புக்கு காரணம்

எம்ஜிஆர் தம் படங்களைத் தயாரிக்கவும் இயக்கவும் கதை எழுதவும் வசனம் எழுதவும் பாடல் இயற்றவும் இசை அமைக்கவும் உடன் சேர்ந்து நடிக்கும் மற்ற ஒலிஇ ஒளிஇ கலை இயக்கம்இ படத்தொகுப்புஇ உடைஇ ஒப்பனை ஆகியவற்றிற்குத் தனக்கென தனி ஆட்களை தனிக் குழுவை வைத்திருந்தார். இக் குழுவினர் அனைவரும் ஒருமுகமாக எம்ஜிஆரின் வெற்றி மற்றும் புகழைப் பற்றியே சிந்தித்து கடமையாற்றினர்.

எம் ஜி ஆர் படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு சட்டகமும் ஜஃபிரேமும்ஸ எம்ஜிஆருக்குப் புகழ் சேர்ப்பதாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதில் இப்படக்குழுவினர் கவனமாக இருந்து உழைத்தனர். எம்ஜிஆரின் நோக்கத்தைப் புரிந்து கொண்டவர்களாக அவரது ஆவலை நிறைவேற்றுபவர்களாகவே இந்தப் படக்குழுவினர் உழைத்ததால் எம் ஜி ஆருடைய அன்புக்குப் பாத்திரமாயினர். அவர் படத்தில் அவர்களுக்கு அதிக அளவில் வருமானம் கிடைத்தது. புகழும் கிடைத்தது. இவர்களும் பிரபலம் ஆகி விட்டனர்.

எம் ஜி ஆரால் பிரபலமான பாடகர்கள்

ஜேசுதாஸ் பொம்மை படத்தில் முதல் பாடலைப் பாடி இருந்தாலும் உரிமைகுரல் படத்தில் விழியே கதை எழுது பாடலைப் பாடிய பின்புதான் தமிழ்த் திரையுலகில் பிரபலமானார். அதுபோல எஸ் பி பாலசுப்ரமணியம் சாந்தி நிலையத்தில் 'இயற்கை என்னும் இளையகன்னி' பாடல் பாடி அப்பாடல் பிரபலமடைந்திருந்தாலும் கூட அவர் அடிமைப்பெண் படத்தில் 'ஆயிரம் நிலவே வா' பாடல் பாடிய பிறகுதான் புகழ் வெளிச்சம் அவர் மீது விழுந்தது. பன்னெடுங்காலமாக திரை உலகில் இருந்து வரும் சிறந்த கலைஞர்களும் திறமையான தொழில் நுட்பனர்களும் எம்ஜிஆர் படத்தில் அறிமுகமான பிறகு புகழின் உச்சத்தைத் தொடுவது இயல்பானதாக அமைந்து விட்டது.

நடிக நடிகையர் பலரும் எம்ஜிஆர் படத்தில் நடிக்க மிகவும் விரும்பினார. அவர் படத்தில் நடிப்பதற்காக மற்ற படவாய்ப்புகளை இழக்கவும் தயாராக இருந்தனர். எதிர் அணியைச் சேர்ந்தவர்கள் கூட அவ்வப்போது எம்ஜிஆர் படத்தில் தலைகாட்டி விட்டு தான் சென்றார்கள். தலை காட்ட வேண்டும் என்று விரும்பினார்கள். ஒட்டுமொத்தமாக எம்ஜிஆர் அணியில் இருந்த திரைப்பட கலைஞர்கள் எம்ஜிஆரை விட்டு விலகி விடக்கூடாது என்பதில் மிகுந்த கவனம் செலுத்தினர்.

எம் ஜி ஆரை வைத்துப் படம் எடுக்க மாட்டேன் என்று சிவாஜியிடம் சத்தியம் செய்த பாலாஜி கூட பொங்கல் திருநாளன்று எம்ஜிஆரைப் பார்த்து அவரிடம் இருந்து அவர் கையால் பணம் வாங்குவதை தன் வாடிக்கையாகக் கொண்டிருந்தார். சிவாஜியை வைத்துப் படம் எடுக்க மாட்டேன் என்று சத்தியம் செய்த சாண்டோ சின்னப்பா தேவர் கடைசிவரை தேவர் பிலிம்ஸ் என்ற பேனரின் கீழ் எம்ஜிஆர் படங்களை மட்டுமே எடுத்தார். இவரே எம்ஜிஆரை வைத்து அதிக படங்கள் ஜ16ஸ எடுத்த ஒரே தயாரிப்பாளர் ஆவார். தேவர் தயாரித்து எம் ஜி ஆர் நடித்த பதினாறு படங்களிலும் தேவரின் தம்பி எம். ஏ. திருமுகம் இயக்குனராக இருந்தார். ப. நீலகண்டனுக்கு ஜபதினெட்டுஸ அடுத்தபடியாக எம்ஜிஆரை அதிகப் படங்களில் இயக்கிய பெருமை எம். ஏ. திருமுகத்தை சேரும்.

இவ்வாறு எம் ஜி ஆரின் படங்கள் தயாரிப்பாளருக்கு நட்டத்தை ஏற்படுத்தாமல் தொடர்ந்து வெற்றி கொடி நாட்டி வந்ததற்கு அவரது படத்தின் பாடல்கள் உறுதுணையாக இருந்தன. அவற்றை எழுதி இசையமைத்து வாங்குவதில் எம் ஜி ஆர் அதிக சிரத்தை எடுத்துக்கொண்டார். அவருக்கு இருந்த இசையறிவு மக்கள் ரசனை பற்றிய அறிவு சிறு வயது முதல் மக்கள் ரசனையை அவதானித்து வந்த போக்கு ஆகியன அவருக்குத் தெளிவையும் துணிவையும் அளித்திருந்தன. எனவே இன்றும் அவரது பாடல்கள் காலத்தால் அழியாமல் கருத்துள்ள பாடல்களாக நின்று நிலைக்கின்றன.

(மேற்சுட்டிய வகைப்பாடுகளை தக்க சான்றுகளுடன் இனி வரும் வாரங்களில் ஒவ்வொன்றாகக் காண்போம்)

 

                                                                                                         

முனைவர் செ.இராஜேஸ்வரி

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்