பாரதியார் கவிதைகளில் உடன்பாட்டுச் சிந்தனைகள்

முனைவர் நிர்மலா மோகன்
 

புவியனைத்தும் போற்றிட வான்புகழ் படைத்துத்
            தமிழ் மொழியைப் புகழில் ஏற்றும்
  கவியரசர் தமிழ்நாட்டுக்கு இல்லை எனும்
            வசை என்னால் கழிந்த தன்றே!”     

என்னும் பெருமிதக் கூற்று, தகுதி மிகுதியும் தன்னம்பிக்கையும் நெஞ்சுரமும் நேர்மைத் திறமும் படைத்த ஓர் ஆளுமையாளரிடம் இருந்தே பிறக்க முடியும். பீடும் பெருமையும் சான்ற இக் கூற்றுக்குச் சொந்தக்காரரான பாரதியார், இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதையின் தலைமைகன் ஆவார்; ‘சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொற் புதிது, சோதிமிக்க நவ கவிதை, எந்நாளும் அழியாத மகாகவிதை’ படைத்திட்ட தவமகனும் ஆவார். ‘உடலினை உறுதி செய்’, ‘ஊண் மிக விரும்பு’, ‘எண்ணுவது உயர்வு’, ‘சாவதற்கு அஞ்சேல்’, ‘பணத்தினைப் பெருக்கு’, ‘நன்று கருது’, ‘புதியன விரும்பு’, ‘பெரிதினும் பெரிது கேள்’, ‘மூப்பினுக்கு இடங்கொடேல்’, ‘ரௌத்திரம் பழகு’ என்னும் புதிய ஆத்திசூடிகள் ஆழ்ந்திருக்கும் பாரதியாரின் இன்முகச் செவ்வியையும் உடன்பாட்டுச் சிந்தனையையும் உயரிய உள்ளப் பாங்கினையும் நடப்பியற் பண்பையும் ஒருசேரப் புலப்படுத்துவனவாகும்.

வாழ்க்கை ஏற்புக் கொள்கை

பாரதியார் கவிதைகளில் இறைவனையோ உலகையோ வாழ்வையோ உடம்பையோ மனத்தையோ பெண்மையையோ மறுதலித்துப் பேசும் இடங்களை மருந்துக்கும் காண முடியாது. அவர் பெரிதும் மதித்ததும் போற்றியதும் வாழ்க்கை ஏற்புக் கொள்கையையே (Life Affirmation Theory) – உடன்பாட்டுச் சிந்தனையையே (Positive Thinking) எனலாம்.

‘ஒன்றென்றிரு, தெய்வம் உண்டென்றிரு’ என்னும் பட்டினத்தாரின் மந்திரமொழியினை நினைவுபடுத்தும் வகையில் பாரதியாரும்,

“ஒன்று பரம்பொருள், நாம் அதன் மக்கள்,
உலகு இன்பக் கேணி”

என ஒரு வாய்பாடு போலப் பாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்வில் துன்பம் அணிவகுத்து வந்து தாக்கும் போதும் நாம் சோர்ந்து விடக் கூடாது. அன்பு மிகுந்த தெய்வம் நமக்கு வந்த துன்பம் அத்தனையையும் போக்கிவிடும் என்பது பாரதியாரின் ஆழ்ந்த நம்பிக்கை.

“துன்பம் நெருங்கி வந்த போதும் – நாம்
சோர்ந்து விடல் ஆகாது பாப்பா,
அன்புமிகுந்த தெய்வம் உண்டு – துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா”

என்னும் பாரதியாரின் வாக்கு, வளர்ந்து வரும் பாப்பாவுக்கு மட்டுமன்று, வளர்ந்த மனித குலம் முழுவதற்கும் உரிய ஒன்றே ஆகும்.

பெண்மையை இழித்தும் பழித்தும் ஒருபோதும் பேசியதில்லை பாரதியார். ‘பெண்மை வாழ்க!’ என்றும், ‘பெண்மை வெல்க!’ என்றும் கூத்தாடும் அவர், ‘புதுமைப் பெண்’, ‘பெண்மைத் தெய்வம்’, ‘செம்மை மாதர்’, ‘உதய கன்னி’, ‘வீரப் பெண்கள்’, ‘இளைய நங்கை’ என்னும் சிறப்புப் பெயர்களால் பெண்மையைப் போற்றிப் பாடுகின்றார்; ‘செவ்விது, செவ்விது, பெண்மை!’ எனப் பெண்மைக்குப் புகழாரமும் சூட்டுகின்றார்.
 

‘இன்பமே வேண்டி நிற்போம்; யாவும் அவள் தருவாள்!’

பாரதியாரின் ஆளுமையில் சுடர்விட்டு நின்ற ஒரு தனிப்பெரும் பண்பு எந்த நிலையிலும் இறை நம்பிக்கையையும் தன்னம்பிக்கையையும் இழக்காதது ஆகும்; ‘இல்லை என்ற கொடுமை இல்லையாக வைப்பேன்!’ என்றும், ‘வறுமை என்பதை மண்மிசை மாய்ப்பேன்!’ என்றும் என்ன தான் பறையறைவது போல முழங்கினாலும், வறுமையே மூச்சுத் தொடரின் முற்றுப்புள்ளி வரை விடாமல் அவரைச் சிக்கெனப் பற்றிக் கொண்டிருந்தது. இருப்பினும், சற்றும் மனம் கலங்காமல்,

“எத்தனை கோடி இன்பம் வைத்தாய் – எங்கள்
இறைவா! இறைவா! இறைவா!”

என்றே இறைவனைப் போற்றிப் பரவினார் பாரதியார். பிறிதொரு தோத்திரப் பாடலில் இன்னும் ஒரு படி மேலாக அவர்,

“‘துன்பமே இயற்கை’ எனும் சொல்லை மறந்திடுவோம்;
இன்பமே வேண்டி நிற்போம்: யாவும் அவள் தருவாள்.
நம்பினார் கெடுவதில்லை; நான்கு மறைத் தீர்ப்பு;
அம்பிகையைச் சரண்புகுந்தால் அதிக வரம் பெறலாம்”

என நம்பிக்கையுடன் மொழிந்தார்.

“திருவைப் பணிந்து, நித்தம் செம்மைத் தொழில் புரிந்து,
வருக வருவது என்றே – கிளியே மகிழ்வுற்று இருப்போமடீ!”

என்பதே பாரதியார் இசைக்கும் மகிழ்ச்சி மந்திரம்.

பராசக்தி, விநாயகப் பெருமான், காளி, முத்துமாரி எனக் கடவுளர் யாவராயினும், பாரதியார் வேண்டும் வரமெல்லாம் மதியில் தெளிவையும், மனத்தில் உறுதியும் நம்பிக்கையும் ஒளிரும் மகிழ்வையும் தான். ‘பல வேடிக்கை மனிதரைப் போலவே – நான், வீழ்வேன் என்று நினைத்தாயோ?’ என வினவும் பாரதியார், காளியிடம் நேரடியாகத் தமக்குத் தருமாறு கேட்கும் வரம் இது தான்:

“என்னைப் புதிய உயிராக்கி – எனக்கும்
ஏதும் கவலையறச் செய்து – மதி
தன்னை மிகத் தெளிவு செய்து – என்றும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!”
 

‘உலகு இன்பக் கேணி!’

‘பொய்யோ? மெய்யோ?’ என்ற வேதாந்தப் பாடலுக்கு மகுடமாக பாரதியார் எழுதியுள்ள அரிய முகவுரைக் குறிப்பு வருமாறு:

“‘இந்த உலகமே பொய்’ என்று நமது தேசத்தில் ஒரு சாஸ்திரம் வழங்கி வருகிறது. ஸந்யாஸிகள் இதை ஓயாமல் சொல்லிக் கொண்டிருக்கட்டும். அதைப் பற்றி, இந்த நிமிஷம் எனக்கு வருத்தமில்லை. குடும்பத்திலிருப்போர்க்கு அந்த வார்த்தை பொருந்துமா? நடு வீட்டில் உச்சரிக்கலாமா? அவச் சொல்லன்றோ? நமக்குத் தந்தை வைத்துவிட்டுப் போன வீடும் வயலும் பொய்யா? தங்கச் சிலை போலே நிற்கிறாள் மனைவி. நமது துயரத்துக்கெல்லாம் கண்ணீர் விட்டுக் கரைந்தாள்; நமது மகிழ்ச்சியின் போதெல்லாம் உடல் பூரித்தாள்; நமது குழந்தைகளை வளர்த்தாள்; அவள் பொய்யா? குழந்தைகளும் பொய்தானா? பெற்றவரிடம் கேட்கிறேன், குழந்தைகள் பொய்யா? நமது வீட்டில் வைத்துக் கும்பிடும் குலதெய்வம் பொய்யா?” இங்ஙனம் அடுக்கடுக்கான கேள்விக் கணைகளைத் தொடுத்து நம்மை ஆழமாகச் சிந்திக்கத் தூண்டும் பாரதியார், ‘நாட்டு வணக்கம்’ என்னும் தலைப்பில் எழுதிய தேசிய கீதம் ஒன்றிலும்,

“ மங்கையர் ஆயவர் இல்லற(ம்) நன்கு
            வளர்த்ததும் இந்நாடே – அவர்
  தங்க மதலைகள் ஈன்றுஅமுது ஊட்டித்
            தழுவியதும் இந்நாடே!”       

என மொழிவது இவ்வகையில் மனங்கொளத் தக்கதாகும்.
 

‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்!’

பாரதியாரின் அகராதியில் ‘கவலைப்படுதலே கருநரகு’; ‘கவலையற்று இருத்தலே முக்தி’. எப்போதும் இறந்த காலத்தைப் பற்றியே சிந்தனை செய்து கவலைப்பட்டுக் கொண்டிருப்பதில் பொருள் இல்லை; யாதொரு பயனும் இல்லை. பாரதியாரே வேதாந்தப் பாடல் ஒன்றில் குறிப்பிடுவது போல், ‘முன்னர் நமது இச்சையினால் பிறந்தோம் இல்லை; முதல் இறுதி இடை நமது வசத்தில் இல்லை’. எனவே, அவர் மானுடர்க்கு அழுத்தம் திருத்தமாகச் சொல்வதெல்லாம் இதுதான்:

“சென்றதுஇனி மீளாது; மூடரே, நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்று அழிக்கும் கவலை எனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்; சென்றதனைக் குறித்தல் வேண்டா;
‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ என்று நெஞ்சில்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர்!
அஃது இன்றித் சென்றதையே மீட்டு மீட்டும்
மேன்மேலும் நினைந்து அழுதல் வேண்டா, அந்தோ!”  

சென்றதையே மீண்டும் மீண்டும், மேன்மேலும் நினைந்து அழுவதைக் கைவிட்டு, ‘மேன்மேலும் புதிய காற்று எம்முள் வந்து, மேன்மேலும் புதிய உயிர் விளைத்தல் கண்டீர்!’ என்பதை அனுபவத்தால் உணர்ந்து, அறிவிலே தெளிவு பெற்று, நெஞ்சில் ‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்!’ என்ற திண்ணிய எண்ணத்தோடு மனிதன் உண்டு மகிழ்ந்து இன்பமாக வாழ முற்பட வேண்டும் என்பது பாரதியாரின் உயிர்க் கொள்கை.
 

‘நோக்க நோக்கக் களியாட்டம்!’

“சாதிகள் இல்லையடி பாப்பா – குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!”        

எனச் சாதிக் கொடுமைக்கு எதிராக உரத்துக் குரல் கொடுத்த பாரதியார்,

“ காக்கை, குருவி எங்கள் ஜாதி - நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்;
நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை;
நோக்க நோக்கக் களியாட்டம்”

எனக் களிப்பின் உச்சத்தில் இருந்து மொழிவது குறிப்பிடத்தக்கது. இதில் இடம்பெற்றுள்ள ‘நோக்க நோக்கக் களியாட்டம்’ என்னும் ஈற்றடி பாரதியாரின் வாழ்வியல் கண்ணோட்டத்தினைத் தெளிவுபடுத்துவது.
 

உடன்பாட்டுச் சிந்தனை கோலோச்சி நிற்கும் வசன கவிதை

‘காட்சி’ என்ற தலைப்பில் பாரதியார் படைத்துள்ள வசன கவிதையின் முதற் கிளையே ‘இன்பம்’ என்னும் உடன்பாட்டுச் சிந்தனையோடு தொடங்குவது சிறப்பு; அம் முதற்கவிதை முழுவதும் உடன்பாட்டுச் சிந்தனையே கோலோச்சி நிற்கக் காண்கிறோம்.

“இவ்வுலகம் இனியது. இதிலுள்ள வான் இனிமையுடைத்து.
காற்றும் இனிது.
தீ இனிது. நீர் இனிது. நிலம் இனிது.
ஞாயிறு நன்று; திங்களும் நன்று…”

எனத் தொடங்கும் அக் கவிதை, தொடர்ந்து வானத்துச் சுடர்கள், மழை, மின்னல், இடி, கடல், மலை, காடு, ஆறுகள், உலோகம், மரம், செடி, கொடி, மலர், காய், கனி, பறவைகள், ஊர்வன, விலங்குகள், நீர் வாழ்வன ஆகியவற்றை இனியனவாகவும் நல்லனவாகவும் சுட்டிக்காட்டி, பின்வருமாறு நிறைவடை-கின்றது:

“மனிதர் மிகவும் இனியர்.
ஆண் நன்று. பெண் இனிது.
குழந்தை இன்பம்.
இளமை இனிது. முதுமை நன்று.
உயிர் நன்று சாதல் இனிது”          

இக் கவிதை முழுவதுமே இனிது, இனியன, இன்பம், நன்று, நல்லன என்னும் உடன்பாட்டுச் சொற்களாலேயே யாக்கப் பெற்றிருப்பது முத்தாய்ப்பு; எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற் போல் ‘முதுமை நன்று’ என்றும், ‘சாதல் இனிது’ என்றும் பாரதியார் மொழிவன நோக்கத்தக்கன.

‘நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப் பொழுதும் சோராது இருத்தல்’ என்பது வெறும் கொள்கை முழக்கமாக மட்டும் இல்லாமல், அல்லும் பகலும் பாரதி எனும் இலக்கிய ஆளுமையின் மீது மேலாண்மை செலுத்திய உயிரின் இயக்கமாக அமைந்தவை அவரது இன்முகச் செவ்வியும் உடன்பாட்டுச் சிந்தனையுமே எனலாம்.
 

 

முனைவர் நிர்மலா மோகன்
தகைசால் பேராசிரியர் (பணி நிறைவு)
தமிழியற்புலம்
காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம்
காந்திகிராமம் - 624302
திண்டுக்கல் மாவட்டம்







 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்