திரையில் ஒளிரும் இலக்கியம் (தொடர் - 18)

கவிஞர் மா.உலகநாதன், திருநீலக்குடி


கண்ணதாசனின் ஆறு கட்டளைகள்

 சொல்லும் செயலும் ஒன்றாக இருந்தால் அமைதியாக வாழலாம்.
 இன்பமும் துன்பமும் மாறி வருவதே வாழ்க்கை.
 உண்மையைப் பேசி நன்மையைச் செய்தால் உலகம் உன்னைப் போற்றும்.
 நம் நிலை உயரும்போது பணிவு வரவேண்டும்.
 ஆசை களவு கோபம் கொள்பவன் மிருகத்துக்குச் சமம்.
 அன்பு,நன்றி,கருணை கொண்டவன் மனிதவடிவில் தெய்வம்.

இந்த ஆறுகட்டளைகளை மனதில் வைத்தே ஆண்டவன் கட்டளை படத்தில் இப்படி ஒரு பாடலை எழுதினார்.

ஆறு மனமே ஆறு  -  இந்த ஆண்டவன் கட்டளை ஆறு.
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு!


பாடல் முழுவதுமே அவரது இத் தத்துவங்கள் எதிரொலித்துக் கொண்டிருக்கும்.

இந்த ஆறு கட்டளை அறிந்த மனது
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்..


உறுதிபடத் தெரிவிக்கிறார்.

துயிலாத பெண்:

கவிஞர், முத்தொள்ளாயிரம் என்ற இலக்கியச் செய்யுளுக்கு முத்தான பாடல் ஒன்றைத் தருகிறார்.

காராட்டுதிரம் தூஉய் –அன்னை களன் இழைத்து
நீராட்டி நீங்கென்றால் நீங்குமோ?-போராட்டு
வென்று களங்கொண்ட வெஞ்சின வேற்கோதைக்கு என்
நெஞ்சம் களம் கொண்ட நோய்.
(முத்-11)

போரில் பகைவரைக் கொன்று வெற்றிபெற்று நாடுகளைக் கைப்பற்றும் கொடிய சினமிக்க வேற்படையை உடையவன் சேரன். அவன் பால் காதல் கொண்டேன்; அக் காதல் நோய் என் நெஞ்சை இடமாகக் கொண்டு வாட்டுகிறது.இதை அறியாத என் தாய் வெறிக்களம் அமைத்து முருகனுக்கு வெறியாட்டு எடுத்து,வெள்ளாட்டைப் பலிகொடுத்து அதன் இரத்தத்தைத் தெளிக்கிறாளே;குடநீரை எனக்கு நீராட்டி,”ஏ நோயே! இவளைவிட்டு நீங்கு என்று சொன்னால் உடனே என் காதல் நோய் நீங்கி விடுமா?என்கிறாள்.

காதல் நோயின் ஆழத்தையும் வேதனையையும் ஒரு பெண்ணாக மாறி அனுபவித்து ஒரு பாடலை எழுதுகிறார்.மீண்ட சொர்க்கம் படத்தில்,

துயிலாத பெண்ணொன்று கண்டேன்...எங்கே..?இங்கே,
எந்நாளும் துயிலாத பெண்ணொன்று கண்டேன்.

மாலைக்கு நோயாகிப் போனேன்
காலை மலருக்குப் பகையாக ஆனேன்.


அன்று செந்நாப் புலவர் சொன்னதைத்தான் இந்நாள் புலவர் பாடலாக்கினார்.

காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலருமிந் நோய்.    

                                                  
குறள்-1227.

அழல் போலும் மாலைக்குத் தூதாகி
குழல்போலும் கொல்லும் படை.   

                                                   
குறள்-1228.

மகள் ஒன்று நினைக்க தாய் ஒன்று செய்ய, நடக்கும் வெறியாட்டு நிகழ்வுகளை இலக்கியம் துலக்கித் தருகிறது.

முதல் காதல்:

கவிஞருக்கு மீசை அரும்பத் தொடங்கியபோது காதல் அவரை விரும்பத் தொடங்கியது. ஆம்! வானொலி கேட்கும் ஆர்வத்தில் அடிக்கடி அடுத்த வீட்டுக்கு போனார். பருவப் பெண் ஒருத்தியும் அங்கிருந்தாள். இயல்பாக போய்க்கொண்டிருந்த வானொலி ஆர்வம்,பிறகு அவளுக்காக என்று ஆகியது.ஒருநாள் நான்கு கண்களும் நேரடியாகச் சந்தித்தன. சிந்தித்தன..சிரித்தன.பிறகென்ன?

அவளின் மோகனச் சிரிப்பில் இவ்ருக்கு அலாதியானதொரு மயக்கம்.தொடாமலும் படாமலுமே இவர்களது காதல் வளர்ந்தது.ஆனால்,அவளுக்கு இவரை விட ஒரு வயது அதிகம்.மேலும் கவிஞருக்கு மூத்த சகோதரரும் சகோதரியும் இருந்தனர்.இந்த இக் கட்டில் அவரின் காதல் கைகூடாமலே போனது.

காலங்கள் கடந்தன. நீண்ட நாள் கழித்து அவளை கண்ணதாசன் பார்த்தார்.அவள் தோற்றத்தில் மாற்றங்கள் தெரிந்தன. ஐந்தாறு குழந்தைகளுக்குத் தாயாகியிருந்தாள். பழைய பொலிவு மெலிவடைந்திருந்ததைப் பார்த்ததும் அவர் எழுதிய பாடல் தான்,

பாவாடை தாவணியில் பார்த்த உருவமா? –இது
பூவாடை வீசி வர பூத்த பருவமா?
தத்திதத்தி நடப்பதற்கே சொல்லவேண்டுமா –நீ
முத்துமுத்தாய் சிரிப்பதற்கே சொல்லவேண்டுமா?

இங்கே என் காலமெல்லாம் கடந்துவிட்டாலும்
ஓர் இரவினிலே முதுமையை நான் அடைந்துவிட்டாலும்
மங்கை உன்னைத் தொட்டவுடன் மறைந்து விட்டாலும்
நான் மறுபடியும் பிறந்து வந்து மாலை சூடுவேன் !


                                                                 படம்: நிச்சய தாம்பூலம்

நம்மை போலவே அவருக்கும் ஒரு, காதல் தோல்வி நிகழ்ந்திருக்கிறது. அதனால்தான் அவர் கவிஞரானோரோ?ஆம்! அதுவே உண்மை!.

 

                                                                                                                                                தொடரும்............

 



 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்