திரையில் ஒளிரும் இலக்கியம் (தொடர் - 19)

கவிஞர் மா.உலகநாதன், திருநீலக்குடி


பிர்லாவைப்போல் சம்பாதித்து ஊதாரித்தனமாக செலவழித்து, பல நேரங்களில் பிச்சைக்கா ரனைப்போல் ஏங்கி நிற்கும் வாழ்க்கையே என் வாழ்க்கையாயிற்று என்று திறந்த புத்தகமாக தன்னைப்பற்றி சுய அலசல் செய்து கொண்டவர் கவியரசர். ஒளிவு மறைவற்ற வாழ்க்கையின் உதாரண புருஷர் அவர்.

எண்ணத்தில் எழுகின்ற விழுமிய உணர்வுகளுக்கு வடிவம் கொடுக்கின்ற பொழுது அது இலக்கியமாக மலர்கின்றது என்பர் ஆய்வாளர்கள். அதுபோல,கவிஞரின் உள்ளத்தில்பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு பொருண்மையும் கவிதையாக உருவெடுக்கும். அந்த வகையில், தான் உணர்ந்த உண்மைகளைக், கவிதையாக அதையும் தமிழ் இலக்கியங்களின் சாயலோடு வடித்துத் தந்துள்ளார்.

கவிஞரின் தனி வாழ்க்கையில் பெற்ற அனுபவமும், சமுதாயத்தில் கற்ற அனுபவமுமே இவரது பாடுபொருளோடு இணைந்திருந்தன. இவரின் கவிதைகள் பாமர மக்களைக் கவர்ந்ததற்கு இதுவும் ஒரு காரணமாகும்.

அனுபவித்தே தான் அறிவது வாழ்வெனில்
ஆண்டவனே நீ ஏன் எனக் கேட்டேன்.
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
அனுபவம் என்பதே நான்தான் என்றான்.
(கண்ணதாசன் கவிதைத் தொகுப்பு-3.)

அவர் இறைவனையும் பாடினார்; அரசியல் தலைவனையும் பாடினார்;தாலாட்டும் பாடினார்; விரக்தியில் ஓலமிட்டும் பாடினார். காதலையும் கூடவே சாதலையும் பாடினார்; காதலை இவர் அனுபவித்துப் பாடிய அளவுக்கு வேறு யாரும் பாடியதாக என்னால் துணிய முடியவில்லை.

காலளந்த நடையினில் என் காதலையும் அளந்தாள்... (அன்னை இல்லம்)
உன் காலடி ஓசையிலே என் காதலை நானறிவேன்...(வல்லவனுக்கு வல்லவன்)
நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும்.... (பாலும் பழமும்)
பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது
அழுதால் கொஞ்சம் நிம்மதி.
பேச மறந்து சிலையாய் நின்றால்
அதுதான் காதல் சன்னதி!
பூஜ்யத்துக்குள்ளே....:

“உண்மையிலேயே ஒருவன் நாத்திகம் பேசினால் அவன் உணர்ச்சியற்ற ஜடம். ஆராயும் அறிவற்ற மூடம். பகுத்தறிவு ஒழுங்காக வேலை செய்யுமானால் அது கடைசியாக இறைவனைக் கண்டுபிடிக்குமே தவிர,ஒருபோதும் சூனியத்தைச் சரணடையாது” இது கண்ணதாசன் அவர்களது கருத்து. கடவுளையும் புராணங்களையும் கேலி செய்வதற்காகப் படிக்கத் தொடங்கிய கவிஞர், அவற்றிலுள்ள தத்துவங்களில் மூழ்கிக் கடவுளருக்கு அடிமையானார்.

கவியரசரின் பாடல்களில் ஆறுதலையும் தேறுதலையும் தரும் பாடல்கள் மனித மனத்திற்கு நிம்மதியையும் தன்னம்பிக்கையையும் அளிக்கின்றது. அவர் தத்துவ முத்துக்களாகத் தந்த பாடல்கள் வாழ்க்கையை மறுவிளக்கம் செவதாக அமைந்துள்ளன.நிலையாமை பற்றிசொன்ன அவரின் பாடல்கள் நிலையாக என்றைக்கும் பேசப்படுவதாக உள்ளன.

பூஜ்யத்துக்குள்ளே ஒரு ராஜ்யத்தை ஆண்டுகொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன்- அவனைப் புரிந்துகொண்டால்
அவன் பேர் இறைவன்..!
(படம்: வளர்பிறை)

அஞ்சு மலர்க் காட்டுக்குள்ளே
ஆசை மலர் பூத்திருந்தால்
நெஞ்ச மலர் நீக்கிவிடும் ஒருவன்-அவனை
நினைத்துக் கொண்டால் அவன்தான் இறைவன்..!
நெருப்பில் சூடு வைத்தான்.
நீரினில் குளிர்ச்சி வைத்தான்.
கருப்பிலும் வெண்மை வைத்தான் ஒருவன்-உள்ளம்
கனிந்து கண்டால் அவன்தான் இறைவன்..!


கண்ணன் அவர் காதலன்:

பாரதியாரைப் போல் கண்ணனைச் சொந்தம் கொண்டாடியவர் கண்ணதாசன். சிறுகூடல்பட்டி முத்தையா அப்படித்தானே கண்ணதாசன் ஆனார். கண்ணனைத் தனக்குத் தெய்வமாக மட்டுமல்லாமல்,தாயாகவும் உறவினர்களாகவும், உற்ற நண்பனாகவும் சேவகனாகவும் பல உறவு நிலைகளில் காண்கிறார்.மேலும், தனக்கு மட்டுமின்றி எல்லோருக்கும் உறவினனாக இருந்து உதவி செய்பவன் கண்ணன் என்பதை,

கண்ணா என்றழைப்பார் முன்
        காவலன் போல் வருகின்றான்.
காதலனாய் எந்தக் கன்னியர்கள்
        நினைத்தாலும்
ஆதரவாய் வந்து அவர்மடியில்
        சாய்கின்றான்.


தனது கவிதை இலக்கியத்துக்கு ஏற்றாற்போல் பாரதியாரின் பாடலையே பரிசாக நமக்குத் தந்தார். கண்ணனுக்கும் அவருக்கும் உள்ள நெருக்கத்தை,நெகிழ்ச்சியை பாரதி இப்படி எழுதினார்.கவியரசரும் அதனையே வழிமொழிகிறார்.

எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதி நான் என்றான்,
இங்கிவனை யான் பெறவே என்ன தவம்
செய்துவிட்டேன்...
நண்பனாய் மந்திரியாய் நல்லாசிரியனுமாய்..
பண்பிலே தெய்வமாய் பார்வையிலே சேவகனாய்...
எங்கிருந்தோ வந்தான்.

                                                 (படம்-படிக்காத மேதை.)

காய்..அங்கே காய்..அவரைக் காய்:

காய் பற்றிய ஒரு இலக்கியச் செய்யுள். காளமேகப்புலவரின் விடுகவி இது.

கரிக்காய் பொரித்தாள்;கன்னிக்காய் தீய்த்தாள்;
பரிக்காயைப் பச்சடியாய்ப் பண்ணாள்;-உருக்கமுடன்
அப்பைக்காய் நெய் துவட்டல் ஆக்கினாள் அத்தை மகள்
உப்புக் காண்! சீச்..சீ. உமி!

அடுக்களை அறியாத அத்தை மகள் ஒருத்தி உப்பு அதிகமிட்டு கறிசமைத்த கதையைத்தான் காளமேகப் புலவர் இப்படி எழுதி வைத்தார்.

நம் கவிஞர் எழுதினர்.

அத்திக்காய்..காய்..காய், ஆலங்காய்...வெண்ணிலவே..
இத் திக்காய் காயாதே, என்னைப்போல் பெண்ணல்லவோ நீ
என்னைப்போல் பெண்ணல்லவோ....

கன்னிக் காய் ஆசைக் காய் காதல் கொண்ட பாவைக் காய்
அங்கே காய் ..அவரைக் காய்..மங்கை எந்தன் கோவைக்காய்.
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ?


காய் வகைகள் கறிக்கும் ஆகியது; காதலுக்கும் ஆகியது;ஏலக்காய் வாசனைபோல் அவரின் பாடல்கள் இன்றளவும் மணம் வீசிக்கொண்டிருக்கிறது.
 

                                                                                                                                                தொடரும்............


 



 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்