ஞானம் - டிசம்பர் மாத எஸ்.பொ சிறப்பிதழ் - கவிதைகள் ஒரு பார்வை

மன்னார் அமுதன்

நாட்டின் பல்வேறு கடின சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் ஒவ்வொரு மாதமும் இடையறாது வெளிவரும் ஞானம், கனதியான இலக்கிய ஆக்கங்களைச் சுமந்து வரும் தரமான கலை, இலக்கிய மாசிகைகளுள் ஒன்று என்பது வாசகர்களின் கருத்திலிருந்த்து தெளிவாகப் புலப்படுகிறது.

பெரும்பயிர் செய்கையில் இடைநிலம் வீணாகாமல் இருப்பதற்காக ஊடுபயிர் விதைப்பார்கள். அதைப் போலவே
88 பக்கங்களைக் கொண்ட ஞானம் சஞ்சிகையில் கவிதைகள் விதைக்கப்பட்டுள்ளது. எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் பலன் நிறைவாகவே உள்ளது. ஐந்து கவிதைகளும் சமூகக் கருத்துக்களையே வாசகர்களுக்கு விட்டுச் செல்கின்றன.

கவிதைக்கு ஆயிரமாயிரம் வரையறைகள் கொடுக்கப்பட்டிருந்தாலும், அவைகளுக்குள் அடங்காமல் பிரவாகிப்பதே கவிதையின் மகத்துவம். 'உள்ளத்து எண்ணக் கிடக்கைகளை, குமுறல்களை அருவியாய்க் கொட்டக் கிடைத்த ஒரு சிறிய மலையிடுக்கைப் போலவே கவிதை பயணப்படுகிறது. சிறிய ஊற்றாய்த் தோன்றும் எண்ணகரு விசாலமாய் விரிந்து, அருவியாய்க் கொட்டி வாசகனின் மனதை எளிதாக ஈரப்படுத்தும் தன்மை கவிதைக்குக் கை வந்த கலை.

குழந்தைக்குப் பந்தாகவும், வாலிபனுக்குப் பெண்ணாகவும், பெண்ணிற்கு நகையாகவும், கவிஞனுக்குக் கற்பனையாகவும், தேவையானவர்களுக்கெல்லாம் தேவையானதாகத் தன்னை மாற்றிக் கொள்ளும் பண்பும், அனைவரையும் ஈர்க்கும் கவர்ச்சியும் கவிதைக்குத் தான் உண்டு.

அந்த வகையில் இச்சஞ்சிகையில் முதலாவது கவிதையாக இடம்பெற்றுள்ள கவிதை கவிஞர். நாச்சியாதீவு பர்வீனின் ''நிலவு இராச்சியம்''.

'வெளிச்சம் தர மறுக்கும்
நிலவின் கர்வம் பற்றி
எந்த நட்சத்திரமும்
கதைப்பதாக இல்லை'


என மௌனம் சாதிக்கும் வரிகளில் குறியீடுகளைத் தாங்கிச் சுமக்கிறது கவிதை. இக்கவிதையில் நிலவு, நட்சத்திரம், குட்டி நட்சத்திரம் என மூன்று குறியீடுகள் சமுதாயத்தின் அதிகாரவர்க்கம், ஆளப்படும் வர்க்கம், இளைய சமுதாயம் என்பவற்றை குறிப்பதற்காகப் பயன் படுத்தப் பட்டுள்ளது.

எமது ஆளும் வர்க்கம் நிலவைப் போன்றவர்கள் தான். அவர்களுக்குச் சுயமான ஆளுமை என்றுமே இருந்ததில்லை. சர்வதேச நாடுகளின் சக்தியோடு அதிகாரம் செலுத்தும் இவர்கள் தாங்களும் ஒரு சாதாரண நட்சத்திரமே என்பதை தெரிவு செய்யப்பட்ட பின் மறந்துவிடுகிறார்கள்.

ஆளப்படும் வர்க்கமும், நிலவும் ஒரு நட்சத்திரமே என்பதை மறந்தே தம் தலையில் தூக்கி வத்து விடுகின்றனர். இன்றைய இலக்கிய உலகிலும், அரசியலிலும் கூட இது அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகளாகி விட்டது.

'குட்டி நட்சத்திரங்கள்
குசுகுசுத்தாலும்
ஆக்கிரமிப்பின் கால்த்தடங்கள்...
அழுத்தத்தினால்...
ஏதும் அர்த்தப்படுவதாய் இல்லை'


எனும் வரிகள் இளைய சமுதாயத்தின் சமூக பிரக்ஞை பற்றிப் பேசுகிறது. இன்றைய இளைய சமுதாயம் தன்னாலியன்ற ஏதோவொரு முறையில் தமது இனத்திற்காக வாழ நினைக்கிறது. அதற்குள் அவர்களை அதிகாரக் கால்கள் நசுக்கிவிடுகின்றன.

'ஏக்கம் நிறைந்த மனதுடன்
சில நட்சத்திரங்கள்
பேசிக்கொண்டன
இன்னொரு
நிலவின் வருகை பற்றி'


எனும் வரிகளில் மாற்றத்தை எதிபார்க்கும் மக்களின் மனது புலப்படுகிறது. ஆனால் மாற்றத்தினால் நாற்காலிகளைப் பிடிக்கும் மற்றுமொருவரும் சுயம் கொண்ட சூரியனாக இல்லாமல், கடன் பெறும் நிலவாகவே இருந்தது விடுவதைக் கூறும் யதார்த்தம் தான் கவிஞர் நாச்சியாதீவு பர்வீனின் கவிதைகளின் பலமாகும்.

'அந்தப் பிணம் புறப்பட்டது
உறவினர் சிலர் அழ
ஊரார் சிலர் வாட
பட்டாசு, பறை முழங்க
பயணப்பட்டது.


ஆண்டு அனுபவிச்சது
அழுவதற்கு என்ன இருக்கு'


என ஒவ்வொரு ஏழைத் தோட்டத் தொழிலாளியின் வாழ்க்கை வரலாறையும், மரணத்தையும் கண்ணீர் ததும்பத் தூக்கிச் சுமக்கிறது பத்தனையூர் வே. தினகரனுடைய 'ஆண்டு அனுபவிச்ச கதை' எனும் கவிதை .

ஒரு மனிதனின் இறப்பு என்பது பலருக்குச் செய்தியாகிவிடுகையிலும் சிலருக்கு மட்டும் இளப்பாகவே இருந்து விடுகிறது என்பதை

'கூந்தல் கலைத்து
சேலை அவிழ்த்து
தலையிலும்இ மார்பிலும்
அடித்துக் கொண்டு
ஆயுளை இழுத்துப் பிடித்து

'ஆண்டு அனுபவிச்ச கதை'யை
கூவிய படியே
செல்கிறாள் கிழவி
'...
தனியா விட்டுட்டு
போறியலே... எஞ்சாமி'

எனும் உயிரைப் பிளியும் ஓசையைக் கேட்கும் வரை நாம் உணர்வதில்லை. உண்மையான அழுகை என்பது இறந்தவருக்கும் இழந்தவருக்குமான உறவை விளக்கும் ஒரு கண்ணீர்க் கவிதை.

கோலங்கள் தொடரை நான் அவ்வப்போது பார்த்ததுண்டு. அதில் வரும் கதாப்பாத்திரமான தோழர் பாலகிருஸ்ணணின் மறைவு (தொடரில்) என் கண்களைக் கலங்கச் செய்தது உண்மையே. சில தினங்கள் வரை சிம்மக் குரலால் அவர் முழங்கிய கருத்துக்கள் என் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது.

ஏதோவொரு வகையில் சிலர் நம்மில் தாக்கத்தை உருவாக்கி விடுகிறார்கள். நம்மோடே வாழும் சிலர் மறைந்தாலும் அழுகை வருவதில்லை. மறைவு என்பது ஒருவர் வாழும் காலத்தில் சேர்த்த உள்ளங்களின் எண்ணிக்கையைக் கணக்கிட உதவும் கணணி தானோ.

ஒரு தோட்டத்தொழிலாளி எவ்வாறெல்லாம் உழைத்தான்,  யாருக்காகவெல்லாம் களைத்தான் என்பதை

'வெள்ளைத் துரையிடமும்
கருப்புத் துரையிடமும்
உழைத்துக் களைத்தவன்
களைத்து உழைத்தவன்'


என்று கவிஞர் விளக்குகிறார். வெள்ளைக்காரன் தான் அடிமைப் படுத்தி ஆண்டது மட்டுமில்லாமல், நம்மினமே நம்மை ஆளவும் வழிசமைத்தே சென்றான் என்பதையே வெள்ளைத்துரையிடமும், கருப்புத்துரையிடமும் எனும் வரிகள் விளக்குகின்றன.

ஒரு குழந்தைக்குத் தாய் தான் உலகம். பொறுப்புள்ள மனைவிக்குத் தன் குடும்பம் தான் உலகம். ஒரு தோட்டத் தொழிலாளிக்கு அவன் வீடும் மலையுமே உலகமாக உள்ளது. தேயிலையே வசந்தமாய், அவன் லயவீடே சொர்க்கமாய் எனும் வரிகள் அவன் மண் மேல் கொண்டிருந்த பற்றையே விளக்குகின்றது.


வெயிலின் அருமை நிழலில் தெரியும் என்பதை விளக்குவதாய்

ஓகோ...!
இந்த மரத்தின் கீழ்
கொஞ்சம் இளைப் பாறினால்
கோடை வெயிலும்
குளிர்த் தென்றலாய் அல்லவா
தாலாட்டிச் செல்கிறது..!


என 'குடை நிழல்' கவிதையில் தன் வீட்டு முற்றத்தில் வளர்ந்து நிற்கும் ஜாம் மரத்தின் புகழைப் பாடுயிருக்கிறார் வட அல்வை.க.சின்னராஜன். காலைக் குயில்களை அழைத்து வந்த சோலைக்காரர் யாரோ என விளிக்கையில் இயற்கையின் காதலன் வோர்ட்ஸ் வொர்த் நினைவுக்கு வருவதை மறுக்க முடியவில்லை. இயற்கையைப் பாடும் குடை நிழலில் கவிஞர் மரத்தின் அழகையும்இ பூவின் அழகையும், பட்டாம் பூச்சிகளின் படபடப்பையும், கனிகளை உன்ண வரும் குயில்களின் சங்கீதத்தையும் பாடுகிறார்.

இது என்ன ...!
இயற்கை அன்னை
பசுந்தளிர்களால்
நெய்து முடித்த
குடில் வீடா..?
அல்லது
குடை நிழலா..?
என இயற்கையில் உருகும் கவிஞர்

பாடசாலை செல்லும்
வெள்ளைச் சீருடைப்
பட்டாம் பூச்சிகள்
எங்கள் முற்றத்தில்
சிறகடிக்கிறார்களே...!


என்பதில் அஃறிணைப் பட்டாம் பூச்சிகளை உயர்திணையாக்கி சம உரிமையும் கொடுத்து மகிழ்கிறார். இவை பெரும் பண்டிதர்களால் இலக்கணப் பிழையாகக் கருதப்பட்டாலும் கவிதைகளில் மட்டுமே இவை சாத்தியம். மனிதர்களில் உயர்திணை, அஃறிணைப் பாகுபாடு பார்ப்பவர்கள் மதாபிமானிகள். பறவைகளையும், விலங்குகளையும் தம்மோடு இணைத்துக் கொண்டு வாழ்பவர்கள் மனிதாபிமானிகள். மனிதாபிமானிகளும் கவிஞர்களே. கவிஞர்களுக்கு மட்டுமே இது சாத்தியம்.

அளவுக்கு மீறினால் மழை வெள்ளம், அளவோடு பொழிந்தால் மழையே வெல்லம். கோடையில் பெய்யும் மழை விவசாயிகளுக்கு வெல்லம் தான். கொட்டும் மழையில் நனைந்து மகிழும் குழந்தையைக் கண்ட தோழரும், கவிஞருமான முத்துசாமி பழனியப்பனின் கவிதையை வாசியுங்கள்.

'மழை வெல்லம்' - இதை
'மழை வெள்ளம்' எனத்
திருத்துபவர் தமிழில் தேர்ந்தவர்!
ரசனைகளில் தேறாதவர்!!
- நன்றி: முத்துசாமி பழனியப்பன்

என்ன அருமையான சொல்விளையாட்டு. இயற்கையை ரசிக்கும் பாங்கு. கவிதையில் கவிஞன் வாழ்கிறான். கவிஞனில் கவிதை வாழ்கிறது. உயர்திணை, அஃறினைப் பாகுபாடும் இரசனை தொடர்பானதே.

'சிரமேறும் மகுடத்தால் கனமேறி
சின்னத்தன புத்திக்குள் சங்கமித்து
தரமிழந்து போகாதீர் மதிஜீவிகளே
தட்டிக் கொடுங்களய்யா எம்முதுகில்'


எனவுரைக்கும் அல்வாயூர்.சி.சிவநேசன், யாரைப் பார்த்து 'தட்டிக் கொடுங்களய்யா' எனும் இக்கவிதையைப் புனைந்திருக்கிறார் என நாமறிவோம். ஒரு மனிதனின் முதுகுக்குப் பின்னால் புறம் கூறல், குழி வெட்டுதல் என ஆயிரம் வேலைகள் செய்யலாம். இருப்பினும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப் பட்ட முதுகுக்குப் பின்னால் செய்யும் ஒரே செயல் தட்டிக் கொடுப்பது மட்டுமே. இதையே பாரதி தனது 'வெள்ளைத் தாமரை' கவிதையில் 'அதுவுமற்றவர் வாய்ச்சொல் அருளீர்...' எனக் குறிப்பிட்டார்.

'இளையோரின் ஆக்கமதை ஆராய்ந்து
இன்னொருவர் ஆக்கத்தின் தழுவலென்று
விளையும் பயிரினைக் கிள்ளியெறியும்
விசமத்தன விமர்சன வாதமிடுவார்'


என சீறும் கவிஞர் விமர்சகர்களையும் சாடுகிறார். பல நேரங்களில் விமர்சகர்கள் தம் கருத்திற்கு ஒவ்வாத கருத்துக்களை எழுதுவோருக்கு எதிராக போர்க்கொடி தூக்குவதுண்டு. ஆனால் எல்லோரும் அப்படியல்ல. விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் நின்று தழுவலைத் தழுவல் என்றும் பிரதியைப் பிரதியென்றும் சொல்ல வேண்டியது கடப்பாடு விமர்சகனுக்கு உண்டு. எனவே விமர்சகனுக்கு அவ்வேலையைக் கொடுக்காமல் படைப்பாளிகள், படைப்பு தழுவல் அல்லது மொழிபெயர்ப்பு என்றால் அதன் மூலத்தைக் குறிப்பிட வேண்டும்.

ஒரு கருத்தை வெளிப்படுத்தி விட்டு, மீதியை வாசகர்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள் என விட்டுச் செல்லும் உரிமை படைப்புகளுக்கு உண்டு. ஆனால் விமர்சகன் அவ்வாறு விட்டுச்செல்ல முடியாது. படைப்பில் கூறியவற்றையும், கூறாமல் விட்டுச் சென்றவற்றையும் தொட்டுச் செல்ல வேண்டியது விமர்சகனின் கடமை.

'மூத்துயர்ந்த படைப்பாளர் இவர்களென்று
முன்னுரை மகத்துவம் நாமுமளிக்க
சாத்தானின் வேதமல்லோ ஓதுகின்றார்
சரிநிகர் எவருளரோ தமக்கென்றே'


என்று கூறும் சில மூத்த படைப்பாளிகளைச் சாடுகிறார் கவிஞர். தமக்குள்ள இலக்கிய ஞானம் அட்சயப் பாத்திரம் என்றும், இளைய தலைமுறைக்கு அருளப்பட்டதோ பிச்சைப்பாத்திரம் என்றும் கிளிப் பேச்சு மொழிகள் தலைமுறை தலைமுறையாய் இலக்கிய மேடைகளில் எதிரொலிப்பது உண்மையே. புகழ் பெற்ற தம்மைப் பற்றி அறிந்து கொள்ள, ஆய்வு செய்ய இளைய தலைமுறைகள் முயற்சி எடுக்காததைச் சுட்டிக் காட்டும் ஆற்றாமை தான் இது. தமது
60 வருட இலக்கிய வாசிப்போடு 25வயது படைப்பாளியின் வாசிப்பை ஒப்பிட்டு சிலாகிப்பதும், இளைய தலைமுறைகளின் வாசிப்பு போதாதென்பதும், 5 வயது சிறுவனைக் கீழே தள்ளி அவன் கையிலுள்ள இனிப்பைப் பறித்து உண்பதைப் போலவே நான் உணர்கிறேன்.

கவிஞர்களான மகாகவியும், முருகையுனும் தலைசிறந்த கவிஞர்கள் என பலரும் ஏற்றுக் கொண்டாலும், வெவ்வேறு குழுவாக செயல்படும் இலங்கை இலக்கிய அமைப்புகள் பேதமை பாராட்டி வருவதை நன்கறிவோம். தம் சாதனைகளை நிலைநாட்டிய அவர்களுக்கே தம் மனங்களில் சமமான இடத்தைக் கொடுக்க முடியாத மூத்த இலக்கியவாதிகளா, இளையவர்களை ஆதரிக்கப் போகிறார்கள் எனும் கேள்வி தொக்கி நிற்கிறது.

இறுதிக் கவிதையாக இடம்பிடிக்கிறது த.ஜெயசீலனின் 'இவையும் அவைபோலோ'.

காலமும் ஏதும் எதிபார்த்தா
யாரையும் தூக்கிப்
புகழ்க் கொப்பில் ஏற்றி விடும்?

காலம் தனது சொந்த நலனுக்கு
ஏற்றாற்போற் தானா
எவரினையும் மேடையேற்றும்?


எனக் கேட்கத் துனிந்த கவிஞர் யதார்த்தத்தைப் புரிந்து கொண்டவராக இருக்கிறார். அரசியல் கட்டாயங்களினால் சில குப்பைகள் புகழ் எனும் கோபுரத்தில் ஏறி அமர்ந்து விடுகின்றன. மடையன் வாயைத் திறக்காத வரை புத்திசாலி போலவே தெரிவான் என்பதற்கிணங்க ஒரு சம்பவமும் அண்மையில் நடைபெற்றது. முழுநாள் ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் நண்பர்களின் அழைப்பினாலும், ஆர்வத்தினாலும் பங்கு பெற்றேன். காலை உணவை கடையில் வாங்கினாலும் சாப்பிட நேரமும் இடமும் கிடைக்கவில்லை. கூட்டம் நடந்து கொண்டிருந்தது. காலை
11.30. பயங்கரப் பசி. உணவை எடுத்துக் கொண்டு சிற்றுண்டிச் சாலைக்கு செல்ல வெளியே வந்தேன்.

அப்போது தான், அண்மையில் சாகித்திய விழாவில் கௌரவிக்கப் பட்ட ஒருவரின் வாய்மொழியைக் கேட்க நேர்ந்தது. இவன்கள் இப்படித்தான், வருவான்கள், வெளிய போவான்கள், சொந்த வேலையெல்லாம் போய் முடிச்சுக் கொண்டு, மத்தியான சாப்பாட்டுக்கு சாப்பிட வந்துருவான்கள் என்றார் பெருந்தகை. அவர் மேல் வைத்திருந்த மதிப்பெல்லாம் விழுந்துடைந்த கண்ணாடிக் கோப்பையைப் போல் நொருங்கிவிட்டது. இனி ஒட்ட முடியாது.

ஒரு படைப்பாளி எனப்படுபவன், அவன் படைத்த அத்தனை ஆக்கங்களையும் களைந்து விட்டுப் பார்க்கும் போதும் மனிதாபிமானம் மிக்க மனிதனாக மிளிர வேண்டும். போலிப் புகழுக்கும், வரட்டு கௌரவத்திற்கும் தன் மதிப்பை விற்காதவனாகவும், மொழியைப் பிரயோகிக்கும் ஆற்றல் வாய்ந்தவனாகவும் வாழ வேண்டும்.

அடிமைத்தழை அறுக்க
ஆக்ரோஷம் கொள்வதனை
குடிமைப் படாமல் கொடியேற்றக் கிளம்புவதை

பலம் முழுதை ஏவி
நசிக்க நினைப்போர்க்கு
காலமும் அறமும் துணைபோகும்
யதார்த்தத்தைக்
காண்கையிலே 'இவையும்' ஆதிக்க சக்திகளின்
அருவ வடிவுதானோ...?
சந்தேகம் எழுகிறது..


எனக் கவிஞர் மனச் சஞ்சலப்படுகிறார். குப்பைகள் எவ்வாறு கோபுரத்திற்குச் சென்றதோ அவ்வாறே கீழே வரும்.

'தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும்
தருமம் மறுபடி வெல்லும்'


இன்று
கட்டுண்டோம், பொறுத்திருப்போம், காலம் மாறும்,
தருமத்தை அப்போது வெல்லக் காண்போம் எனும் பாரதியின் பாஞ்சாலி சபத வார்த்தைகளை நினைவில் நிறுத்தி நம் சமூகம் முயற்சியிழக்காமல் வாழ வேண்டும்.

கவிஞர்கள் போராடும் வம்சத்தின் விடிவிற்காய்த் தமது கவிதைகள் மூலம் வாசகர் மனதில் சூரிய விதைகளை தொடர்ந்து விதைக்க வேண்டும். நிலவு இராச்சியம் ஒழிக்கப் பட வேண்டும். ஈழத்து இலக்கியம் தழைக்க பாரபட்சமின்றி இலக்கிய மாசிகைகளைக் கொள்வனவு செய்து இலக்கியப் பணியாற்ற அனைவரையும் அழைக்கிறோம்.


amujo1984@gmail.com