‘கொள்கை மறவர்’ முனைவர் கடவூர் மணிமாறன்

பேராசிரியர் இரா.மோகன்


“ உண்மைத் தமிழ்ப்பற்றும் உயரிய கொள்கையும்
            உடல்உழைப் பும்மிகக் கொண்டவர் – பல
            உயர்தமிழ் நூல்களைக் கண்டவர் – அவர்
திண்மைச் செழுந்தமிழில் பாட்டும் உரையும்எனத்
           தேர்ந்திடும் நூல்பல யாத்தவர் – தமிழ்
           தேறிய கல்வியில் மூத்தவர்”


                                         (முனைவர் கடவூர் மணிமாறனின் வாழ்க்கைச் சுவடுகள், ப.13)

எனப் பாவலரேறு பெருஞ்சித்திரனாரால் தமிழ் கூறு நல்லுலகிற்குச் செவ்வனே அடையாளம் காட்டப் பெற்றவர் முனைவர் கடவூர் மணிமாறன் ஆவார். கருவூர் மாவட்டத்தைச் சார்ந்த கடவூர் அய்யம்பாளையம் என்னும் சிற்றூரில் ஓர் எளிய உழவர் குடும்பத்தில் 21.01.1947-இல் பிறந்த இவர், தற்போது குளித்தலையில் வாழ்ந்து வருகிறார். 1979-ஆம் ஆண்டில் ‘நான் பாடுகிறேன்’ என்னும் கவிதைத் தொகுப்பின் வாயிலாக எழுத்துலகில் அடியெடுத்து வைத்த இவர், கவிதை, கட்டுரை, கதை, திறனாய்வு, பயண இலக்கியம், வாழ்க்கை வரலாறு, உரை, பதிப்பு, மலர் முதலான பல்வேறு துறைகளைச் சார்ந்த எழுபதுக்கு மேற்பட்ட நூல்களை இதுவரை வெளியிட்டுள்ளார். ‘பொன்னி’, ‘அழகோவியம்’, ‘சிறகை விரித்த சிந்தனைகள்’, ‘தமிழ் வளம்’ என்னும் இவரது கவிதை நூல்கள் பாரத மாநில வங்கியின் பரிசினைப் பெற்றவை ஆகும். 1972-ஆம் ஆண்டில் தொடங்கிய இவரது தமிழாசிரியப் பணி, பல பணி உயர்வுகளைப் பெற்று, மாயனூர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் என்னும் உயர்நிலையில் 2003-இல் நிறைவு பெற்றது. ‘தமிழ்மணி’, ‘பாவேந்தர் மரபுப் பாவலர்’, ‘கவிமாமணி’, ‘செந்தமிழ்ச் சுடரொளி’, ‘கொள்கைப் பாவலர்’, ‘திருக்குறள் நெறித் தோன்றல்’, ‘பாக்கடல்’, ‘சாதனைக் கவிஞர்’ முதலான பல்வேறு விருதுகளுக்குச் சொந்தக்காரரான கடவூரார், இதுவரை 31 மரபுக் கவிதை நூல்களை வெளியிட்டிருப்பது தனிப்பெருஞ் சாதனை ஆகும். ‘இப்படியும் சிலர்!’ என்னும் கவிதைத் தொகுப்பிற்கு எழுதிய அணிந்துரையில் வானம்பாடி இயக்கத்தின் மூத்த கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம், ‘இந்நூல் மரபின் பெருமிதம் எனலாம்’ (ப.6) எனப் போற்றுவது இவ் வகையில் மனங்கொளத்தக்கது. “அழுத்தமான பதிவுகளை ஏற்படுத்தும் என் பாடல்களில் எப்போதும் எனக்கு நம்பிக்கை உண்டு… உள்ளத்தில் முகிழ்க்கும் சிந்தனைகளை யாப்பு வடிவத்தில் நிலைநிறுத்தி என்றென்றும் பயன்கொள்ளுமாறு எதிர்காலத்திலும் பேசப்படும் தகுதி உடையதாக இப் பாட்டுச் சிற்பங்களைச் செதுக்கி இருக்கிறேன்” (என்னுரை, கவிதை வானம், ப.12) என்னும் கடவூராரின் ஒப்புதல் வாக்குமூலமும் ஈண்டு கருத்தில் கொள்ளத் தக்கது. இனி, முனைவர் கடவூர் மணிமாறன் படைத்துள்ள கவிதை உலகின் நோக்கும் போக்கும் குறித்துக் காணலாம்.

வாழும் போதே வரலாறு படைத்திட வேண்டும்!


“மரபுப் பாவலர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் சிறிது சிறிதாகத் தேய்பிறையாகி வருகிறது... சங்கப் பாடல்கள் அனைத்தும் மரபுப் பாடல்களே. அவை உலகம் உள்ளவரை வாழ்ந்து கொண்டிருக்கும். அந்த உயரிய நோக்கே என்னுள் ஒரு மரபு விதையைத் தூவ, அது செடியாக முளைத்து, மரமாக வளர்ந்து, மரபுக் கனிகளாகக் கனிந்து அனைவர்க்கும் பெரும்பயனைச் சேர்த்து வருகிறது” (ஆசிரியர் உரை, குறிஞ்சிப் பூக்கள், ப.14) என மொழியும் முனைவர் கடவூர் மணிமாறன், பொழுதுபோக்குக்காக எதையும் எழுதுவதில்லை; எதுகை, மோனைகளுக்காகப் பிறமொழிச் சொற்களை வலிந்து பயன்படுத்துவதும் இல்லை. தமிழின் மேன்மைக்கும் உயர்வுக்கும் வழிகோலும் எழுத்து விதைகளை அவ்வப்போது ஊன்றி வருவதில் அளப்பரிய மகிழ்ச்சி காண்பது அவரது வழக்கம்; வாடிக்கை; ஏன், வாழ்க்கை எனவும் சொல்லலாம். வேறு சொற்களில் கூறுவது என்றால், தமிழ் மொழிக்கு எந்த நிலையிலும் சிறுதாழ்வும் நேர்ந்து விடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பவர் கடவூர் மணிமாறன். அவரே ‘மரபுப் பூக்கள்’ என்னும் கவிதைத் தொகுப்பிற்கு எழுதிய ‘ஆசிரியர் உரை’யில் குறிப்பிடுவது போல், “வாழும் போதே ஒரு வரலாற்றைப் படைத்திட வேண்டும் என்ற துடிப்பைச் சுமந்து நிற்பவை அவரது பாடல்கள்” (ப.11).

ஆற்றல்சால் நெம்புகோல் படைப்புகளே இன்றைய தேவை!


“படைப்பாளர் ஒவ்வொருவருக்கும் ஓர் அறச் சீற்றம் இருத்தல் வேண்டும். புரையோடிச் சீழ் பிடித்துச் சிதைந்தும் சீரழிந்தும் இருக்கும் இக்குமுகத்தை மாற்றுப் பாதையில் மறுமலர்ச்சி உலகுக்கு அழைத்துச் செல்லும் ஆற்றல் வாய்ந்த நெம்புகோல் படைப்புகளே இன்றைய காலத்தின் தேவையாகும்” (ஆசிரியர் உரை, குறிஞ்சிப் பூக்கள், ப.14) என வலியுறுத்துவதோடு நில்லாமல், அத்தகைய ஆற்றல் வாய்ந்த நெம்புகோல படைப்புகளைத் தமிழ்ச் சமுதாயத்திற்கு வடித்தும் தந்திருப்பது முனைவர் கடவூர் மணிமாறனின் தனிச்சிறப்பு ஆகும். பதச் சோறாக, ‘என்று விழிப்பார்?’ என்னும் அவரது கவிதையில் இடம்பெற்றிருக்கும் சில உயிர்ப்பான அடிகள் வருமாறு:

“உதவிடும் உயர்ந்த நோக்கம் / உண்மையில் தொலைந்து விட்டார்;
பதவியைப் பற்று தற்கும் / பணத்தினைக் குவிப்ப தற்கும்
முதலிடம் பிடிக்கக் கற்றார்!...
அல்லன தடுப்ப தற்கே / ஆர்வமும் கொள்ளார்! என்றும்
வெல்வழி தேரார்!...
செக்குமா டாகிப் போனார்! / சிந்தனைக் குருடர் ஆனார்!...
எக்கணம் எழுந்து நிற்பார்? / என்றிவர் விழிப்பார் சொல்வீர்!”


                                                      (வானமே எல்லை, ப.126)

இங்கே நல்லோர் சொல்வதைக் கேளாமல், எதற்குமே தலையை ஆட்டி, மூடராய் இருந்து வரும் வரும் மாக்களைக் கடுமையாசச் சாடியுள்ளார் கடவூரார்.

பாவலன் யார்?

“வேற்றுமொழி விலக்கி வெல்லுதமிழ்ச் சொல் அடுக்கி
நாற்று நடுதல் போல் நல்யாப்பில் கட்டுவிக்கும்
பாட்டன்றோ பாட்டு! பயன்விளைக்கும் நற்பாட்டு!”


எனப் பாட்டுக்கு வரைவிலக்கணம் வகுப்பார் பாவலரேறு பெருஞ்சித்திரனார். கடவூர் மணிமாறன் ‘பாரதிதாசன் – பெருஞ்சித்திரனார் பாடல்கள் ஓர் ஒப்பாய்வு’ என்னும் தலைப்பில் ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர்; இயற்கைப் பாவலர் வோர்ட்சுவொர்த், ஆங்கிலப் பாவலர் கீட்சு, சிலிக்குயில் பாப்லோ நெருடா ஆகிய அயலகப் பாட்டுக் குயில்களின் வாழ்விலும் வாக்கிலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். ‘பாவலன் யார்?’ என்னும் வினாவுக்குக் கடவூரார் பாட்டு வடிவில் தரும் விடை இதுதான்:

“பாவலன்ஓர் அருங்கலைஞன்; சொற்கள் தம்மைப்
         பாங்காக அடுக்குகிற கலையில் வல்லோன்;
ஏவல்செயும் இவனிடத்தே எதுகை மோனை
         இன்னபிற அணிகள்எலாம்; நெருப்பாய், நீராய்த்
தாவிவரும் அனைத்தையுமே தமது பாடல்
          தளிர்க்கையால் அணைத்திடுவான்; குமுகம் காக்கும்
காவலனாய் இருந்திடுவான்; கயமை தன்னைக்
          கனல்தெறிக்கச் சாடிடுவான்; உரிமை மீட்பான்!”


                                                   (வானமே எல்லை, ப.39)

கடவூராரின் கருத்தில், ‘படித்தவுடன், கேட்டவுடன் நெஞ்சை யள்ளும், பான்மையதே நற்பாடல்! கல்லில் சிற்பம் வார்ப்பது போல் இவன் பாடல் நிலைத்து நிற்கும்!’ (ப.40).

என்றென்றும் தன்மானம் காக்கும் தமிழ்!


தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழ் நாடு உய்ந்திட, உயர்ந்திட நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ்க் கவிதை வானில் சிறகடித்துப் பாடிப் பறந்திருக்கும் முனைவர் கடவூர் மணிமாறன், புதுமைக் கவிஞர் பொன்னடியாரின் சொற்களில் குறிப்பிடுவது என்றால், ‘இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் பாவேந்தர் படைவரிசைக் கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர்… இவர் ஒரு சரியான கொள்கை மறவர்’ (அணிந்துரை, கவிதை வானம், பக்.3-4) ஆவார்.

பாவேந்தர் பாரதிதாசனின் அடிச்சுவட்டில், ‘எழுச்சி நல்கும் தொல்புகழ் சால் செந்தமிழ்’ என்றும், ‘உண்மை நேர்மை வரமாக, தவமாக வாகை சூட்டும் வண்டமிழ்’ என்றும் தமிழுக்குப் புகழாரம் சூட்டும் கடவூர் மணிமாறன்,

“பன்னரிய இலக்கியங்கள், இலக்க ணங்கள்,
         பண்பாட்டுப் பாவியங்கள் மூலம் நாளும்
தன்மானம் என்றென்றும் காக்கத் தூண்டும்
        தண்டமிழோ காலத்தை வென்று வாழும்!”      
(குறிஞ்சிப் பூக்கள், ப.21)

என பறைசாற்றுகிறார்.

‘தமிழ் மொழி வளங்கள் எய்தத் தகுவழி காணல் வேண்டும்’ என்றும், ‘தமிழின மேன்மைக்காகத் தக்கன ஆற்றல் வேண்டும்’ என்றும் வலியுறுத்தும் கடவூரார்,

“பெற்றெடுத்த தாய்த்தமிழைப் பேணிப் புரக்காமல்
மற்றை மொழிக்கே விருந்தைப் படைக்கின்றான்;
வீட்டில் தமிழ்இல்லை, வீதியிலும் இல்லை; நம்
நாட்டில் தமிழ்வளர்க்கும் நாட்டம் சிறிதும் இல்லை…
சாட்டையடி தேவை, சவுக்கை எடுத்திடுங்கள்;
கேட்டைத் தடுத்திடுங்கள்; கீழ்மை விலக்குங்கள்;
நல்ல தமிழுணர்வு நாட்டில் செழிக்கட்டும்;
எல்லாம் இழந்தாலும் இன்றமிழைக் காப்போமே!”

                                                  (குறிஞ்சிப் பூக்கள், ப.27)

எனப் பாவலர்களுக்கு வழியும் காட்டுகின்றார்.

“இழந்துவிட்ட தமிழர்தம் அடையா ளத்தை
இனவுணர்வைப் புதுக்கிடுவோம்; எழுச்சி கொள்வோம்!”

                                                 (குறிஞ்சிப் பூக்கள், ப.25)

என்றும்,

“தமிழரெலாம் உள்ளத்தால் ஒருவர் ஆவோம்!...
நிமிர்ந்தெழுவோம், ஒன்றிணைவோம்! நீடு வாழ்வோம்!
நிகரற்ற தமிழியத்தை எய்துவோமே!”


                                               (குறிஞ்சிப் பூக்கள், ப.29)

என்றும்,

“ . . . . . . மொழியும் நாடும்
இனமும் நம் மூச்சென்போம்! உயிராய்க் கொள்வோம்!”


                         (குறிஞ்சிப் பூக்கள், ப.28)

என்றும்,

“ . . . . . தாயகத்துத் தமிழர் நாமும்
தொல்புகழை, இனமாண்பை மீட்டெடுக்கத்
துணிவுடனே ஓரணியில் களத்தில் நிற்போம்!”

(குறிஞ்சிப் பூக்கள், ப.39)

என்றும் திண்ணமுறத் தேர்ந்து சூளுரைக்கின்றார் கடவூரார்.

வாழ்வில் நமக்கு வானமே எல்லை!’


முனைவர் கடவூர் மணிமாறன் குறிப்பிடுவது போல், “இன்றைய இளைஞர்களின் போக்கும் நோக்கும் பெரியோர்களின் எதிர்பார்ப்புக்கு மாறுபட்டதாகவும் முரண்பட்டதாகவுமே இருந்து வருகின்றன. எதைப் பற்றியும், எதற்காகவும் வருந்தாமல் எதிர்மறைச் சிந்தனைகளை வளர்த்துக் கொண்டவர்களாய், நாட்டு நடப்புகளை நாடி பிடித்துப் பார்ப்பதில் நாட்டம் குறைந்தவர்களாய் உளம் மாறி வலம் வரும் அவலம் ஓர் இருண்ட திக்கு நோக்கி அவர்களை அழைத்துச் செல்கிறது” (ஆசிரியர் உரை, குறிஞ்சிப் பூக்கள், ப.15). இந் நிலையில் ‘கொலை வாளினை எடடா, மிகுகொடியோர் செயல் அறவே’ எனப் பாவேந்தர் பாரதிதாசன் முழங்கினாரே, அத்தகு எழுச்சியும் புரட்சியும் இளைஞர்களின் தோள்களை உலுக்க வேண்டும், மனங்களை உசுப்ப வேண்டும் என விழைகின்றார் கடவூரார். அவர் இளைய தலைமுறையினருக்கு விடுக்கும் செய்தி இதுதான்:

“‘எதுவும் என்னால் முடியும்’ என்கிற / எண்ணச் சிறகுகள் விரியட்டும்!
புதுமை நோக்கும் புரட்சிப் போக்கும் / பூத்திட மாற்றம் மலரட்டும்!
‘வானம் நமது எல்லை’ என்பது / வாழ்வின் இலக்காய் இருக்கட்டும்!
போனதை எண்ணிப் புலம்பிட வேண்டா;
புதிய சிந்தனை பிறக்கட்டும்!”           
  (கவிதை வானம், ப.108)

மேலும், ‘எட்டும் தொலைவில் வெற்றியின் இமயம், இருப்பதை நினைவில் இருத்தி, முட்டி மோதியே முடக்கிப் போட்டிடும், மூடப்பழக்கத்தினைத் துரத்தி’யடித்து, ‘தடைகள் யாவும் தணலென வரினும், தடந்தோள் காட்டித் தகர்த்து’ எறிந்து, ‘நடையில் மிடுக்கும் நடத்தை ஒழுங்கும், நமது!’ என நாளும் நம்பிக்கையுடன் உழைத்து, ‘தோல்விகள் கண்டு துவண்டு விடாமல், துணிந்தே பயணம் தொடர்ந்திடு’மாறும், ‘ஊழ்வினை, விதி என உரைப்பவர் சொற்கள், உதவாது இனி!’ என உதறித் தள்ளி வாழ்வில் முன்னேறுமாறும் அறிவுறுத்துகின்றார் கடவூரார்.

‘வானமே எல்லை!’ என்ற தலைப்பில் படைத்த பிறிதொரு கவிதையிலும் அவர்,

“புதியன படைப்பாய்! பொதுமை சமைப்பாய்!
விதியினைத் தகர்ப்பாய்! வெம்பழி தவிர்ப்பாய்!
வாழ்வில் நமக்கு வானவே எல்லை!
தாழ்வினை ஒதுக்கித் தலைநிமிர் வாயே!”      
(வானமே எல்லை, ப.33)

என ‘எழுச்சிப் போக்கும், இளமை முறுக்கும், விழுமிய நோக்கும் வீறும் சான்ற’ இன்றைய இளைஞனுக்கு நல்வழி காட்டுகின்றார்.

“ஒழுக்கமே உயிரின் மேலாம்; / உழைப்பினை மிகவும் நம்பிப்
பழுதிலாச் செயல்கள் ஆற்றிப் / பண்புடன் மரபைக் காப்பீர்!
விழுதென இருப்பீர்! நாட்டின் / வேர்களை நினைப்பீர்! நெஞ்சின்
அழுக்கினைக் களைவீர்! கல்வி / அனைவரும் கற்கச் செய்வீர்!”


                                         (வானமே எல்லை, ப.48)

என்பதே நல்ல வளமெலாம் நாளும் சிறப்பதற்கு இன்றைய இளையோர் எழுச்சியுடன் தம் வாழ்வில் ஏற்க வேண்டிய உறுதிப்பாடு ஆகும்.

அகத்தினில் தூய்மை + சொல்லினில் வாய்மை, நேர்மை = வாழ்வினில் செம்மை


‘ஆய்வில் தோய்ந்தே விழுமியங்கள் கண்டுரைத்து விழிப்பைத் தந்த வீறுமிகு பாவாணர்’ (குறிஞ்சிப் பூக்கள், ப.28) எனப் பாவாணருக்குப் புகழாரம் சூட்டும் முனைவர் கடவூர் மணிமாறன், பாவாணரின் வழியில் நின்று தம் கவிதைகளில் ஒல்லும் வகையில் எல்லாம் உயரிய வாழ்வியல் விழுமியங்களை எடுத்துரைக்கின்றார்; ‘முன்னோர் விழுமியம் பலவும் காத்தல் வெற்றியைக் கொண்டு சேர்க்கும், வியத்தகு புகழைச் சூட்டும்!’ (குறிஞ்சிப் பூக்கள், ப.35) என்பது கடவூராரின் அழுத்தமான கருத்து. ‘அகத்தினில் தூய்மை பேணி, சொல்லினில் வாய்மை, நேர்மை துலங்கிட, வாழ்வினில் செம்மை உண்டாகும்’ என்பது அவரது ஆழ்ந்த நம்பிக்கை.

‘பண்பாடு’ என்னும் தலைப்பில் கடவூரார் படைத்துள்ள கவிதை அவரது விழுமிய நோக்கினைத் தெளிவுற மொழிகின்றது. ‘ஓர் இனத்தின் அடையாளம் பண்பாடு ஆகும்; உலகறியும் நம்முடைய தமிழ்ப் பண்பாட்டை’ எனப் போற்றிப் பாடும் கடவூரார்,

“ஒருவனுக்கே ஒருத்தி எனும் உயர்ந்த பண்பை
          உணர்வுடனே இலலறத்தில் ஏற்றுக் கொண்டால்
பெருமையெலாம் தமிழர்க்கு வந்து சேரும்;
           பிழையில்லா வாழ்வியலும் நமக்கு வாய்க்கும்!”


                               (குறிஞ்சிப் பூக்கள், ப.103)

என அறுதியிட்டு உரைப்பது நோக்கத்தக்கது.

“உண்மையினில் எல்லாரும் பொறுப்பு ணர்ந்தால்
          உருக்குலைந்த பண்பாடு மீண்டும் நாட்டில்
பன்னரிய புதுக்கோலம் பூணும்; வாழ்வில்
          பன்னலமும் நல்வளமும் படந்து நிற்கும்!”


                         (குறிஞ்சிப் பூக்கள், ப.101)

என்பதே இக் கவிதையின் வாயிலாகத் தமிழினத்திற்குக் கடவூரார் உணர்த்த விரும்பும் செய்தி ஆகும்.
‘பண்பாடு இல்லாத வாழ்க்கை பாலை நிலம் போன்றது’ (குறிஞ்சிப் பூக்கள், ப.104) எனக் கருதும் கடவூரார், சிறந்த வாழ்க்கைக்குத் தரும் விளக்கம் இதுதான்:

“பெற்றோர்க்கும் பெரியோர்க்கும் அடங்கி வாழ்ந்து
        பிறர்போற்ற வாழ்வதுவே வாழ்க்கை!...
சொற்படியே எப்போதும் நிற்றல் வாழ்க்கை!
        சுறுசுறுப்பாய்ச் செயலாற்றிச் சிறத்தல் வாழ்க்கை!
வருங்காலம் நினைந்துமிகப் போற்றும் வண்ணம்
        வரலாறு படைப்பதுவே வாழ்க்கை!...
குறள்நெறியைப் பின்பற்றி வாழ்தல் வாழ்க்கை!
        குற்றமிலாப் பெருவாழ்வே மாந்த வாழ்க்கை!
உலகியலை நன்குணர்ந்தே ஒழுகல் வாழ்க்கை!
         ஒழுக்கத்தை உயிராக மதித்தல் வாழ்க்கை!...
பலரோடு பகிர்ந்துண்ணல் உயர்ந்த வாழ்க்கை!
         பழிக்கஞ்சி நாணுவதே சிறந்த வாழ்க்கை!
நற்செயலால் பிறருக்கே எடுத்துக் காட்டாய்
         நானிலமே உவகையுறும் வண்ணம் நல்ல
பொற்காலம் அமைப்பதுவே வாழ்க்கை!”    
   (அகமும் முகமும், பக்.42-43)

இங்ஙனம் உயர்ந்த, சிறந்த வாழ்க்கை பற்றிய சிந்தனைகளை உடன்பாட்டுப் பார்வையில் வெளிப்படுத்துவதோடு மட்டும் நின்று விடாமல், ‘பொருள் சேர்த்தல் ஒன்றே தான் வாழ்க்கை அல்ல! வருவாயை உணராமல் செலவு செய்தே, வந்த பின்னர் நோவதும் வாழ்க்கை அல்ல! கற்பனையில் நீந்துவதோ வாழ்க்கை அல்ல! கனவுகளின் வெளிப்பாடும் வாழ்க்கை அல்ல!’ என எதிர்மறை நோக்கிலும் கடவூரார் கருத்துக்களைக் கூறியிருப்பது மனங்கொளத் தக்கதாகும்.

பல்கிப் பெருகியுள்ள சமுதாய அவலங்களைச் சாடல்


“இன்றைய சூழலில் குமுக அவலங்கள் பல்கிப் பெருகி வருவது கண்டு அதிர்ச்சியும், துயரமும் அடையாதார் இலர். அவற்றையே பாடுபொருள்களாகக் கொண்டு பாட வேண்டிய காலத்தின் கட்டாயமும், தேவையும் ஒரு பாவலனுக்கு, எழுத்தாளனுக்கு இருக்கிறது என்பதை எவராலும் மறுக்க இயலாது” (என்னுரை, கவிதை வானம், ப.11) என்னும் கூற்றுக்கு இணங்க, இன்றைய சூழலில் பல்கிப் பெருகி வரும் சமுதாய அவலங்களை முனைவர் கடவூர் மணிமாறன் தம் கவிதைகளின் பாடுபொருள்களாகக் கையாண்டுள்ளார்; அவற்றை அடியோடு ஒழிப்பதற்கான தீர்வுகளையும் அடையாம் காட்டியுள்ளார்.

‘பகுத்தறிவுப் பகலவன்’ தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் பிறந்த மண்ணில் இன்று சாதிக் கட்சிகளின் எண்ணிக்கை பெருகி வருவது கொடுமையிலும் பெருங்கொடுமை; அவலத்திலும் பேரவலம். ‘சதிநீண்டால் முளைப்பதுவே சாதி ஆகும்! சாதியினால் சாதிப்பார் எவரும் இல்லை!’ என மொழியும் கடவூரார், ‘நூற்றுக்கு மேற்பட்ட சாதியாலே, நொண்டியடிக்கின்றது நம் வளமும் வாழ்வும்!’ (அகமும் முகமும், பக்.62; 63) எனச் சாதிக் கொடுமையைக் கடுமையாகச் சாடுகின்றார்; இக் கொடுமையினை ‘வரலாற்றுக் களங்கம்’ எனவும் சுட்டுகின்றார். பிறிதொரு கவிதையில் அவர்,

“சாதியினால், சமயத்தால், பயனே இல்லாச்
         சழக்குகளால் கடுகளவும் மாற்றம் நேரா;
சாதியினை முன்னிருத்தும் கட்சி யெல்லாம்
         சாதிக்கப் போவதுவோ ஒன்றும் இல்லை”     
   (குறிஞ்சிப் பூக்கள், ப.98)

என்பதனைத் தெளிவாக உணர்தல் நன்றாம் எனத் திட்டவட்டமாக எடுத்துரைக்கின்றார்.
கடவூராரின் நோக்கில் அறிவார்ந்த சமுதாயம் உருவாக வேண்டுமானால் ஒட்டுமொத்தத் தமிழினம் வளர்த்துக் கொள்ள வேண்டிய ஆளுமைப் பண்புகள் ஆறு. அவையாவன: 1. எப்படிக்கும் முதற்படியாய், நல்லதொரு சமுதாயத்தைப் படைத்துக் காட்டும் நாட்டத்தைப் பெறுதல். 2. போராட்ட வீறுணர்வைப் புதுக்கிக் கொள்ளல். 3. வல்லவராய், நல்லவராய் வாழக் கற்றல். 4. வாழ்வாங்கு வாழ்வதிலே பெருமை கொள்ளல். 5. அரிமாவாய் ஆர்த்தெழவே முனைப்புக் கொள்ளல். 6. நலிவைச் சேர்க்கும் பொல்லாதவரை இனம் கண்டே ஒதுக்கி வைத்தல் (குறிஞ்சிப் பூக்கள், ப.71).

‘என் பாடல் இக்குமுக அவலம் கண்டே, எரிமலையாய்க் கனன்றிருக்கும்’ (குறிஞ்சிப் பூக்கள், ப.81) என்னும் கூற்றினை மெய்ப்பிக்கும் வகையில் கடவூராரின் கவிதைகள் எரிமலையாய்க் கனன்று இருக்கக் காண்கிறோம்; வன்செயலை வேரறுக்கும் வழிகள் காட்டுவனவாகவும், பன்னரிய கேடுகளை எதிர்த்துச் சாடுவனவாகவும், பாழ்ச் செயல்கள் புரிவோரைப் புரட்டிப் போடும் வல்லமை படைத்தனவாகவும் விளங்கிடக் காண்கிறோம்.

கடவூராரின் வெண்பாத் திறன்


“1965-இல் கரந்தைப் புலவர் கல்லூரியில் படிக்கும் பொழுதே வெண்பா எழுதும் பயிற்சி எனக்குக் கைவரப் பெற்றது… வெண்பா விரும்பியாக நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் இருந்து வருகின்றேன்” (என்னுரை, வெண்பா நானூறு, ப.6) என்னும் கவிஞர் கடவூர் மணிமாறனின் கூற்று வெண்பா யாப்பின் மீது அவர் கொண்டிருக்கும் ஆழ்ந்த பற்றினைப் பறைசாற்றும். அடக்கம் முதலாக வேற்றுமை ஈறாக ஐம்பது உட்தலைப்புக்களில் (ஒவ்வோர் உட்தலைப்பிலும் 8 வெண்பாக்கள் வீதம்) கடவூரார் எழுதிய நானூறு வெண்பாக்களின் தொகுப்பு ‘வெண்பா நானூறு’ (2014) ஆகும்.

வாழ்வில் ஒருவர் பின்பற்ற வேண்டிய முப்பெரும் அறங்களைத் தெள்ளிதின் உணர்த்தும் வெண்பா இது:

“அற்றார் அழிபசி தீர்த்தல் அறச்செயலாம்
பெற்றோரைப் பேணல் பெருங்கடனாம் – நற்றுணையாய்
நட்பை உறவை நயந்திடுதல் எஞ்ஞான்றும்
ஒட்பமெனக் கொள்வாய் உணர்ந்து”
(ப.15)

இவ் வெண்பாவின் முதல் அடியில் ‘அற்றார் அழிபசி தீர்த்தல்’ (குறள் 226) என்னும் பொருள் பொதிந்த வள்ளுவத் தொடரினைக் கடவூரார் பொன்னே போல் போற்றிக் கையாண்டிருப்பது நோக்கத்தக்கது. அற்றார் அழிபசி தீர்த்தல் (வறியவரின் கடும்பசியைத் தீர்த்தல்), பெற்றோரைப் பேணல், நட்பையும் உறவையும் நயந்திடுதல் என்னும் முப்பெரும் அறச் செயல்களை – பெருங்கடமைகளை – ஒருவர் தம் வாழ்வில் எஞ்ஞான்றும் – எப்பொழுதும் – உணர்ந்து – பின்பற்றி நடக்க வேண்டும் என்பது கடவூராரின் கருத்து.

வாழ்வில் எப்போதும் ஒருவருக்கு இன்பம் தருவனவாகக் கடவூரார் தம் வெண்பா ஒன்றில் பட்டியல் இடுவன வருமாறு:

“தன்மான நோக்கும் தடம்புரளா வாழ்வியலும்
இன்சொல் இயம்பலும் ஈதலும் – அன்புணர்வும்
ஒப்புரவாம் பண்பும் உயர்ந்தோர் அருந்துணையும்
எப்போதும் இன்பம் தரும்.”
(ப.19)

கடவூராரின் நோக்கில், உயிரனைய தன்மான நோக்கு, எந்நிலையிலும் தடம் புரளாத வாழ்வியல், இன்சொல் இயம்பல், வறியார்க்கு ஒன்று ஈதல், அன்புணர்வு, ஒப்புரவுப் பண்பு, உயர்ந்தோர் அருந்துணை என்னும் இவ்வேழு விழுமியங்களால் உருவாவது இன்ப வாழ்வு ஆகும்.

“திண்ணை தெருப்பேச்சு தேயும் வழிவகுக்கும்
எண்ணம் சிறக்க எழுச்சியுடன் – என்றும்
முயன்றால் அடைந்திடலாம் முன்னேற்றம்! – மண்ணில்
உயர்வதற்குத் தேவை உழைப்பு” 
  (ப.30)

என்பது கடவூரார் வெண்பா வடிவில் உழைப்புக்குச் சூட்டும் புகழாரம். ‘உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?’ என்னும் ஆன்றோர் வாக்கு இங்கே நினைவுகூரத் தக்கதாகும்.

கடவூரார் படைத்துள்ள வெண்பாவின் ஈற்றடிகள் அருமையும் அழகும் நயமும் ஓட்டமும் செறிந்தவை. அவர், ‘கணக்காக, நாற்றங்கால் போல நலம் சேர்க்கும் வெண்பாவின், ஈற்றடி தானே இனிப்பு?’ (ப.82) என வெண்பாவின் ஈற்றடியைப் போற்றி இசைப்பது ஈண்டு நினைவுகூரத் தக்கது இவ்வகையில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க அவரது வெண்பாக்கள் சிலவற்றின் ஈற்றடிகள் வருமாறு:

‘ஒழுக்கம் உயிரினும் மேல்’ (ப.37)
‘வெல்லத் தமிழால் விளம்பு’ (ப.55)
‘நல்லவர் நட்புறவை நாடு’ (ப.66)
‘பண்புடன் வாழப் பழகு’ (ப.80)
‘நெருப்பன்றோ பாரதியின் பா?’ (ப.86)
‘எண்ணத்தில் வெல்வோம் இனிது’ (ப.107)

இவை பழமொழிகள் போல அமைந்து பயில்வோர் நெஞ்சில் கல்வெட்டுப் போல் பதிவது நெற்றித் திலகம்.

சுரதாவின் உவமை போலச் சிறந்து பொலியும் கடவூரார்!


‘இனிய உதயம்’ இதழுக்கு அளித்த அண்மை நேர்காணலில் கடவூர் மணிமாறன் குறிப்பிட்டிருப்பது போல், ‘பாவேந்தர், பெருஞ்சித்திரனார். சுரதா போன்றோரின் பாட்டுத் தடங்களில் பயணிப்பதால் அவரது பாடல்கள் பெரும்பாலும் அறத்தை எடுத்துரைப்பனவாக, ஆளுமை செய்யும் கயமைப் போக்குகளை இடித்துரைப்பனவாக நலம் சேர்க்கும் நாட்டமுடன் வலம் வந்து கொண்டிருக்கின்றன’ (இனிய உதயம்: பிப்ரவரி 2019, ப.12). நிறைவாகக் குறிப்பிடுவது என்றால்,

“கடவூரார் எனச் சொன்னால் வருங்கா லத்தில்
           கடவூர்மணி மாறன்பெயர் சொல்ல வேண்டும்…
எல்லையிலாப் பெரும்புகழை என்போல் பெற்றே
           என்னுவமை போல்சிறந்து பொலிந்து வாழ்க!”


                                    (முனைவர் கடவூர் மணிமாறனின் வாழ்க்கைச் சுவடுகள், பக்.16-17)

என்னும் உவமைக் கவிஞர் சுரதாவின் உளமார்ந்த வாழ்த்து, இன்று உண்மை ஆகியுள்ளது. சுருங்கக் கூறின், எழுபதுக்கு மேற்பட்ட ஏற்றமிகு நூல்களை இயற்றித் தந்து இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய உலகில் தனித்தமிழப் பாவலராகத் தடம் பதித்துள்ளார் முனைவர் கடவூர் மணிமாறன் எனலாம்.


 

‘தமிழாகரர்’ முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.

 

 

 



 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்