‘நிசங்களைச் சுமந்து வலம் வரும் இளைய கவிஞர் ஸ்ரீதர் பாரதி!’

பேராசிரியர் இரா.மோகன்
 

ண்மையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் நடத்தப் பெற்ற புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் சிறந்த புதுக்கவிதை நூலுக்கான இலக்கிய விருது-2019, ஸ்ரீதர் பாரதியின் ‘கருப்பு வெள்ளைக் கல்வெட்டு’ (2017) தொகுப்பிற்கு வழங்கப் பெற்றது. இப் புதுக்கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் ஸ்ரீதர் பாரதி. இது இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு. ‘செவ்வந்திகளை அன்பளிப்பவன்’ (2015) என்பது இவரது முதல் கவிதைத் தொகுப்பு. ‘கைகளும் பிஞ்சு / கைகளிலும் பிஞ்சு / வெள்ளரி விற்கும் சிறுமி’ (ப.51) என இத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் கவிதை குழந்தைத் தொழிலாளியின் அவலத்தைக் குறுகத் தறித்த வடிவில் உருக்கமான மொழியில் பதிவு செய்துள்ளது. ‘இசங்களைச் சுமந்து நிற்கும் கூட்டத்தினூடே நிசங்களைச் சுமந்து வருகிறேன்!’ (உளியேந்தியவன் உரையாடுகிறேன், கருப்பு வெள்ளைக் கல்வெட்டு, ப.6) என்னும் ஒப்புதல் வாக்குமூலம் ஆழ்ந்திருக்கும் கவிஞரின் படைப்புள்ளத்தினை வெளிப்படுத்துவதாகும். ‘பரம்பரை வீடுகளுக்கும், பழுப்பேறிய புகைப்படங்களுக்கும், படியளந்த நிலங்களுக்கும், பாட்டன் பாட்டிகளுக்கும்’ கவிஞரின் ‘கருப்பு வெள்ளைக் கல்வெட்டு’ தொகுப்பு படையலாக்கப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

“குகனொடு ஐவரானோம் என்றான் ஸ்ரீராமன்;
திருநங்கையொடு மூவரானோம் என்பவன் ஸ்ரீதர் பாரதி”
(ப.57)

என்னும் கவிஞரின் கூற்று, அவரது தனித்துவத்தைப் பறைசாற்றும் கட்டளைக் கல் ஆகும்.

முந்தைய தாத்தாவின் காலம் போல – நேற்றைய தகப்பனின் காலம் போல – இன்றைய நம் காலம் இல்லை. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் சமுதாயத்தில் தலைகீழான மாற்றங்கள் ஏற்பட்டே வருகின்றன. ஸ்ரீதர் பாரதியின் ‘தலைமுறை’ என்ற கவிதை இவ்வுண்மையை ‘நச்’சென்ற மொழியில் எடுத்துரைக்கின்றது.

“தாத்தன் காலத்தில்
நதிக்கரையில் புதைத்தோம்;
தகப்பன் காலத்தில்
நதியிலேயே புதைத்தோம்;
எம் காலத்திலோ
நதியையே புதைத்தோம்”
     (ப.63)

நதிக்கரையில் புதைத்தோம் – நதியிலேயே புதைத்தோம் – நதியையே புதைத்தோம்:
அருமையான சொல் விளையாட்டு! அற்புதமான நடப்பியல் பதிவு!

தனக்கு நல்ல காலம் பிறக்குமா என அறிந்து கொள்வதற்காகக் கிளி சோதிடம் பார்க்கச் செல்கிறான் மனிதன். ஆனால், கவிஞரின் கண்ணோட்டத்தில் உண்மையில் யாருக்கு நல்ல காலம் பிறக்கின்றது தெரியுமா?

“ஜோசியக் கிளி
பறந்த நொடி
நல்ல காலம்”
(ப.66)

கூண்டில் இருந்து விடுபட்டு, வானில் சிறகடித்துப் பறந்த நொடியில் சோதிடக் கிளிக்கு நல்ல காலம் பிறந்ததாம்! வித்தியாசமான பார்வை இது!

குழந்தைகள் கள்ளங்கரவு இல்லாதவர்கள்; சூது வாது அறியாதவர்கள். ஸ்ரீதர் பாரதியின் ‘சமபந்தி போஜனம்’ என்னும் குறுங்கவிதை குழந்தைகளின் உள்ளப் பாங்கை உள்ளது உள்ளபடி படம்பிடித்துக் காட்டுகின்றது. கவிஞரின் சொற்களில் சிந்தனைக்கு விருந்தாகும் அக் கவிதை வருமாறு:

“‘எல்லோரும் சாப்பிட வாங்க!’
என்றழைத்தாள் அம்மா;
நாய்க்குட்டியையும்
பொம்மைகளையும்
பூனாச்சியையும்
உடன் அழைத்துச் சென்றாள்
சமத்து(வ)ப் பாப்பா” 
    (ப.42)

உண்மையில் நாய்க்குட்டியையும் பொம்மைகளையும் பூனாச்சியையும் சாப்பிட உடன் அழைத்துச் செல்லும் ‘சமத்துவப் பாப்பா’, கவிஞர் பாராட்டுவது போல், ‘சமத்துப் பாப்பா’ தான்! ‘காக்கை குருவி எங்கள் ஜாதி. நீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம்’ என்னும் கவியரசர் பாரதியாரின் முழக்கம் இங்கே நினைவுகூரத் தக்கது.

ஆறறிவு படைத்த மனிதனை மது படுத்தும் பாடு சொல்லி மாளாது; குடிப்பழக்கம் அவனது வாழ்வில் ஏற்படுத்தும் கேவலமும் சொல்லும் தரமன்று. ஸ்ரீதர் பாரதியின் ‘வாக்குறுதிகள்’ என்ற கவிதை இதனைச் சிதறு தேங்காயைப் போல போட்டு உடைக்கின்றது. அக்காவுக்கு ஃபேர் அண்ட் லவ்லி, அண்ணனுக்கு ஜாமெண்ட்ரி பாக்ஸ், தம்பிக்கு வீடியோ கேம்ஸ், தங்கச்சிக்கு க்ரீம் பிஸ்கட் என எல்லாம் வாங்கி வருவதாகச் சம்பள நாளின் காலையில் வாக்குறுதிகள் தந்து சென்ற அப்பாவின் நிலை இப்போது என்ன ஆயிற்று தெரியுமா? இதற்கான விடை கவிஞரின் நறுக்கான சொற்களில் இதோ:

“காலையில் வாக்குறுதிகள் தந்து சென்ற
அப்பா
வேட்டி அவிழ்ந்து கிடந்தார் -
வென்ற பிறகு தொகுதிப் பக்கம் திரும்பிப்
பார்க்காத வேட்பாளரைப் போல
நவீன பார் வசதி கொண்ட
மதுக்கடை சமீபத்தில்” 
  (ப.61)

‘தேர்தலில் வென்ற பிறகு தனது தொகுதிப் பக்கமே திரும்பிப் பார்க்காத வேட்பாளரைப் போல’ எனக் கவிஞர் இங்கே கையாண்டுள்ள உவமை அவரது கூர்மையான சமூக உணர்வுக்குக் கட்டியம் கூறி நிற்கின்றது.

‘நீறில்லா நெற்றி பாழ்’ என்றார் அவ்வைப் பிராட்டியார். ‘பாழ்’ என்ற தலைப்பில் படைத்த குறுங்கவிதையில் கவிஞர் ஸ்ரீதர் பாரதி அவ்வைப் பிராட்டியையே வம்புக்கு இழுக்கின்றார்.

“பாலாற்றில் மணல் களவு
நொய்யலில் சாயக்கழிவு
கிருதுமாலில் பன்றிக் குடித்தனம்
குண்டாற்றில் குப்பைக் கிடங்கு”

என ஆறுகள் இன்று எதிர்கொள்ளும் அவலங்களைப் பட்டியல் இட்டு விட்டு அவ்வைப் பிராட்டியிடம் கவிஞர் கூறும் வித்தியாசமான கருத்து இது:

“நீறில்லா நெற்றி மட்டுமா?
நீரில்லா ஆறும்
பாழ்தான் அவ்வைப் பிராட்டி!”
(ப.43)

உண்மையில் எதிர்பாராத திருப்பு முனைகளும் உச்சகட்டக் காட்சிகளும் ஏற்ற இறக்கங்களும் முரண்பாடுகளும் மனித வாழ்க்கையில் நிகழ்வது போல ஒரு புதினத்தில் கூட நிகழாது. கவிஞர் ஸ்ரீதர் பாரதியின் ‘அதே இடம் அதே கேள்வி’ என்ற கவிதை மனித வாழ்வின் மறுபக்கத்தினை நடப்பியல் பாங்கில் நயமுறச் சித்திரித்துள்ளது.

1. ‘துறவியாகித் தொண்டு செய்வேன்!’ என்ற துரைமுருகன், எம்பெருமான் முருகனைப் போல் இரண்டு கல்யாணம் முடித்து ‘செட்டில்’ ஆனானாம்!

2. ‘வக்கீல் ஆவேன்!’ என்ற வசந்தகுமார், வாய்தாவுக்குப் பேர் போன வக்கீலிடம் கேஸ் கட்டுகள் சுமக்கும் குமாஸ்தா ஆனானாம்!

3. ‘டாக்டர் ஆவேன்!’ என்ற தங்கப்பாண்டி, நர்சுகளே இல்லாத மாட்டு ஆஸ்பத்திரியில் கம்பவுண்டர் ஆனானாம்!

4. ‘இஞ்சினியர் ஆவேன்!’ என்ற இளஞ்செழியன், மூட்டைப் பூச்சிகள் நிறைந்த திரையரங்கம் ஒன்றில் மேனேஜர் ஆனானாம்!

5. ‘டீச்சர் ஆவேன்!’ என்ற சித்ரலேகா, கறிதோசை புகழ் முனியாண்டி விலாஸின் கல்லாவில் முதலாளியம்மா ஆனாளாம்!

6. ‘கலெக்டர் ஆவேன்!’ என்ற கீதா ராணி, ஜாக்கெட்டுகளுக்கு ஜன்னல் வைக்கும் லேடீஸ் டெய்லர் ஆனாளாம்!

7. ‘கல்லுக்குள் ஈரம் பாரதிராஜா மாதிரி டைரக்டர் ஆவேன்!’ என்ற பன்னீர்செல்வமோ ‘முந்தானை முடிச்சு’ பாக்யராஜ் மாதிரி வாத்தியார் ஆகி அதே பள்ளியில் அதே கேள்வியைக் கேட்டுக் கொண்டிருக்கிறானாம்! (ப.48)

கவிஞர் ஸ்ரீதர் பாரதியின் கண்ணோட்டத்தில் –

1. ‘ சலூன் எனப்படுவது… வெள்ளையனை இப்போதும் எதிர்க்கும் /
கருப்பர் தேசம்’ (ப.60)

2. ‘ சோற்றில் படுக்கையை / சோதனையிட்டுப் பார்த்ததில்
பதிந்து கிடந்தது – பாடுபட்டவனின் ரேகை’ (ப.63)

3. ‘அலைபேசி என்பது யாது?
அது வேறொன்றுமில்லை – லிகிதங்களின் சவப்பெட்டி’ (ப.29)

4. ‘சிசுக்கொலை’ - ‘விதைநெல்லில் / புதைந்தது /
பச்சை மண்’ (ப.65)

ஒற்றை வரியில் மதிப்பிடுவது ஏன்றால், இதுவரை எவரும் பேசாப் பொருளைப் பேசத் துணிந்ததும், பேசா முறையில் வெடிப்புறப் பேசி இருப்பதும் கவிஞர் ஸ்ரீதர் பாரதியின் தனித்தன்மைகள் எனலாம்.


 

‘தமிழாகரர்’ முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.

 

 

 



 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்