கண்ணதாசம்

பேராசிரியர் இரா.மோகன்


“பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன் மூவரும் இந் நூற்றாண்டில் தோன்றிய மக்கட் பெருங்கவிஞர்கள்… இந்நூற்றாண்டில் தமிழினத்தின் கவிதையுள்ளம் உடையாமல், ஊறுபடாமல் காத்துத் தந்த பெருமை இம் மூவர்க்கும் உண்டு” (இலக்கியச் சாறு, ப.131) என விதந்து மொழிகுவர் மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார். மேலும் அவர், பிறர் பின்பற்ற முடியாததாய் கண்ணதாசனிடத்தில் சிறந்து விளங்கும் தனியுயிர்ப் பண்பினை – தனிநீர்மையை அல்லது தனித்தன்மையை – ‘கண்ணதாசம்’ என்னும் பொருள் பதிந்த சொல்லினால் குறிப்பிடுவது மனங்கொளத் தக்கது. இனி, திரை உலகில் தடம் பதித்துள்ள சில பாடல்களின் வழிநின்று ‘கண்ணதாசம்’ வலியுறுத்தும் அடிப்படையான வாழ்வியல் உண்மைகளைக் குறித்து ஈண்டுக் காண்போம்.

1. ‘அடுத்தடுத்து முயன்றால் ஆகாதது எது?’


கவிஞர் கண்ணதாசன் திரைக்கு எழுதிய முதற்பாடல் 1948-ஆம் ஆண்டில் ‘கன்னியின் காதலி’ படத்தில் இடம்பெற்றது. அப்பாடலின் உயிர்ப்பான தொடக்க வரிகள் வருமாறு:

“கலங்தாதிரு மனமே – நீ / கலங்காதிரு மனமே – உன்
கனவெல்லாம் நனவாகும் / ஒரு தினமே!
கடினப்படாமல் ஏதும் / கைக்கு வராது
கஷ்டப்படுவார் தம்மை / கை நழுவாது
அடுத்தடுத்து முயன்றால் / ஆகாததேது? ஆகாததேது?”


                          (திரை இசைப் பாடல்கள்: இரண்டாவது தொகுதி, ப.23)

இங்கே ‘கலங்காதிரு மனமே’ என்றும், ‘உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே’ என்றும் நம்பிக்கை ஊட்டுவதோடு நின்று விடாமல், ‘கடினப்படாமல் – கஷ்டப்படாமல் – ஏதும் கைக்கு வராது’ என்னும் அடிப்படையான வாழ்வியல் உண்மையை உணர்த்தி, ‘அடுத்தடுத்து முயன்றால் ஆகாதது ஏது?’ என்று கேட்டு விடாமுயற்சிக்கு மகுடம் சூட்டி இருப்பது கவிஞர் கண்ணதாசனின் தனித்தன்மையைத் துலக்கிக் காட்டுகின்றது.

2. ‘வாழ நினைத்தால் வாழலாம்!’


‘மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும், எண்ணில் நல்ல கதிக்கு யாதும் ஓர் குறைவிலை’ என்று ‘குழந்தை ஞானி’ திருஞானசம்பந்தரும், ‘இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை’ என்று ‘தாண்டக வேந்தர்’ திருநாவுக்கரசரும் தத்தம் தேவாரப் பாடல்களில் அறுதியிட்டு உரைத்து பயில்வோர் நெஞ்சங்களில் நம்பிக்கையை ஆழமாக விதைத்தனர்; எதிர்மறையான எண்ணங்ளை விடுத்து, உடன்பாடாகச் சிந்திக்குமாறு மக்களைத் தூண்டினர். இவர்களின் அடிச்சுவட்டில் கவிஞர் கண்ணதாசனும் ‘பலே பாண்டியா’ திரைப்படத்திற்காக எழுதிய பாடல் ஒன்றில், ஓர் இளம்பெண்ணும் அவளது காதலனும் சேர்ந்து பாடுவது போல் உடன்பாட்டுச் சிந்தனை மிளிரும் பின்வரும் அழகிய வரிகளை அமைத்துள்ளார்:

“வாழ நினைத்தால் வாழலாம் / வழியா இல்லை பூமியில்?
ஆழக் கடலும் சோலையாகும் / ஆசை இருந்தால் நீந்தி வா!
பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
காட்சி கிடைத்தால் கவலை தீரும்
கவலை தீர்ந்தால் வாழலாம்!”


                  (திரை இசைப் பாடல்கள்: இரண்டாவது தொகுதி, ப.191)

பார்வை – பாதை – பயணம் – கதவு – காட்சி – கவலை – வாழ்வு என அந்தாதி அமைப்பில் இங்கே கவிஞர் தமது வாழ்வியல் சிந்தனைகளை நிரந்தினிது கூறிச் சென்றிருப்பது முத்தாய்ப்பு; இது அவரது முத்திரைப் பண்பும் கூட.

3. ‘கால மகள் கண் திறப்பாள்!’


கவியரசர் பாரதியாரின் அகதராதியில் ‘கவலைப்படுதலே கருநரகு’; ‘கவலையற்றிருத்தலே முக்தி’. பாரதியாரின் இக் கருத்தியலைப் பொன்னே போல் போற்றி கண்ணதாசனும ‘ஆனந்த ஜோதி’ திரைப்படத்திற்காக ஓர் அற்புதமான பாடலை இயற்றியுள்ளார்.

“காலமகள் கண் திறப்பாள் சின்னையா – நாம்
கண் கலங்கி கவலைப்பட்டு என்னையா?
நாலு பக்கம் வாசலுண்டு சின்னையா – அதில்
நமக்கு ஒரு வழி இல்லையா என்னையா?”


                         (திரை இசைப் பாடல்கள்: முதல் தொகுதி, ப.326)

எனத் தொடங்கும் அப்பாடல், கவலைப்படாமல் பொறுமையோடு நாம் நம் கடமையைச் செய்து வந்தால், ஒரு நாள் நிச்சயம் ‘கால மகள் கண் திறப்பாள்’ என்ற நம்பிக்கையை ஊட்டுகிறது.

சின்னச் சின்ன துன்பம் எல்லாம், எண்ண எண்ணக் கூடும்; ‘ஆவதெல்லாம் ஆகட்டுமே’ என்று இருந்தால் அமைதி தானாகப் பிறக்கும். ‘ஒரு பொழுதில் துன்பம் வரும், மறுபொழுதில் இன்பம் வரும்’: இதுதான் வாழ்க்கை. இதில் ஏக்கம் கொள்ளத் தேவை இல்லை; கண் கலங்கி கவலைப்பட்டு யாதொரு பயனும் இல்லை. ‘கல் இருக்கும் தேரைக்கு எல்லாம் கருணை தந்த தெய்வம், கனி இருக்கும் வண்டுக்கு எல்லாம் துணை இருந்த தெய்வம், நெல்லுக்கு உள்ளே மணியை, நெருப்பினிலே ஒளியை உள்ளுக்குள்ளே வைத்த தெய்வம் நம்மைக் கைவிட்டு விடுமா என்ன? நமக்கு இல்லையா என்ன?’ என அடுக்கடுக்காக வினவி நம்மை உடன்பாட்டு நோக்கில் சிந்திக்கத் தூண்டியுள்ளார் கவிஞர்.

4. ‘யாருக்கும் வாழ்வுண்டு; அதற்கொரு நாளுண்டு!’


உணர்ச்சியில் விளையாடும் உன்னதக் கவிச்சிங்கமான காளிதாஸ் ஒருமுறை ஊரார் பேசிய பழிச்சொற்களால் வாழ்வில் தளர்ச்சியுற்று, விரக்தியின் விளிம்பில் இருந்த போது – தாய் சொன்ன ஆறுதல் மொழி – மந்திர மொழி – இது:

“ வாழ்வென்றும் தாழ்வென்றும் வளமென்றும்


குறைவென்றும் சக்கரம் சுழல்கின்றது – அதில் தான்
சரித்திரம் நிகழ்கின்றது!
யாருக்கும் வாழ்வுண்டு அதற்தொரு நாளுண்டு
அதுவரை பொறுப்பாயடா! – மகனே என்
அருகினில் இருப்பாயடா!”


                    (திரை இசைப் பாடல்கள்: மூன்றாவது தொகுதி, ப.381)

இன்பம் x துன்பம், ஏற்றம் x இறக்கம், நன்மை x தீமை, உயர்வு x தாழ்வு, வளம் x குறைவு என்று காலச் சக்கரம் சுழன்று கொண்டே இருக்கின்றது. அதில் தான் சரித்திரம் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது. இதை இயல்பு என ஏற்றுக் கொண்டு, மனம் தளராமல், மூலையில் முடங்கி விடாமல், இமைப் பொழுதும் சோராமல் முயன்று கொண்டே இருப்பது தான் அறிவுடைமை; வெற்றி வாகை சூடுவதற்கான தாரக மந்திரம். “யாருக்கும் வாழ்வுண்டு; அதற்கொரு நாளுண்டு; அதுவரை பொறுமையாக இரு!” என்பது தான் கண்ணதாசம் வலியுறுத்தும் இன்றியமையாத அனுபவப் பாடம்.

5. கண்ணதாசனின் ‘கீதோபதேசம்’


“ஒரு சினிமாப் பாட்டு என் திசையை மாற்றியது. என் எதிர்காலத்தை நிர்ணயித்தது. நான் தொடர்ந்து போராடுவதற்கான தெம்பையும் தெளிவையும் என்னுள் தோற்றுவித்தது. சோர்ந்து போன சுவாசப் பையில் பிராண வாயுவை நிரப்பி, எனக்கு உயிர்ப் பிச்சை கொடுத்து, என்னைப் புதுமனிதனாக்கியது… அந்தப் பாடல், கண்ணதாசன் எனக்குச் செய்த கீதோபதேசமாகவே அமைந்தது” (நானும் இந்த நூற்றாண்டும், ப.214) எனக் ‘காவியக் கவிஞர்’ வாலி தமது தன் வரலாற்று நூலில் உளமாரப் பாராட்டிப் பேசும் பாடல் – ‘சுமை தாங்கி’ படத்தில் இடம்பெற்று தமிழ்த் திரை இசைப் பாடல் வரலாற்றில் தடம் பதித்த கண்ணதாசனின் தத்துவப் பாடல் இதுதான்:

“மயக்கமா கலக்கமா / மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா?”

எனத் தொடங்கும் அந்தப் பாடல், வாழ்வில் இறுதி வரைக்கும் அமைதியும் நிம்மதியும் காணப்படுவதற்கான அடிப்படையான உண்மைகளை ஆற்றல்சால் மொழியில் எடுத்துரைக்கின்றது.
‘வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்; வாசல் தோறும் வேதனை இருக்கும்’. சரி, இந்த வேதனையில் இருந்து விடுபடுவது எப்படி?

வாழ்க்கை என்றால் அடுத்தடுத்து, அணிவகுத்துத் துன்பங்கள் வரத் தான் செய்யும். ஒப்புக் கொள்ள வேண்டிய அனுபவ உண்மை தான் இது! அதற்காக, வந்த துன்பம் எது என்றாலும் வாடி நின்றால் ஓடி விடுமா?

இங்கே தான் கண்ணதாசன் என்ற தத்துவ வேந்தர் வருகை தந்து நமக்கு நல்வழி காட்டுகிறார்:

“எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்!”


எதையும் தாங்கும் இதயம் பெற்று, வாழ்வில் இறுதி வரைக்கும் அமைதி இருப்பதற்கான வழிவகையினைக் கண்டு கொண்டாயிற்று. இனி, நடக்கும் வாழ்வில் மனிதன் நிம்மதியைப் பெறுவது எப்படி? இதோ, கவிஞரின் ‘நறுக்-சுருக்’ பாணியிலான மறுமொழி: “ஏழை மனதை மாளிகையாக்கி, இரவும் பகலும் காவியம் பாடு! நாளைப் பொழுதை இறைவனுக்கு அளித்து, நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு!” முத்தாய்ப்பாக, கவிஞர் அறிவுறுத்தும் வாழ்வியல் பாடம் இதுதான்:

“உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு!”


                      (திரை இசைப் பாடல்கள்: இரண்டாவது தொகுதி, பக்.324-325)

நமக்கும் மேலே உள்ள ஒருசிலரைப் பார்த்து ஏக்கம் கொள்வதிலோ பொறாமைப் படுவதிலோ எள்ளளவும் பயன் இல்லை; மாறாக, நமக்கும் கீழே உள்ள கோடிக்கணக்கான ஏழை எளிய மக்களை நினைத்துப் பார்த்தால் நிம்மதி தானே நம்மைத் தேடி வந்து சரண் அடையும்! “உன்னிடம் இல்லாத ஒரு பொருளின் மேல் ஆசை வைக்காதே. உன்னிடம் இருக்கும் சிறந்த பொருள்களை நினைத்துப் பார்த்து மகிழ்ச்சி அடைவாய்” (தமிழில்: ராஜாஜி, ஆத்ம சிந்தனை, ப.60) என்னும் மார்க்கஸ் அரேலியஸின் மணிமொழி ஈண்டு நினைவுகூரத் தக்கது.

6. ஆண்டவன் கட்டளை ஆறு


‘ஆறு மனமே ஆறு, ஆண்டவன் கட்டளை ஆறு’ எனத் தொடங்கும் தத்துவப் பாடலைக் ‘கண்ணதாசம்’ என்ற கருத்தியலின் சாரம் எனச் சிறப்பித்துக் கூறலாம். அதில் அவர் ‘தேர்ந்து மனிதன் வாழும் வகைக்குத் தெய்வத்தின் கட்டளை ஆறு’ எனப் பட்டியல் இட்டிருப்பது குறிப்பிட்டது. அவற்றை நிரலே ஈண்டுக் காணலாம்:

1.‘ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி’


என்பது ஆண்டவனின் முதல் கட்டளை ‘அமைதிக்கான வழி, வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லாமல் இருப்பது’ என்பது இக் கட்டளை உணர்த்தும் உண்மை. ‘உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார், உறவு கலவாமை வேண்டும்’ என்னும் வள்ளலாரின் வாக்கு இங்கு நினைவுகூரத் தக்கது.

2. ‘இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம்
இறைவன் வகுத்த நியதி’


என்பது இரண்டாவது கட்டளை. ‘இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள், துன்பம் உறுதல் இலன்’ (629) – ‘மகிழ்ச்சியில் மகிழ்ச்சி அடையாதவன், கவலையில் கவலை அடையான்’ என்னும் வள்ளுவர் வாய்மொழியின் புதுக்கோலமே இக்கட்டளை.

3. ‘உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்’


என்பது மூன்றாவது கட்டளை. ‘உள்ளதைச் சொல்வேன் சொன்னதைச் செய்வேன், வேறொன்றும் தெரியாது, உள்ளத்தில் இருப்பதை வார்த்தையில் மறைக்கும் கபடம் தெரியாது’ (திரை இசைப் பாடல்கள்: முதல் தொகுதி, ப.297) எனப் பிறிதொரு திரைப் பாடலிலும் இக் கட்டளையை வேறு சொற்களில் விரிவாகக் கூறியுள்ளார் கண்ணதாசன்.

4. ‘நிலை, உயரும்போது பணிவு கொண்டால்
உயிர்கள் உன்னை வணங்கும்’


என்பது நான்காவது கட்டளை. ‘பணியுமாம் என்றும் பெருமை’ (978) – ‘என்றும் பணிதல் பெருமையின் இயல்வு’ – என்னும் ‘குறுகத் தறித்த குறள்’ இங்கே ஒப்புநோக்கத் தக்கது.

5. ‘ஆசை, கோபம், களவு கொள்பவன்
பேசத் தெரிந்த மிருகம்’


என்பது ஐந்தாவது கட்டளை. ஆசை, கோபம், களவு கொள்பவன் பேசத் தெரிந்த மனிதனாக இருந்தாலும், அவன் விலங்காகவே கருதப்படுவான் என்பது கவிஞரின் கருத்து.

6. ‘அன்பு நன்றி கருணை கொண்டவன்
மனித வடிவில் தெய்வம்’


என்பது ஆண்டவனின் ஆறாவது கட்டளை. அன்பு, நன்றி, கருணை கொண்டவன் மனித வடிவில் காட்சி அளித்தாலும், அவன் ‘வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்’ (குறள்: 50) உயர்நிலையை அடைவான் என்பது கவிஞரின் முடிந்த முடிபு.

இத் தத்துவப் பாடலின் முடிவில் கண்ணதாசன் மனித மனத்தினை மூன்றாகப் பாகுபடுத்துகின்றார்: 1. கள்ள மனம், 2. பிள்ளை மனம், 3. வெள்ளை மனம்.

“மிருகம் என்பது கள்ள மனம் – உயர்
தெய்வம் என்பது பிள்ளை மனம் – இந்த
ஆறு கட்டளை அறிந்த மனது
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்!”

                       (திசை இசைப் பாடல்கள்: முதல் தொகுதி, பக்.311-312)

ஒற்றை வரியில் இரத்தினச் சுருக்கமாகக் கூறுவது என்றால், ‘கள்ள மனத்தை ஒழித்து, பிள்ளை மனத்தைப் பெற்று, ஆண்டவன் வாழும் வெள்ளை மனத்துடன் உயர்ந்து விளங்குக!’ என்பதே கண்ணதாசன் மனித குலத்திற்கு வழங்கியுள்ள செய்தி ஆகும்.

7. ‘மனதைப் பார்த்துக்க நல்லபடி!’


‘உலகம் நம்மைப் பற்றி என்ன சொல்லும்? நாலு பேர் என்ன நினைப்பார்கள்’ என எண்ணாத எண்ணம் எல்லாம் எண்ணி எண்ணி, மனம் மயங்கி, கலங்கி, குழம்பி, தவித்து நிற்பதிலே பயன் ஒன்றும் இல்லை; ‘மனம் ஒரு குரங்கு’ என மனத்தைப் பழித்தும் நடக்கப் போவது எதுவும் இல்லை. உலகத்தைப் பற்றிக் கவலைப்படாமல், மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன கருதுவார்களோ என்று எண்ணிக் கொண்டிராமல், உயர்ந்த, உடன்பாடான, நல்ல, சிறந்த எண்ணங்களை நம் மனத்தில் வளர்த்துக் கொண்டு, மனம் காட்டிய வழியில் நடக்க முற்பட்டால் போதும், வாழ்க்கை இன்ப வரவாகும். ‘அருணோதயம்’ என்ற திரைப்படத்திற்காக எழுதிய பாடல் ஒன்றில் கவிஞர் கண்ணதாசன் இன்றைய மனிதனுக்குப் கூறும் அறிவுரை இதுதான்:

“ உலகம் ஆயிரம் சொல்லட்டுமே / உனக்கு நீதான் நீதிபதி!
மனிதன் எதையோ பேசட்டுமே / மனதைப் பார்த்துக்க நல்லபடி!”


               (திரை இசைப் பாடல்கள்: மூன்றாவது தொகுதி, ப.304)

கவிஞர் கண்ணதாசன் பெரிதிலும் பெரிதாக நினைப்பது – வேண்டுவது எல்லாம் – ஒன்றே ஒன்று தான். அது என்ன என்பதை அவரது சொற்களிலேயே இங்கே காணலாம்:

“எல்லோர்க்கும் வேண்டும் நல்ல மனது
கள்ளமின்றிப் பிள்ளை கொண்ட வெள்ளை மனது!
பொல்லாத மனதுக்கு நிம்மதி இல்லை
பூப்போல மனதுக்கு சஞ்சலம் இல்லை
களங்கமில்லை ஒரு கபடமில்லை
மயக்கமில்லை ஒரு வஞ்சமில்லை!”


               (திரை இசைப் பாடல்கள்: மூன்றாவது தொகுதி, ப.311)

கண்ணதாசனின் கருத்தியலில் எல்லோருக்கும் வேண்டுவது நல்ல மனம்; கள்ளம் இல்லாத பிள்ளை மனம்; அது பூப் போன்ற வெள்ளை மனம். அது சூதுவாது அறியாதது; கள்ளங்கபடம் இல்லாதது; சஞ்சலம், சூழ்ச்சி, மயக்கம், வஞ்சகம் சேராதது.

8. ‘அச்சம் என்பது மடமையடா!’


“போற்றுபவர் போற்றட்டும்; புழுதி வாரித்
தூற்றுபவர் தூற்றட்டும்; தொடர்ந்து சொல்வேன்!
ஏற்றதொரு கருத்தை எனது உள்ளம் என்றால்
எடுத்துரைப்பேன்; எவர் வரினும், நில்லேன்! அஞ்சேன்!”


                   (கண்ணதாசன் கவிதைகள்: முதல், இரண்டு தொகுதிகள், ப.103)

என்னும் ஒப்புதல் வாக்குமூலம் அஞ்சாமையே வடிவான கண்ணதாசனின் ஆளுமைப் பண்பினை அடையாளம் காட்ட வல்லதாகும். ‘அறம் செய விரும்பு’ என ஔவைப் பெருமாட்டி தம் ஆத்திசூடியைத் தொடங்கி இருக்க, கவியரசர் பாரதியார் ‘அச்சம் தவிர்!’ எனத் தம் ‘புதிய ஆத்திசூடி’யைத் தொடங்கி இருப்பது நோக்கத்தக்கது. பாரதியாரின் வாக்கினைப் பொன்னே போல் போற்றும் வகையில் கண்ணதாசன் தம் திரை இசைப் பாடல்களில் அஞ்சாமைப் பண்பினை உயர்த்திப் பிடித்துள்ளார்.

“அச்சம் என்பது மடமையடா / அஞ்சாமை திராவிடர் உடமையடா!
ஆறிலும் சாவு, நூறிலும் சாவு / தாயகம் காப்பது கடமையடா!”


கண்ணதாசனின் கண்ணோட்டத்தில், கனக விசயரின் முடித்தலை நெரித்து கல்லினை வைத்தும், இமய வரம்பினில் மீன் கொடி ஏற்றியும் இசைபட வாழ்ந்தவர்கள் பண்டைத் தமிழ் வேந்தர்கள்; கருவினில் வளரும் மழலையின் உடலில் தைரியம் வளர்ப்பவள் தமிழன்னை; மாபெரும் வீரர் மானம் காப்போர் சரித்திரம் தனிலே நிற்பவர் ஆவர் (திரை இசைப் பாடல்கள்: இரண்டாவது தொகுதி, பக்.7-8).

‘என் அண்ணன்’ படத்திற்காக எழுதிய பிறிதொரு புகழ் பெற்ற திரைப் பாடலிலும்,

“அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா - நீ
ஆற்று வெள்ளம் போல எழுந்து ஓடு ராஜா!”

என்றும்,

“கொடுமையைக் கண்டுகண்டு பயம் எதற்கு? - நீ
கொண்டு வந்தது என்னடா மீசை முறுக்கு!”


என்றும்,

“ரெண்டில் ஒன்று பார்ப்பதற்குத் தோளை நிமிர்த்து - அதில்
நீதி உன்னைத் தேடி வரும் மாலை தொடுத்து!”


என்றும் பாடி இயை தலைமுறையினருக்கு எழுச்சியும் நம்பிக்கையும் நெஞ்சுரமும் நேர்மைத் திறமும் ஊட்டியுள்ளார் கண்ணதாசன்.

9. ‘வீட்டுக்கு நடுவில் சொக்கம் உண்டு!’


‘அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை’ எனத் தேற்ற ஏகாரம் தந்து இல்வாழ்க்கையின் ஏற்றத்தினைப் பறைசாற்றுவார் வள்ளுவர் பெருமான். ‘இல்லறமே நல்லறம்’ என்ற கருத்தினை ‘இல்லறம் அல்லது நல்லறம் அன்று’ என எதிர்மறை வாய்பாட்டில் எடுத்துரைப்பார் ஔவைப் பெருமாட்டியார். ‘நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்’ என்பது பாவேந்தர் பாரதிதாசனின் மணிமொழி. வாழையடி வாழை என வரும் இச் சான்றோர்களின் வழி நின்று கவிஞர் கண்ணதாசனும் தம் திரை இசைப் பாடல்களில் இல்லறத்தின் மேன்மையையும் இல்லாளின் மாண்பினையும் குழந்தைச் செல்வத்தின் அருமையினையும் ஒல்லும் வகையில் எல்லாம் சிறப்பித்துப் பேசியுள்ளார்.

‘காதல் என்பது என்ன?’ என்னும் வினாவுக்குத் தம் திரை இசைப் பாடல் ஒன்றில், ‘அது கண்கள் பிடிக்கும் வாடை!’ என விடை தந்திருக்கும் கவிஞர், அடுத்து, ‘இல்லறம் என்பது என்ன?’ என்ற கேள்விக்கு அதே பாடலில், ‘அது இருவர் அமைத்திடும் கோயில்!’ (திரை இசைப் பாடல்கள்: மூன்றாவது தொகுதி, ப.135) எனப் பதில் அளித்திருப்பது சிறப்பு.

‘சொர்க்கம் எங்கே இருக்கிறது?’ என்ற வினாவுக்குத் ‘தேரோட்டம்’ என்ற திரைப்படத்திற்காக எழுதிய பாடல் ஒன்றில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நிகழும் உரையாடல் வடிவில் கவிஞர் தந்திருக்கும் பொருள் பொதிந்த விடை இது:

“ஆண்: தங்கக் கட்டி போலே மனைவியுண்டு!
பெண்: சிங்கக் குட்டி போலே மழலையுண்டு!
ஆண்: வீட்டுக்கு நடுவே சொர்க்கம் உண்டு!”


                              (திரை இசைப் பாடல்கள்: மூன்றாவது தொகுதி, ப.244)

பிறிதொரு திரைப் பாடலில் ‘நல்ல மனைவி நல்ல பிள்ளை நல்ல குடும்பம் தெய்வீகம்’ என ஒரு வாய்பாடு போல குடும்பத்தின் உயர்வினைப் போற்றிப் பாடுவார் கவிஞர்.

“அவ்வப்போது வரும் கோப தாபங்களை நீக்கி விட்டுப் பார்த்தால், ஒரு இந்துக் குடும்பம், இரண்டாயிரம் கோயில்களுக்குச் சமமாகக் காட்சியளிக்கும்” (அர்த்தமுள்ள இந்து மதம்: மூன்றாம் பாகம், ப.39) என்னும் கண்ணதாசனின் ‘அட்சர லட்சம்’ பெறத் தக்க அனுபவ உண்மை – அமுத மொழி – இங்கே கருத்தில் கொள்ளத் தக்கதாகும்.

10. ‘இறைவன் திகழும் வீடு’


கவிஞர் கண்ணதாசனின் கடவுள் கொள்கை அருமையானது; அழகானது; இயல்பானது; எளிமையானது. ‘சரஸ்வதி சபதம்’ திரைப்படத்திற்காக எழுதிய பாடல் ஒன்றில் அவர் இதனைத் தெளிவுபடுத்தியுள்ளார்; ‘எங்கே?’, ‘இங்கே’ ‘அங்கே!’ என்ற மூன்றே மூன்று சொற்களை மட்டுமே வைத்துக் கொண்டு ஒரு சுவையான சொல் விளையாட்டினை நடத்திக் காட்டியுள்ளார்.

“ தெய்வம் இருப்பது எங்கே? / அது இங்கே, வேறெங்கே?
தெளிந்த நினைவும் திறந்த நெஞ்சும் / நிறைந்ததுண்டோ அங்கே!”


சங்கச் சான்றோர் கடுவன் இளவெயினனார் முருகப் பெருமானிடம் வேண்டும் வரம் இது:

“யாஅம் இரப்பவை
பொருளும் பொன்னும் போகமும் அல்ல; நின்பால்
அருளும் அன்பும் அறனும் மூன்றும்
உருள்இணர்க் கடம்பின் ஒலிதா ராயோ!”

விழுமிய இவ் வரத்தின் சாரத்தினைக் கண்ணதாசன் ஒரு திரைப் பாடலில் எளிமைப்படுத்தித் தந்துள்ளார்:

“பொருளும் பொன்னும் நிறைந்தவர் நெஞ்சம் / பொய்யில் வளர்ந்த காடு!
எண்ணும் எழுத்தும் நிறைந்தவர் நெஞ்சம் / இறைவன் திகழும் வீடு!”


                    (திரை இசைப் பாடல்கள்: முதல் தொகுதி, பக்.3-4)

இறைவன் திகழும் வீடு என எண்ணும் எழுத்தும் நிறைந்தவர் நெஞ்சத்தினைச் சுட்டிய கண்ணதாசன், ஆடை, அணிகலன், ஆடம்பரங்கள், ஆண்டவன் விரும்புவது இல்லை எனவும், அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணும் ஆலய வழிபாடு இல்லை எனவும் கூறுவது கருத்தில் கொள்ளத்தக்கது. நிறைவாக, இசையில், கலையில், கவியில், மழலை மொழியில் இறைவன் உண்டு என்றும், நன்றி நிறைந்தவர் – நன்மை புரிந்தவர் – பழமை நிறைந்தவர் – பாசம் நிறைந்தவர் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் தெய்வம் இருப்பதாகவும் கவிஞர் மொழிவது குறிப்பிடத்தக்கது.

‘ஆலயம்’ திரைப்படத்திற்காக எழுதிய பிறிதொரு பாடலிலும் உண்மை இறைவன் எங்கே இருக்கிறான், அவன் யாரிடம் காணப்படுகிறான் என்பதற்கான விடையினைத் தெள்ளத் தெளிவாகப் புலப்படுத்தியுள்ளார் கவிஞர்:

“உழைக்கும் கைகள் எங்கே / உண்மை இறைவன் அங்கே!
அணைக்கும் கைகள் யாரிடமோ / ஆண்டவன் இருப்பது அவரிடமே!”


                          (திரை இசைப் பாடல்கள்: முதல் தொகுதி, ப.3)

நிறைவாக, வையத்துள் வாழ்வாங்கு வாழ விழைவோர் – மண்ணில் நல்ல வண்ணம் வாழ நினைப்போர் – யாவரும் நாளும் பின்பற்ற வேண்டிய தாரக மந்திரம் இதுவே:

“கற்க கசடறக் கண்ணதாசம் கற்றபின்
நிற்க அதற்குத் தக!’
 

 

‘தமிழாகரர்’ முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.

 

 

 



 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்