ஈழத்து நக்கீரர்

அனலை ஆறு இராசேந்திரம்

மாவைப் பெருநகரிற் சேவற் கொடியோனான திருமுருகன் கோவில் கொண்டுள்ளான். அங்கு, அன்றலர்ந்து பொன்னிறத்தனவாய்த் திகழும் கொன்றை மலர்களைத் தேனுக்காகக் குடைந்திடும் மெல்லிய சிறகுகளையுடைய தும்பிகள், யாவரும் விரும்பும் பண்களை இசைக்கும். நெருக்கமான அலைகளையுடைய கடலிடத்தே நீரை மொண்ட கரிய முகில்களைக் கண்டு மயில்கள் மகிழ்வுடன் ஆடும். அதுகண்டு, தென்றல் வீசும். அவ்விளவேனிற் காலத்தே குயில்கள் மெய்வருந்தி வாடும். விண்தொட உயர்ந்த தருக்கள் நிறைந்த சோலைக்கண் அழகிய காந்தள் மலர்கள் முறுக்கவிழ்ந்து இதழ் விரித்து நிற்கும். இத்தகு பெருவளமுடைய மாவை நகரில் வீற்றிருக்கும் ஒலிக்கும் திருவடிகளையுடைய முருகப் பெருமானை இதுவரை கண்டிலார் தம் இரண்டு கண்களும் புண்களே. அவரை எண்ணிடாதார் நெஞ்சங்கள் கற்களே. கையெடுத்து, அப்பெருமானை இறைஞ்சிலார் உடம்புகள் அனைத்தும் நடமாட வல்ல மரங்களே.

பொன்றிகழ் கொன்றைப் புதுமலர் குடைந்திடு
     மென்சிறை அறுபதம் விரும்புபண் பாட
மண்டுதிரைத் தென்கடல் மாந்திய மைம்முகில்
     கண்டுபெரு மயிலினம் களிப்புட னாடச்
சிறுகால் எறிதரும் சீரிள வேனில்
     மகிழ்வுறூஉம் குயில்கள் வருந்தி மெய்வாட
விண்டலத் தோங்கிய தண்டலை மாட்டு
     நலந்திகழ் காந்தள் நனைமுறுக் கவிழும்
மலிபெரும் செல்வ மாவையம் பதிவாழ்
     ஒலிகழற் றிருத்தா ளொருபெரு முருகனைக்
கண்டிலார் கண்ணிணை புண்ணே என்றும்
     கருதிலார் நெஞ்சகம் கல்லே பரிவுடன்
இறைஞ்சிலார் யாக்கை இயங்குறு மரமே.

                                                                         (மாவை – மும்மணி மாலை)

மலையும் மலை சார்ந்த நிலமுமாகிய குறிஞ்சி நிலவழகை உவந்து, ஆங்கு உறைபவனாதலின் முருகனுக்குக் 'குறிஞ்சிக் கிழவோன்' என்னுமொரு பெயருமுண்டு. இயற்கை அழகு கொலுவீற்றிருக்கும் இடம்தொறும் உறையும் அவன் பெருமையை, அழகிய இயற்கைக் காட்சிகளினூடு அழைத்துச் சென்று காட்டி மகிழும் புலவர் திறன் நெஞ்சை அள்ளுவதாகும். மருதநிலப் பகுதியாகிய மாவிட்டபுர நகரைக் குறிஞ்சி நிலப் பகுதியோ எனக் கற்போர் மயங்குமாறு மேலே செல்லோவியமாய்த் தீட்டித் தந்தவர் நம் ஈழத்துப் புலவர் செவ்வந்திநாத தேசிகர் அவர்கள் ஆவார்.

முத்தமிழ் வல்ல வித்துவசிரோமணி கணேசையர் அவர்களின் மாணாக்கர்களுள் ஒருவரான தேசிகர் அவர்கள் 'மாவை மும்மணி மாலை' என்னும் பெயரில் முருகப்பெருமான் மேல் யாத்த சிற்றிலக்கியத்தில் இடம்பெறும் அகவற் பாக்கள் யாவும் செறிவும் தெளிவும் அழகும் இனிமையும் மிக்க திருமுருகாற்றுப்படை அடிகளை நினைவூட்டி நிற்கும் பெற்றியனவாகும். இயற்கையைச் சித்தரித்துக் காட்டுவதிலும் புலவர் நக்கீரருக்குச் சளைத்தவர் அல்லர்.

நன்னீர்ப் பொய்கைத் தாமரைப் பூக்களில் அன்னங்கள் அமர்ந்து துயிலும் அழகை நூலில் புலவர் படம் பிடித்துக்காட்டும் திறத்தைப் பாருங்கள்.

'உறைவெண் சங்க வொண்புனற் பழனத்து
முட்டாட் டாமரை முழுநெறிப் போதிடை
வெண்பறைச் செங்கழன் மென்னடை எகினக்
கவின்றி டொழுதி கண்படை பொருந்தும்....'


இவ்வடிகள்,

'தோயும் திரைகள் அலைப்பத்
     தோடார் கமலப் பள்ளி
மேய வகையில் துஞ்சும்
     வெள்ளை அன்னம் காண்மின்'


என்னும் சிந்தாமணிப் பாடல் அடிகளையன்றோ நினைவு மீட்டுகின்றன.

அடுத்து, மருத நிலப்பகுதியில் அமைந்த தோட்டமொன்றிற்கு நம்மை அழைத்துச் செல்கிறார் புலவர். வானளவு உயர்ந்த கமுக மரங்களின் கீழ் அவற்றினின்று வீழ்ந்த முதிர்ந்த காய்கள் குவிந்து கிடந்ததையும், இனிய கனிகள் நெருங்கி அமைந்த குலைகளையும் செழிப்பான இலைகளையுமுடைய வாழைமரங்களுக்கு வாய்க்கால் வழியே நீரெடுத்துத் தொழிலாளர் பாய்ச்சுவதையும் காட்டி மகிழ்கிறார் அவர்.

கரும்புயல் திரிதரூஉங் காயத் தோங்கிய
விருந்தாட் கொழுமடற் றிருந்து பைம்பூகத்து
முற்றிய செங்காய் முள்நெகிழ்ந் துதிர்த்துப்
புக்குத் திரளாய்ப் பொலிந்து கிடந்தன.
தீங்கனி மிடைந்த செங்குலைக் கோழிலை
அரம்பை வளர்க்குமா றமைந்த கால்வாயால்
பனிப்புனல் பாய்ச்சும் பருந் தொழிலாளர்


எடுத்தாண்ட பாடல் 'முருகனை இயற்கையே போற்றுகிறது. மானிடா, நீ இன்னும் அவனைப் போற்றாது வாணாளை வீணாளாக்குகிறாயே' என்னும் பொருள் தெறிக்க அமைந்திருப்பது புலவர் பெருந்திறனுக்குத் தக்கதோர் எடுத்துக்காட்டாகும். கண்ணும் நெஞ்சமும் யாக்கையும் தந்த இறைவனை அவைகொண்டு பார்த்தும், எண்ணி நெகிழ்ந்தும், வலம்வந்து போற்றாவிடின், அவ்வுறுப்புக்களாற் பயன் யாதுமில்லையன்றோ! ஆதலின் அவற்றைச் சிந்திக்கும் திறனற்ற புண்ணென்றும் கல்லென்றும் மரமென்றும் சொன்னார் புலவர்.

'வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்
தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனை
சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே
வீழ்த்தவா வினையேன் நெடுங்காலமே'

என்னும் அப்பர் தேவாரத்தின் பொருள் தேசிகர் பாடலின் ஈற்று மூன்று அடிகளிலும் அமைந்து இன்பம் பயக்கிறது.

வல்லான் கைப் பம்பரம் மணலிலும் ஆடுமாறுபோல சங்கப் புலவர்கள் கையில் அகவற்பா, படித்தோர் வியக்கும் ஒரு பாவகையாக எழுந்து நின்றது. அது ஓர் ஆற்றல் மிகு கருவியென நிறுவிக் காட்டிய சான்றோர்களில் நக்கீரர் ஒருவர். அவர் தந்த அகப்புறப் பாடல்களும் திருமுருகாற்றுப் படையும், அவர் கைவண்ணத்தில் அகவற்பா பெற்ற உயர்ந்த நிலைக்கு எடுத்துக்காட்டாய் விளங்குவனவாம். ஈழத்து நக்கீரர் எனப் போற்றத்தக்க வகையில் அகவற் பாவைக் கையாண்டு 'மாவை மும்மணி மாலை' தந்தார் புலவர் செவ்வந்திநாத தேசிகர் அவர்கள். அவர் படைப்புக்கள் அனைத்தும் உரியமுறையில் ஆவனசெய்ய வேண்டும். அவர் தமிழின் சிறப்புக்கள் வெளிக்கொண்டுவரப்படுவது ஈழத் தமிழிலக்கியத்திற்குப் பெருமை சேர்ப்பதாகும்.



analaiaraj@hotmail.com