எம்.ஜி.ஆரால் மலர்ந்த புதிய சமுதாயம்
 
முனைவர் செ.இராஜேஸ்வரி


1965 இல் இந்தியத் திரையரங்குகளிலேயே மிகுந்த வரவேற்புப் பெற்ற பாடல் என்ற பெருமையைப் பெற்ற ‘நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்’ என்ற பாட்டு புதிய சமுதாயம் மலரும் என்பதற்கான நம்பிக்கையை விதைத்த முக்கியமான பாடல் ஆகும். அந்தப் பாடலில் வரும்
எதிர்காலம் வரும் என் கடமை வரும் இந்தக் 'காக்கைகள் கூட்டத்தை ஒழிப்பேன்' என்ற வரிகள் அப்போது பகுத்தறிவுக்கு எதிராகப் பேசி வந்த காங்கிரஸ் கட்சியின் ஆட்சியைக் குறித்ததாகப் புரிந்து கொள்ளப்பட்டன.

காக்கைகள் கூட்டம்


இப்பாடலை எழுதிய போது முதலில் பாடலாசிரியர் வாலி ‘காக்கைகள் கூட்டத்தை ஒழிப்பேன்’ என்று தான் எழுதியிருந்தார். பாடலும் பதிவானது. இதே வரியுடன் சிலோன் ரேடியோவில் இப்பாடல் அக்காலங்களில் ஒலிபரப்பாகும். பின்னர் விடுதலைப்புலிகளின் போராட்ட காலத்தில் ஸ்ரீ லங்காவில் இப்பாட்டு வானொலியில் ஒலி பரப்புவது தடை செய்யப்பட்டுவிட்டது.

1965இல் எங்க வீட்டுப் பிள்ளை படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்ட போது தணிக்கையாளர்கள் ‘காக்கைகள் கூட்டத்தை’ என்ற வரியில் உள்ள காக்கை என்பது காமராஜரை மறைமுகமாகக் குறிக்கின்றது என்று காரணத்தால் அந்த வரியை அனுமதிக்க மறுத்துவிட்டனர். அப்போது சில பத்திரிகைகள் காமராஜரின் நிறத்தைக் குறிப்பிட்டு காக்கை என்று கருத்துப்படம் போட்டு வந்தன. உடனே அந்த வரி ‘இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்’ என்று மாற்றப்பட்டது. இப்போது கூட்டம் என்பது காங்கிரசையும் கூட்டத்தின் ஆட்டம் என்பது காங்கிரஸின் ஆட்சியையும் ஒழிப்பதாக அமைந்தது. அதற்கு அடுத்தபடியாக

பொது நீதியிலே புதுப் பாதையிலே வரும்
நல்லோர் முகத்திலே விழிப்பேன்


என்ற வரிகள் அடுத்து அண்ணாவின்நல்லாட்சி மலரும். திமுகவின் ஆட்சி வரும்; என்ற எண்ணத்தை மக்களுக்கு ஏற்படுத்தியது. மேலும்

ஒரு தலைவன் உண்டு அவன் கொள்கை உண்டு
அதை எப்போதும் காத்திருப்பேன்
எதிர்காலம் வரும் என் கடமை வரும்
இந்தக் காக்கைகள் கூட்டத்தை ஒழிப்பேன்


என்ற வரிகள் இன்றைக்கு இருக்கும் ஜாதி , மத பேதம் உள்ள ஆட்சி முறை ஒழிக்கப்பட்டு சமத்துவம் உள்ள புதிய சமுதாயம் மலரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தின.

கொடுக்குற காலம் நெருங்குகிறது


முதன் முதலாக எம் ஜி ஆர் ‘பேன்ட் சர்ட் கிராப்-விக்’ pants,shirt, crop wig] ஆகியவற்றுடன் நடித்த திருடாதே [2௦-3-1961] படத்தில்

‘கொடுக்கிற காலம் நெருங்குவதால் இனி
எடுக்கிற அவசியம் இருக்காது’


என வரும் வரி இனிவரும் எதிர்காலத்தில் ஒருவருக்கொருவர் கொடுத்து மகிழ்வார்கள் தவிர ஒருவர் பணத்தை அடுத்தவர் பறிக்கும் நிலைமை இனி வராது என்று திருட்டு, கொள்ளை, சுரண்டல், அபகரித்தல் போன்ற நிலைமைகளுக்கு இனி இடமில்லை என்று மக்களுக்கு நன்னம்பிக்கை ஊட்டியது.

புதிய சமுதாயம் மலர்ந்தது


எம் ஜி ஆர் தன படங்களில் சொல்லி வந்த திமுக ஆட்சி மலர்ந்தது. மக்களின் எதிர்பார்ப்பு அதிகமாயிற்று. அண்ணா முதலமைச்சர் ஆனார். தேர்தலுக்கு முன்பு ரூபாய்க்கு மூன்று படி அரிசி தருவோம் என்றனர் . ஆட்சிக்கு வந்ததும், ‘மூன்று படி இலட்சியம் ஒரு படி நிச்சயம்’ என்றனர். ஒளி விளக்கு [20-9-1968] படத்தில் இடம்பெற்ற ‘நாங்க புதுசா கட்டிக்கிட்டா ஜோடி தானுங்க’ என்று எம் ஜி ஆரும் ஜெயலலிதாவும் குறவன் குறத்தியாக மாறு வேடத்தில் வந்து பாடும் பாடல் திமுக ஆட்சியில் புதிய சமுதாயம் மலர்ந்திருப்பதைக் காட்டும் பாடல் ஆக அமைந்தது.

நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி தானுங்க என்ற பாடலில் திமுக ஆட்சி மலர்ந்து விட்டதன் சிறப்புக்கள் விரித்துரைக்கப்பட்டன. அப்போதைய திமுக ஆட்சியில் குடிசை மாற்று வாரியத்தின் மூலமாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு ஏழை மக்கள், தெருவோரவாசிகள் குடியமர்த்தப்பட்டனர். ஒரு ரூபாய்க்கு ஒரு படியரிசி திட்டமும் சில இடங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது.

படியரிசி கிடைக்கிற நேரத்திலே நாங்க
படியேறி பிச்சை எடுக்க போவதில்லே
குடிசை எல்லாம் வீடாகும் நேரத்தில – நாங்க
தெருவோரம் குடியேறத் தேவையில்லே


என்ற பாட்டு வரிகளில் திமுக ஆட்சியின் புதிய திட்டங்கள் இடம்பெற்றன.

திமுக ஆட்சியில் அண்ணாவின் மறைவுக்குப் பின்பு 1969இல் கலைஞர் பொறுப்பேற்றதும் ஊழல் மலிந்து விட்ட காரணத்தால் எம்ஜிஆர் படங்களிலும் பாடல்களின் கருத்துக்கள் மாறி விட்டன.

அடிமைப்பெண்


திமுக ஆட்சியின் போது எடுக்கப்பட்ட அடிமைப்பெண் [1-5-1969] படத்தில்

ஏமாற்றாதே ஏமாற்றாதே
ஏமாறாதே ஏமாறாதே எனத் தொடங்கும் பாடலில்
இந்த இருட்டுக்கும் பார்க்கின்ற விழியிருக்கும்
சுவருக்கும் கேட்கின்ற காதிருக்கும்
சொல்லாமல் கொள்ளாமல் காத்திருக்கும்
தக்க சமயத்தில் நடந்ததை எடுத்துரைக்கும்


என்ற வரிகள் மக்களுக்கு கருணாநிதியின் ஆட்சியின் மீதான வெறுப்புணர்வை சுட்டிக் கட்டின. ஆனாலும் அவரது ஆட்சியில் இலஞ்சம் தலை விரித்தாடியது. அவர் யார் பேச்சையும் கேட்கவில்லை.

தோன்றத்தான் போகிறது சம உரிமை சமுதாயம்
மறையத்தான் போகிறது தனிமனிதன் அநியாயம்
மலர்த்தான் போகிறது எங்களது புது வாழ்வு
மாறத்தான் போகிறது மனிதா உன் விளையாட்டு


என்ற வரிகள் திமுகவின் கொடுங்கோல் ஆட்சி மறையும் என்று கட்டியம் கூறின. .இப்படத்தை தொடர்ந்து வந்த நம் நாடு [7-11-1969] எம் ஜி ஆரின் அரசியல் வருகைக்கு அடிக்கல் நாட்டியது..

எம் ஜி ஆர் – கருணாநிதி பூசல்


எம்ஜிஆர் கருணாநிதி கருத்து வேறுபாடு தோன்றி வளர்ந்து வந்த காலத்தில் 1971 இல் கருணாநிதி தன்னுடைய மகன் மு.க.முத்துவை கதாநாயகனாக நடிக்க வைத்து ஒரு படம் எடுக்கத் திட்டமிட்டார். எம் ஜி ஆருக்குப் போட்டியாக தனது மகனைக் கொண்டு வந்தார். எம் ஜி ஆருக்கு சற்றும் உடன்பாடில்லாத சாராயக் கடைகளைத் திறந்தார். இதனால் இருவருக்கும் இடையில் இருந்த பனிப்போர் அம்பலமாயிற்று. இந்நிலைமை அவரது அடிமைப் பெண் [1-5-1969] மற்றும அதனைத் தொடர்ந்து வெளி வந்த நம் நாடு [7-11-1969] படங்களில் தென்பட்டது.

வாங்கய்யா வாத்தியாரையா


‘நான் அரசியலில் நேரடியாக இறங்கலாமா என்பதை என் ரசிகர்களின் மூலம் அறிய விரும்புகிறேன்’ என்று சொல்லியே நம் நாடு படத்தை தயாரிக்கும்படி நாகி ரெட்டியிடம் எம் ஜி ஆர் தெரிவிக்கிறார். அடிமைப்பெண் படத்துக்கு வைத்திருந்த கால் ஷீட்களை தருகிறார். ஒரே மாதத்தில் நம் நாடு படம் முடிந்தது. திரையரங்கில் மக்களின் வரவேற்பைப் பார்த்துவிட்டு நாகி ரெட்டியை கட்டிப்பிடித்து ‘என் ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொண்டனர்’ என்று மகிழ்ச்சி தெரிவிக்கிறார்.

வாங்கய்யா வாத்தியார் ஐயா
வரவேற்க வந்தோம் ஐயா
ஏழைகள் உங்களை நம்பி
எதிர்பார்த்து நின்றோம் ஐயா


என்ற பாடல் வரிகள் எம் ஜி ஆரை அரசியலுக்கு வரவேற்றன. எம் ஜி ஆர் ஊர்களுக்குப் போகும் வேளைகளில் இந்த பாட்டு அவருக்கான வரவேற்புப் பாடலாக அமைந்தது. அவர் வருகிறார் என்று அறிவித்தவுடன் இந்தப் பாடலைத் திரும்ப திரும்ப ரசிகர் மன்றங்கள் தொண்டர் அமைப்புகள் ஒலிபரப்புவது வழக்கம். அவர் அந்த இடத்தை விட்டுத் தாண்டும் வரை இதே பாட்டுத் தான் திரும்ப திரும்ப ஒலிபரப்பப் படும்.

கலைஞரின் எங்கள் தங்கம் எம் ஜி ஆர்


அரசியலுக்கு வருவதில் அவசரப்படாமல் பொறுமை காத்து வந்த எம் ஜி ஆர் அடுத்து மு. கருணாநிதியும் அவர் மைத்துனர் முரசொலி மாறனும் தாம் கடனில் மூழ்குவதாகச் சொல்லி அவரிடம் ஒரு படம் நடித்துத் தருமாறு கேட்ட போது எம் ஜி ஆரும் ஜெயலலிதாவும் பணம் வாங்காமல் நடித்துக் கொடுத்தனர். அந்தப் படம் கலைஞரின் எங்கள் தங்கம் [9-10-70]. அதில் ‘நான் செத்துப் பிழச்சவன்டா’ என்ற பாடலில் திமுக வரலாற்றையும் அண்ணா கருணாநிதி பற்றிய தகவல்களை உள்ளடக்கியதாகவும் இருந்தது. இதில் கருணாநிதியின் இந்தி எதிர்ப்புப் போராட்டத் தகவலை வாலியிடம் சொல்லிச் சேர்க்கச் சொன்னவர் எம் ஜி ஆர்.

வாலி ‘நான் அளவோடு ரசிப்பவன்’ என்ற வரியை ஒரு காதல் பாடலுக்கு எழுதிவிட்டு அதன் அடுத்த வரிக்காக யோசித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த மு. கருணாநிதி ‘எதையும் அளவின்றிக் கொடுப்பவன்’ என்று சொல்லிவிட்டுப் போனார். இந்தச் சம்பவத்தை கேட்டு எம் ஜி ஆர் அகமகிழ்ந்தார்.

ஒரு வாலுமில்லே நாலு காலுமில்லே


மு.கருணாநிதியின் மகன் மு.க முத்து அறிமுகமான படத்தின் முதல்நாள் படப்பிடிப்பை எம்ஜிஆர் வந்து தொடக்கி வைத்தார். அப்போது எம்ஜிஆர் இதயவீணை ஷூட்டிங்கில் இருந்தார். இதயவீணை படம் முடிவதற்குள் எம் ஜி ஆரைக் கட்சியிலிருந்து விலக்கி விட்டனர். உடனே எம் ஜி ஆர் அந்த படத்தில் ஒரு புதிய பாட்டைச் சேர்த்து அன்றையக் காலகட்டத்தில் அவருடைய நிலை என்ன திமுகவின் நிலை என்ன என்பதை மக்களுக்கு இந்தப் பாடல் மூலமாகவே உணர்த்தினார்.

ஒரு வாலும் இல்லை நாலு காலும் இல்லை
சில மிருகங்கள் இருக்குது பூமிக்குள்ளே இந்தக்
காட்டுக்குள்ளே உள்ள மிருகமெல்லாம்
அதைக்காட்டிலும் எத்தனையோ தேவலை


என்ற பாடல் வரிகள் நாளிதழ்களில் முழுப்பக்க இதயவீணை விளம்பரத்தில் இடம்பெற்றன. இப்பாட்டில் தனது அதிரடி அரசியல் வரவை உணர்த்தும் வகையில்

‘உண்மை என்பது ஊமையாகவே
கொஞ்ச காலம் தான் இருக்கும்

என்று இந்தப் பாட்டில் இடம்பெற்ற வரிகள் எம்ஜிஆர் ரசிகர்கள் பதற்றப்பட வேண்டாம்; இன்னும் சிறிது காலத்தில் அவர்களுக்குப் புது வாழ்வு பிறக்கும்; திமுகவின் ஊழல் ஆட்சி ஒழிக்கப்படும் என்பதை சூட்சுமமாகப் புலப்படுத்தின. இதனால் எம்ஜிஆர் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்தனர்.

ரசிகர்கள் தொடங்கிய எம் ஜி ஆர் கட்சி


எம் ஜி ஆரைக் கட்சியை விட்டு நீக்கிய உடனே ரசிகர்கள் எம்ஜிஆரின் அலுவலகங்களின் வாயிலில் திரண்டு இருந்து அவரை உடனடியாக அவர் புதிய கட்சி ஒன்றை தொடங்கி திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்ற விருப்பத்தை உணர்த்தினர். இவர்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டு போவதால் எம்ஜிஆர் அண்ணா திமுக என்ற கட்சி தோன்றுவதைக் காலம் தாழ்த்த முடியவில்லை. சீக்கிரமாகக் கட்சியைத் தொடங்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்திற்கு ஆளானார். மாநிலத்தில் பல ஊர்களில் தாமரை படத்துடன் புதிய கொடியை ஏற்றி கட்சியை ரசிகர்கள் தொடக்கிவிட்டனர்.

பாடல்களை வீணாக்க விரும்பாத எம் ஜி ஆர்


ஏற்கெனவே தனது படங்களில் பாடல்களில் தான் பயன்படுத்திய உடை, சொற்கள், பின்புலம், போன்ற தொடர்பியல் உத்திகளையும் புதிய சமுதாயம் மலரும் என்ற உள்ளடக்கத்தையும் வீணாக்க விரும்பாத எம் ஜி ஆர் திமுக வின் கட்சி நிறங்களை வைத்து ஒரு வெண்மையையும் கட்சியின் தலைவர் அண்ணாவின் உருவத்தையும் இணைத்து புதிய கொடியை உருவாக்கினார். இது தான் எம் ஜி ஆரின் புத்திசாலித்தனம். இதனால் இவர் ஒரே கல்லில் இரண்டு கனி அடித்தார். இப்போது இருக்கும் திமுக உண்மையான திமுகவே அல்ல. இது ஊழல் மிகுந்த கருணாநிதியின் கட்சி. தன்னுடையது தான் அண்ணா ஆரம்பித்த திமுக என்று பொருள் படும்படி அண்ணா திமுகவை தொடங்கினார். இதன் மூலமாக தனது திரைப்படங்களையும் அரசியலையும் ஒன்றாக இணைத்தார். முதல்வரான பின்பும் ஜெயலலிதாவை போலப் ‘எனது ஆட்சி’ என்று சுட்டாமல் தந்து ஆட்சியை அண்ணாவின் ஆட்சி என்றே குறிப்பிட்டார். அவரையே தலைவராகக் கொண்டு தன்னை பொது செயலாளர் என்று அறிவித்துக் கொண்டார்.

அண்ணா திமுக கட்சிக்குப் பின் வந்த பாடல்கள்


அண்ணா திமுக ஆரம்பித்த பிறகு எடுக்கப்பட்ட படங்கள் அவற்றில் இடம் பெற்ற பாடல்கள் திமுகவின் ஊழல் ஆட்சியின் லஞ்ச லாவண்யத்தை வன்மையாகவும் தீவிரமாகவும் கண்டித்தன. இது தன்னுடைய சுய வெற்றி சார்ந்த விஷயம் என்பதால் எம்ஜிஆர் அண்ணா திமுக கட்சியைத் தோற்றுவித்த பிறகு எடுக்கப்பட்ட படங்களில் தன்னுடைய எதிர்ப்பை தீவிரமாகக் காட்டினார்.

நாளை உலகை ஆள வேண்டும்


உழைக்கும் கரங்கள் படத்தில் ‘நாளை உலகை ஆள வேண்டும் புரட்சி மலர்களே’ என்று தொடங்கும் பாட்டில் மக்களுக்குத் தன்னுடைய கட்சி ஆட்சிக்கு வந்தால் அது திமுகவைப் போல லஞ்ச லாவண்யம் உடைய கட்சியாக இருக்காது; நல்லாட்சியை தரும் இலட்சியக் கொள்கை கொண்ட கட்சியாக இருக்கும் என்ற கருத்துக்களை ரசிகர்களின் மத்தியில் பொதுமக்களின் மனதில் பதிய வைத்தார்.

திமு கவில் இருந்த போது எழுதிய பாடல்களை விடக் கூடுதல் அக்கறையுடன் பாடல்கள் எழுதப்பட்டன.

ஏர் பூட்டி தோளில் வைத்து இல்லாமை வீட்டில் வைத்து
போராடும் காலம் எல்லாம் போனதம்மா
எல்லோர்க்கும் யாவும் உண்டு என்றாகும் காலம் இன்று
நேராக கண்ணில் வந்து தோன்றுதம்மா
விடியும் வேளை வரப் போகுது
தர்மம் தீர்ப்பைத் தரப் போகுது

என்ற வரிகள் ‘இனி நடக்கும்’ என்று சொல்வதை விட ‘நடந்துவிட்டது’ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றன.

இந்தியாவுக்கு சுதந்திரம் வருவதற்கு முன்பே மகாகவி பாரதியார்,

விடுதலை விடுதலை விடுதலை
பறையருக்கும் இங்கு தீய புலையருக்கும் விடுதலை


என்று பாடியது போல அண்ணா திமுக ஆட்சிக்கு வந்து நல்லாட்சி மலர்வதற்கு முன்பே எம்ஜிஆர் இது போன்ற ஒரு பொற்காலம் தோன்றப் போகிறது; தோன்றிவிட்டது; நல்லாட்சி மலர்ந்து விட்டது என்ற ஒரு கருத்தை உருவாக்கும் வகையில் தன் படங்களில் பாடல்களின் மூலமாக ஒரு எதிர்பார்ப்பைத் தோற்றுவித்தார். விடியும் வேளை வரப்போகுது தருமம் தீர்ப்பை தரப்போகுது என்ற வரிகள் நீதி என்றைக்கும் தோற்றுப் போகாது.

‘நம்புதல் என்னும் மாயாஜால் கொள்கை’


பாரதியாரின் விடுதலை விடுதலை விடுதலை என்ற பாட்டை ஆராய்ந்த பாரதியார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை தலைவர் முனைவர் தே. ஞானசேகரன் சிகாகோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஹைலர் மாத்யுஸ் என்பவரின் நம்புதல் என்னும் மாயாஜாலக் கொள்கையைச் [theory of Magical belief] சுட்டிக்காட்டி விளக்குவார். இந்த நம்பிக்கையை எம் ஜி ஆர் மக்களுக்கு தனது பாடல்களின் மூலமாக வழங்கினார். நம்பிக்கை மக்கள் மனதில் ஒரு மாயாஜாலத்தை ஏற்படுத்தியது. அவர்கள் நம்பிக்கை நல் வாழ்வாக மலர அவரது ஆட்சியும் சேர்ந்து மலர்ந்தது. இதனால் மக்கள் எம் ஜி ஆர் மீது கொண்டிருந்த நம்பிக்கை வீண் நம்பிக்கையாக போலி நம்பிக்கையாக போய் விடாமல் உண்மை ஆயிற்று. எண்ணமே வாழ்வு என்பதற்கு நிகரான ஹைலர் மேத்யுசின் கொள்கை உண்மையாயிற்று.

தர்மம் அழியாது


தர்மம் சற்று காலதாமதமாகச் செயல்பட்டாலும் அது நிரந்தரமான வெற்றியை அளிக்கும் போன்ற கருத்துக்கள் பண்டைய பாரம்பரிய இதிகாசங்கள் காப்பியங்கள் நீதி நூல்களில் சொல்லப்பட்டுள்ளன. அவற்றை எம் ஜி ஆர் எளிமையாகத் தனது பாடல்களில் மக்களுக்கு எடுத்துக் கூறினார். இலக்கியங்களும் காப்பியங்களும் எடுத்துரைத்த நல்ல காலத்தை எங்களுடைய கட்சி உங்களுக்குத் தரப் போகிறது என்று உத்தரவாதம் அளிக்கும் வகையில் அவர் பாடலாசிரியர்களிடம் இருந்து தனது படத்துக்கான பாடல்களை எழுதி வாங்கினார். இப்பாடல்களைக் கேட்ட மக்கள் அவர் மீது ஏற்கனவே கொண்டிருந்த அன்பு மதிப்பு ஆகியவற்றோடு மிகுந்த நம்பிக்கையும் அவர் மீது வைத்து அவரைத் தலைவராக தேர்ந்தெடுத்து அவர் காலம் வரை அவரையே தங்களது தலைவராக ஏற்றுக்கொண்டிருந்தனர். அவராக மக்களை விட்டு, இந்த உலகத்தை விட்டுப் போகும் வரை மக்கள் அவரை அப்பதவியில் இருத்தி வைத்திருந்தனர்.

நம்பிக்கை பலித்தது


எம் ஜி ஆருடைய கடைசிப் படமான மதுரை மீட்ட சுந்தரபாண்டியன், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையை சோழ மன்னனிடம் இருந்து மீட்டு தந்த சுந்தரபாண்டியனைப் பற்றியதாகும். அகிலன் எழுதிய கயல்விழி என்ற நாவலை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட படம் ஆகும். இப்படம் தமிழகத்தை ஊழல் மிகுந்த திமுகவிடமிருந்து மீட்டுத் தருவதைக் குறிப்பிடும் குறியீட்டுப் படமாகும். இந்தப் படத்தில் பாண்டியன் என்பது அண்ணா திமுக கட்சி தலைவர் எம் ஜி ஆரையும் மதுரை என்பது தமிழகத்தையும் குறித்தது. சோழன் என்பது தஞ்சைப் பகுதியை சேர்ந்த கருணாநிதியைக் குறித்தது.

தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை
தன்மானம் ஒன்றே தான் எங்கள் செல்வம்


எனத் தொடங்கும் பாடல் இலங்கைத் தமிழர்களின் வேண்டுகோளுக்கு இணங்க எழுதப்பட்டதாக இருந்தாலும் அது தமிழகத்துக்கும் பொருந்தியதாகவே அமைந்திருந்தது.

தமிழகத்துக்கும் ஈழத்துக்கும் விடுதலை


எம்ஜிஆர் படத்தின் பாடல்கள் படத்தில் வரும் தனிமனிதனின் கதைக்கும் படம் பார்க்கும் ரசிகர்களின் சொந்த வாழ்க்கைக்கும் பொதுஜன சமூகத்திற்கும் ஏற்றதாகவே அமைக்கப்பட்டிருக்கும். அது போல இந்தப் பாடலும் ஈழத்தமிழர்களின் விடுதலைக்கும் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கும் பொருந்துவதாக எழுதப்பட்டிருந்தது.

ஒற்றுமையால் பகைவர்களை ஓட வைப்போம்
உழைப்பாலே நம் நாட்டை உயர்த்தி வைப்போம்

என்ற வரிகள் மக்கள் ஒன்று சேர்ந்து பகைவர்களை விரட்டி அடித்து நல்லவர்களை ஆட்சியில் அமர்த்த வேண்டும்; என்பதை உணர்த்திற்று. நல்லவர்கள் கையில் நாட்டைக் கொடுக்க வேண்டும் என்ற கருத்து தமிழகத்திற்கும் இலங்கைக்கும் பொதுவாக அமைந்தன.

‘கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்
கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்
புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்
பொதுவுடமை சமுதாயம் மலர்ந்திட வேண்டும்

என்ற வரிகள் நாட்டுக்காக கொள்கையோடு செயல்பட வேண்டும் தியாகங்கள் செய்ய முன்வர வேண்டும் என்ற வரி தனி ஈழத்துக்காக உயிர்த் தியாகம் செய்த பல விடுதலைப் புலிகளைப் பாராட்டும் வகையில் அமைந்தன. தமிழகத்தில் திமுகவின் அராஜகப் போக்கால உயிரிழந்த எம் ஜி ஆர் ரசிகர்கள் எம் ஜி ஆர் கட்சிக்காக இன்னுயுரைத் தியாகம் செய்த பூலாவாரி சுகுமாரன் போன்ற அண்ணா திமுக தியாகிகளின் தியாகத்தைப் பாராட்டியது.

கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்

கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும் என்ற வரி இந்த தியாகங்களுக்குப் பலன் உண்டு என்ற கருத்தை மக்கள் மனதில் உணர்த்தும் வகையில் எழுதப்பட்டிருந்தது. ‘கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்’ என்ற வரி செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தேசியக்கொடி பறக்க விடப்பட்டாலும் கூட அங்கு நடக்கப் போவது நமது ஆட்சி என்பதை நமது கொடி என்ற வார்த்தை உணர்த்தியது. இதுவும் கூட ஏற்றுக் கொள்ளப்படுமா என்ற சந்தேகத்தில் எம்ஜிஆர் இதனை மகரக்கொடி என்று மாற்றக் கூடாதா; மகரக்கொடி என்றால் அது மீன்கொடி பாண்டியனுக்கு உரியது என்று பொருள்படுமே அனுமதி கிடைத்து விடும் எனப் பாடலாசிரியர் முத்துலிங்கத்திடம் சொல்லியபோது ‘நான் தணிக்கை குழுவினர் இடம் கேட்டு விட்டேன் அவர்கள் நமது கொடி என்று இருக்கலாம்’ என்று சொல்லி அனுமதி வழங்கி விட்டனர் என எம்ஜிஆரிடம் தெரிவித்தார்.

எம் ஜி ஆர் மகிழ்ந்து முத்துலிங்கத்தைத் தட்டிக்கொடுத்து அருகில் இருப்பவரிடம் ‘பார்த்தீர்களா, நான் முத்துலிங்கத்தை என் அருகில் ஏன் வைத்திருக்கிறேன்’ எனச் சொல்லி பாராட்டினார். இங்கு நமது கொடி என்பது அண்ணா திமுகவின் கொடியைக் குறிக்கிறது. அண்ணா திமுக ஆட்சிக்கு வந்து அதனுடைய கொடி பறக்க வேண்டும் என்ற கருத்தை மக்கள் மனதில் பதிய வைக்கும் விதமாக இவ்வரிகள் எழுதப்பட்டன.

பாடல்கள் காட்டிய புதிய பூமியும் புதிய வாழ்வும்


எம் ஜி ஆர் 1958 முதல் 1977 வரை சுமார் இருபது வருடங்கள் எம்ஜிஆர் தன் பாடல்களின் மூலமாக தொடர்ச்சியாக மக்களுக்கு ‘புது வாழ்வு பிறக்கும்; புதிய பூமி தோன்றும்’ என்ற புத்துணர்ச்சியை ஊட்டிக் கொண்டே வந்தார். அவர் அளித்த நம்பிக்கை அவர்களுக்கு எம்ஜிஆரை ஒரு அவதார புருஷராக அநாதை இரட்சகராக உருவகப்படுத்தியது. அவர்கள் எம்ஜிஆரைப் பற்றிக் கொண்டிருந்த எண்ணம் இன்று வரை சரியான எண்ணமே என்ற கருத்தினைத் தொடர்ந்து உறுதிப் படுத்திக் கொண்டே இருக்கின்றது.

எம்ஜிஆரும் ஆட்சிக்கு வந்த பிறகு தன் காரை தொடர்ந்து ஒடி வரும் ஏழை மக்களை பார்த்து ‘இந்த மக்களுக்காக நான் என்ன செய்யப் போகிறேன்’ என்று வருந்தி கண்ணீர் விட்டு அழுது ஒவ்வொரு நிமிடமும் அவர் மக்களின் நன்மைக்காக அவர்களுக்கான நல்ல திட்டங்களை தருவதற்காகவே தன்னுடைய வாழ்நாளின் ஒவ்வொரு நிமிடத்தையும் செலவழித்தார். இதனை வி ஐ டி பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் விசுவநாதன் அவர்கள் தனது பேட்டியில் எடுத்துரைத்தார். ‘எப்போதும் மக்களின் நலனைப் பற்றியே சிந்திப்பவர் எம்ஜிஆர்’ என்றார். மக்களும் எம்ஜிஆர் நமக்கு நன்மையை மட்டுமே செய்வார் என்று நம்பினர். இந்த பரஸ்பர நம்பிக்கை இன்று வரை அழியாமல் மாறாமல் மறையாமல் இருந்து வருகிறது என்பதை அவருடைய 102 வது பிறந்த நாள் விழா கொண்டாட்டங்கள் இவ்வுலகுக்கு தெரிவிக்கின்றன.

எம்ஜிஆர் உலகப் பேரவையின் தோற்றமும் பிரான்ஸ், இங்கிலாந்து, மலேசியா, அமீரகம் போன்ற நாடுகளில் அதன் செயல்பாடும் எம்ஜிஆரை ஒரு சர்வதேச மனிதனாகக் கொண்டு செல்லும் நோக்கம் வெற்றி பெறப் போகிறது என்பதையும் தெற்றென உணர்த்துகிறது.


                                                                                                         

முனைவர் செ.இராஜேஸ்வரி

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்