நாலடியார் நவிலும் கல்விச்சிறப்பு

முனைவர் நா.அமுதாதேவி


முகவுரை:

நீதிநூல்கள் பலவும் வாழ்வியல் அறங்களை சுட்டிக்காட்டுவதாகவே அமைந்துள்ளது. தனி மனிதன் தன் வாழ்வியல் ஒழுக்க முறைகளைத் தகவமைத்துக் கொள்ள சில நியதிகளைப் பின்பற்றி வாழ்தல் வேண்டும். அவ்வாறு தம்மை நல்வழிப்படுத்திக் கொள்ள சில நூல்கருத்துக்களை அறிந்து அதன்படி நம் வாழ்வை நெறிப்படுத்துவதும் அவசியமாகின்றது. ஓருவன் தம் வாழ்வில் கிடைத்த மிகப்பெரும் செல்வமாகக் கருதுவது கல்விச் செல்வமாகும். எவராலும் அழிக்க முடியாத செல்வமாகக் கருதுவது கல்விச் செல்வமாகவும் திருடமுடியாத செல்வமாகவும் கல்வி திகழ்கிறது. இத்தகைய சிறப்புடைய கல்விச் செல்வத்தின் இன்றியமையாமையை நாலடியார் எவ்வாறு பதிவிடப்பட்டுள்ளது என்பதனை ஆய்வதாக இக்கட்டுரையின் பொருண்மை அமைகின்றது.

நாலடியார்


சமண முனிவர்களால் இயற்றப்பட்டதாக கூறப்படும் இந்நூல் பாடல்களைப் பதுமனார் என்பவர் தொகுத்து இவ்வுலகிற்கு வழங்கினார். நாலடியாரின் காலம் கி.பி.300க்கும், கி.பி.750 க்கும் இடைப்பட்டது எனலாம். முனைவர் கு.பரமசிவன் அவர்கள் பதிவுசெய்துள்ளார். நாலடியார் என்னும் இந்நூல் 400 வெண்பாக்களினால் உருவாக்கப்பட்டுள்ளது. உலகப் பொதுமறையான திருக்குறளுக்கு அடுத்த நிலையில் வைத்துப் போற்றப்படும் அறநூல் நாலடியார் ஆகும். நாலடிநானூறு என்ற பெயரும் இந்நூலுக்கு உண்டு. வேளாண்வேதம் எனவும் இந்நூல் பெயர் பெறுகிறது. திருக்குறளைப் போன்றே அறத்துப்பால், பொருள்பால், காமத்துப்பால் என மூன்று பெரும் பிரிவுகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. பொருட்பால் என்னும் அதிகாரத்தில் கல்வி என்னும் பொருண்மையைச் சுட்டக்கூடிய பத்து பாடல்களின் வாயிலாக கல்வியின் சிறப்பினை ஆய்வதாக இக்கட்டுரையின் பொருண்மை அமைகின்றது.

கல்வியே அழகு


'குஞ்சியழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல நெஞ்சத்து
நல்லம் யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு' 
   ( பா.எண்.131)

கூந்தல் அழகும் ஆடைகளால் தம்மை அழகுபடுத்திக் கொண்டு அதனால் வரும் அழகும் மஞ்சள் பூசிய முகத்து அழகும் அழகல்ல நம் உள்ளத்தில் நல்ல பல நூல் கருத்துக்களைக் கற்றுக் கொண்டு நடுவுநிலையையோடு பிறருக்குக் கல்வி கற்றுத் தருகின்ற கல்வியே அழகாகும்.

அறியாமையைப் போக்குவது


'இம்மை பயக்குமால் ஈயக்குறைவின்றால்
தம்மை விளக்குமால் தாம் உளராக் கேடின்றால்
எம்மை உலகத்தும் யாம் காணோம் கல்விபோல்
மம்மர் அறுக்கும் மருந்து'  
 ( பா.எண்.132)

கல்வி என்னும் இச் செல்வமானது இவ்வுலகில் உள்ள நன்மைகள் பலவற்றையும் தரக் கூடியது. பிறருக்குக் கொடுப்பதால் சுருங்காது. அறிவாலும் புகழாலும் தம் புகழை உலகிற்கு விளங்கச் சொல்லும் ஆற்றல் பெற்றது. நாம் உயிரோடு வாழும் வரை நம் கல்வியும் அழிந்து போகாமல் நிலைத்து வாழும். நம்மிடம் உள்ள அறியாமை என்னும் இருளை அகற்றுவதற்கு சிறந்த மருந்தாக கல்வி அமைந்துள்ளது. எனவே இப்பேறு பெற்ற கல்வியை முயன்று நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

விளைநிலம்


'களர் நிலத்தில் பிறந்த உப்பினைச் சான்றோர்
விளை நிலத்து நெல்லின் விழுமியதாக் கொள்வர்
கடைநிலத்தோர் ஆயினும் கற்று அறிந்தோரை
தலை நிலத்து வைக்கப்படு;ம்'
   ( பா.எண்.133)

உவர் நிலத்தில் உருவான உப்பினைச் சான்றோர்கள் விளைநிலத்தில் பிறந்த நெல்போல உயர்வாகக் கருதி பாதுகாத்துக் கொள்வர். அது போல எக்குடியில் பிறந்திருந்தாலும் நாம் நல்ல கல்விச் செல்வங்களைப் பெற்று உயரும் பொழுது நம் சான்றோர்கள் நம்மை விளைநிலத்து நெல் போலப் பாதுகாத்து வைத்துக் கொள்வர்.

குறையாத செல்வம்

'வைப்புழி கோட்படா வாய்த்து ஈயின் கேடு
மிக்க சிறப்பின் அரசர் செறின் வவ்வர்
எச்சம் என ஒருவன் மக்கட்குச் செய்வன
விச்சை மற்று அல்ல பிற'    
 ( பா.எண்.134)

கல்விக்காக நாம் வைத்துள்ள பொருள்கள் யாராலும் கவர்ந்து சென்று போக இயலாது. தகுதியுள்ள மாணவன் கிடைத்து அவனுக்கு நாம் கல்விச் செல்வத்தை வழங்கும் பொழுது ஒரு பொழுதும் அச்செல்வம் குறைவது இல்லை. மன்னன் பிறர் மீது கோபம் கொண்டால் அதனை யாராலும் கவர்ந்து செல்ல முடியாதது போல கல்விச் செல்வம் என்றும் அழியாத சிறப்பினைப் பெற்றுள்ளது.; தம் குழந்தைகளுக்குப் பொன், பொருள், ஆடை, வீடு போன்ற நிலையற்ற செல்வங்களைச் சேர்த்து வைப்பதனைக் காட்டிலும் அழியாத செல்வமாகிய கல்விச் செல்வத்தை அவர்களுக்கு வழங்குவது சிறப்புடையதாகும். வள்ளுவரும் இதனை

'கேடில் விழும் செல்வம் கல்வி ஒருவருக்கு
மாடல்ல மற்றவை அவை'
 (குறள் - 400 )

என எல்லாச் செல்வங்களிலும் உயர்வானது கல்விச் செல்வமே என்று சுட்டியுரைக்கிறார். பிற்காலப் புலவர் ஒருவர் கல்வியின் சிறப்பினை

'வெள்ளத்தால் போகாது வெந்தழலால்
வேகாது வேந்தராலும்
கொள்ளத்தான் முடியாது கொடுத்தாலும்
நிறைவொழியக் குறைபடாது
கள்ளர்க்கோ மிக அரிது காவலோ
மிக எளிது கல்வி என்றும்
உள்ளத்தே பொருள் இருக்க உலகெல்லாம்
பொருள் தேடி உழல்வதென்னோ'


என்று கல்வி யாராலும் கவர்ந்து செல்ல முடியாத சிறப்பினைப் பெற்றது எனக் குறிப்பிட்டுச் சென்றுள்ளார்.

கல்வி எல்லையற்றது


'கல்வி கரையில கற்பவர் நாள் சில
மெல்ல நினைக்கின் பிணி பல தௌ;ளிதின்
ஆராய்ந்து அமைவு உடைய கற்பவே நீர் ஒழிய
பால் உண் குரகின் தெளிவு'  
 ( பா.எண்.135)

என்ற இப்பாடலடிகளில் கல்வியில் இதை மட்டும் கற்றுக் கொண்டால் போதும் என்று எண்ணுவது மிகவும் தவறு. கல்விக்கு எல்லை இல்லை. கல்வியைக்; கற்றுக் கொள்பவர்களின் ஆயுள் மிகக் குறுகிய காலமாகும். அக்குறுகிய காலத்தில் நமக்கு வரும் நோய்கள் பலவாகும். எனவே இக்கால கட்டத்தில் நாம் நம்மை நல்ல வழியில் தகவமைத்துக் கொள்ள நல்ல நூல் கருத்துக்களைக் கற்றுக் கொள்ளுதல் வேண்டும். அன்னப்பறவை தண்ணீரை நீக்கி வைத்துப் பாலை மட்டும் பருகுவது போல நம் வாழ்க்கைக்குத் துணை செய்யும் நல்ல நூல்களை மட்டும் தேர்வு செய்து படிக்க வேண்டும்.

ஓடம் போன்றது கல்வி


'தோணி இயக்குவான் கதால்லை வருணத்துக்
காணில் கடைப்பட்டா னென்றிகழார் - காணாய்
அவன் துணையா வாறு போயற்றே நூல் கற்ற
மகன் துணையா நல்ல கொளல்'
 (பா.எண்-136)

ஓடம் இயக்குகின்றவன் எக்குடியில் பிறந்திருந்தாலும் அவனை மக்கள் தாழ்ந்தவன் எனக் கருதி ஒருபொழுதும் புறம் தள்ள மாட்டார்கள். அவனின் துணையுடன் ஆற்றைக் கடந்து போவார்கள். அது போல எக்குடியில் பிறந்திருந்தாலும் அவர்களின் துணையுடன் பல நல்ல நூல்கருத்துக்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். மாறாக அவர்களின் குடியை விமர்சனம் செய்து வீணாகக் காலம் கழித்துவிடாமல் அவர்களிடம் உள்ள கல்வியை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கற்றவருடன் கூடியிருத்தல்


'தவல் அரும் தொல் கேள்வி தன்மை உடையார்
இகழ் இலர் எஃகு உடையார் தம் முள் குழீஇ
நகலின் இனிதாயின் காண்பாம் அகல் வானத்து
உம்பர் உறைவார் பழி'  
        (பா.எண்-137)


அழிவில்லாத பழமையான நூல் பொருள்களைக் கேட்கும் இயல்புடையவரும் மாறுபாடு இல்லாதவரும் மதிநுட்பம் மிக்கவரும் ஆகிய புலவர்களுடன் கூடி இருந்து மகிழ்வதனைக் காட்டிலும் சிறந்த இன்பம் தருவது வேறு எதுவும் இல்லை. தேவர்கள் வாழும் விண்ணுலகினைக் காணும் முயற்சியைக் காட்டிலும் ஆன்றோர்கள் கூடி இருக்கும் அவையில் பேசி மகிழ்தல் உயர்வானதாகும்.

நுனிக்கரும்பு போன்ற சுவையுடையது


'கணை கடல் தண் சோர்ப் கற்று அறிந்தார் கேண்மை
நுனியின் கரும்பு தின்று அற்றே நுனி நீக்கி
தூரின் தின்று அன்ன தகைத்து அரோ பண்பு இலா
ஈரம் இலாளர் தொடர்பு.'
  (பா.எண்-138)

கடலின் ஓசையைக் கேட்டுக் கொண்டே இருக்கும் தலைவனே. சிறந்த நூல்களைப் படித்து உணர்ந்த சான்றோர்களின் நட்பு கரும்பின் நுனியைச் சுவைப்பது போல இனிமை மிகுந்தது. அன்பில்லாத அறிவற்ற மக்களின் செயலானது எதற்கு ஓப்பாகும் என்றால் நுனிக்கரும்பினைத் தின்று கொண்டு வந்தால் இனிமை குறைந்து வருவது போல சான்றோர்களுடன் நட்பு கொள்ளாமல் இழிவானவர்களுடன் நாம் கொண்ட நட்பு பயனற்றதனைப் போன்றதாகும்.

பாதிரி மலர் போன்றது


'கல்லாரே ஆயினும் கற்றோரைச் சேர்ந்து ஒழுகின்
நல்லறிவு நாளும் தலைப்படுவர் தொல் சிறப்பின்
ஒள் நிறப் பாதிரிப் பூ சேர்தலால் புத்தோடு
தண்ணீர்க்குத் தான் பயந்து ஆங்கு' 
 (பா.எண்-139)

பாதிரி மரத்தின் மலர்களைப் புதிய மண் பானையில் இட்டால் குளிர்ச்சி பொருந்தியதாக அந்நீரின் இயல்பு மாறிப் போகும். அந்நீரானது சுவையானதாகவும் மணம் நிரம்பியதாகவும் இருக்கும். ஆதுபோல கல்வியறிவற்ற மக்கள் படித்தவர்களுடன் கூடி நட்பு பாராட்டும் போது அவர்களுக்கும் பண்பட்ட மெய்யறிவு கிடைக்கும்.

முறையான கல்வி


'ஆரகு சால் கற்பின் அறிவு நூல் அல்லாது
உலக நூல் ஓதவது எல்லாம் கலகல
கூஉம் துணை அல்லால் கொண்டு தடுமாற்றம்
போலும் துணை அறிவார் இல்' 
  (பா.எண்-140)

நாம் பல நூல் கருத்துக்களைப் படிக்க வேண்டும் என்று கூறியவர்கள் எப்படிப்பட்ட கல்வியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் கூறியுள்;ளார். அளவை முறைகளில் சிறந்த நூல்களும் கருவி நூல் கல்வியையும் கற்றுக் கொண்டு தம் மெய்யயறிவினை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதைவிடுத்துப் பயனற்ற நூல் கல்வியைக் கற்பதால் எப்பயனும் விளையப்போவது இல்லை. வெண்கலம் கலகல என்று இரைச்சல் போடுவது போல மெய்யறிவைத் தர இயலாத கல்வியானது எப்பயனையும் தராது என்பது திண்ணம். எனவே வாழ்விற்குப் பயன்தரக் கூடிய எதிர்கால வாழ்வினைத் திறம்படச் சாமாளிக்கக் கூடிய நூல்களைக் கற்றுப்பயன் பெற வேண்டும் என்கிறார்.

நிறைவுரை:


ஒருவனுக்கு எத்தகைய செல்வம் கிடைத்திருந்தாலும் அழியாத செல்வம் கல்விச் செல்வம் என்பதனை உணர்ந்தவர்கள் நம் சான்றோர்கள். எனவே கல்வியின் இன்றியமையாமையை நம் அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் சக மனிதர்கள் மூலமும் எளிமையான சான்றுகள் வாயிலாகவும் இந்நூல் படைக்கப்பட்டுள்ளது. எந்நூல் கருத்துக்களாக இருப்பினும் அதன் சாரம் மக்களைச் சென்றடையும் பொழுது வெற்றிபெற்றுவிடகிறது. அவ்வகையில் நீதிநூல்களின் வரிசையில் வைத்துக் கொண்டாடப்படும் இந்நூல்கருத்துக்கள் என்றும் போற்றுதலுக்குரியதாகவும் ஏற்புடையதாகவும் உள்ளது.

 

முனைவர் நா.அமுதாதேவி
தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்
இரத்தினம் கலை அறிவியல் கல்லூரி
கோவை-21


 







 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்