அண்டவெளியில் எடுத்த அறிவியற் புகைப்படம் கருந்துளை எம் 87

கனி விமலநாதன்

ப்பிரல் 10, 2019. அறிவியலாளர்கள் பெருஞ்சாதனை ஒன்றினை நடத்திக் காட்டிய நாள். உலகின் எல்லா ஊடகங்களுமே வியந்து போற்றிக் கொண்டாடிய, மனித மூளையின் வலிமை வெளியே தெரிந்த நாள். ஒன்றுபட்டால் பெரும்பெருங் காரியங்களை எல்லாம் மனிதராற் செய்திட முடியும் என்பதன் இன்னொரு வெளிப்பாட்டைக் காட்டிய நாள். விடயம் என்ன என்பதை நீங்கள் ஊகித்திருப்பீர்கள். இயலாத காரியமென முன்னொரு நாள் எண்ணியிருந்த கருந்துளை ஒன்றின் படத்தினை, பல ஆண்டு முயற்சியின் பின் 200 பல்துறை விஞ்ஞானிகள் இணைந்து எடுத்து உலகினருக்குக் காட்டியிருக்கிறார்கள். கருந்துளை எம்87 (M87) எனப் பெயர் கொண்ட இக்கருந்துளையின் படத்தினை நீங்களும் அதிசயமாகப் பார்த்திருக்கலாம். அது தொடர்பான பதிவொன்றினைத்தான் 'தமிழ்ஆதேர்ஸ்.கொம்'மில் இன்று பதிவிடுகிறேன்.

படம் ஏப்பிரல் 10ல் வெளியான கருந்துளை எம்87 இனைக் காட்டுகிறது.

முதலில் எம்87 பற்றிய தகவல்களைத் தெரிந்து கொண்டு இதன் பின்னால் உள்ள அறிவியல் விபரங்களைப் பார்ப்போம். கருந்துளை எம்87 என்பது புவியில் இருந்து 55 மில்லியன் ஒளியாண்டு தொலைவில் உள்ள எம்87 என்ற பென்னம் பெரிய கலக்சி ஒன்றின் மையத்தில் உள்ள மிகப் பெரிய, பாரமான கருந்துளை. எங்களின் ஞாயிற்றுத் தொகுதி அளவு பருமனான அக்கருந்துளையின் திணிவோ, எங்களின் கதிரவனின் (சூரியனின்) திணிவினைப்; போல் 6.5 பில்லியன் மடங்காகும். பில்லியன் என்பது ஒன்றுடன் 9 பூச்சியங்கள் (109) கொண்ட எண். அவ்வளவு பெரும் திணிவானதுதான் கருந்துளை எம்87.

ஒரு சில தெளிவுகளுடன் மேலே செல்வோம். விண்வெளியிற் பல பில்லியன் எண்ணிக்கையிலான விண்மீன்களையும் பிரமாண்டமான நெபுலாக்கள் என்கிற தூசுக் கூட்டங்களையும் கொண்ட ஒரு தொகுதியைத்தான் கலக்சி என்கிறார்கள். எங்களின் பேரண்டத்தில் பல பில்லியன் எண்ணிக்கையிலான கலக்சிகள் உள்ளன. எங்களின் கதிரவன் பால்வெளி என்கிற கலக்சியில் உள்ள ஒரு விண்மீன் ஆகும். அடுத்து திணிவைப் பற்றிப் பார்ப்போம். இலகுவில் அதனை விளங்கிக் கொள்வதெனில் அதனைப் பாரம் என எண்ணிக் கொள்ளலாம். இனி, ஓளியாண்டு. இது இந்நாட்களிற் பலருக்கும் தெரிந்த ஒன்றுதான். இருப்பினும் அதுபற்றியும் கூறுகின்றேன். எங்களது ஒளி, அதுதான் வெளிச்சம் ஒரு செக்கனில் 300,000 கிலோமீற்றர் தூரம் செல்லும். ஆயின், இந்த ஒளி ஒரு வருடத்தில் எவ்வளவு தூரம் செல்லும் என எண்ணிப் பாருங்கள். அந்தத் தூரத்தைத்தான் ஓர் ஒளியாண்டு என்கிறார்கள்.

அப்படியென்றால், எம்87 இருக்கும் தூரமான 55 மில்லியன் ஒளியாண்டு, ம்,ம்,ம், மிகப் பெரிய தூரம்தான் இல்லையா! ஆனால் ஒரு விசித்திரத்தைப் பாருங்கள். எங்களது அறிந்து கொள்ளப்படக் கூடிய பிரபஞ்சம் 93 பில்லியன் ஒளியாண்டு விட்டம் கொண்ட கோளமாகும். இதனுடன் ஒப்பிடுகையில் 55 மில்லியன் ஒளியாண்டு தூரம் என்பது ஒன்றும் அப்படிப் பெரிய தூரமில்லை என்கிறார்கள் வானவியலாளர்கள். அவர்கள் கருத்துப்படி, பேரண்டத்துள் பால்வெளி கலக்சியும் கலக்சி எம்87ம் அருகருகில் இருப்பவை போன்றன. இன்னமும், 2;.5 மில்லியன் ஒளியாண்டு தூரத்தில் உள்ள அன்றெமேடா போன்ற வேறு சில கலக்சிகளும் எங்களின் பால்வெளி கலக்சியிற்கு அருகில் உள்ளன. இப்படியாகப் பேரண்டத்துள் உள்ள கலக்சிகள் சில, அவற்றின் ஈர்ப்பினால் ஒன்றிணைந்து ஒரு தொகுதியை உண்டாக்கி, கலக்சி உட்கட்டமைப்பு ஒன்றில் இருந்து கொள்கின்றன. இதனை ஆங்கிலத்தில் Local Galaxy Group என்கிறார்கள். இப்படியாகப் பேரண்டம் முழுவதும் ஆங்காங்கு தொகுதி தொகுதிகளாகப் பல கலக்சிக் கூட்டங்கள் பரவி இருக்கின்றன.

இவ்வளவு விபரங்களுடன் இனித் தொடருவோம். அதற்கு முதற்படியாக கருந்துளை என்றால் என்னவென்று தெரிந்து கொள்வோம். கருந்துளை என்ற பதத்தின் அடிப்படைக் காரணியாக இருப்பது ஈர்ப்பாகும். நியூட்டனின் ஈர்ப்புவிதியாயினும் சரி, ஐன்ஸ்ரைனின் பொதுச் சார்புத் தத்துவமாயினும் சரி, பொருட்கள் ஒவ்வொன்றும் மற்றைய பொருட்களை ஈர்க்கின்றன என்ற உண்மையைக் கூறுகின்றன. இந்த ஈர்க்கும் வல்லமையானது பொருளின் திணிவிலும் தங்கியுள்ளது. பெரிய பொருட்களின் ஈர்ப்புப் பெரியதாக அமைந்து விடுவதனால் பெரிய பொருட்கள் தம்முடன் மற்றப் பொருட்களை இழுத்துக் கொள்ளுகின்றன. இதனையும் இலகுவாக விளங்கிடுவோம். கதிரவன் எங்களின் புவியை இழுத்து வைத்துத் தன்னைச் சுற்ற வைக்கிறது. புவியோ தனது பாரம் காரணமாகத் தன்னை விடப் பாரம் குறைந்த சந்திரனை இழுத்து வைத்துத் தன்னைச் சுற்ற வைக்கிறது.

கருந்துளைகள்

இனி எங்களுக்குத் தெரிந்த இன்னொரு விடயம் பற்றிப் பார்ப்போம். கல் ஒன்றையோ அல்லது வேறு எந்தப் பொருளையோ மேல் நோக்கியெறிந்தால், அது மேலே சிறிது தூரம் சென்று விட்டுப் பின்னர் கீழே திரும்பி வந்து புவியின் மேற்பரப்பில் விழும். சற்று வேகம் கூடவாக எறிந்தால், இன்னமும் சிறிது தூரம் கூடுதலாக மேலே சென்று விட்டு மீண்டும் கீழே வந்து தரையில் மோதும். காரணம் கேட்டால்;, அது புவியீர்ப்பினாற் கீழே விழுகிறது என்று உடனேயே கூறிவிடுவோம். ஒருவேளை எங்களால் அக்கல்லினைச் செக்கனுக்கு 11.2 கிலோமிற்றர் என்ற வேகத்தில் அல்லது அதற்கும் மேலாக எறிய முடியுமானால் அக்கல் திரும்பிப் புவியிற்கு வராது. அப்பிடியே விண்வெளியில் பயணப்பட்டு விடும். இந்த செக்கனுக்கு 11.2 கிலோமீற்றர் என்பதைப் புவிக்கான தப்புவேகம் என்பார்கள். அதாவது புவியின் ஈர்ப்பிற்குத் தப்பி எந்தவொரு பொருளும் போக வேண்டுமெனில் அது எறியப்பட, அல்லது செலுத்தப்பட வேண்டிய வேகம் செக்கனுக்கு 11.2 கிலோமீற்றர் ஆகவாவது இருக்க வேண்டும்.

இன்னமும் சற்று விரிவாகத் தெரிந்து கொள்வோம். கதிரவன் புவியை விடப் பெரியதாக இருப்பதால் அதன் மேற்பரப்பில் இருந்து தப்பி ஓடுவதற்கான வேகம், புவியினதை விடக் கூடவாக இருக்கும். அப்படியாக, கதிரவனின் தப்புவேகம் செக்கனுக்கு 618 கிலோமீற்றர் ஆகும் என விஞ்ஞானிகள் கணித்து வைத்திருக்கிறார்கள். இதன்படி சிந்திப்போமானால், பாரம் கூடக் கூட, அப்பொருளின் மேற்பரப்பில் இருந்து இன்னொரு பொருள் தப்பி ஓடும் வேகம் அதிகரிக்கும் என்று தெரிகிறதல்லவா. இவ்வண்ணமே போய்க் கொண்டிருந்தால், ஒருவேளை பொருளின் திணிவு (அதாவது பாரம்) போதுமான அளவு பெரியதாக இருந்தால் அங்கு தப்புவேகம் செக்கனுக்கு 300,000 கிலோமீற்றர் அல்லது அதற்கும் அதிகமாக வந்து விடலாம். இந்த செக்கனுக்கு 300,000 கிலோமீற்றர் என்பது ஒளியின் வேகமாக இருப்பதால், அந்நிலையில் அப்பொருளில் இருந்து ஒளி (வெளிச்சம்) கூட வெளியிற் போக முடியாது இல்லையா! அதாவது அவ்வளவு பாரமான பொருளில் இருந்து வெளிச்சம் கூட வெளியே வராது. அப்படிப் பொருளில் இருந்து வெளிச்சம் வராது இருப்பின், அது எங்கள் கண்களுக்குத் தெரியாது. அதனை எங்களாற் பார்க்க முடியாது. இப்படியான பொருட்களைத்தான் பொதுப்படையாகக் கருந்துளைகள் என்கிறார்கள்.

அருகில் இருப்பது கருந்துளை ஒன்றின் படம்

பொதுவாக வெளியிற் பெருமளவு திணிவு, ஒரு குறுகிய இடத்திற் திரளும்; வேளையில் அவ்விடத்தின் ஈர்ப்பு வலிமை அதிகமாகி, ஒளியைக் கூட வெளியே செல்ல விடாத நிலை ஏற்பட, அவ்விடத்திற் கருந்துளை ஒன்று உருவாகிறது. இங்கு கருந்துளை என்றால் ஏதோ ஒரு பிரமாண்டமான பொருளாகத்தான் இருக்க வேண்டும் என எண்ணி விடாதீர்கள். ஒருவேளை என்னையோ அல்லது உங்களையோ, எங்களின் திணிவு மாறாமல் இருக்க, ஒரு அணுவினையும் விடச் சிறியதாகச் சுருக்கினால், நானும் நீங்களும் கூடக் கருந்துளையாகி விடுவோம். இந்தப் பென்னம் பெரிய கதிரவனையும் ஒரு 'கிரிக்கட் பந்து' அளவுக்கு அதன் திணிவினை மாற்றாமற் சுருக்க முடியுமானால், அப்போது கதிரவனும் ஒரு குட்டிக் கரும்பொருளாக மாறிவிடும். இவ்வண்ணமே எங்கது புவி கூடத் தனது பருமனை மாற்றாமல் ஒரு சிறிய மாபிள் அளவிற்குச் சிறியதாக மாறினால், புவியும் கருந்துளைதான். ஆனால் புவியினதும் கதிரவனதும் பௌதிக இயல்புகள் அவற்றினைச் சுருங்க விடா.

இன்னொரு விடயம், இந்தக் கருந்துளைகளின் அருகில் எதுவுமே இருக்க முடியாது. ஏனெனில், கருந்துளைகள் தமது உயர்ந்த ஈர்ப்பினால் அருகில் உள்ள எல்லாவற்றையுமே தம்முள் இழுத்து, தமது திணிவினையும் பருமனையும் அதிகரிக்கச் செய்கின்றன. அல்லாமலும், அருகாகச் செல்லும்; ஒளியைக் கூட விட்டு விடுவதில்லை, உறிஞ்சிக் கொள்கின்றன. அதனால் இக்கருந்துளைகளை 'விண்வெளியின் பூதங்கள்' என அறிவியலாளர்கள் வர்ணிக்கின்றார்கள்.

ஆரம்பத்தில் இவ்வண்ணமான அடிப்படையில் கருந்துளை என்ற பதம் வந்த வேளையில், உண்மையிலேயே பேரண்டத்துள் கருந்துளைகள் உள்ளனவா என்ற கேள்வி எழுந்தது. அவ்வேளையில் விஞ்ஞானிகள் 'ஆம்' என்றே பதிலளித்தார்கள். கணித முடிவுகளின் அடிப்படையில் அவர்களது முடிவு உறுதியாக இருந்த போதிலும் இதுதான் கருந்துளை என அவர்களால் ஒன்றைக் கூடச் சுட்டிக் காட்ட முடியவில்லை. பொதுவாகவே பேரண்டத்துள் உள்ள கலக்சிகளின் மையங்களில் பெருந்திணிவுடைய கருந்துளைகள், சூழ உள்ளவற்றை உறிஞ்சிக் கொண்டு இருக்கின்றன எனக் கூறும் விஞ்ஞானிகள், புவியில் இருந்து 26000 ஒளியாண்டு தொலைவில் உள்ள எங்களது கலக்சியின் மையத்திலும், கதிரவனின் திணிவினைப் போல் 4.6 மில்லியன் மடங்கு திணிவுடைய சகர்ரறியஸ் ஏ (Sagattarius A) என்ற கருந்துளை ஒன்று இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்கள். அல்லாமலும் பாரமான விண்மீன்கள் சிலவும் அவை இறந்து போகையில் கருந்துளைகளாக மாறுகின்றன என்ற அறிவியல் முடிவுகளும் காட்டுகளும் உள்ளன. எனது வியத்தகு விண்மீன்கள் என்ற நூலிலும் இவை பற்றிய விபரங்களை உங்களிற் சிலர் வாசித்து அறிந்திருக்கலாம்.

கருந்துளைகளை இனங்காணல்


இப்பொழுது கருந்துளை என்பதைப் பற்றிய மேலெழுந்த வாரியான விளக்கம் எங்களுக்கு உள்ளது. இனி, எப்படிக் கருந்துளைகளை விஞ்ஞானிகள் இனங்கண்டார்கள் எனப் பார்ப்போம். கதிரவன், விண்மீன்கள் என்பவை ஒளியை வீசிக் கொண்டு இருப்பதனால் அவற்றினைக் காணக் கூடியதாக உள்ளது. இன்னமும் சந்திரனும் மற்றக் கோள்களும் தம்மீது விழுகின்ற ஒளியைத் தெறிக்க வைக்க, அவ்வொளி எங்களை வந்தடையும் போது அவற்றினைக் கண்டு கொள்ளுகிறோம், மகிழ்கிறோம், கவிதைகள் கூடப் புனைகிறோம். இன்னமும் படங்களாகக் கூடப் பிடித்துக் கொள்கின்றோம். இப்படியாக எப்படியோ ஏதோவொரு விதமாக ஒரு பொருள் இருந்து ஒளி வந்தால்தான் அதனை இனம் காணலாம். ஆனால் கருந்துளைகளில் இருந்து ஒளியே வராதே! அப்படியிருக்கையில் எப்படி இனங்காண்பது?

விஞ்ஞானிகள் விடவில்லை. கருந்துளையை இனங்காண்பதற்கு அதன் இயல்புகளைப் பாவித்தார்கள். கருந்துளைகள் தமக்கு அருகில் இருக்கும், தமக்கு அருகில் வரும் பொருட்கள் எல்லாவற்றையும் தம்முள் இழுத்துக் கொள்கின்றன அல்லவா. அந்த இயல்பின் வழியிற் கருந்துளையைத் தேடிப் போனார்கள். கருந்துளையுள் விழும் பொருட்கள் நேராகவே கருந்துளையினுள்ளே போய் விழுவதில்லை. கருந்துளையை வேகமாகச் சுற்றிச் சுற்றிக் கிட்டக் கிட்ட வந்து, பின்னரே கருந்துளையுடன் இணைந்து மறைந்து விடுகின்றன. இது அப்பொருட்கள் கருந்துளையினுள் வந்து விழுந்து மறைவது போல இருக்கும். இப்படியாக கருந்துளையுள் வந்து விழும் பொருட்கள் எல்லாமும் சின்னச் சின்னத் துகள்களாக உடைந்து மிகப் பெரிய வேகத்துடன் கருந்துளையினைச் சுற்றி வரும் இதனைப் பார்த்தால், ஒரு தட்டு வடிவில் அவை வலம் வருவது போல இருக்கும். அத்தட்டினை 'அக்கிரிசன் தட்டு' (Accretion disk) என விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள். இப்படியாக மிக வெப்பமாகவும் வேகமாகவும் அக்கிரிசன் தட்டில் சுற்றி வரும் துணிக்கைகள், தட்டிற்குச் செங்குத்தாக, இயற்பியல் அமைப்பின்படியே 'எக்ஸ் கதிர்கள்;' போன்ற மின்காந்தக் கதிர்களை வீசுகின்றன. இவ் எக்ஸ் கதிர்களைக் கொண்டுதான் கருந்துளைகளை ஆரம்பத்தில் இனம் கண்டார்கள். ஆக, விண்வெளியில் எந்தவொரு இடத்தில் இருந்து எக்ஸ் கதிர்கள் எந்தவொரு அடிப்படையும் இன்றிப் பெருமளவில் வருகிறனவோ, அவ்விடத்தில் ஒரு கருந்துளை உள்ளது என ஆரம்ப காலங்களிற் துணிந்து கொண்டார்கள். ஆனால்,

எந்தவொரு கருந்துளையின் படத்தையும் அவர்களால் காட்ட முடியவில்லை.

இந்த விஞ்ஞானிகளிடம் ஒரு (கூடாத) பழக்கம் உண்டு. எதையும் சும்மா விட்டு விடுவதில்லை. தோண்டித் தோண்டி, துருவித் துருவிப் பார்ப்பார்கள். அவ்வகையில் வந்ததுதான் எப்படி இந்தக் கருந்துளையின் படத்தை எடுத்துக் காட்டுவது? என்பதும். கருந்துளைகளைச் சுற்றியுள்ள அக்கிரிசன் தட்டு நினைவில் வர, அவர்களுக்கு ஒரு உத்தி பிறந்தது. கருந்துளையைத்தான் படம் பிடிக்க முடியாது. ஆனால் கருந்துளையைச் சுற்றியுள்ள அக்கிரிசன் தட்டு வீசுகின்ற மின்காந்த அலைகளின் படத்தைப் பிடிக்க முடியுமென்றால், அவ்வலைகளின் படத்தின் நடுவில் இருப்பது கருந்துளையல்லவா! உற்சாகம் கொண்டார்கள், செயலிலும் ஈடுபட்டார்கள்.

படத்தைப் பிடிப்பதற்கான உத்தி வந்து விட்டது. படத்தை எடுப்பதற்கான சிக்கலான நடவடிக்கைகள் தொடங்கின. புவியிலே அண்டவெளியில் இருந்து வரும் வானொலிச் சமிக்கைகளை பெற்றுக் கொள்ளக் கூடிய வானொலித் தொலைகாட்டிகளைப் பல நாடுகளும் தத்தமது பகுதிகளில் வைத்திருந்தார்கள். அவற்றினைப் பாவிக்கலாம் என முடிவு செய்தார்கள். ஆனால் இன்னொரு சிக்கல் இருந்தது. கருந்துளைகள் பெரிய பருமனில் இருப்பினும் புவியில் இருந்து அவை உள்ள பெரிய தூரத்தினால் அவை மிகவும் சிறியனவாக, ஒரு பொட்டுப் போலவே இருக்கும். அவற்றினைப் படமெடுப்பதெனில் இவற்றில் எந்தவொரு தொலைகாட்டியையும் பாவிக்க முடியாது. மிகப் பெரிய தொலைகாட்டி தேவை. அதன் பருமன் எவ்வளவு இருக்க வேண்டும் தெரியுமா? குறைந்தது எங்களது புவியின் பருமனளவாகவாவது இத்தொலைகாட்டி இருக்க வேண்டும். என்ன செய்வது? எங்கு போவது? பழையபடி மூளையிடமே போனார்கள், வழி கிடைத்தது. உலகின் வெவ்வேறு பகுதிகளிலும் இருந்த 8 பெரிய வானொலித் தொலைகாட்டிகளை தொழில் நுட்பத்தால் ஒன்றிணைத்து ஒரு கற்பனையான எங்களது புவியினது பருமனளவான பாரிய தொலைகாட்டியாகப் பாவித்தார்கள். அதனை ஈஎச்ரீ (EHT – Event Horizon Telescope) எனவும் அழைத்தார்கள். தமிழில் இதனை 'நிகழ்வெல்லைத் தொலைகாட்டி' என அழைக்கலாம். இதனை எப்படித் தொழிற்பட வைத்தார்கள் எனில், ஒரே நேரத்தில் அந்த எட்டு வானியல் தொலைகாட்டிகளையும் எம்87ஐ நோக்கிக் குவித்து, அதன் அக்கிரிசன் தட்டில் இருந்து வந்து கொண்டிருந்த வானொலி அலைகளின் சமிக்கைகளை சிலகாலத்திற்கு ஒரே நேரத்திற் பெற்றுக் கொண்டார்கள்.

படம் நிகழ்வெல்லைத் தொலைகாட்டியின் மாதிரி அமைப்பைக் காட்டுகிறது.

2017 யூலை வரையில் பெற்றுக் கொண்ட ஏராளமான தரவுகளைத் தொகுத்து, பலரது பாரிய பங்களிப்புடன், இறுதியில் 2019 ஏப்ரல் 10ல் கருந்துளை எம்87 இன் படத்தினை வெற்றிகரமாக வெளியிட்டார்கள். ' சபாஷ்' ஒன்று போடுவோம்.

இவ்வேளையில் உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம். 26000 ஒளியாண்டு தொலைவில் உள்ள எங்களது கருந்துளையான சகர்ரறியஸ் ஏ யின் படத்தினை விட்டுவிட்டு ஏன் 55 மில்லியன் ஒளியாண்டு தொலைவில் உள்ள எம் 87 இன் படத்தினை எடுத்தார்கள்? விடை தெளிவானது. எம்87ன் அக்கிரிசன் தட்டு புவியிற்குச் செங்குத்தாக இருக்கிறது. அத்துடன் எம்87 கருந்துளை முற்றாக உயிர்ப்புள்ளதாகவும் இருக்கிறது. அதனால், கருந்துளையினைச் சுற்றி உள்ள எல்லா இடங்களில் இருந்தும் வானொலி அலைகள் வருவதனால், அவற்றினைப் படம் பிடிப்பதில் இருந்து எம் 87ஐப் படமாக்கலம் எனக் கண்டு கொண்டார்கள். எங்களின் பால்வெளி கலக்சியின் மையத்தில் உள்ள கருந்துளையின் அக்கிரிசன் தட்டு எங்களின் புவியிற்கு, சற்றுப் பக்கவாட்டில் தெரிவதால் அதனை முழுமையாகக் காண்பது கடினம். அத்துடன் சகர்ரறியஸ் ஏ ஒரு பகுதி உயிர்ப்புள்ள கருந்துளை எனவும் கூறுகின்றார்கள். அதனாலேயே தொலைவில் இருந்தாலும் எம்87 இனைப் படமாக்க முயன்று வெற்றியும் பெற்று விட்டார்கள்.

ஆர்வமுள்ளவர்கள் கூகிளில் அல்லது கருந்துளைகள் பற்றிய நூல்களில் மேலதிக தகவல்களைப் பெறலாம்.
அடுத்ததோர் அறிவியல் விடயத்துடன் தமிழ்ஆதேர்ஸ்.கொம்மில் மீண்டும் சந்திக்கிறேன்.

அன்புடன்,
கனி.





 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்