தங்க. செந்தில்குமாரின் கவிதை உலகு

பேராசிரியர் இரா.மோகன்


“கவிதைகளால் உயிருக்குள் பூக்கள் பூக்கும்
            காந்தம் போல் இதயத்தைக் கவிதை ஈர்க்கும்
செவிக்குள்ளே கவிதைநதி பாய்ந்தே விட்டால்
            செத்தொழியும் நச்சு எண்ணம் அத்தனையும்!”   (யாத்திரை, ப.94)

எனக் கவிதைக் கலையின் மேன்மையையும் வலிமையையும் எடுத்துரைக்கும் தங்க.செந்தில்குமார், இதுவரை வெளியிட்டுள்ள கவிதைத் தொகுப்புகள் ஏழு. கால வரிசைப்படி அவற்றின் பெயர்களும், அவை முதற்பதிப்பாக வெளிவந்த ஆண்டுகளும் வருமாறு:

1. தென்றலை அனுப்புங்கள் (1990), 2. பருவப் பல்லவிகள் (1991), 3. கிழக்கே ஒரு மின்மினி (1993), 4. சிறுகூடல்பட்டி சிகரம் (1995), 5. எல்லார்க்கும் பெய்த மழை (1997), 6. யாத்திரை (1998), 7. ஊருணி (2010)

இக் கவிதைத் தொகுப்புக்களுக்கு வார்த்தைச் சித்தர் வலம்புரி ஜான், கவியரசு நா.காமராசன், கவிக்கோ அப்துல் ரகுமான், கவிஞர்கள் மீரா, ஈரோடு தமிழன்பன், மு.மேத்தா, வைரமுத்து, பழநிபாரதி, ஆரூர் தமிழ்நாடன், கண்மணி சுப்பு, இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் ஆகியோர், மூத்த எழுத்தாளர் வல்லிக்கண்ணன், தமிழறிஞர்கள் சிலம்பொலி சு.செல்லப்பன், சி.பாலசுப்பிர-மணியன், கு.வெ.பாலசுப்பிரமணியன், சி.இ.மறைமலை, பாவலரேறு ச.பால-சுந்தரம் என்னும் தமிழ்கூறு நல்லுலகின் முன்னணிப் படைப்பாளிகளான பதினேழு பேர் வாழ்த்துரையும் அணிந்துரையும் வாழ்த்துப் பாவும் வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆற்றல்சால் ஆளுமையாளர்களைப் பற்றிய அரிய பதிவுகள்

தங்க.செந்தில்குமாரின் கவிதை ஆளுமையில் சிறந்து விளங்கும் ஒரு தனிக்கூறு, வரலாற்றில், விடுதலைப் போரில், அரசியலில், திரையுலகில், கல்வியுலகில் எனத் துறைதொறும் – சாதனை புரிந்த – தடம் பதித்த –ஆற்றல்சால் ஆளுமையாளர்களின் உயர்ந்த பண்புகளையும் அவர்களது விழுமிய கொடைகளையும் இன்றைய இளைய தலைமுறையினருக்கும் பொது-மக்களுக்கும் அறிமுகப்படுத்தும் நோக்கில் முத்திரைக் கவிதைகள் பலவற்றைப் படைத்திருத்தல் ஆகும். பதச்சோறாக, ‘சிறுகூடல்பட்டி சிகரம்’ என்னும் தலைப்பில் கவியரசர் கண்ணதாசனைக் குறித்து தங்க.செந்தில்குமார் வெளியிட்டுள்ள கவிதைத் தொகுப்பினை இங்கே சுட்டிக்காட்டலாம்.

“பாரதி இறந்த போது / மொழி அழுதது…
பாவேந்தான் இறந்த போதும் / மொழி அழுதது…
மொழி மட்டுமன்றிக் / கோடி விழியும்
அழுதது- / மகாகவியே!
நீ மறைந்த போது தான்!”   
  (ப.19)

எனக் கண்ணதாசன் மறைந்த போது உருக்கமான கையறுநிலைக் கவிதை பாடும் தங்க.செந்தில்குமார், “மொழியின் தவம் / நீ! / தமிழின் வரம் / உன் கவிதை!” (ப.23) என்றும், “ஒவ்வொரு / தலைமுறையும் / உயிலில் குறிப்பிடாத / சொத்தாய் / உன் / பாடல்களைத் தான் / பறைசாற்றியிருக்கிறது!” (ப.34) என்றும், “வறுமையிலே வாடினாலும் / வாழ்க்கையினை வாழ்ந்தவனே! / ஐம்பது வயதிலும் நீ / ஆறடிக் குழந்தை அய்யா!” (ப.49) என்றும் கண்ணதாசனின் பாட்டுத் திறத்திற்கும் பண்பு நலனுக்கும் புகழாரம் சூட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

‘கவிதை பாடிய காரல் மார்க்ஸ்’ என்றும், ‘சினிமாத் துறையின் ஜீவா’ என்றும், ‘உழைக்கும் வர்க்கத்தின் வேதம்’ என்றும், ‘ஒடுக்கப்பட்டவர்களுக்காக ஒலித்த நாதம்’ என்றும் ‘திரைப்பாடல்களில் வியர்வை வாசம் வீசத் தொடங்கியது இவரது வருகைக்குப் பிறகுதான்!’ என்றும் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையாரையும் அவரது பாடல்களையும் தம் கவிதையில் அடையாளம் காட்டும் தங்க.செந்தில்குமார்,

“உன் பாட்டுக்கு உதடசைத்து / உதடசைத்து
எங்கள் நடிகர்கள் / தலைவர்கள் ஆனார்கள்…
நீயோ / இருபத்தொன்பதிலேயே
அமரன் ஆனாய்! … / மக்கள் கவிஞனே!
உனக்கு / மரணமில்லை!” 
  (ப.38)

எனக் அக் கவிதையை முடித்து வைப்பது முத்தாய்ப்பு

“தேசப் பற்று / அவரைத் / திசை திருப்பியது!
ஆடையை / நெய்த விரல்கள்
ஆனந்த விடுதலையை / நெய்ய / ஆசைப்பட்டன!
தறி மட்டுமே / அறிந்த நெஞ்சில்
சுதந்திரப் பொறிவந்து / சூல் கொண்டது!” 
  (ஊருணி, ப.92)

என்னும் தியாக சீலர் திருப்பூர் குமரனைப் பற்றிய தங்க.செந்தில்குமாரின் வரலாற்றுப் பதிவு நெஞ்சை அள்ளும் சிறப்பு வாய்ந்தது!

மாமன்னன் இராராச சோழனை ‘அரச மரபின் ஆச்சரியம்!’ (ஊருணி, ப.62) என்றும், ‘வேந்தர் வரலாற்றில் வேறுபட்டவன்!’ (ப.72) என்றும் போற்றிப் பாடும் தங்க.செந்தில்குமார்,

“ . . . . . . கம்பீர வேந்தனே!
சிவ நேயமும் / ஜன நேயமும்
இரண்டறக் கலந்தது / உன் / ஈடில்லா வாழ்வு!
உனக்கு முன்பே / ஆண்டவர் நூறு பேர் உண்டு…
ஆனாலும் / ஏழைகளின் அழைப்புக்கு
நூற்று எட்டைப் போல் / ஓடி வந்த
அரச ஆம்புலன்ஸ் / நீ மட்டும் தான்!”  
 (ப.68)

என விளங்கு(ம்) உதாரணத்தைக் கையாண்டு மாமன்னனின் மாண்பினை உயர்த்திப் பிடித்துள்ளார்.

தங்க.செந்தில்குமாரின் கண்ணோட்டத்தில் டாக்டர் கலைஞர் ‘காலத்தின் கொடை’ (ஊருணி, ப.47); ‘அரசியல் வரலாற்றின் / அறுபது வருஷத்தின் ஆண்மை!’ (ப.49); மொழிப் போர் என்னும் ‘வீரியப் போருக்குச் சூரியத் தலைவன்!’ (ப.56). அவரது நீண்ட, நெடிய வாழ்க்கை உலக மக்களுக்கு வழங்கிடும் உயரிய செய்தி இதுதான்:

“உடல் தளர்ந்த போதும் / உள்ளம் தளராமல்
நீ ஆற்றும் / சமூகப் பணி தான்
உலக மக்களுக்கு / உன் வாழ்க்கை வழங்கும் செய்தி!” 
 (ப.59)

ஆற்றல்சால் ஆளுமையாளர்களைப் பற்றிய தங்க.செந்தில்குமாரின் கவிதைகளுள் முத்திரைக் கவிதையாகச் சுடர்விட்டு நிற்பது ‘தியாகச் சுடர் காமராசர்’ என்னும் கவிதை ஆகும். ‘கலப்படம் இல்லாத கறுப்புத் தங்கம்’ என்றும், ‘ஆண் மணிமேகலை’ என்றும் ‘கள்ளுக்கடை திறப்பதிலேயே / கவனமாக இருக்கும் / ஆட்சியாளர்களுக்கு மத்தியில் / கல்விக் கண் திறந்த தியாகச் சுடர்’ என்றும், ‘எளிமையாய் உலா வந்த இலக்கணம்’ என்றும், ‘அரசாங்கச் சுகத்தை விரும்பாத அதிசயப் பிறவி’ என்றும், ‘அரசியல் வரலாற்றின் அற்புதம்’ என்றும் பெருந்தலைவர் காமராசரின் ஆளுமைப் பண்புகளைச் சிறப்பித்துப் பேசும் தங்க.செந்தில்குமார்,

“நீ / நாடார்…
எங்கள் / அரசியல்வாதிகளால்
படிக்கப்பட வேண்டிய / கோனார்!”    
 (ப.26)

என நிறைவு செய்திருப்பது அருமை! இங்கே ‘நாடார்’, ‘கோனார்’ என்னும் இரு சாதிப் பெயர்களையும் வைத்துக் கொண்டு கவிஞர் ஆடியிருக்கும் சொல் விளையாட்டு அற்புதம்! காமராசர் ‘நாடார்’ – யாரிடமும், எதையும் ‘நாடார்’, பதவி சுகத்தையும் ஒருபோதும் ‘நாடார்’; இன்றைய அரசியல்வாதிகளுக்கோ அவர் படிக்கப்பட வேண்டிய ‘கோனார்’ – பாட நூல்களுக்கு எழுதப்பெறும் துணைநூல் (Notes) போன்றவர் – என்னும் பொருளில் இச் சொல்லை ஆண்டிருக்கும் கவிஞரின் சதுரப்பாடு நன்று.

“வள்ளுவரும் மாணவராய் ஆனார்
திருக்குறளில் தேர்வெழுதப் போனார்
முடிவு வெளியாச்சு
பெயிலாகிப் போச்சு -
பாவம் அவர் படிக்கவில்லை கோனார்!”

என்னும் கவிக்கோ அப்துல் ரகுமானின் குறும்பா இங்கே நினைவுகூரத் தக்கது.

உயிர் நாதமாக ஒலிக்கும் மனித நேயம்


மூத்த எழுத்தாளர் வல்லிக்கண்ணன் ‘யாத்திரை’ என்னும் தொகுப்பிற்கு எழுதிய அணிந்துரையில் குறிப்பிடுவது போல், “கவிஞர் தங்க.செந்தில்குமாரின் மனித நேயமும் அன்பு உணர்வும் அவரது கவிதைகளில் உயிர்நாதமாக ஒலிக்கின்றன” (ப.8).

“மனித நேயம் என்று ஒரு / மாணிக்க வார்த்தையுண்டு
புனித வார்த்தை இதன் / பொருள் புரிந்து கொண்டாயா?”


                                                                                              (யாத்திரை, ப.97)

என்றும்,

“இனி வரும் / நூற்றாண்டுகளில் / மனித நேயமே / நமது இலக்கு…
அதனால் உன்னைத் துலக்கு!”   
  (யாத்திரை, ப.87)

என்றும் இளைய தலைமுறையினருக்கு அறிவுறுத்தும் கவிஞர், ‘மனிதர்களை நேசிக்கப் பழகு!’ எனவும் வழிகாட்டுகின்றார். ‘சிநேகமாய்ச் சில…’ என்னும் தலைப்பில் படைத்த கவிதையில் அவர், ‘இனிமை பிறக்க / இதயத்தால் உறவாடு!’ என்றும், ‘மாற்றானை / மதிக்கப் பழகு!’ என்றும், ‘ஒற்றுமை உணர்வை / உனக்குள் விதை!’ என்றும், ‘அறிவின் ஆற்றலால் / உழைப்பவன் / உயர்வதற்கான / புதிய சூத்திரம் கண்டுபிடி!’ என்றும், ‘முட்களோடும் சிநேகம் கொள்!’ என்றும், ‘காயங்களோடு கை குலுக்கு!’ என்றும் எடுத்துரைத்து, ‘முகாரி ராகத்தின் / முற்றுகை மையமாய்’ அழுது கிடக்காமல் – வாழ்ந்து கொண்டிராமல், வாழ்வில் இன்பங்களை மட்டுமே எதிர்பார்க்காமல், சோகங்களையும் சுகமென்று சொல்லக் கற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்துகின்றார். ‘மேடு பள்ளங்கள் / சாலைகளில் கூட இல்லாது / சமப்படுத்துவோம்!’ என்னும் அவரது அறைகூவல் குறிப்பிடத்தக்கது.

‘வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம்!’ என்னும் கொள்கை முழக்கம், தங்க.செந்தில்குமாரின் கைவண்ணத்தில் ‘வீடுதோறும் மனிதம் வளர்ப்போம்’ என்ற புதிய வடிவினை எடுக்கின்றது. சென்னைத் தொலைக்காட்சியின் பரிசு பெற்ற அக் கவிதையின் வாயிலாக இளைய பாரதத்திற்குக் கவிஞர் இயம்பும் சேதி இது தான்:

“ . . . . . . . . . தோழா!
செவ்வாய்க் கிரகத்தை ஜெயிப்பது பிறகு!...
சிநேகம் என்பதை முதலில் பழகு!...
மனிதம் என்பது மரகத வெளிச்சம்
மனங்களில் எல்லாம் பாயவிடு!” 
 (யாத்திரை, ப.77)

கவிஞரின் கண்ணோட்டத்தில் மூளையின் செழுமையைக் காட்டிலும் முக்கியமானது, முதன்மையானது இதயத்தின் இரக்கமே!

ஜீவகாருண்யம் – உயிர் இரக்கம் என்றால் உடனே நம் நினைவுக்கு வருபவர் வடலூர் வள்ளலார். ‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்ற அளவிலே நின்றார் அவர். கவிஞர் தங்க.செந்தில்குமாரோ இன்னும் ஒரு படி மேலாக,

“வாடிய பயிரைக் / கண்டபோதெல்லாம் / வாடு!
காய்ந்த செடிகளைக் / கண்டால் / கண்ணீர் விடு... / பிறகு
தண்ணீர் விடு!”   
    (எல்லார்க்கும் பெய்த மழை, ப.72)

‘வாடு!’ என்றும் ‘கண்ணீர் விடு’ என்றும் சொல்வதோடு நின்று விடாமல், வாட்டம் போக்கத் ‘தண்ணீர் விடு!’ எனவும் அறிவுறுத்துவது நோக்கத்தக்கது.

இளைய தலைமுறையினருக்கான வாழ்வியல் பாடங்கள்


ஆழ்ந்த உறக்கத்திலும் கவலையிலும் கண்ணீரிலும் சலிப்பிலும் சோர்விலும் விரக்தியிலும் வேதனையிலும் வாடி இருக்கும் இளைய தலைமுறையினருக்குத் தங்க.செந்தில்குமார் தமது கவிதைகளின் வாயிலாக வலியுறுத்தும் வாழ்வியல் பாடங்கள் – அனுபவ மொழிகள் – வருமாறு:

1. ‘திற! / முதலில் / உன் விழிகளைத் திற!’ (கிழக்கே ஒரு மின்மினி, ப.21). ‘விழி! எழு! குறிக்கோளை அடையும் வரை ஓயாது உழை!’ என்னும் வீரத் துறவி விவேகாநந்தரின் வைர வரி இங்கே ஒப்புநோக்கத்தக்கது.

2. ‘தோள் உயர்த்து! / நம்பிக்கை எண்ணங்களை / நெஞ்சில் விதை!’   (கிழக்கே ஒரு மின்மினி, ப.22).

“அழுகையோடு பார்த்தால் / இரண்டடி மதிலும் / இமயம்!
நம்பிக்கையோடு பார்த்தால் / புல்நுனியும் / போர்வாள்!
இதயத்தில் முதலில் / நம்பிக்கையை நடவுசெய்!”


                                                             (கிழக்கே ஒரு மின்மினி, ப.39)

என்னும் கவிஞரின் வாக்கு இளைய தலைமுறையினர் தமது நெஞ்சங்களில் கல்வெட்டுப் போல பதித்து வைத்துக் கொள்ள வேண்டிய ஒன்று ஆகும்.

3. ‘தோல்விகளைக் கண்டு / துவண்டு போகாதே! / தோல்வி- / அது / வெற்றி தேவதை / உன் / விலாசம் தேடுகிறாள் என்பதற்கான / முதல் அறிகுறி!’ (பருவப் பல்லவிகள், ப.47). ஒரு மனிதன் வெற்றியை விட, தோல்வியில் கற்றுக் கொள்ளும் பாடங்களே மிகுதி எனலாம்.

4. ‘ உன் / விழிகளை விசாலமாக்கு!
செவிகளைக் கூர்மையாக்கு!
அப்போதுதான் / வாழ்க்கைப் பாடத்தை / நீ
வாசிக்க முடியும்!’  
(பருவப் பல்லவிகள், ப.52)

கவிஞரின் பார்வையில் வகுப்பறைப் பாடத்தை விட, ஓர் இளைஞர் தெருவுக்கு வந்து வாழ்க்கைப் பாடத்தை வாசிப்பதே இன்றியமையாதது.

5. “ எத்தனை ஆண்டானாலும் சரி / வரலாற்றில் இடம்பிடி!
முடியாவிட்டால் / வாழ்க்கையில் இடம்பிடி!”


                                     (கிழக்கே ஒரு மின்மினி, ப.37)

இளைய தலைமுறை வரலாற்றைப் படிப்பதோடு நின்று விடாமல் சாதனை புரிந்து வரலாற்றில் இடம் பிடிக்க முயல வேண்டும்; முடியாத போது, வாழ்க்கையிலாவது ஒரு குறிப்பிடத்தக்க இடத்தினைப் பிடித்துக் காட்ட வேண்டும். ஏனெனில், ‘மனிதரின் வாழ்க்கை மிகப்பெரும் பேறு’ (ஊருணி, ப.110). இதன் மகத்துவம் உணர்ந்து, எடுத்த மனிதப் பிறவிக்குப் பெருமை சேர்த்திட வேண்டும் என்பது கவிஞரின் திண்ணிய கருத்து.

6. ‘சிறிது பெரிது எனச் சாதனை நிகழ்த்து’ என இளையோர்க்கு அறிவுறுத்தும் கவிஞர்,

“அழுது கிடப்பவன் பசியை நிறுத்து!
ஆண்டவன் படையல் அப்புறம் நடத்து!”
(ஊருணி, ப.111)

என வலியுறுத்துவது அவரது முற்போக்குச் சிந்தனையைப் பறைசாற்றுவது ஆகும்.

அறச் சீற்றமும் சத்திய ஆவேசமும்


ஒரு கவிஞர் என்ற முறையில் தங்க.செந்தில்குமாரின் படைப்-பாளுமையில் மேலோங்கிக் காணப்பெறும் கூறுகள் இரண்டு:

1. பாரதியின் அறச் சீற்றம் / 2. பாரதிதாசனின் சத்திய ஆவேசம்
தங்க.செந்தில்குமாரின் கவிதைகளில் இவ்விரு கூறுகளும் சிறந்து விளக்கும் இடங்கள் சிலவற்றை ஈண்டுக் காணலாம்.

“இது பொறுப்பதில்லை – தம்பி / எரிதழல் கொண்டு வா!
கதிரை வைத்திழந்தான் – அண்ணன் / கையை எரித்திடுவோம்”


                          (பாரதி பாடல்கள்: ஆய்வுப் பதிப்பு, ப.300)

எனப் பாரதியாரின் ‘பாஞ்சாலி சபத’த்தில் வெகுளியின் உச்சத்தில் நின்று வீமன் தம்பி விசயனிடம் வெடிப்புறப் பேசுவான். வீமனின் கூற்றில் இடம் பெற்றுள்ள ‘தம்பி! எரிதழல் கொண்டு வா!’ என்னும் உயிர்ப்பான அடியினைத் தலைப்பாகக் கொண்டே ஒரு கவிதை படைத்துள்ளார் தங்க.செந்தில்குமார்.
“ தம்பி! / எரிதழல் கொண்டு வா! / வறுமையைக் கொளுத்துவோம்!” எனத் தொடங்கும் அக் கவிதை, “தம்பி! / எரிதழல் கொண்டு வா! / வறுமையை மட்டுமில்லை... / வறுமைக்கு வழி செய்யும் / வஞ்சகரையும் கொளுத்துவோம்...” என நிறைவு பெறுவது முத்தாய்ப்பு.

எழுத்தாளர் ஜெயகாந்தன் ஒரு முறை சினம் பொங்க, “மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை மட்டுமல்ல, மடையர்களையும் கொளுத்துவோம்” எனப் பேசியது இங்கே நினைவுகூரத் தக்கது.

‘வறுமையை விரட்டுவோம்!’ என ஒவ்வொரு தேர்தலின் போதும் உணர்ச்சி மிக்க குரலில் வாக்குறுதியை வாரி வழங்கி விட்டு, வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பிறகு ‘தங்கள் வறுமையை மட்டுமே விரட்டும்’ ஆரசியல்வாதிகளின் அந்தரங்கத்தினைத் தோலுரித்துக் காட்டும் தங்க.செந்தில்-குமார் பாரதியின் அடிச்சுவட்டில்,

“முதலில்- / மனிதனின் நிர்வாணத்திற்கு / நிவாரணம் செய்யுங்கள்-
பிறகு / தெய்வங்களுக்குப் / பட்டாடையுடுத்திப் பார்க்கலாம்!
முதலில்- / ஒட்டிய வயிறுகளுக்குக் / கஞ்சி கொடுங்கள்-
பிறகு இறைவனுக்குப் / பஞ்சாமிர்தம் படைக்கலாம்!
முதலில்- / வறண்ட நாக்குகளின் / தாகம் தீருங்கள்-
பாலாபிஷேகங்களைப் பற்றிப் / பிறகு பரிசீலிக்கலாம்!”


எனச் சீற்றத்துடன் மொழிவது குறிப்பிடத்தக்கது.

‘பாட்டுக்கு ஒரு புலவர்’ பாரதிக்கு நிகராகத் தங்க.செந்தில்குமார் பெரிதும் போற்றுவது ‘பாவேந்தர்’ பாரதிதாசனை. அவரது நூற்றாண்டினை ஒட்டி எழுதிய கவிதையில் பாவேந்தருக்குக் ‘கவிதைக் காட்டாறு’ என்றும், ‘தமிழின் ஆயுதம்’ என்றும், ‘பகுத்தறிவுப் பாடகன்’ என்றும், ‘கவியுலகப் பகலவன்’ என்றும், ‘உண்மையைப் பாடியவன்’ என்றும், ‘விடிவைத் தேடியவன்’ (தென்றலை அனுப்புங்கள், ப.59) என்றும் கவிஞர் புகழாரம் சூட்டியுள்ளார். கவிஞர் மீரா ‘கிழக்கே ஒரு மின்மினி’ நூலுக்கு எழுதிய அணிந்துரையில் குறிப்பிடுவது போல், ‘இவர் (தங்க.செந்தில்குமார்) குரலில் பாவேந்தரின் சத்திய ஆவேசம் இருக்கிறது. புதியதோர் உலகு செய்யும் புரட்சிக் கனல் இருக்கிறது”. ‘மானிட சமுத்திரம் நானென்று கூவு’ என்னும் தலைப்பில் பாடிய கவிதையில்,

“போராடு தமிழாநீ போராடு – வாழ்வில்
புல்லர்களை எதிர்த்தேநீ போராடு...
நாதியற்றுப் போனாயே தமிழா, எளிதாய்
நசுக்கிவிட நீயும் நீர்க் குமிழா?...
சகிக்காதே போர்க்கணையை ஏவு - மானிட
சமுத்திரம் நானென்று கூவு!”     
  (கிழக்கு ஒரு மின்மினி, ப.25)

எனத் தங்க.செந்தில்குமார் பாரதிதாசனின் அடிச்சுவட்டில் தமிழர்க்கு அறைகூவல் விடுப்பது குறிப்பிடத்தக்கது.

இதே போல ‘எழடா கதிரே!’ என்னும் தலைப்பில் பாடிய கவிதையிலும்,

“இளமை நதியே- / எழுச்சிப் புயலே!
விழியில் ஏனோ துக்கம் – அட / இமயம் உந்தன் பக்கம்!...
எழடா கதிரே! / ஏனினி மயக்கம்?
புறப்படு நாளை வெற்றி – இனி / புவியே உன்னைச் சுற்றி”

                          (கிழக்கே ஒரு மின்மினி, பக்.17; 19)

என இளந்தமிழர்க்கு எழுச்சியும் நம்பிக்கையும் ஊட்டியுள்ளார் தங்க.செந்தில்-குமார்.

புதியதோர் உலகம் செய்வதற்கு முன், கெட்ட போரிடும் உலகத்தை வேரொடும் சாய்க்க வேண்டியது இன்றியமையாத பணி. அது போல, படிப்பவர் நெஞ்சங்களில் நம்பிக்கையை விதைப்பது போல ஒரு கவிஞர் செய்ய வேண்டிய அருமையான பணி. அவர்களது உள்ளங்களில் குடிகொண்டிருக்கும் கண்மூடித்தனமான மூட நம்பிக்கைகளை வெட்டிச் சாய்ப்பது. இவ் வகையில் குறிப்பிடத்தக்க தங்க.செந்தில்குமாரின் குறுங்கவிதை ஒன்று வருமாறு:

“ஆசையாய் வளர்த்த / ‘அம்மு’ப் பூனை
அடிபட்டுச் செத்தது / நேற்று லாரியில்
வீட்டை விட்டு / வெளியேறிய போது
குறுக்கே போனது / எந்தப் பூனையோ?” 
     (யாத்திரை, ப.53)

பூனை குறுக்கே போவது சகுனத் தடை; ‘போன காரியம் உருப்படாது’ என்பது காலங்காலமாக மக்கள் மனங்களில் இருந்து வரும் ஒரு மூட நம்பிக்கை. இதனை வாழைப் பழத்தில் ஊசியை ஏற்றுவது போல இக் கவிதையில் குறிப்பாகச் சாடியுள்ளார் கவிஞர்.

தமிழ்த்தாய்க்கும் கவிஞனுக்கும் இடையே நிகழும் உரையாடல்


தமிழ்த் தாய்க்கும் கவிஞனுக்கும் இடையே நிகழும் உரையாடல் வடிவில் ஒரு நல்ல கவிதை படைத்துள்ளார் தங்க.செந்தில்குமார். இன்று திரை உலகும், இதழ்களும், இளைஞர்களும், ஆட்சியாளர்களும், தமிழாசிரியர்களும், கவிஞர்-களும், பெற்றோர்களும் தமிழுக்கு உரிய இடத்தினையும் மதிப்பினையும் தராமல், ஆங்கிலத்தையே ஆராதனை செய்து வரும் கொடுமையைத் தமிழ்த் தாயிடம் கவிஞன்,

“ஒரு காலத்தில் / ஊருக்கெல்லாம்
உலக வங்கியைப் போலக் / கடன் கொடுத்தவள் நீ!
இன்று உன் / பிள்ளைகளோ
இந்தியாவைப் போல் / கடன் வாங்குகிறார்கள்!”


                          (எல்லார்க்கும் பெய்த மழை, ப.41)

என்றும்,

“ ‘மம்மி’ என்று / மகன் அழைக்கும் நேரத்தில் தான்
‘ஈன்ற பொழுதினும் / பெரிது உவக்கிறாள்’
எங்கள் / தமிழகத் தாய்!
இன்று / ஆங்கிலப் பள்ளிகளுக்குத் தான் / அமோக வசூல் தாயே!
முதலிரவு அன்றே / முன்பதிவு செய்தால் தான்
பிறக்கும் பிள்ளைக்கு / ஆரம்ப வகுப்புக்கே /
அனுமதி கிடைக்கும்!”   
     (ப.48)

என்றும் உணர்ச்சி மிக்க மொழியில் எடுத்துரைக்கிறான்; பிள்ளைகளின் பெயர்களில், கையெழுத்துகளில், கடைப்பெயர்களில், கடைத்தெருவில் தமிழ் இல்லாத அவல நிலை பற்றியும் கூறுகிறான். இவற்றை எல்லாம் கேட்டு நெஞ்சு பொறுக்காத வலியுடன் தமிழ்த்தாய், ‘இந்த அவல நிலை மாறாதா?’ என்று கவிஞனிடம் கேட்கிறாள்; தனது தொன்மையையும் தூய்மையையும் வலிமையையும் பழைய வாழ்க்கையையும் எடுத்துச் சொல்லிப் புலம்புகிறாள்; ‘என்னை இழிவாக்கி / எனக்குஎதிராய்ப் போர் தொடுத்து / மண்ணில் மறைந்து கொண்டு / சதி செய்யும் சக்தி எது?... எனக்கு உடனே சொல்’ என்று கவிஞனிடம் கேட்கிறாள். அப்போது கவிஞன் தமிழ்த் தாயிடம் மறுமொழி கூறுவதாகத் தங்க.செந்தில்குமார் படைத்துள்ள வரிகள் பொருள் பொதிந்தவை; ஆழ்ந்து சிந்திக்கத் தக்கவை:

“அருமைத் தமிழ்த்தாயே! / ஆற்றல் மிகப் பெற்றவளே!
சத்தியமாய் நான் சொல்வேன் / சாதனைத் திருமகளே!
உன்னை அழிப்பதற்கு / உலகில் எவரும் இல்லை...
உன் பிள்ளைகளே / உனக்கு எதிரி / உன் பிள்ளைகளே / உனக்கு எதிரி”

                       (எல்லார்க்கும் பெய்த மழை, பக்.39-54)

‘திருடனாய்ப் பார்த்துத் திருந்தா விட்டால், திருட்டை ஒழிக்க முடியாது’ என்பது போல, ‘தமிழனாய்ப் பார்த்துத் திருந்தா விட்டால், தமிழைக் காக்க, தமிழை வளர்க்க வழியில்லை’ என்பதே கவிஞரின் பார்வையில் கசப்பான உண்மை.

தங்க.செந்தில்குமாரின் முத்திரைக் கவிதை


‘மெய்’ என்ற தலைப்பில் தங்க.செந்தில்குமார் படைத்துள்ள முத்திரைக் கவிதை:

“பதினான்கில் / பருவமடைந்து / பதினெட்டில் / திருமணமாகி
இருபதாம் நாள் / கணவன் இறக்க...
தனிமை / தனிமை / தனிமை
அன்றாடம் / அவளுக்காக
இரங்கல் தீர்மானம் / இயற்றிக் கொண்டுதான் / இருக்கிறார்கள்...
முப்பது வருஷமாய் / ஒரே அறையில்
படுத்துக் கொள்ளும் / அப்பாவும் அம்மாவும்”      
     (யாத்திரை, ப.54)

தமிழ்த் திறனாய்வு முறையான நோக்கு நெறி நின்று ஆராயும் போது இக் கவிதையில் வெளிப்படும் நயங்களும் நுட்பங்களும் வருமாறு:

1. பருவம் அடைந்தது 14 வயதில்; திருமணம் ஆனது 18 வயதில்; கணவன் இறந்ததோ திருமணம் ஆன இருபதாம் நாளில். 14-18-20: ஏறுமுகமாக எண் வரிசையை இங்கே கவிஞர் பயன்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

2. தனிமை என்ற சொல்லை மூன்று முறை அடுக்கிக் கையாண்டிருப்பது விதவை வாழ்வின் அவலத்தைப் புலப்படுத்துகின்றது.

3. இளம் விதவையான அப்பெண்ணின் அப்பாவும் அம்மாவும் அவளுக்காக அன்றாடம் இரங்கல் தீர்மானம் இயற்றிக் கொண்டு தான் இருக்கிறார்களாம். பாரதி நெஞ்சு பொறுக்காமல் வேதனையோடு பாடியது போல், “நெட்டை மரங்கள் என நின்று புலம்பினார், பெட்டைப் புலம்பல் பிறர்க்கு அது துணையாகுமோ?” இரங்கல் தீர்மானம் இயற்றுவது என்பது உதட்டளவில் செய்யும் உதவி போலத் தான்!

4. பதினெட்டே வயதான தமது இளம் விதவை மகளுக்காக அன்றாடம் இரங்குகின்ற அவளது அப்பாவும் அம்மாவும் முப்பது ஆண்டுகளாய் ஒரே அறையில் தான் படுத்துக் கொள்ளுகிறார்களாம்!

5. ‘மெய்’ என்ற சொல்லுக்கு உண்மை என்பதோடு, உடம்பு என்னும் மற்றொரு பொருளும் உண்டு. வயிற்றுப் பசி போல உடம்பின் பசிக்கும் வயது வரம்போ வேறுபாடோ கிடையாது.

6. முப்பது ஆண்டுகளாய் இணைபிரியாமல் ஒரே அறையில் படுத்துக் கொள்ளும் பெற்றோர்க்கு பதினெட்டு வயதுப் பருவ மங்கையின் உணர்வு நிலையைப் புரிந்து கொள்ள முடியாமல் போனது கொடுமையிலும் கொடுமை; அவலத்திலும் அவலம்.

இன்றைய காதலின் நோக்கும் போக்கும்


இன்றைய காதல் ‘செம்புலப் பெயல் நீர் போல, அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே’ (குறுந்தொகை, 40) என்ற முறையில் அமைந்த ‘செம்புலப் பெயல்நீர்க் காதல்’ ஆகவும் இல்லை; ‘…தாம் பிரிந்தனவே’ (யாத்திரை, பக்.105-107) என்னும் தலைப்பில் தங்க.செந்தில்குமார் ஒரு கவிதை பாடிஇருப்பது இங்கே நினைவுகூரத்தக்கது. பாரதி ‘குயில் பாட்’டில் பாடுவது போல், ‘காதல், காதல், காதல், காதல் போயின் காதல் போயின், சாதல் சாதல் சாதல்’ என்னும் வகையில் அமைந்த உண்மைக் காதல் ஆகவும் இல்லை. மாறாக, அது, இன்றைய கால கட்டத்தின் நோக்கையும் போக்கையும் காட்டும் யதார்த்தமான ஒன்றாக விளங்குகின்றது. ‘பரிணாமம்’ என்ற கவிதையில் தங்க.செந்தில்குமார் அதனை உள்ளது உள்ளபடி படம்பிடித்துக் காட்டியுள்ளார். முன்னாள் காதலர்கள் இருவரும் ஒருநாள் தற்செயலாகச் சிவகங்கைப் பூங்காவில் சந்தித்துக் கொள்கிறார்கள். ‘அம்மாவின் உடல்நிலை, அப்பாவின் பணி ஓய்வு, காதலனின் அரசாங்க வேலை, தங்கையின் திருமணம்’ என எல்லாவற்றையும் பொறுமையாகப் ‘வாழ்ந்து முடிந்த ஒரு பாட்டியின் பக்குவத்தோடு’ காதலனிடம் விசாரிக்கிறாளாம் காதலி; காதலன் இளைத்துப் போய் இருப்பதாக அவன் மீது இரக்கம் காட்டுகிறாளாம். தன் கணவனுக்கு முன்னாள் காதலனை அறிமுகப் படுத்தவும் செய்கிறாளாம். அவளது கண்கள் கடந்த காலத்தின் காயங்களைத் துளியும் காட்டவில்லையாம். இனி, கவிஞரின் சொற்களில் இக் கவிதை எப்படி முடிகிறது எனக் காணலாம்:

“புறப்படும் நேரத்தில் / ‘மாமாவுக்கு / டாட்டா சொல்லு’
என்று உன் / குழந்தையிடம் நீ / கூறிய போது / குறும்பாய்ச் சிரித்தது
உள் மனசு / எவ்வளவு / எளிதாய்
வாழ்க்கையை / வசப்படுத்திவிட்டாய்
பொறாமையாய் / இருக்கிறது உன் மீது”       
   (யாத்திரை, ப.68)

ஒரு பெண்ணால் தனது பழைய காதலனை மறந்து, புதிய வாழ்க்கைக்கு ஏற்பத் தன்னை எளிதாக மாற்றிக் கொள்ள முடிகிறது; ஆனால், ஓர் ஆனால் தனது கடந்த காலத்தின் காதல் அனுபவங்களை, காயங்களை மறக்க முடியவில்லை; தன்னை மாற்றிக் கொள்ளவும் இயலவில்லை. இதைக் காலத்தின் ‘பரிணாமம்’ என்பதா? இல்லை, கடந்த காலத்தின் அனுபவங்களை முற்றிலுமாக மறந்து, புதிய வாழ்க்கைக்கு ஏற்பத் தன்னை எளிதாக மாற்றிக் கொண்டு விட்ட பெண் உள்ளத்தின் ‘பரிணாமம்’ என்பதா? ‘பரிணாமம்’ என்றால் ‘உள்ளது சிறத்தல்’ என்று பொருள்படும் அல்லவா? இங்கே ‘உள்ளதை உள்ளபடி ஏற்றல்’ அல்லவா நிகழ்ந்திருக்கிறது?

‘வளையும் வானம்’ என்னும் கவிதையில் தங்க.செந்தில்குமார் படைத்திருக்கும் காதலன் வித்தியாசமானவனாகத் தோன்றுகிறான். அவன் தன் உள்ளங்கவர்ந்த காதலியிடம்,

“நேசிப்பிற்கு உரியவளே! / நீ என்னை / நிராகரித்தாலும்
தாடி வளர்த்துத் / திரிய மாட்டேன்... / ஏனெனில் / காதல் என்பது
மயிரின் அடையாளமல்ல... / உயிரின் அடையாளம்!”

                                             (கிழக்கே ஒரு மின்மினி, ப.61)

என உறுதியான குரலில் அறுதியிட்டு உரைக்கிறான்.

‘எழுதப்படாத ஒரு வரலாறு’ என்னும் தலைப்பில் எழுதிய கவிதையில், ‘ஓலைச்சுவடிக்குள் / உறங்கிக் கிடந்த தமிழை / ஊருக்குள் / உலவ வைத்த / உ.வே.சா. மாதிரி / எனக்குள் இருந்த என்னை / வெளிக் கொணர்ந்தவள் நீ!’ (யாத்திரை, ப.13) எனக் காதலி(யி)ன் வலிமையைக் காதலனின் கூற்றாகப் பதிவு செய்யும் தங்க.செந்தில்குமார், கவிதையின் முடிவில் – காதலி தன்னைப் பிரிந்து வேறொருவனைக் கைப்பிடித்து ஊரை விட்டு வெளியேறிச் சென்ற சூழலில் – முப்பதாம் வயதில், உலகம் கற்றுக் கொடுத்த அனுபவப் பாடத்தினை, காதலி பக்கத்து நியாயத்தினை உணர்ந்து கொண்ட நிலையில் – காதலனை இப்படிப் பேச வைக்கின்றார்:

“எந்தச் சிறப்புமில்லை / நம் காதலுக்கு
இருபதாம் நூற்றாண்டின் / இறுதியிலும்
தொட்டுக் கொள்ளாமலே / பிரிந்து விட்டோம் / என்பதைத் தவிர”  
      (ப.17)

இதோ போல், ‘நிறம் மாறுகிறாயா?’ என்னும் கவிதையில் அன்னையின் வரதட்சணைக் கனவுகளுக்காகத் தன்னை மாற்றிக் கொண்ட காதலனிடம் காதலி ‘இனியவனே!’ என விளித்துக் கூறுவதாகக் கவிஞர் படைத்துள்ள மொழிகளும் குறிப்பிடத்தக்கவை; இயல்பான முறையில் – நடப்பியல் பாங்கில் – அமைந்தவை:

“நீ கிடைத்தால் / நிம்மதி அதிகம்!
இல்லையென்றாலும்... / கண்டிப்பாய்க் / கருகிவிட மாட்டேன்!
உனக்கு / இன்னொரு பூவென்றால்... / எனக்கு / இன்னொரு தோட்டம்!”


                                         (கிழக்கே ஒரு மின்மினி, ப.30)

இங்ஙனம் காதலில் தோல்வியுற்றதும் தாடி வளர்த்துத் திரியாமல் – தற்கொலை செய்து கொள்ளாமல் – நெஞ்சுரத்தோடு வாழ்ந்து காட்டும் காதலர்களைப் படைத்திருப்பது தங்க.செந்தில்குமாரின் தனித்தன்மையைப் புலப்படுத்துகின்றது.

‘திறமை தான் இவரது செல்வம்!’


‘வறுமை திறமை / இரண்டும் கலந்து / வார்க்கப்பட்ட சிலை நான்!’ (எல்லார்க்கும் பெய்த மழை, ப.76) என ‘சுய புராணம்’ என்னும் தலைப்பில் எழுதிய கவிதையில் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கி இருந்தாலும், மக்கள் கவிஞர் ப(h)ட்டுக்கோட்டையாரின், ‘வறுமை நிலைக்குப் பயந்து விடாதே – திறமை இருக்கு மறந்து விடாதே!’ என்னும் வைர வரிகளுக்கு ஏற்ப நெஞ்சுரத்தோடும், ‘நாளை வரும் வாழ்வு’ என நம்பிக்கையோடும் வாழ்ந்து காட்டி, ‘இறந்த காலத்தின் பதிவுகளாக – நிகழ்காலத்தின் பாடல்களாக – எதிர்காலத்தின் வழிகாட்டிகளாக (யாத்திரை, ப.34) மதிக்கத்தக்க ‘படைப்புப் பல படைத்து பலரையும் உண்பிக்கும் உடைப்பெருஞ்செல்வராக’த் தமிழ் எழுத்துலகில் தங்க.செந்தில்குமார் வலம் வருவது குறிப்பிடத்தக்கது.
 

 

‘தமிழாகரர்’ முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.

 

 

 



 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்