கல்வி கேள்விகளில் சிறந்த பெரியோர்கள் பலர் பிறந்துள்ள பெரிய உலகம் இது!

பேராசிரியர் இரா.மோகன்


சேர மன்னர்கள் பலரது வரலாற்றினை உரைக்கும் எட்டுத்தொகை நூல் பதிற்றுப்பத்து. இந்நூலில் கூறப்படாத, இரும்பொறை மரபினைச் சார்ந்த மன்னர்களுள் ஒருவன் மாந்தரஞ்சேரல். இவன் ‘கோச்சேரமான் யானைக்கட் சேய் மாந்தரந்சேரல் இரும்பொறை’ என்றும் அழைக்கப் பெற்றான். இவன் கொல்லிமலைத் தலைவன்; யானையின் பார்வைக்கு நிகரான கூர்மையான பார்வையினைப் பெற்றவன்; தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனால் சிறை செய்யப்பட்டு, தப்பி வந்து மீண்டும் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றவன்; எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான ஐங்குறுநூற்றைத் தொகுப்பித்தவன்; குறுக்கோழியூர் கிழார் (புறநானூறு, 17, 20, 22), கூடலூர் கிழார் (புறநானூறு, 229), பொருந்தில் இளங்கீரனார் (புறநானூறு, 53) ஆகியோரால் பாடப்பெற்றவன். தாம் அஞ்சியவாறு இவன் இறந்தது கண்டு வருந்திக் கூடலூர் கிழார் பாடிய பாடல் ஒன்று (229) புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது.

ஒருமுறை சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் நாட்டில் இருந்த ‘விளங்கில்’ என்னும் ஊரைப் பகைவர்கள் முற்றுகையிட்டு, அங்கிருந்த மக்களைத் துன்புறுத்தினர். சேரமான் தனது வலிமைமிக்க யானைப் படையையும் குதிரைப் படையையும் கொண்டு சென்று பகைவர்களை வென்று அவ்வூரில் இருந்த மக்களைக் காப்பாற்றினான். ‘தனது வெற்றியைப் புகழ்ந்து பாடப் பெரும்புலவர் கபிலர் இருந்தால் நன்றாக இருக்கும்’ என்று மாந்தரங்சேரல் இரும்பொறை கூறினான். அதைக் கேட்ட புலவர் பொருந்தில் இளங்கீரனார், தம்மால் இயன்ற அளவில் சேரமானின் வெற்றிச் சிறப்பினைப் புகழ்ந்து பாடுவதாகக் கூறி இயற்றிய பாடல் இது:

“முதிர்வார் இப்பி முத்த வார்மணல்
கதிர்விடு மணியின் கண்பொரு மாடத்து
இலங்குவளை மகளிர் தெற்றி ஆடும்
விளங்குசீர் விளங்கில் விழுமம் கொன்ற
களங்கொள் யானைக் கடுமான் பொறைய!
விரிப்பின் அகலும், தொகுப்பின் அஞ்சும்;
மம்மர் நெஞ்சத்து எம்மனோர்க்கு ஒருதலை
கைம்முற் றலநின் புகழே என்றும்;
ஒளியோர் பிறந்தஇம் மலர்தலை உலகத்து
வாழேம் என்றலும் அரிதே; ‘தாழாது
செறுத்த செய்யுள் செய்செந் நாவின்
வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்
இன்றுளன் ஆயின் நன்றுமன்’ என்றநின்
ஆடுகொள் வரிசைக்கு ஒப்பப்
பாடுவன் மன்னால் பகைவரைக் கடப்பே”


வாகைத் திணையில் அரசனுடைய வெற்றியைப் பாடும் அரச வாகைத் துறையில் அமைந்த இப் பாடலின் தெளிவுரை வருமாறு:

“முதிர்ந்த நீண்ட சிப்பியில் உள்ள முத்துப் போல் பரவிக் கிடந்த மணலில், ஒளிவிடும் மணிகளால் கண்ணைப் பறிக்கின்ற மாடங்களில், விளங்கும் வளையல்களை அணிந்த மகளிர் திண்ணையில் விளையாடுவர். இத்தகைய புகழுக்கு விளக்கமாக நின்ற ‘விளங்கில்’ என்னும் ஊருக்குப் பகைவரால் துன்பம் ஏற்பட்டது. இதனைத் தீர்த்துப் போர்க்களத்தைத் தனதாக்கிக் கொண்ட யானைப் படையையும் விரைந்து செல்லும் குதிரைப் படையையும் உடைய இரும்பொறையே!

உன் புகழை விரிவாகக் கூறத் தொடங்கினால், அது மேலும் நீளும்; சுருக்கமாகத் தொகுத்துக் கூறலாம் என்றால், பல செய்திகள் விடுபட்டுப் போகும். ஆதலால், மயங்கும் நெஞ்சத்தை உடைய எம் போன்ற புலவர்களால் உன் புகழை உறுதியாக எடுத்துரைக்க முடியாது. அதனால் கல்வி கேள்விகளில் சிறந்த பெரியோர்கள் பிறந்த இப் பெரிய உலகத்தில் ‘வாழ மாட்டோம்’ என்று இருத்தலும் கூடாது.

‘பல்வேறு பொருள்களையும் உள்ளடக்கிய சிறந்த செய்யுட்களை விரைவாக இயற்றும் செவ்விய நாவையும் மிகுந்த கேள்வியையும் விளங்கிய புகழையும் உடைய கபிலன் இன்று இருந்தால் நன்றாக இருக்கும், அது பெற்றேன் இல்லை’ என்று நீ கூறினாய். உன் வெற்றிச் சிறப்பிற்குப் பொருந்தும் முறையில், நீ பகைவரை வென்ற திறத்தை யானும் என்னால் முடிந்த வரை புகழ்ந்து பாடுவேன்”.

நோக்கு நெறி நின்று ஆராயும் போது பொருந்தில் இளங்கீரனாரின் இப் புறப்பாடலில் புலனாகும் சிறப்புக் குறிப்புக்கள் வருமாறு:

 

  • 1. இப் பாடலில் இடம் பெற்றுள்ள ‘தெற்றி’ என்ற சொல்லுக்கு மகளிர் கை கோத்து ஆடும் குரவை ஆட்டம் என்று பொருள் கூறுவாரும உளர்.
     

  • 2. ‘விரிப்பின் அகலும்; தொகுப்பின் எஞ்சும்’ என்னும் இப் பாடலின் ஆறாம் அடி அறிஞர் பலராலும், பலமுறை மேற்கோள் காட்டப் பெற்ற சிறப்பினதாகும்.
     

  • 3. உலகம் பொல்லாதது என்றோ, இன்னாதது என்றோ எதிர்மறையாகக் கூறாமல், ‘ஒளியோர் பிறந்தஇம் மலர்தலை உலகத்து’ என உலகத்தைக் குறித்து உடன்பாடாகக் கூறியுள்ள பொருந்தில் இளங்கீரனாரின் கருத்து போற்றத்தக்கது.
     

  • 4. ‘செறுத்த செய்யுள் செய்செந் நாவின், வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன் இன்று உளன் ஆயின் நன்று’ என்னும் சேரமானின் கூற்று வடிவில் இப் பாடல் கபிலர் பெருமானுக்குச் சூட்டியுள்ள புகழாரம் கல்வி காரணமாக ஒருவர் தம் வாழ்வில் எய்தக் கூடிய பெருமித உணர்வுக்குக் கட்டளைக் கல் ஆகும்.
     

  • 5. ‘கபிலர் இன்று இல்லை; எனவே, யாராலும் சேரமானின் வெற்றியைச் சிறப்பாகப் பாட இயலாது’ என்று வாளா இருந்து விடாமல், தம்மால் இயன்ற வரை சேரமானின் வெற்றிச் சிறப்பினைப் பாட முன்வந்தது பொருந்தில் இளங்கீரனாரின் தன்னம்பிக்கையைப் பறைசாற்றி நிற்கின்றது.
     

 

‘தமிழாகரர்’ முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.

 

 

 




 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்