நீலம் காட்டும் அவலம்

பா.ரம்ஜான்



யற்கைப் பேரழிவு என்பது இயற்கையாக நிகழும் இடையூறுகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறிப்பது ஆகும். இந்தப் பேரழிவினால் மிகையான அளவில் பொருட்சேதம், உயிர்ச்சேதம் ஏற்படுவதுடன் சுற்றுச்சூழலும் விவரிக்க இயலாத அளவிற்கு சேதம் அடைகின்றது. கடற்கோள் அல்லது ஆழிப் பேரலை அல்லது சுனாமி என்பது கடல் அல்லது பெரிய ஏரி போன்ற பெரிய நீர்ப் பரப்புகளில் சடுதியாகப் பெருமளவு நீர் இடம் பெயர்க்கப்படும்போது ஏற்படும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அலைத் தொடர்களைக் குறிக்கின்றது.

நிலநடுக்கம் (பூமி அதிர்ச்சி), மண் சரிவுகள், எரிமலை வெடிப்பு, விண் பொருட்களின் மோதுகை போன்றவை சுனாமி அலைகளை ஏற்படுத்தக் கூடிய மூல காரணிகளாகக் கருதப்படுகின்றன. கடலுக்கு அடியில் ஏற்படும் நிலநடுக்கம் போன்ற மிகப் பெரிய மாறுதல்களால், திடீரென்று கடல் நீரானது மிகப் பெரிய அலைகளாக உருவம் எடுத்துக் கரையை அடைந்து பேரழிவுகளை ஏற்படுத்தும். அத்தகைய பேரழிவுகளை உணர்த்துகின்ற வகையில் திரைப்படப் பாடலாசிரியரும் புகழ்பெற்ற தமிழ்க் கவிஞருமான அறிவுமதி அவர்கள் தனது 'நீலம்' என்கின்ற குறும்படத்தைத் திறம்பட இயக்கிச் செதுக்கி உள்ளதைப் பற்றி அறிந்து கொள்ள முடிகின்றது.

அறிவுமதி பற்றிய குறிப்பு

கேசவன் - சின்னப்பிள்ளை
என்கின்ற இணையருக்கு மகனாக விருத்தாசலம் நகருக்கு அருகில் உள்ள சு. கீணணூரில் பிறந்தார் என்கின்ற தகவலினை இரா.சுப்பிரமணியனின் 'அறிவுமதி கவிதைகள் - ஓர் ஆய்வு' என்னும் நூலின் வாயிலாக அறிந்துகொள்ள முடிகின்றது. இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். மறைந்த திரைப்பட இயக்குநர் பாலுமகேந்திராவின் ஏழு படங்களுக்கு உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். கவிஞர் மீரா இவருக்குத் தமிழ் இலக்கியத்தின் மீது இருந்த விருப்பத்தினைக் கண்டு, கவிக்கோ அப்துல் ரகுமானிடம் அறிமுகப்படுத்தினார். அறிவுமதியின் இயற்பெயர் 'மதியழகன்' என்பதாகும். அவர் தனது பெயரையும் தன் நண்பரின் பெயராகிய 'அறிவழகன்' என்பதனையும் சேர்த்து 'அறிவுமதி' என்று வைத்துக் கொண்டார்.

அறிவுமதியின் படைப்புகள்

கவிதைத் தொகுப்பு

1. அவிழரும்பு
2. என் பிரிய வசந்தமே
3. நிரந்தர மனிதர்கள்
4. அன்பான இராட்சசி
5. புல்லின் நுனியில் பனித்துளி
6. அணுத்திமிர் அடக்கு
7. ஆயுளின் அந்தி வரை
8. கடைசி மழைத்துளி
9. நட்புக் காலம்
10. மணிமுத்த ஆற்றங்கரையில்
11. பாட்டறங் கவிதைகள்
12. அறிவுமதி கவிதைகள்
13. வலி

சிறுகதைத் தொகுப்பு

1. வெள்ளைத் தீ

குறும்படம்

1. நீலம்
பாடல்கள்

1. தமிழ் பிறந்தநாள் பாடல்


'நீலம்' உருவாக்கம் குறித்த அறிவுமதியின் கூற்று


'நான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்ற போது என்னுடைய நண்பன் அறிவழகனின் குடும்பத்தில் ஒருவனாக வளர்ந்தேன். கடலூர் துறைமுகம் சோனாங்குப்பத்தில் உள்ள அறிவழகனின் தந்தை சோ. சி. நடராசன், தாய் பருவதத்தம்மாள் ஆகியோர் என்னை ஒரு பிள்ளையாகவே கருதி அன்பு செலுத்தினார்கள். சோனாங்குப்பம் எனது இரண்டாவது தாயூர் ஆனது. சோனாங்குப்பத்திற்கும் தேவனாம்பட்டினத்திற்கும் இடையில் உள்ள அந்தக் கடற்கரையின் அதிகாலைகளும் அந்திகளும் தான் என்னைக் கவிஞனாக்கின. இந்தப்பகுதி ஆழிப்பேரலையால் தாக்கப்பட்டதை அறிந்ததும் துடித்தேன். ஊடனடியாக சென்னையில் இருந்து சென்று போய்ப் பார்த்தபோது உள்ளம் வலித்தது.

தமிழ்நாடு, ஈழம், அந்தமான் எனத் தமிழர்கள் வாழும் பகுதிகளையே தேடித்தேடித் தாக்கியுள்ளதே என்ற வேதனை மனதிற்குள். இந்த வேதனையை, மனசின் வலியைக் கவிஞன் என்ற முறையில் பத்து பாடல்களாக்கி வெளிப்படுத்தியுள்ளேன். நான் கற்றுக்கொண்ட திரைப்பட மொழியின் மூலம் இயக்குநர் என்ற முறையில் உலகத்திற்கு உணர்த்த வேண்டும் எனக் கருதி 'நீலம்' என்னும் பெயரில் இப்படத்தை இயக்கியுள்ளேன். என்னுடைய இனத்தின் வலியை இப்படத்தின் வழியே உலகத்தாரின் பார்வைக்குக் கொண்டு சென்றிருக்கின்றேன்.

என்னுடைய இந்த முயற்சிக்கு ஒத்துழைப்புக் கொடுத்து முழுச் செலவையும் செந்தூரன் ஏற்றுக் கொண்டார். ஒளி ஓவியர் தங்கர்பச்சான் ஒளிப்பதிவு செய்து தந்தார். அவரது மகன் அரவிந்த் பச்சான், நான் கதையைச் சொன்னபோது நன்றாக உள்வாங்கிச் சிறப்பாக நடித்தான். படத்தொகுப்புப் பணியிலிருந்து ஒதுங்கியிருக்கும் பீ.லெனின், இப்படத்தின் படத்தொகுப்பைச் செய்து கொடுத்தார். புது இளைஞர் ந. நிரு பின்னணி இசையைச் செய்தார். இவர்களும், இன்னும் அனைத்துப் பணிகளையும் மேற்கொண்ட யாரும் பணம் வாங்கிக் கொள்ளவில்லை. அனைவரும் என் நன்றிக்குரியவர்கள். இது எனக்கான பெருமையல்ல. இத்தனைபேரின் ஒத்துழைப்போடு நடந்த கூட்டு முயற்சி' என்று கவிஞர் அறிவுமதி 'நீலம்' உருவான உணர்வின் பின்னணி குறித்துக் கூறியுள்ளார்.

'நீலம்' திரையிடப்பட்ட விதம்

சுனாமி என்னும் ஆழிப்பேரலையானது 2004 டிசம்பர் 26 அன்று ஆயிரக்கணக்கான தமிழர்களை அடித்துச் சென்று கடல் விழுங்கிய நாளாக வரலாற்று முத்திரை பதித்து வி;ட்டது. அந்தச் சோகத்தினைப் பலரும் அவரவர் மொழியில் பதிவு செய்துள்ளனர். கவிஞர் அறிவுமதி தமது திரைமொழியில் அதனைப் பதிவு செய்துள்ளார்.

'நீலம்'
என்னும் பெயரில் பத்து நிமிடக் குறும்படமாகத் தயாரித்து உள்ளார். இப்படம் பிரான்சு நாட்டில் பாரீசில் நடந்த 'கேன்ஸ்' உலகத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. நிகழ்காலப் பிரச்சினையைப் பேசிய படமாக உலக சினிமா வல்லுநர்களால் பார்க்கப்பட்டு, பாராட்டையும் பெற்றுள்ளது.

குறும்படத்தின் ஆக்கத்திற்கு உரியவர்கள்


நடிப்பு : அரவிந்த் பச்சான் மற்றும் கடல்
தொகுப்பு : எஸ். சதீஷ் - ஜே. என். ஹர்ஷா
ஒலி மேய்ப்பர் : ஏ. எஸ். லஷ்மி நாராயணன்
படத்தொகுப்பு : பீ. லெனின்
ஒளி ஓவியம் : தங்கர் பச்சான்
இசை : ந. நிரு
தயாரிப்பு : தர்மசீலன் செந்தூரன்
கதை திரைக்கதை நெறியாள்கை : அறிவுமதிவு

'நீலம்' குறும்படத்தின் காட்சி


தமிழர் வாழும் பகுதிகளில் எல்லாம் சென்று ஆழிப்பேரலை நிகழ்த்திய சோகத்தின் வலியை வெளிக் கொணரும் முயற்சி தான் இந்தப் படைப்பு ஆகும். மொத்தம் பத்து நிமிடங்கள் மட்டுமே ஓடக் கூடிய 'நீலம்' எனும் இக்குறும்படத்தின் காட்சியானது இரைச்சல் இடும் அலை கடலோடு தொடங்குகின்றது.

தமிழரின் அடையாளமாக ஒற்றைப் பனை மரத்தின் புலத்தில் விரிகின்ற கடற்கரை வெளியின் கால் சுவடுகள் நடுவில் அலைகின்ற சிறுவன். வாழ வைத்த கடல் வாழ்வைப் பறித்த கொடுமை மனிதனுக்கு மட்டும் நேரவில்லை. கடலையே வாழிடமாகக் கொண்ட மீனும் மடிந்து கிடப்பது இயற்கையல்ல.

இலட்சக்கணக்கானோர் மடிந்த சோகத்தை, உயிரற்ற மீனும் நண்டும் நமக்கு உணர்த்துகின்றன. இழப்பு நிரம்பிய விழிகளுடன், கடலை நோக்கும் சிறுவன், தாங்கள் விளையாடிய கடல் வேட்டையாடிக் கொண்ட கோரத்தினை நிகழ்த்தியது நீதானா? என்னும் கேள்வியைத் தேக்கி நிற்கின்றான்.

மீண்டும் கடலில் இருந்து வெளிவந்து தங்கள் வாழ்க்கையைத் தொடங்கி விளையாடிக் கொண்டிருக்கும் நண்டுகளைப் பார்த்தவன் அலைகளை ஒட்டி ஓடிச் சென்று தேடுகி;ன்றான்.
மணலில் நண்டைத் தேடி எடுத்து, சிறுவன் கேட்கும் கேள்விகள் மொழி பேதம் அற்று அனைவருக்கும் புரியும் விதத்தில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.

'பார்த்தியா? எங்கம்மாவ நீ பார்த்தியா? நீ தினமும் கடலுக்குள்ள போய்ப்போய் தான வர்ற? சொல்லு! சொல்லு! எங்கம்மாவ பார்த்திருப்ப! நீ தான கடலுக்குள்ள போய் வர்ற? ஏன் சொல்ல மாட்டேங்குற? நீ எங்கம்மாவ பார்த்திருப்ப! சொல்ல மாட்டியா? சொல்லு! நீ எங்கம்மாவ பார்த்திருப்பதான??' என்று அச்சிறுவன் வேண்டுகோள் வைக்க நண்டானது பதில் சொல்லத் தெரியாமல் நழுவி விழுந்து கடலுக்குள் போகிறது.


கடல் மணலைக் குவித்துத் தாயின் மடியாக எண்ணிப் படுக்கும் சிறுவனைத் தொடத் தயங்குகின்றது கடல் அலை. தான் நிகழ்த்திய கோரத்தால் உறவின்றித் தவிக்கும் சிறுவனுக்கு ஆறுதல் சொல்ல எண்ணி வாடுகின்ற அலைகள் தயங்கித் தயங்கி அவனைத் தழுவும்போது அன்னையின் தாலாட்டாய் விரிகின்றது பின்னணி இசை.

எவ்வளவு தான் சோகம் நிகழ்ந்தாலும் வாழ்வைத் தேடி மீண்டும் கடலுக்குள் தானே போக வேண்டும் என்று மீண்டும் தங்கள் வாழ்வைத் தொடங்கும் நண்டுகள்... காற்றினூடே அலையும் வண்ணத்துப்பூச்சி... மெதுவாக எழுந்து ஆறுதல் சொல்லும் கடல் அலைகள்... கொடுக்கக் காத்திருக்கும் மனிதத்தைச் சொல்லும் கடற்கரை கால் தடங்கள்... என்று நெஞ்சினில் நம்பிக்கையை ஊட்டுகின்றது குறும்படம்.

பின்னணி இசையானது படத்திற்குப் பெரும்பலமாக அமைந்துள்ளது. அறிமுகமாகிய நிருவுக்குச் சிறப்பான பாராட்டுகள் குவிந்துள்ளன. தங்கர்பச்சானின் ஒளிப்பதிவும் லெனினின் படத்தொகுப்பும் காட்சிகளை நகர்த்தாது அதன் போக்கிலே தவழவிட்டிருக்கின்றன.

படத்தில் நடித்திருப்பது கடலும் சிறுவனும் மட்டும்தான். ஆனால் சிறுவன் நடிக்கவில்லை. வாழ்ந்துவிட்ட சிறுவன் இயக்குநர் தங்கர்பச்சானின் மகன் அரவிந்த் பச்சான். இவரின் நடிப்புத் திறனுக்குக் கிடைத்த மாபெரும் வாய்ப்பு இக்கதாபாத்திரம். தான் கற்றுணர்ந்த திரை மொழியைத் தமிழனுக்காக வடித்திருக்கிறார் கவிஞர் இயக்குநர் அறிவுமதி.

தமிழர்கள் நெடும் வரலாற்றில் பதிவு செய்ததும் குறைவு; அவற்றைப் பாதுகாத்ததும் குறைவு. இழந்தது தான் ஏராளம். வரலாற்றைச் சரியாகப் பதிவு செய்திருக்கும் இந்தப் படத்தில் அழுகிய பிணங்களோ அழிந்து போன இழப்புகளோ இல்லை. இழந்து போன தமிழர்களின் வாழ்க்கையையும் எதிர்கால வாழ்வுக்கான போராட்டத்தையும் உணர்த்துவதாகக் காட்சிகள் விரிகின்றன. 'பெரியாரின் பிள்ளைகள் படமெடுக்க வந்தால் யாருக்காக எடுப்பார்கள்? எப்படி எடுப்பார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் இப்படம்' என்கின்ற அறிவுமதியின் கூற்றும்

காற்றை நாம் சுவாசிக்கலாம்
காற்று நம்மை சுவாசிக்க
நினைத்தால் நாம்
தாங்கிக் கொள்ள முடியாது
அதுதான் புயல்!
நீரை நாம் குடிக்கலாம்
நீர் நம்மைக் குடிக்க
நினைத்தால் நாம்
தாங்கிக் கொள்ள முடியாது
அதுதான் வெள்ளம்!
மனிதன் கோபத்தை
பூமி தாங்கிக் கொள்ளும்
பூமியின் கோபத்தை
எந்த மனிதனாலும்
தாங்கிக் கொள்ள முடியாது
அதுதான் பூகம்பம்!
கடலின் மீது
நாம் படையெடுக்கலாம்
கடல் தாங்கிக் கொள்ளும்
கடல் நம்மீது
படையெடுத்தால்
நாம் தாங்கிக் கொள்ள முடியாது
அதுதான் சுனாமி!!!

என்கின்ற கவிதைக் கருத்தும் ஒப்புநோக்கத் தக்கது.

ஆய்விற்குத் துணை நின்றவை

1. 1. www.wikipedia.com
2. https://arivumathi.wordpress.com
3.
Youtube வழி பார்த்து அறிந்து கொண்ட நீலம் (Blue) குறும்படம்



பா.ரம்ஜான் (முழுநேர முனைவர்பட்ட ஆய்வாளர்)
தமிழ் உயராய்வு மையம்,
பாத்திமா கல்லூரி (தன்னாட்சி),
மதுரை – 625 018.

 


 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்