கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஏற்பாட்டில் காமராஜர் பல்கலைக்கழகத்து முன்னாள் பேராசிரியர் கரு.முத்தையா அவர்களின் சொற்பொழிவு

கலாரசிகன்

டந்த 24. 01. 2010 அன்று ஸ்காபுரோ சிவிக்சென்ரர் மண்டபத்தில் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தினால் மேற்கொள்ளப்பட்ட இலக்கியக் கலந்துரையாடல் தலைவர் த. சிவபாலு அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. தலைவர் பேராசிரியரை அறிமுகம் செய்து வைத்ததைத் தொடர்ந்து சிறுகதைகளின் போக்கும் இன்றைய நிலையும் என்னும் பொருள் பற்றிய ஒரு இலக்கியச் சொற்பொழிவை நிகழ்த்தினார் தமிழ் இலக்கியப் பேராசிரியர் கரு. முத்தையா அவர்கள். அவர் உரையாற்றும்போது "நான் கடந்தவாரம் என்னைக் கேட்டுக்கொண்டதற்கமைய எழுத்தாளர் ஜெயகாந்தனைப் பற்றி உரையாற்றினேன். இன்று என்னைச் சிறுகதைகள் பற்றி உரையாற்றும்படி கேட்டுக்கொண்டதற்கமைய உரையாற்ற வந்துள்ளேன். ஆனால் என்னால் போதியளவிற்கு எந்த ஆயத்தத்தையும் செய்துகொள்ளும் கால அவகாசமோ அல்லது வளங்களோ இல்லாத நிலையில் எனது நினைவில் உள்ளவற்றைத் தொகுத்துத் தருவதாகவே எனது உரை அமையும் என்றதோடு வழமையாக நான் விரிவுரை நிகழ்த்துவதற்கோ அல்லது உரையாடவோ தயார் செய்யாமல் செல்வதில்லை என்ற அவர் இன்றைய பல சிறுகதையாளர்களைப் பற்றிப் போதியளவிற்கு என்னால் கூறமுடியாதுள்ளது" என்ற அவர் தொடர்ந்து உரையாற்றும்போது சிறுகதை என்பது மனிதன் பேசத் தொடங்கி மொழியைக் கண்டுபிடித்து அதனை பதிக்கும் போது அச்சுக்கருவிகள், இயந்திரங்கள் இல்லாத போது செய்யுள்களில் பதிந்து வைக்கும் முறை இருந்தது. கதை சொல்லும் போக்கைக் கொண்டனவையாக சங்க செய்யுள்களில் உள்ளன. சிறுகதைகள் ஆங்கிலத்தில் 16ம், 17ம் நூற்றாண்டுகளில் ஆரம்பிக்கப்பட்டதால் அதனை திறனாய்வுகள் செய்வதனால் அதனை ஆங்கிலத்தில் செய்யத் தொடங்கினார்கள்.

ஒரு விடயத்தை அல்லது ஒரு உணர்ச்சியை எடுத்தக்கொண்டு அதனைச் சொல்வது சிறுகதை. இரண்டாவது ஒரு சிறுகதையை எழுதிவிட்டு அதன் முடிவை எமது கைகளில் விட்டுவிடவேண்டும். முடிவினை வைக்கக்கூடாது. ஆனால் பஞ்சதந்திரக்கதைகள், ஈசாப்கதைகள் போன்றன முடிவுகளைச் சொல்வனவாக உள்ளன. இதன் தீர்ப்பு இப்படித்தான் இருக்கலாம் என்ற சார்புநிலையைத் தோற்றுவிக்கலாம். ஆனால் அப்படிச் சொல்லக் கூடாது. சிறுகதையின் முடிவு என்பது ஒரு வாழ்க்கை என்பதன் சிந்தனையின் தொடக்கமாக இருக்கவேண்டும். அப்படியானவைதான் இலக்கிய உலகத்தில் நிலைத்து நிற்கமுடியும். மூன்றாவது இலக்கணம் வருணணைக்கு அதிக இடம் கொடுக்கக்கூடாது. பாத்திரத்தைப் பற்றியோ அல்லது இடத்தைப் பற்றியோ விரிவாக எழுதக்கூடாது. ஒரு ஆங்கில திறனாய்வாளன் குறிப்பிடும்போது 'ஒரு அறையில் ஒரு ஆணி மாட்டப்பட்டுள்ளது. அதில் ஒரு துப்பாக்கி மாட்டப்பட்டுள்ளது என்பதைச் சொன்னால் அந்த துப்பாக்கி அந்தக்கதை முடிவடைய முன்னர் அது வெடிக்கவேண்டும். இல்லை எனில் அதைப்பற்றிச் சொல்லத்தேவையில்லை' என்று சொல்லியிருக்கின்றான்.

இப்படியான இலக்கணத்தோடு கூடிய கதைகள் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. திருக்குறளில் படைச் செருக்கு என்னும் அதிகாரத்தில் 'கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும்' என்னும் திருக்குறளில் சொல்லப்படுவது வீரத்தின் காரணமாக வரும் பெருமிதம் என்னும் நிகழ்ச்சி. அக்காலத்தில் ஒரு வீரனிடம் பல வேல்கள் கொடுக்கப்படும். அவன் போர்க்களத்தில் நிற்கின்றான். அனைத்து ஆயதங்களும் தீர்ந்துவிட்டன. ஆயதம் இல்லாது நிற்கின்றான். எதிரே ஒருவீரனோ யானையோ வருகின்றது. அவனிடம் ஒரு ஆயதமும் இல்லை. ஆனால் அந்தக்கணத்தில் அவனது உடலில் பாய்ந்த வேலை எடுத்துக்கொண்டு போராட மகிழ்ச்சியோடு செல்கின்றான் என்றால் அவனது சிந்தனை தனது உடலில் இருந்த வேலைக் காணமுடியாத அளவிற்கு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றான். இதில் குறள் மிக அழகான ஒரு செறிவான கதையை கொண்டிருக்கின்றது. இவ்வித செறிவான போக்கு சங்க இலக்கியத்தில் உண்டு. இவ்விதமான செறிவு குறுந்தொகையில் இருக்கின்றது. கலித்தொகையில் இருக்கின்றது. எல்லா இலக்கியத்திலும் இருக்கின்றது என்று சொல்வதற்கு இல்லை. நல்ல வெளிநாட்டு இலக்கியங்களைப் படித்தவர்கள் எழுதியிருக்கின்றார்கள். இவ்விதமான கதைகளை முதலில் எழுதியவர் வீரமாமுனிவர்.   வீரமாமுனிவர் பராமரார்த்த குருவைப்படைத்து சமயத்தைப் பரப்புவதற்காக ஒரு நையாண்டியாக எழுதினார். இது நல்ல சிறுகதை என்று சொல்லமுடியாது. வா.வே.சு. ஐயர் எழுதிய கதகள் சிறந்த கதைகள். இவருக்கு பிரஞ்சுமொழியில் பரிட்சயம் உண்டு. பிரஞ்சு இலக்கியத்தில் மிக அருமையான சிறுகதைகள் உள்ளன. அந்தப் பரிச்சியம் ஐயருக்கு இருந்தது. அதேபோன்று மாப்பசானுக்கும் பிரஞ்சுத் தொடர்பும் பரிட்சயமும் இருந்தது. இவ்விதமே பி.எஸ். இராமையா ஆசிரியராக இருந்த மணிக்கொடி என்னும் பத்திரிகை இதில் மௌனி, லா.ச.ராமாமிர்தம், கு.ப.இராஜகோபலன் பிச்சாமூர்த்தி போன்றோருக்கு வழிசமைத்துத் தந்தது.

பழைய தமிழ் இலக்கணத்தில் இப்படித்தான் இருக்கவேண்டும் என்னும் கட்டுப்பாடு இருந்தது. ஆனால் இருண்டபக்கங்களைக் காட்டக்கூடாது என்பது அதன் நோக்கம். இதனை பொருளதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வாழ்க்கையின் இருண்டபக்கங்களை இலக்கியமாக்கக்கூடாது என்ற கட்டுப்பாடு இருந்தது. ஆனால் உரைநடை வந்ததும் இந்த கட்டுப்பாடுகள் தூக்கி எறியப்பட்டன.

பயன் இருக்கவேண்டும். நம்முடைய சிந்தனையை வழிகாட்டுவதாக இலக்கியம் இருக்கவேண்டும். பெரும்பான்மையாக நடப்பவற்றை இலக்கியம் ஆக்கவேண்டும் என்ற ஒரு முறை இருந்தது. இதனை இன்று மீறிவிட்டார்கள். உலகத்தில் நடக்காததைச் சொல்வதுதான் செய்தி. ஆனால் வழமையானதை செய்தி எனக்கொள்ள முடியாது. இருண்ட பக்கத்தையும் எழுதலாம். ஆனால் ஒரு இடத்தில் நடந்ததை பரப்புவதாக இருக்கக்கூடாது. மணிக்கொடி உருவாக்கிய உலகம் திரும்பிப்பார்க்கக்கூடிய ஒரு எழுத்தாளர் இருந்தார். அவர்தான் புதுமைப்பித்தன். அவர் தனது புனைபெயருக்கு ஏற்ப புதுமையை புகுத்தி எழுதினார். வறுமையைப் படம்பிடித்துக்காட்டினார். சமுதாயத்தின் தவறுகள் சீர் கேடுகளை எடுத்தக்காட்டினார். அவற்றைக் களைய வேண்டும் என்ற நோக்கத்தோடு நூற்றுக்குமேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கின்றார். கட்டுரை எழுதியிருக்கின்றார். கவிதையும் எழுதியிருக்கின்றார். அவர் மார்க்சியச் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு எழுதியிருக்கின்றார்.

காஞ்சனை, கயிற்றவு என்பன அருமையான கதைகள். இயற்கையை மிறிய செய்திகளை எழுதியுள்ளார். பேய் பிசாசு உண்டா இல்லையா என்று அவர் ஆய்ந்தார். இந்த இரண்டுக்கும் ஏற்ப அவர் எழுதியுள்ளார்.. பொன்நகரத்தின் கதை -  நோய் வந்ததால் அவனை மருத்துவமனைக்குச் சேர்க்கப் பணமில்லாத நிலையில் மனைவி கற்புக்கு விலைபேசி தனது கணவனைக் காப்பாற்றுகின்றாள். அதனை எதிர்த்தவர்கள் சரியென எழுதியவர்கள் பலபேர். வெளியே சொன்னார்கள் என்பதை மறைமுகமாக சொல்வதில் வல்லவர்கள். பல தத்துவங்கள், உயர் செய்திகள் பல தெரியுமானால் அதனை உருட்டிப்பார்க்கலாம். எழுத்தாளன் எழுதுவது மக்களைப் போய்ச் சேரவேண்டும் எனக் கருதுபவன் நான்.  சாதாரணமாக லாசாரா போல எழுதமுடியும் என்று சொல்லமுடியாது. ஆனால் அவர்கள் எழுதுவது சரி என்பவர்களும் உள்ளனர். இப்படியான எழுத்துக்களை லாசாரா, பிச்சாமூர்த்தி போன்றவர்கள் எழுதினார்கள். மணிக்கொடி நின்றுபோனதால் எழுத்தாளர்களுக்கு களமமைத்துக்கொடுக்க யாரும் இல்லாத நிலை தோன்றியது. அதன்பின்னர் ஆனந்தவிகடன் களம் அமைத்துக்கொடுக்க முன்வந்தது. இப்படி களம் அமைத்துக்கொடுத்தவர்களுள் ஒருவர் ஜெயகாந்தன். இவ்விதமே குமுதமும் தொடங்கியது. அதில் எப்படியும் எழுதலாம், எதையும் எழுதாம். ஆனந்தவிகடனில்  வந்த கதைகள் இலக்கியச் சிறப்புமிக்கவை. குமுதத்தின் கதைகளில் சமுதாயச் சிந்தனைக்கான கதைகள் இல்லை. நல்ல மொழி நடையும் பொழுதுபோக்குமான கதைகள். குறிப்பாக சுயாதா, ரா.ஜி. ரங்கராசன் போன்றோரின் கதைகள் இருந்தன. பாலகுமாரனுடைய தமிழும், சுஜாதவின் தமிழும், ஜெயகாந்தனுடைய மொழ நடையும் சிறப்பானவை. இவர்களின் மொழிநடைகள் நன்றாக இருந்தன. ஜெயகாந்தன் விவாதிப்பதாக கேள்வியை எழுப்பி விடைகாணும் எழுத்தாக இருக்கும். ராஜி. ரங்கராசனின் மொழி நடை ஆற்றொழுக்குப் போன்றது. சுஜாதா ஆங்கில மொழியில் பெயர்ச்சொல்லை வினையாக்குவது போன்று எழுதும் பாங்கைக் கொண்டவர். தொலைபேசினான் என்று எழுதும் தன்மை கெண்டவர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் பாரதியையம், பாரதிதாசனையும் விட்டுவிட்டு எப்படிச் சொல்ல முடியாதோ அவ்விதமே இருபதாம் நூற்றாண்டு புனைவு இலக்கியத்தைப் பேசுவதானால் ஜெயகாந்தனையும் புதமைப்பித்தனையும் விட்டுவிட்டுப் பேசமுடியாது. ஜெயகாந்தனின் தனிச்சிறப்பு அவரின் தலைப்பே மையக்கதையைச் சொல்லும். பழமையும் புதமையும் சந்திக்கும் கதையாக யுகசந்திஎன்னும் கதை.

எல்லாருக்கும் தெரியுமாறு செய்வது ஒழுங்கு, யாருக்கும் தெரியாமல் செய்வது ஒழங்கீனம். இவ்விதமான கதைகளை ஜெயகாந்தன் எழுதினார். இருளைத்தேடி என்னும் கதையில் ஒரு படங்கீறுவதற்கான மாதிரிஅழகியாக ஒருத்தியையும் அவளது நண்பியை விபச்சாரியாகவும் காண்பிக்கின்றார். இவர்கள் இருவருமே தங்கள் பிழைப்பிற்காக தொழில் நடத்துபவர்கள். ஒருவர் ஒளியில் தனது உடைகளைக் கழைந்துவிட்டு படம்வரைவதற்காக காட்சிகொடுப்பவர். மற்றவர் இருளில் உடைகளைக் கழைபவர். இவர்களில் ஒருத்தி கற்பை விற்கவில்லை. பிழைப்பிற்காகக்காட்சி கொடுக்கின்றாள். அவளது உருவத்தை பலரும் பார்க்கின்றார்கள். ஆனால் மற்றவளோ அப்படியல்ல. ஆனால் ஒளியில் காட்சி கொடுக்க அவள் மறுக்கின்றாள். அதுதான் 'யுகசந்தி' இவ்விதமாக சகப்பிரச்சினைகளை அலைசி ஆராய்ந்து புதிய பார்வையை ஓடவைக்கின்றார் எழுத்தாளர்.

ஒரு சிறுகதையின் முடிவு இன்னொரு சிறுகதையின் தொடக்கமாக அமைந்தது. அதுமேலும் எழுத வழிசமைத்தது. ஜெயகாந்தன் போன்ற எழுத்தாளர்களின்பின் மணிக்கொடி போன்ற வெகுஜனப் பத்திரிகைகள் இல்லாமையால் ஒரு தொய்வு ஏற்பட்டது. ஆனால் இன்று நல்ல சிறுகதை எழுத்தாளர்கள் இருக்கின்றார்கள் ஆதவன், அஜன்பாலா, வா.யெயப்பிரகாசம், பிரபஞ்சன், கந்தவர்வன், வண்ணதாசன் இவர்களுடைய சிறுகதைகள் நினைத்துப்பார்க்கக்கூடிய சிறுகதைகள். சிறிய பத்திரிகைகளில் எழுதுகிறார்கள், எழுதாமல் திடீரென புத்தகமாகப் போடுகிறார்கள்.

இன்று சிறுகதைகளைப் படிப்பபிக்கவேண்டும் என பல்கலைக்கழகங்கள் எதிர்பார்க்கின்றன. மாணவர்கள் படைப்பிலக்கியங்கள் படைக்கவேண்டும். சிறுகதை, கவிதை, கட்டுரை எனப்பல்வேறு படைப்புக்களை மாணவர்கள் படைக்கவேண்ம் என முன்வைத்தார்கள். மாணவர்களுக்கு எழுதச் சந்தர்ப்பம் கொடுத்தால் அவர்களுள் சிலர் சிறந்த எழுத்தாளர்களாக வருவார்கள். படைப்பு என்பது படித்து வருவதல்ல. ஆனால் படிக்காமல் நல்ல படைப்புக்களைத் தரமுடியாது.

 ஜெயமோகன் ஒரு சிறந்த சிறுகதை ஆசிரியர். அவர் கதை எழுதுவது எப்படி என மலேசியாவில் பாடம் நடத்தியிருக்கின்றார். அவர் அதனை இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார். பெண் எழுத்தாளர்கள் பெண்ணியம் பற்றிய சிறுகதைகளையே எழுதியுள்ளார்கள். வாசந்தி, அம்பை, இந்துமதி போன்றவர்கள் நல்லசிறுகதைகளை எழுதியுள்ளார்கள். இலங்கைச் சிறுகதைகள் அவர்களின் நாட்டுப் பிரச்சினைகளை அதிகம் பேசுகின்றனவாக இருக்கின்றன என்ற கருத்து உண்டு. மலேசியச் சிறுகதைகள் பின்தள்ளிநிற்கின்றன. இலங்கைச்சிறுகதைகள் நல்லவை எனப்பாராட்டப்பட்டுள்ளன.

சிறுகதைகளில் தற்குறிப்பேற்ற அணியைக் கையாளப்படுகின்றன. வில்லிபுத்தூரார் பாரதத்தில் கர்ணனை கொடி வராதே வராதே என்று அசைந்ததாகக்குறிப்பிடுகின்றார். அவ்விதமே அயோத்திக்கு வந்த இராமனை வருக வருக என மாடத்தின் கொடி வரவேற்றதாக எழுதுகின்றார் கம்பர். இதிகாசத்தில் வரும் கதைகளை எடுத்து எழுதும்தன்மையும் சிறுகதை எழுத்தாளர்களிடம் காணப்படுகின்றது. பழைய கதைகளைப் புதிய பார்வையைச் செலுத்தும் முயற்சிகள் தமிழில் நிறைய நடந்திருக்கின்றது. இன்று தமிழில் சிறப்பாக கதைகள் எழுதப்படுகின்றன. சில எழுத்தாளர்கள் சிறுகதைகளில் சிறப்பாக எழுதியவர்கள் நாவல் எழுதப்போய்விடுகின்றார்கள். சிலர் சிறுகதை மட்டுந்தான் எழுதுவேன் என்று இருந்தார்கள். இருக்கிறார்கள். சிலர் எழுதாமலே நிறுத்தி விடுகின்றார்கள். இவர்கள் தொடர்ந்தும் எழுத வேண்டும் என்பது எனது ஆதங்கம் என்றார்.

அதிபர் பொ. கனகசபாபதி, கவிஞர் க. நவம், பேராசிரியர் நா.சுப்பிரமணியன் என்போர் சில கருத்துக்களை முன்வைத்ததோடு கருத்துக்களையும் கேட்டு அறிந்துகொண்டார்கள். இணையத்தின் பொருளாளரும் முன்னைநாள் உதவிக் கல்விப்பணிப்பாளருமான திரு. சிவநாயகமூர்த்தி அவர்களின் நன்றியுரையோடு நிறைவுற்றது.


thangarsivapal@yahoo.ca