எம் ஜி ஆர் படப் பாடல்களில் மனிதத் தெய்வங்கள்
 
முனைவர் செ.இராஜேஸ்வரி


எம்.ஜி.ஆர் படங்களில் அவர் இருக்கும் அறை அல்லது வீடு ஒரு இலட்சிய தமிழனின் வீடாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும். அதன் சுவர்களில் அண்ணா, பாரதியார், இயேசு கிறிஸ்து, புத்தர் போன்ற பெரியவர்களின் படங்கள் இருப்பதைப் பார்க்கலாம். சில பாடல் காட்சிகளில் இவர்களின் சிலைகளும் காண்பிக்கப்படும். இவர்கள் மனித குல வழிகாட்டிகள். இவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றி நடந்தால் மனிதன் செம்மையான வாழ்க்கையை வாழலாம் என்பது எம்ஜிஆரின் கொள்கை. அவர் அதனை தன்னுடைய படங்களிலும் பாடல்களிலும் வெளிப்படுத்தினார். கடவுள் இல்லை என்ற திமுகவின் உறுப்பினராக எம் ஜி ஆர் இருந்ததால் அவரது விட்டில் சாமி படங்கள் இருப்பதில்லை. மனிதராய்ப் பிறந்து தெய்வமாய்ப் போற்றப்படுவோரின் படங்களே அவர் வீட்டுச் சுவற்றை அலங்கரித்தன. பின்னர் ஒளிவிளக்கிலும் நம் நாடு , என் அண்ணன் ஆகிய படங்களில் எம் ஜி ஆர் வீட்டில் சாமி படம் எம் ஜி ஆர் கோயிலுக்கு போவது போன்ற காட்சிகள் இடம்பெற்றன. அண்ணா திமுக ஆரம்பித்த பிறகு அவர் தன படங்களில் இந்து சாமி படங்களைக் காட்டினார். பல்லாண்டு வாழ்க படத்தில் முருகன் சங்கரர் போன்றோரின் படங்கள் மாட்டப்பட்டப்பட்டிருக்கும். அவர் தன கட்சியை கடவுள் மறுப்பு கட்சியாகவோ இந்து வெறுப்பு கட்சியாகவோ உருவாக்கவில்லை. சாதி மதம் பதமற்ற மனித நேயக் கட்சியாக உருவாக்கினார்.

புத்தர் இயேசு கிறிஸ்து காந்தியடிகள் அண்ணா ஆகியோரின் பெயர்கள் அவர் படங்களில் தத்துவப் பாடல்களில் தனிப்பாடல்களில் இடம்பெற்றன. எங்க வீட்டுப்பிள்ளை படத்தில் தான் முதன்முதலாக காந்தி இயேசு போன்றவர்கள் எம்.ஜி.ஆரின் தனிப்பாடல்களில் இடம் பெற்றனர். நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் பாட்டில்

முன்பு ஏசு வந்தார்
பின்பு காந்தி வந்தார்
இந்த மானிடர் திருந்திடப் பிறந்தார்
இவர் திருந்தவில்லை - மனம்
வருந்தவில்லை - அந்த
மேலோர் சொன்னதை மறந்தார்


என்ற வரிகள் இயேசுவும் காந்தியும் மனிதர்களைத் திருத்துவதற்கு மானிடப் பிறப்பெடுத்து வந்திருந்த போதும் கூட இவர்கள் திருந்த வில்லை என்று கருத்து குறிப்பிடப்பட்டுள்ளது. இதே பாடலில் அண்ணாவை மறைமுகமாகக் குறிப்பிடும் ஒரு வாசகமும் ஒரு வரியும் இடம்பெற்றது.

ஒரு தலைவன் உண்டு அவன்
கொள்கை உண்டு அதை
எப்போதும் காத்திருப்பேன்


என்ற வரிகளில் ஒரு தலைவன் என்று எம்ஜிஆர் குறிப்பிடுவது திமுக கட்சியின் தலைவரான அறிஞர் அண்ணாவை என்பது ரசிகர்களுக்குத் தெளிவாக தெரியும் இருப்பினும் இந்த வரியில் அண்ணா என்ற பெயரைச் சேர்க்கவில்லை. அதற்கு முக்கிய காரணம் அப்போது காங்கிரஸ் ஆட்சி நடந்ததும் அக்காலத் தணிக்கை அதிகாரிகள் எம்ஜிஆர் பாட்டுகளை கடுமையாக வெட்டித் தள்ளியதும் ஆகும்.

பணம் படைத்தவன் படத்தில்
எனக்கொரு மகன் பிறப்பான் அவன்
என்னைப் போலவே இருப்பான்
தனக்கொரு பாதை வகுக்காமல்
என் தலைவன் வழியிலே நடப்பான்


எனத் தொடங்கிய பாடல் எம்ஜிஆர் தன்னுடைய மகனைப்பற்றி பாடுவதாக அமைந்த கற்பனைப் பாடலாகும். என் தலைவன் என்று குறிப்பிடுவது இப்பாடலிலும் அறிஞர் அண்ணாவைத் தான் என்றாலும் அப்போதும் காங்கிரஸ் ஆட்சி நடந்ததால் அண்ணா என்று பெயரை குறிப்பிடவில்லை இதே

சாந்தி வழி என்று காந்தி வழி சென்று
கருணை தேன் கொண்டு தருவான்

என்ற வரிகள் அமைதி வழியிலான சத்தியாக்கிரக வழியை காட்டிய காந்தியின் வழியில் தன் மகன் நடப்பான் என்பதைக் குறிப்பிடுகின்றன. ஒரு குழந்தை அண்ணாவின் பாதையில் காந்தியின் வழியில் நடந்தால் அக்குழந்தை சமூகத்திற்கு பயனுள்ள ஒரு நல்ல குடிமகனாக விளங்குவான் என்ற கருத்தை வெளிப்படுத்தவே இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளன.

சந்திரோதயம் படத்தில் ஏழைகளுக்கு இரங்காத பணக்காரனின் கொடுமைகளை கண்டு மனம் பொறுக்காமல் மழை வெள்ளத்தில் வீடு குடிசைகளை இழந்த அந்த ஏழை மக்களை அழைத்துக் கொண்டு புகலிடம் தேடி வரும் எம்ஜிஆர் சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளையும் வர்க்க வேதங்களையும் குறிப்பிடும் விதமாக ஒரு பாடல் பாடுவார். அப்பாடல்

புத்தன் இயேசு காந்தி பிறந்தது
பூமியில் எதற்காக தோழா
ஏழை நமக்காக
கங்கை யமுனை காவிரி வைகை
ஓடுவது எதற்காக
நாளும் உழைத்து தாகம் எடுத்த
தோழர்கள் நமக்காக

என்ற பல்லவியோடு தொடங்கும். இப்பாடல் வரிகள் புத்தன் இயேசு காந்தி ஆகியோர் மக்கள் நன்மை பெறுவதற்காக அவர்களுக்கு நல்வழி காட்டுவதற்காக பிறந்தவர்கள். அவர்களை பின்பற்றி நடக்க வேண்டும் என்று வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.

திமுக ஆட்சியின்போது கலைஞர் கருணாநிதியின் வீடு கடனில் மூழ்கப் போகிறது என்பதால் அவ்வீட்டை மீட்டு கொடுப்பதற்காக அவர் கேட்டுக் கொண்டதன் பேரில் எம்ஜிஆர் அவருக்கு எங்கள் தங்கம் என்ற படத்தை இலவசமாக நடித்துக் கொடுத்தார். இப்படத்தில் நடித்ததற்காக ஜெயலலிதாவும் கருணாநிதியிடம் பணம் வாங்கவில்லை. இப்படத்தில் திமுக, அண்ணா, கருணாநிதி ஆகியோரின் சிறப்புகளை எடுத்துச் சொல்லும் வகையில் ஒரு பாடல் வேண்டும் என்று எம்ஜிஆர் வாலியிடம் கேட்டு எழுதி வாங்கினார். அந்தப் பாடலில்

சிலுவையில் இயேசு மறஞ்சாரு
மக்கள் சித்தமெல்லாம் நெறஞ்சாரு
குண்டுகள் போட்டு துளைச்சாங்க - ஆனால்
காந்தியும் லிங்கனும் பிழைச்சாங்க

சாதனப் பெட்டியில் உறங்குகிறார் அண்ணா
சரித்திரப் புகழுடன் விளஙகுகிறார்
எதையும் தாங்கும் இதயம் கொண்டு அண்ணன்
எங்களை வாழ்ந்திடச் சொன்னதுண்டு

அண்ணன் அன்று நல்ல நல்ல கருத்து
அழகு தமிழில் சொல்லி சொல்லி கொடுத்து
வளர்ந்த கூட்டமடா – எதிர்த்தால்
வாலை நறுக்குமடா

என்ற வரிகள் உடலுக்கு ஏற்படும் அழிவு அல்லது மரணம் என்பது நிரந்தரமானது அல்ல.இயேசு காந்தி லிங்கன் அண்ணா ஆகியோர் புகழுடம்பு பெற்றவர்கள் அவருடைய புகழ் காலங்காலமாக நிலைத்து நிற்கிறது என்பதை எடுத்துக்காட்டும் விதமாக இப்பாடல் வரிகள் அமைந்துள்ளன. இப்பாடலில் அண்ணா தமது கட்சியினருடன் கொண்ட அன்புறவும் விளக்கப்படுகிறது. எம் ஜி ஆர் கேட்டுக்கொண்டபடி வாலி எழுதி தந்த பாடல் இது.

ஆனந்த ஜோதி படத்தில் பொய்யான குற்றச்சாட்டுக்கு ஆளாகி போலீசாரின் கண்களுக்கு மறைந்து வாழும் ஆனந்தன் ஆக நடித்த எம்ஜிஆர் இந்த உலகில் கடவுள் இருக்கின்றாரா? கடவுள் இருந்தால் இதுபோன்ற அநியாயங்கள் அரங்கேறுமா? நியாயங்கள் எல்லாம் உறங்கிக் கொண்டிருக்கின்றன செயல்படாமல் இருக்கின்றனவே என்ற ஏக்கத்துடன் ஒரு பாடலைப் பாடும் காட்சியில்

கடவுள் இருக்கின்றான் அது உன்
கண்ணுக்கு தெரிகின்றதா
காற்றினில் ஆடுகின்றான் அது உன்
கண்ணுக்கு தெரிகின்றதா


எனத் தொடங்கும் இந்தப் பாடலில் கடவுளைப் பற்றிய கருத்துக்கள் மிக நுட்பமாக சொல்லப்பட்டிருக்கும். ஆனால் இந்த பாடல் கடவுளுக்கான பாடல் அல்ல. மனிதன் சமுக அவலங்களால் சோர்வடையும் போது தவறான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகும்போது மனச்சோர்வு மன அழுத்தத்தால் காரணமாக அவன் தவறான முடிவுகளை எடுத்து விடக்கூடாது என்பதற்காக எழுதப்பட்ட பாடலாகும்.

ஆனந்த் ஜோதி படப்பாடல், துன்பம் வரும் நேரத்தில் அவனுக்கு தன்னம்பிக்கையூட்டும் விதமாக அமைந்த பாடலாக அமைந்தது.

புத்தன் மறைந்து விட்டான் அவன் தன்
போதனை மறைகின்றதா
சத்தியம் தோற்றதுண்டா? உலகில்
தர்மம் அழிந்ததுண்டா

என்ற வரிகள் மனிதர்கள் மறைந்தாலும் அவர்கள் செய்த செயல்கள் அவர்கள் பேசிய பேச்சுக்கள் அவர்களுடைய நடத்தை ஆகியன காலங்காலமாக நிற்கும். எனவே புத்தர் மறைந்தாலும் அவருடைய போதனை மறையவில்லை. அவருடைய போதனையான அறம் வெல்லும் என்பது காலத்தால் அழிந்துவிடவில்லை.. சத்தியம் தோற்காது தர்மம் அழியாது என்பன புத்தரின் பொன்மொழிகள் ஆகும்.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
தர்மம் மறுபடியும் வெல்லும்

என்றார் பாரதியார். எனவே நல்லவர்களுக்கு வரும் துன்பங்கள் எல்லாம் மேகம் நிலவை மூடும் மேகத்தைப் போன்ற விரைவில் விலகிவிடும். நிலவு தன் சத்திய ஒளியைக் காட்டும். இது போன்ற நேரங்களில் மனச் சோர்வு அடையாமல் மேற்கொண்டு செய்ய வேண்டியது என்ன என்பதை தெளிவான சிந்தனையுடன் சிந்தித்து முடிவு செய்ய வேண்டும் என்று ரசிகர்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில் இப்பாடல்கள் தன்னம்பிக்கை ஊட்டும் பாடல்களாக எம்ஜிஆர் படங்களில் இடம் பெறுகின்றன.

நம்நாடு படத்தில் சிறுவர்களுக்கு அறிவுரை சொல்லும் பாடலில் எம் ஜி ஆர் மனித தெய்வங்களை போற்றுகிறார். நிஜத்திலும் இப்படத்திலும் தன் அண்ணன் பிள்ளைகளைத் தன் பிள்ளைகள் போலவே வளர்த்து வந்த எம் ஜி ஆர்

ஜனநாயகத்தில் எல்லோரும் மன்னர்
தென்னாட்டு காந்தி அந்நாளில் சொன்னார்

என்று அண்ணாவைத் தென்னாட்டு காந்தி என்று குறிப்பிட்டு இருப்பார்.

அண்ணா திமுக கட்சியின் தோற்றத்திற்குப் பிறகு அண்ணாவின் முக்கியத்துவம் அவரது கட்சியிலும் படத்திலும் இன்னும் அதிகமாயிற்று. தன்னுடைய கட்சி தான் அண்ணா தொடங்கிய கட்சி என்றும் கருணாநிதியின் கட்சி ஊழல் மிகுந்தது என்றும் அது அண்ணாவின் கொள்கைகளைப் பின்பற்றாத கட்சி என்றும் பாடல்கள் மற்றும் படங்கள் மூலமாக பிரச்சாரம் செய்தார். இவருடைய கருத்தை மக்கள் ஏற்று ற்றுக் கொள்வதற்காகவும் எம்ஜிஆர் அண்ணாவின் கொள்கைகளைத் திரும்பத் திரும்ப படத்திலும் மேடையிலும் நேரிலும் மக்கள் முன்பாக எடுத்துக் கூறினார். தன கட்சிக்கான கொள்கை அண்ணாயிசம் என புதிய அரசியல் தத்துவத்தை வரையறுத்தார்.

முதலமைச்சர் ஆன பிறகும் இது அண்ணாவின் அரசு என்று எம் ஜி ஆர் கூறினாரே ஒழிய ஜெயலலிதாவைப் போல ‘எனது ஆட்சி’ ‘எனது அரசு’ என்று அவர் குறிப்பிடவி ல்லை. ஆக அண்ணாவின் அரசு என்பது எம்ஜிஆரின் அரசு என்னுடைய ஆட்சி என்பது ஜெயலலிதாவின் ஆட்சி என்று இரண்டு வகைப்பாடுகள் இருக்கின்றனவே தவிர எம்ஜிஆரின் அரசு எம்ஜிஆரின் ஆட்சி என்பது அவருடைய வார்த்தையில் வரலாற்றில் இடம் பெறவில்லை.

எம் ஜி ஆரின் அரசு தேர்தல் பிரச்சாரத்தில் கூட விளம்பர வாசகமாக இடம் பெறவில்லை. ஆனால் மக்கள் மத்தியில் பசுமரத்தாணி போல எம்ஜிஆர் ஆட்சியில் நடந்த நலத்திட்டங்களும் நன்மைகளும் பதிந்த விட்டன. மீனவ நண்பன் மீனவ நண்பன் படத்தில் பணக்கார மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையில் ஏற்படும் போராட்டம் வர்க்கப் போராட்டமாக காட்டப்படும். இந்தப் போராட்டத்தில் தான் நிச்சயமாக வெற்றி அடைவேன் என்ற உறுதிப்பாட்டுடன் அவர் எதிரிகளுக்கு சவால் விட்டு பாடுவார். அந்தப் பாடல்

நேருக்கு நேராய் வரட்டும்
நெஞ்சில் துணிவிருந்தால்
என் கேள்விக்கு பதில் தரட்டும்
நேர்மைத் திறம் இருந்தால்


என்ற பல்லவியுடன் தொடங்கும். என் கேள்விக்கு பதிலைத் தரட்டும் என்பது ஊழல் மிகுந்த இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதில் எம் ஜி ஆர் காட்டிய அக்கறை வெளிப்படுகிறது.

அண்ணனின் பாதையில்
வெற்றியே காணலாம்
தர்மமே கொள்கையாய்
நாளெல்லாம் வாழலாம்


என்ற வரிகள் அண்ணாவின் பாதையில் இக்கட்சி நடைபோடுகிறது என்பதையும் அப்பாதையே நமக்கு வெற்றிப் பாதை ஆகும் என்பதையும் குறிப்பிடுகிறார்

பல்லாண்டு வாழ்க படத்தில் அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு என்ற தொகையறாவுடன் தொடங்கும் ஒன்றே குலமென்று பாடுவோம் ஒருவனே தேவன் என்று போற்றுவோம் என்ற பாட்டில்

இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார் அவர்
என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்

என்ற வரிகள் அண்ணாவை இதய தெய்வம் என்று போற்றுவதையும் அவருடைய கொள்கை தீபத்தின் வெளிச்சத்தில் தன்னுடைய கட்சி நடைபெறப் போவதையும் விளக்கும் வகையில் அமைந்துள்ளன. ஆனால் எம்ஜிஆர் முதலமைச்சரான பிறகு மக்கள் அண்ணாவை விட்டுவிட்டு எம்ஜிஆரையே இதய தெய்வம் என்று ன்று போற்றினர். குறிப்பாக ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் எம்ஜிஆரை வெறுமனே எம்ஜிஆர் என்று சொல்லக்கூடாது என்றும் இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் என்று குறிப்பிட வேண்டும் என ஒரு கூட்டத்தில் ஜெயலலிதா தன் கட்சிக்காரர்களை கேட்டுக் கொண்டார்.

இன்று போல் என்றும் வாழ்க படத்தில் பணக்காரர்களின் ஊதாரித்தனமான வாழ்க்கையை சுட்டிக்காட்டி பாடும் பாடலில்

அன்புக்கு நான் அடிமை தமிழ்
பண்புக்கு நான் அடிமை
நல்ல கொள்கைக்கு நான் அடிமை
தொண்டர் கூட்டத்தில் நான் அடிமை

என்ற பல்லவியில் நல்ல கொள்கை என்பது அண்ணாவின் கொள்கையை குறிப்பிடுகிறது. இவ்வரிகள் அண்ணாவின் கொள்கைக்கு எம்ஜிஆர் அடிமை என்றும் அண்ணா திமுக கட்சித் தொண்டர்களின் கூட்டத்தில் அவர் ஒரு அடிமை என்றும் மறைமுகமாக குறிப்பிடுகின்றன. இங்கு படகோட்டி படத்தில் வரும் ஒரு வசனத்தை நினைவு கூர வேண்டும். படகோட்டி படத்தில் ‘தலைவன் என்ற பெயரில் நான் ஒரு மக்களின் தொண்டன்’ என்று குறிப்பிடுவார். எனவே அண்ணா திமுக கட்சி தலைவராக எம்ஜிஆர் இருந்தாலும் அக்கட்சியின் தொண்டர்களுக்கு அவர் ஒரு பணியாளர் என்ற அளவில்தான் தன் மனதில் எண்ணி இருந்தார். அதே எண்ணத்தை இப்பாட்டிலும் கவிஞர் வெளிப்படுத்தியுள்ளார். மேலும்

கடமை கண்ணியம் கட்டுப்பாடு மறந்து போனீர்களே என வரும் வரை அண்ணாவின் தாரக மந்திரங்களான கடமை கண்ணியம் கட்டுப்பாடு ஆகிய மூன்றையும் குறிப்பிட்டுச் சொல்கின்றன. இவை மூன்றும் பிரஞ்சுப் புரட்சிக் காலத்தில் duty, dignity disciplineஎன்று என்று மேலை நாட்டில் மக்களிடையே பிரபலமாகி இருந்தன. அவற்றை அண்ணா, நம்முடைய மக்களுக்கு ஏற்றதாக இருப்பதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தாரக மந்திரங்களாக மாற்றினார். அதனை மேடையும் தோறும் பிரச்சாரம் செய்து வந்தார்.

உரிமைகுரல் படத்தில் அண்ணனுக்கும் தம்பிக்கும் ஆன பாகப்பிரிவினை நடக்கும் அவ்வாறு நடக்கும் போது

ஒரு தாய் வயிற்றில் பிறந்த உடன் பிறப்பில்
முன்பு பிரிவு வந்தால் பின்பு உறவு வரும்
நல்ல மனிதருக்கும் நன்றி மறந்தவர்க்கு
முன்பு உறவிருந்தால் பின்பு பிரிவு வரும்

என்ற வரிகள் நல்லவர்களாக இருந்திருந்தால் அவ்வப்போது சில கருத்து வேறுபாடுகள் வரும்; பின்னர் அவர்கள் மீண்டும் சேர்ந்து கொள்வார்கள். நீர் அடித்து நீர் விலகாது. ஆனால் நன்றி மறந்தவர்களோடு நல்லவர்கள் சேர்ந்து செயல்படுவது இயலாத செயல் என்பதைக் குறிப்பிடும் வகையில் அமைந்த வரிகள் திமுகவும் அதிமுகவும் இணைந்து செயல்பட வாய்ப்பில்லை என்பதைத் தெளிவாக குறிப்பிட்டு விட்டன. இப்பாட்டில்

நல்லவன் லட்சியம்
வெல்வது நிச்சயம்
அண்ணா அன்று சொன்னார்
என்றும் அதுதான் சத்தியம்


என்ற வரிகள் நல்லவர்கள் இருக்கும் அண்ணா திமுகவின் லட்சியம் வெல்ல போவது நிச்சயம் என்ற உறுதிமொழியைத் தருவதனால் அண்ணா திமுக தொண்டர்களும் எம்ஜிஆர் ரசிகர்களும் மிகுந்த உற்சாகத்துடன் தங்களுடைய கட்சிப் பணிகளை ஆற்றினார். இந்த நல்லவன் லட்சியம் வெல்வது நிச்சயம் என்பது அண்ணாவின் கூற்றாக அவர் எடுத்துக் கூறுவதனால் அண்ணாவின் வார்த்தைகள் சத்திய வாக்கு பொய்ப்பதில்லை. அவை என்றும் வெற்றியைத் தரும் என்ற கருத்தையும் இப்பாடலின் மூலம்தன தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் ரசிகர்களுக்கும் எம் ஜி ஆர் எடுத்துக் கூறுகின்றார்.

அண்ணாவின் மீது மிகுந்த பற்றும் மரியாதையும் மதிப்பும் வைத்திருந்த எம்ஜிஆர் தான் முதல்வரான பிறகு அண்ணாயிசம் என்ற அரசியல் கொள்கையையும் வளர்த்தெடுத்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் அண்ணாவின் கருத்துக்கள் பற்றி ஆராய்ச்சி செய்வதற்கு மாணவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்கு தனி துறை ஒன்றும் தொடங்கப்பட்டது. அத்துறையில் இன்றும் பல மாணவர்கள் படித்து அண்ணாவின் கொள்கைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து வருகின்றனர் அக்காலகட்டத்தில் அண்ணாவின் கொள்கைகள் அண்ணாயிசம் என்ற பெயரில் தனிப் புத்தகமாக வெளியிடப் பட்டன. முன்னாள் மேயர் சைதை துரைசாமி அவர்களின் அலுவலகத்தில் அண்ணாயிசம் என்ற ஒரு பெரிய சுவரொட்டி படம் இருப்பதையும் காணலாம். அதை வாசித்துப் பார்க்கும் பொழுது அண்ணாயிசம் ஒரு தெளிவான அரசியல் கொள்கையாக இருப்பது தெரியவரும்.

நேற்று இன்று நாளை படத்தில் திமுகவின் ஊழல்களை எம்ஜிஆர் வாலியிடம் எடுத்துக்கூறி என்னென்ன விஷயங்கள் தன்னுடைய பாட்டில் வரவேண்டும் என்று குறிப்பிட்டுச் சொல்லி எழுதி வாங்கினார். அந்தப் பாடலின் முதல் வரியிலேயே நான் அண்ணாவின் கருத்துப் பள்ளியில் இருந்து வந்தவன்; அண்ணாவின் கொள்கைகளில் நம்பிக்கை உடையவன்; அதனைப் பின்பற்றி நடப்பவன்; நான் அண்ணாவின் தம்பி என்ற கருத்தோடு தொடங்கி

தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேத்து
அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று
என்றும் நல்லவர்க்கு வாழ்வு வரும் நாளை இது
அறிஞர் அண்ணா எழுதி வைத்த ஓலை என வரும்.

நல்லவன் இன்று துன்புற்றாலும் நாளை நல்வாழ்வை அடைவான். இது அறிஞர் அண்ணா நமக்கு தந்த நம்பிக்கையாகும், என்ற கருத்துடன் இப்பாடல் தொடங்குகிறது. இந்த நபிக்கை தான் கட்சி தொதானிய இரண்டு வருடங்களை புதுச்சேரியில் அதிமுக அரசு அமைய உதவியது. தமிழ்நாட்டில் அதிமுக அட்ட்சியை பிடிப்பதற்கு முன்பே புதுச்சேரியில் ஆட்சியை பிடித்துவிட்டது.

அண்ணாவின் கொள்கைப்படி நடப்பவர்கள் வெற்றியையும் நல்ல வாழ்க்கையை யையும் அடைவார்கள். அவர்களுக்கு நன்மையே விளையும் என்ற நம்பிக்கையை எம்ஜிஆர் தன் பாடல்கள் மூலமாக தன் ரசிகர்களுக்கும் தன் கட்சி தொண்டர்களுக்கும் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருந்தார். இது ஒரு சத்து டானிக் போல ஊட்டச்சத்து போல மக்கள் சோர்வடையாமல் இருக்க உதவியது. எம் எம் ஜி ஆரின் படங்கள் மற்றும் பாடல்கள் மூலமாக நன்னம்பிக்கை தொடர்ந்து ரசிகர்களுக்கு ஊட்டப்பட்டு வந்தது.

நவரத்தினம் படத்தில் போலீசுக்கு பயந்து ஓடி ஒளியும் ஒரு இளைஞனாக எ ஜி ஆர் நடித்திருந்தார். சிறுவயதில் இருந்தே எம் ஜி ஆர் போலீஸ் என்றாலே பயப்படுவார். அவர் அம்மா அவரை அப்படி பயமுறுத்தி வைத்திருந்தார். அவர் ஒரு நாள் தெரியாமல் வந்து ஒரு மிலிட்டரிகாரரின் முறைப் பெண்ணிடம் சிக்கிக் கொள்வார் அங்கு இருக்கும் குழந்தைகளோடு அவர் பாடுகின்ற பாடல்

உங்களில் நான் அண்ணாவை பார்க்கிறேன் அந்த
உத்தமராம் காந்தியையும் பார்க்கிறேன் பார்க்கிறேன்


எனப் பாடுவார். இந்தப் பாடல் வருங்காலத் தூண்களாகிய இன்றைய குழந்தைகள் நம் நாட்டின் எதிர்கால அறிஞர்கள் என்பதால் இவர்களிடம் இவர்கள் முகங்களில் அண்ணாவையும் காந்தியையும் பார்க்கிறேன் என பாடுவது சிறந்தவர்களை உருவாக்குவதற்குச் சிறந்தவர்களை எடுத்துக்காட்ட வேண்டும் என்ற கருத்தை உணர்த்துகிறது. நாம் குழந்தைளுக்கு நல்ல நம்பிக்கையையும் உயர்வான லட்சியங்களையும் ஊட்டி வளர்க்க வேண்டும் என்ற கருத்தை உள்ளடக்கியதாகும்

எம்ஜிஆர் தன்னுடைய பாடல்களில் உயர்ந்தவர்களை உத்தமர்களை, நல்லவர்களை எடுத்துக்காட்டுகிறார். இவர்கள் உங்கள் வாழ்க்கையின் வழிகாட்டிகளாக கொண்டால் உங்களின் வாழ்க்கை சிறக்கும். உங்கள் வாழ்க்கை நம்பிக்கை கொண்டதாக இருக்கும்; நாணயமானதாக இருக்கும்; நேர்மையான வழியில் நடப்பீர்கள்; துன்பங்களைக் கண்டு துவண்டு போக மாட்டீர்கள்; இன்பங்களால் இடறி விழ மாட்டீர்கள் என்ற கருத்துக்களை மக்களுக்கு எடுத்துச் சொல்கின்றன. ரு

எம் ஜி ஆர் ஒரு தத்துவஞானியைப் போலவே இந்தக் கருத்துக்களையெல்லாம் ர் பாடல் ஆசிரியர்கள் மூலமாக எழுதி வாங்கி படங்களில் பயன்படுத்திஉள்ளார். இங்கு பாடலாசிரியர்கள் ஒரு கருவி மட்டுமே; பாடலாசிரியர் இசையமைப்பாளர் இயக்குனர் ஆகியோரை எல்லாம் திறன்மிகு கருவிகளாக கொண்டு எம்ஜிஆர் என்ற ஒரு கலைஞர் ஒரு அறிஞர் என்ற நிலையில் இருந்து எம் ஜி ஆர் நல்ல கருத்துக்களை மக்களுக்கு எடுத்துக் கூறி அடுத்த அடுத்த தலைமுறை இளைஞர்களை ஊக்கம் மிக்கவராக மற்றவர்களுக்கு அவர்கள் ஊக்கம் அளிப்பவராகவும் வளர்த்திருக்கிறார்.


                                                                                                         

முனைவர் செ.இராஜேஸ்வரி

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்