‘எதனைக் கண்டான், மதம்தனைப் படைத்தான்?’

பேராசிரியர் இரா.மோகன்


“பறவையைக் கண்டான், விமானம் படைத்தான்
பாயும் மீன்களில் படகினைக் கண்டான்
எதிரொலி கேட்டான், வானொலி படைத்தான்
எதனைக் கண்டான், மதம் தனைப் படைத்தான்?”


எனத் தம் திரையிசைப் பாடல் ஒன்றில் பொட்டில் அடித்தாற் போல் கேட்பார் கவியரசர் கண்ணதாசன். மனித குலத்தை நெறிப்படுத்தத் தோன்றிய – வேண்டிய – மதம், மனித மனங்களில் வெறியினை விதைத்து, மனிதர்கள் இடையே சண்டைகளும் சச்சரவுகளும் முரண்பாடுகளும் மோதல்களும் கலகங்களும் கொலைகளும் ஏற்படக் காரணமாக அமைந்தது அவலத்திலும் பேரவலம்; கொடுமையிலும் பெருங்கொடுமை. இதனாலேயே வள்ளலார், ‘மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்!’ என இறைவனிடம் வேண்டினார்.

அருளாளர்களும் கவிஞர்களும் சிந்தனையாளர்களும் புரட்சியாளர்களும் கனவு காணும் புதிய உலகத்தில் – ஒப்பிலாத சமுதாயத்தில் -

“சமயங்கள் எல்லாம்
தைக்கின்ற நூலாகும்
கத்தரிக்கோல்களின்
காரியத்தைச் செய்யாது
இனிய கீதை
இந்துக்களையும்
கீர்த்திமிகு பைபிள்
கிறித்தவர்களையும்
முதிர்ந்த குர்ஆன்
முஸ்லிம்களையும்
உற்பத்தி செய்யாமல்
மனிதர்களை உருவாக்கும்.”


இன்றைய சூழலில் ஒன்றுபட்ட, புதிய இந்தியா பிறப்பதற்கு, மன, மொழி, மெய்களால் மேம்பட்ட மனிதர்கள் உருவாவதே உடனடித் தேவை ஆகும்.

அண்மையில் படித்ததில் பிடித்தது:

ஒரு கோயில் கோபுரத்தில் ஏராளமான புறாக்கள் வசித்து வந்தன. ஒரு நாள் கோயிலில் கும்பாபிஷேகப் பணிகள் தொடங்கின. இதனால் அந்தப் புறாக்கள் மாற்று இடம் தேடிக் கிளம்பின. வழியில் ஒரு கிறிஸ்தவத் தேவாலயத்தைக் கண்டதும், அங்கிருந்த சில புறாக்களோடு, இந்தப் புறாக்களும் சேர்ந்து வாழத் தொடங்கின. சில நாட்களில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காகத் தேவாலயத்தில் வெள்ளையடிக்கத் தொடங்கினர். இதனால் மொத்தப் புறாக்களும் வேறு இடம் தேடிக் கிளம்பின. வழியில் ஒரு பள்ளி வாசலைக் கண்டன. அங்கு ஏற்கனவே சில புறாக்கள் இருந்தன. அவற்றோடு இந்தப் புறாக்களும் சேர்ந்து வாழத் தொடங்கின. ரம்ஜான் பண்டிகை வந்த போது அங்கும் சிக்கல் வந்தது. மொத்தப் புறாக்களும் கும்பாபிஷேகம் முடிந்த கோயில் கோபுரத்தில் தஞ்சமடைந்து வாழத் தொடங்கின.

ஒரு நள் அந்தப் பகுதியில் மனிதர்கள் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டு சண்டை இட்டனர். சண்டையில் பல பேர் மடிந்து போயினர். இதைப் பார்த்த குட்டிப் புறா ஒன்று தன் தாய்ப் பறவையிடம், “ஏன் இவர்கள் சண்டை போட்டுக் கொள்கிறார்கள்?” என்று கேட்டது. அதற்குத் தாய்ப் புறா, “நாம் கோயிலில் இருந்தாலும் புறா தான். சர்ச் அல்லது பள்ளிவாசலில் இருந்தாலும் புறாதான். ஆனால், மனிதன் கோயிலுக்குப் போனால் இந்து, சர்ச்சுக்குப் போனால் கிறிஸ்தவன், பள்ளிவாசலுக்குப் போனால் முஸ்லிம்” என்று கூறியது. குட்டிப் புறா குழம்பியபடி, “அது எப்படி? நாம் எங்கே போனாலும் புறா என்கிற மாதிரி, அவர்களும் எங்கே போனாலும் மனிதர்கள் தானே?” என்று கேட்டது. அதற்கு தாய்ப் புறா, “அது புரிந்ததால் தான் நாம் மேலே இருக்கிறோம்; புரியாததால் அவர்கள் கீழே இருக்கிறார்கள்” என்றது.

இப்போதைக்கு தாய்ப் புறாவின் இந்தத் தெளிவு, ஆறறிவு படைத்த மனித குலத்திற்கு வாய்த்து விட்டால் போதும், உலகம் இன்பம் விளையும் தோட்டமாக ஆகிவிடும்!.
 

 

‘தமிழாகரர்’ முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.

 

 

 




 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்