நாண்மணிக்கடிகை நவிலும் வாழ்வியல் உண்மைகள்

முனைவர் நா.அமுதாதேவி


முகவுரை

ங்கம் மருவிய காலத்தில் பல்வேறு வகையான நோக்கத்துடன் பல நூல்கள் இயற்றப்பட்டுள்ளன. அவற்றில் பதிணென்கீழ்க்கணக்கு நூல்கள் மிகவும் இன்றியமையாத ஓன்றாகும். துனிமனித வாழ்வியல் அறங்களையும் ஒழுக்கங்களையும் பல்வேறு வகையாக திட்டமிடுதலுடன் நூலாக வடிவமைத்துள்ளனர். இத்தகைய நூல்களை அகம், புறம் என இருவகையாகப் பாகுபடுத்தி வரையறுக்கலாம்;. இவ்விருவகையான பகுப்புமுறையிலும் வாழ்வியல் முறையைப் பகுத்துக்காணலாம். இப்பகுப்புமறையில் நாண்மணிக்கடிகை என்னும் இந்நூல் பல்வேறுவகையான வாழ்வியல் அறத்தை நமக்கு எடுத்துரைத்துள்ளது. தனிமனிதனின் வரையறுக்கப்பட்ட ஒழுக்கமே சமுதாயத்தை நல்வழிப்படுத்தும். ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதில் தனிமனித ஒழுக்கம் தவிர்க்க இயலாத ஒரு காரணியாக அமைந்துவிடுகிறது. இவ்வாழ்வியல் ஒழுக்கத்தினை பல்வேறு வகையாக விளம்பிநானார் சுட்டிக்காட்டியுள்ளார். தனிமனித வாழ்வியல் ஒழுக்கத்தினைத் தொகுத்துரைக்கும் நூலாக இந்நூல் அமைந்துள்ளது. நாண்மணிக்கடிகை வாயிலாக அறியலாகும் வாழ்வியல் ஒழுக்கத்தினை ஆய்வதாக இக்கட்டுரையின் பொருண்மை அமைகின்றது.

நூல் அறிமுகம்

நீதி நூல்களின் வரிசையில் இந்நூல் வகைப்படுத்தப்பட்டுள்ளது. விளம்பிநாகனார் என்னும் புலவரால் இந்நூல் இயற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடலும் நான்கு அடிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடலும் நான்கு மணியான கருத்துக்களை வகைப்படுத்தியுள்ளது. நான்கு மணிகள் ஒருங்கே வைக்கப்பட்டிருந்தால் எவ்வாறு ஒளிதருமோ அதுபோல ஒவ்வொரு பாடலும் தனிமனிதனின் அறிவினை, ஒழுக்கத்தினை வளப்படுத்திக் கொள்ளும் வகையில் இந்நூல் கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. இந்நூல் மொத்தம் 104 பாடல்களை உள்ளடக்கியதாகும். இந்நூலின் இரண்டு பாடல்களை ஜு.யு. போப் ஆங்கில மொழியில் மொழிப்பெயர்த்துள்ளார்.

வாழ்வியல்விழுமியம்

தனிமனிதனுடைய சிந்தனைகள்,கருத்துக்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அமைவதை விழுமியம் என்போம். விழுமியங்கள் சமுதாயம் சார்ந்தும் பண்பாட்டின் அடிப்படையிலும் அமைகின்றது. தனிமனிதன் தான் சார்ந்திருக்கும் சமுதாயத்திற்கு எவ்வகையிலும் பாதகம் இல்லாத வகையில் மக்களை நல்வழிப்படுத்தும் நோக்குடன் வாழ்வியல்விழுயங்கள் அமைகின்றது. இவ்விழுமியங்கள் மனிதனைச் செழுமைப்படுத்துவதற்காகவும் நெறிப்படுத்தவும் உதவுகின்றது. இத்தகைய வாழ்வியல்விழுமியங்களை எடுத்துரைப்பதற்கு நூல்கள் ஒரு படியாக இருந்து உதவுகிறது. அவ்வகையில் நீதிநூல்களின் வரிசையில் உள்ள நாண்மணிக்கடிகை என்னும் இந்நூல் பலவாழ்வியல் நியதிகளை நமக்கு வகைப்படுத்திக்காட்டியுள்ளது.

இல்வாழ்வு

மனித வாழ்விற்கு இன்றியமையாதயாக அமைவது இல்வாழ்க்கை ஆகும். இல்லறத்தை நல்லறமாக மாற்றும் திறன் உடையவள் பெண். பெண் தன்னை பல ஆளமைத்தன்மை உடையவளாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு தான் சார்ந்துள்ள குடும்ப உறவுகளைக்காத்து வருகின்றாள். இத்தகைய சிறப்புத்தன்மை உடைய பெண்களின் நிர்வாகத்தன்மை மேலும்  பலம் பெற பல கருத்துக்களை வகைப்படுத்திக்காட்டியுள்ளார். நல்ல குடும்பம் என்பது கணவன், மனைவி, குழந்தைகள் என அனைவரையும் உள்ளடக்கியதாகும். பெண் தான் சார்ந்திருக்கும் குடும்பத்திற்கு விளக்காக இருப்பவள். ஒரு குடும்பம் நல்ல வழியில் செல்ல அக்குடும்ப உறவுகள் கல்வி பெற்றிருப்பது  அவசியமான ஒன்றாகும். இதனை

மனைக்கு விளக்கம் மடவார் -மடவார்
தமக்குத் தகைசால் புதல்வர் - மனக்கினிய
காதல் புதல்வருக்குக் கல்வியே கல்விக்கும்
ஓதில் புகழ்சார் உணர்வு”
(நாண்-105)

என்ற இப்பாடலடிகளின் வாயிலாகச் சுட்டியுள்ளார். பெண் கல்வி நிலையில் முன்னேறி இருக்கும் பொழுது தன் கணவனால் புகழப்படுவாள். எவ்விதக்காவலும் இன்றி தன்னைத் தற்காத்துக் கொள்ளும் ஆற்றல் உடையவளாக மாறிவிடுகிறாள். வள்ளுவர் பெண் என்பவள் தன்னைத் தற்காத்துக்கொண்டு தான் சார்ந்திருக்கும் குடும்ப உறவுகளையும் காக்கும் பண்பினை உடையவள் என்பதனை

"தற்காத்துத் தற்கொண்டான் பேணி தகைசான்ற
சொற்காத்து சோர்விலால் பெண்”
(56)

என்ற குறளின்(56) வாயிலாச்சுட்டியுள்ளார். நாணம் பெண்ணுக்கு அழகு சேர்க்கும் “நாணம் தனக்கு அணி தான் செல் உலகத்து அறம்”(நாண் - 9) என்ற வரிகளின் வாயிலாக பெண் எவ்வகையில் முன்னேறியவளாக இருப்பினும் நாணம் உடையவளாகத் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும். பெண் தாய்மை என்னும் நிலையைப் பெறும் பொழுது மேலும் பல வாழ்வியல் நிலையில் முன்னேறுகிறாள். இத்தனைய சிறப்பினை உடைய பெண் இல்லாத மனை பாழ்பட்டுவிடும் என்பதனை “மனைக்குப் பாழ் வாள்நுதழ் இன்மை”(நாண் - 22) என்ற பாடலடிகள் இதனை உணர்த்திநிற்கிறது.

மக்கட்பேறு

குடும்ப வாழ்விற்குப் பெருமையும் சிறுமையும் தேடித்தருபவர்கள் குழந்தைகள். இவர்களால் பெற்றோருக்குப் பெருமையும் சிறுமையும் ஏற்படும். எத்தகைய நிலையிலும் தம் குழந்தைகளை உயர்வாகவே கருதுவர் என்பதனை "மக்களின் ஓண்மையவாய்ச் சான்ற பொருளில்லை”(நாண் -57) என்ற வரிகளின் வாயிலாக  நாம் எத்தகைய உயர்வான பொருளைப் பெற்றிருந்த போதிலும் தம் பிள்ளைகளை விட உயர்வான பண்பினை உடையவர்கள் இவ்வுலகில் இல்லை என்பதனைத் தன் வரிகளில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கல்வி

கல்வி எத்தகைய நிலையிலும் பிறரால் கவர இயலாத சிறப்பினைப் பெற்றது. இது நெருப்பாலும் நீராலும் கள்வர்களாலும் கவர இயலாத சிறப்பினைப் பெற்றது. எனவே நிலையில்லாத செல்வத்தின் மீது தன் கவனத்தினைச் செலுத்தி மனித உறவுகனைத் தவிர்பதனைக் காட்டிலும் நிலைத்த கல்விச்செல்வத்தின் மீது பற்று கொண்டு பல பயனுடைய கல்வியைக் கற்று வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதனைத் "திருவின் திறன் உடையது இல்லை” (நாண் - 29 ) என்ற பாடலடிகளின் வாயிலாகச் சுட்டியுள்ளார். கல்வி அறிவினைப் பெற்றவர்கள் துணிந்து முடிவெடுக்கும் ஆற்றல் பெற்றவர்களாக இருப்பர். கல்வியறிவு இல்லாதவர்கள் தம் மனக்கருத்துக்களை அவையில் துணிந்து கூறத் தயங்கி நிற்பர். கல்வி ஓருவருக்கு தன்னம்பிக்கையையும் மன உறுதியையும் தரக்கூடிய ஆற்றலைத் தருகின்றது. கல்வியைப் போல சிறந்த துணை வேறு எதுவும் இல்லை எனலாம். நம்மிடம் உள்ள செல்வத்தினைப் பிறருக்குக் கொடுத்து உதவமுடிவது போல நல்ல கல்வியையும் பிறர் பயன்படும் படி கொடுத்து உதவமுடியும்.

கற்றவர்களின் சிறப்பு

கற்றவர்கள் எங்கு சென்றாலும் போற்றுதலுக்குரியவராகவே காணப்படுவர். கற்றவர்களின் சிறப்பினைப் பிறருக்கு எடுத்துரைக்க கல்லாத மக்களின் வாழ்வியல் நிலையைச் சான்றாகக் காட்டிவிளக்கியுள்ளார். கல்லாத மக்களின் வாய்ச்சொற்களே தம் நிலையை உலகிற்கு உணர்த்திவிடுகிறது. கல்லாத மக்களின் வாய்ச் சொற்களே அவர்களுக்கு எமனாக அமைந்துவிடுகிறது. வாழையின் கன்று வாழைமரத்திற்கு அழிவைத் தேடித் தருவது போல கல்லாதவர்களின் சொற்கள் அமைந்துவிடுகிறது.

"கல்லா ஒருவருக்குத் தம்வாயில் சொல் கூற்றம்
மெல்லிலை வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம்
அல்லவை செய்வார்க்கு அறம் கூற்றம் கூற்றமே
இல்லத்துத் தீங்கொழுகுவாள்”
   
(நாண் - 85)

கல்லாதவர்கள் வயதில் மூத்தவராக இருந்தாலும் இவ்வுலகம் அவர்களை மதிக்காது. கற்றவர்கள் இளைஞர்களாக இருப்பினும் அவர்களை உலகம் பாராட்டும்

ஒரு குடியில்…..
கல்லாது மூத்தானைக் கைவிட்டுக் கற்றான்
இளமை பாராட்டும் உலகு”
   ( நாண் -66)

என்ற பாடலடிகளின்  வாயிலாக இதனை அறியலாம்.

வாழ்வியல் உண்மைகள்

ஒருவர் நமக்குச் செய்த தீமைகளை நாம் எண்ணிக்கொண்டிருக்கக்கூடாது. மாறாக அவர் செய்யும் நன்மைகளை எண்ணிப்பார்த்து நாம் அவர்களை மறக்காமல் இருத்தல் வேண்டும். இதனை விளம்பியார்

கன்றாமை வேண்டும் கடிய பிறர்செய்த
நன்றியை நன்றாக் கொளல் வேண்டும்”
    (நாண் - 13)

என்ற வரிகளால் என்றும் பிறர் செய்த நன்மைகளையும் நாம் சிந்திக்க வேண்டும் எனச் சுட்டியுள்ளார்.

நிலையாமை

நம் குடிப்பிறப்பின் காரணமாக நமக்கு நன்மையும் தீமையும் வருவதில்லை. குடிப்பிறப்பும் வெற்றியும் வேறானவை. எக்குடியில் பிறந்திருந்தாலும் அக்குடியில் நன்மக்கள் பலரும் தோன்றியிருப்பர். இயற்கை நிகழ்வுகள் இயல்பாகத் தன் பணியைச் செய்வது போல தம் பணியைச் செவ்வனே மேற்கொள்ளும் பொழுது நமக்கான உரிய இடம் தானாக நம்மை வந்தடையும்.

என்றும் உளவாகும் நாளும் இருசுடரும்
என்றும் பிணியும் தொழில் ஓக்கும் -
என்றும்
கொடுப்பாரும் கொள்வாரும் அன்னார் பிறப்பாரும்
சாவாரும் என்றும் உளர்”
    (நாண் -60)

என்ற வரிகள் வாயிலாக இவ்வுலக மாந்தர்களின் இயல்புகளை மிக இயல்பாகப்பதிவிட்டுள்ளார். உலகில் பிறந்த அனைவரும் இறவாநிலையை அடையாமல் என்றும் வாழ்வது இல்லை என்றாவது ஒருநாள் நிச்சயம் இறப்பு என்னும் நிலையை நாம் அடைவது உறுதியாகும். நம்மிடம் உள்ள செல்வமும் இளமையும் நம்மைவிட்டு என்றாவது ஒருநாள் நீங்கிச்செல்லும் என்பதனை

சாவாத இல்லை பிறந்த உயிரெல்லாம்
தூவாத இல்லை வலிகளும்  -
மூவாது
இளமை இசைந்தாரும் இல்லை வளமையில்
கேடு இன்றிச் சென்றாரும் இல்”
  
 (நாண் -79)

என்ற பாடல்வரிகள் வாயிலாகக் குறிப்பிட்டுள்ளார்.

இனிமையான சொல்

ஒருவன் பிறரிடம் சொல்லும் சொல் வலிமை நிறைந்ததாகும். எனவே நாம் வலிமையான ஆற்றல் நிறைந்த சொற்களை அவையிலும் சான்றோர்களிடமும் பயன்படுத்த வேண்டும். அப்படிப்பட்ட சொற்களின் ஆற்றலை நாண்மணிக்கடிகை பல பாடல்களில் விளக்கியுள்ளது. சொற்கள் நம்மை பலம் வாய்ந்தவர்களாகவும் பலவீனமானவர்களாகவும் உருவாக்குகிறது. அன்பில்லாதவர்களின் வாயில் பழிச்சொற்கள் உண்டாகும். அச்சொற்கள் பலருக்கும் சினத்தை உண்டாக்கும். பண்பில்லாத பலரும் பிறருக்கு சினத்தை உண்டாக்கும் சொற்களையே பெரும்பாலும் பயன்படுத்துவர்.

வடுசொல் நயமில்லார் வாய்ச்த்தோன்றும் கற்றார் வாய்ச்

"சாயினும் தோன்றா கரப்புச்சொல் - தீய
பரப்புச்சொல் சான்றோர் வாய்த் தோன்றா கரப்புச்சொல்
கீழ்கள் வாய்த் தோன்றிவிடும் “-
   (நாண் -95 )

சொற்கள் நம் செயல்களைக் காட்டிலும் மிகுந்த துன்பத்தைத் தருபவை ஆகும். அச்சொற்கள் என்றும் ஆறாத வடுவைத் தரக்கூடியதாகும். எனவே சொற்களைப் பயன்படுத்தும் பொழுது ஆராய்ந்து பார்த்துப் பின் பயன்படுத்துதல் வேண்டும். நாம் சிந்திக்காமல் கூறும் சொற்களால் நல்ல நட்பு கூட கெட்டுவிடும் என்பதனை “நாவன்றோ நட்பறுக்கும்” (நாண் - 81) என்ற வரி புலப்படுத்துகிறது. நாம் சொல்லும் சொல்லின் தன்மையைக் கொண்டே நம் நிலையை அறிந்துகொள்ளலாம் என்பதனை

சொல்லான் அறிப ஒருவனை மெல்லென்ற
நீரான் அறிய மடுவினை –யார் கண்ணும்
ஒப்புரவினான் அறிப சான்றாண்மை மெய்க்கண்
மகிழான் அறிப நறா”
     (நாண் - 78)

என்ற இப்பாடலடிகளின் வாயிலாக இதனை அறியலாம்.

மனிதஇயல்பு

பறைபட வாழா அசுணமா உள்ளம்
குறைபடழ வாழார் நிறைவனத்து
நேல்பட்ட கண்ணே வெதிர்சாம் தனக்கு ஒவ்வாச்
சொல்பட்டால் சாவதாம் சால்பு”
  ( நாண் -21 )

என்ற இப்பாடலடிகள் கேகயம் என்னும் பறவை பறை ஓசை கேட்டால் இறந்துவிடுவது போல சான்றோர்கள் தன் தன்மானத்திற்கு இழுக்குஏற்படும் பொழுது அதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மூங்கில் மரத்தில் உள்ள முதிர்ந்த நெல் விரைவில் பட்டுப்போவது போல சான்றோர்கள் தம் மீது ஏற்படும் பழிச்சொல்லுக்கு என்றும் அஞ்சிவாழ்வர் என்பதனை உணர்த்துகிறது.

குடிப்பிறப்பின் சிறப்பு

கள்ளி வயிற்றில் அகில்பிறக்கும்: மான்வயிற்றில்
ஓள் அரி தாரம் பிறக்கும் பெரும் கடலுள்
பல்விளைய முத்தம் பிறக்கும் அறிவார் யார்
?
நல்ஆள் பிறக்கும் குடி”(நாண் -(4)

கல்லில் பிறக்கும் கதிர் மணி”
    (நாண் - 5)

இப்பாடலடிகள் கள்ளிச் செடியில் அகில் பிறக்கிறது.மான் வயிற்றில் ஒளிபொருந்திய அரிதாரம் பிறக்கிறது. விலைமதிப்பில்லா முத்துக்கள் கடலுக்கு அடியில் இருந்து கிடைக்கப்பெறுகிறது. இவற்றினைப் போல நல்ல இயல்பினை உடையவர்கள் எக்குடியில் இருந்து வேண்டுமானாலும் உருவாகலாம். குடிப்பிறப்பு எவரையும் அடையாளப்படுத்தாது, அவரவர் பண்புநலன்களே நம்மை அடையாளப்படுத்தும் என்கிறார்.

எப்படி வாழவேண்டும்

இன்னாமை வேண்டின் இரவெழுக இந்நிலத்து
மன்னுதல் வேண்டின் இசைநடுக தன்னொடு
செல்வது வேண்டின் அறம் செய்க வெல்வது
வேண்டின் வெகுளி விடல்”
  ( நாண் - 15)

இப்பாடல் ஒருவன் தமக்கு இழிவு வரவேண்டும் என்று எண்ணினால் பிறரிடம் கையேந்தி ஒரு பொருளை யாசகமாகப் பெறுதல் வேண்டும். இப்புவியில் நிலைபெற்று வாழவேண்டும் என்று எண்ணினால் பிறர் நம்மைப் புகழும்படியான செயல்களைச் செய்ய வேண்டும். நாம் இறந்த பிறகு நம்முடன் துணைவர வேண்டும் என்று விரும்பினால் நம்மால் இயன்ற அளவிற்கு தருமம் செய்தல் வேண்டும். நாம் பிறரை  வெல்ல வேண்டும் என்று விரும்பினால் நம்மிடம் உள்ள கோபத்தினைக் கைவிட வேண்டும்.

மறுமையிலும் இன்பம் பெற

கற்பக் கழிமடம் அஃகும் மடம் அஃகப்
புற்கம்தீர்ந்த இவ்வுலகின் கோள் உணரும் கோள் உணர்ந்தான்
தத்துமான நெறிபடரும் அந்நெறி
இப்பால் உலகின் இசைநிறீஇ உப்பால்
உயர்ந்த உலகம் புகும்”
    ( நாண் - 28)

இவ்வரிகள் வாயிலாக அறிவு தரக்கூடிய நல்ல நூல்களைக்கற்பதால் நம் அறியாமை குறையும். நம் அறியாமை நீங்கினால் நாம் இவ்வுலக வாழ்வில் உள்ள நியதிகளை அறிந்து கொள்ள முடியும். உலக இயல்புகளை நாம் உணர்ந்த பின்பு உண்மை நிலையை ஏற்றுக் கொண்ட வாழ முடியும். இவ்வாறு உலக நிலையாமையை உணர்ந்து நாம் வாழத்துவங்கினால் வீடுபேறு என்னும் நிலையை அடையலாம்.

நிறைவுரை

கீழ்க்கணக்குநூல்கள் பலவும்பல்வேறு வகையில்அறங்களைஎடுத்துரைக்கிறது.அறம் என்பதுதனிமனித வாழ்வியல் அறத்தை நல்வழிப்படுத்தவும்,வகைப்படுத்தவும் நம் நான்றோர்களால் நமக்கு அறிவுறுத்தப்பட்டதாகும். அறக் கோட்பாடுகளைக் கற்றலும் அதனைப் பின்பற்றுவதும் தலைசிறந்த பண்பாகும். அறவழியில் நம்மை செழுமைப்படுத்திக் கொள்ளும் பொழுது இவ்வுலக இயல்புகளில் இருந்து மாறுபடாமல் நம்மை நல்வழிப்படுத்திட வழிவகை செய்கிறது.அவ்வகையில் நாண்மணிக்கடிகை என்னும் இந்நூல் தனிமனித வாழ்வியல் அறத்திற்குத் தேவையான பல கருத்தக்களைத் தொகுத்துரைக்கிறது.நம் வாழ்வில் எதனை செய்யக்கூடாது என்பதனையும் எப்படி திட்டமிட்ட படி வாழ வேண்டும் என்பதனையும்  பல செய்யுள் வரிகளில் சுட்டிக்காட்டியுள்ளார்.ஒரே பாடலில் நான்கு வேறுபட்ட கருத்துக்களைத் தொகுத்துக்கூறுவது சிறப்பாகும். எனினும் பல நேரங்களில் இப்பாடல் வரிகள் தொடர்பற்ற நிலையில் இருப்பதனையும் காணமுடிகிறது. இருப்பினும் நமக்குத் தேவைப்படும் அறக் கருத்துக்களை மட்டும் எடுத்துக்கொண்டு நம்மை சீர்செய்து கொள்ள நீதிநூல்கள் பெரும்பாலும் துணைசெய்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.

 

முனைவர் நா.அமுதாதேவி
தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்
இரத்தினம் கலை அறிவியல் கல்லூரி
கோவை-21


 







 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்