நியாண்டத்தல்கள் (Neanderthals)

கனி விமலநாதன் B.Sc


1856ம் ஆண்டு, டார்வின் இன்னமும் தன் கூர்ப்புக் கொள்கையை வெளிடாத நேரம், ஜெர்மனியின் நியாண்டர் பள்ளத்தாக்கில் உள்ள சுண்ணாம்புப்பாறைச் சுரங்கம் ஒன்றில் வேலை செய்பவர்கள் அங்கிருந்த குகை ஒன்றினுள் கும்பலாகச் சில எலும்புகளைக் காண்கிறார்கள். ஏதாவது பழங்காலத்து கரடி இனத்தினது எலும்புகளாக அவை இருக்க்கூடும் என எண்ணிய அவர்கள், சிலவற்றை உள்ளூர் ஆசிரியர்களிடமும் சில ஆய்வாளர்களிடமும் கொடுத்தார்கள். அவ்வெலும்புகளை ஆய்வு செய்தவர்களுக்கு அவை கரடிகளின் எலும்புகள் இல்லை என்பது தெரிந்தது. தொடர்ந்து செய்த ஆய்வுகள் அவர்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தன. அந்த எலும்புகள் மனிதரை ஒத்ததான ஆனால் மனிதரிலும் சற்று வித்தியாசமான ஒரு உயிரினத்தின் எலும்புகள் என்பதை அந்த ஆய்வாளர்கள் இனம் கண்டு கொண்டார்கள்.

நியாண்டல் பள்ளத்தாக்கில் இந்த எலும்புகள் கண்டெடுக்கப்பட்டதினால் இவ்வுயிரினத்திற்கு ஜெர்மனிய உச்சரிப்பின்படியே நியாண்டத்தல் எனப் பெயரிட்டார்கள். நுpயாண்டத்தல் ஒருவர் இப்படித்தான் தோற்றமளிப்பரோ! ஜெர்மனியின் இந்த நியாண்டல் குகைகள் இப்போது பேர்பெற்ற சுற்றுலா இடமாக உள்ளது. nஐர்மனியின் நியாண்டருக்கு முன்னராகவும் பல இடங்களில் இவ்வகை எலும்புகள் கண்டெடுக்கப்பட்டிருந்த போதிலும் நியாண்டலின் ஆய்வுகளே இவ்வினத்தினை அடையாளம் காட்டியது. 1829ம் ஆண்டு பெல்சியப் பகுதிகளிலேயே முதன் முதலில் நியாண்டத்தல்களின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன. ஐரோப்பியாவின் பலவிடங்களிலும் ஈராக். இஸ்ரேல் போன்ற பகுதிகளிலும் கூட நியாண்டத்தல்களின் எலும்புகள் அதிக அளவில் கண்டெடுக்கப்பட்டிருந்தன.

இப்படியிருக்கiயில்தான்; டார்வினின் தனது கூர்ப்புக் கொள்கையை, இவ்வெலும்புகள் கண்டுபிடிக்கப்பட்ட அதே ஆண்டில் வெளியிட்டுப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். தொடர்ந்து துரிதமான ஆய்வுகள் மனிதக் கூர்ப்பு பற்றி நடைபெற்றன. மனிதக் கூர்ப்பு பற்றி ஆய்வுகள் செய்தவர்களுக்குக் கூர்ப்புப் பாதையில் ஒரிடம் வெற்றிடமாக இருப்பது தெரிந்தது. அதனைத் 'தவறிய இணைப்பு'
(missing link) எனக் கூறியவர்கள் அந்தவறிய இணைப்பினையும் தேடத் தொடங்கினார்கள்.

அதேவேளையில் இந்த நியாண்டத்தல்கள் பற்றிய ஆய்வுகளை இன்னொரு பகுதியினர் ஆர்வமாகச் செய்து கொண்டிருந்தார்கள். இந்த நியாண்டத்தல்களும் மனித இனப் பரிணாமத் தோன்றலை விளங்கப்படுத்தக் கூடிய இனமாக இருப்பதை அவதானித்த ஆய்வாளர்கள் சிலர் ஒருவேளை நியாண்டத்தல்கள்தான் மனிதக் கூர்ப்புப் பாதையில் தேடப்பட்டுவரும் அந்தத் தவறிய இணைப்போ எனவும் ஐயுற்றார்கள். ஆனால் மனித இனத்தினைப் போன்றே நியாண்டத்தல்களும் கூர்ப்பில் வந்த ஒரு கிளையினர் என்று தொடர்ந்த ஆய்வுகள் கூறின. அதனால் மனித இனத்தின் சகோதர இனமாக நியாண்டத்தல்களை விஞ்ஞானிகள் இன்று காண்கிறார்கள். எனவே தொல்காப்பியரின் வழியில் நியாண்டத்தல்களை நான் உயர்திணையிலேயே அழைக்கிறேன்.

இந்த நியாண்டத்தல்கள் பற்றி விபரத்தைச் சுருக்கமாகப் பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். சுமார் 2 மெய்யிரம் (மில்லியன்) ஆண்டு முன்னராக மனிதக் கூர்ப்புப் பாதையில் ஆபிரிக்காவில் ஆதிமனிதர்களாகிய கோமோ இரெக்சஸ்
(Homo Erectus) தோன்றுகிறார்கள். (இன்னொரு கட்டுரையின் கூடாக மனிதக் கூர்ப்பின் விபரத்தைப் பின்னர் பார்ப்போம்) ஒரு மெய்யிரம் ஆண்டு காலத்திற்கும் மேலாக ஆபிரிக்காவில் உலவிய கோமோ இரெக்சுகளில் ஒரு பகுதியினர் இற்றைக்கு 800,000 ஆண்டு முன்பாக ஐரோப்பாவுக்கு இடம்பெயர்ந்து போகின்றார்கள். இப்படியாக இடம்பெயர்ந்த கோமோ இரெக்சசுகள் தமது புதிய சூழலுக்கான மாற்றங்களை மெதுமெதுவாகப் பெற்று ஐநூறாயிரம் வருடங்களில் ஒரு புதிய இனமாக மாறுகின்றார்கள், கூர்ப்பின் வழியிலே. இவர்கள்தான் நியாண்டத்தல்கள். இந்நேரத்தில் ஆபிரிக்காவில் நவீன மனிதர்களாக கோமோ சேப்பின்கள் (Homo sapiens)  தோன்றவில்லை.

நிமிர்ந்த நடையுடன், குளிரினை தாங்கக் கூடயதான அகன்ற உடல்வாகும் கொண்ட, நியாண்டத்தல்கள் அசப்பில் எங்களைப் போன்றவர்கள். கொஞ்சம் உயரம் குறைந்தவர்கள் விஞ்ஞானிகள் காட்டும் படங்களை ஒப்பிட்டுப் பாருங்கள்.

ஆண்கள சராசரியாக 5 அடி 6 அங்குல உயரமும் பெண்கள் 5 அடி 2 அங்குல உயரமும் கொண்டவர்கள். கூட்டு வாழ்க்கையமைப்பினைக் கொண்ட இவர்கள் குகைகளில் வாழ்ந்து வேட்டையாடி உண்டிருக்கின்றார்கள். வேட்டையில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் எல்லோருமே ஈடுபட்டதால் இவர்களது சராசரி வாழ்வுக் காலம் கூட 50களுக்குக் கிட்டவாக இருந்திருக்கலாம் என்கின்றார்கள். கல்லாயுதங்கள் முதல், தடிகளைச் சீவிக் கூரான ஆயுதங்களையும் செய்யும் வல்லமை கொண்டவர்களாக இருந்தவர்கள், நெருப்பின் பயன்களைத் தெரிந்திது அதனை வசதியாகக் கையாளத்தக்கவர்களாகவும் ஆகியிருந்தார்கள். அதுமாத்திரமல்ல, கிட்டத்தட்ட நவீன மனிதர்களது மூளையினது பருமனான மூளையைக் கொண்ட நியாண்டதல்களிடையே மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான தொடர்பாடல்களும் இருந்திருக்கின்றது என்கிறார்கள். சைகைகளுக்கும் மேலாக சிற்சில ஒலிகளை எழுப்பிக் கூட ஒருவரோடொருவர் தொடர்பு கொள்ளக் கூடிய வல்லமை கொண்டவர்களாக இருந்திருக்கின்றார்கள். இவர்களின் உள் உடலுறுப்புகளில் ஒலியினை உண்டாக்கும் அங்கம் மனிதர்களினது போன்று அமையாது இருந்ததினாலேயே இவர்களினால் ஒலியினைக் கொண்ட மொழி அமைப்பினை ஏற்படுத்த முடியாதிருந்தது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.

நியாண்டத்தல்கள் வாழ்ந்த காலப்பகுதியல் புவி பனிக்காலத்துள் இருந்தது. அதனால், கடுங்குளிர் காலத்தில் ஐரோப்பாவின் குளிரைச் சமாளிக்கத் தெரியாமல் குளிர் காலங்களில் இஸ்ரேல், ஈராக் போன்ற சூடான பகுதிகளுக்கு இடம்யெர்ந்து, குளிர் குறைந்ததும் மீண்டும் ஐரோப்பாப் பகுதியிற்கே திரும்பிவிடுவார்கள். இவர்கள் மட்டத்தில் உயர்ந்த நாகரிகம் உடையவர்களாக இருந்திருக்கின்றார்கள். கற்களைச் செப்பனிட்டு ஆயுதமாகப் பாவிக்கும் தொழில் நுட்ப அறிவுடையவர்களாக நியாண்டத்தல்கள் இருந்திருக்கின்றார்கள். அழகியல் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். இவர்களிடம் சிப்பிகள், சிறு மணிகள் போன்றவற்றில் மாலைகள் செய்து அணியும் பழக்கமும் இருந்திருக்கிறது. நியாண்டத்தல்கள் சிற்ப வேலைகளிலும் ஈடுபட்டிருந்தார்களோ எனவும் எண்ணத் தோன்றுகிறது. அவர்கள் செய்த சின்னச் சின்ன சிலைகளைத்தான் உலகின் மிகப் பழமையான அழகியற் பொருட்களாகப் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். சித்திரங்கள் வரைவதிலும் வல்லவர்களாக இருந்த இவர்கள், அதனை தங்களின் தொடர்பாடல்களுக்கும் பயன்படுத்தியிருப்பார்களோ என எண்ணும் ஆய்வாளர்களும் உள்ளனர். இவற்றையெல்லாம் இவர்கள் வசித்த குகைகளில் இருந்த சித்திரங்களைக் காட்டி உறுதிப்படுத்துகிறார்கள்.

விலங்குகளின் தோலை உரித்துக் குளிர் தாங்கக் கூடிய ஆடைகளைச் செய்து அணியக் கற்றிருந்தார்கள். விலங்குகளின் எலும்புகiளில் ஊசிகள் செய்து விலங்குத் தோல் ஆடைகளை தைத்திருக்கிறார்கள். குகைகளில் கூடி வாழ்ந்தவர்களின் இவ்வடையாளங்கள் எல்லாம் இவர்களது எலும்புகள் கண்டெடுக்கப்பட்ட குகைகளில் இருந்தன. இறந்தவர்களுக்கு மரியாதை செய்யும் வழக்கமும் இவர்களிடையே இருந்ததற்ககுத் தடயங்கள் உண்டு என ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். இது ஒருவேளை பிற்காலத்தில் ஐரோப்பாவுக்குள் வந்த நவீன மனிதர்களுக்கும் நியாண்டதல்களுக்கும் இடையில் ஏற்பட்ட தொடர்பால் வந்தவையாக இருக்கலாம் எனச் சிலர் கூறுகின்றார்கள். ஏனெனில் நியாண்டத்தல்கள் வாழ்ந்த காலப் பகுதியில் மனிதர்களும் ஐரோப்பாவில் வாழ்ந்திருக்கின்றார்கள். சுமாராக 55 ஆயிரம் ஆண்டு முன்னராகத்தான் கோமோ சோபியன்களான மனிதர்கள் ஐரோப்பாவுக்குள் நுழைந்திருக்க வேண்டும் என்பது ஆய்வாளர்களின் கணிப்பு. இதன்படி, கோமோ சேப்பியன்களும் நியாண்டத்தல்களும் ஒன்றாக ஐரோப்பாவில் சில காலம் வாழ்ந்திருக்கின்றார்கள்.

இதனையும் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். நியாண்டத்தல்கள் வந்த கோமோ இரெக்சசுக்கள்தான் எங்களின் மூதாதையரும் ஆகும். ஐரோப்பா தவிர்ந்து ஆபிரிக்கா ஆசியா போன்ற இடங்களில் சஞ்சரித்த கோமோ இரெக்சசுக்கள் கூர்ப்பின் வழியில் இருநூறாயிரம் ஆண்டு முன்னராக, நவீன மனிதராகிய கோமோ சேப்பியன்கள் ஆக மாறுகிறார்கள். புதிய சூழலில் இவர்களின் கூர்ப்பு நடந்ததாலும் நியாண்டத்தல்களை விடச் சற்றுப் பெரியதான மூளை கொண்டவர்களாகவும் இந்த கோமோ சேப்பின்களாகிய நவீன மனிதர்கள் இருந்து விட்டதால் நியாண்டத்தல்களையும் விட புத்திக் கூர்மையுள்ளவர்களாக ஆகியிருந்தார்கள். இத்துடன் கதை நின்று விடவில்லை. 55 ஆயிரம் வருடங்களின் முன்னர் இந்த கோமோ சேப்பியன்களுக்கு மூளைவிகாரம்
(Brain Mutation) ஏற்பட, அவர்கள் மேலும் புத்திசாலிகளாக மாறிவிடுகின்றார்கள்.

இப்படியான நிலையில் 55 ஆண்டு முன்னராக கோமோ சேப்பியன்கள் ஐரோப்பாவுக்குள் நுழைகிறார்கள். அதனால் கோமோ சேப்பின்களுக்கு தங்களின் அண்ணன் இனமாகிய நியாண்டத்தல்களுடன் ஐரோப்பாவில் வாழும் நிலை ஒன்று ஏற்படுகின்றது. கோமோ சேப்பியன்கள் நியாண்டத்தல்களை விட சற்று உயரமாகவும் மெலிந்தவர்களாகவும் இருந்தாலும் ஒரே உருவ அமைப்புடைய இவ்விரு பகுதியினருக்கும் இடையில் கலப்புகள் கூட ஏற்பட்டிருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருகின்றார்கள். அதனை உறுதிப்படுத்துவது போல ஆபிரிக்கா தவிர்ந்த உலகின் ஏனைய பகுதிகளில் வாழுகின்ற மனிதர்களின் மரபணுக்களில், அதாவது 'டீஎன்ஏ'யில் 3 முதல் 5 வீதம் நியாண்டத்தல்களின் கலப்பு உள்ளதை ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

கிட்டத்தட்ட 300,000 ஆண்டு காலத்திற்கும் மேலாக ஐரோப்பாவில் வாழ்ந்த நியாண்டத்தல்கள், இற்றைக்கு 35,000 வருடங்களின் முன்பாகத்தான் புவியில் இருந்து முற்றாகவே அழிந்து போனார்கள் என்கிறார்கள். இவர்களின் அழிவுக்கான ஊகங்கள் பல உள்ளன. பொதுவாக அக்காலத்தில் ஐரோப்பாவில் இருந்த கடும்குளிரைத்தான் பலர் நியாண்டத்தல்களின் ஒட்டு மொத்த அழிவிற்கும் காரணமாகக் கூறுகிறார்கள். ஒருவேளை எரிமலைச் சீற்றங்கள் காரணமாகவும் இவர்கள் அழிந்திருக்கலாம் எனக் கூறும் சிலரும் உண்டு. இவற்றை விட, ஐரோப்பாவினுள் வந்த கோமோ சேபியன்கள் என்கிற எங்களின் முன்னவர்கள் (மனிதர்கள்) காலநிலையால் அழிந்து கொண்டு வந்த நியாண்டத்தல்களை வாழ்விடப் போட்டியின் காரணமாக, மனிதர்களை விடவும் மூளை வல்லமை குறைந்த நியாண்டத்தல்களை மெதுமெதுவாக இல்லாமற் செய்து விட்டார்கள் என்போரும் உளனர். இன்னமும், ஐரோப்பாவுக்குள் மனிதர்கள் நுழையும் போது தம்முடன் நியாண்டத்தல்களுக்கு ஒவ்வாத சில நோய்களைக் கொண்டு சென்றால், அவற்றின் தாக்கத்தால் நியாண்டத்தல்கள் அழிந்திருக்கலாம் எனக் கூறுபவர்களும் உண்டு. முடிவாக, வல்லமையான மனித இனம் தனது சகோதர இனமான நியாண்டத்தல்களிடம் இருந்து தேவையான அறிவியல் வளர்ச்சியைப் பெற்று விட்டு, வாழ்வியல் போட்டி காரணமாக அவர்களை அழித்து விட்டதோ என ஆய்வாளர்களின் கூற்றுகளில் இருந்து, எண்ணத் தோன்றுகிறது.

(குகை ஒன்றில் வாழும் நியாண்டதல்களைப் படம் காட்டுகிறது.

இவற்றை விட, இன்னொரு காரணமும் ஆய்வாளர்களால் முன்வைக்கப்படுகிறது. அவர்களின் இறுதிக்காலத்தில் அவர்களிடம் வேட்டையாடி உண்பதற்கான வல்லமை குறைந்து போய் விட்டது. அதனால் தம்மின மக்களையே அவர்கள் கொன்று உண்டிருக்க வேண்டும். ஆனால், தம்மின மக்களின் மாமிசம் அவர்களுக்கு ஒத்து வராததால் ஒவ்வாமை நோய்த் தாக்கத்தால் முற்றாகவே அழிந்து விட்டார்கள் எனச் சிலர் கருதுகின்றார்கள்.

இன்னொரு வகையிலும் நியாண்டத்தல்களின் அழிவினைப் பார்க்கலாம் என எனது சிந்தனை ஓடுகிறது. எப்படியெனில், கோமோ இரெக்சசுக்கள் 800 ஆயிரம் ஆண்டு முன்னர் ஆபிரிக்கப் பகுதியில் இருந்து ஐரோப்பாவினுள் நுழைகையில் ஐரோப்பாவின் சூழல் அவர்களுக்கு ஒத்ததாக இருக்கவில்லை. அதனால் 'தக்கன தங்குகும்' என்ற கூர்ப்பு முறையில் அவர்களில் தப்பிப் பிழைப்பதற்கு ஏதுவான மாற்றங்கள் ஏற்பட்டு, முடியாமல், ஒன்றில் இருந்து ஒன்றெனப் புதுப்புது இனங்கள் தோன்றித் தோன்றி, இறுதியில் நியாண்டத்தல்களுடன் அக்கூர்ப்புப் பாதை முடிவடைந்திருக்கலாம். நானறிய இப்படியான கருத்தினை இன்னமும் ஒரு ஆய்வாளர்களும் கூறவில்லை. ஏன் என்பது விளங்கவில்லை.

மனிதர்களாகிய எங்களுக்குக் கூட இப்படியான அக்குத்தான நிலை வரலாம். மனிதர்கள் கூட, மனிதக் கூர்ப்பின் முடிவு நிலையில் இல்லை. சில நூறாயிரம் ஆண்டு கழிய கூர்ப்பின் வழியில் நாங்கள் வேறு உருப் பெறலாம். ஒருவேளை நியாண்டத்தல்கள் போன்று ஒவ்வா வியாதிகளால் முற்றாகவே மறைந்தும் போகலாம். ஆட்கொல்லி வியாதிகளான புற்றுநோய் போன்ற பல புதுப்புது ஒவ்வாவியாதிகள் இன்று உலகில் இருப்பதை நாங்கள் அறிவோம். ஆனாலும் மனிதர்களின் மூளைவலு இந்த ஒவ்வா வியாதிகளுக்கு ஒருமுடிவு தரும் என நம்புவோம்.

இந்த நியாண்டத்தல்கள் இன்றிருந்தால் டார்வினின் கூர்ப்புக் கொள்கைக்குப் பொருத்தமான சான்றாக இருந்திருப்பார்கள். இக்காலத்தில் நியாண்டத்தல்கள் பற்றிய ஆச்சரியமான புதுப்புது விபரங்கள் அடிக்கடி வருகின்றது. ஜெர்மனியின் பிரபலமான 'மாக் பிளாங்' ஆய்வு நிறுவனம் நியாண்டத்தல்கள் பற்றிய ஆய்வுகளுக்காக ஒரு சிறப்புப் பிரிவினையே வைத்திருக்கிறார்கள். பலியோன்ரோலோயிஸ்
(paleontologist) களும் (கூர்ப்புப்பற்றி ஆராய்பவர்கள்) புதைபொருள் ஆய்வாளர்களும் அதிக ஆர்வமாகவும், அக்கறையுடனும் நியாண்டத்தல்கள் பற்றி ஆய்வுகள் செய்கிறார்கள்.

சரி, எப்படித்தான் இருப்பினும் இவற்றைத் தெரிந்து கொள்ளும் போது, எமது சகோதரரை (இனத்தை) இழந்து விட்டோமே என்ற தவிப்பு மனதில் எழுகின்றதா? அத்துடன் அவர்களது மறைவுக்கு நாமும் கூடக் காரணமோ என்ற கருத்தும் எழுகையில்,...... ஒருவித குற்ற உணர்வும் அடிமனதில் எழுகின்றதா?
இன்னொரு விடயமும் கூற வேண்டியுள்ளது. நியாண்டத்தல்களைப் போலவே டெனிசோவன் (Denisovan)  என்னொரு இன்னொரு இனமும் மனிதர்கள் தேன்றிய காலத்தில் மனிதர்களின் சாயலில் புவியில் இருந்திருக்கிறது என புதிய ஆய்வுகள் கூறுகின்றன. ஒருவேளை அவர்களையும் நாங்கள்தான்,....

என்னது? 'எல்லாம்;..........செயல்' என்கிறீர்களா! நீங்கள் சொன்னால் சரிதான்.


அடுத்தொரு ஆக்கத்துடன் மீண்டும் சந்திக்கிறேன்,


அன்புடன்,
கனி விமலநாதன் B.sc







 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்