அகம் காட்டும் ஏர்வாடியாரின் முகநூல் தெறிப்புகள்

பேராசிரியர் இரா.மோகன்

‘நதியில் விளையாடி, கொடியில் தலைசீவி, நடந்த இளந்தென்றலே!’ எனப் ‘பாலும் பழமும்’ திரைப்படத்திற்காக எழுதிய பாடல் ஒன்றில் தென்றலை நயமாக விளிப்பார் கவியரசர் கண்ணதாசன். அதுபோல, ஏர்வாடியார் தமது நெடிய எழுத்துப் பயணத்தில் முதலில் மரபுக் கவிதையில் அடியெடுத்து வைத்து, பிறகு புதுக்கவிதையில் காலூன்றி, தொடர்ந்து ‘கவிதை உறவு’ இதழில் மாதந்தோறும் எழுதி வரும் ‘ஏழாம் பக்கக் கவிதை’யில் நடைபயின்று, இப்போது முகநூல் தெறிப்புகளில் உலகை வலம் வந்துள்ளார்.

‘முகத்தில் முகம் பார்க்கலாம்…’ என்னும் அழகிய தலைப்பில் ஏர்வாடியாரின் முகநூல் தெறிப்புகள் அண்மையில் (மே, 2019) வெளி-வந்துள்ளன.* ‘இந்து தமிழ்’ நாளிதழின் முதுநிலை உதவி ஆசிரியர் கவிஞர் மு.முருகேஷ் வழங்கியுள்ள அணிந்துரை இத் தொகுப்பிற்கு அழகிய தோரண வாயிலாக அமைந்து வாசகரை ஏர்வாடியாரிடம் ஆற்றுப்படுத்துகின்றது. நண்பர் கவிஞர் பிருந்தா சாரதிக்கு இந்நூல் காணிக்கையாக்கப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. ‘எல்லாம் இன்ப மயம்’ என்பது போல், ஏர்வாடியாருக்கு ‘எல்லாம் கவிதை மயம்!’ என்பது இதனால் உறுதியாகின்றது. இனி, அகம் காட்டும் ஏர்வாடியாரின் முகநூல் தெறிப்புகளின் அமைப்பும் அழகும் குறித்து ஈண்டு சுருங்கக் காணலாம்.

ஏர்வாடியாருக்குக் கைவந்த கலை


நச்சென்ற மொழியில், நறுக்குத் தெறித்தாற் போலத் தமது கருத்தினைப் புலப்படுத்துவது என்பது ஏர்வாடியாருக்குக் கை வந்த கலை. பதச்சோறு ஒன்று:

“இந்த நாட்டில்
எல்லாம் நடக்கும்
நடந்த பிறகு
எதுவும் நடக்காது”
     (முகத்தில் முகம் பார்க்கலாம்…, ப.24)

‘எல்லாம் நடந்த பிறகு, எதுவும் நடக்காது’: இது தான் நம் நாட்டின் ‘தனிப்பண்பு!’; ‘தலையெழுத்து!’.

‘எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்’ எனக் கனவு கண்டார் கண்ணதாசன். ஆனால், இங்கே காணப்படும் நிதர்சனமான உண்மை என்ன தெரியுமா? ஏர்வாடியாரின் சொற்களில் இவ் வினாவுக்கான நறுக்கான விடை இதோ:

“இங்கே
எல்லாமும் கிடைக்கிறது
எல்லார்க்கும்
என்பதுதான் இல்லை.”    
(ப.68)

எந்தக் கருத்தையும் தமக்கே உரித்தான வித்தியாசமான கோணத்தில் வெளிப்படுத்துவதிலும் கைதேர்ந்தவர் ஏர்வாடியார்.

“மரத்தை வெட்டாதீர்கள்
பின்னால்
மழையைத் திட்டாதீர்கள்”
     (ப.85)

என்ற கவிதை இவ்வகையில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.

கவிஞர் மு.முருகேஷ் குறிப்பிடுவது போல், “இனி, மரங்களின் முதுகில் ஆணியடித்து விளம்பரப் பலகைகளை மாட்டாமல், மரங்களின் காலடியில் வைப்பதற்கு ஏற்ற வைர வரிகளை வார்த்துத் தந்துள்ளார் ஏர்வாடியார்” (‘அகங்காட்டும் கவிதை முகவரிகள்’, முகத்தில் முகம் பார்க்கலாம்…, ப.8).

‘இனி தமிழர்களைச் சேர்ப்போம்!’

‘தமிழன் என்றோர் இனமுண்டு; தனியே அவற்கொரு குணம் உண்டு’ (நாமக்கல் கவிஞர் பாடல்கள், ப.20) என மொழிந்த நாமக்கல் கவிஞர், தமிழனின் தனிக் குணம் எது என வெளிப்படையாகக் கூறாதது நோக்கத்தக்கது. ஒற்றுமை இன்றித் தனித்தனியே பிரிந்து இருப்பது தான் தமிழனின் தனிக்குணம் போலும்! பாவேந்தேர் பாரதிதாசன் ‘சஞ்சீவி பர்வதத்தின் சார’லில் இங்கிலாந்து நாட்டில் இருந்து ஒருவன் பேசுவதாக,

“நாவலந் தீவு நமைவிட்டுப் போகாது
வாழ்கின்றார் முப்பத்து முக்கோடி மக்கள் என்றால்
சூழ்கின்ற பேதமும் அந்தத் தொகை இருக்கும்;
ஆகையால் எல்லாரும் அங்கே தனித்தனிதான்
ஏகமன தாகிஅவர் நம்மை எதிர்ப்பதெங்கே?”

                                                         (பாரதிதாசன் கவிதைகள், ப.6)


எனக் குறிப்பிடுவது இங்கே நினைவுகூரத் தக்கது.

ஏர்வாடியாரும் தம் முகநூல் தெறிப்பு ஒன்றில்,

“தமிழுக்குச் சேர்த்தது போதும் இனி
தமிழர்களைச் சேர்ப்போம்”  
   (ப.70)

என உரைப்பது தமிழினம் பற்றிய கூர்மையான விமர்சனம்: ஒட்டுமொத்தத் தமிழினத்திற்கான சரியான வழிகாட்டுதல்.

‘தமிழுக்குச் சேர்த்தது போதும்’, ‘இனி, தமிழர்களைச் சேர்ப்போம்’ என்னும் ஏர்வாடியாரின் இவ்விரு தொடர் ஆட்சிகளும், தமிழ் இலக்கண மரபிலும் இலக்கியப் படைப்பாக்கத்திலும் வேற்றுமை உருபுகள் பெறும் இன்றியமையாத இடத்தினைப் புலப்படுத்தி நிற்பது நெற்றித் திலகம்.

எது கவிதை? யார் கவிஞன்?

எது கவிதை என்பது குறித்தும், யார் கவிஞர் என்பது பற்றியும் ஏர்வாடியாருக்குத் தனிப்பட்ட, திட்டவட்டமான, தெறிப்பான சில கொள்கைகள் உள்ளன. அவரது கருத்தியலில்,

“நன்றாகச் சொன்னால்
       அது கவிதை;
நல்லதைச் சொன்னால்
       அவன் கவிஞன்.”  
 (ப.26)

எதையும் நன்றாகச் சொல்வது கவிதையின் இலக்கணம்; எல்லோருக்கும் வேண்டிய நல்லதைச் சொல்வது கவிஞனின் இயல்பு. ‘என்றன் பாட்டுத் திறத்தாலே இவ் வையத்தைப் பாலித்திட வேண்டும்’ என்று தானே பாரதியாரும் ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளார்?

இன்னும் கூர்மையாகச் சொல்ல வேண்டும் என்றால், ஏர்வாடியாரின் மதிப்பீட்டில் ஒரு தலைவனை விட, ஒரு கவிஞனே நாட்டிற்கு மிகவும் இன்றியமையாதவன்; மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவன். தம் முகநூல் தெறிப்பு ஒன்றில்,

“தலைவன் வருகிறான்
சற்றுத் தள்ளிச் செல்லுங்கள்…
கவிஞன் வருகிறான்
கொஞ்சம் எழுந்து நில்லுங்கள்!”   
  (ப.84)

என ஏர்வாடியார் மக்களிடம் அறைகூவல் விடுப்பது கருத்தில் கொள்ளத் தக்கதாகும்.

பாரதியம்: புதிதாக, பளிச்சென்று புரியும் வண்ணம் பாடல்

“பாட்டுக்கொரு புலவன் பாரதி,அடா! – அவன்
பாட்டைப் பண்ணோடு ஒருவன் பாடினான், அடா!
கேட்டுக் கிறுகிறுத்துப் போனேன்,அடா – அந்தக்
கிறுக்கில் உளறுமொழி பொறுப்பாய்,அடா!”


                                                     (கவிமணி கவிதைகள், ப.31)

என்பது பாரதியின் பாட்டுத் திறம் பற்றிய கவிமணியின் உணர்ச்சிமிகு மனப் பதிவு. இதனை வழிமொழிவது போல் பாரதியின் கவி வண்ணம் குறித்து ஏர்வாடியார் அறுதியிட்டு உரைப்பது வருமாறு:

“புதிதாக இருக்கிறதா
பளிச்சென்று புரிகிறதா…
இது
பாரதி படைத்தது!”   
  (ப.23)

‘புதுமைப் பெண்’, ‘புதிய கோணங்கி’, ‘நவ கவிதை’, ‘புதிய ஆத்திசூடி’ என்றாற்போல் எதையும் புதிதாக, பளிச்சென்று எல்லோருக்கும் தெள்ளத் தெளிவாகப் புரியும் வண்ணம் படைப்பது என்பது பாரதியின் தனித்தன்மை; சிறப்பியல்பு. சுருங்கச் சொன்னால் இது தான் ‘பாரதியம்!’.

ஏர்வாடியின் பார்வையில் பாரதி என்ற கவி ஆளுமையின் உயிர்ப்பண்பு இது தான்:

“கவிதைக்கு நல்ல
வார்த்தைக்கு மேலாய்
வார்த்தைக்குக் கவிதை
வரம் தந்தான் பாரதி.”   
 (ப.47)

‘வேறு சுதந்திரம் வந்தது ஏன் பாரதி?’


“ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று”


என சுதந்திரம் பெறுவதற்குப் பல்லாண்டுகளுக்கு முன்பே தொலைநோக்குடன் பாடியவர் பாரதியார். ‘வீர சுதந்திரம்’ என்றும், ‘இன்ப சுதந்திரம்’ என்றும், ‘ஆனந்த சுதந்திரம்’ என்றும், ‘கண்ணிலும் இனிய சுதந்திரம்’ என்றும் நாம் பெற இருக்கும் சுதந்திரம் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்றும் கனவு கண்டவர் அவர். ஆனால், நடந்தது என்னவோ நேர்மாறாக; பெற்ற சுதந்திரம் வெறும் ‘அரசியல் சுதந்திர’மாக – பெயரளவில் ஆன ‘ஆகஸ்ட் சுதந்திர’மாக – அமைந்தது. புதுக்கவிதை ஒன்று விமர்சனம் செய்வது போல், ‘இரவில் வாங்கினோம், இன்னும் விடியவே இல்லை!’

“‘வீர சுதந்திரம்’
வேண்டி நின்றோம் – நமக்கு
வேறு சுதந்திரம்
வந்ததேன் பாரதி?”  
   (ப.25)

என ஏர்வாடியாரும் பாரதியிடம் வினவுவது போல் நாம் பெற்ற சுதந்திரத்தை – சுதந்திர இந்தியாவை – கூரிய விமர்சனத்திற்கு உள்ளாக்குகின்றார்.

மீண்டும் பிறக்க வேண்டுமா? நம்மில் கிடைக்க வேண்டுமா?

காந்தியடிகள், காமராசர், கக்கன், அப்துல் கலாம் போன்ற ஆகச் சிறந்த தலைவர்கள் மீண்டும் உலகில் பிறக்க வேண்டும், மக்களுக்கு வழிகாட்ட வேண்டும் என யாவரும் எதிர்பார்ப்பது இயல்பு; மாறாக, இத்தகைய மாபெரும் தலைவர்களின் வாழ்வையும் வாக்கையும் பொன்னே போல் போற்றி, அவற்றை எந்நாளும் பின்பற்றி, சமரசத்திற்குச் சற்றும் இடம்தராத கொள்கைப் பிடிப்புடன் வாழ்ந்து வரும் நாட்டு மக்கள் எண்ணிக்கையில் மிகுதியாக வேண்டும் என விரும்புவது வித்தியாசமான கண்ணோட்டம். இக் கண்ணோட்டம் மிளிர ஏர்வாடியார் படைத்துள்ள முகநூல் தெறிப்பு:

“காமராசர் மீண்டும் இங்கே
பிறக்க வேண்டுமா…? இல்லை
காணுகின்ற நம்மில் அவர்
கிடைக்க வேண்டுமா…?”  
    (ப.18)

சிந்தித்துப் பார்த்தால் காந்தியடிகள், காமராசர், கக்கன், கலாம் போன்ற உயர்ந்த தலைவர்கள் மீண்டும் இவ்வுலகில் பிறப்பது என்பது எவ்வகையிலும் சாத்தியம் இல்லை; ஆனால், அரிதின் முயன்று தேடிப் பார்த்தால் தாம் முன்மாதிரியாகக் கொண்ட தலைவர்களின் வாழ்வையும் வாக்கையும் கசடறக் கற்று, கற்றபின் அவற்றின் வழி நிற்கும் உயர்ந்த மனிதர்கள் நம்மில் கிடைக்க வாய்ப்பு உண்டு. இதற்கே முதன்மை தருகின்றார் ஏர்வாடியார்.

சாதியைக் காட்டி தேர்தலைச் சந்திக்கும் அவலம்


இன்றைய நாட்டு நடப்பினைக் கூர்ந்து நோக்கினால் ‘சாதி ஒழிய வேறு இல்லை’ என்று அடித்துச் சொல்லவே தோன்றும்; ‘எங்கெங்குக் காணினும் சாதியடா!’ என்று கொதித்துக் கூறவே நெஞ்சம் துடிக்கும்; பாரதியின் வாக்கினைக் காலப் போக்கிற்கு ஏற்ப மாற்றி, ‘சாதிகள் இருக்குதடி பாப்பா – குலத்தாழ்ச்சி, உயர்ச்சி சொல்லல் லாபம்’ என்று இடித்துரைக்கவே மனம் முந்தும். இந்தியத் தேர்தல் களம் சாதியம் ஆகிப் போன அவலத்தைச் சாடும் ஏர்வாடியாரின் கவிதைத் தெறிப்பு இது:

“சாதித்து
தேர்தலைச் சந்தித்தது போக
சாதி வைத்து
தேர்தலைச் சந்திக்கிறது இந்தியம்”  
 (ப.47)

‘சாதித் தலைவர்கள்’ என்ற கோணத்தில் சற்றும் பார்க்காமல், ‘சாதித்த தலைவர்கள்’ என்ற நோக்கில் அரசியல் தலைவர்களைப் போற்றிக் கொண்டாடியது ஒரு காலம்; இன்றோ தேர்தலைக் கூட நாடு சாதித்துக் காட்டி சந்தித்தது போக, சாதியைக் காட்டி சந்தித்து வருவது கொடுமையிலும் கொடுமை!
“கடிகாரம் மணியைக் காட்டுகிறது; காலண்டர் தேதியைக் காட்டுகிறது; தேர்தல் ஜாதியைக் காட்டுகிறது” (செப்பு மொழிகள், ப.56) என்னும் கவியரசர் கண்ணதாசனின் தெறிப்பான செப்புமொழி இங்கே ஒப்புநோக்கத் தக்கது.

கைகள் சிவந்தன அன்று x விரல்கள் வளர்ந்தன இன்று!


அன்று இல்லை என்று சொல்லி இரந்து வந்தவர்களுக்குக் கொடுத்துக் கொடுத்துக் கைகள் சிவந்தன; இடது கைக்குத் தெரியாமல் வலது கையால் கொடுக்கும் விழுமிய வழக்கமும் நிலவியது. இன்றோ காரியத்தை முடித்துக் கொடுப்பதற்காக அலுவலகத்திற்கு வந்தவரிடம் கையூட்டு வாங்கி வாங்கியே விரல்கள் வளர்ந்தனவாம்!

“அன்று
கொடுத்துக் கொடுத்து
கைகள் சிவந்தன…
இன்று
வாங்கி வாங்கியே
விரல்கள் வளர்ந்தன!”
    (ப.45)

என முரண் சுவையும் அங்கதக் குறிப்பும் துலங்கக் கூறுகிறார் ஏர்வாடியார். ‘கொடுத்துக் கொடுத்து’ என்ற அடுக்குத் தொடர் வறியவர்களுக்குக் கொடுப்பதில் அக்காலத்தவர்க்கு இருந்த உள்ளார்ந்த முனைப்பினை உணர்த்துகின்றது. ‘வாங்கி வாங்கியே’ என்ற தொடரில் இடம்பெற்றுள்ள தேற்ற ஏகாரம் கையூட்டு வாங்குவதில் இக்காலத்தவரிடம் காணப்படும் பெரு-விருப்பத்தினைக் காட்டி நிற்கின்றது.

இந்நூற்றாண்டு மனிதனைப் பற்றிய கூர்மையான விமர்சனம்


இருபத்தியோரம் நூற்றாண்டு மனிதன் அண்டங்களைப் பற்றிய விவரங்கள் அனைத்தையும் தனது விரல் நுனியில் வைத்துக் கொண்டிருக்-கிறான்; தகவல் தொடர்பியலில் அவன் அறியாததே இல்லை என்னும் அளவிற்கு வளர்ந்திருக்கிறான். ஆனால், அவன் தனது அண்டை வீட்டாரைக் குறித்து ஏதும் அறியாதவனாக இருக்கின்றான். அவனது இயல்பினை உள்ளது உள்ளபடி தம் முகநூல் தெறிப்பு ஒன்றில் திறம்பட வெளிப்படுத்தியுள்ளார் ஏர்வாடியார்.

“நல்ல விஷயங்களை / நாள்தோறும் பேசுகிறோம்
நம்மில் சிலர் / நன்றாகவும் எழுதுகிறோம்.
எங்கிருந்தோ / எத்தனையோ
எடுத்துக்காட்டுகளை / எடுத்துக் காட்டுகிறோம்.
ஆனால்…
நாலாவது வீட்டில் இருக்கிற / நல்ல மனிதர்
நாராயணசாமி / மட்டும்
நமக்குத் / தெரிவதே இல்லை”
    (ப.14)

அண்மையில் முகநூலில் படித்ததில் பிடித்தது:

“‘சார் உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறது. பேஸ் புக்ல இருக்கீங்களா?’

‘இல்லையே.’
‘அப்ப டிவிட்டர், வாட்ஸ் அப்ல?’
‘இல்லையே.’
‘எங்கே தான் இருக்கீங்க சார்?’
‘உங்க பக்கத்து வீட்ல தான் பத்து வருஷமாக இருக்கேன்!’”

இறந்த பின்னும் வாழ்வதற்கான, வாழ்வில் வெற்றி பெறுவதற்கான வழிகள்

உலகில் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் சரியான விடை யாது எனத் தெரிந்து கொள்ளப் பெரிதும் விரும்பும் இரு இன்றியமையாத வினாக்கள் இவை:

1. “இறந்த பின்னும் வாழ்வதற்கு
என்ன செய்யலாம்?”

2. “வெற்றிக்கான வழி என்று
எதனைக் கொள்ளலாம்?”

‘மில்லியன் டாலர்’ மதிப்பு வாய்ந்த இவ்விரு வினாக்களுக்கான விடைகளாக ஏர்வாடியார் கூறுவன முறையே வருமாறு:

1. “இருக்கும் போதே பிறருக்காக
வாழ்ந்து காட்டலாம்.”

2. “வாழும் நல்ல வாழ்க்கைதன்னை
வெற்றியாக்கலாம்.”    (ப.60)

“வாழ்க்கை மிகப் பெரிய கலை. அதில் தேர்தல் கடமை. வாழத் தெரிந்தவர்களாக விளங்குதலே சமுதாயத்திற்கு நாம் செய்யத் தக்க நல்ல தொண்டு; எப்படி எனின், நம்மைப் பார்த்துப் பிறர் கற்குமாறு, நாம் ஒரு நூலாகப் பயன்படுவோம்” (ஈ.ச.விசுவநாதன், மு.வ. நினைவு அலைகள், ப.35) என்னும் பேராசிரியர் மு.வரதராசனாரின் மணிமொழி இங்கே மனங்கொளத் தக்கது.

குறும்புடன் கூடிய நகைச்சுவை


கர்ணனுக்குக் கவச குண்டலம் போல, ஏர்வாடியாருடன் பிறந்த குணம் குறும்புடன் கூடிய மெல்லிய நகைச்சுவை. திருமணமான புதிதில் ‘நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும், நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்’ என்றெல்லாம் ஒருவரோடு ஒருவர் பேசி மகிழ்ந்த கணவனும் மனைவியும் காலப் போக்கில் அடியோடு மாறிப் போனார்களாம். எப்படி என்று தமக்கே உரிய நகைச்சுவை உணர்வோடு ஒரு முகநூல் தெறிப்பில் குறிப்பிடுகிறார் ஏர்வாடியார்:

“அன்று
நான் பேச நாளெல்லாம்
வாய்ப்பளித்தாள்
இன்று
நான் பேச நினைக்கையிலே
வாய் மறித்தாள்”  
 (ப.66)

‘பேச நாளெல்லாம் வாய்ப்பளித்தாள் ’x‘ பேச நினைக்கிகையிலே வாய் மறித்தாள்’: முரண் சுவை மிளிரும் அருமையான சொல் விளையாட்டு!

குறும்புடன் கூடிய ஏர்வாடியார் நகைச்சுவை உணர்வு நயமுற வெளிப்பட்டு நிற்கும் பிறிதொரு முகநூல் தெறிப்பு வருமாறு:

“முட்டாளுடன்
காலம் தள்ளுவது எப்படி என்று
உங்கள் மனைவியிடம்
கேட்டுப் பாருங்கள்”
    (ப.62)

ஒற்றை வரியில் மதிப்பிடுவது என்றால், ஏர்வாடியாரின் முகநூல் தெறிப்புகள், நமது நாட்டின் – இன்றைய சமூகத்தின் – இந்நூற்றாண்டு மனிதனின் அகத்தினைச் செவ்வனே காட்டி நிற்கின்றன எனலாம். ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பது பழமொழி; இனி, ‘அகத்தின் அழகு முகநூல் தெறிப்பில் தெரியும்’ என்பது ஏர்வாடியார் படைத்திருக்கும் புதுமொழி!.
 



 

‘தமிழாகரர்’ முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.

 

 



 




 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்