தேசிய இனப்பிரச்சினை பற்றிய இரண்டு ஈழத்து தமிழ்ச் சிறுகதைகள்

தேவமுகுந்தன்

 

தமிழ்ச் சிறுகதைகளைப் பொறுத்த வரையில் ஈழத்துக் கதைகள் தனித்துவமானவை. கையாளப்படும் கருப்பொருட்கள் மற்றும் பேச்சு மொழி, பண்பாடு சார்ந்த விடயங்கள்  என்பவற்றினால் பெரும்பாலான ஈழத்து தமிழ் சிறுகதைகள் இந்திய தமிழ்ச் சிறுகதைகளில் இருந்து வேறுபடுகின்றவெனலாம். ஈழத்து தமிழ் சிறுகதைகளை பேராசிரியர் நா. வானமாமலை (1983) 

  இலங்கையில் சிறுகதை நல்ல தரமான வளர்ச்சியை முற்போக்கான திசையில் அடைந்துள்ளது என்பது என் மதிப்பீடு. பெருஞ்சுழற்சிப் பத்திரிகைகளின் இலக்கியச் சோரம் அங்கில்hதது இதற்குக் காரணமாகலாம் என்று  குறிப்பிடுகிறார்.  ஆரம்ப காலத்தில் எழுதப்பட்ட பெரும்பாலான ஈழத்து தமிழ்ச் சிறுகதைகள் வர்க்கம், சாதி என்பவற்றை கருப்பொருளாக கொண்டமைந்திருந்தன. எனினும் தேசிய இனப்பிரச்சினை முனைப்புப் பெற்ற பின்னர் அவை இனப்பிரச்சினையை கருப்பொருளாகக் கொள்ளத் தொடங்கின. இதனாலேயே பேராசிரியர் கா. சிவத்தம்பி (1997) ஈழத்து இலக்கியத்தைப் பொறுத்தவரையில் 1983 ஆம் ஆண்டினை  பிரிகோடு எனக் குறிப்பிட்டார். அதாவது 1983 ஆம் ஆண்டுக்கு முன்னர் படைக்கப்பட்ட படைப்புக்களின் கருப்பொருளாக சாதி, வர்க்கம் என்பன காணப்பட 1983 ஆம் ஆண்டின் பின்னரான பெரும்பாலான ஆக்க இலக்கியங்களின் கருப்பொருளாக தேசிய இனப்பிரச்சினை கையாளப்பட்டதினை பேராசிரியர் இவ்வாறு குறிப்பிட்டாரெனலாம்.  

தேசிய இனப்பிரச்சினை

இலங்கையில் சிறுபான்மை இனங்களுக்கெதிரான துன்புறுத்தல்கள் 1915, 1920 காலப் பகுதியில் ஆரம்பமானது. பின்னர்  1947 ஆம் ஆண்டில் தமிழர் தாயகங்களில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் தமிழர்கள் தமது தனித்துவங்களை இழந்து சிங்கள மேலாதிக்கத்திற்கு கட்டுப்பட வேண்டிய நிலை தோன்றியது.  மேலும் 1948 ஆம் ஆண்டு மலையகத் தமிழ் மக்களின் பிரஜா உரிமை பறிக்கப்பட்டது. இதனால் பல மலையகத் தமிழர்கள் நாடற்றவர்கள் ஆக்கப்பட்டனர்.  இவற்றினைத் தொடர்ந்து 1956 ஆம் ஆண்டில் சிங்களம் மட்டும் சட்டம் அமுலாக்கப்பட்டது. இதனால் சிங்களம் தெரியாத தமிழ் அரச ஊழியர்கள் பலர் தமது தொழில்களை இழக்க நேரிட்டது. இச்சட்டத்தினைத் தொடர்ந்து தமிழ் மக்களுக்கு எதிராக ஏற்பட்ட இனவன்முறையில் நூற்றுக் கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். தமிழர்களால் 1961 ஆம் ஆண்டில்  அமைதியான முறையில் மேற்கொள்ளப்பட்ட சத்தியாகக்கிரகப் போராட்டம் இராணுவத்தின் துணையுடன் முறியடிக்கப்பட்டது. பின்னர் பல்கலைக்கழக அனுமதிக்கு தரப்படுத்தலமுறை அறிமுகம் செய்யப்பட்டமையால், உரிய கல்வித் தகைமையைக் கொண்டிருந்தும் பல்கலைக்கழகத்திற்குத் புகும் வாய்ப்பு மறுக்கப்பட்ட  பல தமிழ் இளைஞர்கள் விரக்தி நிலைக்குத் தள்ளப்பட்டனர். பௌத்த சிங்களத்துக்கு முன்னுரிமையளிக்கும் அரசியல் அமைப்பு 1972 ஆம் ஆண்டில்  உருவாக்கப்ட்டது. இதனால் தமிழர்கள் தம்மை இலங்கையின் இரண்டாந்தரப் குடிமக்களாக உணரும் நிலை ஏற்பட்டது. யாழ்ப்பாணத்தில் 1974 ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழ் ஆராய்ச்சி மாநாடு அரச படைகளால் குழப்பப்பட்டது. இக்குழப்பத்தில் பல தமிழர்கள் இறந்தனர்.

1976 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தின் வட்டுக்கோட்டையில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் கட்சி மாநாட்டில் தனித் தமிழீழம் அமைக்கப்பட வேண்டுமென்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1977 இல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் இக்கட்சி இலங்கையில் தமிழர் பெருன்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமோக வெற்றி பெற்றது. இவ்வெற்றியானது தமிழர் விடுதலைக் கூட்டணியின் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்குத் தமிழ் மக்களிடம் இருந்து கிடைத்த ஆணையாகக் கருதப்பட்டது.

1977 ஆம் ஆண்டு தமிழருக்கு எதிரான திட்டமிடப்பட்ட இனவன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையினால் தமிழர் பல நூற்றுக் கணக்கான தமிழர்கள் இறந்தனர். தமிழரின் பொருளாதாரம் திட்டமிட்டு அழிக்கப்பட்டது.  தென்னாசியாவின் மிகப் பெரிய நூலகமாகத் திகழ்ந்த யாழ்ப்பாண பொது நூலகம் 1981 ஆம் ஆண்டு அரச படைகளால் எரியூட்டப்பட்டதுடன் யாழ்ப்பாண நகரில் பல சொத்துக்களும் அழிக்கப்பட்டன.

இத்தகைய அடக்குமுறைகளுக்கெதிராக தமிழ் இளைஞர்களால்  பல இயக்கங்கங்கள் தோற்றுவிக்கப்பட்டு அரச இயந்தித்திற்கெதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.  1983 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் இராணுவத்துக்கெதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தால் மேற்கொள்ளப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.  இதனைத் தொடர்ந்து 1983 ஆம் ஆண்டில் தென்னிலங்கையில் மீண்டும் தமிழ் மக்களுக்கு எதிரான  பாரிய இனவன்முறை ஏற்பட்டது. இதில் பல ஆயிரக் கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதுடன் தமிழரின் பொருளாதாரம் சிதைக்கப்பட்டது. மேலும்  தென்பகுதியில் பல தசாப்தங்களாக வாழ்ந்து வந்த பல ஆயிரக் கணக்கான தமிழ்க் குடும்பங்கள் தமது உடைமைகளை இழந்து அகதியாக வடக்கு: கிழக்கு மாகாணங்களுக்கு திரும்பினர். இது பெருமளவு தமிழ் மக்கள் இலங்கையை விட்டு புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் தஞ்சம் புக காரணமாக அமைந்தது. இன்று வெளிநாடுகளில் பத்து இலட்சத்திற்கு மேற்பட்ட ஈழத்தமிழ் மக்கள் வாழ்வதாக கருதப்படுகின்றது.

அரச அடக்குமுறைகளை தாங்காமல் பல தமிழர் இலங்கையில் இருந்து தொடர்சியாக இந்தியாவுக்கு அகதிகளான சென்று கொண்டிருந்ததனால் இந்திய மத்திய அரசு பல நெருக்கடிகளை சந்தித்தது. இதனால் 1987 ஆம் ஆண்டு; இந்திய அரசு இலங்கை அரசுடன்  ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டன.  இலங்கை முழுதும் மாகாண சபை முறைமை உருவாக்கப்பட்டது.  இந்திய அமைதிகாப்பு படையினர் என்ற பெயரில் இந்தியப் படைகள் இலங்கை வந்தனர். பின்னர் இந்தியப் படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. 1990 இல் இந்திய அமைதிப்படை தமது நாட்டுக்குதிரும்பினர். பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கைப் படைகளுக்குமிடையிலான மோதல் ஆரம்பித்தது. இந்த மோதல் 2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கம் முற்றாக அழிக்கப்பட்டு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த மோதல்களால் பல்லாயிரக் கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதுடன் பலர் அங்கவீனமாக்கப்படனர். பல இளைஞர்கள் பல தசாப்தங்களாக சிறைகளில் வாடுகின்றனர்.  மேலும் இலங்கை இந்திய ஒப்பத்தனால் இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்கள் 2007 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியினரால் தொடரப்பட்ட வழக்கு ஒன்றின் மூலம் மீண்டும் பிரிக்கப்பட்டன. ஆயுதமுனையில் தமிழரின் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டாலும் அது தோற்றம் பெற்றதற்கான காரணங்கள் இன்னமும் காணப்படுகின்றன.

 

தேசிய இனப் பிரச்சினை தொடர்பான இலக்கியப்படைப்புகள்

 

“1975 இல் சுடர், அலை போன்ற சஞ்சிகைகளின் தோற்றத்தோடுதான் தேசிய இனப் பிரச்சினை இலக்கியத்தில் இடம்பெற வேண்டும் என்ற கருத்துக்கள், அழுத்தம் பெறத் தொடங்கின. 1983 இனக் கலவரத்தின் பின்னர், குறிப்பாக 1985 மத்தியின் பின்னர் மேலும் பரந்த அளவில், இது முக்கியத்துவம் பெற்றது என . யேசுராசா (2007) குறிப்பிடுகிறார்

தமிழரின் இனப்பிரச்சினை தொடர்பாக இலக்கியங்கள் 1983 ஆம் ஆண்டிற்குப் பின்னரே அதிகம் உருவாகின. எனினும் மு. தளையசிங்கத்தின் ஒரு தனி வீடு அருளரின்லங்கா ராணி போன்ற தேசிய இனப் பிரச்சினை தொடர்பான நாவல்கள் 1983 ஆம் ஆண்டுக்கு முன்னரே படைக்கப்பட்டன. இனப்பிரச்சினை பற்றிய சிறுகதைகளைப் பொறுத்த வரையில் .செ. முருகானந்தனின்காளிமுத்துவின் பிரஜா உரிமை சாந்தனின் கிருஷ்ணன் தூது போன்றன 1983 ஆம் ஆண்டுக்கு முன்னர் எழுதப்பட்டவையாகும்.

1983 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வெளியான பல இலக்கியப் படைப்புக்களில் தேசிய இனப்பிரச்சினை தாக்கத்தை செலுத்தியது. இது ஈழத்து தமிழ் இலக்கியத்தில்போர் இலக்கியம் என்ற பிரிவு தோன்ற வழிசமைத்தது.  மேலும் பாதகாப்பு அச்சுறுத்தலால் இலங்கையில் இருந்து வெளிப்படையாக எழுத முடியாத பல போர் அவலங்களை புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்வோரால் படைக்க முடிகின்றது. புலம்பெயர்ந்து வாழ்வோரின் படைப்புகள்புகலிட இலக்கியம் எனக் கொள்ளப்படுகின்றது. புகலிட இலக்கியத்தை ஈழத்து தமிழ் இலக்கியத்தின் நீட்சி எனக் குறிப்பிட முடியும்

 

இரண்டு சிறுகதைகள்

எழுத்தளர்கள் தமது பாதுகாப்புக் கருதி குறியீடுகளைப் பயன்படுத்தி சிறுகதைளைப் படைக்கும் உத்தி ஈழத்த்தில் காணப்படுகின்றது. அதாவது ஈழத்தில் வாழும்  பல எழுத்தாளர்கள் தமது உயிர் அச்சுறுத்தல்  கருதி இனப்பிரச்pனை தொடர்பான விடயங்களை  குறியீடாகக் கையாளுகின்றனர். உமா வரதராஜனின்அரசனின் வருகை என்ற சிறுகதையை இதற்கு சிறந்த உதாரணமாக குறிப்பிட முடியும்.  இந்தப் பின்புலத்தில் மிருகங்களை குறியீடாக வைத்து தேசிய இன்ப பிரச்சினையை பெரும்பான்மை இன நண்பர்களுக்கு விளக்கும் விதமாக எழுதப்பட்ட  இரண்டு சிறுகதைகளை ஒப்பிடுவதே இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும். மிருகங்ளைக் குறியீடாகக் கொண்டு ஈழத் தமிழரின் தேசிய இனப் பிரச்சினையை விளக்கும் பல கதைகள் இருந்தாலும் வசதி கருதி ஏறத்தாள ஒரே கதைப் பின்னலைக் கொண்டமைந்த 

().  செ. யோகநாதனின்  சரணபாலாவின் பூனைக்குட்டி

(). தி. ஞானசேகரனின் அல்சேஷனும் ஒரு பூனைக் குட்டியும்

ஆகிய கதைகள் இரண்டு சிறுகதைகள் மட்டுமே இக்கட்டுரையில் ஒப்பிடப்படுகின்றன.

 

().  செ. யோகநாதனின்  சரணபாலாவின் பூனைக்குட்டி

ஈழத்தின் பிரபல எழுத்தாளர் எனக் கருதப்படும் மறைந்த செ. யோகநாதனால் 1983 ஆம் ஆண்டு எழுதப்பட்ட சிறுகதை சரணபாலாவின் பூனைக்குட்டி. இது தமிழ் நாட்டு நர்மதா பதிப்பகத்தால் இவரின் 26 சிறுகதைகளை உள்ளடக்கி 1983 இல் வெளியிடப்பட்டதேடுதல் என்ற சிறுகதைத் தொகுதியில் 18 ஆவது கதையாக இடம் பெற்றுள்ளது.

தமிழரான பிரதான பாத்திரத்தின் நண்பன் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஜோதிபாலா. இவர்கள் இருவரும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நண்பர்களாக இருந்தவர்கள். பல்கலைக் கழகத்தில் கற்ற காலத்தில் சிறந்த கலைஞனாக விளங்கிய ஜோதிபாலா அங்கு ஒருமுறை தமிழரின் உரிமைப்போராட்டம் தொடர்பாக சிங்களப் பத்திரிகையொன்றில் திரிபுபடுத்தி   வெளியான செய்தியை உண்மையெனக் கருதி  பிரதான பாத்திரத்துடன் முரண்பட்டுக் கதைத்தவன.;

 பல ஆண்டுகளுக்குப் பின்பு பிரதான பாத்திரத்தினை தற்செயலாக சந்திக்கும் ஜோதிபாலா கதாபாத்திரத்தினை தனது வீட்டுக்கு ஒருநாள் வருமாறு அழைக்கிறான். அவனின் அழைப்பினை ஏற்று ஜோதிபாலாவின் வீட்டுக்கு தமிழரான பிரதான பாத்திரம் செல்கிறது. ஜோதிபாலா தனது மகன் சரணபாலாவையும் மனைவியையும் பிரதான பாத்திரத்திற்கு அறிமுகம் செய்கிறான். நண்பர்கள்  இருவரும் தமது பழைய நினைவுகளை அசைபோடுகின்றனர். தம்மோடு பல்கலைக்கழகத்தில் கற்ற சகாக்களைப் பற்றி உரையாடுகின்றனர்.  மதிய உணவுக்கு முன்னர் இருவரும் சேர்ந்து மது அருந்துகின்றனர். மதுவுடன் சேர்த்து இறைச்சித் துண்டுகளையும் உண்கின்றனர். இவர்களது உரையாடலில் இனப்பிரச்சினை பற்றிய விடயங்கள் வருகின்றன. ஜோதிபாலா தமிழரின் விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தன்மையை ஏற்றுக்கொள்ளாது அதனைப் பற்றிக் குறைவாகக் கதைக்கிறான்.  பிரதான பாத்திரம் பேராட்டத்தின் நியாயத் தன்மைகளை எடுத்து விளக்க முயல்கிறது. ஆனால் ஜோதிபாலா அதனை ஏற்றுக்கொள்ளாது பல கதைகளைக் கதைக்கிறான்.

 ஜோதிபாலாவின் மகனான சரணபாலா வளர்க்கும் பூனை கத்திக் கத்தி இவர்களது உரையாடலை குழப்புகின்றது. தொடர்சியான குழப்புதலால் ஆத்திரமடைந்த ஜோதிபாலா பூனையை காலால் உதைக்கிறான். இதனால் பூனை காயமடைகின்றது. தனது மகன் சரணபாலாவிடம் பூனைக் குட்டியை தூக்கிக் கொண்டு போய் அடைத்து வைக்குமாறு கூறுகிறான்.

இதற்கு சரணபாலா

பூனைக்குட்டிக்கு சரியான பசி, அதற்கு கொஞ்சம் சாப்பாட்டைக் வைத்திருந்தால்; அது போசாமலே கிடந்திருக்கும் அதை விட்டுவிட்டு இரக்கமில்லாமல் இப்படி தூக்கியடித்தால, அல்லது அடைத்து வைத்தால் சத்தம் போடாது நின்று விடுமா? … அது ஏன் கத்தகிறது என்று தெரிந்த பிறகும் தெரியாதது போல அதை இப்படிக் காயப்படுத்தி …. பாவம்….”  என்று தனது தந்தையைப் பார்த்துக் கூறுகிறான்.

சரணபாலாவின் இந்தக் கூற்றைத்தான் தானும் ஜோதிபாலாவுக்கு கூற வேண்டுமென பிரதான பாத்திரம் எண்ணுகிறது.

(2). தி. ஞானசேகரனின் அல்சேஷனும் ஒரு பூனைக் குட்டியும்

ஈழத்தின் மற்றொரு பிரபல எழுத்தாளராகவும்ஞானம”; சஞ்சிகையின் ஆசிரியராகவும் இனங்காணப்படும் தி. ஞானசேகரன் அவர்களால் எழுதப்பட்டு 1996 ஆம் ஆண்டு வீரகேசரியில் வெளியான சிறுகதை அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும்’ . இக்கதை இதே பெயரில் மல்லிகைப் பந்தல் வெளியீடாக 1998 இல் வெளியான சிறுகதைத் தொகுதியில் முதலாவது கதையாக இடம்பெற்றுள்ளது. இத்தொகுதி சப்பிரகமுவ பல்கலைக் கழகத்தில் கடந்த இரு தசாப்த்தங்களுக்கு மேலாக  இளமாணிப் பட்டக் கற்கைநெறியில் பாடநூலாக கொள்ளப்படுகின்றது.

மலையகத்தில் வைத்தியசாலையொன்றில் மருத்தவராகப் பணியாற்றும் யாழ்ப்பாணத்தவனாகிய சந்திரனை அவனுடன்  மருத்துவக் கல்லூரியில் பயின்று தற்போது லண்டனில் நிரந்தரமாக வசிக்கும்  சிங்கள நண்பன் சில்வா நீண்ட காலத்திற்குப் பின்னர் தனது குடும்பத்துடன் வந்து சந்திக்கிறான். சந்திரன் சில்வாவையும் அவனது குடும்பத்தினரையும் தனது வீட்டுக்கு மதிய உணவுக்காக அழைத்துச் செல்கிறான். சில்வாவின் மகள் கொண்டு வந்த ஓர் அல்சேஷன் நாயும் சந்திரனின் வீட்டுக்கு வருகின்றது.

சந்திரனும் சில்வாவும் சேர்ந்து மதுவருந்த அவர்களின் மனைவியர் சேர்ந்து சமையலில் ஈடுபடுகின்றனர். சந்திரனதும் சில்வாவினதும் உரையாடலில் தமது பழைய மருத்துவக் கல்லூரி நினைவுகளை மீட்கின்றனர். சில்வா தான் காதலிக்க விரும்பி, தனது காதலை நிராகரித்த தமிழ் மாணவி கவிதாவைப் ; பற்றி சந்திரனிடம் விசாரிக்கிறான். தானும்; ஒரு தமிழனாக இருந்திருந்தால் கவிதா தன்னைக் காதலித்திருப்பாள் எனச் சில்வா கவலையாகக் கூறுகிறான்.  இதிலிருந்து இவர்களது உரையாடல் இனப்பிரச்சினை பற்றியதாக மாறுகின்றது. சில்வா முன்பு தான் யாழ்ப்பாணம் சென்று சந்திரனின் வீட்டில் தங்கி அங்கு  பெற்ற உபசாரங்களை நினைவுபடுத்துகிறான.  தமிழருக்கும் சிங்களவர்களுக்குமான பழைய உறவு யுத்தத்தினால் சிதைவடைந்ததாக சில்வா கவலை கொள்கிறான். இனித்தான் பழையபடி யாழ்ப்பாணம் செல்ல முடியாதா? என சந்திரனிடம் வினவுகிறான். தனது பெற்றொர் நவாலி தேவாலய விமானக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட விடயத்தை சந்திரன் சில்வாவுக்கு கூறுகிறான்.  அப்போது சில்வாவின் மனைவி இந்த யுத்தத்திற்கு காரணம் தமிழ் இளைஞர்கள் தான்  என்று சொல்கிறாள்.    

சில்வாவின் மகள், சந்திரன் வீட்டில் இருந்த பூனைக் குட்டியை தூக்கி அணைக்கிறாள். இதனால் எரிச்சலடையும்  அல்சேஷன் எரிச்சலடைந்து குரைக்கின்றது.  பின்னர் அல்சேஷன் பூனையை துரத்துகின்றது. பூனை குசினிக்குள் ஓடி தஞ்சமடைகின்றது. பின்னர் இடைக்கிடையே பூனை வெளியே வந்து சில்வா கொடுக்கும் உணவுகளை உண்கிறது. அத்தருணங்களில் பூனையை அல்சேஷன் துரத்துகின்றது. அப்போதெல்லாம் பூனை குசினிக்குள் ஓடி தஞ்சமடைகின்றது. இறுதியில் பூனை குசினிக்குள் ஒரு மூலையில் மாட்டுப்பட அதனைக் கடித்துக் குதற அல்சேஷன் முயல்கின்றது. இதனால் தன்னைக் காப்பற்ற பூனை அல்சேஷனுடன் சண்டையிடுகின்றது. தனது பூனை தனது முன்னங் கால்களால் அல்சேஷனின் முகத்தில் கீறுகின்றது. இதனால் முகத்தில் காயப்பட்ட அல்சேஷன் பின்வாங்கி வந்து சில்வாவின் கால் அருகே போய்ப்படுக்கின்றது.

இந்தக் காட்சி சில்வாவின் மனைவியின் கூற்றுக்கு விடை போல அமைகின்றது.

  

ஒப்பீடு

;  சரணபாலாவின் பூனைக்குட்டி என்ற சிறுகதை பிரசுரமாகி 13 ஆண்டகளின் பின்னர் பிரசுரமான சிறுகதை அல்சேஷனும் ஒரு பூனைக் குட்டியும்’.  இந்த இரண்டு சிறுகதைகளிலும்

(1). பல்கலைக் கழகத்தில் ஒன்றாகக் கற்ற தமிழ் - சிங்கள நண்பர்கள் நீண்ட காலத்தின் பின்னர் சந்திக்கிறார்கள்;

(2). இரண்டு நண்பர்களும் மதிய உணவு உண்ண முதல் மது அருந்துகிறார்கள்

(3). அவர்களது உரையாடலில் இனப்பிரச்சினை சம்பந்தப்படுகின்றது.

(4). தமிழ் மக்களுக்கு குறியீடாக பூனை வருகின்றது;

போன்ற பல விடயங்கள் ஒத்த தன்மையாகக் காணப்படுகின்றன. 

எனினும் இவ்விரு கதைகளிலும் சரணபாலாவின் பூனைக்குட்டியில் தமிழருக்கு குறியீடாக பூனை இடம் பெற அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியில்  ;தமிழருக்கு குறியீடாக  பூனையும் பேரினவாதத்திற்கு குறியீடாக அல்சேஷன் நாயும் இடம் பெறுகின்றன. மேலும் சரணபாலாவின் பூனைக்குட்டி கதையில்வரும் சிங்களப் பாத்திரமான ஜோதிபாலா தமிழரின் பிரச்சினையை துவேச மனப்பாங்கோடு கோபமாக பார்க்கிறான். அதேவேளை அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியிலும் வரும் சிங்களப் பாத்திரமான சில்வா இனமுரண்பாடுகள்  பற்றி கவலை கொள்கிறான்.

சரணபாலாவின் பூனைக் குட்டியில், ஜோதிபாலாவின் மகனான சரணபாலா பூனைக்குட்டிக்கு சரியான பசி. அதற்கு சாப்பாடு கொடுத்தால் கத்தாது, ஏன் கத்துகின்றது என்று தெரிந்த பிறகும் அதைக் காயப்படுத்தக் கூடாது, அதனை அடைத்து வைக்கக் கூடாது என்கிறான். இது தமிழருக்கு என்ன தேவை என்பதை அறிந்து அதை அவர்களுக்கு கொடுத்தால் அவர்கள் போராட மாட்டார்கள. அவர்களை தாக்குவதோ சிறைகளில் அடைப்பதோ அவர்களின் பிரச்சினைக்கு தீர்வாகாது என்பதை குறியீடாகக் காட்டுகின்றது.

அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியில் ஓடுவதற்கு இடமற்று குசினியில் மாட்டுப்பட்ட பூனை தன்னைத் தாக்க முயலும்  அல்சேஷனை காலால் விறாண்டி காயப்படுத்தி துரத்துகின்றது. இது தமிழருக்கு வேறு வழியில்லாததால் தமது இருப்பைப் பாதுகாக்க பேராட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதை குறியீடாகக் சொல்கின்றது. இது சத்தியாக்கிரகம் போன்ற  அகிம்சைப் போராட்டங்களில்; ஆரம்பத்தில் ஈடுபட்ட தமிழர்கள் தம்மீது தொடர்சியான வன்முறைகள் பிரயோகிக்கப்பட்டதனால் வேறு வழியற்று  தங்களைக் காப்பாற்ற தமது போராட்டத்தை ஆயுதப் போராட்டமாக மாற்றியமைத்ததையும் குறிப்பிடுகின்றதெனலாம். 

 

நிறைவுரை

ஈழத்தின் பிரபல எழுத்தாளர்கள் என்று கருதப்படும் செ.யோகநாதன், தி. ஞானசேகரன் ஆகியோரால் எழுதப்பட்ட சிறுகதைகளான சரணபாலாவின் பூனைக் குட்டி , அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும் ஆகிய சிறுகதைகளில் பல ஒத்த தன்மைகள் காணப்பட்டாலும் சில தனித்துவங்களையும் அவதானிக்க முடிகின்றது. இந்த இரண்டு சிறுகதைகளும் தேசிய இனப்பிரச்சினையை குறியீடாக விளக்க முனையும் கதைகள் என்ற ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்தன. செ. யோகநாதனின் சிறுகதையில் இனப்பிர்சினைக்கான காரணங்கள் விளக்கப்பட தி. ஞானசேகரனின் சிறுகதையில் தமிழ் இளைஞரகள்; ஆயுதமேந்தியதற்கான காரணங்கள் விளக்கப்படுகின்றது.

  முதலாவது கதையின் பாதிப்பால் இரண்டாவது கதை எழுதப்பட்டதா அல்லது இரண்டு எழுத்தாளர்களும் ஒரே மாதிரித் சிந்தித்து எழுதினார்களோ என்பதை உறுதியாக சொல்ல முடியாதுள்ளது.

 

 உசாத்துணைகள்

சிவத்தம்பி, கா. ( 1997, ஏப்ரல்). “கலைப்படைப்புக்களில் ஆக்கவியல்”. இலங்கைச் தமிழ் சிறுகதை இலக்கியம். தமிழ்க் கதைஞர் வட்டம் (தகவம்) திருமறைக் iலாமன்றம் கொழும்பு இணைந்து நடத்திய இலக்கியக் கருத்தரங்கு, கொழும்பு-13

ஞானசேகரன், தி. (1998). “அல்சேஷனும் ஒரு பூனைக் குட்டியும் அல்சேஷனும் ஒரு பூனைக் குட்டியும், மல்லிகைப் பந்தல், கொழும்பு-13

யேசுராசா, . (2007) “ ஈழத்து தமிழ்ச் சிறுகதைகளும் தேசிய இனப் பிரச்சினையும் குறிப்பேட்டிலிருந்து, அலை வெளியீடு, யாழ்ப்பாணம்

யோகநாதன், செ. (1983) “சரணபாலாவின் பூனைக் குட்டி தேடுதல், நர்மதா பதிப்பகம், சென்னை 600017

வானமலை, நா. (1983) “முன்னுரை தேடுதல், நர்மதா பதிப்பகம், சென்னை 600017                          

                      


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்