.வெண்ணிலா கவிதைகளில் பெண்களின் வாழ்வியல்

 
சே.பானுரேகா எம்.., எம்.பில்., பி.எட்

 

 

பெண்ணுக்குள் திணிக்கப்பட்ட ஆண் மீதான, தந்தை மீதான பயம், சடங்குகளில் கட்டுறுவது, மூட பழக்க வழக்கங்களில் முடங்குவது, காம உணர்வுகளை அடக்கிக் கொள்வது, தனிமை புலம்பல்களை அங்கீகரிப்பது, அகத்தைக் கலைத்துப் போடுவது எல்லாம் பெண் மொழியில் அடையாளப்படுத்தப் படுகின்றன. கலையும் இலக்கியமும் எதிர்க்கலாச்சாரத்தைப் பதிவு செய்கின்றன. கடந்த நாற்பது ஆண்டுகளில் கவிதைப் பற்றிய ஆய்வுகள் பல்கிப் பெருகி வருகின்றன. இக்கட்டுரை கவிஞர் .வெண்ணிலாவின் பெண்ணியச் சிந்தனைகளை எடுத்துக்காட்டுகிறது.

 

தமிழிலக்கியமும் பெண்களும்

 

தமிழ் இலக்கியத்தில் பெண்படைப்பாளிகளின் வரவு மிகத் தொன்மையானது. பக்தி இலக்கியக் காலகட்டத்திற்குப்பின் இம்மரபு தொய்வடைந்து ஔவை மூதாட்டியின் காலகட்டத்தில் மீண்டும் தொடர்ச்சி பெறுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் கிருபை சத்தியநாதன், கஜாம்பிகை, விசாலாட்சி அம்மாள், கு..சேது அம்மாள், வை.மு. கோதைநாயகி அம்மாள், மூவலூர் ராமாமிர்தத்தம்மையார் எனப் பெண் படைப்பாளிகளின் மரபு தொடர்கிறது. ஆண் படைப்பாளிகளின் படைப்புலகம் இனம் காட்டாத பெண் வாழ்வின் மீதான அக்கறையை, புரிதலை இவர்களுடைய படைப்புலகம் முன் வைக்கவில்லை. இவர்கள் அனைவரும் பெண் படைப்பாளிகள் தான், பெண்ணியப் படைப்பாளிகளல்ல. இன்றைய கவிதை மரபில் இயங்கும் அனைத்துப் பெண் கவிஞர்களும் பெண்ணியப் படைப்பாளிகளாகவே அடையாளம் காண முடிகிறது. வெண்ணிலாவும் பெண்ணியப் படைப்பாளியாகவே திகழ்கின்றார்.

 

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் தமிழ்ப் பெண் படைப்பாளிகள் ஆண் படைப்பாளிகளை நகல் செய்பவர்களாகவே இருந்துள்ளனர். இவர்கள் கையாளும் கதைமொழி ஆண்வாசகர்களுக்குக் கதைச்சொல்லும் பாங்கில் ஆண்களால் உருவாக்கப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஹெப்சிபா ஜேசுதாசனிடம் பெண் கதைமொழியை எதிர் கொள்ளமுடிகிறது. எழுபதுகளில் அம்பையின் படைப்புக்களில் பெண்ணியக் குரலைத் தெளிவாகக் கேட்க முடிகிறது. இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் பின் நவீனத்துவக் காலச்சூழலில் தலித் இலக்கியத்தின் உடனிகழ்வாகப் பெண்ணிய இலக்கியமும் கவனம் பெற்றுள்ளது (கா. பரிமளா, இந்துப் பெண்ணியம், .35.)

 

தமிழில் மிகப் பெரும்பான்மையான பெண்ணியப் படைப்பாளிகள் கவிஞர்களாகவே உள்ளனர். மாலதி மைத்ரி, தேன்மொழி, சல்மா, உமாமகேஸ்வரி, சுகிர்த ராணி, இளம்பிறை, திலகபாமா, குட்டிரேவதி எனப் பெண்ணியக் கவிஞர்களின் வரிசை தொடர்கிறது. ஈழப்பெண் கவிஞர்களிடையே ஒரு பொது அடையாளத்தை இனம்காண முடிகிறது. அதிகார எதிர்ப்புணர்வு எல்லாக் கவிஞர்களிடமும் உள்ளது. தமிழகச் சூழலில் வேறுபட்டத் தளங்களில் பெண்ணியக் கவிஞர்களை எதிர்கொள்ள முடிகிறது. சிவகாமி, பாமா போன்றவர்களின் புனைகதைகள் தலித் பெண்ணியத்தை முன்னெடுத்துச் செல்வனவாக அமைகின்றன.

பெண் கல்வி

 

பெண் கல்வியைச் சமுதாய் ஏற்றுக் கொண்டு அவர்களுக்கான பணி வாய்ப்பையும் உறுதி செய்துள்ளது. ஏனெனில், சமூகமாற்றத்துக்கான முக்கியமான கருவியாகக் கல்வி பயன்படும் என அறிஞர்கள் நம்புகிறார்கள்.  சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை நீக்கக் கல்வியில் சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன. எடுத்துக்காட்டுக்கு, சாதி மற்றும் பாலின வேறுபாடுகளின் அடிப்படைக் கட்டுமானம் உடல் உழைப்பைச் சார்ந்து இருக்கிறது. இந்தக் கட்டுமானங்கள் கல்வி மூலம் ஓரளவு தகர்க்கப்பட்டிருந்தாலும், இந்த மாற்றங்கள் பரவலாக ஏற்படவில்லை. சாதி வேறுபாட்டைக் காட்டிலும் பாலின வேறுபாட்டில் சில முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

அங்க நின்னு பேசின

இங்க நின்னு பேசினன்னு

பேச்சு வந்தது

படிச்சது போதுமுன்னு

சோறாக்க வேண்டியதுதான்.

அங்க பார்த்தேன்

இங்க பார்த்தேன்

இப்படி தொட்டேன்னு

யார்கிட்டயாவது சொன்ன

பள்ளிக்கூடம் வர முடியாது

                                           (துரோகத்தின் நிழல், .10.)

என்று படிக்கப் போகும் பெண்ணுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்துள்ள போக்கை எடுத்துக்காட்டுகிறார். அதிகாரம் அறிவினால் கட்டப்படுகிறது. இதனால் இயற்கையாகவே ஆண்-பெண் உறவு முறையில் ஏற்படும் அதிகாரப் போட்டியில் தனது மேலாட்சியைக் கட்டமுயன்ற ஆண் சமூகம் முதலில் பெண்ணுக்கான அறிவு வளர்ச்சியைக் கட்டுப்படுத்தியது. இதற்காகப் பல தந்திரங்களைக் கையாண்டுள்ளது. என்றாலும் பெண்ணே தன்னுடைய சுதந்திரத்தால் தன் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கிக் கொள்கிறாள் என்பதை,

 

இதெல்லாம் படிக்க வரலன்னு

யார் அழுதா

பஸ்ல ஏறிக்கிட்டு நின்ன இடத்துல

நிக்குது பாரு

எல்லா ஜோடி ஜோடியா

இந்த வயசுல

                                     
(துரோகத்தின் நிழல், .10)

என்று படிக்க வேண்டிய வயதில் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் காதலித்துத் தங்கள் வாழ்க்கையைப் பாழாக்கிக் கொள்வதையும் ஒருங்கே எடுத்துக் காட்டுகிறார்.பால்ய விவாகம் கற்புக் கோட்பாடு தாய்மையைக் கொண்டாடுவது குழந்தைபேறு என்று பெண்களுக்குக் கற்பிக்கப்பட்ட வாழ்க்கை முறையைத் திணித்தது. இது பெண்களின் அறிவு வளர்ச்சிக்குத் தடையாக அமைந்தது. அவர்களுக்குச் சுமையாக மாறியது.

வாயிற்படிகள்

வழிகாட்டுகின்றன

வீதிக்குச் செல்ல

ஆனால் வரலாறு

பாதைகளைப் பற்றியதல்ல

                             (இசைக்குறிப்புகள் நிறையும் மைதானம்,.57)

சமுதாயம்வகுத்துள்ளசிலவரையறைகளைமீறவிரும்பாதமனப்பாங்குஇந்தக் கவிதை களில் தெரிகிறது; மேற்படிப்புமகளின்அறிவை, திறமையை வளர்த்து வாழ்க்கையை மேம்படுத்தும்என்றஎண்ணத்தை விதைக்கிறார்.

இன்று, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு அதிகரித்திருப்பதன் காரணமாகப் பல பெண்களின் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. சுயசார்புத் தன்மையுடனும், பயமில்லாமலும்பெண்கள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனாலும் கல்விபெற்ற பெண்களுக்குச் சமூக அங்கீகாரம் கிடைப்பதில் பிரச்சினை உள்ளது. பெண்களின் கல்விக்கான தேடல்கள் அதிகரிக்கும் அதே வேளையில் அவர்களுக்கு உளவியல் ரீதியிலான பிரச்சினைகளும் வலுவாக அதிகரிக்கத் தொடங்கி விடுகின்றன. இதற்கான காரணம் என்னவென்றால், பெண்கள் கல்வி மூலம் ஒரு புதிய உலகைத் தரிசிக்கும் போதிலும், அதற்குத் தகுந்தாற்போல் ஆண்கள் சமூக ரீதியாகத் தங்களைத் தயார்செய்து கொள்ளாததுதான்காரணமாக அமைந்துள்ளது.

பால் வேறுபாடுகள்

ஓர் உயிரின் மீது  அல்லது  உடலின் மீது தன்  அதிகாரத்தைச்  செலுத்துவதன்  மூலம்  தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதன் மூலம் மேலும்  அதிகாரத்தில்   இருப்பவர்களால்  ஓர் உயிரின்  மீது  முடிவுகள்  எடுப்பதும்   ஆகியவை  தான்  உடல்  அரசியலை  தீர்மானிக்கின்றன. இங்குப்  பிரச்சனை  பால்  வேறுபாடுகளைக்  கடந்து  இருக்கின்றன.

ரகசிய சிநேகிதன் ஒருவனுடன்

வாழ்வதன் ருசி தெரியுமா உங்களுக்கு

குளிர் பிளக்க இயலாமல்

தோற்று விழும்

மார்கழியின் இளம் வெயில் போல்

என்முன் பணிந்தேகுவான்

                                        (இரவு வரைந்த ஓவியம்,.38)

எனவே பெண் சுதந்திரமாகப் போக்கில் உலவ முற்படுவதினை மேற்கண்ட கவிதை எடுத்துக் காட்டுகிறது. ஆண்  என்பவன்  கூடப்  பெண்ணின்  மீதான  ஒடுக்குதலுக்கு  எதிராக  எழுதக்கூடும். பெண்  என்பவள்  அதற்கு   ஆதரவாகக்  கூட  எழுதக்கூடும். பெண்கள்  மீதான  ஒடுக்குமுறை  என்பது வெறும்  பால்  அடையாளம்  சார்ந்து   குறுக்கி  விடக் கூடாது.

 

கற்பு

நீண்ட  தமிழ்  இலக்கிய  மரபில்  பால்  வேறுபாடுகளைக்  கடந்த  இலக்கியமே  பேசப்பட்டு  வருகின்றன. அதைச்     சங்க இலக்கியம் தொட்டு  நாம்  பார்க்கலாம்.  சங்க  காலச்  சமுதாயத்தினர்  பாலியலை  மிக  இயற்கையானதாகக்  கருதினர். அதனை  குற்றமானது, சிற்றின்பம், தீமையானது   என்று   இழிவாகக்  கருதி  ஒதுக்கும்  போக்கு  அறவே  இல்லை. அதுபோலப்    பாலுறவை  மையப்படுத்திக்   காமத்தை  உடலிலிருந்து  பிரித்துக்  காமக்கலையாக  மாற்றும்  முயற்சியும்  இல்லை. ஆண்  பெண்ணுக்கு இடையிலான  உடலுறவை   இயல்பானதாகக்  கருதும்  போக்கு  சங்க  இலக்கியப்  பிரதிகளில்  காணப்படுகிறது.

கற்பெனும் ஒற்றைப் பண்பாடு

கழுத்திறுக்கிய கணத்தின் வெம்மை

திருகியெரிந்த ஒற்றை முலையில்

பெருகிய  வாழ்வுப் பெருந்தீயில்

சாம்பலாகிய கோவலனின் அன்பு(இரவு வரைந்த ஓவியம்,.30.)

என்று பாலியல் சுதந்திரத்தில் கற்பு என்பது இன்று கேள்விக்குறியாகி விட்டது. அதனை இன்றைய பெண் கவிஞர்கள் எடுத்துக்காட்டுகின்றனர்.

திருமணமும் பெண்ணும்

 

ஒரு குடும்பத்திலிருந்து மற்றொரு குடும்பத்திற்குப் பெண்ணை மாற்றுகின்ற திருமணம், அவளுக்கு முதன்மையும் முழுமையுமானதாகக் கருதப்படுவதோடு சமுதாயத்தில் அவள் தொடர்ந்து மதிப்புடன் வாழ்வதற்கும் தேவைப்படுகிறது. திருமணம் ஆண், பெண் இருவருக்குமே உரியவொன்றுதான். இருவருடைய வாழ்க்கையிலும் திருமணம் ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை. ஆயினும் பெண்ணின் வாழ்க்கையில் திருமணம் அவள் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யும் நிகழ்ச்சியாகவும், அவள் வாழ்க்கையை முழுமையாக்கும் ஒரு நிறுவனமாகவும் சமூகத்தால் மதிக்கப்படுகிறது.

தேநீரின்

திடம், மணம், ருசியைவிட

அருந்தும் மனநிலையே

குடிப்பதின் திருப்தியாகிறது.

தேநீர் அருந்தியபடி

நிச்சயிக்கப்படும் உறவில்

மழை நாளொன்றின் ஈரம்

உட்பொதிந்திருக்கக் கூடும்.” (இசைக்குறிப்புகள் நிறையும் மைதானம்,.42)

என்று ஒருத்தித் திருமணம் நடைபெறும் பெண் பார்க்கும் படலத்தை எடுத்துகாட்டுகிறார். அந்தக் கவிதையின் இறுதியில்,

 

தொடர்ந்து கொண்டிருக்கின்றன

இன்னும்

திடமான தேநீர் ஒன்றின்

சுவையைப்போல்

நம் முத்தங்கள் (இசைக்குறிப்புகள் நிறையும் மைதானம்,.43)

என்னும் கவிதை அடிகள்  பெண் ஒருத்தியின் மனத்தில் இருக்கும் காதலைக் காட்டுகிறது. பெண்ணின் வாழ்க்கையில் ஒரு பகுதியாக இருக்க வேண்டிய திருமணம் நடைபெறவில்லையெனில் வாழ்க்கையேயில்லை என்று கருதுமளவிற்கு மக்களின் அடிமனத்தில் திருமணம் பற்றிய ஆழமாகச் சமூகம் பதித்துள்ளது.

தொகுப்புரை:

பெண் கவிஞர்கள் தங்கள் அனுபவங்களை எழுதுவதன் மூலம் தங்களது இருப்பை, வெளியைத் தீர்மானிக்கிறார்கள். மரபுக்கும் புதுமைக்கும் இடையிலான ஓர் இடைவெளியைக் கோடிட்டுக் காட்டுவது பெண்மொழியாகும். இதனால் ஆணுக்கு எதிரான புதுவரலாறு, மாற்று வரலாறு கட்டமைக்கப்படுகிறது. பெண்மொழி கவிதையின் பாடுபொருளில் மட்டும் மாற்றத்தைத் தரவில்லை. மாறாக, திறனாய்வையும் உள்ளடக்கியே பெண்மொழி வெளிப்படுகிறது என்பதை வெண்ணிலாவின் கவிதைகளின் வாயிலாக பெண்களின் வாழ்வியல் மரபுகளை அறிய முடிகிறது.

பெண்களுக்குக் கல்வி ஒரு சமூக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி அவர்கள் வாழ்வில் பெரிய மாற்றத்தை உண்டாக்கும் அதே வேலையில் அவள் மூடநம்பிக்கையிலிருந்தும் வெளியேற வேண்டும் என்கிறார்.பொதுவாகப் பெண்மொழி, ஆண் கவர்ச்சிக்குரிய பெண் உறுப்புகளை அழகியல் சார்ந்ததாகப் பார்ப்பதைத் தவிர்ப்பதையும், காதல், காமம் சார்ந்த எதிர்சிந்தனையைமையப்படுத்துகிறது; அரசியலாக்குவதையும் காண முடிகிறது. கணவன், மனைவி இடையே நிலவும் ஆதிக்கத்தைத் தகர்க்கிறது. அதிகாரம் பெண் உடலை மையம்கொண்டது என்ற ஆணின் புரிதலைத் தவிர்த்துப் பெண் தன்னுடல் மீதான வேட்கையைத் தானே அதிகாரத்தின் மையமாக்கும் தொனியை வெளிப்படுத்தும் வாழ்வியல் மரபினை .வெண்ணிலா கவிதைகளின் வழி அறிய முடிகிறது.

முதன்மை நூல்கள்:

 

1. வெண்ணிலா, .,-ஆதியில் சொற்கள் இருந்தன,அன்புநிலா பதிப்பகம், வந்தவாசி, மூன்றாம் பதிப்பு, 2008.

2. வெண்ணிலா, .,-இசைக்குறிப்புகள் நிறையும் மைதானம்,அன்புநிலா பதிப்பகம், வந்தவாசி, முதற்பதிப்பு, 2008.

3. வெண்ணிலா, .,-இரவு வரைந்த ஓவியம்,அகநி வெளியீடு,வந்தவாசி,முதற்பதிப்பு, 2010.

4. வெண்ணிலா.., - துரோகத்தின் நிழல்,அகநி வெளியீடு,வந்தவாசி,முதற்பதிப்பு, 2012.







 

சே.பானுரேகா எம்.., எம்.பில்., பி.எட்.,

உதவிப் பேராசிரியர்

ஸ்ரீகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி

காஞ்சிபுரம்

                            

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்